Tuesday, October 19, 2010

விஷ்ணு புராணம் - 114

05_34. இந்தக் கதையைக் கேட்ட மைத்ரேயர் ஆச்சர்யமுற்று இது போல் தேவர்களை வென்ற வேறு கதைகள் இருந்தால் அவற்றையும் கூறும்படி வேண்டிக் கொள்ள, பராசரர் காசி தஹனத்தைக் கூறலானார். பௌண்ட்ரக தேசத்தை கர்வம் கொண்ட ஓரரசன் ஆண்டு கொண்டிருந்தான். கல்லாதோர் பேச்சையும், புகழுரைகளையும் கேட்டு அவன் தன்னை வாஸுதேவனாகவே நினைத்துக் கொண்டிருந்தான். அப்படியே தன்னை எவரும் அழைக்கவும், நடந்து கொள்ளவும் வேண்டுமென்று எவருக்கும் உத்தரவுமிட்டான். போலியாக சங்கு, சக்ரம் முதலிய ன்னங்களையும், இரு பொம்மைக் கைகளையும், மார்பில் மறுவையும் வைத்துக் கொண்டு உண்மையான க்ருஷ்ணனோடு பொறாமையும், பகைமையும் பாராட்டத் தொடங்கிவிட்டான். தினமும் புதிதாக புனைந்த வனமாலையையும் அணிந்து கொண்டு அனைவரிடம் க்ருஷ்ணனின் லீலைகளைத் தானே செய்ததாக ப்ரசாரம் செய்து கொண்டிருந்தான். தன் மந்த்ரிகளுக்கும் தேவர்களின் பெயர்களைச் சூட்டி போலி கருட வாஹனத்தையும், ஆதிஸேஷனையும் உண்டாக்கி உபயோஹித்துக் கொண்டிருந்தான்.இவன் ஒரு ஸமயம் தன் சின்னங்களையும், பெயரையும் வேறு எவரும் தரிக்கக் கூடாதென்று உண்மையான வாஸுதேவனுக்கே தூது விடுத்தான். அவனிடம் க்ருஷ்ணன் 'நானே அங்கு வந்து சக்ரத்தை அரசரிடம் செலுத்தி விட்டு, சரணமடைகிறேன். பயமில்லாத நிலையை ஏற்படுத்துகிறேன்" என்று சிரித்துக் கொண்டே பல பொருள் பட கூறி அனுப்பிவிட்டு, அவ்வாறே கருடன் மீதேறி பௌண்ட்ரகமும் வந்து சேர்ந்தான். இதையறிந்த பௌண்ட்ரக வாஸுதேவனின் நண்பனான காசி தேசத்தரசன் தானும் தன் படைகளோடு வந்து போரில் சேர்ந்து கொள்கிறான். பௌண்ட்ரக வாஸுதேவனின் தேர்க் கொடி, தேர், க்ரீடம், குண்டலம் முதலான ஆபரணங்கள், நான்கு கைகள், ஆயுதங்கள், மறு என அனைத்தையும் கண்ட கண்ணன் தன்னையும் ஒப்பிட்டுப் பார்த்து சிரித்துக் கொள்கிறான். சிறிது நேரத்திலேயே பௌண்ட்ரகனையும், காசிராஜனையும் சேனையோடு அழித்து, பௌண்ட்ரகனை நோக்கி "உன் தூதனிடம் நீ சொல்லியனுப்பியபடியே இப்போது என் சின்னங்களான கதை, கருடன், சக்ரம் இவைகளை உன்னிடம் விடுகிறேன்" என்று கூறி அவைகளை ஏவினான். சக்ரம் அவனைப் பிளக்க, கதை அவனை கீழே தள்ள, கருடன் அவன் கொடியை வீழ்த்த பௌண்ட்ரகன் உயிரிழந்தான். அதன் பின் காசி ராஜனின் படைகளையும் நாசமாக்கி, அவன் தலையையும் அறுத்து அதனை காசியில் போய் விழுமாறு செய்து விட்டு, மக்கள் வியப்பும், மகிழ்வும் கொண்டாட த்வாரகை திரும்பினான் கோபாலன். அங்கே காசியில் திடீரென விழுந்த தலையைக் கண்ட மக்கள், அது தங்கள் மன்னன் தலையென அறிந்து அதிர்ச்சியுற்றனர். காசிராஜனின் மகன் உடனே கோபம் கொண்டு தன் புரோஹிதர் ஆலோசனையின் படி, ஜப, ஹோம, யாகாதிகளால் விச்வநாதரை வழிபட்டான். அவற்றால் மகிழ்வுற்று அவன் முன் தோன்றிய சிவபெருமானிடம் க்ருஷ்ணனைக் கொல்ல ஒரு பூதத்தை உண்டாக்கித் தருமாறு வரம் வேண்ட, சிவனும் தக்ஷிணாக்னியிலிருந்து அப்படி ஒரு பூதத்தை உண்டாக்கி அருள்கிறார். (இவன் வரம் வேண்டும் இந்த ச்லோகத்திற்கு "என் அப்பாவைக் கொன்ற க்ருஷ்ணன் என்னைக் கொல்வதற்கு பூதம் உண்டாகட்டும்" என்றும் ஒரு மாற்றுப் பொருள் உண்டு என்று என் தாத்தா கூறுவார், நிர்தேவத்வம் என்று கேட்பதற்கு பதில் நித்ராவத்வம் என்று வாய் குழறி கும்பகர்ணன் கேட்டதைப் போலுள்ளது இது).க்ருஷ்ணனை நோக்கி த்வாரகைக்கு இந்த நெருப்பு பூதம் சென்ற போது, கண்ணன் தன் தேவியர்களுடன் கோழிச் சண்டை, சொக்கட்டான் என்று விளையாடிக் கொண்டிருந்தான். இந்த பூதத்தைக் கண்டஞ்சிய த்வாரகாவாஸிகள், க்ருஷ்ணனை சரணடைந்தனர். அவன் விளையாடல்களை நிறுத்தாமலேயே அந்த பூதத்தைக் கொல்ல தன் சக்ரத்தை ஏவினான். அதனிடம் தோற்றோடிய அந்த பூதத்தைத் துரத்திச் சென்றது சக்ரமும். காசியில் அதனைக் காக்க வந்த சிவ சைன்யத்தையும், அரசனின் சைன்யத்தையும், யானை, குதிரை, கஜானா, வீடுகள், மதில்கள் என காசி நகரத்தையே சக்ரம் பொசுக்கி விட்டு, அந்த உக்ரத்தோடேயே மீண்டும் கண்ணன் கைகளை வந்தடைந்தது.

