Friday, November 29, 2013

வாமன புராணம் - 25

வாமன புராணம் - 25

பகவத்பக்தியும், மோக்ஷமும்: பாதாளத்தில் மீண்டும் மோகங்களில் ஆழ்ந்து பகவானை மஹாபலி மறந்த போது விஷ்ணுவின் சுதர்சனம் அவன் முன் தோன்றி அவனுக்கு மோக்ஷ மார்க்கத்தை நினைவுபடுத்தியது.  உடனே தெளிந்த அவனும் ப்ரஹ்லாதரை நினைக்க, அவரும் தீர்த்தயாத்ரையை முடித்துக் கொண்டு அவன் முன் தோன்றினார்.  கரையேற வழி கேட்டுப் பணிந்த பலிக்கு, ப்ரஹ்லாதர் ஹிதோபதேசம் செய்யலானார். "பகவத்பக்தியை விட மோக்ஷ ஸாதனம் வேறில்லை.  பலமுறை பகவந்நாமங்களைக் கூறுபவனே நாவு படைத்தவன்.  அவனை ஆராதிக்கும் கரங்களே கரங்கள்.  விஷ்ணு சரிதங்களை விரும்பிக் கேட்கும் செவிகளே செவிகள்.  தினம் காலையில் எழுந்தவுடன் எவன் உள்ளத்தில் விஷ்ணுவின் பாதங்களும், நாவில் அவர் திருநாமங்களும் உள்ளதோ, அவனருகில் எமனும் வர அஞ்சுவான். 

பக்தியில்லாதோர் இருந்தும் இறந்தவரே. அவர்கள் செய்யும் கர்மங்களனைத்தும் வீணே. கடலின் ரத்னங்களைக் கூட கணக்கிட்டு விடலாம்.  ஆனால் விஷ்ணுவின் கல்யாண குணங்கள் கணக்கிலடங்கா.  மனஸ், வாக்கு, காயம் என்ற த்ரிகரணங்களையும் புருஷோத்தமனிடம் அர்ப்பிப்பவனுக்கு ஸம்ஸாரத்தில் பயமில்லை.  பகவத் சரிதமெனும் அம்ருதத்தை அருந்துபவனுக்குத் தாய்ப்பாலும் தேவையில்லை.  அவனுக்கு தோல்வியில்லை, ரோகமில்லை.  மூன்று ஸந்த்யா காலங்களிலும் பகவத் த்யானம் செய்வோர் உபவாஸ பலனை அடைவர்.  அவனை நினைத்து எந்த கார்யத்தையும் துவங்கி, அவனுக்கே அதை ஸமர்ப்பிப்போர் ஸம்ஸார ஸாகரத்தைத் தாண்டுவர்.  த்யானம், ஸ்மரணம், நாம ஸங்கீர்த்தனம், சரித ச்ரவணம் இவைகளை விட உயர்ந்த தர்மமில்லை.  ஸாளக்ராமமும், ப்ராஹ்மணர்களும் விஷ்ணுவின் ப்ரியமான ஸ்தலங்கள்.  ஆதலால் ப்ராஹ்மணன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் அவனை அவமதிக்காதே.

தானங்கள்: பகவானை நினைத்து ஸத் பாத்ரத்திற்கு கோ, பூமி, வஸ்த்ரம், அன்னம், ஸ்வர்ணம் இவைகளைக் கொடுப்பது சிறந்தது.  மாசி மாதத்தில் தில தானமும், விறகும், பங்குனியில் தான்யம், க்ருஷ்ணாஜினம், வஸ்த்ரம், சித்திரையில் விசித்ர வஸ்த்ரம், படுக்கை, ஆஸனம், வைகாசியில் வாஸனை த்ரவ்யங்கள், தீர்த்தபாத்ரம், விசிறி, ஆனியில் உப்பு, நெல்லி, குடை, செருப்பு, ஆடியில் வெல்லம், ரிஷபம், ஆவணியில் பாயஸம், தேன், தயிர், புரட்டாசியில் தாமிரம்,இரும்பு, ஐப்பசியில் வீடு, குதிரை, கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் அவரவர்க்கு ப்ரியமானவைகளையும் தானம் செய்தால் பரமாத்மா சந்தோஷமடைகிறார்.  இறைவனுக்கு ஆலயம் கட்டுவதும், ஆலயத்தை சுத்தம் செய்தலும், கொடிமரம், வாஹனங்கள் முதலியவைகளை அவனுக்கு ஸமர்ப்பிப்பதும் உத்தம தர்மங்கள்" என்று ப்ரஹ்லாதர் பலிக்கு உபதேசித்தார்.

அவனும், விந்த்யாவளியோடு சேர்ந்து சந்தோஷத்துடன் அவ்வாறே பல தானங்களைச் செய்தான்.  பாதாளத்தில் விஷ்ணுவுக்கு ஒரு ஆலயத்தை எழுப்பி தினமும் அவரை அர்ச்சித்து வந்தான். இப்படி பகவத் பக்தியில் ஈடுபடுவோரும், இந்த வாமன சரிதத்தை பக்தியோடு படிப்போரும், கேட்போரும், பிறருக்குக் கூறுவோரும், தன் சக்திக்குத் தகுந்தபடி பௌராணிகரைப் பூஜிப்போரும் வைகுண்டத்தில் வசிப்பர்" என்று புலஸ்த்யர் நாரதருக்கு உரைத்தார்.  நாரதரும் அந்தரங்க பக்தியோடு பகவானைப் பாடிக் கொண்டு சென்றார்.

வாமன புராணம் - 24

வாமன புராணம் - 24

ப்ரஹ்லாதர் யாத்ரைக்குப் புறப்பட்டபின், மஹாபலி தன் தர்மபத்னி விந்த்யாவளியோடு குருக்ஷேத்ரத்தில் அச்வமேத யாகத்திற்கான தீக்ஷை செய்து கொண்டு யாக கார்யங்களை ஆரம்பிக்கலானான்.  சுக்ரர் அழைப்பை ஏற்று பார்க்கவ ரிஷிகள் யாகத்தில் கலந்து கொண்டனர்.  அத்ரி, கௌதம, ஆங்கிரஸ, கௌசிக வழித்தோன்றல்கள் அதையேற்க மறுத்து குருக்ஷேத்ரத்தை விட்டு வெளிச்சென்றனர். யாகத்தின் அங்கமாக தாரகாக்ஷன் என்பவன் துணையோடு யாக குதிரையும் புறப்பட்டுச் சென்றது.  மூன்று மாதங்களானதும், தேவர்களைக் காப்பதற்காக மஹாவிஷ்ணுவும் அதிதிக்கும், காச்யபருக்கும் வாமனராகத் தோன்றினார்.  ப்ரஹ்மதேவர் கூறியபடி பரத்வாஜர் குழந்தைக்கு ஜாதகர்மா, யக்ஞோபவீத கர்மாக்களை செய்து வைத்து, வேதங்களையும் ஓதுவித்தார்.  பரத்வாதரிடமிருந்து ஒரே மாதத்தில் வேதங்களைக் கற்றுக் கொண்டார்.  ரிஷிகளோடு சேர்ந்து பலியின் யாகசாலையை நோக்கிப் புறப்படலானார். அப்போது பரத்வாஜர் மஹாவிஷ்ணுவின் சான்னித்யம் இருக்கும் இடங்களை அருள வேண்டுமென்று வாமனரிடம் கேட்டார்.

தெய்வ சான்னித்யம்:  பகவான் "ப்ரஹ்மன் முதல் தோன்றி உலகங்களிலுள்ள அசையாப் பொருள் வரை தன் சான்னித்யம் எதிலுமுள்ளது.  எனினும் விசேஷமானவைகளைக் கூறுகிறேன். மானஸ ஸரோவரில் மத்ஸ்யமாகவும், கௌசிகியில் கூர்மமாகவும், க்ருஷ்ணையில் ஹயக்ரீவராகவும், ஹஸ்தினாபுரத்தில் கோவிந்தனாகவும், யமுனையில் த்ரிவிக்ரமனாகவும், பதரியில் நாராயணனாகவும், பத்ரகர்ணத்தில் ஜயேசனாகவும், வராஹத்தில் கருடத்வஜனாகவும், மணிமதியில் சம்புவாகவும், ஹிமாசலத்தில் சூலபாணியாகவும், சக்ரதீர்த்தத்தில் அர்த்தநாரீச்வரனாகவும், குமாரதாரையில் ஸுப்ரஹ்மண்யனாகவும், மாஹிஷ்மதியில் த்ரிநேத்ரனாகவும், ஸப்தகோதாவரத்தில் ஹடகேச்வரனாகவும், ஸிம்ஹத்வீபத்தில் உபேந்த்ரனாகவும், பாதாளத்தில் கபிலராகவும், பூலோகத்தில் கோகனதேசனாகவும், புவர்லோகத்தில் கருடனாகவும், ஸுவர்லோகத்தில் விஷ்ணுவாகவும், மஹர்லோகத்தில் அகஸ்த்யராகவும், ஜநலோகத்தில் கபிலராகவும், தபோலோகத்தில் வேதமாகவும், ஸத்யலோகத்தில் ப்ரஹ்மாவாகவும், ஜம்பூ த்வீபத்தில் நான்கு கைகளோடும், குசத்வீபத்தில் குசேசயனாகவும், ப்லக்ஷ த்வீபத்தில் கருட வாஹனத்தோடும், க்ரௌஞ்ச த்வீபத்தில் பத்மநாபனாகவும், சால்மல த்வீபத்தில் வ்ருஷப த்வஜனாகவும், சாக த்வீபத்தில் ஸஹஸ்ராக்ஷங்களோடும், புஷ்கர த்வீபத்தில் வாமனனாகவும் இருக்கிறேன்" என்றார்.

புவனம் முழுதும் கிடுகிடுவென ஆடுவதைக் கண்ட மஹாபலியிடம் சுக்ராச்சார்யார் வாமனரின் வருகையைக் கூறி, அவருக்கு உபசாரமான வார்த்தைகளைக் கூறி அனுப்பி விட வேண்டுமேயல்லாது ஒரு புல்லைக் கூட அவருக்குத் தானமாக அளித்து விடக்கூடாது என்றும், அப்படி ஏதாவது செய்து விட்டால், அதைப் பற்றியே அவர் பலியின் ராஜ்யம் முழுதையும் அபஹரித்து தேவர்க்கு அளித்து விடுவார் என்றும் எச்சரித்தார்.  ஆனால் பலியோ, யாகத்தில் எவர்க்கும் இஷ்டமானதை அளிப்பதே தன் குணமாதலால் அதை மாற்ற இயலாது என்று கூறி, அதற்கு உதாரணமாக பின் வரும் கதையையும் சொன்னான்.

