Thursday, December 31, 2009

விஷ்ணு புராணம் - 20

01_20. நாகபாசங்கள் அறுகின்றன. கடல் கொந்தளித்தது. கடல்வாழ் துர்ப்ராணிகள் மதி மயங்கின. பூமியும் நடுங்கியது. ப்ரஹ்லாதன் கரையேறினான். மீண்டும் தன்னிலைக்கு வந்தான். மஹாவிஷ்ணு ப்ரத்யக்ஷமாகத் தோன்றுகிறார். பரபரப்புற்ற ப்ரஹ்லாதனுக்கு ஒன்றும் தோன்றவில்லை. நா குழறுகிறது. பகவானே அவன் நிலையான பக்திக்கு மகிழ்ந்து வரத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறுகிறார். ப்ரஹ்லாதன் அப்போதும் "ஸ்வாமி, உலகில் உள்ள பல பிறவிகளில் ஏதாவது ஒன்றை அருள்வீராக. இதுதான் வேண்டுமென்றில்லை. ஆனால் உன்னிடம் நிலையான பக்தியும், நினைவையும் அருள்வீராக. உன்னிடம் பக்தியில்லாத உயர் பிறவியும் தாழ்ந்ததே. உன் நினைவிருந்தால் எந்த பிறவியும் உயர்ந்ததே. பகுத்தறிவில்லாதவகள் எப்படி உலக போகங்களில் பற்றோடிருப்பார்களோ அவ்வாறே எனக்கு உன்னிடம் பக்தியை அருள வேண்டும்" என்றே வேண்டுகிறான்.

பகவான் சிரித்துக் கொண்டே "குழந்தாய்! இருப்பதையும், இருக்கப்போவதையுமே மீண்டும் நீ கேட்கிறாய். வரம் என்பது இல்லாததைக் கேட்டுப் பெறுவது. எனவே வேறு ஏதாவதொன்றைக் கேள்" என்கிறார். ப்ரஹ்லாதன் தனக்கிழைத்த தீங்குகளால் தன் தந்தைச் சேர்த்துக் கொண்ட பாவங்கள் அழிய வேண்டிப் பெறுகிறான். அதைத் தந்த பகவான் மேலும் கேட்கச் சொல்கிறார். மீண்டும் பக்தியையே கேட்டுப் பெறுகிறான். பரமனும் வரங்களையளித்து விட்டு மறைகிறார். அப்பாவிடம் வந்து சேர்ந்த குழந்தையை ஹிரண்யன் மகிழ்ச்சியோடு கட்டியணைத்து சேர்ந்து வாழத் தொடங்கி விடுகிறான் இப்போது. ஆனால் ப்ரஹ்மாவின் சாபத்தால் துர்புத்தி கொண்டு மீண்டும் சில காலம் கழித்து ப்ரஹ்லாதனை கொல்லும் முயற்சிக்கிறான் ஹிரண்யகசிபு. இதைப் பொறுக்காத பரமன் ந்ருஸிம்ஹாவதாரம் கொண்டு துஷ்ட நிக்ரஹத்தையும், ஸிஷ்ட பரிபாலனத்தையும் செய்து விடுகிறான். ப்ரஹ்லாதன் அஸுரர்களுக்கு அரசனாகிறான். ராஜ்ய போகங்களையும், புத்ர, பௌத்ரர்களையும் பெற்று அனுபவிக்கிறான். முன்வினைப் பயன்களான புண்ய, பாபங்களையும் கடைசியில் விட்டொழித்து பகவத் த்யானத்தில் மோக்ஷத்தை அடைந்தான்.

இந்த ப்ரஹ்லாத சரித்ரத்தைக் கேட்பவனின் பாபங்கள் தொலைகின்றன. பௌர்ணமீ, அமாவாஸ்யை, அஷ்டமீ, த்வாதசீ திதிகளில் இதைப் படிப்பவர்களுக்கு இருமுகங்களுடன் (ப்ரஸவ காலத்தில் இப்படி இருக்கும்) தங்கக் கொம்புடைய பசுவை க்ரஹண காலத்தில் குருக்ஷேத்ரத்தில் தானம் செய்தால் எவ்வளவு பலன் உண்டோ அந்த பலன் கிடைக்கும். ப்ரஹ்லாதன் பக்தியில் லயித்து எப்படி பெருமான் அவனைக் கஷ்டங்களிலிருந்து காத்தாரோ அதைப்போல அவனுடைய புண்ய கதையைக் கேட்பவர்களையும் காப்பார். அவன் பல காலம் கஷ்டங்களுக்கிடையே, அதனோடே பகவத் தயானம் செய்து பெற்ற புண்யங்களை அவன் கதையைக் கேட்ட போதே நாமடையலாம் என்கிறார் பராசர மஹரிஷி.

விஷ்ணு புராணம் - 19

01_19. ப்ராஹ்மணர்களின் முயற்சியும், க்ருத்யையுமே தோற்றதை அறிந்த ஹிரண்யகசிபு வியக்கிறான். ப்ரஹ்லாதனிடமே "உன் பெருமைக்கும், உன் வியத்தகு செயல்களுக்கும் காரணமென்ன? இதை மந்த்ரத்தால் பெற்றாயா அல்லது பிறப்பிலேயே உனக்கு வாய்த்ததா" எனக் கேட்கிறான். ப்ரஹ்லாதன் "அப்பா! இதில் என்னுடைய செயலும், பெருமையும் ஒன்றும் இல்லை. இறைவனை மனதில் வைத்திருக்கும் ஒவ்வொருக்குமே பொதுவானதே இது. இறைவனை இருத்த வேண்டிய இதயத்திலிருந்து தீய எண்ணங்களை ஒழித்துத் தூயதாக வைத்திருக்க வேண்டும். மனதாலும், சொல்லாலும், செயலாலும் ஒருவருக்குத் தீங்கிழைக்காதவர் ஹ்ருதயத்திலே பகவான் இருப்பான். அனைத்து உயிர்களிலும் பரமன் இருக்கிறான். பிறருக்குச் செய்யும் தீங்கு நமக்கே செய்து கொண்டதாகும். எனவே நான் எவரிடமும் அப்படியில்லை. இதுவே என் பெருமைக்கும், சக்திக்கும் காரணமாகும்" என்கிறான்.

இந்தச் சொற்களால் மீண்டும் வெறுப்புற்ற அஸுரன் மேலிருந்து பிள்ளையை கீழே தூக்கியெறியச் சொன்னான். அஸுரர்களும் அவ்வாறே செய்தனர். ஆனால் பூமாதேவி ஒரு மலரைத் தாங்குவது போல் தானே மேலெழுந்து அவனைக் காத்தாள். உடனே மாயாவிகளில் சிறந்த ஸம்பராஸுரனை அழைத்து மாயைகளாலாவது சிறுவனைக் கொன்றுவிடும்படிப் பணிக்கிறான். அவன் ஆயுதங்களை ஏவ ஒன்றும் பலனில்லை. ஸம்சோஷகன் என்னும் காற்றை ஏவி குழந்தையைக் காய வைத்து விடும்படி கூறுகிறான். அதுவும் தோற்றுவிடுகிறது. மேலும் பல மாயைகளும் தோற்கின்றன. மேலும் சில காலம் மீண்டும் குருகுலத்தில் கழிகிறது. சுக்ர நீதி முழுதையும் போதித்து விட்டதாகக் கூறி பரிக்ஷை செய்து பார்க்குமாறு அஸுரனிடம் ஆசார்யர்கள் ஒரு ஸமயம் கூறுகின்றனர்.

ஹிரண்யன் மீண்டும் ப்ரஹ்லாதனிடம் "நண்பர், பகைவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும். நிறைவு, குறைவு காலங்களிலும், மந்த்ரி முதலானோர்களிடமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும்" என ராஜநீதிகளைக் கேட்கிறான். ப்ரஹ்லாதன் "அப்பா! ஆசார்யர் ஸாம, தான பேத தண்டங்களைக் கற்பித்ததெல்லாம் உண்மையே. ஆனால் பகைவன் என்ற ஒருவனே இல்லாத நிலை ஏற்பட்டால் இவையெல்லாம் எதற்கு. இறைவன் அனைவரிடத்திலுமிருக்கிறான் என்பதை உணர்ந்தால் பகையுணர்வு ஏது. மேலும் இத்தகைய கல்விகள் வெறும் வார்த்தைகளால் நிறைந்து நிரந்தரமில்லாத இம்மைப் பயன்களையேக் கூறுகின்றன. இவைகளைக் கல்வியென்றே நான் நினைக்கவில்லை"

உலகில் எவரும் பொருளையும், பதவியையும் வேண்டிக்கொண்டேதானிருக்கின்றனர். ஆனால் எல்லாருக்கும் எல்லாமே கிடைத்து விடுவதில்லை. ஒரு சாஸ்த்ரத்தையும் தெரிந்து கொள்ளாமல், ஒரு முயற்சியுமில்லாமல், அறிவும், சூரத்தன்மையும் எதுவுமின்றி சிலருக்கு ராஜ்யமும், செல்வமும் கிடைத்துவிடுகிறது. மற்றொரு புரம் இவையனைத்துமிருப்பவர்கள் ஒன்றும் கிடைக்காமல் விரக்தியிலேயே காலத்தைக் கழித்துக் கொண்டும் இருக்கின்றனர். வெவ்வேறான உருவம், பிறப்பு, தொழில்களை உடைய ஒவ்வொரு உயிரிலும் அந்தர்யாமியாக இறைவனே இருக்கிறான். எனவே ஸமத்வ புத்தியுடன் புண்யங்களைச் செய்து வருபவர்க்கே பாக்யத்தால் இவைகள் கிடைக்கின்றன. எனவே துர்ப்புத்தியை விட்டு விஷ்ணுவின் உடலாக இருக்கும் அனைத்து உயிர்களிடமும் அன்பைக் காட்டி, அவனையே பஜிக்கவும் வேண்டும்" எனப்பலவாறு உபதேஸிக்கிறான்.

பலமுறை, பல முயற்சிகளில் தோற்ற ஹிரண்யகசிபு ப்ரஹ்லாதனின் வார்த்தைகளால் வெகுண்டெழுந்து ப்ரஹ்லாதனை மார்பில் ஓங்கி உதைத்துத் தள்ளி, விப்ரஸித்தி, ராஹு, பலன் என்ற தன் வேலைக்காரர்களைக் கூப்பிட்டு ப்ரஹ்லாதனை நாக பாசங்களால் கட்டிக் கடலில் போடச்சொல்கிறான். இந்தத் தீச்செயலால் கடல் பொங்கி ஊரை அழிக்க வருகிறது. மலைகளைப் போட்டாவது கடலிலிருக்கும் பிள்ளையைக் கொல்லச் சொல்கிறான் தகப்பன். ஊரிலுள்ள பெரும் மலைகளையும் நூற்றுக்கணக்கில் கொண்டு வந்து கடலில் போட்டும் ப்ரஹ்லாதனுக்கு ஒன்றுமே நேரவில்லை. அப்போதும் அவன் தன்னிலை மறந்து மஹாவிஷ்ணுவையே போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கிறான்.

விஷ்ணு புராணம் - 18

01_18. இப்படிப் பல சமயங்களில் உடன் படிக்கும் அஸுரச் சிறுவர்களுக்கு உபதேசம் செய்து வந்தான் ப்ரஹ்லாதன். ஹிரண்யனிடம் பயம் கொண்ட அந்தச் சிறுவர்கள் இதை அஸுரேந்த்ரனிடம் கூறி விட்டனர். அவன் உடனே சமையற்காரர்களை அழைத்துத் தன் புத்ரனைக் கொன்று விடும் படி கூறுகிறான். ப்ரஹ்லாதன் தான் கெட்டது மட்டுமன்றி, மற்றவர்களையும் கெடுக்கிறான். எனவே இந்த துஷ்டனை உணவுகளில் ஹாலகால விஷத்தைக் கலந்து கொடுத்துக் கொன்று விடுங்கள். அதை அவனுக்குத் தெரியாமல் செய்து விடுங்கள். தெரிந்து விட்டால் ஏற்கனவே பல முறை தப்பினாற்போல் இந்த முறையும் தப்பி விடுவான். கவலைப்படாமல் இதைச் செய்யுங்கள் என்று அரசன் கட்டளையிட்டான்.

அரசன் ஆணையை சிரமேற்கொண்ட சமையற்காரர்களும் அவ்வாறே செய்து, உணவு வகைகளைப் ப்ரஹ்லாதனிடம் சேர்ப்பித்தனர். ப்ரஹ்லாதன் எப்போதும் இறைவனை நினைத்தே ஒவ்வொரு பொழுதையும் கழிப்பவன், செயல்களைச் செய்பவன். இப்போது தன் உணவை இறைவனுக்கு அர்ப்பணித்து, ப்ரசாதமாக அதை உண்டான். விஷமுட்பட அனைத்தும் நன்கு ஜரித்தன ப்ரஹ்லாதனுக்கு. சமையற்காரர்கள் மூலம் இதையறிந்த ஹிரண்யகசிபு க்ருத்யை செய்து தாங்களே ப்ரஹ்லாதனைக் கொன்று விடுகிறோமென்று முன்பு தன்னிடம் கூறிச் சென்ற சண்டமர்க்கர்களை அழைத்து அதைச் செய்யச் சொன்னான். அவர்களும் துயரத்துடனே ப்ரஹ்லாதனிடம் சென்று கடைசி முறையாக அன்பாகச் சொல்லி விளங்க வைப்போம் என்று செல்கின்றனர்.

"நீண்ட ஆயுளுடையவனே! குழந்தாய், மூவுலகிலும் ப்ரஸித்தமான ப்ரஹ்மகுலத்தில், அதிலும் அஸுரேந்த்ரனான ஹிரண்யகசிபுவிற்குப் பிறந்துள்ளாய் நீ. உனக்கு தேவர்களாலோ அல்லது அந்த விஷ்ணுவினாலோ ஆக வேண்டியது என்ன. நீயும் மூவுலகிற்கும் ரக்ஷகனாகப் போகிறாய். எனவே அப்பாவின் பகைவர்களைத் துதிப்பதை விட்டு, உன் தந்தையைத் துதி. அவரே உனக்குச் சிறந்த குரு. எனவே அவரைத் துதித்து, அவர் விருப்பப்படி நட" என்று சுக்ராச்சார்யாரின் புத்ரர்கள் ப்ரஹ்லாதனிடம் கொஞ்சிக் கூறுகின்றனர். ப்ரஹ்லாதன் "மரீசி மஹரிஷி முதல் வளர்ந்து வந்த இந்த ப்ரஹ்ம குலம் தாங்களும், மற்ற மூவுலகும் கூறுவது போல் புனிதமானதே. என் தந்தையும் அவ்வாறே மிகுந்த பராக்ரமம் உடையவர், சிறந்த குரு, பூஜிக்கத் தக்கவரே. நானும் அவ்வாறே எந்த குறையுமின்றி அவ்வாறே அவரிடம் பணிவுடனும், உபசரிப்புடனும் நடந்து வருகிறேன். ஆனால் நாராயணனால் ஆகவேண்டியதொன்றுமில்லை என்பதை உங்களைத் தவிர வேறெவரும் இப்படிக் கூற மாட்டார்கள்" என்கிறான்.

"ஆச்சார்யர்களே! அனந்தனாலே என்னப் ப்ரயோஜனமென்று வெகு அழகாகக் கூறுகிறீர்களே. நீங்கள் வருந்தமாட்டீர்களென்றால் நான் அவற்றை உங்களுக்கு சொல்கிறேன். நால்வகைப் புருஷார்த்தங்களான தர்ம, அர்த்த, காம, மோக்ஷங்களை மரீசி, தக்ஷன் முதலானோருக்கும் அளிப்பவன் அந்த அனந்தனே. தத்துவ ஞானிகளும் அவனை ஆராதித்தே பந்தங்களிலிருந்து விடுபட்டு மோக்ஷத்தைப் பெற்றனர். நீங்களோ அவனால் என்ன பயன் என்கிறீர்கள். நீங்கள் எனக்கு ஆசார்யர்கள். நீங்கள் எனக்கு எதை வேண்டுமானாலும் தாராளமாகக் கூறலாம். ஆனால் அவை எனக்கு எந்த மாறுதலையும் உண்டாக்காது. என் சிறிய விவேகத்தின் படி என் கடைசி கூற்றின்படி அவனே ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்களைச் செய்பவன். எங்கும் நிறைந்து அனுபவிப்பவனாகவும், அனுபவிக்கப்படுவதாகவும் இருப்பதும் அவனே. குழந்தையாதலால் என்னை மன்னியுங்கள்" என்று மேலும் அவர்களிடன் கூறுகிறான்.

அவர்கள் கோபம் கொண்டு "ஏ அறிவில்லாதவனே, உன் தந்தையிடமிருந்து உன்னை எதற்காக மீட்டோமென்பதை நீ அறியவில்லை. உனக்கு அதற்கான அறிவும் இல்லை. பயத்தால் பகைவனைப் போற்ற மாட்டாய் என்றல்லவா உன்னைக் காத்தது. துர்ப்புத்தி உடையவனே! நாங்கள் சொல்வதைக் கேட்காவிட்டால் நாங்கள் ஏவும் க்ருத்யை நிச்சயமாக உன்னைக் கொன்று விடும். எனவே நாங்கள் சொல்வதை கேள்" என்று மிரட்டுகின்றனர். ப்ரஹ்லாதன் இதைக் கேட்டு சிரித்துக் கொண்டே "நானா அறிவில்லாதவன். ஒருவராலும் ஒருவரைக் காக்கவோ, அழிக்கவோ முடியாது. ஒருவன் செய்யும் கார்யங்களே அவனை அழிக்கவும், காக்கவும் செய்கின்றன. அவன் செய்யும் நற்கார்யங்கள் அவனைக் காக்கின்றன. தீயச்செயல்கள் அவனை மெல்ல அழிக்கின்றன. நீங்கள் இதை அறியவில்லையே. மேலும் நீங்கள் என்னைக் காத்ததாகவும், இனி அழிக்கப்போவதாகவும் வேறு கூறுகிறீர்கள்" என்கிறான்.

ப்ரஹ்லாதனின் இந்த சொற்களால் கோபித்த சண்டமர்க்கர்கள் "இவன் தந்தைக்கு நான் ப்ரோஹிதர்கள், இவனுக்கு நாம் ஆசார்யர்கள், ஆனால் இவனோ நமக்கே உபதேஸிக்கிறான். இதை விட மானக்கேடு என்ன இருக்கிறது" என்று க்ருத்யையைச் செய்து ஏவுகின்றனர். நெருப்பு மாலையுடன் பூமியதிர வந்த அந்த பயங்கரமான பூதம் எஃகினாலான ஒரு சூலாயுதத்தை ப்ரஹ்லாதன் மீது வீசி எறிந்தது. அது ப்ரஹ்லாதன் மார்பில் பட்டு சுக்கு நூறாக நொறுங்கி விழுந்தது. ப்ரஹ்லாதன் பக்திக்கு முன் தோற்ற அந்த க்ருத்யை மீண்டும் ஏவியவர்களையே வந்து எரித்தது. தன் ஆசார்யர்கள் துன்பப் படுவதைக் கண்ட ப்ரஹ்லாதன் பதறினான். ஆசார்யர்களைக் காக்குமாறு பரமனை வேண்டினான்.

"க்ருஷ்ணா, அனந்தா, என் ஆசார்யர்கள் காத்தருள். உலகைப் படைத்து, அதனையே உடலாகக் கொண்டு, எங்கும் வ்யாபித்து நிற்கும் ஜனார்த்தனா! மந்த்ரத்தாலுண்டான இந்தத் தீயிலிருந்து இந்த ப்ராஹ்மணர்களைக் காப்பாயாக. நீ எங்கும் நிறைந்திருப்பதும், நீயே ஸர்வரக்ஷகன் என்றும் என்னைக் கொல்ல வந்த அஸுரர்கள், விஷம் கொடுத்தவர்கள், தீயில் தள்ளியவர்கள், தந்தங்களால் முட்டிய திக்கஜங்கள், விஷப்பாம்புகள் என அனைவரிடத்திலும் நான் நண்பர்களிடம் இருப்பது போல் ஸமத்வ பாவத்துடன் இருந்தது உண்மையானால் இந்தப் ப்ரோஹிதர்களுக்கு ஒன்றும் நேரக்கூடாது" என்று கண்டிப்புடனும், நம்பிக்கையுடனும் வேண்டுகிறான். பரமன் அருள் பாலிக்கிறான். தீயிலிருந்து ஆச்சார்யர்கள் தீங்கின்றி பொலிவுடன் வெளிவருகின்றனர்.

தங்கள் செய்கையையும், ப்ரஹ்லாதனின் செய்கையையும், பக்தியின் பலனையும் உணர்கின்றனர். நீ நீடூழி வாழ்வாயாக! எதிரிகளே இல்லாமல் இருப்பாயாக. பலம், வீர்யம், பிள்ளை, பேரன், பணம் என அனைத்து ஸம்பத்துடன் கூடி ஸர்வோத்தமனாய் வாழ்வாயாக! என்று ஆசிர்வதிக்கின்றனர். தங்களாலேயே கொல்ல முடியாதவனைக் கண்டு இனி அவனை யாராலும் ஒன்றும் செய்யமுடியாதென்று அறிந்து ஹிரண்யனிடமும் சென்று நடந்தவைகளைக் கூறுகின்றனர்.

விஷ்ணு புராணம் - 17

01_17. மைத்ரேயா! ப்ரஹ்லாஹன் சரிதம் மிக உயர்ந்தது. கெட்பவர்களுக்கு எல்லா நன்மைகளையும் தரக்கூடியது. இதைக் கவனத்துடன் கூறுகிறேன். கேள். திதியின் மகனான ஹிரண்யகசிபு கடுந்தவமிருந்து ப்ரஹ்மதேவனிடமிருந்து பல வரங்களைப் பெற்று செருக்குடன் இந்த்ரன் முதலானோர்களை விரட்டி விட்டுத் தானே அரசாளத் தொடங்கி விட்டான். யாகங்களிலும் தேவர்களின் பங்கைத் தானே அனுபவித்து வந்தான். தேவர்களும் அவனுக்குப் பயந்து நாட்டைத் துறந்து, மானிட லோகத்தில் பல வேஷங்களிலும், இடங்களிலும் மறைந்து வாழ்ந்து வந்தனர். மூவுலகிலும் கந்தர்வர்களும், ஸித்தர்களும் பலரும் அவனைப் போற்றிப் புகழ்ந்து, பாடத் தொடங்கினர். வாத்யங்களாலும், கோஷங்களாலும் அவனை மகிழ்வித்தனர்.

ஸ்படிகத்தாலான அப்ரகம் என்ற மாடியிலே இருக்கும் ஹிரண்யகசிபுவை அப்ஸரஸ்ஸுக்கள் ஆடிப் பாடிப் பரவசப்படுத்துவார்கள். மது, ரத்தம் இவைகளைப் பருகிப் பல போஹங்களை அனுபவித்து வந்தான். அவனுக்குத் தலைகீழான ஒரு பிள்ளையாக ப்ரஹ்லாதன் இருந்தான். எப்போதும் தவமிருப்பவர்களுக்கு ஒரு கெட்ட பிள்ளை வாய்ப்பதைப் போல, இவனுக்கு ஒரு பரம பாகவதன். குருகுலத்தில் கல்வி கற்று வந்த ப்ரஹ்லாதன் ஒரு முறை தன் குருவுடன் தந்தையிடம் வந்தான். மது மயக்கத்திலிருந்த ஹிரண்யகசிபு குழந்தையை எடுத்துத் தழுவி, குருகுலத்தில் கற்றவற்றுள் ஸாரமான விஷயத்தைக் கூறக் கூறுகிறான்.

குழந்தை "அப்பா! நீங்கள் கேட்பதால் உங்கள் உத்தரவுடன் கூறுகிறேன். கவனமாகக் கேளுங்கள். அச்யுதனை அடிபணிந்திருக்கிறேன் நான். அவன் அடியார்களைக் கைவிடாதவன். ஆதி, அந்தம், நடு என்பவைகளில்லாதவன். தேச, காலங்களால் அளவிடமுடியாதபடி எங்கும் எப்போதும் நிறைந்திருப்பவன். பிறப்பிறப்பில்லாதவன். வளர்ச்சியும், அழிவும் இல்லாதவன். அவனை வழிபடுவதே ஸாரமான விஷயம்" என்றான். இதைக் கேட்ட தகப்பனுக்கு கோபம் பொங்கியது. தன்னை விட ஒருவனை உயர்ந்தவனாக உபதேஸித்துள்ள ஆசிரியரிடம் தன் கோபத்தைக் காட்டினான். "ஏ! ப்ராஹ்மணோத்தமா! என்னை மதிக்காமல் குழந்தைக்கு ஸாரமற்ற ஒரு விஷயத்தைப் போதித்துள்ளீர். இவன் என் பகைவனைப் புகழ்ந்து பேசுவதற்கு நீரே காரணம். ஏன் இவைகளை இவனுக்கு கற்பித்தீர்கள்" என மிரட்டினான். அதற்கு அந்த ஆசிரியர் அவன் கூறும் விஷயங்களுக்குத் தான் பொறுப்பல்ல,அவன் தன் மனதுக்குத் தோன்றியதைக் கூறுகிறான், நான் கற்பித்ததைக் கேட்டால் நீங்கள் மகிழ்வீர்கள், வேண்டுமென்றால் கேட்டுப் பாருங்கள்" என்று கூறுகிறார்.

