Thursday, November 29, 2012

விஷ்ணு புராணம் - 117

05_37. க்ருஷ்ணர் பரமபதமேகுவது
இப்படியாக பலராம, க்ருஷ்ணர்கள் தீயவர்களைக் கொன்று ஒருவாறு பூபாரத்தைக் குறைத்தனர்.  பாரத யுத்தத்திற்குப் பின் ஒரு ஸமயம் யாதவர்கள் பிண்டாரகம் எனும் தீர்த்த க்ஷேத்ரத்திலிருந்த போது அங்கு வந்த விச்வாமித்ரர், நாரதர் முதலான தேவ ருஷிகளைக் கண்டனர்.  விதி வஸத்தால் அறிவிழிந்த அவர்கள் க்ருஷ்ணனுக்கும் ஜாம்பவதிக்கும் பிறந்த ஸாம்பனுக்கு கர்ப்பவதி போன்று வேஷமிட்டு அவர்களிடம் விளையாட்டாக அழைத்துச் சென்று இவளுக்கு என்ன குழந்தை பிறக்கும் என்று கேட்டனர்.  திவ்ய ஞானிகளான அவர்கள் இவனுக்கு ஒரு இரும்பு உலக்கை பிறக்கும். அதனால் யாதவ வம்சமே அழிந்து போகும் என்று சபித்து விட்டனர்.  அதுவும் நடந்தது.  உக்ரஸேனரின் ஆணையால் அந்த இரும்புலக்கையை பொடி செய்து கடலில் கறைத்து விட்டனர் யாதவர்.  அது ஆங்காங்கே கோரைப் புற்களாக முளைத்து காலத்திற்காகக் காத்துக் கிடந்தது.

கடலில் கறைத்த பொடிகளில் ஒரு துகள் மீனவர் கையிலகப்பட்ட மீனின் வயிற்றில் இருந்தது.  அதை ஜரை என்ற வேடன் எடுத்து தன் அம்பின் நுனியில் பொருத்திக் கொண்டான்.

அந்த ஸமயத்தில் தேவதூதனாக வாயுதேவன் ஸ்ரீ க்ருஷ்ணனிடம் வந்தான்.  க்ருஷ்ணர் பூபாரத்திற்காக அவதரித்து நூறாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதையும், அஸுரர்கள் அழிக்கப்பட்டதையும் கூறி மீண்டும் விண்ணுலகிற்கு வருவதைப் பற்றிய க்ருஷ்ணனின் அபிப்ராயத்தை ப்ரார்த்தித்தான்.  அப்போது க்ருஷ்ணன், "இந்த யாதவர்களில் ஒவ்வொருவனும் ஜராஸந்தனுக்கு ஈடானவனே.  இவர்கள் இருக்கும் வரை பூபாரம் குறைந்ததாக ஆகாது.  இவர்கள் அழிவையும் இப்போதுதான் துவக்கி இருக்கிறேன்.  இன்னும் ஏழு இரவுகளுக்குள் அனைத்தையும் முடித்து விட்டு, ஸமுத்ரத்தினிடமிருந்து முன்பு பெற்ற த்வாரகையையும் மீண்டும் அதனிடமே விட்டு விட்டு, என் மனுஷ்ய உடலையும் அழித்துக் கொண்டு ஸங்கர்ஷணனுடன் வந்து சேர்கிறேன் என்று தேவேந்த்ரனிடம் கூறு" என்று பதில் கூறி அனுப்பினான்.