விஷ்ணு புராணம் - 113

05_33. பாணாஸுரன், ஆயிரம் கைகள் கொண்டவன். அவன் ஒரு ஸமயம் சிவபெருமானை வணங்கி "இத்தனை கைகளும் பயன் படுமாறு ஏதாவது யுத்தம் கிடைக்குமா? இல்லையேல் இந்தக் கைகள் வீணாகுமே" என்று வருந்தி கேட்டுக் கொண்டான். சிவபெருமானும் புன்சிரிப்புடன் "உன் மயிற்கொடி எப்போது முறிந்து விழுகிறதோ அப்போது அப்படி ஒரு வாய்ப்பு உனக்கு உண்டாகும்" என்று கூறினார். இதைக் கேட்டு அஸுரனும் மகிழ்வுற்று, அந்த நாளை எதிர்பார்த்திருந்தான். ஒரு நாள் அப்படி அந்த கொடியும் முறிந்து விழுந்தது. அந்த ஸமயத்தில் தான் சித்ரலேகையும் அனிருத்தனை தன் மாயையினால் மயக்கி த்வாரகையிலிருந்து உஷையின் கன்னிமாடத்தில் சேர்த்திருந்தாள். அனிருத்தனும் உஷையும் கூடிக் களித்திருந்தான். சில நாளில் இது காவலாளிகளுக்குத் தெரிந்து, அவர்களால் செய்தியறிந்த பாணாஸுரன் கிங்கரர் எனும் அஸுரக் கூட்டத்தாரை அனுப்பி அனிருத்தனைக் கொல்லக் கட்டளையிட்டான். ஆனால் அனிருத்தனை அவர்களனைவரையும் தடியாலேயே அடித்துக் கொன்றான். பாணாஸுரன் வந்தும் அனிருத்தனை வெல்ல முடியவில்லை. இறுதியில் தன் மந்திரியின் ஆலோசனையுடன் மாயப்போர் செய்தான் பாணாஸுரன். நாகாஸ்த்ரத்தால் அனிருத்தனை கன்னிமாடத்திலேயே கட்டிப் போட்டான்.

இந்த ஸமயம் த்வாரகையில் அனிருத்தனைக் காணாது தவித்த யாதவர்கள், பாரிஜாத மரத்தின் அபஹரிப்பு காரணமாக தேவர்கள் தான் அனிருத்தனை கொண்டு சென்றிருக்க வேண்டும் என்று தீர்மானித்தனர். நாரதர் அங்கு தோன்றி நடந்தவையனைத்தையும் அவர்களுக்குக் கூறினார். அதைக் கேட்ட க்ருஷ்ணன் கருடன் மீதேறி பாணாஸுரனின் சோணிதபுரம் நோக்கிப் பறந்தார். பலராமனும், ப்ரத்யும்னனும் அவனைப் பின் தொடர்ந்தனர். சோணிதபுரத்தை பரமேச்வரன் பக்தனுக்காக தன் ப்ரதம கணங்களைக் கொண்டு காவல் புரிந்து கொண்டிருந்தார். அவைகளை வென்று நகருக்குள் சென்ற க்ருஷ்ணன் சைன்யத்தின் மேல் பரமேச்வரனால் மூன்று கால்களும், தலைகளும் கொண்டதாக ஸ்ருஷ்டிக்கப்பட்டிருந்த ஜ்வர தேவதை சாம்பலையே ஆயுதமாக ப்ரயோகித்தது. அதனால் துன்பப்பட்ட பலராமர் க்ருஷ்ணன் மீது சாய்ந்தார். க்ருஷ்ணன் மீதும் படர்ந்த அந்த தேவதையை, க்ருஷ்ணனால் அதற்கு ப்ரதியாக படைக்கப்பட்ட ஜ்வர தேவதை வென்றது. க்ருஷ்ணன் கோபத்தை ப்ரஹ்மா அங்கு தோன்றி தணித்தார். அடங்கிய ஜ்வரதேவதையும் "இந்த யுத்தத்தை நினைப்பவர்களுக்கு ஜ்வர பீடை அனுகாமல் அனுக்ரஹிக்க வேண்டும்" என்று வரம் வேண்டிச் சென்றது.