ஹிரண்யன் இதை உனக்கு உபதேஸித்தவர் யார் எனக் கேட்கிறான் குழந்தையிடம். ப்ரஹ்லாதன் அப்பா! வேறு யார்! அனைத்து இதயத்திலும் இருந்து கொண்டு ஞானத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ விஷ்ணுவே எனக்கு இதை உபதேஸித்தார். ஹிரண்யன் கடுங்கோபத்துடன் "யார் அந்த விஷ்ணு" எனக் கேட்கிறான். ப்ரஹ்லாதன் "அவன் ஸ்வரூபம் விளக்க முடியாதது. யோகிகளுக்கு மட்டுமே விளங்கக் கூடியது. அவனிடமிருந்தே அனைத்தும் தோன்றுகின்றன. அவனுக்கு உடலாக இருக்கின்றன. அவனே பரமேச்வரன்" என்றான் ப்ரஹ்லாதன். ஹிரண்யன் "மதிகெட்டவனே, பரமேச்வரன் நான் ஒருவனே. நீ வாழ விரும்பினால் என்னைத் துதி. விஷ்ணுவைத் துதித்தால் வீணே இறப்பாய்" என்கிறான்.

"அப்பா! கோபிக்காதீர்கள். அவனே உங்களையும் படைத்துக் காப்பவன், புத்தி தெளிவடையுங்கள்" என பதில் கூறுகிறான் பிள்ளை. "இவன் மனதில் எவனோ ஒருவன் புகுந்து கொண்டு இவனை இதையெல்லாம் பேசச் செய்கிறான். அவன் யார் என்று தெரியவில்லை" என்கிறான். ப்ரஹ்லாதன் அப்பா, நீங்கள் கூறுவது முற்றிலும் சரி. ஒருவன் புகுந்து தான் என்னை இப்படிப் பேச வைக்கிறான். அவனே விஷ்ணு. ஆனால் அவன் என் மனதில் மட்டுமில்லை. நீங்கள் உட்பட அனைவர் மனதிலும் உட்புகுந்து அவரவர் செயல்களைச் செய்ய வைக்கிறான்" என்றான். மேலும் வாதத்தைத் தொடர விரும்பாத ஹிரண்யன் அஸுரர்களைக் கூப்பிட்டுப் பிள்ளையை மீண்டும் கண்டிப்பு, தண்டனைகளோடு நல்ல கல்வி கற்க மீண்டும் குருகுலத்திற்கே அனுப்பச் சொல்கிறான். அவர்களும் அவ்வாறே செய்கின்றனர். குழந்தை மீண்டும் குருமார்களுக்குப் பணிவிடை செய்து கொண்டு கல்வியைக் கற்று வருகிறான்.

மீண்டும் சில காலம் சென்ற பின் குழந்தையை பரிக்ஷை செய்வதற்காக அழைத்து வரச் செய்து, கற்றதில் ஏதாவது ஒரு பாடலைச் சொல்லச் சொல்கிறான். "ப்ரக்ருதி, புருஷன், ஜகத் என அனைத்தும் பரமனிடமிருந்தே வெளிப்படுகின்றன. எல்லாவற்றிற்கும் அவனே காரணன். அவன் அருள் நமக்கு வேண்டும்" எனப் பாடுகிறான். பொருளற்ற சொற்களைக் கூறினாலும் கொண்டாட வேண்டிய குழந்தைப் பருவம். உறவும் இனிமையானதே. ஆனாலும் ஹிரண்யன் வெகுண்டான். அஸுரர்களை நோக்கி "இவன் என் பிள்ளைதான். எனினும் துராத்மா. இவன் வாழ்வதில் பயனில்லை. குலத்தை நாசம் செய்யும் நெருப்பே இவன். கொன்று விடுங்கள் இவனை" எனக் கட்டளையிடுகிறான். அவ்வளவுதான். பயங்கரமான ஆயுதங்களுடன் பல்லாயிரக் கணக்கில் கோரமான அஸுரர்கள் ஒரு குழந்தையைக் கொல்லச் சூழ்ந்தனர்.

"அஸுரர்களே, என்னிடமும், உங்களிடமும், உங்கள் ஆயுதங்களிலும் பரமன் நிறைந்திருக்கிறார். இது உண்மையானால் இந்த ஆயுதங்கள் என்னை ஒன்றும் செய்யாது" என உரைத்தான். அவ்வாறே ஒரு ஆயுதமும் அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. இதைக் கண்ட ஹிரண்யன் கொஞ்சிப் பார்க்கிறான். குழந்தாய்! பயம் வேண்டாம், நான் உனக்கு அபயமளிக்கிறேன் என்றான். குழந்தையோ "அப்பா! உங்களிடம் அபயம் வேண்டி நிற்கும் நிலைமை எனக்கு இல்லை. மிக பயங்கரமான, பயப்படவேண்டிய பிறப்பு, இறப்பு, மூப்புமே பெருமானை நினைத்த மாத்திரத்தில் அகன்று விடும். அவனோ என்னிடத்திலேயே இருக்கிறான். நான் எதற்காக அஞ்ச வேண்டும், நீங்கள் எதற்காக அபயமளிக்க வேண்டும், எதற்குமே தேவையில்லை இப்போது" என்று பரிஹஸிக்கிறான்.

தக்ஷகன் முதலான விஷப் பாம்புகளால் கடிக்க வைத்தும், அவைகள் தான் பல்லுடைந்தும், உடல் தளர்ந்தும் போனதேயன்றி ப்ரஹ்லாதன் மேல் தோலைக்கூட அவைகளால் அண்ட முடியவில்லை. பிறகு நான்கு தந்தங்களை உடைய திக்கஜங்களால் அவனைக் கொல்ல முயல்கின்றனர். ப்ரஹ்லாதன் "அப்பா! அவைகளின் தந்தங்கள் வஜ்ராயுதத்தின் நுனி போலத்தானிருந்தன. ஆனால் என் மார்பில் மோதியதும் ஒடிந்து சிதறின. இது என் பலமென்றா நினைக்கிறீர்கள். ஜனார்த்னனுடைய த்யானமும், பெருமையும், பலமும், பகவத் பக்தியுமே இவற்றிற்குக் காரணம்" என்கிறான். அடுத்ததாகப் பெருங்குழி ஒன்றை வெட்டி விறகுகளையும், பல குடங்கள் எண்ணை, கொழுப்புகளையும் கொட்டி, வாயு தேவனுக்கும் கட்டளையிட்டு பெரும் நெருப்பில் சிறுவனை இடுகின்றனர். அந்த தீ ஹிரண்யன் மனதைச் சுட்டதேயன்றி ப்ரஹ்லாதனைக் குளிர்விக்கவே செய்தது.

அப்பா! நீங்கள் மூட்டி, காற்றால் நன்கு வளர்க்கப் பட்ட இந்தத் தீயின் வெப்பம் தாளாமல் தாங்கள் தான் தூரத்திற்குச் சென்று விட்டீர்கள். நான் பத்துத் திசைகளிலும் தாமரை மலர்களால் சுற்றி நிரப்பப்பட்டது போலவே உணர்கிறேன்" என்கிறான் மீண்டும் ப்ரஹ்லாதன் அப்பாவிற்கு புத்தி வருமா என்று. இல்லை. அவன் திருந்தவில்லை, வருந்துகிறான் பிள்ளை இறக்கவில்லையே என்று, தன் செயல்கள் பலிக்கவில்லையே என்று. அப்போது அங்கு வந்த அவனுடைய புரோஹிதர்களான சுக்ராச்சார்யாரின் புதல்வர்கள் சண்டாமர்கர் முதலானோர் ஹிரண்யனை ஸ்தோத்ரிக்கின்றனர். "இவன் குழந்தை, இந்த பருவம் குற்றங்கள் செய்யத் தூண்டும். இவனைக் கோபித்துப் பயனில்லை. தங்கள் கோபத்தைத் தேவர்களிடம் செலுத்துங்கள். இவன் இனிப் பகைவனைப் போற்றாமல் நாங்கள் முயற்சிக்கிறோம். உங்களுக்கு உகந்தவனாக்குகிறோம். இல்லையென்றால் நாங்களே இவனை க்ருத்யையைக் (பூதம்) படைப்பித்துக் கொன்று விடுகிறோம். அது நிச்சயம் தோற்காது, இவனை எங்களிடம் ஒப்படையுங்கள்" எனக்கூறி அழைத்துச் செல்கின்றனர்.

இப்போது குருகுலத்தில் ப்ரஹ்லாதன் மற்ற அஸுரச் சிறுவர்களுக்கும் விஷ்ணு பக்தியை உபதேஸிக்கத் தொடங்கி விடுகிறான். "சிறுவர்களே! நான் சொல்லும் உண்மையைக் கேளுங்கள். ஆசார்யர் பணத்திற்காகப் பொய்யான பொருளை உபதேஸிக்கிறார். நான் எந்த ஆசைகளும் இன்றி உண்மையைப் போதிக்கிறேன். இந்த வாழ்க்கை துன்பம் நிறைந்தது. இதை நீங்களே அறிவீர்கள். பிறப்பிலும், இறப்பிலும் ஒரு சுகமும் இல்லை. உணவும், நெருப்பும் கூட பசியும், குளிரும் இருக்கும் போதே சுகம். மற்ற நேரங்களிலில்லை. உடல் முடங்கிக் கிடப்பவனுக்கு மிதியும், காதலனுக்குக் காதலியின் கால் ஸ்பரிசமும் இதைப் போன்றதே. எப்போதும் எதுவும் நிலையான சுகமில்லை. மேலும் எதையும் தேடியடைவதும் சுகமில்லை. இது ஒவ்வொரு பொருளுக்கும் பொருந்தும். மோஹமே எதையும் மறைக்கிறது.

மோஹத்தால் மறைக்கப்பட்டவர்களுக்கே இந்த உலகப் பொருட்கள் சுக ஸாதனங்கள். உண்மையை அறிந்தவர்கள் இவைகளை நினைக்க மாட்டார்கள். நாம் செலுத்தும் ஒவ்வொரு உலகப் பொருளின் மீதான் பற்றும் நாமே நம் நெஞ்சில் குத்திக் கொள்ளும் ஆணிகள். மாம்ஸமும், ரத்தமும் நிறைந்த இந்த உடல் நரகத்தை விட மேலான நரகம். இவற்றிலிருந்து வெளியேறுங்கள். நாராயணன் அருளை நாடுங்கள். பால்யர்கள் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். ஆத்மா பருவங்கள், பிறப்பு, இறப்பிற்கு அப்பாற்பட்டது. ஆசையாலும், பிறகு பார்த்துக் கொள்ளலாமென்றும் பால பருவத்திலிருந்து, யௌவனத்திற்கும், அங்கிருந்து மூப்பிற்கும் செல்லாதீர்கள். மூப்பு வரும்போது முன்பே இதைத் தேடாமலிருந்து விட்டோமே என்று எண்ணக் கூடாது.

நீரிலிருந்தாலும் வண்ணானும், மீன் பிடிப்பவர்களும் தங்கள் தாஹத்தைச் சிறிதும் எண்ணாமல் இதையும் தோய்த்து விட்டுப் பருகுவோம் என்றும், இன்னும் பிடித்து விட்டுப் பருகுவோமென்றுமே கடைசி வரையில் வருந்துவது போன்றது நம் நிலை. ஆகையால் தள்ளாமல் அவ்வப்போதே ஆத்மலாபத்தைத் தேடிக் கொள்வோம். இதற்கு சிறந்த வழி விஷ்ணுவை நினைப்பதே. அவனே எல்லா துக்கங்களிலுமிருந்து நம்மை விடுவிப்பவன். உங்களுக்காக இல்லாவிட்டாலும் எனக்காகவாவது அவனை நினையுங்கள். பாவங்கள் அகலும். அளவிலா நன்மைகளுண்டாகும்.

அவன் அனைத்துயிர்களுக்கும் அந்தர்யாமி. அவனிடம் நட்பு கொள்ளுங்கள். எல்லா ப்ராணிகளிடமும் நட்பு கொள்ளுங்கள். த்வேஷிக்காதீர்கள். புத்திமான்கள் நம்மைக் கண்டு அஞ்ஞானத்தால் இப்படி இருக்கிறார்களே என்று இரக்கப்படுகிறார்கள். வேதாந்திகளுக்கு உலகம் விஷ்ணுமயம். அவரின் விரிவே உலகம். அவனுடலே உலகம். இப்படியறிந்தால் பிறருக்குச் செய்யும் தீங்கு நமக்குச் செய்யப்பட்டதாகத் தோன்றும். பிற உயிர்களிடத்தில் பகைமை உண்டாகாது. ஆகையால் நாமனைவரும் இந்த அஸுரத்தன்மையை விட்டுப் பேரானந்தத்திற்கு முயல்வோம். இந்த மோக்ஷத்தை வேறெந்த தேவரும் தர முடியாது. கேசவனால் மட்டுமே இது கூடும். ப்ராணிகளிடத்தில் ஸமத்வ புத்தி செய்து அவனருளுக்குப் பாத்ரமாவோம். அற்பமான தர்மார்த்த, காமங்களை விரும்பாதீர்கள். மோக்ஷத்தையும் நீங்களாக விரும்பி முயல வேண்டாம். பழங்கள் நிறைந்த நல்ல மாமரத்தினடியில் இருந்தால் அவனுக்குக் கனிந்த பழங்கள் தானே கிடைப்பது திண்ணம். பகவானோ ஒரு ப்ரஹ்ம வ்ருக்ஷம், மோக்ஷத்தைத் தரும் பாரிஜாதம்" என்று தன் உபதேஸத்தை முடிக்கிறான் ப்ரஹ்லாதன்.

விஷ்ணு புராணம் - 16

01_16. மைத்ரேயர் பல கேள்விகளைக் கேட்கிறார். ஹிரண்யகசிபு ஏன் ப்ரஹ்லாதனைக் கொடுமைப்படுத்தினான். அவற்றிலிருந்து ப்ரஹ்லாதன் எப்படித் தப்பித்தான். நல்ல குணங்களையுடைய ஒருவனை எவருமே துன்புறுத்த எண்ணமாட்டார்களே. அப்படியிருக்க அவன் குலத்தைச் சேர்ந்தவர்களே ஏன் கொடுமைப்படுத்தினார்கள்.

விஷ்ணு புராணம் - 15

01_15. இப்படி ப்ரசேதஸ்ஸுக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தவமியற்றிக்க்கொண்டிருக்கும் போது, நாரதரின் உபதேசத்தால் ப்ராசீனபர்ஹியும் ராஜ்யத்தைத் துறந்து ஞானம் பெற்று யோகத்தில் ஆழ்ந்து விடவே பூமி ரக்ஷனையின்றி இருந்தது. காற்று நுழையவும் இடமின்றி மரங்கள் மண்டின. ப்ரஜைகள் அல்லலுற்றனர். தவம் முடிந்து வந்த ப்ரசேதஸ்ஸுகள் இதைக்கண்டு தங்கள் முகத்திலிருந்தே வாயுவையும், அக்னியையும் உண்டாக்கி மரங்களை அழித்தனர். மரங்களுக்கு அதிபதியான ஸோமன் இந்தச் செயலைக் கண்டு வருந்தி ப்ரசேதஸ்ஸுக்களிடமே சென்று முறையிடுகிறான். மரங்கள் தானே ப்ரஜைகளுக்குத் தேவையான கிழங்கு, பழம், வேர் முதலியவைகளைத் தந்து ப்ரஜா வ்ருத்திக்கு உதவுகின்றவே. இவைகளை ஏன் அழிக்க வேண்டும் என நினைத்தான்.

அரசர்களே! மரங்களின் மீதான கோபத்தை அடக்குங்கள். உங்களுக்குள் ஒரு ஸமரஸ உடன்பாட்டைச் செய்கிறேன். இதோ இந்த மாரிஷை என்ற வ்ருக்ஷங்களுக்குப் பிறந்த பெண்ணை வருங்காலத்தை அறிந்த நான் என் அமுதமயமான கிரணங்களால் வளர்த்து வந்தேன். இவள் மாணிக்கம் போன்றவள். அழகு படைத்தவள். உங்களனைவருக்கும் பத்னியாகப் போகிறவள். இவளிடமிருந்தே தவத்தால் உங்களுக்குண்டான கோபமும், என் கிரணங்களாலுண்டான இவளின் சாந்தி முதலிய குணங்களுடனும் கூடிய தக்ஷன் பிறந்து வம்ச வ்ருத்தியை நன்கு செய்யப் போகிறான். அவன் அக்னிக்குச் சமமான தேஜஸ்ஸுடன் இருப்பான். உங்கள் விருப்பத்தையும் பூர்த்தி செய்யப் போகிறான். இவள் உயர்ந்த குலத்தில் பிறந்தவள். தவத்தினால் தோன்றியவள். தேவஜாதியைச் சேர்ந்தவள். ஆகையால் தயக்கமின்றி இவளையே நீங்களனைவரும் மணந்து கொண்டு வ்ருக்ஷங்களை மன்னித்து விடுங்கள். இவள் வரலாற்றையும் தெரிந்து கொள்ளுங்கள். கூறுகிறேன் என்றார்.

முன்பொரு ஸமயம் வேதத்தில் வல்லவரான "கண்டு மஹரிஷி" கோமதி நதிக்கரையில் தவமிருந்து வந்தார். இதைக் கண்ட இந்த்ரன் பதவி பறிபோய் விடுமோ என்ற பயத்தில் இவர் தவத்தைக் கலைக்க ப்ரம்லோசை என்ற அப்ஸரஸ்த்ரீயை தவத்தைக் கலைக்க அனுப்பினான். அவளது சேஷ்டைகளில் தவத்தையும், தைர்யத்தையும், கர்மாக்களையும் விட்ட ரிஷியும் மந்தரத்ரோணி (மந்தரமலையின் நடுப்பாகம்) என்னுமிடம் சென்று அவளுடன் நூறு வருஷங்கள் காம போகங்களை அனுபவித்தார். எனினும் பற்று சற்றும் குறையவில்லை. ப்ரம்லோசை ரிஷியிடம் சென்று தான் வந்து பல நாட்கள் ஆகி விட்டதாகவும், தான் இந்த்ரலோகத்திற்குத் திரும்பிச் செல்ல விரும்புவதாகவும் கூறுகிறாள். ஆசை தணியாத கண்டு மஹரிஷி அவளை மேலும் சில நாள் தங்கி விட்டு பின் செல்லுமாறு கூறுகிறார். அவர் மீதிருந்த ஆசை, பயம் காரணமாக ப்ரம்லோசையும் அவருடனே இருந்து களிக்கிறாள். மேலும் நூறாண்டுகள் சென்றன. இப்படிப் பல நூறாண்டுகள் சென்று விடுகின்றன. ப்ரம்லோசை திரும்பிச் செல்ல அனுமதி கேட்பதும், மஹரிஷி ஆசையுடன் மறுப்பதுமாக, அவள் இருப்பதுமாக காலம் ஓடுகிறது.

ஒரு நாள் மாலைப் பொழுது. திடீரென்று மங்கையின் தோளிலிருந்து மஹரிஷி விருட்டென்று எழுந்தார். பரபரப்புடன் ஆச்ரமத்தை விட்டு வெளியேறினார். இதைத் திகைப்புடன் கண்ட அப்ஸரஸ் மஹரிஷியை எங்கே செல்கிறீர்கள். ஏன் இந்த பரபரப்பு என்று கேட்கிறாள். சாந்தமாக ஒன்றுமே இவ்வளவு காலம் நடவாதது போல பதிலுரைக்கிறார் மஹரிஷி "இதென்ன கேள்வி. பகல் முடிந்து ஸாயங்காலம் வருகிறது. ஸந்த்யாவந்தனம் செய்ய வேண்டும். உன்னுடன் சல்லாபித்துக் கொண்டிருந்து நித்யகர்மாவை விட்டு விட்டால் பாபம் வந்து விடுமே" என்றெல்லாம் கூற ஆரம்பித்து விட்டார். பல நூறாண்டுகளை ஒரு பகல் பொழுதாகக் கூறிப் பேசும் அவரை ப்ரம்லோசை சிரிப்புடன் பார்த்து "அனைத்து ஸாஸ்த்ரங்களையும் அறிந்த தாங்கள் காலம் எவ்வளவு சென்றது என்பதை மட்டும் அறியவில்லையே. எவ்வளவு நூற்றாண்டுகள் ஓடிவிட்டன. எவ்வளவு ஸந்த்யாகாலங்கள் சென்று விட்டன. இதென்ன தாங்கள் ஒரு பகல் பொழுது கழிந்ததாகக் கூறுகிறீர்கள். எவரும் இதைக் கேட்டால் வியப்பார்கள்" என்கிறாள்.

கண்டு மஹரிஷி இதையெல்லாம் நம்பவில்லை. "நல்லவளே! பொய் கூறுகிறாய். இன்று காலை தான் நீ இந்த நதிக்கரைக்கு வந்தாய். அப்போது தான் நாமிருவரும் இந்த ஆச்ரமத்திற்கு வந்தோம். இதோ பகல் முடிந்து மாலையும் வந்து விட்டது. பரிஹஸிக்காமல் உண்மையைக் கூறு" என்றார். அப்ஸரஸ் "நான் வந்த காலை இன்றைய காலையில்லை. இன்றைய காலைக்கும் நான் வந்த காலைக்கும் பல நூற்றாண்டுகள் கடந்து விட்டன" என்றாள். நித்யகர்மாக்களை பல காலம் செய்யாமல் விட்டதால் வரும் பாபத்திற்குப் பயந்து நடுங்கியவராய் மஹரிஷி எவ்வளவு காலம் கூடி வாழ்ந்ததில் கழிந்தது என்று அவளை மீண்டும் கேட்கிறார். ப்ரம்லோசை தொள்ளாயிரத்தேழு ஆண்டுகள், ஆறு மாதங்கள் மற்றும் மூன்று நாட்கள் ஆகி விட்டதாகக் கூறுகிறாள்.

மீண்டும் மீண்டும் அவளைக் கெஞ்சி உண்மையை உரைக்கும்படிக் கூறுகிறார் ரிஷி. அவளும் தாங்கள் என்னும் ரமித்திருந்ததில் இவ்வளவு காலம் கழிந்ததென்பது உண்மையே. தாங்கள் மயக்கம் தெளிந்து நித்ய கர்மாக்களை நினைக்கும் இந்த நல்ல நேரத்தில் நான் ஏன் பொய் கூறுவேன். ஆகவே இது உண்மையே என்று விளக்குகிறாள். மஹரிஷி பயத்தில் அழ ஆரம்பித்து விட்டார். தன்னைத்தானே நொந்து கொண்டார். "சேமித்து வைத்த என் தவம் அழிந்து விட்டதே, இது உலகத்தோர் செல்வம் போன்றதன்றே. அந்தணர்க்குரிய வேதமல்லவா என் செல்வம். அது அழிந்து விட்டதே. பகுத்தறிவு அழிந்து விட்டதே. என்னை மயக்கவே இவள் உண்டு பண்ணப்பட்டிருக்கிறாள். எந்த விகாரங்களும் அற்ற அந்த பரப்ரஹ்மத்தை மனத்தையடக்கி நான் அறியச் செய்த தவத்தை, என் புத்தியைக் காமமென்ற பெரும் பூதம் கலக்கிவிட்டது. அது மிகக் கொடியது. வெறுக்கத் தக்கது. நான் செய்த வேதாப்யாஸம், சாந்த்ராயணம் முதலான வ்ரதம் யாவும் அழிந்து விட்டது. நரகத்திற்குக் காரணமான கெட்ட ஸஹவாஸத்தை அல்லவா தேடிக் கொண்டு விட்டேன்" எனப் பலவாறுப் புலம்பி அழ ஆரம்பித்து விட்டார்.

எதிரில் நின்றிருக்கும் ப்ரம்லோசையைக் கோபத்துடன் பார்க்கிறார் மஹரிஷி. "பாவி! என் முன் நிற்காதே! உன் சேஷ்டைகளால் இந்த்ரன் கட்டளையை முடித்து விட்டாய். கோபத்தால் உன்னை எரிக்க வேண்டும் போல இருக்கிறது. ஆனால் ஒருவருடன் ஏழு அடிகள் நடந்தாலே அவர்கள் நண்பர்களாவார்கள். நானோ உன்னுடன் பல நூற்றாண்டுகள் கூடி வாழ்ந்து நட்பு கொண்டு விட்டேன். அதனாலேயே உன்னை அழிக்கவில்லை. உன்னைக் கோபிப்பதும் தவறு. தவறு முற்றிலும் என்னுடையதே, நானே நிந்திக்கப்படவேண்டியவன். புலன்களைக் காக்காமலிருந்து விட்டேன், இந்த்ரியங்களை அடக்கவில்லை. காதலைக் கொண்டாடி உனக்குத் தொண்டனானேன், தவறு என்னுடையதே, ஆனால் உன்னைப் பார்க்காதவரை நான் என் நிலையில் கட்டுப்பாடோடு தானே இருந்தேன், ஆகவே எல்லாம் உன்னால் வந்ததே" என்று கோபம், நிந்தனைகளில் மாறி மாறி இருக்கிறார்.