அதன் பின்னர் த்வாரகையில் பல துர்நிமித்தங்கள் தோன்றின.  இவையாவும் யாதவ குல அழிவையே காட்டுவன என்று கூறி க்ருஷ்ணனும் யாதவர்களை த்வாரகையை விட்டு, ப்ரபாஸ தீர்த்தத்திற்குப் புறப்படுமாறு ஏகினான்.  இவைகளை அறிந்ததும் பரம பாகவதரான உத்தவர் என்ற யாதவர் க்ருஷ்ணனை அணுகி, "க்ருஷ்ணா, இவையாவும் உன்னிஷ்டப்படியே, கட்டளைப்படியே நடக்கின்றன.  இந்த நிலையில் நான் செய்ய வேண்டுவதை எனக்கு அனுக்ரஹித்தருள வேண்டும்" என்று பக்தி மேலிட கேட்டுக் கொண்டார்.  க்ருஷ்ணர் தான் த்வாரகையை விட்டு அகன்றதும் த்வாரகை கடலில் மூழ்கப் போவதையும், வரப்போகும் யாதவகுல அழிவையும், தானும் வைகுண்டம் செல்லப்போவதையும் அவரிடம் கூறி அவருக்குப் பல தத்வங்களையும், தன் பாத ரக்ஷைகளையும் அருளிச் செய்தார்.  அவருக்கு தேவ மார்க்கமாக செல்லும் ஆசியையும் அளித்து, கந்தமாதன பர்வதத்திலிருக்கும் பதரிகாச்ரமம் சென்று தன்னையே த்யானிக்குமாறு விடையளித்தார்.  அதன்படியே அவரும் மோக்ஷமடைந்தார்.

அதன் பின்னர் ப்ரபாஸ தீர்த்தத்தில் மது மயக்கத்தில் வீழ்ந்த யாதவர்கள் தன்னிலை அறியாது தம் ப்ரபாவங்களையும், மற்றவர் குறைகளையும் பெரிதாகப் பேசிடப் பெரும் கலகமேற்பட்டது.  ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள முற்பட்டனர்.  அவர்கள் ஆயுதங்கள் அழிந்து அங்கு முளைத்திருந்த கோரைப் புற்கற்றைகளைப் பறித்து அதனால் தாக்கிக் கொண்டனர்.  விதிப்படியே அவையாவும் இருப்புலக்கைப் போன்று மாறின.  இதை விலக்க வந்த க்ருஷ்ணனுக்கும் அடி விழுந்தது.  இதனால் பெரும் கோபம் கொண்ட க்ருஷ்ணன் தானும் அதே கோரைகளைப் பிடுங்கி அவர்களனைவரையும் அழிக்கலாயினான்.  இதன் முடிவில் க்ருஷ்ணன் புதல்வர்கள் உட்பட யாதவ குலமே இறந்தொழிந்தது.  பலராமர், க்ருஷ்ணன், க்ருஷ்ண ஸாரதியான தாருகன் ஆகியோரே பிழைத்திருந்தனர்.

தாருகன் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே க்ருஷ்ணனின் தேரும் குதிரைகளால் இழுத்துச் செல்லப்பட்டு கடலில் சென்று மறைந்தது.  க்ருஷ்ணனின் சங்கம், சக்ரம், சார்ங்கம், கட்கம் இவைகளும் அவனை ப்ரதக்ஷிணம் செய்து ஸூர்ய மார்க்கத்தில் மறைந்தன.  ஒரு மரத்தடியில் யோகாஸனத்திலிருந்த பலராமரின் முகத்திலிருந்தும் மஹா ஸர்ப்பமொன்று கிளம்பி ஸித்தர்களும், நாகர்களும் துதிக்க ஸமுத்ரராஜனின் அழைப்பையேற்று அதில் சென்று மறைந்தது.

பலராமர் பிரிந்ததும் க்ருஷ்ணர் தாருகனை அழைத்து அவனை உடனே த்வாரகைக்குச் சென்று நடந்தவைகளை வஸுதேவர், உக்ரஸேனர் முதலானோருக்குக் கூறி, தானும் யோக நிஷ்டையால் உடலை விடப்போவதையும் கூறச் சொன்னார்.  விரைவில் த்வாரகை அழியப் போவதால் வஜ்ரனை அரசனாகச் செய்து கொண்டு அர்ஜுனன் வந்து அழைத்துச் செல்லும் போது அவனுடன் அனைவரையும் செல்லுமாறுக் கூறினார்.  தாருகனையே ஹஸ்தினாபுரம் சென்று பாண்டவர்களிடமும் அனைத்தையும் கூறி அர்ஜுனனால் முடிந்த அளவு, யாதவர்களனைவரையும் அழைத்து வந்து காக்குமாறுக் கூறச் சொன்னார்.  தாருகனும் வேறு வழியின்றி க்ருஷ்ணனைப் பலமுறை ப்ரதக்ஷிணம் செய்து அவன் கூறியபடியே சென்று அவைகளைச் செய்து முடித்தான்.