மேலும் தொடர்ந்து வந்த கார்ஹபத்ய, ஆஹவனீய, தக்ஷிண, ஸப்ய, ஆவஸத்ய என்ற பஞ்சாக்னிகளையும், சிவ சைன்யங்களையும் க்ருஷ்ணன் வென்றான். இதற்கு மேல் போரில் பாணாஸுரனும், சிவபெருமானும், அவர் மகன் ஸுப்ரஹ்மண்யனும் சேனைகளோடு தோன்றினர். பரமேச்வரனுக்கும், க்ருஷ்ணனுக்கும் நேரிடையாக நடந்த அந்த உக்ரமான ப்ரளயம் போல் தோன்றிய யுத்தத்தை தேவர்களும், மற்றெவரும் அச்சத்துடன் கண்டு கொண்டிருந்தனர். இந்த ஸமயத்தில் தொடர்ந்து கொட்டாவி விடும்படி செய்யும் ஜ்ரும்பகாஸ்த்ரம் என்பதனை பரமேச்வரன் மேல் ஏவி அவரை அயர்ச்சியோடு தேர்த் தட்டில் உட்காரச் செய்து விட்டான் க்ருஷ்ணன். இந்த நிலையைக் கண்டு அஸுரனின் ஸேனை அஞ்சியது. ஸுப்ரமண்யரின் மயிலை, கருடன் அடித்து வீழ்த்தினான். ப்ரத்யும்னன் ஸுப்ரமண்யரை பாணங்களால் ச்ரமப்படுத்தினான். க்ருஷ்ணன் செய்த ஒரு ஹூங்காரத்தால் முருகனின் வேலும் ஒடிந்து விழவே, அவனும் யுத்தத்திலிருந்து விலகினான். சங்கரன் கொட்டாவி விட்டுக் கொண்டு நின்றான்! அஸுர ஸேனைகள் ஓடி ஒளிந்தன! குஹன் தோற்றான்! ப்ரதம கணங்கள் ஒழிந்தன!

இவற்றைக் கண்ட பாணாஸுரன் இறுதியாக நந்தியை ஸாரதியாகக் கொண்டு ஒரு பெரிய தேரில் தானே தலைமையேற்று யுத்தத்தை நடத்தினான். அவனது ஸேனைகள் அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பலராமர் கலப்பையாலும், உலக்கைகளாலும் சிதறி ஓடின. க்ருஷ்ணனுக்கும், பாணனுக்கும் நேருக்கு நேர் யுத்தம் மூண்டது. இருவரது கவசங்களும் பிளக்கப் பட்டன. அஸ்த்ரங்கள் பயனற்றதாக்கப்பட்டன. ஆயுதங்கள் ஒடிக்கப்பட்டன. ஒருவரை ஒருவர் கொல்ல விரும்பி போர் புரியலாயினர். க்ருஷ்ணன் வேறு வழியின்றி அவனைக் கொல்ல முடிவு செய்து சக்ரத்தை எடுத்தான். அப்போது அவனெதிரே கௌரீதேவியின் சக்தியும், அஸுரர்களின் தேவதையுமான கோடரீ என்பவள் நிர்வாணமாகத் தோன்றினாள். பெண்களை ஆடையின்றி பார்க்கக்கூடாது என்ற சாஸ்த்ரத்தையொத்து க்ருஷ்ணனும் வேறு வழியின்றி கண்களை மூடிக் கொண்டான். வித்யாரூபிணியான அவள் நோக்கத்தையும் உணர்ந்து, பாணாஸுரனைக் கொல்லாது, அதிகமாயிருக்கும் அவனது கைகளை மட்டும் வெட்டி விடுமாறு தன் சக்ரத்தை ஏவினான் க்ருஷ்ணன். தோள்களை இழந்து மீதமிருக்கும் நான்கு கைகளுடன் மீண்டும் க்ருஷ்ணனோடு போரிட ஆரம்பித்தான் பாணன்.

இப்போது மீண்டும் அவனைக் கொல்வதற்காக சக்ரத்தை எடுப்பதைக் கண்ட சிவன் தன் பக்தனைக் காப்பதற்காகத் தானே கண்ணனிடம் வந்து "க்ருஷ்ணா! உன்னை மனிதனாக நினைத்து போரிட்டேன். என்னைத் தோற்கடித்து, அவன் கைகளையும் அறுத்த போதே உன்னை ஜகன்னாதனென்று அறிந்து கொண்டேன். உன் இந்த அவதாரமும் திருவிளையாடலேயன்றி, கர்ம பந்தத்தாலன்று. பாணாஸுரனைக் காப்பதாக நான் அபயம் கொடுத்துள்ளேன். எனவே பொறுத்தருள். அவன் அபராதத்தை நான் செய்ததாக நினைத்துக் கொள்" என்று வேண்டுகிறான். க்ருஷ்ணனும் முகம் மலர்ந்து "பார்வதிபதே! உன் வேண்டுகோளாலும், வரத்தாலும் அவன் பிழைத்தான். சக்ரத்தைத் திரும்பப் பெறுகிறேன். நானும், நீயும் வேறன்று. தேவர்கள், அஸுரர்கள், மனிதர்கள் என வேறுபட்டிருக்கும் இந்த உலகும் நானே. என்னை விட வேறு பொருளில்லை. நீ அவனுக்குத் தந்த வரம் நான் தந்ததே. அக்ஞானிகளே என்னையும், இந்த ப்ரபஞ்சத்தையும் வேறாகப் பார்கிறார்கள். சொல்கிறார்கள். அப்படியே உனக்கும், எனக்கும் வேற்றுமை காண்கிறார்கள். உன்னை எனக்கு ஆத்மாவாகவும், சரீரமாகவும் நினைப்பதில்லை. ஆகவே கவலையில்லை. பாணாஸுரனுக்கு அபயம் அளித்தேன்" என்றான்.