"இந்த்ரன் விருப்பத்திற்காக என் தவத்தைக் கெடுத்த துஷ்டை நீ. உலகத்தோருக்கு உண்டாகும் மோஹத்திற்கெல்லாம் இருப்பிடமானவள் நீ, எவராலும் வெறுக்கப்பட வேண்டியவள். உன்னிடம் மோஹித்து என்னை இழந்தேனே, என் கண் முன் நில்லாது அப்பால் செல்" என்று அவளிடம் கோபிக்கிறார். ப்ரம்லோசை பெரிதும் நடுங்கி உடல் வேர்த்து அவரிடமிருந்து ஓடி விடுகிறாள். ஆகாய மார்க்கமாகச் செல்லும் அவள் அப்போது ரிஷியால் கருத்தரித்திருந்தாள். பயத்தாலும், நடுக்கத்தாலும் உண்டான வேர்வையை வழியில் இருந்த மரங்களின் இலைகளில் துடைத்தெறிந்தவாறே சென்று கொண்டிருந்தாள். அவளது வீர்யம் அந்த வேர்வைத் துளிகளில் வெளிவந்தவாறு இருந்தது. பல மரங்களில் இருந்த இந்த வீர்யத்தை வாயு சேர்த்துக் கொடுக்க நான் என் கிரணங்களால் போஷித்து வளர்த்து வந்தேன். அந்த கருவிலிருந்து பிறந்த பெண்ணே இந்த மாரிஷை" என்று ஸோமன் அவளது வரலாற்றை ப்ரசேதஸ்ஸுக்களுக்குக் கூறுகிறான்.

இப்படி கண்டு மஹரிஷிக்கும், ப்ரம்லோசைக்கும், வ்ருக்ஷங்களுக்கும், வாயுவிற்கும், எனக்கும் பெண் ஆகிறாள் இந்த மாரிஷை. இவளை ஏற்றுக் கொண்டு நீங்கள் வ்ருக்ஷங்கள் மீதான கோபத்தை விடுங்கள் என்கிறான் ஸோமன். யோகம் கலங்கியதற்கு வருந்திய முனிவர் மீண்டும் புருஷோத்தமம் என்ற பகவான் நித்யவாசம் செய்யும் மலைக்குச் சென்று அவரை ஆராதித்தார். ப்ரஹ்மபாரம் என்ற துதியை ஜபித்து கைகளைத் தூக்கியபடி தவமிருக்கிறார். ப்ரஹ்மபாரஸ்தவத்தை வியந்து அதைத் தங்களுக்குக் கூறுமாறு ஸோமனை ப்ரசேதஸ்ஸுக்கள் கேட்க முதல் மூன்று ச்லோகங்களில் மஹாவிஷ்ணுவின் கல்யாண குணங்களையும், கடைசி நான்காவது ச்லோகத்தில் தனக்குண்டான பாபங்களைத் தொலைக்க வேண்டியும் கண்டு மஹரிஷியால் துதிக்கப்பட்ட அந்த ப்ரஹ்மபாரஸ்தவத்தை ஸோமன் அவர்களுக்குக் கூறுகிறான். மேலும் எவர் அதைத் தினம் பாராயணம் செய்கிறார்களோ அவர்களுடைய காம க்ரோதங்கள் ஒழிந்தழியும் என்று கூறுகிறான் ஸோமன்.

இப்படிப் பிறந்த மாரிஷை முற்பிறவியில் ஒரு ராஜபுத்ரனை மணந்து இள வயதிலேயே குழந்தைகளின்றி விதவையும் ஆகிவிட்டாள். பின் வாழ்வை வெறுத்து மஹாவிஷ்ணுவை ஆராதித்து அவன் தரிசனத்தையும் அருளையும் பெற்றாள். தன் வைதவ்யத்தையும், மகப்பேறின்மையும் கூறி இனி வரும் பிறவிகளில் நீண்ட ஆயுளுடன் கூடிய உயர்ந்த பதிகளும், ப்ரஹ்மாவிற்குச் சமமான ஸத்புத்ரனும், தனக்கும் பிறர் கண்டதும் மயங்கும் அழகும், அயோநிஜையாகவும் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள். மஹாவிஷ்ணுவும் "அடுத்த பிறவியிலேயே உலகம் புகழும் நற்செயல்களையுடைய பத்து பேர்கள் உனக்குப் பதிகளாவார்கள். நீயும் அழகுள்ளவளாய், அயோநிஜையாகவும் பிறந்து உலகு முழுதும் தன் வம்சத்தை நிறைக்கும் ஓர் உயர்ந்த உத்தமனையும் புத்ரனாகப் பெறுவாய்" என்று அருளினார்.

இப்படிப் பதிகளையும், புத்ரனையும் வரத்தால் அடைந்த மாரிஷையை நீங்கள் அனைவரும் மணப்பதால் ஒரு தோஷமும் இல்லை. அது அவள் வரம் என்று கூறினான் ஸோமன். இந்த விஷயங்களால் தங்கள் கோபமொழிந்து, தெளிந்திருந்த ப்ரசேதஸ்ஸுக்களுக்கு மரங்களும் மாரிஷையை கன்யாதானம் செய்தன. இவர்களுக்குப் பிறந்தவனே தக்ஷன். அவனும் ப்ரஜா ஸ்ருஷ்டியை சராசரங்கள், பல வகைப் ப்ராணிகள் என ஐந்து வர்க்கங்களில் மனதாலேயே ஸ்ருஷ்டித்து ஐம்பது பெண்களையும் படைத்துக், அவர்களில் பத்து பேரை தர்மனுக்கும், பதிமூன்று பேரை காச்யபருக்கும், மீதி இருபத்தேழு பெண்களை (நக்ஷத்ரங்கள்) சந்த்ரனுக்கும் மணம் முடித்தான்.

இந்தப் பெண்களிடமிருந்தே தேவர்கள், தைத்யர்கள், தானவர்கள், நாகங்கள், பசுக்கள், பறவைகள், அப்ஸரஸ்ஸுக்கள், கந்தர்வர்கள் என அனைவரும் உண்டானார்கள். இவர்களிடமிருந்து தான் ஆண், பெண் சேர்க்கையினால் உற்பத்தி என்ற முறையும் உண்டானது. அது வரை மஹாத்மாக்களின் ஸங்கல்பம், தரிசனம், ஸ்பர்சம் இவைகளிலேயே மக்கள் உற்பத்தியாகிக் கொண்டிருந்தனர். பராசரர் இப்படிச் சொல்லிக் கொண்டிருந்ததில் மைத்ரேயர் மூன்று ஸந்தேஹங்களைக் கேட்கிறார். முன்பு ப்ரஹ்மாவின் கால் கட்டை விரலிலிருந்து உண்டானதாகக் கூறப்பட்ட நவ ப்ரஜாபதிகளில் ஒருவனான தக்ஷன் இப்போது ப்ரசேதஸ்ஸுக்களின் புத்ரனாகக் கூறப்படுகிறதே அது எவ்வாறு என்கிறார். விரலிலிருந்து தோன்றிய தக்ஷன் ஸ்வாயம்புவ மன்வந்த்ரத்தைச் சேர்ந்தவன். ப்ரசேதஸ்ஸுக்களின் மகனாகப் பிறந்தது சாக்ஷுஷ மன்வந்த்ரத்தில் என்கிறார் பராசரர்.

ஸோமனின் மகளான மாரிஷைக்குப் பிறந்த தக்ஷனின் பெண்களை மீண்டும் ஸோமனே மணந்தால் மாப்பிள்ளை வயதில் சிறியவர், மாமனார் வயதில் பெரியவர் என்ற உலக வழக்கும், முறையும் மாறுகிறதே என்று இரண்டாம் கேள்வியைக் கேட்கிறார் மைத்ரேயர். முற்காலத்தில் வயதை ஒட்டி பெரியவர், சிறியவர் என்ற வழக்கு கிடையாது. தவம், ஞானம், பெருமை போன்றவைகளை அனுஸரித்ததே என்கிறார் பராசரர். தக்ஷனின் ஒரு பெண்ணான அனஸூயைக்குப் பிறந்த ஸோமனுக்கு மற்ற பெண்கள் சித்தி முறையில் தானே வருவார்கள். அவர்களை சந்த்ரன் மணப்பது எப்படித் தகும் என்று தன் மூன்றாவது கேள்வியைக் கேட்கிறார் மைத்ரேயர். இவர்கள் தேவ ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், தவத்தால் பாபமற்றவர்களென்பதாலும் பொது விதிமுறைகள் இவர்களுக்குப் பொருந்தாது என்று அதற்குப் பதிலுரைக்கிறார் பராசரர். பின் மைத்ரேயருக்கு தேவ, தானவ, கந்தர்வ, பன்னக, ராக்ஷஸர்களின் பிறப்பை விரிவாகக் கூறுகிறார் பராசரர்.

மனதாலேயே ஸ்ருஷ்டியைத் தொடங்கிய தக்ஷன் அதில் வளர்ச்சி த்ருப்தியாக இல்லாததைக் கண்டு ஆண், பெண்களின் சேர்க்கையாலும் வ்ருத்தியை வகுத்தான். வீரண ப்ரஜாபதியின் மகளான தவத்திலும், பெருமையிலும் சிறந்த அஸிக்னீ என்பவளை மணந்து அவளிடம் ஐயாயிரம் பிள்ளைகளைப் பெற்று, ஹர்யச்வர்கள் என்று ப்ரஸித்தி பெற்ற அவர்களை வம்ச வ்ருத்தி செய்யச் சொன்னான் தக்ஷன். அதற்கு முயற்சி செய்ய எண்ணிக் கொண்டிருந்த அவர்களிடம் நாரதர் சென்று எங்கும் எப்போதும் ஸஞ்சரிக்கவும், எதையும் அறிந்து கொள்ளவும் சக்தி பெற்ற நீங்கள் உலகின் மேல், கீழ், அளவுகள் முதலியவைகளை அறிந்து கொள்ளாமல் ஸ்ருஷ்டி செய்வது ஏன், அவைகளை முதலில் தெரிந்து கொண்டு பின் ஸ்ருஷ்டியை ஆரம்பிக்கலாமே என்று உபாயம் கூற, அதையே சரியென்று கலந்து முடிவு செய்து, அதற்காகச் சென்ற அவர்கள் திரும்பவே இல்லை.

இதையறிந்து தக்ஷன் மீண்டும் சபளாச்வர் என்ற ஆயிரம் பேரை மீண்டும் பெற்றான். இவர்களையும் நாரதர் அதே போல் உபதேஸித்தனுப்பி வைத்து விடுகிறார். அவர்களும் திரும்பவில்லை. இங்கு "தூரதேசம் சென்ற தமையன்மார்களைத் தம்பிகள் தேடிச் செல்வது புத்திசாலித்தனமல்ல" என்றும் உபதேஸிக்கிறார் பராசரர். இப்படித் தன் வம்சத்தின் அழிவைக் கண்ட தக்ஷன் நாரதரைப் பார்த்து அவரும் அழியக்கடவது அல்லது கர்ப்பத்தில் வஸித்துப் பிறக்கக்கடவது என்றும், மேலும் நிலையான இடமின்றி எங்கும் சுற்றித் திரியவும் சபித்து விடுகிறார்.

இதன்பின் தக்ஷன் மீண்டும் அஸிக்னியிடம் அறுபது பெண்களைப் பெற்றான். இதில்தான் பதின்மரைத் தர்மனும், பதின்மூவரைக் காச்யபரும், இருபத்தெழுவரைச் சந்த்ரனும், நால்வரை அரிஷ்டநேமியும், பஹுபுத்ரன், அங்கிரஸ், க்ருசாச்வன் ஆகியோர் தலா இருவரையும் மணந்தனர். அருந்ததீ, வஸு, ஜாமி, லங்கா, பானு, மருத்வதீ, ஸங்கல்பா, முஹூர்த்தா, ஸாத்யா, விச்வா என்ற பத்து பேர்கள் தர்மனின் மனைவிகள். விச்வேதேவர்கள் விச்வாவிற்கும், ஸாத்யர்கள் ஸாத்யாவிற்கும், மருத்வான்கள் (wind) மருத்வதிக்கும், வஸுக்கள் வஸுவிற்கும், முஹூர்த்தாபிமானி தேவர்கள் முஹூர்த்தாவிற்கும், பானுக்கள் (suns) பானுவிற்கும், கோஷாபிமானி தேவன் (arc of heavens) லங்காவிற்கும், நாகவீதி (milky way)என்னும் தேவயானமார்க்காபிமானி தேவன் ஜாமிக்கும், ப்ருத்வியில் உள்ள அனைத்தும் அருந்ததீக்கும், ஸங்கல்பாவிற்கு ஸங்கல்பனும் புத்ரர்களாகப் பிறந்தனர்.

ஆபன், த்ருவன், ஸோமன், தர்மன், அனிலன், அனலன்(அக்னி), ப்ரத்யூஷன் (day-break), ப்ரபாஸன் (light) என்ற அஷ்டவஸுக்களில் ஆபனுக்கு வைஸ்தப்தன், ச்ரமன்(weariness), ச்ராந்தன்(fatigue), துனி (burthen)என்பவர்களும், த்ருவனுக்குக் காலனும்(time), ஸோமனுக்கு வர்ச்சஸ்ஸும்(light), தர்மனுக்கு மனோஹரையிடம் த்ரவிணன், ஹுதஹவ்யன், சிசிரன், ப்ராணன், ரமணன் என்பவர்களும், அனிலனுக்கு(wind) சிவையிடம் புரோகவன், அவிக்யாதகதி(untraceable motion)என்ற இருவரும், ருத்ரனிடமிருந்து வெளிவந்த வீர்யத்தை அக்னி வாங்கி கங்கையில் விட, அது நாணற்புதரில் ஒதுங்கி அதிலிருந்து ஸுப்ரஹ்மண்யனும் பிறந்தான், அவனுக்கு க்ருத்திகை என்னும் நக்ஷத்ரப் பெணகள் பால் கொடுத்தார்கள். ஆக அக்னிக்கும் புத்ரன் ஸுப்ரஹ்மண்யன். ஸுப்ரஹ்மண்யனின் முதுகிலிருந்து அவன் தம்பிகளாக சாகன், விசாகன், நைகமேஷன் என்பவர்கள் பிறந்தார்கள்.

ஏழாவது வஸுவான ப்ரத்யூஷனுக்கு தேவல மஹரிஷி பிறந்தார். இவருக்கு ப்ருஹஸ்பதி என்ற பிள்ளையும், ஒரு பெண்ணும் பிறந்தார்கள். இவளே பிறகு எட்டாவது வஸுவான ப்ரபாஸனுக்குப் பத்னியானாள். இவள் மகனே தேவதச்சனான விச்வகர்மா, அஜைகபாத், அஹிர்புத்ன்யன், த்வஷ்டா, ருத்ரன் என்பவர்கள். த்வஷ்டாவிற்கு விச்வரூபன் பிறந்தான். ருத்ரனைச் சேர்ந்த முக்யமானவர்கள் ஹரன், பஹுரூபன், த்ர்யம்பகன், அபராஜிதன், வ்ருஷாகபி, சம்பு, கபர்தீ, ரைவதன்,ம்ருகவ்யாதன், சர்வன், கபாலி என்ற பதினோரு பேர்கள். இவர்கள் த்ரிலோகாதிபதிகள். அதிதி, திதி, தனு, அரிஷ்டா, ஸுரஸா, கஷா, ஸுரபி, வினதா, தாம்ரா, க்ரோதவசா, இலா, கத்ரூ, முனி என்ற பதிமூன்று தக்ஷ புத்ரிகளே காச்யபரின் மனைவிகள்.

சாக்ஷுஷ மன்வந்த்ரத்தில் துஷிதர் என்ற பன்னிரண்டு தேவர்கள் தமக்குள் கலந்தாலோஸித்து அடுத்த வைவஸ்வத மன்வந்த்ரத்தில் அதிதியின் கர்ப்பத்தை அடைந்து நன்மையடைய உறுதி செய்து கொண்டனர். இவர்களே ஏழாவது வைவஸ்வத மன்வந்த்ரத்தில் அதிதியிடம் விஷ்ணு, இந்த்ரன், அர்யமா, தாதா, த்வஷ்டா, பூஷா, விவஸ்வான், ஸ்விதா, மித்ரன், வருணன், அம்சு, பகன் என்று பெயர் பெற்ற த்வாதச ஆதித்யர்களாகப் பிறந்தார்கள். அடுத்த திதியின் வம்சம் விரிவானதும், ப்ரஹ்லாத சரித்ரத்தை அடக்கியதுமாதலால் அதைப் பிற்பாடு கூற முடிவு செய்தார். சந்த்ரனின் இருபத்தேழு மனைவிகளுக்கும் பல புத்ரர்கள் பிறந்தனர். அரிஷ்டனேமியின் நான்கு மனைவிகளுக்கும் பதினாறு பிள்ளைகள் பிறந்தனர். பஹுபுத்ரனின் மனைவியர் இருவரும் காற்று, வெயில், மழை, துர்பிக்ஷம் இவைகளுக்குக் காரணமான நான்கு மின்னல்களை கபிலம், ரக்தம், பீதம்(மஞ்சள்), வெண்மை நிறங்களில் பெற்றார்கள்.

ஆங்கிரஸின் மனைவிகள் இருவரும் ப்ரத்யங்கிரஸம் என்று மஹரிஷிகளால் போற்றப்படும் முப்பது மந்த்ரங்களின் தேவதைகளைப் பெற்றனர். ப்ருசாச்வனின் மனைவியர் இருவரும் திவ்யாஸ்த்ர தேவதைகளைப் பெற்றனர். இப்படிக் கல்பத்தின் ஆரம்பத்தில் பிறந்த முப்பத்து மூன்று வகை தேவர்களும் ஒவ்வொரு மன்வந்த்ரத்திலும் அவர்கள் இஷ்டத்தில் பிறந்து வருகிறார்கள். காச்யபரின் மனைவிகளுள் திதிக்கு ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்ஷன் என்ற இரு பிள்ளைகளும், ஸிம்ஹிகா என்ற மகளும் பிறந்தனர். இவள் விப்ரஸித்தி என்ற அஸுரனுக்கு மனைவியானாள். ஹிரண்யகசிபுவிற்கு அனுஹ்லாதன், ஹ்லாதன், ப்ரஹ்லாதன், ஸம்ஹ்லாதன் என்ற நான்கு பிள்ளைகள். இதில் ப்ரஹ்லாதன் தர்மபுத்தி உள்ளவன். தன் உடலைப் போல மக்களைக் காப்பவன். ஹிரண்யகசிபுவின் பல தீமைகளுக்கு ஆளானவன். தன் வாழ்வை அச்சுதனுக்கு அர்ப்பணித்தவன்.

விஷ்ணு புராணம் - 14

01_14. அந்தர்தானன், வாதீ என்ற இருவர் ப்ருதுவின் பிள்ளைகள். அந்தர்தானனுக்கும், சிகண்டினீக்கும் ஹவிர்தானன் பிறந்தான். இவன் அக்னியின் புத்ரியான திஷணையை மணந்து ப்ராசீனபர்ஹி, சுக்ரன், கயன், க்ருஷணன், வ்ருஜினன், அஜினன் என்ற ஆறு பிள்ளைகளைப் பெற்றான். இந்த ப்ராசீனபர்ஹி உலகெங்கிலும் தர்ப்பைகளை கிழக்கு நுனியாக பரப்பி பல யாகங்களைச் செய்து இந்த பெயரைப் பெற்றான். இவன் பல ப்ரஜைகளை உண்டு பண்ணி அவர்களுக்கு ஈச்வரனான இருந்தான். ஸமுத்ரனின் புத்ரியான ஸ்வர்ணா என்பவள் இவன் மனைவி. இவர்களுக்குப் பிறந்த பத்து பிள்ளைகள் தனுர் வேதத்தில் தலை சிறந்த ப்ரசேதஸ் என்பவர்கள்.

தந்தை இவர்களிடம் தான் ப்ரஹ்மனின் விருப்பப்படியே ப்ரஜா வ்ருத்தி செய்ததாகவும், அவர்களும் அதையே செய்து தன்னையும், ப்ரஹ்மனையும் மகிழ்வித்து நோக்கத்தை நிறைவேற்றவும் கூறுகிறான். ப்ரசேதஸ்ஸுகள் ப்ரஜா வ்ருத்திக்கான சக்தியைப் பெற என்ன வழி என்று கேட்க ப்ராசீனபர்ஹி விஷ்ணுவின் பெருமைகளைப் பலவாறு புகழ்ந்துரைத்து அவரையே துதித்து சந்தோஷப்படுத்துமாறு கூறுகிறார். இந்த பத்து பிள்ளைகளும் வேறு சிந்தையின்றி ஒன்றுபட்டு பரமனையே நினைத்து கடல் நீரில் மூழ்கி பத்தாயிரம் ஆண்டுகள் போற்றித் துதித்துத் தவமிருந்தனர். இந்த முழுத்துதியையும் மைத்ரேயர் அருளுமாறு கேட்க பராசரரும் அருளுகிறார். இது பல சாஸ்த்ரங்களையும், ஸித்தாந்தங்களையும் உள்ளடக்கியதாகும். இவர்களின் துதியில் மகிழ்ந்து மஹாவிஷ்ணுவும் தோன்றினார். ப்ரசேதஸ்ஸுகள் விழுந்து பக்தியுடன் வணங்கினர். ப்ரஜா வ்ருத்திக்கான ஆற்றலையும் வேண்டிப் பெற்றுக் கொண்டு நீரிலிருந்து வெளி வந்தனர்.

விஷ்ணு புராணம் - 13

01_13. த்ருவனின் மனைவி சம்பு. இவர்களுக்கு சிஷ்டி, பவ்யன் என்று இரண்டு பிள்ளைகள். சிஷ்டி ஸுச்சாயை என்பவளை மணந்து ரிபு, ரிபுஞ்ஜயன், விப்ரன், வ்ருகபலன், வ்ருகதேஜஸன் என்று ஐந்து குழந்தைகளைப் பெற்றான். இதில் ரிபுவிற்கும், ப்ருஹதீ என்பவளுக்கும் சாக்ஷுஷன், ஸர்வதேஜஸன் என்ற இரு பிள்ளைகள் பிறந்தனர். சாக்ஷுஷன் வருணனுடைய வம்சத்தைச் சேர்ந்த வீரண ப்ரஜாபதியின் புத்ரியான புஷ்கரிணீயை மணந்து ஆறாவது மன்வந்த்ரத்திற்கு அதிபனான மனுவைப் பெற்றான். இவனுக்கும் வைராஜ ப்ரஜாபதியின் புத்ரியான நட்வலைக்கும் ஊரு, பூரு, சதத்யும்னன், தபஸ்வி, ஸத்யவான், சுசி, அக்னிஷ்டோமன், அதிராத்ரன், ஸுத்யும்னன், அபிமன்யு என்ற பத்துப் பிள்ளைகள் பிறந்தனர். ஊரு, அக்னியின் மகளை மணந்து அங்கன், ஸுமனஸ், ஸ்வாதி, க்ரது, அங்கிரஸ், சிபி என்ற ஆறு பிள்ளைகளைப் பெற்றான். அங்கன் ம்ருத்யுவின் மகளான ஸுனீதாவை மணந்து வேனன் என்ற பிள்ளையைப் பெற்றான். வேனனின் வலக்கையை வம்சம் வேண்டி ரிஷிகள் கடைந்த போது தோன்றியவனே வைன்யன் என்ற ப்ருது மஹராஜன். இவனே பசு உருவம் கொண்ட பூமியினிடமிருந்து மக்களுக்கு வேண்டிய பொருட்களைக் கறந்து கொடுத்தவன்.

வேனனின் கையைக் கடைய வேண்டிய அவசியத்தை மைத்ரேயர் கேட்க அதைக் கூறுகிறார் பராசரர். வேனன் பிறவியிலேயே அவனது தாய் வழி தாத்தாவின் குணங்களோடு கூடி துஷ்டனாக இருந்தான். ரிஷிகளால் அரசனாக அபிஷேகம் செய்விக்கப்பட்ட போது அவன் மனம் அதர்மத்திலேயே சென்றது. யாகம், தானம், ஹோமங்கள் எதுவும் நடக்கக் கூடாது. நானே ஆராதனைக்குத் தகுந்தவன். நானே பலன்களையும் தருபவன் என்று பறை சாற்றிக்கொண்டான். அவனுக்கு ரிஷிகளும், மற்ற பலரும் நன்மைகளை எடுத்துக் கூறினர். ஆயிரம் வருடங்கள் செய்யத்தக்க தீர்க்கஸத்ர யாகத்தைச் செய்து நாராயணனைப் பூஜிப்போம். இதில் ஆறில் ஒரு பங்கு பலன் உங்களுக்கும் உண்டு. மஹாவிஷ்ணுவும் யாகத்தால் சந்தோஷமடைந்து உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவார். யாகங்களைத் தடுக்காதீர்கள் என்று வேண்டிக் கொண்டனர். வேனன் இணங்கவில்லை.