முன்பொரு ஸமயம் துர்வாஸர் க்ருஷ்ண க்ருஹத்திற்கு அதிதியாக வந்து தங்கியிருந்தார்.  க்ருஷ்ணனும், ருக்மிணியும் அந்த ப்ராஹ்மணரைப் பெரிதும் உபஸரித்தனர்.  அவர்களை அனுக்ரஹிக்க நினைத்த துர்வாஸர் அவர்களைப் பரிக்ஷிக்கலானார்.  இஷ்டப்படி வருவார், வருவேனென்று கூறி வர மாட்டார்.  க்ருஷ்ணனின் படுக்கையில் படுத்துக் கொள்வார்.  எதையாவது எரித்து விடுவார். பலமாக சாப்பிடுவார். ஒரு நாள் சாப்பிடவே மாட்டார்.  அப்படி ஒரு முறை தனக்கு பாயஸம் கொண்டு வரச் சொன்னார்.  அவர் உண்டு மிகுந்த பாயஸத்தை க்ருஷ்ணனையும், ருக்மிணியையும் உடலில் பூசிக் கொள்ளச் சொன்னார்.  அவர்களும் அவ்வண்ணமே செய்தனர்.  அதன் பின் தேரிலேறிக் கொண்ட அவர் பாயஸம் பூசிக் கொண்ட உடலோடு ருக்மிணியை அந்தத் தேரை இழுத்துச் செல்லக் கட்டளையிட்டார்.  அவளை அதன் பின் குச்சியால் குத்தியும், அடித்தும் வேகமாகச் செல்லச் சொன்னார். ஓரளவில் அவள் கீழே விழுந்து விட்டாள்.  தேரிலிருந்து இறங்கி ஓடிச் சென்ற அவரை அப்போதும் க்ருஷ்ணர் சென்று மன்னித்து விடுமாறு வேண்டிக் கொண்டார்.  பெரிதும் மகிழ்ந்த துர்வாஸர், அவர்களிருவரையும் அன்போடும், கருணையோடும் அனுக்ரஹித்தார்.  ருக்மிணிக்குப் பெரும் கீர்த்தியையும், முதுமையில்லாமை, உடல் மாறுபாடில்லாமைகளை அருளிச் செய்தார்.  பின்னர் க்ருஷ்ணனிடம், "க்ருஷ்ணா! நீ இயற்கையிலேயே கோபத்தை வென்று விட்டாய்.  பல கொடுமைகளை நான் செய்த போதும் என்னை மீண்டும், மீண்டும் உபஸரித்து, சந்தோஷிக்கவே செய்தாய்.  நீ வேண்டும் வரங்களைத் தருகிறேன், எவரும் உன்னை விரும்புவர்.  மூவுலகிலும் நீ இன்புறுவாய்.  இந்த பாயஸத்தைப் பூசிக் கொண்ட எந்த பாகங்களிலும் உனக்கு மரண பயமில்லை.  ஆனால் அதைப் பூசிக்கொள்ளாத உன் பாதங்களே உன்னுடைய மர்ம ஸ்தானம்" என்று கூறியிருந்தார்.

அதை இப்போது நிறைவேற்றும் வண்ணம் க்ருஷ்ணன் கால் மீது கால் போட்டு, யோக நித்ரையிலாழ்ந்தான்.  அங்கு வந்த ஜரனும் ஏதோ விலங்கு என்று நினைத்துத் தொலைவிலிருந்தே அந்தத் துகள் பொருத்திய அம்பை விட்டான்.  விஷம் தோய்ந்த அம்பு க்ருஷ்ணனின் காலைப் பதம் பார்த்தது.  அருகில் வந்த வேடனும் நடந்ததை அறிந்து பதறினான்.  க்ருஷ்ணன் அவனையும் தேற்றி, சதுர்புஜங்களோடு தரிசனம் தந்து, உடனை ஒரு விமானத்தை வரவழைத்து அவனுக்கு ஸ்வர்க்கத்தையும் அளித்தான்.  தன் அவதார கார்யம் முடிந்து உடலையும் நீத்தான்.