"முத்கல ரிஷியின் புத்ரனான கோசகாரனுக்கும், வாத்ஸ்யாயனரின் புத்ரியான தர்மிஷ்டைக்கும் இல்லற தர்மத்தில் ஒரு குழந்தை பிறந்தது.  ஆனால், அது ஆறு நாட்களாகியும் சிறிதும் அசைவின்றி இருந்ததைக் கண்ட தர்மிஷ்டை மிகவும் மனம் நொந்து அதை எறிந்து விட்டாள். சூர்ப்பாக்ஷி எனும் ராக்ஷஸி அந்தக் குழந்தையைக் கண்டதும், இளைப்பாய் இருந்த தன் குழந்தையை அங்கு விட்டு விட்டு கோசகாரனின் குழந்தையை எடுத்துச் சென்றாள். சாலோதரம் எனும் ப்ரதேசத்திலிருந்த கடோதரன் எனும் தன் குருட்டுக் கணவனிடம் அந்தக் குழந்தையைக் கொடுத்து அதை புஜிக்கலாம் என்று சொன்னாள்.  குழந்தையைத் தடவிப் பார்த்த அவன் "இது யாரோ ரிஷி புத்ரன் போலத் தெரிகிறது.  நம்மை இது சபித்து விடும்" என்று கூறி வேறு குழந்தையைக் கொண்டு வரும்படி கூறினான்.  அவள் மீண்டும் தன் குழந்தையையே எடுத்து வரச் சென்ற போது, கோசகாரர் அழுது கொண்டிருந்த அந்தக் குழந்தையைச் சுற்றி மந்த்ரங்களால் ரக்ஷை செய்திருந்தார்.  ராக்ஷஸியால் அதனருகில் செல்ல முடியாது, ரிஷி புத்ரனையும் அங்கேயே விட்டு விட்டு்ச் சென்றாள்.

சிறிது நேரத்தில் வெளியே வந்த கோசகாரர் இரு குழந்தைகளையும் எடுத்துச் சென்று தன் குழந்தைக்கு நிசாகரனென்றும், ராக்ஷஸக் குழந்தைக்கு திவாகரனென்றும் பெயரிட்டு, கபிலைப் பசுவின் பால் கொடுத்து வளர்த்து வரலானார்.  ஏழு வயதில் உபநயனம் செய்வித்து வேதம் ஓதுவித்தார்.  நிசாகரன் அப்பொழுதும் எதுவும் பேசாமலிருந்ததைக் கண்ட கோசகாரர் அவனை ஒரு கிணற்றில் தள்ளி மூடிவிட்டார்.  பத்தாண்டுகள் அங்கேயே நிசாகரன் அதிலிருந்த ஒரு நெல்லிமரத்தின் கனிகளை மட்டுமே உண்டு ஜீவித்திருந்தான்.  ஒரு நாள் அங்கு வந்த தர்மிஷ்டை யார் இந்தக் கிணற்றை மூடியது? என்று தனக்குத் தானே பேசிக் கொண்டாள்.  நிசாகரன் அப்போது வாய் திறந்து "தாயே! நானே உங்கள் குழந்தை" என்றான். அவள் "எங்கள் குழந்தை பேசாது.  எனவே தான் நாங்கள் அவனை விரட்டி விட்டோம், நீ யார்?" என்று கேட்க, நிசாகரன் தானெ அவர்கள் புத்ரன் என்று பதில் கூற, அவள் குழந்தையை கிணற்றிலிருந்து வெளியேற்று, பதியிடம் அழைத்துச் சென்று, "இதுவரை பேசாமலிருந்த நீ, இப்போது பேசக் காரணம் என்ன?" என்று கேட்க, நிசாகரன் தன் சரிதத்தைக் கீழ் கண்டவாறு கூறுகிறான்.

"முன்பு வ்ருஷாகபி என்ற தேவனுக்கும், மாலா என்பவளுக்கும் மகனாகப் பிறந்து, கலைகள் பல கற்றும், காமம், களவு போன்ற துராசாரங்களைக் கைக்கொண்டதால் பல நரகங்களை அனுபவித்து, ஒரு புலியாகப் பிறந்தேன்.  அரசனின் காட்சிசாலையில் அடைத்து வைத்திருந்த போது, அரசனில்லாத சமயத்தில் அவன் மனைவி அஜிதா என்பவளிடம் இச்சை கொண்டு, அவளைப் பேச்சால் மயக்கினேன், அவளும் என்னைக் கூண்டிலிருந்து திறந்து விட்டு, என்னோடு இன்புற்றிருந்த போது, காவலர்கள் புலி ராணியைத் தாக்குகிறது என்றெண்ணி, என்னைக் கொன்று விட்டார்கள்.  பல நரக வேதனைகளை மீண்டும் அனுபவித்து, அக்னிவேச்யர் என்ற அந்தணரிடம் கழுதையாகப் பிறந்து, அவர் மனைவி விமதி என்பவள் மேல் மீண்டும் ஆசை கொண்டு பாய்ந்தேன்.  அவர் சீடர்கள் என்னை அடித்துக் கொன்று விட்டனர்.  மீண்டும் பல நரகங்களை அனுபவித்து, சந்த்ராவளி என்ற வைச்யக் கன்யகையிடம் கிளியாக அன்போடு வளர்ந்த போது, அவள் மேல் மோஹிக்க, அவள் என்னைத் விரட்டி விட்டாள்.  அப்போது ஒரு குரங்கின் கையில் அகப்பட்டு இறந்தேன்.  அதன் பின் ஒரு சண்டாளன் வீட்டில் காளையாகப் பிறந்த போது அவன் மனைவி மேல் மோஹங்கொண்டு, அவன் கையில் அடிபட்டு இறந்து, இப்போது உங்கள் மகனாகப் பிறந்துள்ளேன்.  இனி இந்த வலையில் அகப்படக்கூடாது என்றெண்ணியே நான் பேசாமலிருந்தேன்.  கிணற்றில் இருந்த போது பரமனை நினைத்துத் தவம் புரிந்தேன்.  இனி பூர்வ ஜன்ம வாசனை வராதென்ற நம்பிக்கையிலேயே பேச ஆரம்பித்தேன்.  நான் இனி வெளியே சென்று பெரியோர்களை அணுகி, பேரின்பம் அடைய ஆசைப் படுகிறேன். நீங்கள் திவாகரனைக் கொண்டு புத்ரனால் கிடைக்கும் இன்பங்களை அடையுங்கள், நான் பத்ரிகாச்ரமம் செல்கிறேன்" என்று கூறி அவர்களைப் பணிந்து சென்றான்.

இந்தக் கதையை சுக்ரருக்கு உரைத்த மஹாபலி அதேபோல் தனக்கும் தன் முன் பிறவிகளால் இந்த தானங்களில் இஷ்டம் இருக்கிறது போலும் என்று கூறினான்.  அதே போல் வந்த வாமனருக்கும் தானம் அளிக்க, அவர் தன் இரண்டடிகளாலேயே அனைத்து உலகங்களையும் அளந்து கொண்டு, மூன்றாவதடிக்கு இடம் கேட்டார்.  பலியின் புத்ரன் பாணன் "புவனத்தை ஏன் இப்படிச் சிறியதாகப் படைத்தீர்கள்.  பெரிதாகச் செய்திருந்தால் வேண்டிய அளவு எடுத்துக் கொண்டிருக்கலாம் அல்லவா?" என்று கேட்க, அவர் சிரித்துக் கொண்டே தான் நினைத்திருந்தால் ஒரே அடியில் அனைத்துலகங்களையும் அளந்திருக்க முடியும் என்றும், பலியின் மீது கருணை கொண்டே அவ்வாறு செய்யவில்லை என்றும் கூறினார்.  பின்னர் தன் மூன்றாவதடியால் பலியைப் பாதாளத்துக்கனுப்பிய வாமனர் முறைதவறிச் செய்யப்படும் நற்கார்யங்களின் பலனை ஆஹாரமாகக் கொள்ளுமாறு கூறி, அவன் பெயரால் தீபப்ரதானம் எனும் பண்டிகையும் இனி கொண்டாடப்படும் என்று அருளினார்.  அதையே நாம் கார்த்திகையாகக் கொண்டாடுகிறோம்.

வாமன புராணம் - 23

வாமன புராணம் - 23

ப்ரஹ்லாதன் இராவதி நதி, குருக்ஷேத்ரம், தேவிகா தீர்த்தம், கோகர்ண தீர்த்தம், ப்ராசி தீர்த்தம் என்று பல தீர்த்தக்ஷேத்ரங்களை இறைவனைத் தர்சித்துக் கொண்டு வரும் போது மது தீர்த்தத்தினருகே சூலபாணியாக விஷ்ணுவையும், சக்ரபாணியாக பரமேச்வரனையும் கண்டான்".  இவ்வாறு புலஸ்த்யர் கூறியதும் நாரதர் வியந்து அதற்கான காரணத்தைக் கேட்டார். புலஸ்த்யர் "ஜலோத்பலன் எனும் அரக்கன் தேவர்களைப் பீடித்துத் துன்புறுத்திக் கொண்டிருந்தான்.  தேவர்களைக் காக்க சக்ரபாணியாக பரமேச்வரனும், சூலபாணியாக மஹாவிஷ்ணுவும் தோன்றி ஜலத்தில் மறைந்திருந்த அவனை அடித்துக் கொன்றனர்.

வீதமன்யு, தர்மசீலை என்ற உத்தம ப்ராஹ்மண தம்பதியருக்கு உபமன்யு என்று ஒரு குழந்தை பிறந்தது.  அவர்கள் பொருளாசையை விட்டு தேவபூஜையில் ஈடுபட்டிருந்ததால் வறுமையின் காரணமாகக் குழந்தைக்கு மாவையே பாலாகக் கரைத்துக் கொடுத்து வளர்த்து வந்தனர்.  இடையில் ஒரு நாள் அதிதிகளாக வேறொருவர் இல்லத்திற்குச் சென்றிருந்தபோது அங்கு உண்மையான பாலைக் குடித்து ருசி கண்ட குழந்தை, அதன் பின் மாவில் கரைத்த பாலைக் குடிக்க மறுத்து அழுதது.  குழந்தையைப் பலவாறு தேற்றியும் கேளாததால் தர்மசீலை "பசுபதியின் அருளின்றி நமக்குப் பால் கிடைக்குமா? அவரைப் பூஜித்தால் பால் என்ன, அம்ருதமே கிடைக்கும்" என்று கூற, அதைக் கேட்ட குழந்தை "பசுபதி யார், அவர் எங்கிருக்கிறார்? அவரை எப்படி பூஜிப்பது?" என்றெல்லாம் கேட்க ஆரம்பித்தது.  தர்மசீலை உடனே குழந்தைக்குக் கீழே வரும் கதையைக் கூறினாள்.