அவன் மனம் நாஸ்தீகத்திலேயேயிருந்தது. அவன் யக்ஞபுருஷன் என்று நீங்கள் கூறும் ஹரி என்பவன் யார். அவனை ஏன் என்னிலும் மேலாக மதிக்கிறீர்கள். வரமும், சாபமும் கொடுக்கவல்ல மும்மூர்த்திகளும், வாயு, யமன், ஸூர்யன், அக்னி, வருணன், தாதா, பூஷா, பூமி, சந்த்ரன் இன்னும் மற்ற எல்லா தேவர்களும் அரசனிடமே உள்ளனர். அரசன் ஸர்வதேஜஸ்வரூபன். இது சாஸ்த்ரம். எனவே என் கட்டளைப்படியே எல்லாரும் செய்யுங்கள். நீங்கள் என் அடிமைகள். பதியின் சொல் பத்னிக்கு எப்படியோ அப்படியே நான் சொல்வதைக் கேட்பதே உங்களுக்கு தர்மம் என்றான். இவனது இந்த அதர்மச் சொற்களையும், செயல்களையும் திருத்த முயன்று தோல்வியடைந்த ரிஷிகள் மிகுந்த மனவருத்தமும், கடுங்கோபமும் கொண்டனர். வேனனைக் கொல்லவும் முடிவு செய்தனர். யாகத்தில் பயன்படுத்தி மந்த்ரங்களால் சுத்தம் செய்யப்பட்ட தர்ப்பங்களையே ஆயுதங்களாக்கி அவனை அடித்துக் கொன்று விட்டனர்.

ஏற்கனவே யாக, ஹோம, தர்ம கர்மங்களை நிந்தித்ததாலும், தற்புகழ்ச்சியாலும் கொல்லப்பட்டிருந்ததால் க்ஷத்ரியதோஷமும் உண்டாகவில்லை. ஆனால் அதன் பின் ராஜ்ய பரிபாலனம் அரசனின்றி சீரழிந்தது. அக்ரமங்கள் தலை தூக்கின. மக்கள் திருடத் தொடங்கினர். கொள்ளையடித்தனர். எங்கு பார்த்தாலும் துஷ்டர்களின் புழுதிப் படலமே நிறம்பியது. மஹரிஷிகளின் நிலைமையை உணர்ந்து, மீண்டும் ஓரரசனை உண்டாக்குவதற்காக வேனனின் தொடையைக் கடைந்தனர். அதிலிருந்து கோரமான, வெந்த கம்பத்தைப் போன்ற கரிய உருவத்துடன் ஒருவன் தோன்றி முனிவர்களிடன் தான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். முனிவர்கள் அவனிடம் வெறுப்படைந்தவர்களாய் "ஒன்றுமே செய்யவேண்டாம். நீ உட்கார் (நிஷீத)" என்றனர். இவனுடைய வம்சத்தவர்களே நிஷாதர்கள் என்ற விந்திய மலைக் காடுகளில் தீச்செயல்கள் புரிந்து கொண்டிருக்கின்ற வேடுவர்கள்.

மீண்டும் வேனனுடைய வலது கையைக் கடைந்த போது ப்ரகாசத்துடன் கூடிய வைன்யன் என்ற ப்ருது பிறந்தான். அவன் பிறந்த போதே ஆகாசத்திலிருந்து விழுந்த ஆடு, மாடுகளின் கொம்புகளால் செய்யப்பட்ட முதன்மையான ஆஜகவம் என்ற ஓர் உயர்ந்த வில்லையும், சிறந்த பாணங்களையும், கவசத்தையும் தனக்கு ஆயுதங்களாக எடுத்துக் கொண்டான். அவன் பிறந்த போது எங்கும் மகிழ்ச்சி பொங்கியது. வேனனுக்கும் ஸ்வர்கம் கிடைத்தது. நதிகளும், ஸமுத்ரங்களும் தானாகவே ரத்னங்களையும், நீரையும் கொண்டு வந்து ப்ருதுவின் பட்டாபிஷேகத்திற்காக வணங்கி நின்றன. ப்ரஹ்மனே ஆறாவது மன்வந்த்ரத்தில் தேவர்களாக இருக்கப்போகிற அங்கிரஸ் என்பவர்களுடனும், ஸ்தாவர ஜங்கமங்களுடனும் நேரில் வந்திருந்து ப்ருதுவிற்கு பட்டாபிஷேகம் செய்வித்தான். அவனது வலக்கையில் ஒரு சக்ர ரேகையும் சுத்தமாக இருப்பதைக் கண்டு வியந்தான் ப்ரஹ்மன்.

எவனது வலக்கையில் விஷ்ணுவின் சக்ர ரேகை காணப்படுகிறதோ அவனை தேவர்களாலும் வெல்ல இயலாது என்று மைத்ரேயரிடம் பராசரர் கூறுகிறார். ப்ருதுவும் தர்மம் தவறாமல் விதி முறைகளைப் பின்பற்றி அரசாண்டு வந்தான். வேனனால் வருந்தி, மெலிந்திருந்த மக்கள் ப்ருதுவால் மனம் மகிழ்ந்தனர். ப்ருதுவை ராஜா என்று அழைத்தனர். இவன் தேரில் செல்லும் போது ஸமுத்ரம் இரைச்சலின்றி பணிவாக இருக்குமாம். மலைகளும் பணிந்து வழிவிடுமாம். தேரின் கொடிகளுக்கு வழிவிட்டு காட்டு மரங்கள் வணங்கி நிற்குமாம். நிலம் உழாமல் விளைச்சலைத் தந்தன. நினைத்தபோதே பலன்கள் கிடைத்தன. பசுக்கள் குறைவின்றி பாலையும், பூக்கள் இலை மடிப்புகளிலேயே தேனையும் பெருக்கின.

ப்ருதுவின் பிறப்பிற்காக செய்யப்பட்ட யாகத்தில் சிறந்த அறிவுடன் ஸூத, மாகதர்களும் தோன்றினர். இவர்கள் ப்ருது சக்ரவர்த்தியைத் துதிப்பதற்காக ரிஷிகளால் பணிக்கப் பட்டனர். அவர்கள் இவன் இப்போது தானே பிறந்திருக்கிறான். இவன் குணங்கள் என்ன. வீரச் செயல்கள் என்ன. புகழ் என்ன எனப் பல கேள்விகளைக் கேட்டனர். அதற்கு அந்த அந்தணர்கள் இவன் மஹாபலவான், ராஜாதிராஜன், மக்களுக்குப் பல நன்மைகளைச் செய்யப் போகிறான். அப்போது இவன் நற்குணங்கள் விளங்கும். நீங்களும் அவைகளையே சொல்லித் துதியுங்கள் என்றனர். அதாவது ப்ருது என்னென்ன செய்யவேண்டும் என்பதை அவனிடம் தாங்கள் நேராகக் கூறாமல், இவர்களைக் கொண்டு துதிக்கச் செய்தால் அவற்றை சந்தோஷித்து ப்ருதுவும் செய்வான் என்று ஏற்படுத்தினர்.

இதைப் புரிந்து கொண்ட ப்ருதுவும், நற்குணங்களாலேயே ஒருவன் துதிக்கத் தக்கவனாகிறான். கீர்த்தியை அடைகிறான். நானும் அவற்றை அடைய வேண்டும். இதற்காகவே இந்த துதியை மஹரிஷிகள் ஏற்படுத்தியிருக்கின்றனர். ஆகவே நான் இந்த ஸூத, மாகதர்கள் கூறும் குணங்களைக் கொள்வேன். எவற்றை விடச்சொல்கிறார்களோ அவற்றை விடவும் விடுவேன் என்று நிச்சயப்படுத்திக் கொண்டான். ஸூத, மாகதர்களும் "இந்த ப்ருது மஹராஜன் உண்மை பேசுபவன், உத்தமன். கொடையாளி, சொன்னதைச் செய்பவன், தகாததில் நாணமுள்ளவன். எவரிடமும் நட்பு பூண்டவன். பொறுமையாளன், பராக்ரமன், கொடியவர்களைத் தண்டிப்பவன், தர்மவான், நன்றி மறவாதவன், அருளாளன், இனிமையாகப் பேசுபவன், யாகங்களைச் செய்பவன், அந்தணர்களிடம் அதிக அன்பு கொண்டவன், நல்லோரிடம் குறை காணாதவன், பக்ஷபாதமின்றி நீதி வழங்குபவன்" என்றெல்லாம் துதித்துரைத்தனர்.

இவற்றையெல்லாம் ப்ருது சிறப்பாக செய்தபோதும் பூமி ஒரு வளத்தையும் தரவில்லை. மக்களின் வேண்டுதலைக் கேட்டு, பசுவின் உருவில் ஓடிச் செல்லும் பூமியின் மீது கோபம் கொண்டு ஆயுதங்களுடன் துரத்திச் சென்றான். மூவுலகில் எங்கு சென்றாலும் பின்னாலேயே ப்ருது மஹாராஜனையும் கொடும் ஆயுதங்களுடன் தொடர்ந்ததைக் கண்ட பூதேவி "அரசே! பெண் பாவம் பொல்லாததன்றோ. என்னைக் கொல்லாதீர்கள்" என்று கெஞ்சினாள். "பலருக்கு நன்மை ஏற்படுமெனில் ஆணானாலும், பெண்ணானாலும் கொல்வதில் தவறில்லை" என்று ப்ருதுராஜன் மறுப்புரைத்தான். பூதேவி, "நானன்றோ மக்களுக்கு ஆதாரம், நானில்லையென்றால் மக்கள் கதி என்னாகும்" என்றாள். ப்ருது "நானே என் சக்தியால் அவர்களுக்கு ஆதாரமாயிப்பேன்" என்றான். வேறு வழியில்லாத பூமி, பயத்துடனும், பணிவுடனும் "மக்களுக்குத் தேவையான ஓஷதிகளை நான் இப்போது பசுவின் ரூபத்தில் இருப்பதால் பாலாகக் கொடுக்கிறேன். அவை எங்கும் பரவ வசதியாக பூமியை சமமாக்கி, தகுந்த கன்றுடன் வந்து கரந்து கொள்ளுங்கள்" என்றாள்.

வைன்யனும் தன் வில் நுனியால் மலைகளை ஆயிரமாயிரமாக தூக்கி எறிந்து பூமியைச் சமப்படுத்தினான். பசுவை சந்தோஷப்படுத்தி பாலைப் பெருக்க ஸ்வாயம்புவ மனுவையே கன்றாக்கி, தன் கையையே பாத்ரமாக்கி மக்களுக்குத் தேவையான ஓஷதிகள், பயிர்களைக் கறந்து கொடுத்தான். இப்படி அஞ்சி ஓடிய பூமியையும் ரக்ஷித்தமையால் ப்ருது பூமிக்குத் தந்தையுமானான். பூமியும் ப்ருத்வி என்று அழைக்கப்படலாயிற்று. இப்படியே தேவர்களும், முனிவர்களும், ராக்ஷஸர்களும், கந்தர்வர்களும், யக்ஷர்களும், பித்ருக்களும், மலைகளும், மரங்களும் தங்கள் ஜாதிக்கேற்ற பலவற்றைப் பாத்ரமாகவும், கறப்பவனாகவும், கன்றாகவும் கொண்டு பூமியைக் கறந்து தங்களுக்கு வேண்டியதைப் பெற்றுக் கொண்டனர்.

பூமித் தாயும் ப்ருதுவினால் மகிழ்ந்து, ப்ருதுவும் மக்களை மகிழ்வித்து சிறந்து அரசாண்டான்.
இந்த ப்ருதுச் சக்ரவர்த்தியின் புனிதமான கதையை கேட்பவர்களையும், படிப்பவர்களையும் எந்த தீங்கும் அணுகாது. தீய கனவுகளும் வராது புண்யங்களைக் கொடுத்து நலங்களைக் கொடுக்க வல்லது இந்த ப்ருது மஹராஜனின் வரலாறு.

விஷ்ணு புராணம் - 12

01_12. ரிஷிகள் கூறியவைகளை மனதில் நன்றாகப் பதிய வைத்துக் கொண்ட த்ருவன் அப்போதே அனைத்தையும் ஒழித்தவனாய் யமுனைக் கரையின் மதுவனத்தை அடைகிறான். மிகுந்த புண்யஸ்தலமான இது மது என்ற அஸுரன் வஸித்ததால் இந்த பெயரைப் பெற்றது. மதுவின் புத்ரன் லவணனை சத்ருக்னர் அழித்து மதுரை நகரை இங்கு ஏற்படுத்தினார். ஆதியில் வாமனன் தவம் செய்து ஸித்தி பெற்ற ஸித்தாச்ரமமும் இதுவே. பகவன் நித்யமாயிருக்கும் ஸ்தலம் இது. வேறெதிலும் மனதைச் செலுத்தாமல், மஹாவிஷ்ணுவை ஹ்ருதயத்தில் நிறுத்தி, ரிஷிகள் உபதேஸித்த மந்த்ரத்தை ஜபிக்க ஆரம்பித்தான் த்ருவன்.

பரமன் துணையுடன் தவம் தொடர்ந்தது. அவன் இடக்காலை ஊன்றித் தவம் செய்த போது பூமி இடப்பக்கமும், வலக்காலை ஊன்றித் தவம் செய்த போது பூமி வலப்பக்கமும் தாழ்ந்தது. பின் கட்டை விரலை மட்டும் ஊன்றித் தவத்தைத் தொடர்ந்தான். அப்போது பூமி நடுங்கியது. மலைகள் நிலை குலைந்தன. ஆறு, கடல்கள் கலங்கின. தேவலோகமும் அவன் தவத்தினுக்ரத்தைத் தாங்க முடியவில்லை. ஸ்வாயம்புவ மன்வந்த்ரத்தில் தேவர்களாயிருந்தவர்கள் யாமர் எனப்படுபவர்கள். த்ருவனின் இந்தத் தவம் தொடர்ந்தால் தங்கள் பெருமையும், பதவிகளும் பாதிக்கப்படுமோ என்றஞ்சிய அவர்கள் இந்த்ரனுடன் கூடி தவத்தைக் கலைக்க ஆலோசித்தனர்.

அவன் அனுப்பிய கூச்மாண்டர் என்ற பூதங்கள் பல மாயைகளைச் செய்தனர். அவன் தாய் உருவிலேயே வந்து "குழந்தாய்! இந்த கொடிய தவத்தை விட்டு விடு. இது உடலையே அழித்து விடும். பல ஆசை, எண்ணங்களுடன் உன்னைப் பெற்றெடுத்தேன். இப்போது மிக்க வருத்தத்திலிருக்கிறேன். எனக்கு உன்னைத் தவிர கதி இல்லை. மாற்றாந்தாயின் சொல்லைக் கொண்டு என்னைக் கைவிடாதே. உன் வயதெங்கே, இந்த கொடிய தவமெங்கே. தாய் வருந்தத் தவமிருக்காதே. அது பயன் தராது. இப்போது விளையாடு, பின் வேதம் ஓது, பின் மணம்புரிந்து இன்புற்று, பின் தவ வாழ்க்கையைக் கொள். அதுவே சரி. அந்தந்த பருவத்தில் செய்யவேண்டியதைச் செய். தாயின் விருப்பத்தின் படி நட. அதுவே தவறென்றாலும் தர்மம். தாய்க்கு விருப்பமில்லாதது எதுவாயினும் அதுவே அதர்மம். என் சொல்படி நட. இல்லையென்றால் உன் முன்பே உயிரை மாய்த்துக் கொள்வேன்" எனக் கதறியழுதன.

அவன் சிந்தை இப்போது இங்கில்லை. சலனமின்றி தவத்திலேயே இருக்கிறான் த்ருவன். "இதோ பார், பல ராக்ஷஸர்கள் ஆயுதங்களுடன் தாக்க வருகின்றனர். ஓடி வா" என பயமுறுத்தியும் பார்க்கிறாள். பலனின்றி மறைந்து விடுகிறாள். அவ்வாறே பல உருவங்களுடன் பயங்கரமான ஆயுதங்களேந்தி கூக்குரல்களுடன், கொள்ளிக்கட்டைகளுடன், சிங்கம், புலி, அரக்கர், முதலை, நரி எனப் பல முகங்களுடன் சிறுவனைச் சூழ்ந்து கொண்டு பல தீச்செயல்களால் பயமுறுத்தின.

அவன் சிந்தை இப்போது இங்கில்லை. சலனமின்றி தவத்திலேயே இருக்கிறான் த்ருவன். பாதாரவிந்தங்களிலேயே லயித்திருக்கிறான். இந்த்ரனின் மாயைகளும், தீச்செயல்களும் அவனுக்கு ஒரு தீங்கும் செய்யவில்லை, ஒரு பாதிப்பும், சலனமுமில்லை த்ருவனுக்கு. தங்கள் பதவிகளும், பலமும் த்ருவன் தவத்தால் அடைந்துவிடுவானோ என்ற பயத்திலும், தங்கள் முயற்சிகளும் ஒன்றும் பலனளிக்காததும் கண்டு வேறு வழியின்றி தேவர்களனைவரும் சென்று மஹாவிஷ்ணுவினிடமே முறையிடுகின்றனர்.

"தேவா! ஜகன்னாதா!! த்ருவன் தவத்தால் பெருங்கவலையடைந்துள்ளோம். சந்த்ரன் கலைகளால் வளர்வது போல், த்ருவனும் தன் தவத்தினால் வளர்ந்து கொண்டே வருகிறான். இவன் எங்களில் எவருடைய பதத்திற்கு ஆசைப்பட்டு இந்தத் தவத்தைச் செய்கிறான் என்பது தெரியாமல் வாடுகிறோம். அதனால் இந்தத் தவத்திலிருந்து அவனை விலக்கி எங்களைக் காப்பாற்றுங்கள்" என வேண்டுகின்றனர். ஸர்வேச்வரன் "நீங்கள் கவலைப்படவேண்டாம். அவன் உங்கள் பதவிகளை விரும்பவில்லை. அவன் விரும்புவதை நானறிவேன். நீங்கள் உங்களிடம் செல்லுங்கள். நானும் த்ருவனை தவத்திலிருந்து விலக்குகிறேன்" என்றார். இதைக் கேட்டு தேவர்களும் தெளிந்து தங்களிருப்பிடம் சென்றனர்.

தேவதேவனும் த்ருவன் முன் தோன்றி, "உத்தம புதல்வனே! உன் தவத்தால் மகிழ்ந்தேன். வேறு எதிலும் மனத்தைச் செலுத்தாமல் என்னிடத்திலேயே செலுத்தினாய். வரங்களைக் கேள்" என்றார். கண்களைத் திறந்த த்ருவன் ஸர்வாலங்கார, ஆயுத பூஷணராய், சித்தத்திலிருந்த மூர்த்தி நேரில் தரிஸனம் தருவதைக் கண்டு பரபரப்புடனும், பயத்துடனும், வியப்புடனும், உடலெங்கும் மயிர்க் கூச்செறிய விழுந்து வணங்கினான். எவரும் அறிந்திராத பரம புருஷனை, எப்படித் துதிப்பதென்பதையும் ஒருவரும் அறியார். ஆனால் துதித்தேயாக வேண்டும். "தேவா! ப்ரஹ்மநிஷ்டர்களும் உன்னை அறியார். நான் உன்னை எப்படித் துதிப்பேன். ஆனால் என் மனம் உன் திருவடிகளிலும், உன்னைத் துதிப்பதிலுமே நிலைத்து நிற்கிறது. என் நிலைக்கேற்ற தத்துவ ஞானத்தை நீயே தந்தருள வேண்டும்" என்கிறான்.

உயர்ந்த பதவிகளுக்காகத் தவத்தை மேற்கொண்டு, அது கிடைக்க ஒருவர் தரிஸனம் தரும்போது த்ருவன் தத்துவ ஞானத்தைக் கேட்கிறான். பரமனும் பாசத்துடன் தன் பாஞ்சஜன்யத்தின் நுனியால் த்ருவன் தாடையைத் தடவிக் கொடுக்க, புத்துணர்வு கொண்டு, பரமார்த்த தத்வத்தை முழுதும் அறிந்தவனாய் ப்ருத்வி முதலிய பஞ்ச பூதங்கள், பஞ்சேந்த்ரியங்கள், மஹதஹங்காரம், ப்ரக்ருதி இவைகளை உடலாய்க் கொண்டு நிற்பதாய்ப் பரமனைப் போற்றுகிறான். கல்யாண குணங்களுக்கெல்லாம் இருப்பிடமானவனும் நீயே. நீயே ஸ்வரூபம், குணங்களில் பெருமை பெற்றவ்ன். நீயே ப்ரஹ்மம். யோகிகளால் அறியத் தக்கவன் நீ. மாறுபாடில்லாதவன் நீ.

பல தலைகள், கால்கள், கண்கள், ஞானேந்த்ரியங்கள், கர்மேந்த்ரியங்கள் பெற்றவன் நீ. எங்களுக்குத் தேவைப்படுவது போல் உன் க்ரியைகளுக்கு இந்த இந்த்ரியங்கள் தேவையில்லை. எனினும் அனைத்தையும் அடக்கிய ஸர்வ சரீரமாய் இருக்கிறாய். அவ்யக்த சரீரரான அனிருத்தனும், ஸ்வராட் எனும் ஆத்ம ப்ராப்தி உள்ளவனும், ஸம்ராட் எனும் பரம பதத்தைப் பெற்றவனும், ஆதி ப்ரஹ்மனும், அனைத்தையும் அடக்கிய இந்த ஹிரண்யகர்ப்பனும், இந்த உலகும் உன்னிடமிருந்தே தோன்றியது. இனியும் தோன்றும், வளரும். ப்ரளய காலத்தில் இந்த ஜகத்தும், பெரிய மரம் அதன் வித்தில் அடங்கியிருப்பது போல் அடங்கும். இப்படிப் பலவாறுத் துதித்த த்ருவன் நான் உனக்கு சொல்ல வேண்டியதொன்றுமில்லை. எல்லா உயிர்க்கும் அந்தராத்மா நீ. என் மனதையும் நீ அறிவாய். உன் தரிஸனம் பெற்றேன். உன்னைத் துதிக்கவும் செய்தேன். என் தவப்பயன் அடைந்தேன்" என்கிறான்.

பெருமான் என்னைத் தரிசிப்பவர்கள் தானே எல்லா சிறப்புகளும், நன்மைகளையும் பெறுவார்கள். ஆகவே என் தரிசனத்தை விட்டு, மற்றொரு வரத்தைக் கேள் என்கிறார். த்ருவனும் "நீயறியாததொன்றுமில்லை. நான் மூடன். ஆனால் பெரும் பயனை விரும்புகிறேன். அரிதாயினும் உன்னருளால் ஆகாததொன்றுமில்லை. உன்னருளாலேயே இந்த்ரனும் இருக்கிறான். மாற்றாந்தாய் கூறியதை மனத்தில் கொண்டு நீலைத்திருப்பதும், இவ்வுலகிற்கெல்லாம் ஆதாரமுமான ஓருயர்ந்த ஸ்தானத்தையே நான் ப்ரார்த்திக்கிறேன் என்றான்.

"தந்தேன், உன்னுடைய இந்த தவத்திற்கும், பலனிற்கும் ஒரு காரணம் உண்டு. முற்பிறவியில் நீ ஒரு அந்தணச் சிறுவனாக, எப்போதும் என்னிடத்திலேயே மனத்தைச் செலுத்தி, ஆராதித்தாய். தாய், தந்தையர்களுக்கும் பணிவிடை செய்து, உன் வர்ணாச்ரம தர்மங்களையும் தவறாது செய்து வந்தாய். அப்போது உனக்குக் கிடைத்த ஓர் அரச குமாரனின் நெருங்கிய நட்பால் பல அரச போஹங்களையும், வஸ்துக்களையும் கண்டு அதற்கு ஆசைப்பட்டாய். அரசகுமாரனாகப் பிறக்க விரும்பினாய். என்னிடம் நீ வைத்திருந்த பக்தியினாலேயே இந்த உயர்ந்த ஸ்வாயம்புவ மனுவின் அரச வம்சத்தில் நீ பிறந்தாய். இப்போதும் என்னிடம் பக்தி செலுத்தினாய். என்னிடம் மனதுடன் பக்தி செலுத்தினால் ஒருவன் மோக்ஷத்தையே பெறும்போது ஸ்வர்கங்களை அடைவதில் என்ன ஆச்சர்யம்

நீ மூவுலகங்களுக்கும் மேலே அனைத்து நக்ஷத்ரங்களுக்கும் ஆதாரமாய் விளங்குவாய். அனைத்து க்ரஹங்கள், நக்ஷத்ரங்கள், ஸப்தரிஷிகள், தேவர்கள் அனைவருக்கும் மேம்பட்ட இடத்தைத் தந்தேன். சதுர்யுகம் முடியும் வரையிலும், மன்வந்த்ரம் முடியும் வரையிலுமே சிலர் தம் ஸ்தானங்களில் இருப்பார்கள். நீ கல்பம் முடிய இந்த ஸ்தானத்திலிருந்து, பிறகு என் த்யானத்தால் மோக்ஷத்தையும் பெறுவாய். உன் தாய் ஸுநீதி உன் அருகிலேயே நக்ஷத்ரமாய் வாசம் செய்வாள், குழந்தாய்! உறுதியில் உயர்ந்த உன்னை எவர் அமைதியான மனதுடன் காலையிலும், மாலையிலும் பாடுகிறார்களோ அவர்களுக்கு மிகுந்த புண்யம் உண்டாகும்" என்று அருளினார்.