இதன் பிறகு அனிருத்தன் இருக்குமிடம் சென்றான் க்ருஷ்ணன். கருடனின் காற்று பட்டதுமே நாகாஸ்த்ரங்கள் தளர்ந்து போயின. அவனையும், உஷையையும் கருடனில் ஏற்றிக் கொண்டு பலராமன், ப்ரத்யும்னன் இவர்களோடு த்வாரகை திரும்பிய க்ருஷ்ணன் புத்ர, பௌத்ரர்களுடன் ஆனந்தித்துக் கொண்டிருந்தான்.

Monday, October 18, 2010

விஷ்ணு புராணம் - 112

05_32. பானு, பௌமன், இரிகன் இவர்கள் ஸத்யபாமாவின் புத்ரர்கள். தீப்திமான், தாம்ரபக்ஷன் முதலானோர் ரோஹிணியின் புதல்வர்கள். ஸாம்பன் முதலானோர் ஜாம்பவதிக்கும், பத்ரவிந்தன் முதலானோர் நாக்னஜிதிக்கும், ஸங்க்ராமஜித் முதலானோர் சைப்யைக்கும், வ்ருகன் முதலானோர் மாத்ரிக்கும், காத்ரவான் முதலானோர் லக்ஷ்மணைக்கும், ச்ருதன் முதலானோர் காளிந்திக்கும், என இன்னும் மற்ற தேவிமார்களின் புத்ரர்களையும் சேர்த்து, க்ருஷ்ணனுக்கு ருக்மிணியின் மகனான ப்ரத்யும்னனை முதலாகக் கொண்டு மொத்தம் எண்பதாயிரத்து நூறு புதல்வர்கள். ப்ரத்யும்னன் மகன் அனிருத்தன். இவன் மஹாபலியின் பௌத்ரியும், பாணாஸுரனின் புத்ரியுமான உஷையை மணந்து கொண்டான். இவன் மகன் வஜ்ரன். இந்தத் திருமணம் காரணமாகத்தான் க்ருஷ்ணன் பாணாஸுரனின் ஆயிரம் கைகளையும் வெட்டி எறிந்தான். இந்த உஷை திருமணப் பருவம் எய்தியபோது, ஒரு உத்யான வனத்தில் பார்வதி, பரமேச்வரனுடன் விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டாள். தானும், எப்போது இப்படி ஒருவனுடன் விளையாடுவது என்ற எண்ணம் கொண்டாள்.

ஜீவராசிகளின் உள்ளக் கருத்தை உள்ளபடி அறியும் பார்வதி, இவளது இந்த எண்ணத்தையும் அறிந்து, உஷையை அழைத்து, "வருந்த வேண்டாம், நீயும் இதேபோல் உனக்கேற்ற கணவனுடன் கூடிக் களிக்கப் போகிறாய்" என்றாள். உடனே உஷையும் "யார் அவன்? எப்போது கிடைப்பான்" என்று கேட்டும் விடுகிறாள். பார்வதி தேவி, "குழந்தாய், வைகாசி சுக்ல பக்ஷ த்வாதசியன்று நீ யாரோடு சேர்ந்து விளையாடுவதாகக் கனவு காணப் போகிறாயோ, அவனையே நீ மணம் முடிப்பாய்' என்று அனுக்ரஹிக்கிறாள். அந்த நாளை ஆவலோடு எதிர்பார்த்திருந்த அவளது கனவில், குறிப்பிட்ட நாளில் அதே போல் நடக்கவும் நடந்தது. கனவில் ஸுகம் அனுபவித்து, திடுக்கென்று விழித்தெழுந்த அவள், நிஜத்தில் அவனைக் காணாது, "நாதா, எங்கு சென்று விட்டீர்" என்று பிதற்றத் தொடங்கி விட்டாள். பாணாஸுரன் மந்த்ரி கும்பாண்டன் என்பவனின் மகள் சித்ரலேகை என்பவள் உஷையின் ஆருயிர்த் தோழி. அவள் உஷை இவ்வாறு பிதற்றுவதைக் கண்டு, "அம்மா! யாரைத் தேடுகிறாய்? உன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவன் எவன்?" என்று கேட்டாள். வெட்கத்தால் தலை குனிந்த அவளை மிகுந்த நம்பிக்கைக் கொள்ளச் செய்து நடந்தவை அனைத்தையும் தெரிந்து கொண்டாள் சித்ரலேகை. அவனை மணம் முடிக்க உதவுமாறு உஷையும் அவளிடம் வேண்டிக் கொண்டாள்.