மஹாவிஷ்ணு சுதர்சனம் பெற்றது: ஸ்ரீதாமன் என்ற ஒரு அரக்கன் மஹாவிஷ்ணுவின் ஸ்ரீவத்ஸத்தைக் கொள்ளையடிக்கக் கருதினான்.  இதையறிந்த மஹாவிஷ்ணு இமயமலை சென்று ஆயிரமாண்டுகள் ஒற்றைக்காலில் நின்று தவம் புரிந்தார்.  அப்போது ருத்ரன் அவரெதிரில் தோன்றி அவருக்கு பனிரெண்டு மாதங்களையும், ஆறு ருதுக்களையும் ஆரக்கால்களாகக் கொண்ட சுதர்சன சக்ரத்தை, பக்தர்களைக் காத்து, துஷ்டர்களை அழிப்பதற்காக அளித்தார்.  மஹாவிஷ்ணு அந்த ஆயுதத்தைப் பரீக்ஷை செய்து பார்க்க நினைக்க, மஹேச்வரன் தன் மீதே அதை பரீக்ஷித்து பார்க்குமாறு கூறினார்.  மஹாவிஷ்ணு அதை பரமேச்வரன் மேல் ப்ரயோகிக்க, அவருடல் மூன்றாகப் பிளந்தது.  அதைக் கண்டதும் மஹாவிஷ்ணு தன் தவறைப் பொறுத்து, மன்னிக்குமாறு ஈசனை வேண்டினார்.  பரமேச்வரன் சிரித்து தனக்கு என்றும் அழிவில்லை என்றும், ஸுவர்ணாக்ஷன், விச்வரூபாக்ஷன், யஞ்க்யேசன் என்ற தனது மூன்று ரூபங்கள் தோன்றவே மஹாவிஷ்ணுவுக்கு அப்படி ஒரு எண்ணம் உதித்ததாகக் கூறி, ஸ்ரீதாமனை சுதர்சனத்தால் கொல்லுமாறு கூறினார்.  மஹாவிஷ்ணுவும் அப்படியே செய்து பாற்கடலுக்குத் திரும்பினார்.  இந்தக் கதையைக் கேட்ட உபமன்யு தானும் அவ்வாறே பரமேச்வரனைப் பூஜித்து மோக்ஷத்தை அடைந்தான்.

கஜேந்த்ர மோக்ஷமும், துஸ்வப்ன நாசமும்: அதன்பின் ப்ரஹ்லாதர் கஜேந்த்ரன் மோக்ஷமடைந்த த்ரிகூட பர்வதத்தை அடைந்தார்.  ஸுமேரு மலையின் மகனான த்ரிகூட பர்வதத்தின் ஒரு ஸரஸ்ஸில் ஹூஹூ என்ற கந்தர்வன் முதலையாக வசித்து வந்தான்.  அங்கு தீர்த்தமாட வந்த கஜேந்த்ரனை அவன் காலைப் பிடித்து நீருக்குள் இழுத்தான்.  ஆயிரமாண்டுகள் முயற்சித்துத் தளர்ந்து, களைத்த யானை நாராயணனைத் துதித்தது.  மஹாவிஷ்ணுவும் அங்கு உடனே தோன்றி அந்த முதலையைத் தன் சக்ரத்தால் அறுத்து, கஜேந்த்ரனைக் காப்பாற்றினார். யானையும் அவரைத் துதித்து கந்தர்வனாகிச் சென்றது.  ஹூஹூவும் தேவலர் சாபம் நீங்கி கந்தர்வ லோகம் சென்றான். இந்தக் கதையையும், அரசமரத்தையும், ஸூர்யன், கங்கை, நைமிசாரண்யம் இவைகளையும் ஸ்மரிப்பவர்களுக்கு துஸ்வப்னம் உண்டாகாது.

விஷ்ணு ரக்ஷா மந்த்ரம்: க்ஷத்ரியன் ஒருவன் ஸ்வதர்மத்தை விடுத்து சாதுக்களைத் துன்புறுத்தி வந்தான்.  தன் பாபங்களால் நரகங்களை அனுபவித்த அவன் மறு பிறவியில் ஒரு ராக்ஷஸனாகப் பிறந்தான்.  ஒரு ஸமயம் தவம் செய்து கொண்டிருந்த ஒரு முனிவரைப் புஜிக்க நினைத்தான்.  அவர் மஹாவிஷ்ணுவைத் துதித்துக் கொண்டிருந்ததால் அவனால் அவரருகில் நெருங்க முடியவில்லை.  இதில் ஆச்சர்யமடைந்த அவன் நான்கு மாதங்கள் அவர் சமாதியிலிருந்து வரும் வரைக் காத்திருந்து, அவரை நமஸ்கரித்துத் தனக்கும் உய்வதற்கு அந்த மந்த்ரத்தை உபதேசிக்குமாறு கோரினான்.  அவர் தான் ராக்ஷஸருக்கு உபதேசிப்பதில்லை என்று கூறி, அவனை வேறு தகுந்தவரை வேண்டுமாறு கூறிச் சென்றார்.  அதன் பின் தினம் ஒரே ஒரு ம்ருகத்தை மட்டுமே உண்டு வாழ்ந்து வந்த அவன், ஒரு நாள் மிகுந்த பசியில் இருக்கும் போது ஒரு ப்ரஹ்மசாரியைக் கண்டு, புஜிப்பதற்காக அவனைப் பிடித்துக் கொண்டான்.  அந்த ப்ரஹ்மசாரி தன் குருவுக்குக் கனிகளைக் கொடுத்து, பணிவிடைகளைச் செய்து விட்டு வருவதாகக் கூறி ராக்ஷஸனை வேண்டினான்.  அப்படி விடுவதானால் தன் பாபம் தீர வழியொன்றை உபதேசிக்குமாறு ராக்ஷஸன் அவனை வேண்டினான்.  ப்ரஹ்மசாரியும் தான் உண்மையில் குருவுக்குப் பணிவிடை செய்வதானால் இந்த அரக்கனுக்கு அருள் கிடைக்கட்டும் என்று அக்னியின் சன்னிதியில் வேண்ட, உடனே அங்கு ஸரஸ்வதி தோன்றி அவ்வரக்கனுக்கு விஷ்ணுரக்ஷா மந்த்ரத்தை உபதேசித்தாள்.  அவனும் சாலக்ராம க்ஷேத்ரம் சென்று, விஷ்ணு ரக்ஷா மந்த்ரத்தை ஜபித்து, பாபங்களகன்று ஸ்வர்க்கம் சென்றான்.

Thursday, November 28, 2013

வாமன புராணம் - 22

வாமன புராணம் - 22

ச்ரவண த்வாதசீ வ்ரதமும், புரூரவஸ் சரிதமும்: த்ரிவிக்ரமரைத் தர்சித்து விட்டு அதன் பின்னர் கேதாரம், பத்ரிகாச்ரமம், பத்ரகர்ணம் முதலான பல க்ஷேத்ரங்களைத் தர்சித்துக் கொண்டு, புரூரவஸ்ஸுக்கு சுபிக்ஷங்களை அருளிய ஜகன்னாதரின் இராவதி க்ஷேத்ரத்தை அடைந்தார். த்ரேதாயுகத்தில் மத்ர தேசத்தில் சாகல நகரில் தர்மன் என்று ஒரு வைச்யன் இருந்தான்.  மிகவும் தர்மிஷ்டனான அவன் வ்யாபாரத்திற்காக தன் குழுவினரோடு வெளியே சென்றிருந்தபோது வழியில் காட்டில் திருடர்கள் அவர்களைக் கொன்று பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.  தர்மன் மட்டும் உயிரோடு எஞ்சியிருந்தான்.  தனியாக ஒரு பாலைவனத்தில் நீரின்றி, உணவின்றி, எந்த பொருளும் இன்றி தவித்துக் கொண்டிருந்தான்.  பல காலம் திரிந்த அவன் ஒரு சமீமரத்தைக் கண்டு மிகவும் மகிழ்ந்து அதனடியில் சென்று இளைப்பாறினான்.  அப்போது பல ப்ரேதங்கள் தங்களுக்குள் ஒரு ப்ரேதத்தைத் தலைவனாக பல்லக்கில் வைத்து அந்த மரத்தடிக்குக் கொண்டு வந்து கொண்டிருந்தன.  அவைகளைக் கண்டதும் இவனுக்குப் பசி, தாகம் எல்லாம் போய் பயம் பற்றிக் கொண்டது.  தான் எப்படியும் இவைகளுக்கு உணவாகப் போகிறோம் என்று இவன் நினைத்துக் கொண்டிருக்கும்போதே இவனருகிலேயே அந்த பல்லக்கு இறக்கப்பட்டது.

அந்த ப்ரேதராஜா இவனை வரவேற்று இவனைப் பற்றிய விபரங்களைக் கேட்டறிந்து கொண்டான்.  அவனைத் தங்கள் விருந்தினன் என்று ஆறுதல் கூறி, தன் குழுவிற்குக் கட்டளைகளைப் பிறப்பித்தான்.  உடனே மற்ற ப்ரேதங்களும் அவனிடம் அன்பு கொண்டு அவனுக்கு ஒரு மண் பாத்ரத்தில் நீர் கொடுத்தன.  அவன் அதை அம்ருதமாய் நினைத்து, அதில் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு, அனுஷ்டானங்களைச் செய்து கொண்டான்.  மற்றொரு ப்ரேதம் இன்னொரு மண் பாண்டத்தில் தயிர் சாதம் கொண்டு வந்து அவனுக்குக் கொடுத்தது.  மிகவும் ருசியாய் இருந்த அதை அவன் விரும்பிப் புசித்துத் தன் பசியையும் போக்கிக் கொண்டான்.  அதன் பின் ப்ரேதராஜன் மற்ற ப்ரேதங்களுக்கு வேண்டிய மட்டும் நீர், தயிர் சாதத்தை அந்த மண் பாண்டங்களிலிருந்து கொடுத்து, அதன் பின் தானும் உண்டு முடித்தான்.  அவன் உண்டதும் அந்த சாதமும், நீரும் அங்கிருந்து மறைந்தன.  அதைக் கண்டதும் வியந்த தர்மன் ப்ரேதராஜாவிடம் "ஐயா! தாங்கள் யார்?  இவைகள் யார்? புல், பூண்டுகள் இல்லாத இந்த பாலைவனத்தில் எங்கிருந்து இந்த தயிர் சாதமும், நீரும் தங்களுக்குக் கிடைக்கின்றன?" என்று வினவினான்.

ப்ரேதராஜன் "நான் ஸோமசர்மா என்ற வைச்யன், சாகல நகரத்திலே பெரும் வசதிகளிருந்தும் நானும் எதையும் அனுபவிக்காது, ஒரு தான, தர்மமும் செய்யாது கருமியாக இருந்து வந்தேன்.  விலை குறைந்த கீரை, புண்ணாக்குகளையே புஜித்து வந்த நான், என்றாவது தயிர், பால் என்று விரும்பி உண்டு விட்டால் ஜீர்ணிக்காது, நோய் உண்டாகி விடும்.  அப்போது ஒரு ஸமயம் ச்ரவண த்வாதசீயை முன்னிட்டு ஊரில் எல்லோரும் வ்ரதமிருந்து மறுநாள் வெகுவாக தான, தர்மங்களைச் செய்தனர்.  கருமியான நானும் மனமின்றி, கௌரவத்திற்காக வாழ்நாளிலேயே முதல் தடவையாக அப்போது ஒரு ப்ராஹ்மணனுக்கு தயிர் சாதத்தை மண் பாத்ரத்தில் வைத்துக் கொடுத்து, ஒரு ஜோடி செருப்பும், குடையும் கொடுத்தேன்.  அவர் ஒரு சிறந்த ப்ராஹ்மணர்.  அந்த ச்ரவண த்வாதசி வ்ரதத்தில் நான் கொடுத்த பாதுகையும், தயிர் சாதமும், கொடையுமே இப்படி பல்லக்காகவும், தயிர் சாதமாகவும், இந்த சமீ மரமாகவும் இங்கு கிடைக்கின்றன.  இந்த ப்ரேதங்களும் அப்படி பொருளிருந்தும் தானங்கள் செய்யாமல் இருந்தவைகளே.  நான் உண்டதும் ஒரு பருக்கையும் வராது.  எனவேதான், அனைவரும் உண்டபின் நான் உண்கிறேன்" என்று கூறி தர்மனிடம் தங்களுக்காக ஒரு தடவை கயை சென்று ச்ராத்தம் செய்யுமாறு வேண்டினான்.  தர்மனும் அங்கிருந்து புறப்பட்டு, அவ்வாறே நன்றி மறவாது கயை சென்று அவைகளைக் குறித்து ச்ராத்தம் செய்தான்.  அந்த ப்ரேதங்களும் தங்கள் பாபமகன்று ஸ்வர்க்கம் சேர்ந்தன.