அஸுரகுரு சுக்ராச்சார்யாரும், "உலகில் யாவரும் வணங்கும் ப்ரஸித்தி பெற்ற ஸப்தரிஷிகளும், இப்போது உன்னையே முன்னிட்டு ஸஞ்சரிக்கின்றனர். உன் தவம் அற்புதமானது. அன்று தந்தை மடி பெறாது, வருத்தமுற்றிருந்தபோது "நல்லொழுக்கத்துடன், நற்செயல்களைச் செய்து வா, உனக்கு நன்மை கிட்டும்" என்று ஆசிர்வதித்த உன் தாயின் குணத்தை என்ன சொல்வது. உண்மையை உரைத்த உத்தமியால் நீயும், உன் மாறாத தவத்தால் உன் தாயும் உயர்ந்த ஸ்தானத்தைப் பெற்றீர்கள்" எனப் புகழ்கிறார்.

பராசரரும் "மேற்கண்ட வகையில் இந்த த்ருவ சரித்ரத்தைத் தினந்தோறும் பாடுபவன் ஸர்வ பாபங்களும் தொலைந்து இவ்வுலகிலும், ஸ்வர்க்கத்திலும் நீக்கமற்ற பதவியைப் பெற்று சிறப்புறுவான். ஸகல போக்யங்களும் பெற்று நீண்ட நாள் வாழ்வான்" எனப் புகழ்ந்துரைக்கிறார்.

விஷ்ணு புராணம் - 11

01_11. மனுவிற்கு ப்ரஸூதி, ஆஹுதி என்ற இரு பெண்களும், ப்ரியவ்ரதன், உத்தானபாதன் என்ற இரு மகன்களும் ஆவர். அதில் பெண்களின் வம்சத்தை இதுவரை பார்த்துள்ளோம். இனி மகன்களின் வம்சம். இவர்களிருவருமே சிறந்த வீரர்களும், தர்மங்களையறிந்தவர்களும் ஆவர். உத்தானபாதனுக்கு ஸுருசி, ஸுநீதி என்று இரு மனைவிகள். இதில் ஸுருசியினிடம் அவனுக்கு அன்பு அதிகம். இவர்களுக்கு உத்தமன் என்ற குழந்தையும், ஸுநீதியினிடம் த்ருவனும் பிறந்தனர். உத்தமன் தகப்பனுக்கு வேண்டியவனாகவும், ஸுநீதியினிடம் அவ்வளவாக அன்பின்றியும் இருந்தான். த்ருவன் நற்குணங்கள் நிரம்பியவனாக இருந்தான்.

ஒருநாள் அரசவையில் ஸுருசியுடன் அரசன் அமர்ந்திருக்கையில் உத்தமன் பாசத்துடன் அப்பாவின் மடியில் ஏறி விடுகிறான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த த்ருவனும் அவ்வாறே செய்ய முயல்கிறான். அருகில் ஸுருசி இருப்பதால் அவளுக்கு விருப்பமில்லாததை செய்ய விரும்பாத அரசனும் குழந்தை த்ருவனை அன்புடன் மடியில் ஏற்கவில்லை. ஸபத்னியைப் பிடிக்காத அரசியும் தன் கோபத்தைக் குழந்தையிடம் காட்டுகிறாள்.

"குழந்தை! நீ என் வயிற்றில் பிறக்கவில்லை. எனவே உனது இந்த ஆசை வீண். அப்பா மடி என்ற ஸ்தானத்தையடையும் எண்ணம் மடமை. அது உத்தமோத்தம ஸ்தானம். உனக்கு அது கிடைக்கவே கிடைக்காது. நீ என் மகனுக்கு தனயன் தான். ஆனாலும் எனக்குப் பிறக்காத காரணத்தால் உனக்கு இந்த உரிமையில்லை. அரசர் பலரும் அண்டி வாழும் ஒரு பேரரசனுக்குரிய இந்த ஸிம்ஹாஸனம் என் மகனுக்கே உரியது. அதை நீ விரும்பினால் துன்பத்தையடைவாய். பாக்யமற்ற ஸுநீதியின் மகன் நீ என்பதை மறந்து விட்டாயா" எனப் பலவாறு கூறினாள் ஸ்ருசி.

இந்த வார்த்தைகளையும், தந்தையின் நிலையையும் கண்ட த்ருவன் கோபத்துடன், வெகுண்டெழுந்து தன் தாயிடம் ஓடுகிறான். "ஏனப்பா இவ்வளவு கோபம், யாராவது உன்னையோ, அப்பாவையோ அவமதித்து விட்டார்களா" என அன்புடன் அழைத்து மடியில் அமர்த்திக் கொண்டு கேட்கிறாள் அவன் தாய் ஸ்நீதி. குழந்தை சபையில் நடந்ததனைத்தையும் கூறுகிறான். வருத்தத்தில் ஒளியிழந்த கண்களுடன் "குழந்தாய்! நீ கோபம் கொள்ளாதே யார் மீதும். அவையனைத்தும் உண்மையே. நீ என் வயிற்றில் பிறந்ததால் பாக்யமற்றவன் தான். இவை முன் வினைகளின் பயனே. செய்த வினைகளின் பலனைத் தடுக்கவும், செய்யாத வினைகளின் பலனைக் கொடுக்கவும் ஒருவராலும் முடியாது.

உயர்ந்த ஸிம்ஹாஸனமும், வெண் கொற்றமும், மதயானைகளும், ஜாதிக் குதிரைகளும் மற்ற பரிவாரங்களும் கொண்ட அரசு பாக்யம் செய்தவர்களுக்கே. ஸுருசி நிறைய புண்யங்கள் செய்தவள். அதனாலேயே அரசனின் அன்பும், உரிமைகளும் கிடைக்கப்பெற்றுருக்கிறாள். உத்தமனும் அவ்வாறே அவள் வயிற்றில் பிறந்து அரசனுக்கு ப்ரியனாக இருக்கிறான். நானோ பெயருக்குத்தான் பார்யை. என் வயிற்றில் பிறந்ததால் நீயும் அப்பாவிற்கு வேண்டாதவனாக இருக்கிறாய். எனவே நீ இதற்கு வருத்தப்படாதே. புத்திசாலிகள் இறைவன் கொடுத்ததைக் கொண்டு சந்தோஷப்படுகிறார்கள். உனக்கு இன்னும் வருத்தமிருந்தால் இன்னும் நிறைய புண்யங்களைச் செய்து, நன்னடத்தை, தர்ம சிந்தனை, அன்பு, எல்லா உயிர்க்கும் நன்மையே செய்யும் எண்ணம் இவைகளைச் செய். அப்போது பள்ளத்தை நோக்கி நீர் ஓடி வருவதுபோல் உன்னிடம் செல்வங்கள் தானே வந்து சேரும்" என்று ஆறுதல் கூறினாள்.

இவைகளில் ஆறுதல் அடையவில்லை குழந்தை. அது "அம்மா! உங்கள் சொற்கள் எனக்கு சாந்தியளிக்கவில்லை. சித்தியின் சொற்கள் என் மனத்தைப் பிளந்திருக்கின்றன. நான் சித்தியின் வயிற்றில் பிறக்கவில்லை. உங்கள் வயிற்றில் தான் பிறந்தேன். ஆனாலும் நான் செய்யப்போவதைப் பாருங்கள். உலகத்தோர் கொண்டாடும் ஓருயர்ந்த ஸ்தானத்தை நான் அடைவேன். அரசுரிமையை உத்தமனுக்கே கொடுக்கட்டும் அப்பா. இன்னொருவருக்குக் கொடுத்த்து எனக்கு வேண்டாம். என் முயற்சியினாலேயே தந்தை முதலானோரும் இதுவரை அடையாத இடத்தை அடைவதற்கு வேண்டியதைச் செய்வேன்" என்று கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி அருகிலிருக்கும் கானகத்தை அடைந்தது.

அங்கு தவம் செய்து கொண்டிருந்த ஸப்த ரிஷிகளிடம் சென்று நமஸ்கரித்துத் தன்னையும் அறிமுகப் படுத்திக் கொள்கிறான். தான் உலகை வெறுத்து வந்துள்ளதாகவும், தன் வருத்தத்தையும் போக்கிக் கொள்ள வேண்டுவதாகவும் கூறுகிறான். அவர்கள் ஆச்சர்யத்துடன் "இந்த நாலைந்து வயதில் உனக்கு வருத்தமா? அப்பா இருக்கும் போது உனக்குக் குடும்பக் கவலையுமில்லை. விரும்பியதும், விரும்பியவர்களின் பாசமும் கிடைக்காதது போலவுமில்லை. நோய்களெதும் இல்லை. பின்னே உன் வருத்தத்திற்கு என்ன காரணம்" என்றனர். த்ருவன் விஷயங்களைக் கூறுகிறான். ரிஷிகள் இந்த வயதில் இந்த க்ஷத்ரியச் சிறுவனுக்கு இவ்வளவு ரோஷமா என்று வியந்த ரிஷிகள் அவன் விரும்புவதைப் பெறத் தங்களாலியன்ற உதவியைச் செய்வதாகவும் கூறுகின்றனர்.

கோவிந்தனை ஆராதித்தால் எந்த உயர்ந்த ஸ்தானத்தையும், அபீஷ்டங்களையும் பெறலாம் என்று மரீசி, அத்ரி, ஆங்கிரஸ், புலஸ்த்யர், க்ரது, புலஹர், வஸிஷ்டர் என அனைவரும் அருளுகின்றனர். வேண்டியது பலதானாலும், நிறைவேற்றுபவன் ஒருவனே என்றும் கூறி விஷ்ணுவை ஆராதிக்கச் சொல்கின்றனர். த்ருவனும் உடனே அதற்கான ஆராதனை முறைகளைப் போதிக்க வேண்டுகிறான். "மனதை உலகப் பொருட்களிலிருந்து மீட்டு பகவானிடம் நிலைக்கச் செய்து, சிந்தனையை அவன் சரணாரவிந்தங்களில் செலுத்தி, "வ்யஷ்டி, ஸமஷ்டி ரூபமாய் ப்ரக்ருதியைச் சரீரமாகக் கொண்ட ஞானமயமான வாஸுதேவனை வணங்குகிறேன்" என்ற பொருள் கொண்ட த்வாதசாக்ஷரத்தை ஜபித்துத்தான் உன் தாத்தா ஸ்வாயம்புவமனு விரும்பிய செல்வத்தையடைந்தார். நீயும் அவ்வாறே செய்து வா" என உபதேஸிக்கின்றனர்.

Thursday, December 17, 2009

விஷ்ணு புராணம் - 10

01_10. ப்ருஹு, மரீசி முதலானோர் வம்சங்கள்:
ப்ருஹுவிற்கும், அவர் மனைவி க்யாதிக்கும் மஹாலக்ஷ்மியும், தாதா, விதாதா என்ற இரு பிள்ளைகளும் பிறந்தனர். இந்த இரு பிள்ளைகளும் மேருவின் புத்ரிகளான ஆயதி, நியதியை முறையே மணந்தனர். இதில் தாதாவிற்கு ப்ராணன் என்பவனும், அவனுக்கு த்யுதிமானும், அவனுக்கு ஆஜாவானும் பிறந்தனர். விதாதாவிற்கு ம்ருகண்டுவும், அவனுக்கு மார்க்கண்டேயனும், அவனுக்கு வேத சிரஸும் பிறந்தனர்.

தக்ஷ புத்ரிகள் இருபத்து நால்வருள் பதின்மூவர் தர்மராஜனுக்கு மணமுடிக்கப்பட்டனர். ருத்ரபத்னியான ஸதீ தக்ஷனின் கோபத்தால் வம்சமின்றி இறந்து விடுகிறாள். இனி ஸம்பூதி என்பவள் மரீசியின் மனைவி. அவளுக்கு பௌர்ணமாஸனும், அவனுக்கு விரஜஸ், பர்வதன் இருவர்களும் பிறந்தனர். அங்கிரஸின் மனைவியான ஸ்ம்ருதி, ஸிநீவாலீ, குஹூ, ராகா, அனுமதி என்ற நான்கு பெண்களைப் பெற்றாள். அத்ரியின் பத்னி அனஸூயை ஸோமன் (சந்த்ரன்), துர்வாஸன், தத்தாத்ரேயன் ஆகியோரைப் பெற்றாள். புலஸ்த்யருடைய பத்னி ப்ரீதி தத்தோத்ரியைப் பெற்றாள். இவர்தான் முற்பிறவியில் ஸ்வாயம்புவ மன்வந்த்ரத்தில் அகஸ்த்யராக இருந்தார். புலஹருக்கும் க்ஷமைக்கும் கர்தமன், அர்வரீவான், ஸஹிஷ்ணு என்ற மூன்று பிள்ளைகள் பிறந்தனர்.

க்ரதுவின் மனைவி ஸந்ததிக்கு வாலகில்யர் என்ற அறுபதினாயிரம் பிள்ளைகள் பிறந்தனர். இவர்கள் ஊர்த்வரேதஸ்ஸுக்கள். தீவிர ப்ரஹ்மசாரிகள். கட்டைவிரல் கணுவளவு உருவமுடையவர்கள். ஆனால் புகழில் ஸூர்யனைப் போல் ப்ரகாசமானவர்கள். வஸிஷ்டருக்கும் ஊர்ஜைக்கும் ரஜஸ், காத்ரன், ஊர்த்வபாஹு, ஸவனன், அனகன், ஸுதபஸ், சுக்ரன் என்ற ஏழு பிள்ளைகள். இவர்களே மூன்றாம் மன்வந்த்ரத்தில் ஸப்தரிஷிகள். அக்னி ப்ரஹ்மாவின் மூத்த மகன். அவன் பத்னி ஸ்வாஹாதேவி பாவகன், பவமானன், சுசி என்ற மூன்று பிள்ளைகள். (கடைந்தெடுத்த அக்னி பவமானன்; மின்னலிலிருப்பது வைத்யுதன்; ஸூர்ய மண்டலத்திலிருப்பது சுசி). இவர்கள் ஒவ்வொருவருக்கும் பதினைந்து என மொத்தம் அக்னிகள் நாற்பத்தொன்பது.

பித்ருக்களின் பத்னி ஸ்வதை. யாகம் செய்யாதவர் (அக்னிஷ்வாத்தர்), யாகம் செய்தவர் (பர்ஹிஷதர்) என பித்ருக்கள் இருவகையாவர். ஸ்வாஹாவிற்கும் அக்னிஷ்வாத்தர்களுக்கும் பேனா என்ற பெண்ணும், பர்ஹிஷதர்களுடன் சேர்ந்து வைதரணீ என்ற பெண்ணும் பிறந்தனர். இவர்களிருவரும் ப்ரஹ்ம வாதத்தில் சிறந்தவர்கள், ஞானிகள், நற்குணங்களும், யோகப் பயிற்சியும், சமதமாதிகளும் நிறைந்தவர்கள். இந்த தக்ஷ ஸந்தான க்ரமத்தை நினைப்பவர்கள் ஸந்தானமின்றி இருக்க மாட்டார்கள்.

விஷ்ணு புராணம் - 9

01_09. மைத்ரேயா, இந்த மஹாலக்ஷ்மீயின் அவதார ரஹஸ்யத்தை நான் முன்பு காச்யபரின் பிதாவான மரீசி என்பவரிடமிருந்தறிந்துள்ளேன். அதை இப்போது உனக்குக் கூறுகிறேன். ஒரு சமயம் சிவனின் பாகமான மஹரிஷி துர்வாஸர் ஒரு அடர்ந்த காட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வித்யாதர ஸ்த்ரீயைக் கண்டார். அவள் கையில் தேவலோகத்து ஸந்தானகம் என்ற மலர்களால் ஆன மாலை இருந்தது. அரிய அந்த மாலையால் அந்த கானகமே மணம் கமழ்ந்தது. அதைத் தான் யாஸித்துப் பெற்றுக்கொண்டார் மஹரிஷி.

அந்த பெருமை மிகுந்த மாலையை தேவலோகத்தில் இந்த்ரன் ஐராவதத்தில் வலம் வந்து கொண்டிருந்தபோது அவனிடம் ஆசையாகவும், அது இருக்கவேண்டிய மதிப்பான, உயர்ந்த இடம் இதுவே என்றும் நினைத்துக் கொடுத்தார். செருக்கிலிருந்த இந்த்ரன் மஹரிஷி வீசியெறிந்த அந்த மாலையை பெருமையறியாது ஐராவதத்தின் மேல் வைத்தான். கைலாஸத்தில் கங்கை போல அந்த மாலை ஐராவதத்தின் மேல் விளங்கியது. ஐராவதம் அதனையெடுத்து வீசியெறிந்து விட்டது. பெரும் கோபம் கொண்ட மஹரிஷி, "அமரர் வேந்தே! நீ செல்வச்செருக்கிலிருக்கிறாய். மஹாலக்ஷ்மி வாஸம் செய்யும், கிடைத்தற்கரிய இந்த மாலையை உனக்கு நான் கொடுத்தேன். அரிய பொருளொன்று கிடைத்தால் பேரருள் என்று அதைப் போற்றிக் கொண்டாட வேண்டும். ஸாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணி ஸந்தோஷத்துடன் சிரஸில் தரித்துக்கொள்ள வேண்டிய இந்த மாலையை நீ உன் செல்வச்செருக்கால் மதிக்கவில்லை. அதனால் உன் செல்வம் முழுவதும் அழிவதுறுதி.

என்னையும் உள்ளபடி உணராது, மற்றவர்களுக்குச் சமமாக நினைக்கிறாய். அதனால்தான் இந்த மானக்கேட்டை எனக்கு விளைவித்தாய். [தங்கம் கூட பொற்கொல்லன் காய்ச்சும்போதும், உருக்கும்போதும், அடிக்கும்போது, நீட்டும்போதும் வருந்தவில்லையாம். ஆனால் காட்டில் கேட்பாரற்று கிடக்கும் குந்துமணியை தனக்கு சமமாக வைத்து நிறுக்கும் போது வருந்துமாம்] என் கோபத்திற்கு மூவுலகும் நடுங்கும். அப்படிப்பட்ட என்னை நீ அவமதித்து, நான் கொடுத்த மாலையை பூமியில் எறிந்து விட்டாய். ஆகையால் மூவுலகும் லக்ஷ்மீகடாக்ஷமின்றி அழியும் என்று சபித்துவிட்டார்.

தேவராஜன் இதைக்கேட்டு பெரிதும் துயரமும், பயமும் கொண்டு நடுக்கத்துடன் கீழேயிறங்கி ரிஷியின் பாதங்களில் விழுந்து மன்னிக்க வேண்டினான். ஆனால் துர்வாஸரோ, "இரக்கத்தை என்னிடம் எதிர்ப்பார்க்காதே. உன் ப்ரார்த்தனைக்கு மகிழ்ந்து உன்னிடம் தயை கொண்டு உனக்குத் தக்கவாறு நடந்து கொள்ளும் மஹரிஷிகள் வேறு பலர் உள்ளனர். நான் அவர்களைப் போலில்லை. நான் துர்வாஸன்.

உன் கர்வத்திற்குக் காரணம் கௌதமர் போன்ற ரிஷிகளே. நீ அஹல்யையின் கற்பை அழித்தபோது, உன் உடலனைத்தும் பெண் குறிகள் நிறைந்திருக்குமாறு சபித்த அவர், அதன் பின் உன் வேண்டுதலுக்கிரங்கி அவைகள் கண்களாக இருக்கும்படி அனுக்ரஹித்தார். அவர் அன்றே தன் சாபத்தை மாற்றாமலிருந்திருந்தால், உனக்கு இந்த பழக்கம் வந்திருக்காது. செல்வச்செருக்கும் இருந்திருக்காது. மீண்டும் தவறுகளைச் செய்திருக்கமாட்டாய். ஆனால் என்னிடம் அந்த பொறுமையை எதிர்பார்க்காதே.

வஸிஷ்டாதிகளும் உன்னை அவ்வப்போது போற்றிப் புகழ்ந்து உன்னை இந்த நிலைக்கும், எண்ணத்திற்கும் உயர்த்தியுள்ளனர். ஆனால் ப்ரகாசிக்கின்ற சடைகள் சூழ்ந்த சிரஸையுடைய என் புருவங்கள் எப்போதும் கோபத்தால் வளைந்து நடு நெற்றியில் ஏறியிருக்கும். என்னுடைய இந்த உருவத்தைப் பார்த்து அஞ்சாதவர் எவருமில்லை. உன்னுடைய இந்த கெஞ்சுதலும் கபடமானதே. உன் குற்றத்தை ஒருக்காலும் பொறுக்கமாட்டேன். என் சாபம் உறுதி" என்று கூறிச் சென்றுவிட்டார். இந்த்ரனும் வருத்தத்துடன் சென்றுவிட்டான்.

சாபமும் பலிக்கலாயிற்று. ஸகல ஸம்பத்துகளும், ஓஷதி, கொடி, மரம் என அனைத்தும் அழிந்தன. யாகமும், தவமும், ஸத்கர்மங்களும், தானங்களும், தைர்யமும் அழிந்தன. ஸத்வ குணமும், அதனையடுத்து லக்ஷ்மியும் ஒழியவே, அந்த சமயத்தில் தேவர்களோடு போரிட்ட அரக்கர்களும், அஸுரர்களும் வென்றனர். இப்படிப் பலமுறை தன் தவறால் தோல்வியடைந்த இந்த்ரனும், தேவர்களும் ப்ரஹ்மனை வேண்ட, அவர் இது தன்னாலாகாததெனவுணர்ந்து, "தேவர்களே! நீங்கள் அனந்தனை அரணாகக் கொள்ளுங்கள். விஷ்ணுவை வேண்டுங்கள். அவனே உங்கள் குறைகளைப் போக்கி, நன்மைகளைக் கொடுக்க வல்லவன். அவன் தேவதேவன். பிறப்பிறப்பற்றவன். வெல்ல முடியாதவன். அடியவர்களைத் துன்பக்கடலிலிருந்து மீட்பவன்" எனக்கூறித் தானே அவர்களையழைத்துக்கொண்டு பாற்கடலின் கரையையடைந்தார். இந்த லக்ஷ்மியே ப்ருஹுவின் பெண்.

தேவர்களும், ரிஷிகளும், நானும், சங்கரனும் அறியாத பரப்ரஹ்ம ஸ்வரூபத்தை, விஷ்ணுரூபத்தை வணங்குகிறோம் என்று பலவாறுத் துதித்தார். தேவர்களும் நாங்கள் பூஜிக்கும் இந்த நான்முகனும் அறியாத பரப்ரஹ்மத்தை வணங்கித் துதிக்கிறோம் என்று போற்றினர். இதன்பின் ப்ருஹஸ்பதியை முன்னிட்டுக்கொண்டு தேவரிஷிகளும் ஸ்தோத்ரிக்க, விஷ்ணுவும் ப்ரத்யக்ஷமானார். அழகிற்கு அழகு செய்வது போல ஸர்வேச்வரன் ஸுந்தரமூர்த்தியாய் சங்கு, சக்ர முதலிய பஞ்சாயுதங்களுடன் தோன்றினான். ப்ரத்யக்ஷமாய் அவனைக் கண்ட தேவர்கள் பலமுறை விழுந்து விழுந்து வணங்கித்தொழுதனர்.

பின்னர் மீண்டும் துதித்து வேண்டிக் கொண்டனர். "உலகப்பொருள்கள் யாவும் நீயே! அஸுரர்களால் பீடிக்கப்பட்ட நாங்கள் உன்னைச் சரணடைகிறோம். இழந்த செல்வத்தையும், புது செல்வத்தையும், ஆத்மஞானத்தையும், பேரின்பத்தையும் வேண்டும் பலரின் குறைகளும் உன்னைச் சரணடைந்ததும் நீங்குகின்றன. அப்படிப்பட்ட நீ எங்கள் குறைகளையும் நீக்க வேண்டும் என வேண்டுகின்றனர். இவைகளைக் கேட்டு அமரர் குறைகளைக் களைய காலம் வந்ததையறிந்த பரமனும் அவர்களிடம் இரக்கம் கொள்கிறான். அவர்களுக்கொரு உபாயத்தைக் கூறுகிறான்.