உருவம் தெரியாது, ஒரு விஷயமும் தெரியாது. எப்படி ஒருவரைக் கண்டு பிடிப்பது. ஏழுநாள் கழித்து அப்போதைய அரசர்கள், இளவரசர்களில் சிறந்தவர்களைச் சித்திரமாக வரைந்து கொண்டு வந்து காண்பித்தாள் சித்ரலேகை. தேவ, கந்தர்வ, அஸுர, மனுஷ்யர்கள் என ஒவ்வொருவராக ஒதுக்கிக் கொண்டு வந்ததைக் கண்டு சித்ரலேகை வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் போது, பலராம, க்ருஷ்ணர்களின் படங்களைக் கண்ட உஷையின் முகத்தில் சிறிது மாற்றம் தெரிந்தது. அடுத்து ப்ரத்யும்னன். இதைக் கண்டும் வெட்கப்பட்டு முகத்தைத் திருப்பிக் கொண்ட உஷை அடுத்ததாக அனிருத்தனைக் கண்டாள். வெட்கத்தை விட்டு, "இவனே அவன்" என்று கத்தினாள். சித்ரலேகை அவனைப் பற்றிய விவரங்களைக் கூறலானாள். "இவன் க்ருஷ்ணனின் பௌத்ரன். ப்ரத்யும்னனின் மகன். பார்வதி உனக்கு அனுக்ரஹித்தவன் இவனே. இவன் பெயர் அனிருத்தன். இவன் அழகு உலக ப்ரஸித்தம். இவனை நீ அடைந்தால் ஸகல ஸௌபாக்யங்களையும் பெறுவாய். ஆனால், க்ருஷ்ணனால் பாலனம் செய்யப்பட்டு வரும் த்வாரகையினுள் சென்று, இவனை எப்படி உன்னிடம் கொண்டு வந்து சேர்ப்பது? எனினும் நான் இதற்கு முயற்சி செய்கிறேன். நீ இந்த ரஹஸ்யத்தை யாரிடமும் அதற்குள் சொல்லி விடாதே" என்று கூறி ஆகாய மார்க்கமாக த்வாரகை சென்று சேர்ந்தாள்.

விஷ்ணு புராணம் - 111

05_31. தேவேந்த்ரனின் ஸ்துதியைக் கேட்டு, அர்த்தத்துடன் அமர்க்களமாகச் சிரித்தான் கண்ணன். ஒவ்வொரு முறையும் சண்டை செய்வதும், பிறகு தோற்றதும் துதிப்பதும் இந்த்ரனிடம் முதல் அனுபவமல்லவே. "தேவராஜரே! நீங்களோ தேவன். நானோ சாதாரண மனிதன். என் தவறை
தேவர்களான தாங்கள் தான் மன்னிக்க வேண்டும். என்னைப் பொறுத்தருளுங்கள். இந்த மரம் எனக்கு வேண்டாம். ஸத்யபாமா கேட்டதால் தான் நான் இதைப் பறித்தேன். இதையும், என் மீது நீங்கள் ஏவிய, சத்ருக்களை அழிக்கும் உங்கள் வஜ்ரத்தையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" என்று ஏளனமாகக் கூறினான் கண்ணன். மிகுந்த வெட்கம் கொண்ட இந்த்ரன், "க்ருஷ்ணா! என்னை மேலும் மயக்காதே. ஏன் இப்படிச் செய்கிறாய். உன்னை நானறிவேன். ஆனால் இப்போதுள்ள உன் நிலையில் தான். உன்னுடைய ஸூக்ஷ்ம ரூபத்தையல்ல. இந்த மரத்தை நீயே த்வாரகைக்
கொண்டு செல். நீ பூலோகத்தில் இருக்கும் வரை இதுவும் அங்கு இருக்கும். நீயே உலகைப் படைத்துக் காப்பவன். துஷ்டர்களை சிக்ஷிப்பவனும் நீயே. தேவராஜனும் நீயே. நானல்ல. நீயே ஜகன்னாதன். விஷ்ணுவும் நீயே. பஞ்சாயுதன் கொண்ட பரமனும் நீயே. என் அபராதத்தைப்
பொறுத்தருள்" என்று வேண்டிப் பணிந்தான்.