தர்மன் தானும் ச்ரவண த்வாதசீ வ்ரதத்தை அனுஷ்டித்து கந்தர்வ லோகம் சென்றான்.  அங்கு பல போகங்களை அனுபவித்து அடுத்த பிறப்பில் மன்னனாகப் பிறந்தான்.  மீண்டும் அந்த வ்ரதத்தை அனுஷ்டித்து சாகல நகரத்தில் ஒரு அந்தணனாகப் பிறந்தான்.  முற்பிறப்பில் செய்த சில பாபங்களால் இந்த பிறப்பில் அவனுக்கு அழகான உருவம் கிடைக்கவில்லை.  அதனால் அவன் மனைவி அவனிடம் அதிக ப்ரேமை கொள்ளாது இருந்தாள்.  அழகிய உருவத்தை வேண்டி அவன், இராவதீ நதிக்கரையில் நக்ஷத்ர புருஷனாக இறைவனைப் பூஜித்து, மன்மதனாக உருப்பெற்றான்.  அவனே அடுத்த பிறப்பில் சந்த்ர வம்சத்தில் புரூரவஸ் என்ற சக்ரவர்த்தியாகத் தோன்றினான்.

நக்ஷத்ர புருஷ பூஜா: மஹாவிஷ்ணுவின் அவயவங்களில் நக்ஷத்ரங்களை உருவகித்து, எந்த நக்ஷத்ரம் ஒவ்வொரு மாத பௌர்ணமியில் வருகிறதோ, அந்த அவயவத்தை அன்று பூஜித்து, பாரணை செய்வது நக்ஷத்ர புருஷ பூஜா ஆகும். பாதங்கள் மூலம், முழங்கால் ரோஹிணீ, தொடைகள் அச்வினீ, மலவழி பூராடம், ஜலவழி பூரம், இடை க்ருத்திகை, இடை முன்புறம் அனூராதா, இடை பின்புறம் அவிட்டம், தோள்கள் விசாகா, கைகள் ஹஸ்தம், புறங்கை புனர்வஸு, நகங்கள் ஆச்லேஷா, கழுத்து கேட்டை, காதுகள் திருவோணம், உதடுகள் பூரம், பற்கள் ஸ்வாதி, கன்னம் புனர்வஸு, மூக்கு மகம், கண்கள் ம்ருகசீர்ஷம், மயிர்கள் திருவாதிரை.  இந்த பூஜையால் அருந்ததி பெரும் கீர்த்தியையும், ஆதித்யன் புத்ரனையும், ரம்பை அழகையும், திலோத்தமை மதுரமான வாக்கையும், புரூரவஸ் அகண்ட ஸாம்ராஜ்யத்தையும், அழகையும் அடைந்தார்கள்.

வாமன புராணம் - 21

வாமன புராணம் - 21

பலி இந்த்ரனானது: "ஐந்தாவது கலியுகத்தின் ஆரம்பத்தில் ஒரு ஸமயம் மஹாவிஷ்ணுவின் உதவியோடு தேவர்களுக்கும், பலியின் தலைமையில் அஸுரர்களுக்கும் யுத்தம் நடந்தது.  அப்போது அஸுரர் படை பின் வாங்கிய போது காலநேமி என்பவன் தனது நூறு தலைகளோடு யுத்த அரங்கில் புகுந்து கண்ணில் பட்ட தேவர்களையெல்லாம் விழுங்கினான்.  மஹாவிஷ்ணு அவனையெதிர்த்து அவன் தலைகளைக் கொய்து, கைகளை அறுத்து, உதைத்துத் தள்ளிக் கொன்று விட்டு மறைந்தார்.  ஆனால் பலி தேவர்களனைவரையும் துரத்தி விட்டு, பாணனை யமனாகவும், மயனை வருணனாகவும், ராகுவை ஸோமனாகவும், ஸ்வர்ப்பானுவை ஸூர்யனாகவும், சுக்ராச்சார்யாரை ப்ருஹஸ்பதியாகவும் செய்து கொண்டு, தானே அனைத்துலகையும் ஆண்டு வரலானான்.  ப்ரஹ்லாதரை அழைத்துப் பட்டாபிஷேகம் செய்து கொள்ளச் சொன்னான்.  அவர் பகவத்பக்தியில் லயித்து அதை மறுக்க, அவரைத் தன்னருகிலேயே இருந்து தர்மோபதேசங்களைச் செய்து கொண்டு இருக்கச் சொன்னான்.  அப்படியே அவரும் அவனுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார்.

பயந்தோடிய தேவர்கள் மீண்டும் நாராயணரைச் சரணடைய அவர் தேவர்களுக்கு அபயம் அளித்து, அவர்களைக் காக்க அதிதிக்கும், காச்யபருக்கும் வாமனராக அவதரித்தார்.  அப்போது தோன்றிய அபசகுனங்களைக் கண்ட ப்ரஹ்லாதர், இனி நடக்கப்போகின்றவைகளை பலிக்கு எடுத்துக் கூறினார்.  அவன் அவைகளை மதிக்காது மஹாவிஷ்ணுவை நிந்திக்கவே, ப்ரஹ்லாதர் கோபங்கொண்டு ராஜ்யத்தை அவன் இழப்பான் என சபித்து விட்டு தீர்த்த யாத்ரைக்குக் கிளம்பி விட்டார். 

துந்து ஸம்ஹாரம்: மானஸதீர்த்தம், கௌசிகீ, ஹஸ்தினாபுரம் முதலான இடங்களுக்குச் சென்று விட்டு, வந்து கொண்டிருந்த போது யமுனா நதி தீரத்தில் த்ரிவிக்ரமரைத் தர்சித்தார்" என்று புலஸ்த்யர் கூறவும், நாரதர் "இனிதானே பலிக்காக த்ரிவிக்ரம அவதாரம் எடுக்கப் போகிறார்.  இந்த த்ரிவிக்ரம அவதாரம் யாரை சிக்ஷிக்க?" என்று கேட்டார்.  புலஸ்த்யர் "நான்காவது கலியுகத்தின் ஆரம்பத்தில் கச்யபருக்கும், தனுவுக்கும் துந்து என்ற தானவன் ஒருவன் பிறந்தான்.  அவனே அப்போது தேவர்களை விரட்டி விட்டு, இந்த்ரனாக ஆனான்.  ஹிரண்யாக்ஷன் முதலானோர் அவனை அண்டி ஸ்வர்க்க லோகத்தில் வாழ்ந்து வந்தனர்.  ஒரு ஸமயம் துந்து, "ஓடிப்போன தேவர்கள் எங்கு சென்றிருப்பார்கள்" என்று கேட்க, "அவர்கள் ஸத்ய லோகத்திலிருக்கிறார்கள்" என்று அஸுரர்கள் பதிலுரைத்தனர்.  உடனே துந்து நாமும் அங்கு செல்வோம் என்று கிளம்பினான்.  அஸுரர்கள் அவனைத் தடுத்து, "அரசே! நாமங்கு செல்ல முடியாது.  இந்த ஸ்வர்க்க லோகத்திலிருந்து பல்லாயிரம் யோஜனை தூரத்தில் மஹர் லோகமும், அங்கிருந்து பல கோடி யோஜனை தூரத்தில் ஜன லோகமும், அங்கிருந்து முப்பது கோடி யோஜனை தூரத்தில் ஸத்யலோகமும் இருக்கிறது.  மஹர் லோகத்திலிருக்கும் ரிஷிகளும், ஜன லோகத்து கோமாதாக்களும் நம்மை பார்வையாலேயே பஸ்மமாக்கி விடுவர்.  ஸத்ய லோகத்திலோ ஸதா வேதம் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.  அது நம்மை தஹித்து விடும்" என்றனர்.  "அப்படியானால் அவர்கள் மட்டும் அங்கு எப்படி சென்றனர்?" என்று துந்து கேட்க, சுக்ரர் "நூற்றோரு அச்வமேத யாகங்களைச் செய்தவர் அங்கு செல்லலாம்" என்று கூறினார்.

துந்து உடனே தேவகீ நதிதீரத்தில் அஸுரர்களையும், சுக்ரரையும், பார்க்கவரிஷிகளையும் துணையாகக் கொண்டு யாகசாலைகளை அமைத்துக் கொண்டு அச்வமேதங்களைச் செய்யலானான்.  அப்போது அதன் வெப்பம் தாளாத தேவர்கள் மஹாவிஷ்ணுவைச் சரணடைய, அவர்களைக் காப்பதாக இந்த வாமனாவதாரத்தைச் செய்தார்.  தேவகீ நதியில் அவர் அப்போது மூழ்குவது போல மிதந்து வருவதைக் கண்ட வேதியர்கள், அதைக் காப்பாற்றிக் கரையேற்றி, விபரங்களைக் கேட்டனர்.  இந்த்ரனுக்கு ஸஹோதரனாய், கச்யபருக்குப் பிறந்து, பாற்கடலில் சயனித்திருப்பதையே மறைத்து, தான் வருண கோத்ரத்தைச் சேர்ந்த ப்ரபாஸன் என்ற அந்தணரின் இரண்டாவது மகனென்றும், தன் பெயர் கதிபாஸனென்றும், தன் அண்ணன் பெயர் நேத்ரபாஸன் என்றும் வாமனர் கூறினார். தந்தைக்குப் பின் அவர் சொத்தை இருவரும் பிரித்துக் கொள்ளலாம் என்று தான் கூறியதாகவும், நேத்ரபாஸன் "கூனன், குருடன், வாமனன், அலி, பித்தன், குஷ்டரோகி இவர்களுக்குச் சொத்தில் உரிமையில்லை.  அவர்களுக்கு உண்ண உணவும், உடுத்த உடையும் தந்து சொத்தை மற்றவர் பிரித்துக் கொள்வதே முறை" என்று கூறி தன்னைக் கோபித்து இந்த நதியில் தள்ளி விட்டதாகவும் கூறினார்.  எவரும் அவர் மாயையில் லயித்து சொன்னதை நம்பினர்.