விஷ்ணு புராணம் - 116

05_36. த்விவித ஸம்ஹாரம்
த்விவிதன் ஒரு வானரன்.  ராம ராவண யுத்தத்தில் வானர ஸைன்யத்தில் பெரும் பங்காற்றியவன்.  வாலியின் மனைவியான தாரையின் ஸஹோதரனிவன்.  அம்ருதம் கடைந்த போது தேவர்களை பயமுறுத்தி அம்ருதத்தை உண்டவன்.  நரகாஸுரனின் நண்பன்!  தேவர்களால் நரகாஸுரன் கொல்லப்பட்டதை அறிந்த இவன் வேதாத்யயனத்திற்கும், யாகாதி கர்மங்களுக்கும் இடையூறு செய்ய ஆரம்பித்தான்.  அனைவரையும் துன்புறுத்தினான்.  மலை, மரம் முதலானவைகளை பெரும் பலத்தால் கடலினில் எறிந்தான்.  காடுகள் அழிந்தன.  கடல் கொந்தளித்தது.

அப்படி ஒரு ஸமயம் த்வாரகையின் அருகில் இருந்த ரைவதகம் என்ற மலையில் பலராமர் மது அருந்திவிட்டு அவர் மனைவிகள் ரேவதி முதலானவர்களோடு விளையாடிக் கொண்டிருக்கையில் அங்கு வந்து அவரைக் கோபிக்கச் செய்து, தனது தர்மத்திற்கு ஒப்பாத செயல்களால் அவன் அருந்திய அம்ருதமும் பயன்படாது பலராமர் கையால் அடிபட்டு அவன் மைத்துனன் வாலியைப் போலவே இறந்தொழிந்தான்.  அப்போது தூக்கியெறியப்பட்ட அவனது உடல் ஒரு மலையின் மீது விழுந்து அதுவும் பொடிபட்டது.

விஷ்ணு புராணம் - 115

05_35. துர்யோதனனுக்கு ஒரு பெண் இருந்தாள்.  அவள் யெளவனப் பருவம் எய்தியதும் அவளுக்கு ஸ்வயம்வரம் நடத்த ஏற்பாடுகளைச் செய்தார்கள்.  அவளை க்ருஷ்ணனுக்கும், ஜாம்பவதிக்கும் பிறந்த சாம்பன் விரும்பி அபஹரித்துச் சென்று விட்டான்.  இதனையறிந்து கோபம் கொண்ட துர்யோதனன், கர்ணன், பீஷ்மர், த்ரோணர் முதலானோர் போரிட்டு சாம்பனைக் கட்டிக் கொண்டு போய் விட்டனர்.  உடனே க்ருஷ்ணர் முதலான யாதவர்கள் துர்யோதனனைக் கொன்றே விடுவது என்று தீர்மானித்துப் பெரும் படையுடன் புறப்பட்டு விட்டனர்.

அப்போது பலராமர் அங்கு வந்து சேர்ந்தார்.  மது மயக்கத்தில் இருந்த அவர் படைகளைத் தடுத்து, "துர்யோதனன் நம்முள் ஒருவன்.  என்னிடத்தில் துர்யோதனாதிகளுக்கு நல்ல மதிப்பும் உண்டு.  நான் சாம்பனை விட்டு விடு என்று சொன்னாலே அவர்கள் சாம்பனை விட்டு விடுவர்" என்று கூறித் தான் மட்டும் ஹஸ்தினாபுரம் சென்றார்.