க்ருஷ்ணனும் அதையேற்று பாரிஜாத வ்ருக்ஷத்துடன் அனைவரும் புகழ கருடனுடன் த்வாரகை திரும்பினான். த்வாரகைக்கு மேலே வந்ததும் தன் சங்கத்தை முழக்கி, மக்களைத் தன் வரவால் மகிழச் செய்தான். பாரிஜாத மரத்தை ஸத்யபாமையின் தோட்டத்தில் நட்டான். மூன்று யோஜனை தூரம் மணம் பரப்பும் அதன் அழகில் மயங்கி எவரும் அதனருகில் சென்று ரஸிக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் அதன் சக்தியால் முற்பிறவியும் ஞாபகத்திற்கு வருகிறது. சரீரம் தேவசரீரம் போல் பொலிவு பெறுகிறது. இப்படி கொண்டாட்டத்திலிருக்கும் த்வாரகையில், க்ருஷ்ணன் தான்
ப்ராக்ஜ்யோதிஷத்திலிருந்து வெற்றி கொண்ட யானை, குதிரை என செல்வங்களைத் தன் பந்துக்களோடுப் பங்கிட்டுக் கொள்கிறான். நரகாஸுரனின் சிறையில் இருந்து விடுவித்த பதினாறாயிரம் பெண்களையும் அவர்கள் விரும்பியபடியே ஒரு சுப வேளையில் தானே விதிப்படி விவாஹம் செய்து கொண்டான் க்ருஷ்ணன். திருமண முஹூர்த்தத்தின் போதும், அதன் பின்னும் ஒவ்வொருவருடனும் அவரவர் மனம் விரும்பியபடி உருவங்களை ஏற்படுத்திக் கொண்டு, அவர்கள் மாளிகைகளில் மகிழ்வித்துக் கொண்டிருந்தான்.

விஷ்ணு புராணம் - 110

05_30. வருணனின் குடை, மணி பர்வதம், ருக்மிணி, ஹ்ருஷிகேசன் இவர்களை ஏற்றிக் கொண்டு அனாயாஸமாக இந்த்ர ஸபையை நோக்கிப் பறந்தான் கருடன். வாசலையடைந்ததும் ஹரி தன் சங்கத்தை எடுத்து ஊதினான். இதைக் கேட்டதும் தேவர்கள் ஸமர்ப்பணங்களுடன் க்ருஷ்ணனை வரவேற்பதற்கு வந்தனர். அவர்களின் மரியாதைகளை ஏற்றுக் கொண்ட க்ருஷ்ணன், தேவமாதாவான அதிதியின் மாளிகைக்குச் சென்றான். வெண் மேகங்களை ஒத்திருந்த ஒரு மாளிகையில் வஸித்து வந்த அதிதியை இந்த்ரனுடன் சேர்ந்து நமஸ்கரித்து, அவள் குண்டலங்களையும் ஒப்படைத்து, நரகாஸுரன் வதம் செய்யப்பட்டதையும் கூறினான். பெரிதும் மகிழ்ந்த தேவமாதா ஜகத்கர்த்தாவான ஹரியைத் துதிக்கலானாள்.

"தாமரைக் கண்ணா! உன்னைத் துதிப்போர்க்கு ஒரு பயமும் இல்லை. சாச்வதமானவன், லோகரூபமானவன், ஆத்மா, அனைத்திற்கும் ஆதாரம், முக்குணமும், அதற்கு அப்பாற்பட்டவனும், தூய்மையானவன், வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவன், அனைவரின் இதயத்தும் நிறைந்தவன், நிறம், வளர்ச்சி முதலிய மாறுபாடுகளில்லாதவன், பிறப்பு, இறப்பு, உறக்கம், விழிப்பு இவைகளால் பாதிப்பில்லாதவன் நீ. பகலும், இரவும், மாலையும், பூமியும், வானும், காற்றும், நீரும், நெருப்பும், மனமும், புத்தியும், குணங்களும், ப்ரஹ்ம, விஷ்ணு, சிவ, தேவ, யக்ஷ, தைத்ய, ராக்ஷஸ, சித்த, கூஷ்மாண்ட, பிசாச, கந்தர்வ, நர, ஸ்தாவர, புல், புதர், ஊர்வன, தாவுவன, பெரிது, மத்யமானது, சிறிது, உயர்ந்தது, தாழ்ந்தது என அனைத்தும் நீ.

உன் மாயையில் மோஹித்தே பலரும் உண்மையறியாமல் ஆத்மா அல்லாததை ஆத்மா என்றும், நான், எனது என்றும் கூறி வருகிறார்கள். இந்த மாயையே ஸம்ஸாரத்தை வளர்க்கும் தாய். ஸ்வதர்மங்களை அனுஷ்டித்து, உன்னைத் துதித்து வருபவர்கள் இந்த மாயைகளைக் கடந்து மோக்ஷத்தை அடைகிறார்கள். ப்ரஹ்மா முதல் அனைத்து தேவ, மனுஷயர்களும் உன் மாயையாகிற இந்த இருட்டினால் சூழப்பட்டவர்களே. மோக்ஷத்தைத் தரும் உன்னைத் துதிப்பவர்களும் தங்கள் ஆசை, பாதுகாப்பு இவைகளையே உன்னிடமும் யாஸிக்கிறார்கள். சாச்வதமானதை விடுத்து தங்கள் வம்சங்களின் வளர்ச்சி, எதிரிகளின் நாசம் இவைகளையே இவர்கள் உன்னிடம் வேண்டுவது உன்னுடைய விளையாட்டே.