வாமனர் அவர்களையும், துந்துவையும் பற்றி கேட்க, அவர்கள் விபரங்களைக் கூறி, துந்துவிடம் வாமனரைப் பூஜிக்குமாறு கூறினர்.  அவனும் அவருக்கு அதிதி பூஜைகளைச் செய்து, வேண்டியதைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறினான்.  "அண்ணனே பிடுங்கிக் கொள்ளும் இந்த செல்வங்கள் எதுவும் எனக்கு வேண்டாம்.  என் காலால் மூன்றடி மண் தந்தாலே போதும்" என்று வாமனர் பதிலுரைக்க, அஸுரனும் அதை அங்கீகரிக்க, த்ரிவிக்ரமராய் இரண்டடிகளில் உலகங்களை அளந்த மூர்த்தி மூன்றாவது அடிக்கு இடமில்லாது, கோபத்தால் துந்துவை மிதித்து, முப்பதாயிரம் அடியில் அவனை பூமியில் புதைத்தழித்து, தேவர்க்கு மீண்டும் ஸ்வர்க்கத்தை அளித்து யமுனையாய் மறைந்தார்" என்று கூறினார்.

வாமன புராணம் - 20

வாமன புராணம் - 20

ஸப்தமருத்துக்கள்: திதி தன் புத்ரர்களனைவரும் தேவர்களால் அழிக்கப்படுவதைக் கண்டு காச்யபரிடம் சென்று தேவர்களைக் கொல்லத்தக்க ஒரு புதல்வனை வேண்டினாள்.  அவரும் ஆயிரமாண்டுகள் தூய்மையாயிருந்தால் அப்படி ஒரு புதல்வன் கிடைப்பான் என்று அருளினார்.  அவளும் அப்படியே ஆயிரமாண்டுகள் தவமிருக்கத் தொடங்கினாள்.  தவத்திற்கு உதவுவதாக பெரியம்மாவிடம் கூறிய தேவேந்த்ரன் அப்படியே அவள் நம்பிக்கையைப் பெற்றான்.  ஒரு ஸமயம் புத்ரசோகத்தால் முழங்காலில் தலையை வைத்துக் கொண்டிருந்த திதி அப்படியே உறங்கி விட, அவள் தலைமயிர் அவிழ்ந்து அவள் காலில் விழுந்தது.  மயிர் காலில் படுவது அசுத்தம் என்பதால் அது தான் ஸமயம் என்று தேவேந்த்ரனும் அவள் மூக்கில் நுழைந்து, அவள் கருவில் இருந்த சிசுவை தன் வஜ்ரத்தால் ஏழு கூறுகளாக அறுத்தான்.  விதி வலியை நினைத்து நொந்த திதியும் தேவேந்த்ரனை சபிக்காத அந்த எழுவரையும் அவன் ஸேனையிலேயே சேர்த்துக் கொள்ளச் சொன்னாள்.  அறுக்கும் போது அவைகள் அழுததால் தேவேந்த்ரன் மாருத (அழாதே) என்று கூறிக் கொண்டே அறுத்தான்.  எனவே இவைகள் ஸப்தமருத்துக்கள் எனப்படுகின்றன.

மன்வந்த்ரங்களின் மருத்துக்கள்: ஸ்வாயம்புவ மனுவின் புத்ரன் ஸவனன் குழந்தைகளின்றி இறந்தான்.  அவன் மனைவி ஸ்வேதா என்பவள் அவன் உடலைத் தராது அழுது கொண்டேயிருந்தாள்.  அப்போது ஒரு அசரீரி தோன்றி புத்ரபாக்யம் வேண்டினால், அவளையும் கணவனோடு சிதையிலேறக் கூறியது.  அப்படியே அவளும் செய்ய, தம்பதிகள் மீண்டும் உயிர்பெற்று, ஆகாயத்திலேயே இன்பத்தை அனுபவித்தனர்.  அரசன் வீர்யம் அப்போது பூமியில் ஒரு தாமரையிதழில் விழுந்தது.  ஸ்நானஞ்செய்ய வந்த ஏழு முனி பத்னிகள் அதைப் பற்றி தங்கள் பதிகளிடம் கேட்க, தேவ ரஹஸ்யமறிந்த அவர்கள் அதைப் பருகச் சொல்ல, பத்னிகளும் அப்படியே செய்தனர்.  உடனே அவர்கள் ப்ரஹ்மதேஜஸ் அவர்களை விட்டு அகன்றது.  அவர்களுக்குப் பிறந்த எழுவரே ஸ்வாயம்புவ மன்வந்த்ரத்திற்கு மருத்துக்கள்.

ஸ்வாரோசிஷ மனுவின் புத்ரரான ரிதத்வஜருக்கு ஏழு குழந்தைகள்.  அவர்கள் இந்த்ரபதவிக்கு ஆசைப்பட்டு தவம் செய்யும் போது, இந்த்ரனாணையால் பூதனை எனும் அப்ஸரஸ் அவர்கள் குளிக்கும் போது அவர்கள் மனதைக் கெடுக்க, அவர்கள் வீர்யம் வெளிப்பட்டது.  அதனை சங்கினீ எனும் மீன் விழுங்கியது.  மீனவர்கள் அதனைப் பிடித்து அரசர்களான அவர்களிடமே கொடுக்க, அது ஏழு குழந்தைகளைப் பெற்று விட்டு, உடலை விட்டு தேவலோகம் சென்றது.  அழுது கொண்டிருந்த குழந்தைகளை ப்ரஹ்மன் மருத்துக்களாக்கினார்.

உத்தம மன்வந்த்ரத்தில் த்ருவனுடைய வம்சத்தில் தோன்றிய வபுஷ்மானுக்கு ஜ்யோதிர்மானெனும் புதல்வனிருந்தான்.  புத்ரபாக்யத்திற்காக மனைவியோடு வனத்தில் தவம் புரிந்து கொண்டிருந்த அவனை ஸப்தரிஷிக்கள் ஆசிர்வதித்து ராஜ்யத்திற்கு அனுப்பினர்.  மனைவி கர்ப்பவதியாயிருக்கும் போதே அவன் காலம் முடிந்தது.  அவனோடு அவன் பத்னியும் சிதையிலேற, மழை பொழிந்து நெருப்பு அணைந்தது.  அவர்களுக்கு தோன்றிய ஏழு குழந்தைகளே அந்த மன்வந்த்ரத்திற்கு மருத்துக்கள்.

தாமஸ மனுவின் புதல்வரான தந்தத்வஜர் குழந்தைப்பேறு வேண்டி தன்னுடலை அறுத்து ஹோமஞ்செய்யலானார்.  அவருடைய ஏழு தாதுக்களும் ஏழு மருத்துக்களாயின.

ரைவதமனுவின் புத்ரனான சத்ருஜித் ஸூர்யனைப் பூஜித்து வந்தார்.  ஸுரதி என்ற கன்யகையை அவனுக்களித்த ஸூர்யன் அவள் மூலமாக அவன் ஸந்ததி வளருமென்று ஆசிர்வதித்தார்.  ஆனால் அதற்குள்ளாகவே அவன் இறந்து போக, ஸுரதியும் அவனோடு உயிர் நீத்தாள்.  அவள் அழகில் மயங்கிய ஸப்தரிஷிகள் ஏழு குழந்தைகளை மருத்துக்களாகப் படைத்தனர்.

சாக்ஷுஷ மனுவின் தனயரான மங்கி என்பவர் ஸப்தஸாரஸ்வதத்தில் தவம் செய்து கொண்டிருந்தபோது துஷிதை எனும் தேவலோகத்துப் பெண்ணால் அவர் வீர்யம் நழுவி மருத்துக்களாயிற்று.

இந்த மருத்துக்களின் சரிதங்களைக் கேட்பவர்களது பாபமகன்று தர்மம் செழிக்கும்.

Wednesday, November 27, 2013

வாமன புராணம் - 19

வாமன புராணம் - 19

நளன் பிறப்பு:வானரமாய்த் திரிந்து கொண்டிருந்த விச்வகர்மாவைக் கண்டதும் ஜாபாலி தன்னைக் கட்டிய குரங்கு அது தான் என்று ரிதத்வஜரிடம் கூறினான்.  இதைக் கேட்டதும் சகுனி அதைக் கொன்று விடுவதற்கு மஹரிஷியிடம் உத்தரவு கேட்டான்.  ஆனால் ரிதத்வஜரோ "சகுனியே! இக்குரங்கு ஒரு நிமித்தம் மட்டுமே.  அவரவர் செய்த வினைகளன்றோ அவர்கள் படும் இன்ப, துன்பங்களுக்குக் காரணமாகும். இதைத் தண்டிப்பதால் ஜாபாலியின் துன்பம் இல்லையென்றாகிவிடுமா?" என்று தடுத்து, அந்தக் குரங்கிடமே அதன் கட்டை அவிழ்த்து விடுமாறு கூறினார்.  அதுவும் அப்படியே ஜாபாலியைக் கிளையிலிருந்து விடுவித்தது.  மனம் மகிழ்ந்த ரிஷி அதனை வேண்டிய வரத்தைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளுமாறு கூறினார்.  விச்வகர்மா தன் ஸ்வரூபத்தை மீண்டும் வேண்டினான்.  மஹர்ஷி அவனை, க்ருதாசீயுடன் கூடி ஒரு புத்ரனைப் பெற்றுக் கொள்ளுமாறும், அதன் பின் அவன் தன் பழைய உருவத்தைப் பெறுவான் என்றும் ஆசிர்வதித்தார்.  நளன் பிறந்தான். 

விச்வகர்மாவிடம் மஹரிஷி மற்ற மூன்று பெண்களின் தந்தைகளையும், காலவரையும் அழைத்து வருமாறு பணித்தார்.  அனைவரும் சேர்ந்து ஸப்தகோதாவரத்தில் குளித்து, ஹடகேச்வரரைப் பூஜித்தனர்.  சித்ராங்கதை ஸுரதனையும், தேவவதி ஜாபாலியையும், வேதவதியை இந்த்ரத்யும்னனும், தமயந்தி சகுனியையும் மணந்தனர்.  ஒரு மாத காலம் ஹடகேச்வரரைப் பூஜித்து, இருப்பிடம் சென்றனர்." என்று கதையை முடித்த தண்டன் அப்படியே தன்னை மணந்து சுகம் பெறுமாறு வ்ரஜையைக் கோரினான்.  அவள் தந்தை உத்தரவின்றி மணக்க மறுக்கவே, தண்டன் அவளை பலாத்காரம் செய்தான்.  அவன் சென்ற பின் அங்கு வந்த சுக்ரர் அழுது கொண்டிருந்த தன் பெண்ணிடம் விபரங்களை அறிந்தார்.  கடுங்கோபம் கொண்டு "இன்னும் ஏழே நாளில் தண்டன் தன் ராஜ்யத்துடனும், பரிவாரங்களுடனும் சாம்பலாவான்" என்று சபித்து விட்டு, பெண்ணையும் பாபமகலும் வரை அங்கேயே தவம் செய்யுமாறு கூறிவிட்டு, பாதாளம் சென்றார்.  இன்றும் எவரையும் எச்சரிக்கும் வகையில் இருக்கும் அந்த இடம் தண்டகாரண்யமே.  சாமான்ய பெண்ணை விரும்பியவனுக்கே இந்த கதி, நீயோ ஜகன்மாதாவையே விரும்புகிறாய்" என்று கூறி ப்ரஹ்லாதன் அந்தகனுக்கு உரைத்தார்.