"நான் உங்களுக்கு சொல்லப் போகும் உபாயம் மிகக் கடினமானது. அஸுரர்களின் பலமின்றி, இப்போது உங்களால் இதைச் சாதிக்கவும் முடியாது. மந்திர மலையை மத்தாகவும், வாஸுகியை கயிராகவும் கொண்டு, பல பச்சிலைகளை இந்த பாற்கடலில் நிரப்பி இதை அஸுரர்களுடன் கூடச் சேர்ந்துக் கடையுங்கள். அவர்கள் உங்களை நம்ப மாட்டார்கள். அவர்களிடம் நயமாகவும், வஞ்சகமாகவும் பேசி பாற்கடலிலிருந்து கிடைக்கும் அம்ருதத்தை இருவரும் பருகி அமரர்களாவோம் என்று கூறி வேலையை ஆரம்பியுங்கள். பிடாரன் பெட்டியில் அகப்பட்ட பாம்பு, எலியுடன் கூட நயமாகப் பேசி, நயவஞ்சகமாக நட்பு கொண்டு, அந்த பெட்டியில் ஒரு த்வாரமேற்படுத்திக் கொண்டு வெளிவந்ததும், அந்த எலியையே இரையாகவும் பிடித்துத் தின்று விடுகிறது. இதில் தவறில்லை. அவர்களுக்கு இறுதியில் அம்ருதம் கிடைக்காமலிருக்கப் பல வழிகளை இடையில் நான் செய்கிறேன்" என்று கூறினார்.

தானே தேவர்களுக்கு வேண்டியதை செய்ய சக்தியிருந்தும் பாற்கடலைக் கடையவும், தான் ஆமையாக அவதரிக்க ஒரு சமயத்தை உருவாக்கி விளையாடவும், மீண்டும் பெரிய பிராட்டியாகிய மஹாலக்ஷ்மியையும் அடையவும் எண்ணம் கொண்டான் எளியோன். குறுக்குவழியில் தேர்ந்த தேவர்களுக்குப் பரமனே இப்படி ஒரு வழியையும் கூறிவிட உடனே அவர்கள் அஸுரர்களுடன் கூடியிருக்கும் மஹாபலியிடம் சென்று வஞ்சக வார்த்தைகளால் அவனை இசையவும் வைத்தனர்.

அவனும் உடனே மந்திரமலையை எடுத்து வர தன் ஆட்களோடும் தேவர்களோடும் சென்றான். வழியில் அதன் பாரம் தாங்காமல் அதைக் கீழே விட்டு அதனடியில் பலரும் சிக்கிக் கொண்டனர். கருணை கொண்ட விஷ்ணு உடனே கருட வாஹனத்தில் எழுந்தருளி தேவர்களை மட்டும் உயிர்ப்பித்தான். மந்திரமலையையும் அனைவரும் புடைசூழ கருடனைக் கொண்டே எடுத்துவந்து பாற்கடலில் வைத்தான். இதன்பின் வாஸுகியென்ற ஸர்ப்பராஜனையும் வார்த்தைகளால் ஏமாற்றிக் கயிராகக் கொண்டு பாற்கடலைக் கடைய ஆரம்பித்தனர் தேவாஸுரர்கள்.

வாஸுகியின் மூச்சின் விஷத்தில் தேவர்கள் மாய்வதை வேண்டாத பரமன், தேவர்களை வால் பக்கத்தில் இருந்து கடையச் சொல்ல நினைத்தார். அஸுரர்களின் புத்தியையும், மூர்க்கத்தனத்தையும் சாதகமாக்கிக் கொள்ளவும் திட்டமிட்டு "தலைப்பக்கத்தை தேவர்களும், வால்பக்கத்தை அஸுரர்களும் பிடித்துக் கடையட்டும்" எனக் கூறினார். உடனே அஸுரர்கள் அவர்கள் இயல்பினால், "நாங்களும் கல்வி, கேள்விகளிலும், பிறப்பிலும் உயர்ந்தவர்களே. எனவே நாங்களே தலைப்பக்கத்தைப் பிடிப்போம், அமங்கலமான வால்பகுதியைப் பிடிக்க மாட்டோம்" என மறுத்தனர். எண்ணம் பலித்ததை நினைத்துப் பரமனும் தேவர்களை வால் பக்கத்தைப் பிடிக்கச் சைகை செய்து தானும் அவர்களோடு சேர்ந்து கொண்டான்.

மூலிகைகளால் பல வண்ணங்களைக் காண்பித்துக் கொண்டிருந்த பாற்கடலை இவ்வாறு கடைய ஆரம்பித்ததும் வாஸுகியின் விஷக்காற்றால் அஸுரர்கள் பலம் குன்றத் தொடங்கியது. வால்பக்கம் நின்றிருந்த தேவர்களுக்கு நன்மை செய்ய நினைத்த பரமன் அங்கு மேகங்களைக் கொண்டு மழை பொழியச் செய்தான். அப்போது ஆதாரமெதுவுமின்றி அந்த ஆழ்ந்த கடலில் சுழன்று கொண்டிருந்த பெரிய மந்திர மலை தன் பாரத்தால் மூழ்கத் தொடங்கியது. தேவாஸுரர்கள் எவ்வளவு முயன்றும் அதனைத் தடுக்கவோ, தூக்கி நிறுத்தவோ முடியவில்லை. இதனைக் கண்ட பரமன் லக்ஷம் யோஜனை அளவு கொண்ட அற்புதமான ஆமை வடிவெடுத்து, அந்த மலைக்கு ஆதாரமாக இருந்தருளினார்.

இன்னும் பலப்பல வடிவமெடுத்து தேவர்களோடும், அஸுரர்களோடும் கடையவும் செய்தார். இத்தனை பேர் கடைந்த போது ஒரு நிலையில் நில்லாது ஆடிக் கொண்டிருந்த அந்த மலையை, உச்சியில் வேறொரு உருவம் எடுத்து ஆயிரம் கைகளால் ஆடாமல் பிடிக்கவும் செய்தார். ஒன்றும் வருவது போல் தெரியவில்லை பாற்கடலிலிருந்து. மேகவண்ண திருமேனி, காதுகளில் மிளிரும் குண்டலங்கள், அவிழ்ந்து அங்குமிங்குமலைபாயும் கூந்தல் கற்றைகள், மார்பிலாடும் மாலைகள், செந்தாமரைக் கண்கள் இவற்றுடன் பரமனே தன் காக்கும் கரங்களால் வாஸுகியைப் பற்றி ஒரு மலை மற்றொரு மலையைத் தாங்கியும், கடையவும் செய்தது போல் கடைந்தார். அந்தர்யாமியாக இருந்து தேவாஸுரர்களுக்கும், வாஸுகிக்கும் பலத்தையும் தந்தார்.

இப்படிக் கடைந்தபோது முதலில் பாற்கடலிலிருந்து அனைவரும் மயங்கும் அழகுடன் காமதேனு தோன்றியது. யாகத்திற்குதவுமென்று அதனை ரிஷிகள் பெற்றுக் கொண்டனர். அதன்பின் வருணனைத் தேவதையாகக் கொண்ட வாருணீ எனப்படும் (மது) ஸுராதேவி தோன்றினாள். அவளழகைக் கண்டு சித்தர்களும் அதிசயித்தனர். விஷ்ணுவின் நியமனம் பெற்று அஸுரர்கள் அதைப் பெற்றுக் கொண்டனர். பின் உலகை மயக்கும் நறுமணத்துடன் பாரிஜாத மரம் தோன்றியது. அதை தேவஸ்த்ரீகள் பெற்றுக் கொண்டனர். அதன்பின் சந்த்ரன் தோன்றினான். [பகவானின் மனதிலிருந்து தோன்றியதாக வேதம் கூறும் சந்த்ரனுக்கு இரண்டு உருவங்கள், பாற்கடலிலிருந்து தோன்றிய சந்த்ரனை பரமேச்வரன் தரித்துக் கொண்டார். அத்ரி மஹரிஷியின் கண்ணிலிருந்து தோன்றிய மற்றொரு உருவம் பகவானால் ஏவப்பட்டு உலகிற்கு வெளிச்சம் தருகிறது]

இதன்பின் ஹாலாஹலம் என்ற கொடிய விஷம் நாற்புறங்களிலும் கொழுந்து விட்டெரியும் ஜ்வாலையுடன் தோன்றியது. அனைவரும் பரமேச்வரனைத் துதித்தனர். அவனும் ஸர்வேச்வரனுடைய அருளால் எனக்கும், மக்களுக்கும் க்ஷேமமுண்டாகட்டும் என்று பார்வதியிடம் கூறி விஷத்தை உண்டான். அந்த விஷம் தன் வீர்யத்தை பரமேச்வரனிடமே காட்டவே, அதைத் தன் கழுத்திலேயே நிறுத்திக் கொண்டு, நீலகண்டன் எனப் பெயர் பெற்றான். அப்போது அவன் கைவிரல் சந்துகளிலிருந்து வழிந்து விழுந்த அந்த விஷந்தை தேள், பாம்பு மற்றும் சில பச்சிலைகளும் க்ரஹித்து அன்றிலிருந்து கொடிய விஷமுள்ளவைகளாயின.

இதன் பின் பகவானின் அம்சமாக தன்வந்த்ரி வெள்ளாடையுடன் கையில் அம்ருத கலசத்துடன் தோன்றினார். முயற்சி பலித்த நிம்மதியுடன் தேவாஸுரர்களும் மகிழ்ந்தனர். பின் பெரிய பிராட்டியும் மின்னல் போன்ற காந்தியுடன் திசைகள் விளங்க தாமரை மலரேந்தி தாமரையில் தோன்றினாள். தன் புன்முறுவல், கடாக்ஷத்தாலேயே திருமகள் தேவர்தலைவனின் அல்லல்களையும் போக்கினாள். மஹரிஷிகள் ஸ்ரீ ஸூக்தத்தால் தேவியைத் துதித்தனர். விச்வாவஸு முதலான கந்தர்வர்கள் பாட, க்ருதாசீ முதலிய அப்ஸரஸ்ஸுகள் ஆட அனைவரும் மகிழ்ந்திருக்கும் போது, மஹேந்த்ரன் அற்புதமான ஓராஸனத்தைப் பிராட்டிக்களித்தான்.

கங்கை முதலான புண்ய நதிகள் உருவங்கொண்டு அபிஷேஹித்தன. மேகங்கள் பலவித வாத்யங்களாக முழங்கின. ப்ராஹ்மணர்கள் ஸூக்தங்களை ஜபித்தனர். திக்கஜங்கள் பொற்குடங்களில் புண்ய தீர்த்தம் கொண்டு அம்ருத ஸஹோதரியை நீராட்டின. இப்படி நீராடி, நல்லாடையுடுத்தி, மலர்மாலை சூடி, அணிகள் பல பூண்டு நின்றாள் ஸ்ரீ.

கடற்கரையிலேயே ஸ்வயம்வரம் நடக்கிறது. பார்க்கும் ஒவ்வொருவரையும் தீர யோசிக்கிறாள். துர்வாஸர் கோபத்தை ஜயிக்காமல், அதற்கு வசப்பட்டவர். ப்ருஹஸ்பதி, சுக்ராச்சார்யார் ஆகியோர் ஞானிகளென்றாலும் பற்றுள்ளவர்கள். ப்ரஹ்மா, சந்த்ரன் முதலியவர்கள் காமம் உள்ளவர்கள். தன் நன்மையை தானே சாதித்துக் கொள்ளாமல் பிறரை அண்டும் இந்த்ரன் எப்படி ஆற்றலுடையவனாகவோ, ப்ரபுவாகவோ இருக்க முடியும். பரமேச்வரன் காட்டில் வஸிக்கும் மங்களத் தன்மையில்லாதவன். இப்படி ஒவ்வொருவரையும் குற்றங்களையாராய்ந்து விலக்கிய பிராட்டி எப்படி ஆராய்ந்தும் எவ்விதக் குற்றமுமின்றி கல்யாண குணங்களால் நிறைந்து நிற்கும் நாராயணனை பர்த்தாவாகக் கொள்ள நினைத்தாள். ஆனால் அவன் அவளை விரும்பாதது போல நின்று விட்டான். தேவர்களனைவரும் பார்த்துக் கொண்டிருக்க அவன் தோள்களில் மாலையை அணிவித்து, திருமார்பில் வீற்றிருந்தாள். அனைவரும் விரும்பும் ஸ்ரீ அவனை விரும்பியடைந்தது.

அதன்பின் மஹாலக்ஷ்மி தன் கடாக்ஷங்களால் தேவர்களை அனுக்ரஹிக்க அவர்கள் தாங்கள் இழந்த தேஜஸ், செல்வம், வீர்யம் முதலியவைகளை மீண்டும் பெற்றனர். அஸுரர்கள் விஷ்ணு த்வேஷமுடையவர்களாதலால் அவர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவர்கள் தங்கள் பலம், செல்வங்களை இழந்தனர். கோபம் கொண்ட அவர்கள் தன்வந்த்ரியின் கைகளிலிருந்து அம்ருத கலசத்தைப் பிடிங்கிக் கொண்டனர். இதைக் கண்டு செய்வதறியாத தேவர்கள் பரமனிடம் வேண்டினர். உடனே அவன் ஒரு அழகிய அஸுர ஸுந்தரியாய் நீண்ட கூந்தலில் மல்லிகைச் செண்டுடன், இடையிலாடும் தங்க ஒட்டியாணத்துடன், கால்களில் தண்டையுடன், நாணம், சிரிப்பு, நெளிந்து தவழும் புருவ வளைப்புகளுடன் தோன்றினாள். அவளிடம் மயங்கிய அஸுரர்கள் கலசத்தை அவளிடமே கொடுத்து, தங்களுக்கு அவளையே பகிர்ந்து கொடுக்கச் சொன்னார்கள்.

அதை வாங்கிக் கொண்ட மோஹினி தேவாஸுரர்களை ஸ்நாநம் செய்து, ஹோமங்கள், தானங்களைச் செய்து விட்டு முறையாக, ஸுத்தமாக வந்து அமரும் படி கூறினாள். இரு பிரிவினரும் அவ்வாறே வந்து நடுவில் நடக்க வழி விட்டு கிழக்கு முகமாக தர்ப்பத்தில் அமர்ந்தனர். முதலில் இருந்த அஸுரர்களை விட்டு, தேவர்களுக்கு அம்ருதத்தைப் பங்கிடலானாள். இதனால் மிகுந்த கோபம் கொண்ட போதும் அவள் அழகிலும், சேஷ்டைகளிலும் மயங்கிய அஸுரர்கள் அவள் அன்பு வேண்டி பேசாதிருந்தனர். ராஹு என்ற அஸுரன் மட்டும் தேவ வேஷம் பூண்டு தேவர்களோடு அமர்ந்து அம்ருதத்தையும் வாங்கிப் பருகிவிட்டான். இதனை சந்த்ர, ஸூர்யர்கள் காட்டிக் கொடுக்க, பகவான் அவன் தலையைச் சக்ராயுதத்தால் சீவி விட்டான். எனினும் அம்ருதம் பருகியதால் அவனை ஒரு க்ரஹமாக அனுக்ரஹித்தார் பரமன். இந்த காரணத்தாலேயே ராஹு பருவ காலங்களில் சந்த்ர, ஸூர்யர்களைப் பிடித்துக் கொள்கிறான்.

அம்ருதமனைத்தையும் தேவர்களுக்கே பங்கிட்ட பின் மீண்டும் தன்னுருக் கொண்ட பரமன் மீதும், தேவர்கள் மீதும் வஞ்சகத்தால் ஏமாந்த அஸுரர்கள் மிகுந்த கோபத்துடன் போரிடத் தொடங்கினர். ஆனாலும் அம்ருதத்தால் பலமும், புத்துணர்வும் பெற்ற தேவர்களிடம் தோற்று திக்குகளையும், பாதாளத்தையும் நோக்கி ஓடி விட்டனர். தேவர்கள் மிக்க மகிழ்ச்சி கொண்டு பரமனை அடிபணிந்து மீண்டும் தத்தம் பணிகளை மேற்கொண்டனர்.

"உலகில் உள்ள ஸர்வ வித்யைகளும் நீயே. மோக்ஷத்தைத் தருபவள் நீ. உலகிற்கு நீ தாய். பகவானே பிதா. உலகம் உங்கள் இருவராலும் தான் சூழப்பட்டுள்ளது. உன்னால் விடப்பட்டவனிடம் தூய்மை, உண்மை முதலியன இருக்காது. உன் கடாக்ஷத்தாலேயே எல்லோரும் நல்லொழுக்கத்தையும், ஐச்வர்யத்தையும் பெறுகின்றனர். குணக்கேடான ஒருவனும் உன் கடாக்ஷம் பெற்று விட்டால் மேம்பட்டவனாகி விடுகிறான். நான்முகனின் நான்கு நாக்குகளுமே உன் பெருமையே பேசி முடிக்க முடியாது. நான் எப்படிப் பேசுவது. இனி எக்காரணம் கொண்டும் எங்களையும், இம்மூவுலகங்களையும் விட்டு நீ செல்லக் கூடாது" என இந்த்ரன் தேவியைப் ப்ரார்த்திக்க, அவளும் அப்படியே என அனுக்ரஹித்தாள். இரு வேளைகளிலும் இந்த ஸ்தோத்ரம் கொண்டு என்னைத் துதிப்பவனை அவனை நான் கைவிட மாட்டேன் என்றாள்.

இப்படியாக ப்ருஹு மஹரிஷியின் புத்ரியாய்ப் பிறந்த ஸ்ரீ, பின் துர்வாஸரின் சாபத்தால் மறைந்தாள். அதன் பின் தேவாஸுரரகளின் முயற்சியால் மீண்டும் ஆவிர்பவித்தாள். இப்படித் தேவைப்படும்போதெல்லாம் பகவான் அவதரிப்பது போல், அவளும் அவ்வப்போது அவதரிக்கிறாள். பகவான் அதிதிக்குப் பிறந்த போது அவள் பத்மையெனப் பிறந்தாள். பரசுராமனுக்கு தரணியென்பவளாகவும், ராமனுக்கு ஸீதையாகவும், க்ருஷ்ணனுக்கு ருக்மிணியாகவும் அவதரிக்கிறாள். இப்படி தேவனுக்குத் தேவியாகவும், மனிதனுக்கு மனுஷியாகவும் அவதரிக்கிறாள். இந்த அவதார கட்டம் மிகவும் சிறந்தது, இதை மீண்டும் மீண்டும் படித்தும், கேட்டும் கொண்டிருக்கும் பக்தர்களின் க்ருஹத்தில் என்றென்றும் பிராட்டி நித்யவாஸம் செய்வாள். இந்த்ரன் செய்த ஸ்ரீ ஸ்துதி எல்லா செல்வங்களையும் கொடுக்க வல்லது. மூதேவியை நெருங்க விடாது. எனவே அதை நித்யம் ஸுத்தமாயிருந்து பாராயணம் செய்ய வேண்டும்.


விஷ்ணு புராணம் - 8

01_08. நான்முகன் கோபத்துடன் இருக்கும்போது அவர் மடியில் தோன்றியவர் ருத்ரன், கருப்பும், சிவப்பும் கலந்த நீலலோஹிதனான இவரைத் தனக்கு சமமாகப் படைத்தார் ப்ரஹ்மன். அழுதுகொண்டேயிருந்ததால் ருத்ரன் என இவரை அழைத்தார் ப்ரஹ்மன். மேலும் பவன், சர்வன், ஈசானன், பசுபதி, பீமன், உக்ரன், மஹாதேவன் என இன்னும் ஏழு பெயர்களும் இட்டார். இவருக்கு எட்டு ஸ்தானங்களையும், பத்னிகளையும் கொடுத்தார் ப்ரஹ்மன். இதனால் அஷ்டமூர்த்தி என்றும் ருத்ரன் அழைக்கப்படுகிறார். ஸூர்யன், ஜலம், பூமி, வாயு, அக்னி,ஆகாசம், தீக்ஷிதன், சந்த்ரன் என்பவைகளே அந்த எட்டு ஸ்தானங்கள்.

ஸுவர்ச்சலை, உஷை, ஸுகேசி, சிவை, ஸ்வாஹாதேவி, திசை, தீக்ஷை மற்றும் ரோஹிணியும் முறையே இந்த மூர்த்திகளின் பத்னிகள். சனி, சுக்ரன், அங்காரகன், மனோஜவன், ஸ்கந்தன், ஸர்கன், ஸந்தானன், புதன் ஆகிய எண்மர் முறையே இந்த மூர்த்திகளின் புத்ரர்கள். அஷ்டமூர்த்தியான ருத்ரன் தக்ஷப்ரஜாபதியின் மகளான ஸதீயையும் மணந்தார். ஆனால், அவள் ஒரு சில காரணங்களால் தந்தையின் மீதான வருத்தத்தாலும், கோபத்தாலும் உயிரை விட்டாள். இவ்வாறு தக்ஷயக்ஞத்தில் சரீரத்தை விட்ட ஸதீதேவி, பின் ஹிமவானுக்கும், மேனைக்கும் உமாவாகப் பிறந்து, பெருந்தவம் புரிந்து மீண்டும் சிவபெருமானையே மணந்தாள்.

ப்ருஹுவிற்கும், க்யாதிக்கும் தாதா, விதாதா என்ற இரு குமாரர்களும், ஸ்ரீ என்ற ஒரு பெண்ணும் பிறந்தனர். இந்த ஸ்ரீயே நாராயணனுக்குப் பத்னியாவாள். இதைக்கேட்ட மைத்ரேயர் ஸ்ரீ பாற்கடலைக் கடைந்தபோது தோன்றினாள் என உள்ளதே, அப்படியானால், இப்போது ஸ்ரீ எப்படி ப்ருஹுவின் குமாரியாக முடியும் எனக்கேட்டார். அதற்குப் பராசரர், "உலகிற்கு பகவான் பிதா என்பதுபோல், லக்ஷ்மி தாயாகிறாள். அவள் பகவானைப் பிரியாதவள். எங்கும் நிறைந்திருப்பவள்.

மஹாலக்ஷ்மி நித்யை. பகவானைப்போலவே ஆதியந்தமில்லாதவள். பகவானைப் போலவே சிற்சமயம் எங்கிருந்தாவது தோன்றுகிறாள். முதலில் ப்ருகுவினிடத்தில் ஸ்வேச்சையால் ஆவிர்பவித்தாள். பின் இந்த்ரனுக்கு நேர்ந்த துர்வாசரின் சாபத்தால் மறைந்தாள். மறுபடி க்ஷீரஸாகரத்தில் தோன்றினாள். விஷ்ணு பொருளென்றால், லக்ஷ்மீயே வாக்கு. லக்ஷ்மீ புத்தி என்றால், விஷ்ணுவே அறிவு. அவளே கரு, விஷ்ணுவே கர்த்தா. ஸ்ரீயே பூமி, ஹரியே அதைக்காப்பவர். விஷ்ணுவே யாகம், லக்ஷ்மீயே தக்ஷிணை. அவளே கௌரி, அவரே சங்கரன், கேசவனே ஸூர்யன், ஸ்ரீயே அதன் கதிர்கள்.

ஸ்ரீயே ஸ்வர்க்கங்களென்றால், விஷ்ணுவே வெளி. ஸ்ரீபதி சந்த்ரனென்றால், ஸ்ரீயே அதன் ஒளி. கோவிந்தன் கடலென்றால், லக்ஷ்மீ அதன் கரை. ஸ்ரீயே இந்த்ராணி, மதுஸூதனரே இந்த்ரன். லக்ஷ்மீயே செல்வமென்றால், ஸ்ரீதரனே குபேரன். ஹரியே நிமிஷமென்றால், லக்ஷ்மீ முஹூர்த்தம். அவள் இரவென்றால் அவன் பகல். அவள் மணமகள், அவனே மணமகன் என பல கூறலாம். முடிவாக தேவ, திர்யக், மனுஷ்ய இந்த ஜாதிகளில் உள்ள ஆண்பாலினத்தைச் சேர்ந்தவையனைத்தும் பகவத் ஆக்ஞைக்குட்பட்டது. அதேபோல் பெண்பாலினத்தைச் சார்ந்த அனைத்தும் லக்ஷ்மீயின் ஆக்ஞைக்குட்பட்டது. இவ்விருவர்களுக்கு மேலாக ஒன்றுமில்லையென்றார்.

விஷ்ணு புராணம் - 7

01_07. ப்ரஹ்மன் எதிர்பார்த்தபடி அவன் ஸ்ருஷ்டித்த ஸ்ரோதஸ்ஸுகள் ஸ்ருஷ்டியடையவில்லை. எனவே ஸ்ருஷ்டியில் உதவ ப்ரஹ்மன் நவப்ரஜாபதிகளான ப்ருகு, புலஸ்த்யர், புலஹர், க்ரது, அங்கிரஸ், மரீசி, தக்ஷர், அத்ரி, வஸிஷ்டர் ஆகியோர்களைப் படைத்தார்.