எதையும் அருளும் கற்பக வ்ருக்ஷத்திடம் போய், தன் அரையை மறைக்க ஒரு துணி வேண்டுவது போல இவர்கள் இப்படி வேண்டுவது தங்கள் பாபங்களால் தானே. இப்படி அக்ஞானத்தாலுண்டாகும் மாயைகளான பாபங்களிலிருந்தும் நீயே காக்க வேண்டும். நானும் அப்படியே. ஹே சங்கு, சக்ரதாரி! சார்ங்கபாணி! கதாயுதத்தைத் தரிப்பவனே! உன் ஸ்வரூபத்தை நானும் அறியேன். என் மீது கருணை கொள். காத்தருள்" என்று துதித்தாள் அதிதி. இப்படித் துதிக்கப்பெற்ற விஷ்ணு தேவமாதாவிடம் "என்னை ஆசித்து அருளுங்கள்" என்று புன்னகையுடன் வேண்டினான். அதிதியும் "அப்படியே ஆகட்டும். தேவர்கள், அஸுரர்கள் என்று எவராலும் வெல்லமுடியாத புருஷோத்தமனாயிருப்பாய்" என்று க்ருஷ்ணனை ஆசிர்வதித்தாள்.

அதன் பின் இந்த்ராணியுடன் தன்னை வணங்கிய ஸத்யபாமையை "நிலையான அழகும், யௌவனத்தோடும் இருப்பாய்" என்று ஆசிர்வதித்தாள். தாயின் அனுமதியோடு இந்த்ரன் இந்த்ராணியோடு கூடி ஜனார்த்தனருக்கும், ஸத்யபாமைக்கும் வேண்டிய உபஸரிப்புகளைச் செய்து, அவர்களை தேவலோகத்து நந்தவனங்களுக்கு அழைத்துச் சென்றான். அங்கே கேசவர் பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து கிடைத்த, இந்த்ராணிக்கு மிகவும் ப்ரியமான பாரிஜாத மரத்தைக் கண்டார். அங்கிருந்த வேலைக்காரர்கள் பாரிஜாத மலர்களைக் கொண்டு வந்து சசீயினிடம் தந்தனர். மனிதப் பிறவியைச் சேர்ந்தவள் என்பதால் ஸத்யபாமைக்கு அந்தப் பூக்களைக் கொஞ்சமும் தராமல் தானே சூட்டிக் கொண்டாள் இந்த்ராணி. தங்க மயமான மரப்பட்டைகளோடும், தாம்ரத்தையொத்த இளந்தளிர்களோடும், மணம் மிக்க பழங்கள் பூத்துக் குலுங்கும் இந்த பாரிஜாத மரத்தைக் கண்ட ஸத்யபாமா ஆசையோடு கண்ணனிடம், "நாதா! ருக்மிணி, ஜாம்பவதி இவர்களை விட நான் தான் உங்களுக்கு எப்போதும் மிகவும் ப்ரியமானவள் என்று அடிக்கடி கூறுவீர்களே, நினைவிருக்கிறதா? அந்த வார்த்தைகளை முகஸ்துதிக்காக அப்போதெல்லாம் கூறினீர்களா, இல்லை உண்மையா?" என்று ஆரம்பித்தாள். க்ருஷ்ணன், "ப்ரியே! நான் ஒரு போதும் பொய் கூறுவதில்லை. அதுவும் உன்னிடம், உன்னைப் பற்றி ஏன் பொய் கூறுவேன்" என்றார்.

இதைக் கேட்டு மிகவும் சந்தோஷமடைந்த ஸத்யபாமா, "அப்படியானால், இந்த மரத்தை எடுத்துச் சென்று த்வாரகையில் என் வீட்டுத் தோட்டத்தில் நட வேண்டும். இதன் பூக்களை என் சக்களத்திகளின் மத்தியில், அவர்கள் ஏங்க, நான் என் தலையில் அழகாக சூட்டிக் கொள்ள வேண்டும். இதை நீங்கள் செய்ய வேண்டும்" என்றாள். அவ்வளவுதான், உடனேயே க்ருஷ்ணன் அந்த பாரிஜாத மரத்தைப் பிடுங்கி, கருடனின் சிறகுகளின் மத்தியில் வைத்துக் கொண்டு அங்கிருந்துப் புறப்பட்டு விட்டார். இதைக் கண்ட தோட்டத்துக் காவலர்கள், "ஏ கோவிந்தா! இது உன்னால் முடியாதது. இந்த மரம் அம்ருதம் கடைந்த போது பாற்கடலில் கிடைத்தது. தேவராஜனுக்கென்று கொடுக்கப்பட்ட இதை, அவர் தன் மனைவிக்கு மலர்களைக் கொண்டு அழகு படுத்திக் கொள்வதற்காகக் கொடுத்து விட்டார். சசிதேவிக்கு மிகவும் பிடித்த இதை நீ எடுத்துக் கொண்டு வீடு செல்ல முடியாது. மனைவியின் மனம் கோணாமல் நடந்து வரும் தேவராஜர், கையில் வஜ்ரத்தோடும், தேவர்களோடும் உன்னிடம் போர் புரிய வந்து விடுவார். கேடு விளைவிக்கும் செயலை புத்திசாலிகள் செய்ய மாட்டார்கள். இந்த மரத்தை இங்கேயே விட்டு விட்டுச் செல்" என்று அவமதித்துத் தடுத்தனர். இவர்களுக்குக் கண்ணன் பதில் கூறுவதற்குள்ளாகவே, ஸத்யபாமா "யாரிந்த இந்த்ரனும், சசியும். இது கடலைக் கடைந்த போது கிடைத்தது தானே. அம்ருதம், காமதேனு, சந்த்ரன் எனக் கடலில் கிடைத்த எல்லா பொருளும், பொதுவாயிருக்கையில், இதை மட்டும் அந்த சசிதேவி எடுத்துச் செல்வதைத் தடுத்தால், அது அவள் கணவனின் பலத்தில் கொண்ட கர்வத்தினால் தான் இருக்க வேண்டும். இப்போது அவளை விட கர்வம் கொண்டுள்ள நான் சொல்வதை உங்கள் ராணியிடம் சென்று சொல்லுங்கள். என்று பின் வருமாறு கூறினாள்.