அந்தகன் அழிவு:  விதி வலியால் ப்ரஹ்லாதர் கூறிய எதுவும் அந்தகன் காதுகளில் ஏறவில்லை.  அவர் ஹஸிதர், அகஸ்த்யர், மனு, விபு, நமுசி, ஹிரண்யாக்ஷன் என மேலும் பலரைப் பற்றிக் கூறி, தர்மத்தை கைக்கொள்ளுமாறு கூறினார்.  அவன் "உங்கள் தர்மம் உங்களிடமே இருக்கட்டும், தண்டனும் நானும் ஒன்றா? ஒற்றைக் காளையில் சென்று பிச்சைக் கேட்டுத் திரிந்து கொண்டிருக்கும் அந்த சிவன், சகல புவனங்களும் நடுங்கும் எனக்கு ஈடாவானோ?" என்று ஏசி, சம்பரனை அழைத்து, "உலகமே என்னுடையது.  இந்த கைலாசம் யாருனக்குத் தந்தது என்று சர்வேச்வரனிடம் சென்று கேட்குமாறு கூறி, பார்வதையை தனக்குத் தந்து விட்டால் கைலாசத்தில் சிவன் இருந்து கொள்ளலாம்" என்று கூறுமாறு அனுப்பினான்.  அப்படியே அவனும் சென்று கேட்க "இம்மலை இந்த்ரன் எனக்குத் தந்தது.  அவன் உத்தரவின்றி இதை நான் தரமுடியாது.  நீ வேண்டுமானால் பார்வதியை வேறிடம் அழைத்துச் செல்" என்று சிரித்துக் கொண்டே கூறினார்.  அவன் தேவியிடம் சென்று அந்தகனை மணக்குமாறு வேண்டினான்.  தேவி தான் பாதசாரியாக வருவேன் என்றும், தன்னை சேனைகளோடு கூடி அந்த அந்தகன் ஜயித்தால், பின்னர் அதைப் பற்றிப் பேசலாம் என்று அவனை அனுப்பினாள்.

துர்யோதனன், ஜம்பன், குஜம்பன், ஹுண்டன், துஹுண்டன், சம்பரன், பலி, பாணன், ம்ஹோதரன், விரோசனன் என மேலும் பல ராக்ஷஸர்களோடு கூடி பெரும் சேனையோடு கைலையை நோக்கிப் புறப்பட்டான்.  ஈசன் ஆணைப்படி நந்தியும் ஸ்நானம் செய்து ஸகல கணங்களையும் மனதால் நினைத்தார்.  குரங்கு முகத்தோடு பதினோரு கோடி ருத்ரர்களும் தங்கள் த்வாரபாலர்களோடு உடனே அங்கு தோன்றினர்.  மேலும் ஸ்கந்தனின் அறுபத்தாறு கோடி கணமும், எழுபது கோடி சிவகணமும், பைரவ, பாசுபத, திகம்பர என்று பல எண்ணிறந்த கணங்கள் அங்கு தோன்றின.  நந்தி கணாதிபதிகளை இறைவனுக்கு அறிவித்தார்.  அவரவர் தகுதிக்கேற்ப அவர்களை ஆசிர்வதித்த ஆண்டவன் பாசுபத கணங்களை மட்டும் தழுவி ஆசிர்வதித்தார்.  தன்னையும், ஹரியையும் ஒன்றென பூஜித்ததே அவர்களுக்குத் தன் ஆலிங்கனம் கிடைத்ததற்குக் காரணம் என்று கூறி, தானே ஸ்தானுவாகவும், திருமாலாகவும், அயனாகவும் தோன்றி, தன்னிடமே ஹரிஹர ஸ்வரூபத்தையும் அனைவர்க்கும் காண்பித்தார்.  மற்ற கணங்களும் இதைக் கண்டு தேவதேவனை பூஜித்து, இதுவரை ஹரி, ஹர பேதங்கொண்டு விஷ்ணுவை பூஜிக்காமலிருந்ததற்கான பாபமகல வேண்டுமென்று ப்ரார்த்தித்தன.

சுக்ரர் பெயர் பெற்றது: பின்னர் பரமேச்வரன் பார்வதியை ஜயை, விமலை முதலிய தோழிகளிடம் ஒப்புவித்து, கணங்களோடு கூடி மந்திரமலைக்குப் புறப்பட்டார்.  பெரும் போர் மூண்டது.  தண்டனெனும் தைத்யனை விநாயகர் கொன்றார். நந்தி குஜம்பன் முதலான பல சேனாதிபதிகளை அவர் படைகளோடு அழித்தார்.  ஆனால், சுக்ரர் அந்தகன் விருப்பப்படி இறந்த அஸுரர் அனைவரையும் ஸஞ்சீவினீ மந்த்ரத்தை ஜபித்து உயிர்ப்பித்தார்.  இதையறிந்த ஈச்வரன் சுக்ரரைக் கொண்டு வருமாறு நந்தியை ஏவினார்.  வழியில் அவரையும், விநாயகரையும் அஸுர கணங்கள் வழி மறித்துத் தாக்கின.  ப்ரஹ்மா உடனே தேவர்களோடு கூடி இந்த்ரனை அங்கு செல்லச் சொன்னார்.  அடங்கியிருந்த தேவர்கள் இப்போது போருக்கு வருவதைக் கண்ட அஸுர கணங்கள் உடனே அவர்களோடு போரிடத் தொடங்கின.  இந்த ஸமயத்தில் நந்தி சென்று சுக்ரரைத் தூக்கி வந்து விட, இறைவன் அவரை வாயில் போட்டு விழுங்கி விட்டார்.  பல காலம் தேவதேவனைத் துதித்தும் சுக்ரரால் வெளியே வரமுடியவில்லை.  முடிவில் அவரிடம் கருணை கொண்ட இறைவன் அவரை புத்ரனாக பாவித்து, புத்ரன் வெளியே வரும் வழியாலே வருமாறு கூறினார்.  அப்படி வந்ததாலே அவருக்கு சுக்ரர் எனும் பெயர் ஏற்பட்டது.

அஸுரகணங்கள் அந்தப் போரில் பல தேவ கணங்களை விழுங்க, மந்த்ரமலையில் தேவ கணங்களே இல்லாதவாறு  ஆயிற்று.  உடனே ஈச்வரன் ஜ்ரும்பாம்பிகை எனும் சக்தியை அஸுரர் மீது ஏவினார்.  அதனால் அஸுரர்கள் கொட்டாவி விட, மீண்டும் தேவ கணங்கள் வெளி வந்து கடும் போரிட ஆரம்பித்தன.  ப்ரதோஷ காலத்தில் காலகாலன் அனுஷ்டானம் செய்து சிவகணங்களோடு கூடி பதினெட்டு கைகளோடும் ஆனந்தத் தாண்டவமாடினார்.  பல்லாண்டுகள் கழிந்தும் போரில் வெற்றி கிட்டாத அந்தகன் ஸுந்தனென்பவனை நந்தியாக வரும்படி கூறி, தானே சிவ வேடம் பூண்டு தேவியிடம் சென்றான்.  தன்னாலேதான் இறைவன் உடலில் காயங்கள் உண்டானதென்று, தேவியும் அவைகளை ஆற்ற நெய், பழைய துணி, உப்பு, தயிர் முதலியவைகளைக் கொண்டு வருமாறு தன் தோழிகளைப் பணித்தாள்.  அவர்கள் இல்லாதபோது வந்திருப்பவன் அஸுரன் என்பதையறிந்த தேவி வெள்ளெருக்கில் ஓடி மறைந்தாள்.  அந்தகனும் மீண்டும் போர்க்களத்திற்கே வந்தான்.

அங்காரகன் பெயர் பெற்றது: சமீகர் என்ற முனிவரது புதல்வனான மாதலியை சாரதியாகக் கொண்டு தேவேந்த்ரனும், கருடாரூடராய் மஹாவிஷ்ணுவும், இன்னும் தேவர்களும் போரில் ஈடுபட்டனர்.  மஹாவிஷ்ணு ஜம்பனைக் கொன்றார்.  பரமேச்வரன் அந்தகனது தேரிலிருந்த ஆயிரம் குதிரைகளையும், சாரதியையும் கொன்றார்.  அந்தகன் கதையையெடுத்துக் கொண்டு சேனைகளைத் தடுத்துத் தான் ஒருவனாகவே ஈச்வரனோடு போரிடச் சென்றான்.  காலகாலனும் தன் சேனைகளைத் தன்னுள் ஒடுக்கிக் கொண்டு, அவனோடு போர் புரிந்தார்.  சூலத்தால் அவன் மார்பைப் பிளந்தார்.  அவன் அதை மதியாமல் அவரைத் தன் கதை கொண்டு தாக்கினான்.  ஈச்வரன் உடம்பிலிருந்து இரத்தம் பெருகி, அதிலிருந்து பைரவன், லலிதராஜன், விக்னராஜன், வித்யாராஜன் முதலிய சிவகணங்கள் தோன்றின.  அந்தகன் உடலிலிருந்து பெருகிய இரத்தத்தை ஒரு சிவ கணம் பருகியதும், அதன் உடல் வெந்த கட்டை போலானது.  ஈச்வரன் அதற்கு அங்காரகன் என்று பெயரிட்டு, நவக்ரஹங்களில் ஒன்றாய்ச் செய்தார். 

சூலத்தில் இருந்த அந்தகனை ஆயிரமாண்டுகள் தன் மூன்றாம் கண்ணால் எரித்தார்.  இரத்தம் குன்றி, காய்ந்த அந்தகன் தன் செயலை நினைத்து வெட்கி,  ஈச்வரனைத் துதித்தான்.  அவனிடம் கருணை கொண்ட தேவன் அவனை சூலத்திலிருந்து இறக்கினார்.  அவன் தேவதேவனை நமஸ்கரித்துத் துதித்தான்.  ப்ரிங்கிரிடர் என்ற பெயரிட்டு அவனைத் தன் ஒரு கணத்திற்குத் தலைவனாகச் செய்தார் ஸர்வேசன்.  இரண்டாயிரமாண்டுகள் கழித்து தேவியிடம் சென்ற இறைவனோடு வரும் புதிய கணாதிபனைக் கண்ட பார்வதி தேவி அவனை யாரென்று ஈச்வரனிடம் கேட்டு அறிந்து கொண்டாள்.  அவனும் தான் அந்தகனாய் இருந்து செய்த பாவங்களைப் பொறுத்துக் கொள்ள வேணுமென்று ப்ரார்த்திக்க தேவியும் அவனை மன்னித்து ஆசிர்வதித்தாள்.