இதற்கு முன்பே இதே காரணத்திற்காகப் படைக்கப்பட்ட ப்ரஹ்மனின் மானஸ புத்ரர்களான ஸனக, ஸனந்தன, ஸனத்குமார, ஸனத்ஸுஜாதர்கள் எந்த பொருட்களிலும் பற்றின்றி பகவத்பக்தியில் திளைத்து, ஞானிகளாவேயிருந்தனர். ஸ்ருஷ்டியில் உதவவில்லை. அந்த கோபத்தினால் மிகுந்திருந்த ப்ரஹ்மனின் நெற்றியிலிருந்து அர்த்த நாரீச்வரராக ருத்ரர் தோன்றினார். இதில் புருஷ உருவத்திலிருந்து சாந்த, கோர, வெளுப்பு, கறுப்பு எனப் பதினோரு வித உருவங்களும், ஸ்த்ரீ பாகத்திலிருந்து பல ஸ்த்ரீ உருவங்களும் தோன்றின.

பின் ப்ரஹ்மனின் உடலிலிருந்து தோன்றிய ஸ்வாயம்புவமனு என்பவர், அதேபோலுண்டான சதரூபை என்ற பெண்ணை தனக்குப் பத்னியாக்கிக் கொண்டார். இதிலிருந்து ஆண், பெண் இருவரும் சேர்ந்து மக்களை உண்டுபண்ணுவதென்பது தொடங்கியது. இவர்களுக்கு ப்ரயவ்ரதன், உத்தானபாதனென்ற புத்ரர்களும், ப்ரஸூதி, ஆஹூதியென்ற பெண்களும் பிறந்தனர். ப்ரஸூதியை தக்ஷனுக்கும், ஆஹூதியை ருசி என்பவனுக்கும் மணம் முடித்தார் மனு. ருசிக்கும், ஆஹூதிக்கும் பிறந்த யக்ஞன் என்பவன், உடன் பிறந்த தக்ஷிணை என்பவளை மணந்தான். இவர்களுக்குப் பிறந்த பன்னிரெண்டு பிள்ளைகள் ஸ்வாம்புவ மன்வந்தரத்தில் யாமர் என்ற தேவர்களாக விளங்கினர்.

இதைப்போல் ப்ரஸூதி, தக்ஷனுக்கு இருபத்து நான்கு பெண்கள் பிறந்தனர். இவர்களில் ச்ரத்தை (faith), லக்ஷ்மீ (prosperity), த்ருதி (steadiness), துஷ்டி(resignation), புஷ்டி(thriving), மேதை(intelligence), க்ரியை(action), புத்தி(intellect), லஜ்ஜை(modesty), வபுஸ்(body), சாந்தி(expiation), ஸித்தி(perfection), கீர்த்தி(fame) என்ற பதின்மூன்று பெண்களை ப்ரஹ்மபுத்ரனான தர்மனும், க்யாதியை(celebrity) ப்ருஹுவும், ஸதீயை(truth) ருத்ரனும், ஸம்பூதியை(fitness) மரீசியும், ஸ்ம்ருதியை(memory) அங்கிரஸ்ஸும், ப்ரீதியை(affection) புலஸ்த்யரும், க்ஷமையை(patience) புலஹரும், ஸந்நதியை(humility) க்ரதுவும், அனஸூயை(charity) அத்ரியும், ஊர்ஜையை(energy) வஸிஷ்டரும், ஸ்வாஹாவை(offering) அக்னியும், ஸ்வதையை(oblation) பித்ருக்களும் மணம் புரிந்தனர். ச்ரத்தைக்குக் காமனும்(desire), லக்ஷ்மீக்கு தர்ப்பனும்(செருக்கு,pride), த்ருதி நியமத்தையும்(precept), துஷ்டி ஸந்தோஷத்தையும்(content), புஷ்டி லோபத்தையும்(cupidity), மேதை ச்ருதத்தையும்(sacred tradition), க்ரியா தண்ட(correction), நய(polity), வினயங்களையும்(prudence), புத்தி போதனையையும்(understanding), லஜ்ஜா வினயத்தையும்(good behaviour), வபு வ்யவசாயத்தையும்(perseverance), சாந்தி க்ஷேமத்தையும்(prosperity), ஸித்தி ஸுகத்தையும் (enjoyment), கீர்த்தி யசஸையும்(reputation) ஸந்ததிகளாகப் பெற்றனர். இதில் காமத்திற்கும் நந்திக்கும்(delight) பிறந்தது ஹெர்ஷ(joy). இவ்வாறு தர்ம வம்சம் வ்ருத்தியடைகிறது.

அதர்மன் ஹிம்ஸையை(violence) மணந்து அன்ருதம் (பொய்,falsehood) என்ற புத்ரனையும், நிக்ருதி(வஞ்சனை,immortality) என்ற புத்ரியையும் பெற்றனர். இவர்கள் தம்பதிகளாகி பயம்(fear), நரகம்(hell) என்ற பிள்ளைகளையும் மாயை(deceit), வேதனை(torture) என்ற புத்ரிகளையும் பெற்றனர். பயத்திற்கும், மாயைக்கும் ம்ருத்யுவும் (death), நரகத்திற்கும், வேதனைக்கும் துக்கமும் (pain) பிள்ளைகளாயினர். ம்ருத்யுவின் பிள்ளைகள் வ்யாதி(disease), ஜரை (மூப்பு,decay), சோகம்(sorrow), த்ருஷ்ணை(greediness), க்ரோதம்(wrath) என்பவை. இவர்களில் தக்ஷர் முதலானோர் நித்யஸர்கத்திற்கும், மனுவும், மனுபுத்ரர்களும் நித்யஸ்திதிக்கும், வ்யாதி முதலானவைகள் நித்யப்ரளயத்திற்கும் காரணங்கள்.

நைமித்திக, ப்ராக்ருத, ஆத்யந்திக, நித்ய என ப்ரளயம் நால்வகைப்படும். ப்ரஹ்மனின் ஒவ்வொரு தினத்தின் முடிவிலும் எங்கும் நீர் சூழ்ந்திருக்க, பரமன் சயனித்திருக்கும்போதுண்டாகும் ப்ரளயம் நைமித்திகம். ப்ரஹ்மனின் ஆயுஸ் முடிவில் அனைத்தும் ப்ரக்ருதியில் லயமடைவது ப்ராக்ருதம். ப்ரஹ்மோபாஸிகள் கர்மங்கள் தொலையப்பெற்று பரமாத்மாவையடைதல் ஆத்யந்திகம். ப்ராணிகளின் மரணம் நித்யப்ரளயம்.

இவ்வாறே ஸ்ருஷ்டியும் ப்ராக்ருத, நைமித்திக, நித்ய என மூன்றாகும். ப்ரஹ்மனுக்கும் முன்பே ப்ரக்ருதியைக் கொண்டு செய்யப்படும் மஹதஹங்கார ஸ்ருஷ்டி ப்ராக்ருதம். நைமித்திக ப்ரளயத்திற்குப் பின்னுண்டாவது நைமித்திக ஸ்ருஷ்டி. அவ்வாறே தத்தம் நல்வினை, தீவினைகளுக்கேற்ப ஸ்வர்க, நரகங்களையனுபவித்துவிட்டு ப்ராணிகள் மீண்டும் பசு, பக்ஷி, மனுஷ்யர்களாகப் பிறப்பது நித்யஸ்ருஷ்டியாகும்.

ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரமென்பவை ஸத்வ, ரஜ, தமோ குணங்களின் வெளிப்பாடே. இவைகளுக்குட்படாமலிருப்பவன், இவைகளைக் கடந்து ப்ரஹ்மானந்தத்தை நித்யமாக அனுபவித்துக் கொண்டேயிருக்கிறான். மீண்டும் பிறப்பதில்லை.

விஷ்ணு புராணம் - 6

01_06. ­­வகுப்பு முறை: ப்ரஹ்மனின் முகத்திலிருந்து ஸத்வ குணம் மிகுந்த ப்ராஹ்மணர்களும், மார்பிலிருந்து ரஜோகுணம் மிகுந்த க்ஷத்ரியர்களும், தொடைகளிலிருந்து ரஜோகுணமும், தமோகுணமும் கலந்த வைச்யர்களும், பாதங்களிலிருந்து தமோகுணம் மிகுந்த நான்காம் வர்ணத்தாரும் பிறந்தனர். மனிதர்கள் முறைப்படி கார்யங்களைச் செய்து, தேவர்களை த்ருப்தி செய்ய அவர்களும் மழை முதலானவற்றைக் கொடுத்து மனிதர்களை மகிழ்விக்கின்றனர். ப்ராஹ்மணர்கள் வேத, வேதார்த்தங்களைப் பிறர்க்குச் சொல்லிக் கொடுத்தும், க்ஷத்ரியன் தன் கைகளால் ப்ரஜைகளைக் காத்தும், வைச்யர்கள் த்ரவ்யம் சேர்த்தும், மற்றவர் இவர்களுக்குப் பணிபுரிந்தும் ஜீவிக்கின்றனர். இவர்கள் இப்படித் தங்கள் கர்மங்களையும், யாகங்களையும் செய்து ப்ராஜாபத்யம், இந்த்ரலோகம், மருத்துக்களின் உலகையும், கந்தவர்வ லோகத்தையும் முறையே அடைந்து வந்தனர். ஸ்வர்க்கம், மோக்ஷத்தையுமடைந்து வந்தனர்.

இவ்வாறே ப்ரஹ்மசாரிகள் எண்பத்தெட்டாயிரம் யதீச்வரர்கள் நித்யவாசம் செய்யும் புண்யலோகத்தையும், க்ருஹஸ்தர்கள் ப்ராஜாபத்யத்தையும், வானப்ரஸ்தர்கள் ஸப்தரிஷி லோகத்தையும், ஸன்யாஸிகள் ப்ரஹ்மலோகத்தையுமடைந்து வந்தனர்.

க்ருதலோகத்தில் இவர்கள் தங்கள் ஆச்ரம, வர்ண தர்மங்களை ச்ரத்தையுடன் அனுஷ்டித்து, சாஸ்த்ரங்களில் நம்பிக்கைக் கொண்டு, எவரிடமும் நட்பு பாராட்டி, நினைத்த இடங்களில் பயமின்றி வஸித்து, சீதோஷ்ணம், பசி, தாகம் முதலியவற்றால் துன்புறாது, சக்தியுடையவர்களாய், காம, கரோதங்களற்றவர்களாய் இருந்து வந்தனர். பரமனும் அவர்கள் இதயத்திலிருந்து வந்தான். அஷ்டமாசித்திகளைப் பெற்றிருந்தனர். உணவுப் பற்றாக்குறையில்லை. மாதம் மும்மாரி பொழிந்ததிலேயே பயிர்கள் முயற்சியின்றி உலகெங்கும் விளைந்து வந்தன.

த்ரேதாயுகத்தினாரம்பத்தில் மனிதர்களுக்குள் பாப எண்ணம் எழும்பத்தொடங்கியது. மக்கள் அங்ஞானத்தால் காம, க்ரோத, மோஹ, மத (திமிர்), மாத்ஸர்யங்களில் (பொறாமை) ஆட்பட்டனர். மோக்ஷத்தையிழந்தனர். ஆசை, பயம் கொண்டனர். அரண்களையும், நகர, க்ராமங்களையும் ஏற்படுத்திக்கொண்டனர். பசி, துக்கம், தூக்கம், சோம்பேறித்தனத்திற்குட்பட்டனர். வாழ்விற்காக உழவு, பசு மேய்த்தல், வ்யாபாரம் இவைகளை மேற்கொண்டனர்.

கம்பு, கோதுமை, பார்லி, பட்டானி, கேழ்வரகு, கடலைப் பருப்பு, உளுந்து, துவரை, மூங்கிலரிசி முதலிய பயிர்வகைகள் க்ராம்ய, க்ராம்யாரண்யங்கள் என வகைப்படுத்தப்பட்டன. க்ராம்ய ஆரண்ய பயிர்கள் யக்ஞங்கள் செய்யப் பயன்பட்டு வந்தன. இவைகள் யாவும் புறக்கணிக்கப்பட்டு, உடலை மட்டும் வளர்க்கத் தலைப்பட்டனர். ப்ரஹ்மத்தை உபாஸிப்பவர்கள் ப்ரஹ்மலோகத்தையும், த்வாதசாக்ஷரத்தை ஜபித்தவர்கள் பரமபதத்தையும் அடைந்து நித்யஸூரிகளாகின்றனர். மற்றவர்கள் அவரவர் புண்யங்களுக்குஹந்த இடங்களை அடைந்து, மீண்டும் ஜனிக்கின்றனர்.

வேதங்களை நிந்திப்பவர், வேதவிஹிதமான யக்ஞங்களையழிப்பவர், ஸ்வதர்மத்தை விட்டவர்கள் எனப் பல தீயவர்கள் தாமிஸ்ரம், அந்ததாமிஸ்ரம், ரௌரவம், மஹாரௌரவம், அஸிபத்ரவனம் காலஸூத்ரம், அவீசிகம் ஆகிய நரகங்களையடைகின்றனர்.

விஷ்ணு புராணம் - 5

01_05. ஸ்ருஷ்டி க்ரமம்: முதலில் செடி, கொடி, மரம் எனத் தாவரங்களே படைக்கப்பட்டன. முன்பிருந்த உலகங்களைப் போலவே மீண்டும் அனைத்தையும் படைக்க நினைத்த ப்ரஹ்மன் அதற்காக தவமும் இருந்தான். ஆனாலும் முதலில் ஸ்ருஷ்டி செய்யப்பட்ட இந்த தாவரங்கள் ப்ரஹ்மனின் தமோ குணத்தால் ஓரறிவு உள்ளவைகளாகவே இருந்தன. சப்தம் முதலிய வெளி விஷயங்களும், ஸுக, துக்கங்களென்ற உள் விஷயங்களும் இவைகளறியா. ஆனாலும் நீரைத்தேடி வேர் செல்கிறது. வெட்டினால் மீண்டும் முளைக்கிறது. உரமிட்டால் உற்சாகத்தோடு வளரவும் செய்கிறது. எனவே இவைகளுக்கும் அறிவு உண்டென்றே கூறவேண்டும்.

உலகம் யாகங்களால் த்ருப்தி செய்விக்கப்பட்டு வ்ருத்தியடையவேண்டுமென ப்ரஹ்மன் நினைத்தான். ஆனால் த்யானம் போதாததால் யாகம் செய்யத் தகுதியற்ற தாவரங்கள் தோன்றின. எனவே ப்ரஹ்மன் மீண்டும் த்யானம் செய்து, ஸ்ருஷ்டியை ஆரம்பித்தார். இப்போது அவரது இரு பக்கங்களிலுருந்தும் ஒரு குளம்புள்ள கழுதை, குதிரை, கோவேறுக்கழுதை, காட்டெருமை, வெள்ளை மான் போன்ற ஆறு வகை ம்ருகங்களும், இரட்டைக் குளம்புள்ள ஆடு, மாடு, எருமை, பன்றி, கவரிமான், கருமான், ஒட்டகம், செம்மறியாடு முதலிய ஒன்பது வகைகளும், ஐந்து நகங்களையுடைய நாய், நரி, முயல், முள்ளம்பன்றி, சிங்கம், குரங்கு, யானை, பல்லி, முதலை, ஆமை, புலி, பூனை முதலான பதிமூன்று வகைகளுமாக ஆக மொத்தம் 28 வகை ம்ருகங்கள் பகுத்தறிவின்றி தோன்றின. இவைகள் ப்ரஹ்மாவினிடமிருந்து குறுக்காகத் தோன்றியதாலும், குறுக்காக வளரும் தன்மையுடையனவாகவும் இருப்பதால் இவைகள் திர்யக் (குறுக்கு) ஸ்ரோதஸ்ஸுக்கள் எனப்படுகின்றன.

இவைகளாளும் உலக யாத்ரை ஒழுங்காக நடைபெறாது எனத் த்யானித்தபோது, அவன் மேல் பாகத்திலிருந்து ஊர்த்வ ஸ்ரோதஸ்ஸுக்களெனப்படும் தேவர்கள் தோன்றினர். இவர்கள் ஸத்வகுணம் மிகுந்தவர்கள். பூமியைத் தீண்டாதவர்கள். அக்ஞானமற்றவர்கள். ஸுகமும், ப்ரீதியுமுடையவர்கள். முன்னம் செய்த ஸ்ருஷ்டியை விட இதில் ப்ரஹ்மனும் மகிழ்ந்தான். ஆனாலும் பூர்ண த்ருப்தியடையவில்லை. ஏனெனில் ஸுகவாஸிகளான இவர்கள் யாகம் முதலான கர்மங்களில் கவனம் செலுத்தவில்லை.

இப்போது மனிதர்கள் ப்ரஹ்மனின் மத்யத்திலிருந்து அர்வாக்ஸ்ரோதஸ்ஸுக்களென்ற பெயருடன் பூமியில் உண்டாயினர். இவர்கள் ஞானம் மிகுந்தவர்களாக யாகம் முதலிய கர்மாக்களை செய்பவர்களானாலும், தமோகுணத்தால் பல துன்பங்களுக்கு ஆளானார்கள். ரஜோகுணத்தால் அடிக்கடி ஏதாவது வேலைகளையும் செய்து கொண்டிருந்தார்கள்.

இப்போது த்ருப்தியடைந்த ப்ரஹ்மன் உலக யாத்ரைக்காக தாவரங்களுக்கு அவித்யையையும், ம்ருகங்களுக்கு இந்த்ரிய வதத்தையும், தேவர்களுக்கு ஒன்பது துஷ்டிகளையும், மனிதர்களுக்கு எட்டு ஸித்திகளையும் படைத்தான். இதற்கு அனுக்ரஹ ஸ்ருஷ்டி என்று பெயர். இதன் பின் கௌமார ஸ்ருஷ்டி எனப்படும் ஸனக, ஸனந்தன, ஸனத்குமார, ருத்ரர்களையும் படைத்தான். ஆக ஸ்ருஷ்டி தாவர, திர்யக், தேவ, மனுஷ்ய, அனுக்ரஹ, கௌமார ஸ்ருஷ்டிகள் என ஆறு வகைப்படும். இவைகளுக்கு முன்பாக மஹத், தன்மந்த்ரங்கள் மற்றும் உணர்ச்சிகளையும் சேர்த்து ஒன்பதாகவும் கூறுவர்.

தமோ குணம் மிகுந்திருந்த ஓருருவத்தில் இருக்கும்போது ப்ரஹ்மனின் இடுப்பிலிருந்து சிலர் தமோ குணத்துடனேயே தோன்றினர். இவர்களே அஸுரர்கள். இவர்களுக்கு இரவில் பலம் அதிகம், இரவிலேயே இவர்களுக்கு செய்யப்படும் பூஜைகளும் செய்யப்படுகின்றன. மற்றொரு சமயம் சந்தோஷத்துடன் இருந்த உருவின் முகத்திலிருந்து சிலர் தோன்றினர். இவர்கள் தேவர்கள். பகலில் இவர்களுக்கு பலம். பூஜைகளும் பகலிலேயே செய்யப்படுகின்றன. மற்றொரு சமயம் ஸத்வ குணத்தோடே தன்னைப் பிதாவாக நினைத்துக்கொண்டிருந்த போது, அவரின் பக்கங்களிலிருந்து சிலர் தோன்றினர். பிதாவாகத் தன்னை நினைத்துக் கொண்டிருந்த போது இவர்கள் பிறந்ததால் இவர்கள் பித்ரு தேவதைகள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு மாலை சந்திக்கு முன்னுள்ள அபராஹ்ன காலத்தில் பலம். அதனாலேயே ச்ராத்தம், தர்ப்பணம் முதலியவைகள் இந்த காலத்தில் செய்யப்படுகின்றன.

இதேபோல் ரஜோகுணத்திலிருந்த போது காலைச்சந்தியில் பலமுள்ள ரஜோகுணமுள்ள மனுஷ்யர்கள் பிறந்தனர். மற்றொரு ஸமயம் தமோகுணம் மிகுந்திருக்கையில் ஸ்ருஷ்டிக்க ஆரம்பித்தபோது ப்ரஹ்மனுக்குப் பசியும், அதனால் கோபமும் உண்டானது. அந்த நிலையில் ஸ்ருஷ்டிக்கப்பட்ட சிலர் மெலிந்து, மிகுந்த கோபத்துடன், தாடி, மீசையுடன் பயமுறுத்தும் உருவில் உண்டானார்கள். அவர்கள் பசியுடனும், கோபத்துடனும் ப்ரஹ்மனையே உண்ண நினைத்தார்கள், இன்னும் சிலர் அவரை விட்டு விடுங்கள், அவர் காப்பாற்றப்பட வேண்டியவர் என ஏளனம் செய்து கொண்டிருந்தனர். இவர்களே ராக்ஷஸர்கள் மற்றும் யக்ஷர்கள். இவர்களைக் கண்டு மனம் வருந்திய ப்ரஹ்மனின் தலையிலிருந்து மயிர்கள் உதிர்ந்தன. அவைகள் ஊர்ந்து சென்றமையால் பாம்புகள் என்றும் அஹி (தலையிலிருந்து ஹீனங்களானவை) என்றும் அழைக்கப்பட்டன. இப்படி இன்னும் பிசாசர்கள், கந்தர்வர்கள், அப்ஸரஸ்ஸுகள், கின்னரர்கள், நீரில், நிலத்தில், க்ராமத்தில், காட்டில் வாழும் மிருகங்கள்,பக்ஷிகள், பூச்சிகள் எனப் பலவற்றையும் முன்பிருந்த கல்பங்களில் இருந்தவாறே வேதங்களைக் கொண்டு படைத்தார்.


விஷ்ணு புராணம் - 4

01_04. ­­­­வராஹரூபியாய் பஹவான் அவதரித்ததால் இந்த கல்பத்திற்கு வராஹகல்பம் என்று பெயர். ப்ரஹ்மா இரவுப்பொழுது நித்திரை முடிந்து, ஸத்வகுணத்துடன் விழித்தெழுந்து ஜலமயமாய் இருக்கும் உலகை சுற்றிலும் பார்க்கிறார். பூமியை மீண்டும் கொண்டு வருவது பற்றி யோசிக்கிறார். அப்போது ஒரு தாமரை இலையைப் பார்க்கிறார். இதற்கு ஆதாரமான பூமியென்ற ஒன்று அப்போது இதனடியிலிருக்க வேண்டும் என ஊஹித்து, பெரும் பன்றி வடிவமெடுக்கிறார்.

முன்பு வேதங்களையபஹரித்துச் சென்று கடலினுள் ஒளிந்து கொண்ட அஸுரர்களைக் கொல்ல மீனாக அவதரித்தார். மற்றொரு சமயம் அமிர்தம் கடைய முயன்ற போது, மத்தாக இருந்த மலை மூழ்கிவிடாமலிருக்க ஆமையாக அவதரித்தார். இப்போதும் பூமிதேவியின் துயரைப் போக்க ப்ரஹ்மாவின் மூக்கிலிருந்து வராஹமாக அவதரித்து, வளர்ந்தார். அளவிற்குட்படாமல் பூமியின் உருவம் ஒரு வண்டின் அளவாகச் சிறியதாக தோன்றும் அளவிற்கு வளர்ந்தார். திருமேனி வேத,யாக மயமாக இருந்தது. இவரை ஜனலோகத்திலிருந்த ஸனகர், ஸனந்தனர் முதலானோர் வணங்கினர்.

நீரினுள் மூழ்கி பாதாளம் சென்ற பரமனை, பாசி படர்ந்து கிடக்கும் பூமி தேவி வணங்கித் துதிக்கிறாள். ப்ரளயக்கடலிலிருந்து தன்னைக் காக்க வேண்டுகிறாள். படைப்பவன், காப்பவன், அழிப்பவனும் நீயே; உன் ரூபத்தை ஒருவரும் அறியார்; தேவருட்பட எவரும் உன்னை உபாஸித்தே மோக்ஷம் பெறுகின்றனர். உன்னால் உண்டுபண்ணப்பட்டு, உன்னிடத்திலேயே நிலை பெற்று, உன்னையே சரணமாக அடைந்தவளென்பதாலன்றோ என்னை எல்லோரும் மாதவி என்கின்றனர் எனப் பலவாறுப் போற்றித் துதிக்கிறாள்.

அதை ஏற்றுக்கொண்ட பரமனும் ஸாமவேதத்தின் ஸ்வரங்களுக்கொப்ப குர், குரென உறுமிக்கொண்டு பன்றிகள் கோரைப்பற்களால் கிழங்குகளை மேற்கொண்டு வருவதுபோல, தானும் பூமியைத் தூக்கிக்கொண்டு இருபுறமும் இரண்டு பிறைகள் கவ்விய நீலமலையொன்று நீரிலிருந்து மேலே வருவது போல் வருகிறார். வரும் வழியில் எதிர்த்துவந்த ஹிரண்யாக்ஷனை வதைக்கிறார். இப்படி வரும்போது அவர் மேல் பட்ட நீர்த்திவலைகள் பட்டதால் ஜனலோகத்திலிருப்பவர்கள் புனிதமடைகின்றனர்.