"சசி தேவியே! என் நாதன் இப்போது உன் தோட்டத்திலிருந்து பாரிஜாத மரத்தை அபகரித்துச் செல்கிறார். நீ உன் பர்த்தாவுக்கு வேண்டியவளாயிருந்து, அவனும் உனக்கடங்கி இருப்பவனாயிருந்தால் இதைத் தடுத்து, மரத்தைக் காத்துக் கொள். உன்னையும், உன் கணவனையும், அவன் தேவர்களை ஆளும் திறனையும் அறிவேன். நான் சாதாரண மனுஷ்ய ஸ்த்ரீ என்று தானே, எனக்கு இந்தப் பாரிஜாதத்தின் பூக்களைத் தராமல் அவமதித்தாய். இப்போது அதே மனுஷ்ய ஸ்த்ரீ, தன் பர்த்தாவைக் கொண்டு இந்தப் பாரிஜாத மரத்தைக் கொண்டு செல்கிறாள். முடிந்தால் உன் கணவனை வந்து தன் பராக்ரமத்தைக் காட்டச் சொல்" என்று அலக்ஷ்யமாகக் கூறினாள். இதை அந்தக் காவலர்களும், சசியிடம் சொல்ல, அவள் இந்த்ரனை மரத்தை மீட்டு வருமாறு உற்சாகப்படுத்த, அவனும் சேனையுடன் புறப்பட்டு விட்டான் கண்ணனிடம் போரிட.. மூண்டது போர். எல்லா தேவர்களும் க்ருஷ்ணன் மீது அஸ்த்ரங்களை ப்ரயோகிக்கத் தொடங்கி விட்டனர். வருணனின் பாசங்களை கருடன் மூக்கால் துண்டிக்க, யமனின் கால தண்டத்தை கண்ணன் ஒடித்து, குபேரனின் பல்லக்கைப் பொடித்து, ஏகாதச ருத்ரர்களின் சூலங்களைத் தன் சக்ரத்தால் நாசமாக்கி, தேவர்களனைவரையும் இவ்வாறே கருடனும், க்ருஷ்ணனும் தோற்கடிக்கின்றனர். தானுட்பட அனைவரின் முயற்சியும் தோல்வியுறவே, இந்த்ரன் வேறு வழியின்றி வஜ்ராயுதத்தை ஏவி விடுகிறான். க்ருஷ்ணன் அதை விளையாட்டாகத் தன் கையில் பற்றிக் கொண்டு, சக்ரத்தை எடுத்துக் கொண்டு தேவேந்த்ரனைத் துரத்தலானான். கருடனும் ஐராவதத்தை அடித்து அயரச் செய்தான்.

அப்போது ஸத்யபாமையும், "ஏ இந்த்ரா! ஓடாதே, நில். இந்த மரத்தை எடுத்துக் கொள். கணவனின் பலத்தில் கர்வம் கொள்வது பெண்களின் இயற்கை. இதில் நானும், உன் மனைவியும் விலக்கல்ல. வீடு தேடி வந்த என்னை உன் மனைவி கௌரவப் படுத்தவில்லை. ஆனால் தன் அழகில் கர்வம் கொண்டு, என்னை மனுஷ்ய ஸ்த்ரீ என அவமதித்தாள். உன் மனைவிக்குப் பாடம் புகட்டவே நான் இவ்வாறு செய்தேன். இந்த மரத்தில் தானே உன் பெருமை இருக்கிறது. இப்போது மனுஷ்ய ஸ்த்ரீ தருகிறேன். மீண்டும் இதன் பூக்களை உன் மனைவியை சூடச் சொல். எனக்குப் பிறர் பொருளான இந்த மரத்தாலும், இதன் பூக்களாலும் ஆக வேண்டியதொன்றுமில்லை. என் பர்த்தாவின் பெருமையைக் காட்டவே, அவரைப் போருக்குத் தூண்டினேன். இதை இப்போது நீயே எடுத்துச் செல்" என்று கூறினாள். வஜ்ரத்தையிழந்து தோல்வியுற்றிருக்கும் போது, இவ்வாறு ஸத்யபாமா கூறிய கடுஞ்சொற்களைக் கேட்டு மனம் நொந்த இந்த்ரன், "கொடியவளே! இது எனக்குத் தோல்வியல்ல. அவமானமுமல்ல. உங்களின் நண்பனான என்னை அவமதித்தது போதும். ஜகத்காரணனிடமல்லவா நான் தோற்றிருக்கிறேன். மஹான்களாலும் அறிய முடியாதவனிவன். ஸூக்ஷ்மமானவன். உற்பத்தியில்லாதவன். கர்ம சம்பந்தமற்றவன். சாச்வதமானவன். இவனை யார்தான் ஜயிக்க முடியும்" என்று துதிக்கலானான்.