வாமன புராணம் - 18

வாமன புராணம் - 18

"வனத்தில் துன்பப்பட்டுக் கொண்டிருந்த சித்ராங்கதையிடம் கருணை கொண்ட ஒருவன் அவளை அழைத்துச் சென்று யமுனா தீரத்தில் இருந்த ஸ்ரீகண்டர் ஆலயத்தில் அவளை விட்டு, விரைவில் அவள் தன் பதியை அடையப்போவதாக ஆசிர்வதித்துச் சென்றான்.  அங்கு தர்சனத்திற்கு வந்த ரிதத்வஜர் எனும் முனிவர் காட்டில் தனியே துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் இவளைக் கண்டார்.  நமஸ்கரித்து நின்ற அவள் சரிதத்தை அறிந்தார்.  அவளிடம் கருணையும், விச்வகர்மாவிடம் கடும் கோபமும் கொண்டார்.  "பெண்ணாகப் பிறந்தவள் என்றைக்கிருந்தாலும் பிறர் பொருளன்றோ? நாமே அவளுக்குத் தகுந்த கணவனைத் தேடுவதன்றோ நம் கடமை.  தானே ஒருவனைத் தேடிக்கொண்ட இவளை அன்புள்ள தந்தையாயிருப்பவன் சபிக்கலாகுமோ? யோசனை செய்யாமல் பெண்ணை சபித்த விச்வகர்மா குரங்காகப் போகட்டும்" என்று சபித்தார்.  சிவபூஜை முடிந்து அவளை ஸப்தகோதாவரம் என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றார்.  அங்கிருந்த ஹடகேச்வரனை அவளைப் பூஜித்துக் கொண்டிருக்கும் படி கூறிவிட்டு, அவளைப் போன்றே அங்கு மேலும் மூன்று பெண்கள் வருவார்கள் என்றும், அங்கேயே அவள் தன் பதியை அடைவாள் என்றும் கூறினார். "இந்தப் பெண்ணின் துயரத்தைப் போக்குபவர் யாரோ" என்று அங்கிருந்த கல்லில் எழுதி வைத்து, சென்று விட்டார்.

குரங்காய்ப் போன விச்வகர்மா பூமியில் சாலூக நதிக்கரையில் ஒரு புதரில் வசித்து வந்தான்.  அங்கு ஒரு ஸமயம் கந்தரனெனும் தைத்யன், தன் மகளான தேவவதியுடன் வந்து கொண்டிருந்தான்.  குரங்கு அவர்கள் மேல் பாய்ந்து தேவவதியைத் தூக்கிச் சென்று, ஹிமகிரியிலுள்ள ஒரு ஆச்ரமத்தில் அவளைப் பத்திரப்படுத்தியது.  அதைத் துரத்தி வந்த கந்தரனை வாளோடு கண்டதும், யமுனையில் குதித்து விட்டது.  குரங்கு தன் மகளோடு நதியில் குதித்து விட்டது என்று நினைத்த கந்தரன் அவள் இறந்து விட்டாள் என்று நினைத்து பாதாளம் திரும்பி விட்டான்.  மீண்டும் கரையேறிய வானரம் ஆச்ரமத்திற்குச் சென்றது.  வழியில் அஞ்ஜனன் என்பவன் தன் மகளான தமயந்தியோடு சென்று கொண்டிருந்தான்.  அவளை தேவவதி என்று நினைத்த வானரம் அவர்களிடம் பாய்ந்தது.  பயந்து போன தமயந்தி அருகில் ஓடிக் கொண்டிருந்த ஹிரண்வதீ எனும் நதியில் குதித்து விட்டாள்.  அவள் இறந்தாள் என நினைத்த அஞ்ஜனன் அந்த அஞ்ஜன பர்வதத்திலேயே தவம் புரியலானான்.

நதியில் அடித்துச் செல்லப்பட்ட தமயந்தி கோஸல நாட்டில் கரையேறி, ஓர் ஆலமரத்தடியே வந்து அமர்ந்தாள்.  அங்கு "இந்த ரிஷி குமாரன் இங்கே கட்டப்பட்டிருப்பதை யாராவது அவன் தந்தையிடம் சொல்ல மாட்டீர்களா?" என்று ஒரு புலம்பல் சத்தத்தைக் கேட்டாள்.  தேடிப் பார்த்தால், மேலே ஒரு ஐந்து வயது குழந்தை அதன் ஜடாமுடியைக் கொண்டே, அந்த ஆலமரத்தில் கட்டப்பட்டிருப்பதைக் கண்டாள்.  அதனிடம் "நான் தான் மிகுந்த துயரத்தில் இருக்கிறேன் என்று நினைத்தேன், இங்கு என்னை விடத் துயரப்பட்டிருக்கும் நீங்கள் யார்?" என்று கேட்டாள்.  அந்தக் குழந்தை "அம்மா! நான் மனுபுரத்திலிருக்கும் ரிதத்வஜரெனும் முனிவரின் புத்ரன்.  நான் பிறந்தபோது என் மேலுண்டான வாசனையால் வண்டுகள் என்னை சூழ்ந்து கொண்டன.  அதனால் என் தந்தை எனக்கு ஜாபாலி என்று பெயரிட்டார்.  என்னைக் கண்ட பெரியவர்கள் நான் ஐயாயிரமாண்டுகள் குழந்தையாகவும், பத்தாயிரமாண்டுகள் குமரனாகவும், இருபதினாயிரமாண்டுகள் யுவனாகவும், நாற்பதாயிரமாண்டுகள் கிழவனாகவும் இருப்பேனெனவும், ஐந்து வயதில் நான் கட்டப்படுவேன் என்றும் கூறினர்.  அப்படியே நான் காட்டில் சுற்றிக் கொண்டிருக்கும் போது ஒரு குரங்கு ஓடி வந்து "ஏன் தேவவதியைத் தூக்கிச் சென்றாய்?" என்று என்னைப் பிடித்து இப்படிக் கட்டிப் போட்டு விட்டது.  யாரும் என்னைக் கண்டு பிடிக்காதபடி முட்களால் வழியையும் மூடி விட்டது, எனக்கு தேவவதி யாரென்றே தெரியாது, என் விதிதான் அந்தக் குரங்காக வந்ததென்று நினைக்கிறேன்" என்று கூறி அவளைப் பற்றி விசாரித்தது.

தமயந்தி தன் பெயரைக் கூறி "என் தந்தை அஞ்ஜனர், தாய் ப்ரம்லோசா. என்னை ஒரு சக்ரவர்த்தி மணப்பான் என்று நான் பிறந்த போது முத்கல முனிவர் கூறியிருந்தார்.  என் தந்தையோடு நான் தீர்த்த யாத்ரைக்கு வந்த போது எங்களை ஒரு குரங்கு துரத்த, நான் அதற்குப் பயந்து நதியில் குதித்து விட்டேன்.  விதி வசத்தால் கரையேறி இங்கு வந்தேன்" என்று கூறினாள்.  அவளை ஜாபாலி யமுனைக் கரையிலிருக்கும் ஸ்ரீ கண்டரைச் சென்று பூஜிக்கச் சொன்னார்.  அங்கு தன் தந்தை பூஜைக்கு வருவார் என்றும், அவர் உதவியால் அவளுக்கு நன்மை உண்டாகும் என்றும் கூறினார்.  அப்படியே அங்கு சென்ற தமயந்தி அங்கு எழுதியிருந்த ச்லோகத்தைக் கண்டாள்.  அதனருகிலேயே "ஜாபாலியை விடுவிக்கவும், என் துயரை அகற்றவும் யார் வருவரோ?" என்று எழுதி வைத்தாள்.  அங்கேயே தவம் செய்து கொண்டிருந்த தேவவதியையும் கண்டாள்.  அங்கு பூஜைக்கு வந்த ரிதத்வஜர் அங்கு எழுதி வைக்கப்பட்டிருந்த வாக்யங்களைக் கண்டு, தன் மகனை விடுவிக்க அயோத்யாபதியான இக்ஷ்வாகுவிடம் சென்றார்.

அதன் பின் ஸ்ரீகண்டரை தர்சிப்பதற்காக வந்த காலவமுனிவர் அங்கு இந்த இரு பெண்களையும் கண்டு, அறிந்து கொண்டார்.  அவர்களோடு ஒரு நாள் இருந்து விட்டு, அவர்களையும் அழைத்துக் கொண்டு புஷ்கர க்ஷேத்ரத்திற்குச் சென்றார்.  கார்த்திகை புஷ்கர ஸ்னானம் புண்யமானதால் அங்கு ஏராளமான மன்னர்களும், ரிஷிகளும் கூடியிருந்தனர்.  ஸ்நானம் செய்ய மூழ்கிய போது, ஒரு பெரிய ஆண் மீனை பல பெண் மீன்கள் சுற்றிக் கொண்டிருந்தன.  ஆண் மீன் அவைகளைப் பார்த்து "இப்படி என்னைச் சுற்றி வருகிறீர்களே, மக்கள் அவமானமாகப் பேச மாட்டார்களா?" என்றது.  அதற்குப் பெண் மீன்கள் "காலவரே பெண்களோடு சுற்றி கொண்டிருக்கிறார்.  அவரே அபவாதத்திற்கு அஞ்சவில்லை, நீ ஏன் பயப்படுகிறாய்?" என்று கேட்டன.  ஆண் மீன் "அவருக்கு மானமில்லை, நானும் அப்படி இருக்க முடியுமா?" என்றது.  இந்த சம்பாஷனைகளைக் கேட்ட காலவர் தன் தவறை உணர்ந்து நீரிலிருந்து வெளியேராது, அதனுள்ளேயே தவத்தைத் தொடங்கி விட்டார்.

இக்ஷ்வாகுவிடம் சென்ற ரிதத்வஜர் அவனை வேண்டி அவன் புதல்வனான சகுனியோடு கானகத்தில் திரிந்து தன் மகனைக் கண்டார்.  அவனைச் சுற்றியிருந்த முட்களை அகற்றி சகுனி குழந்தையிடம் சென்றான்.  அவர்களால் ஜடையின் கட்டுகளைப் பிரிக்க முடியவில்லை.  ஜடை கட்டப்பட்டிருந்த கிளையை வெட்டி, அதனோடே ஜாபாலி கீழே இறங்கி வர உதவியாக தன் அம்புகளால் படிக்கட்டுகளை அமைத்தான்.  ஜாபாலி அதன் வழியே இறங்கி வந்து, தந்தையை நமஸ்கரித்து, சகுனியையும் வாழ்த்தினார்.  மூவரும், நாபாகனோடு சேர்ந்து மார்கழி புஷ்கர ஸ்நானத்திற்கு வந்திருந்தனர். ஆனால் அந்தப் பெண்களை அவர்கள் சந்திக்கவில்லை.

இதனிடையில் பர்ஜன்யனெனும் கந்தர்வனுக்கும், க்ருதாசீ என்பவளுக்கும் பிறந்த வேதவதி என்பவளும் ஒரு ஸமயம் துரத்திக் கொண்டு வந்த அந்த வானரத்திற்கு பயந்து ஒரு மரத்திலேறினாள்.  வானரம் அந்த மரத்தைக் காலால் உதைத்துத் தள்ளியது.  இந்தச் செயலைக் கண்ட தேவர்கள் "இவள் இக்ஷ்வாகுவின் ஸஹோதரனான இந்த்ரத்யும்னனின் மஹிஷியன்றோ? இவளுக்கா இந்த கதி" என்று சத்தமிட்டனர்.  அப்போது அங்கு தோன்றிய ஒரு புயல் காற்று வேதவதியையும் கொண்டு போய் புஷ்கரத்தில் தள்ளியது.