அதன் எல்லையிலிருந்த ஒரு உத்யான வனத்தில் அவர் வந்து தங்கியிருப்பதையறிந்த துர்யோதனன் பீஷ்மர், த்ரோணர், கர்ணன் முதலானோருடன் ஓடி வந்து அவருக்கு அர்க்யம் முதலான மரியாதைகளை செய்து நமஸ்கரித்தான்.  அவைகளை ஏற்றுக் கொண்ட பலபத்ரர், சாம்பனை உடனே விடுதலை செய்யுமாறு உக்ரஸேன மஹாராஜா கட்டளையிட்டிருப்பதாகக் கூறினார்.

உக்ரஸேனர் கட்டளையிட்டிருப்பதாகக் கூறியதைக் கேட்டதும் பாஹ்லீகன், துர்யோதனன் முதலான அனைவரும் பெரும் கோபம் கொண்டனர்.  "பலபத்ரரே! என்ன சொன்னீர்? குரு வம்சத்துப் பேரரசர்களான நாங்கள் எங்கே, கொஞ்சமும் ராஜ்யபாலனம் செய்யத்தகுதி இல்லாத யாதவ வம்சத்து உக்ரஸேனன் எங்கே?  இதை விட எங்களுக்கு வேறு என்ன வெட்கக் கேடு வேண்டும்.  இந்தக் குடை, விசிறி முதலான அரச சின்னங்கள் இனி எங்களுக்கு எதற்கு?  எங்களை வணங்கிப் பிழைத்துக் கொண்டிருந்த யாதவர்கள் எங்களுக்கு உத்தரவிடுவதா?  வேலைக்காரன் யஜமானனுக்கு உத்தரவிடுவது போலானது.  இது உங்கள் குற்றமில்லை.  உங்களுக்கு இந்த மரியாதைகளைத் தந்து அரசர்களாக்கியது எங்கள் குற்றமே.  நாங்கள் அன்பாகக் கொடுத்ததை நீங்கள் அன்பாகப் பார்க்கவில்லை.  இப்போது உங்களுக்குச் செய்த மரியாதைகளும் அன்புப் பரிமாற்றமே.  நீங்கள் இங்கே இருந்தாலும் சரி, போனாலும் சரி.  சாம்பனை நாங்கள் விடப் போவதில்லை"  என்று கூறி விட்டனர்.

உடனே பலராமர் "இந்த்ரனும் அமராத ஸுதர்மா என்ற தேவஸபையில் வீற்று அரசு புரியும் உக்ரஸேனன் எங்கே, பல அரசர்கள் அமர்ந்து அரசாட்சி புரிந்த எச்சில் பீடங்களில் அமர்ந்து அரசு புரியும் நீங்கள் எங்கே? உங்களுக்கு ஏனிந்த கர்வம்? உக்ரஸேனரின் வேலைக்காரர்களின் மனைவிகள் கூட தேவபுஷ்பமான பாரிஜாதத்தையன்றோ சூடிக் கொண்டிருக்கின்றனர்.  இனி உங்களுக்கும் உக்ரஸேனரே அரசர்.  நானே உங்களனைவரையும் கொன்று வம்சமே இல்லாமல் செய்வேன்.  அல்லது உங்களனைவரோடும் சேர்த்து இந்த ஹஸ்தினாபுரத்தை கங்கையில் மூழ்கடிப்பேன்" என்று கூறித் தன் கலப்பையால் ஹஸ்தினாபுரத்தை அழிக்கத் தொடங்கினார்.
பலராமரின் இந்த கோபத்தைக் கண்டு பெரிதும் பயந்த கௌரவர்கள் உடனே அவரைப் பணிந்து சாம்பனையும், அவன் பத்னியையும் சீர்வரிசைகளோடும், காணிக்கைகளோடும் அவரிடம் சேர்ப்பித்தனர்.  பலராமரும் அவர்களை மன்னித்து தம்பதிகளை ஏற்றுக் கொண்டு திரும்பினார்.  இதனால் இன்றும் ஹஸ்தினாபுரம் சற்று சாய்ந்தே இருக்கிறது.  இப்படிப் பல திருவிளையாடல்களைப் பலராமர் செய்தார் என்று மைத்ரேயரிடம் பராசரர் கூறி முடித்தார்.