கால் குளம்புகளால் ரஸாதலத்தை உதைத்துக் கிளம்பியதில் ஏற்பட்ட த்வாரங்கள் வழியே பேரிரைச்சலுடன் தண்ணீர் கீழே செல்கிறது. ஜலத்தின் மேலேறிய பஹவான் தன்னுடலை உதறுகிறார். அந்த ரோமங்கள் ஜனலோகம் வரை நிமிர்ந்து நிற்கின்றன. அதில் அகப்பட்டுக் கொண்டிருக்கும் மஹரிஷிகள் ஜய ஜய என கோஷிக்கின்றனர்.

"தேவதேவன் நீ; யாகத்தினுறுப்புக்கள் உன் அவயங்கள். உன் கால்கள் நான்கு வேதங்கள். உன் கோரைப்பல்லே யாகத்தின் யூபஸ்தம்பம், புரோடாசங்களை சாப்பிடுவதால் மற்ற பற்கள் யாகங்கள்; அக்னி ஜ்வாலைப் போல் சிவந்திருக்கும் நாக்கே அக்னியாம். ரோமங்கள் தர்ப்பங்கள். நீயே ய்க்ஞபுருஷன். இரவு, பகல்களே உன் கண்கள். மூக்கே ஸ்ருக். நீயே எங்களையும் காக்கவேண்டும். தாமரைக்காட்டில் விளையாடும் யானையின் தந்தத்தில் சேறுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் தாமரையிலைப் போலிருக்கிறது உன் கோரைப்பற்களின் நுனியிலுள்ள பூமண்டலம்".

"உலகம் உன்னால் சூழப்பட்டுள்ளது. நீயே இவ்வுலகிற்கு ஆத்மா. இந்த ஞானமில்லாதவர்களே உலகை தேவர்களாகவும், மனிதர்களாகவும், மற்ற ஜடப்பொருள்களாவும் பார்க்கின்றனர். ஜீவாத்மாவையும், உடலையும் ஒன்று என நினைக்கின்றனர். இவர்கள் உன்னை எப்படி அறியப்போகின்றனர், நீ எங்களுக்கு நன்மை செய்வதற்காகவே அனைத்தையும் செய்கிறாய்" எனப் போற்றிப் புகழ்கின்றனர். வராஹமூர்த்தி பூமியை ஜலத்தின் மேல் பரப்பி வைக்கிறார். ஏழு த்வீபங்கள், பூ, புவர், ஸுவர் லோகம் என பாதாள லோகம் வரை அனைத்தையும் ப்ரஹ்மனாயிருந்து படைக்கிறான். ஜீவர்களின் கர்மவினைகளுக்கேற்ப அவர்களை தேவர்களாகவும், மனிதர்களாகவும், தாவரங்களாகவும் படைத்துத் தான் நிமித்தமாய் மட்டும் இருக்கிறான்.

விஷ்ணு புராணம் - 3

01_03. நமக்குத் தெரியாத விஷயங்களையறிய விரும்பி, விஷயங்களையறிந்த பெரியவர்களை அணுகும்போது நம்மை பரிக்ஷிக்க சம்பந்தமில்லாததையும், நம் ஆவலைத் தூண்ட சுருக்கமாகவோ உபதேசிப்பார்கள். ஆனால் நம் சந்தேஹங்கள் தெளிய நாம் அவற்றையாராய்ந்து மீண்டும் கேள்விகளைக் கேட்டு விஷயங்களை அறிந்து கொள்ளவேண்டும். இங்கும் மைத்ரேயருக்கு ஆசார்யனின் பதிலில் ஸந்தேஹங்கள் வருகின்றன. உலகிலுள்ள பானை, துணி, வளையல் என்ற அனைத்துப் பொருள்களையும் செய்யும் கர்த்தா உருவம் உள்ளவர், குணங்களுடையவர். அனைத்தையுமறிந்தவருமில்லை. எங்கும் வ்யாபித்திருப்பவருமில்லை. ஸுக, துக்கங்களை தாண்டியவராகவுமில்லை.

உலகிலுள்ள பொருள்களைப் படைப்பவரையும் கர்த்தா என்கிறோம். உலகைப் படைப்பவரையும் கர்த்தா என்கிறோம். அப்படியானால், பானை முதலானவைகளை செய்யும் கர்த்தாவைப் போல் தானா உலகைப் படைக்கும் கர்த்தாவும். இருவருக்கும் வித்யாஸமுண்டா, இல்லையா. இல்லையெனில் அவரை நினைப்பதும், தொழுவதும் எதற்கு என்ற குழப்பங்கள் வர அவர் மீண்டும் அதை குருவிடமே கேட்கிறார். அதற்கு பராசரர் உலகிலுள்ள பொருள்களிலும், கர்த்தாக்களிலுமே பல வேறுபாடுகள் உள்ளன. தண்ணீரில் குளிர்ச்சியும், தீயில் சூடும் உள்ளது. மற்றவர்களிடம் குறைவாகவோ, இல்லாததாகவோ இருக்கும் தவம் உன்னிடம் அதிகமாக உள்ளது. அவ்வாறே உலகின் கர்த்தாவான ஈச்வரனும் மற்ற உலகப்பொருள்களைச் செய்யும் கர்த்தாவை விட வேறானவனே. அவன் எங்கும் நிறைந்திருப்பவன். கர்மபந்தங்கள், ஸுக, துக்கங்கள், ஸத்வ, ரஜ, தமோ குணங்கள் அவனுக்கு கிடையாது. ப்ரஹ்மத்திற்கு பல உயர்ந்த சக்திகளும், ஞானமும், பலமும் இயற்கையாக அமைந்துள்ளன.

படைக்கும்போது ப்ரஹ்மாவுக்கு உள்ளிருந்து அந்த ப்ரஹ்மமே தொழிலைச் செய்கிறது. நமக்கு 100 ஆண்டுகள் ஆயுள் என்று வரையறுக்கப்பட்டிருப்பது போல், ப்ரஹ்மாவிற்கும் வரைமுறை உண்டு. பல ப்ரஹ்மாக்களும் உண்டு. ஆனால் கால அளவு நம்முடையதைப்போலில்லை. மனுஷ்யமானம், தேவமானம், ப்ரஹ்மமானம் என கால அளவுகள் மாறுபட்டவை.

இவைகளைப் பற்றி: மனுஷ்யமானத்தில் கண் இமைக்கும் நேரம் - 1 நிமிஷம் [ இது நொடியை விடச் சிறியதாகத் தோன்றுகிறது], 15 நிமிஷங்கள் - காஷ்டை, 30 காஷ்டை - 1 கலை, 30 கலை - 1 முஹூர்த்தம்,30 முஹூர்த்தங்கள் - ஒரு நாள். 15 நாள் - ஒரு பக்ஷம் (சுக்ல, க்ருஷ்ண), 2 பக்ஷம் - 1 மாதம், 6 மாதம் - ஒரு அயனம் (உத்ராயணம், தக்ஷிணாயம்), 2 அயனம் - 1 வருஷம். இந்த 1 வருஷம் தேவமானத்தில், அதாவது தேவர்களுக்கு ஒரு நாள். உத்தராயணம் அவர்களுக்குப் பகல் பொழுது, தக்ஷிணாயனம் இரவுப் பொழுது.

இப்படி தேவ வருடங்கள் 12,000 கொண்டது ஒரு சதுர்யுகம். முதலாவதான க்ருதயுகம் - 4,000 தேவவருஷங்கள், இரண்டாவதான த்ரேதாயுகம் - 3,000 வருஷங்கள், த்வாபரயுகம் - 2,000 -மும், கலியுகம் 1000 தேவவருஷங்களுமாக கணக்கிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 2,000 தேவவருஷங்களில் யுகங்களின் ஸந்த்யைகளும், ஸந்த்யாம்ஸங்களும் செலவிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு யுகத்திற்கும் முன்புள்ள சில காலம் ஸந்த்யை, யுகத்திற்குப் பின்னுள்ள சில காலம் ஸந்த்யாம்ஸமாகும். ஒவ்வொரு யுகமும் எவ்வளவாயிரம் காலத்தைக் கொண்டுள்ளதோ, அவ்வளவு நூறு காலம் இந்த ஸந்த்யை, ஸந்த்யாம்ஸ காலமாகும். அதாவது க்ருதயுகத்திற்கு ஸந்த்யா காலம் 400 தேவவருஷங்கள் மற்றும் ஸந்த்யாம்ஸ காலம் 400 தேவவருஷங்கள். இதைப்போல த்ரேதா யுகத்திற்கு 300 ஸந்த்யா, ஸந்த்யாம்ஸ தேவவருஷங்கள், த்வாபர யுகத்திற்கு 200, மற்றும் கலியுகத்திற்கு 100 ஆகும். இவைகளுடன் சேர்த்துப் பார்த்தால் க்ருதயுகம் 4,800 தேவவருஷங்கள், த்ரேதாயுகம் 3,600 தேவவருஷங்கள், த்வாபரயுகம் 2,400 தேவவருஷங்கள் மற்றும் கலியுகம் 1,200 தேவவருஷங்கள்.

மனுஷ்யமானத்தின் கணக்குப்படி கலியுகம் ஸந்திகளைச் சேர்த்து 4,32,000 வருஷங்களும், இதைவிட 2 மடங்கு த்வாபரயுகமும் (8,64,000), த்ரேதாயுகம் 3 மடங்கும் (12,96,000), முதலாவதான க்ருதயுகம் 4 மடங்கும் (17,28,000) ஆகும். யுகக் கணக்குகளின்படி தர்மத்தின் பங்கும் முதல் யுகத்திலிருந்து குறைந்து கொண்டே வரும்.

இப்படி ஆயிரம் சதுர்யுகங்கள் ப்ரஹ்மாவிற்குப் பகலாகவும், இரவாகவும் இருக்கும். அதாவது ப்ரஹ்மமானத்தில் 100 வருடங்கள் ப்ரஹ்மாவின் ஆயுஸ். இதை பரம் (சிறந்தது, உயர்ந்தது) என்றும் இதன் இருபாதிகளை பரார்த்தம் என்றும் கூறுவர். ஒரு நாளின் பகல் நேரத்தில் (அதாவது ஓராயிரம் சதுர்யுகங்கள்) 14 மனுக்களும், ஸப்தரிஷிகளும், தேவர்களும் தோற்றுவிக்கப்பட்டு, அதிகாரிகளாக்கப்பட்டு, அதிகாரத்திலிருந்து இறக்கவும் செய்யப்படுகின்றனர். அதாவது 1000 சதுர்யுகங்களை 14 மனுக்களுக்கும் பிரித்துக் கொடுத்தால், அவர்கள் ஒவ்வொருவரின் காலமும் 71 சதுர்யுகத்திற்குக் கொஞ்சம் அதிகமாக விளங்கும். இந்த காலங்களுக்கு மன்வந்த்ரங்கள் (ஆக 14 மன்வந்த்ரங்கள்) என்று பெயர்.

இப்படி தனது பகல் நேரத்தில் படைக்கப்பட்ட உலகங்களை பகல் பொழுதின் முடிவில் ப்ரளயத்தால் ப்ரஹ்ம்னே அழிக்கிறான். இதற்கு ப்ராஹ்ம ப்ரளயம், நைமித்திக ப்ரளயம் என்று பெயர். இதன் போது பூ,புவர், ஸுவர்லோகங்கள் முற்றிலும் தீயால் அழிகின்றது. மஹர்லோகம் அழிவதில்லை. ஆனால் ப்ரளயத்தின் தாபம் தாங்காது அங்கிருப்பவர்கள் ஜனலோகத்தையடைந்து விடுகின்றனர். மஹர்லோகம் சூன்யமாகிவிடுகிறது. எங்கும் நீரால் சூழ்ந்திருக்கையில் பரமன் பாம்பனையில் பள்ளி கொள்கிறான். ப்ரஹ்மனும் பரமன் நாபிக்கமலத்தில் உதிக்கும் பத்மத்தினையடைகிறான். ஜனலோகத்திலிருப்பவர்கள் இவர்களை உபாஸித்துக்கொண்டிருக்கின்றனர். இப்படியே ப்ரஹ்மனின் இரவுப் பொழுதான அடுத்த ஆயிரம் வருடங்கள் முடிகிறது. பத்மம் தோன்றியதால் ப்ரஹ்மாவின் பகல் பொழுதின் கடைசி கல்பமான இந்த கல்பத்திற்கு பாத்ம மஹாகல்பம் என்று பெயர் (ப்ரதம பரார்த்தத்தின் கடைசி கல்பம்). இரவுப் பொழுது வராஹ கல்பத்தை முதலாகக் கொண்டு ஆரம்பிக்கிறது.

விஷ்ணு புராணம் - 2

1_2. "மைத்ரேயா, உனக்கு நான் கூறப்போகும் இந்த விஷயத்தை முதலில் ப்ரஜாபதிகள் ப்ரஹ்மாவிடமிருந்து கற்றனர். பின்னர் நர்மதைக் கரையில் ஒரு சமயம் அவர்களிடமிருந்து புருகுத்ஸன் என்பவரும், அவரிடமிருந்து ஸாரஸ்வதர் என்பவரும், அவரிடமிருந்து நானும் கற்றறிந்தோம். இப்படி குருபரம்பரையாக வந்த பெரும் விஷயத்தை உனக்கு நான் கூறப் போகிறேன். ஈடுபாட்டோடு கேள்" என விஷயங்களை பராசரர் மைத்ரேயருக்கு உபதேஸிக்கத் துவங்கினார்.

மண்பானை, தங்கவளையல் போன்று இந்த உலகம் விஷ்ணுமயம். உலகிற்கு மூலக்காரணம் அவனே. ஆனால் உலகத்திலிருக்கும் மற்ற காரணப்பொருள்களுக்கிருப்பது போல் இவனுக்கு குணங்கள் கிடையாது. சிறந்ததிலெல்லாம் சிறந்தவன், தனக்கு மேற்பட்டதொன்று இல்லாதவன். எங்கும் நிறைந்தவன். விருப்பற்றவன். வெளுப்பு, கருப்பு என்ற உருவங்கள், ப்ராஹ்மண்யம் முதலான ஜாதிகள், உற்பத்தி, அழிவு என்ற வேறுபாடுகள் இவையாவுமில்லாதவன். நிலையானவன். இவனிடம் எல்லாப் பொருளும், எல்லாப் பொருளிலும் இவனும் வ்யாபித்து உள்ளன. வாஸுதேவன் எனப் பெரியோர்களால் போற்றப்படுபவன். பரப்ரஹ்மம். அவித்யை, காம, க்ரோதங்களற்ற அமலன்.

இந்த ப்ரஹ்மமே ஜகத்காரணம், இதுவே ஜகத்துமாம். உலகப்பொருள்களான அவ்யக்தம் (உணர முடியாதவை), வ்யக்தம் (உணர முடிந்தவை - பஞ்ச பூதங்கள் முதலானவை), ஜீவாத்மா, காலம் என்ற நான்கு வகைகளும் உடலாகவும், ப்ரஹ்மமே ஆத்மாவாகவும் உடையது இந்த உலகம். ஆகவே ப்ரஹ்மமே ஜகத்காரணமும், ஜகத்துமாம். உடலாக விளங்கும் பொருள்களின் தோஷங்கள் ப்ரஹ்மத்திடம் இல்லை. அது இந்த பொருட்களிலிருந்து வேறாக, உயர்ந்ததாக விளங்குகிறது. இந்த ப்ரஹ்மத்தையே பிறப்பு, இறப்பாகிய சக்ரத்தைக் கடந்த நித்யஸூரிகள் எப்போதும் தர்சித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அவ்யக்தம் முதலான நான்கு பொருள்களையே விளையாட்டுக் கருவிகளாகக் கொண்டு குழந்தைகள் விளையாடுவது போல் ப்ரஹ்மமும் ஸ்ருஷ்டி முதலான விளையாட்டுகளை விளையாடுகிறது. இவற்றுள் அவ்யக்தம் என்பது உணரமுடியாதது. அது உண்டாக்கப்படுவதுமில்லை (ப்ரக்ருதி), அழிவதுமில்லை. ப்ரஹ்மம் இதையே ப்ரதானமாகக் கொண்டு ஸ்ருஷ்டி முதலானவற்றைச் செய்கிறது. வ்யக்தங்களான பஞ்சபூதங்களின் குணங்களான சப்தம், ஸ்பர்சம் போன்ற குணங்கள் அவ்யக்தத்திற்கில்லை. ஸத்வ, ரஜ, தமோ குணங்களைக் கொண்டது அவ்யக்தம். இவை முறையே உருவாக்குதல், காத்தல், அழித்தல் குணங்களை உடையவர்களை நோக்கும்.

[ நா என்ன சொல்றேன்னா: ஸத்வம் முக்யமாக அறிவு, விவேகம், நமக்கும் சமூஹத்திற்கும் நல்லவை சம்பந்தப்பட்டது. வேலை, வேலையற்றிருப்பது, செய்யத்தக்கது, தகாதது, அச்சம், அஞ்சாமை, பந்தம், விடுதலை போன்றவைகளை பகுத்தறியும் ஸாத்வீகம். தன்னை அதிகமாக வெளிப்படுத்திக்கொள்ளமாட்டார்கள் இவர்கள். மனம், உயிர், புலன்களின் செயல்களைத் தாங்கிக் கொள்வார்கள் இவர்கள். வெல்லம், பழங்கள், இஞ்சி, புளிக்காத தயிர், காய்கறிகள், வெண்ணை, பசும்பால் போன்றவைகள் இந்த குணத்தைக் கொடுக்குமாம். சாதுக்கள், பண்டிதர்கள், குருமார்களை இதில் கூறலாம்.

ரஜஸ் முக்யமாக உடல் வேலை, செயல்பாடு சம்பந்தப்பட்டது, தர்மாதர்ம, கார்யாகார்யங்களை அதிகமாக பகுத்தறியாதது. பற்றுதலோடு பயன் விரும்பி அறம், பொருள், இன்பங்களைத் தேடுவார்கள் இவர்கள். உணர்ச்சியைத் தூண்டும் உப்பு, புளிப்பு, காரம், சூடு அதிகமாக இருக்கும் உணவுகள், சாக்லேட்டுகள், இறைச்சி வகைகள் இந்த குணம் சம்பந்தப்பட்டவையாம்.

தமஸ் சோம்பேறித்தனம், தூக்கம், கவலை, ஏக்கம் முதலானவைகளை மாற்றும் திறனற்று அதற்கு அடங்கியிருக்கும். இவர்களுக்கு ரஜஸ் மேல் ! ! அதிகமாக பழையதான உணவுவகைகள் (சாராய மற்றும் அதன் உடன்பிறப்புக்கள், பழைய தோசை, இட்லி மாவு), பன்றிக்கறி, முட்டை, வினிகர், ப்ரிசர்வேட்டிவ் போன்ற வேதிப் பொருட்கள்.

முள்ளங்கி, வெங்காய, பூண்டின் வகைகள் முதலான சில தாவர வகைகள் ஸத்வகுணத்தை சார்ந்தவையன்று]

ப்ரளயகாலத்தில் இந்த அவ்யக்தமான ப்ரக்ருதி, தண்ணீர் உப்பை தன்னுள் மறைத்திருப்பது போல், இரவு, பகல், ஆகாயம், பூமி முதலான வேறுபாடுகளைத் தன்னுள் ஒடுக்கிக்கொள்கிறது. ப்ரக்ருதி, ஜீவாத்மா, பரப்ரஹ்மம் இவைகளே அப்போது இருக்கின்றன. இங்கு ப்ரக்ருதி, ஜீவாத்மா இரண்டுமே ஓரளவில் இந்த்ரியங்களால் உணரமுடியாததானவைகளாய் சூக்ஷ்ம உருவிலிருக்கின்றன. காலமும் ஆதி, அந்தமற்றது. ஸூக்ஷம உருவிலானது. உற்பத்தி, ஸ்திதி, ப்ரளயங்களைக் கடந்தது. இதனால் காலமும் சில நேரம் இறைவனை ஒத்ததாகிறது.

சில காலம் ப்ரளயம் நீடித்த பின் ஜீவாத்மாக்களின் கர்மவினைகளின் படி அவைகள் மறுபடி வேறுபடத் தொடங்குகிறது. காலமும் ஸ்ருஷ்டிக்கேற்றதாகிறது. அப்போது பரமனும் ப்ரக்ருதி, ஜீவன் இரண்டையும் சேர்த்து விளையாட்டைத் தொடங்குகிறான். ஸூக்ஷம உருவை விட்டு, ஜீவாத்மாவும் ஸ்தூல உருவத்தையடையத் தொடங்குகிறது. சுவைகள் அனுபவிப்பவனின் நிலையை மாற்றித் தான் மாறாதிருப்பது போல் பரப்ரஹ்மமும் தான் மாறாதிருக்கிறது.

ஸத்வ, ரஜ, தமோ குணங்களில் சமநிலையிலிருக்கும் ப்ரக்ருதி அந்த நிலையில் மாறுபடும்போது மஹத் என்ற தத்வம் விதைபோல் தோன்றுகிறது. அதிலிருந்து ஸாத்விக, ராஜஸ, தாமஸ அஹங்காரங்கள் தோன்றுகின்றன. தாமஸாஹங்காரத்திலிருந்து பஞ்சபூதங்களும் (ப்ருத்வி - பூமி, அப்பு - நீர், தேஜஸ் - நெருப்பு, வாயு - காற்று, ஆகாசம் - வெளி) தோன்றுகின்றன.

ஸாத்விகாஹங்காரத்திலிருந்து பதினோரு இந்த்ரியங்களும் (ஞானம், அதாவது புலன்களுக்குண்டான அறிவைத் தரும் ஞானேந்த்ரியங்கள் ஐந்து - மெய் (ஸ்பர்சம்), கண் (ரூபம்), மூக்கு (மணம்), நா (சுவை), செவி (சப்தம்) மற்றும் வேலை செய்வதற்கான கர்மேந்த்ரியங்கள் ஐந்து - வாக்கு (பேச), கை (காரியம் செய்ய), கால் (நடக்க), ஆஸனத்வாரம் (மலம் கழிக்க), பிறப்புறுப்புக்கள் (சிறுநீர் கழிக்க) ஆக மொத்தம் பத்து மற்றும் மனம் பதினொன்றாவது) தோன்றுகின்றன.

ராஜஸாஹங்காரம் மேற்கண்டவைகள் ஒன்று சேர்ந்து வேலை செய்வதில் உதவுகிறது. இந்த பஞ்சபூதங்கள் எப்படி ஒன்று சேரும், சேராமல் உலக உற்பத்தியும், இயக்கமும் எவ்வாறு நடைபெறும். இதுவரை நடந்தது ஸமஷ்டி ஸ்ருஷ்டி. இந்த மேற்கண்ட தத்வங்களை தக்கமுறையில் ஒன்று சேர்த்து மேற்கொண்டு ஸ்ருஷ்டிப்பது வ்யஷ்டி ஸ்ருஷ்டியாகும். பஞ்சபூதங்களில் ஒன்றில் அரைப்பங்கும், மற்ற நான்கில் அரைக்கால் பங்கும் கலந்து வ்யஷ்டி பஞ்சபூதங்கள் உண்டாகின்றன. இந்த முறைக்கு பஞ்சீகரணமென்று பெயர்.

மழைக்காலத்து நீர்க்குமிழி போல் மலை, கடல், நிலம், தேவர்கள், மனிதர்கள், நக்ஷத்ரங்கள் முதலானவைகள் கலந்த இந்த அண்டமும் பஞ்சபூதங்களிலிருந்து உண்டாகிறது. இந்த அண்டம் பஞ்சபூதங்கள், மஹத், அஹங்காரம், ப்ரக்ருதி ஆகியவைகளால் ஒன்றை ஒன்று பத்து மடங்கு அதிகமாக சூழப்பட்டுள்ளதாம். ஸ்ருஷ்டியில் ப்ரஹ்மனாகவும், ஸ்திதியில் விஷ்ணுவாகவும், ஸம்ஹாரத்தில் சிவனாகவும் அந்தப் பரம்பொருளே இருக்கிறது. சம்பாதித்தல் (உருவாக்குதல்), சேர்த்தல் (காத்தல்), செலவழித்தல் (அழித்தல்) இவைகளை செய்பவன் ஒருவனே. அதேபோல் இறைவனை உழவனாகவும் உருவகிக்கலாம். அவனே செப்பனிட்டு பயிர் விளைவித்து, காத்து, சமயம் வந்ததும் அழித்தும் விடுகிறான். திரும்பவும் இவைகளையே செய்கிறான். திருடன் தன் வாயில் பொருளை வைத்துக்காப்பது போல், இந்தக் கள்ளனும் ப்ரளய காலத்தில் ஜகத்தைத் தன்னுள் ஒடுக்கிக்கொண்டு பாம்பனையில் தூங்குவதுபோலிருக்கிறான்.