யமுனையின் இக்கரையில் தேவவதி, தமயந்தி.  நீரினுள்ளே காலவர்.  அக்கரையில் சித்ராங்கதை, வேதவதி.  பலநாட்களாகியும் காலவர் வெளியே வரவில்லை.  அனைவரும் சென்று விட இந்த நான்கு பெண்களும் கூடி தங்கள் கதைகளைப் பேசிக் கொண்டு, ஸ்ரீ கண்டரைப் பூஜித்து வந்தனர்.  ஜாபாலி, ரிதத்வஜர், சகுனி மூவரும் சகுனியின் தந்தையான இக்ஷ்வாகுவின் ஸஹோதரனான இந்த்ரத்யும்னனின் துணையோடு இந்தப் பெண்களைத் தேடலாயினர்.  அப்போது பத்ரிகாச்ரமத்தில் தவம் புரிந்து கொண்டிருந்த ஒரு யுவராஜனைக் கண்டனர்.  அவனை அணுகிய ரிதத்வஜர் சிறு வயதில் தவம் புரிவதைப் பற்றிக் கேட்டார்.  அவன் தான் ஸுரதனெனும் ராஜகுமாரனென்று கூறி தன் கதையைக் கூறினான்.  அவனையும் ரிதத்வஜ மஹர்ஷி தேரிலேற்றிக் கொண்டு ஸ்ரீகண்ட க்ஷேத்ரத்திற்கு வந்து சேர்ந்தார்.  அப்போது தன் மகளைத் தேடிக் கொண்டு க்ருதாசீயும் அங்கு வந்தாள்.  குரங்காய் சபிக்கப்பட்ட விச்வகர்மாவும் அங்கு திரிந்து கொண்டிருந்தான்.

Tuesday, November 26, 2013

வாமன புராணம் - 17

வாமன புராணம் - 17

ப்ரஹ்லாதன் அந்தகனுக்கு உபதேசம்: பார்வதி தேவியின் மீது காமம் கொண்டிருந்த அந்தகாஸுரன் மீண்டும் தன் மந்த்ரிகளைக் கூட்டி ஆலோசித்தான்.  அப்போது ப்ரஹ்லாதன் "அன்னையிடம் ஆசை கொள்ளாதே, குழந்தை வேண்டி சிவபெருமானிடம் உன் தந்தை தவம் புரிந்த போது, ஈச்வரன் அவரெதிரில் தோன்றி "அஸுர! இந்தக் குழந்தை விளையாட்டாக உமை என் கண்களை மூடிய போது பிறந்தவன்.  இவனை எடுத்துச் சென்று வளர்த்து வா.  தமோகுணமே மிகுந்திருக்கும் இவனை எவரும் கொல்ல இயலாது.  எப்போது இவன் அன்னையையே விரும்புகிறானோ அப்போது இவனை நானே சூலத்தால் கொன்று நற்கதி அளிப்பேன்." என்று கூறினார்.  எனவே உமா, மஹேச்வரர்கள் உன் தாய், தந்தையர்கள்.  உலகிற்கே தாய், தந்தையர்களான அவர்கள் உனக்கு விசேஷமன்றோ?  இந்த எண்ணத்தை விடு.  பிறன் மனைவியிடம் ஆசை கொண்ட தண்டனுக்கு நடந்ததை நீ அறியாயோ" என்று ப்ரஹ்லாதன் அவனுக்கு கீழ் வரும் கதையைக் கூறுகிறார்.

ஸூர்ய வம்சத்தரசனான தண்டன் சுக்ரரை தனக்கு புரோஹிதராக இருக்கும் படி வேண்டி, அவரருளோடு பல யாகங்களைச் செய்தான்.  சுக்ரர் ஒரு ஸமயம் அஸுர ராஜனான வ்ருஷபர்வாவைப் பார்க்கச் சென்றிருந்த போது, அவன் விரும்பியபடி அங்கு சில காலம் தங்கியிருந்தார்.  அந்த ஸமயம் தண்டன் சுக்ராச்சார்யாரைப் பார்ப்பதற்காக அவராச்ரமத்திற்குச் சென்றான்.  அப்போது அங்கு தனித்திருந்த சுக்ரரது பெண்ணான வ்ரஜையைக் கண்டு அவள் மேல் அடங்காத காமம் கொண்டான்.  அவளது அதிதி பூஜைகளை ஏற்காது அவளிடம் தன்னைச் சேருமாறு வேண்டினான்.  அவள் "என் தந்தையிடம் இந்த்ரனும் எதிர் நிற்க மாட்டானே.  அவர் கோபத்திற்கு நீங்கள் எம்மாத்திரம்?  தவிர குரு தந்தைக்குச் சமமன்றோ?  அவரது புதல்வியான என்னிடம் ஸஹோதரியாக உரிமை பாராட்டாது, இப்படி காமவெறி கொள்வது எப்படி தகும்?  பெண்ணும் தாய், தந்தையர் உத்தரவின்றி ஒருவனை மணப்பது தர்மமா? எனவே என் தந்தை வரும்வரையாவது பொருத்திருங்கள்.  அவர் என்னை உங்களுக்கு அளித்தால் ஏற்றுக் கொள்ளும்" என்றாள்.  தண்டனோ "சில காலம் கழித்தே கோபம் கொண்ட உன் தந்தை என்னை எரிப்பார்.  ஆனால் காமன் பாணமோ என்னை இப்போதே எரித்துக் கொல்கிறது, எனவே காலம் கடத்தாமல் என்னை இதிலிருந்து காப்பாற்று.  பெண் பெற்றோர் அனுமதியின்றி ஒருவனை மணப்பதும் அதர்மமன்று" என்று கூறி விச்வகர்மாவின் புத்ரியான சித்ராங்கதையின் கதையைக் கூறினான்.

"சித்ராங்கதை நைமிஷாரண்யத்தில் ஒரு நதியில் தன் தாதிகளோடு குளித்துக் கொண்டிருக்கையில் அங்கு வந்த ஸுதேவ ராஜனின் புதல்வன் ஸுரதன் அவளழகில் மயங்கி அவளிடம் தன் காமத்தைத் தீர்க்குமாறு வேண்டினான்.  அவள் தாதிகள் அவனைத் தடுத்து "பெண்கள் சுதந்திரமாக எந்த ஆடவனையும் விரும்பலாகாது.  அவள் தந்தையிடம் சென்று அவளை வேண்டும்.  பாக்யமிருந்தால் அவள் உங்களுக்குக் கிடைப்பாள்" என்று கூறினர்.  அவனோ மீண்டும் சித்ராங்கதையிடம் "நீ உன் தந்தையின் உத்தரவிற்குக் காத்திருந்து ஒரு உயிரைக் கொல்லப் போகிறாயா? அல்லது என் ஆசையைத் தீர்த்து என் உயிரைக் காக்கப் போகிறாயா" என்று மயங்கி விழுந்தான்.

வாமன புராணம் - 16

வாமன புராணம் - 16

பகவத் ஸ்வரூபம்: "மஹாவிஷ்ணுவின் ஓம், ந, மோ, ப, க, வ, தே, வா, ஸு, தே, வா, ய எனும் பனிரெண்டு அக்ஷரங்களையும், சிகை, முகம், புஜம், கண், ஹ்ருதயம், வித்யாஸ்தானம், மனஸ், நாபி, ஜனனம், கால், முழங்கால், பாதம் எனும் நமது பனிரெண்டு உறுப்புகளில், முறையே வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி, சித்திரை மாதங்களோடு கூடிய மேஷம், வ்ருஷம், மிதுனம், கடகம், ஸிம்ஹம், கன்னி, துலாம், வ்ருச்சிகம், தனுஸ், மகரம், கும்பம், மீனம் ராசிகளோடு வசிப்பதாக உபாஸிப்பது அவ்யக்த வாஸுதேவ ஸ்வரூபம்.  இப்படி உபாஸிப்பவர்களுக்கு மறுபிறவி என்பது இல்லை.  நான்கு வர்ணமுள்ள நான்கு முகங்களோடு இருப்பது இரண்டாவது ஸ்வரூபம்.  ஆயிரம் தலைகளோடு உலகைத் தாங்கியிருக்கும் ஆதிசேஷன் மூன்றாம் ஸ்வரூபம்.  நான்கு முகங்கள், இரு கைகளோடு கூடி உலகைப் படைப்பது பகவானின் நாலாவது ஸ்வரூபம்." என்று ப்ரஹ்மா ஸனத்குமாரருக்கு உபதேஸித்தார்.

ஒரு ஸமயம் உலகெமெல்லாம் தன்னிலையிலிருந்து தவறி நடுங்கியபோது, தேவர்களும், ப்ரஹ்மனும் சேர்ந்து விஷ்ணுவை சரணடைந்தனர்.  அவர் தேவர்களையும் கூட்டிச் சென்று கைலாஸநாதனைப் பணிந்தார்.  ஆனால் தேவதேவன், தேவர்கள் கண்களுக்குப் புலப்படவில்லை.  மஹாவிஷ்ணு தேவர்களிடம் "நீங்கள் பார்வதி தேவிக்குக் கர்ப்பமுண்டாமல் செய்ததால் வந்த பாபம் இது.  தப்தக்ருச்ரம் எனும் ப்ராயச்சித்தத்தைச் செய்து, பின்னர் நூறு குடம் பால், அறுபத்து நான்கு குடம் தயிர், முப்பத்திரண்டு குடம் ஹவிஸ், பதினாறு குடம் பஞ்சகவ்யம், எட்டு குடம் தேன், நூற்றெட்டு குடம் சந்தன ஜலத்தால் பரமேச்வரனுக்கு அபிஷேகம் செய்யுங்கள்.  உங்கள் பாபமகன்று தேவதர்சனம் கிடைக்கும் என்றார்.  தப்த க்ருச்ரம் என்பது முதல் மூன்று நாள் பனிரெண்டு பலம் உஷ்ண ஜலத்தையும், அடுத்த மூன்று நாட்கள் எட்டு பலம் பாலையும், அடுத்த மூன்று நாட்கள் ஆறு பலம் நெய்யையும், கடைசி மூன்று நாட்கள் வாயுவையும் புஜித்திருப்பது.  இதைச் செய்தபின் தேவர்களுக்கு ஈச்வரன் ஹரிஹரனாகக் காட்சி அளித்தார்.  பின் மீண்டும் மஹாவிஷ்ணு மட்டுமே இருந்தார்.  தேவர்கள் வேண்டியபடி மஹாவிஷ்ணு அவர்களோடு கூடி பூலோகத்தில் ஸரஸ்வதி நதியில் மூழ்கி தவமிருந்து கொண்டிருந்த ஈச்வரனைத் துதிக்க, அவரும் தவத்தை நிறுத்தி, நதியிலிருந்து வெளியேறி அவர்களுக்கு அருளினார்.  பூமி நடுங்குவதும் நின்றது.

இரண்டாவது முறை இப்படி உலகம் நடுங்கினபோது அதன் காரணத்தை அறிந்த மஹேச்வரன் குருக்ஷேத்ரத்தில் கடுந்தவம் புரிந்து கொண்டிருந்த சுக்ராச்சார்யாரிடம் தோன்றி வேண்டிய வரத்தைக் கேட்குமாறு கூறினார்.  தவம் கலைந்த சுக்ரரும் தேவனைப் பணிந்து இறந்தவரைப் பிழைப்பிக்கும் ஸஞ்ஜீவினீ வித்யையை வேண்டிப் பெற்றுக் கொண்டார்.  பிறகு ஸப்தஸாரஸ்வத க்ஷேத்ரத்தில் மங்கண முனிவர் தன் கைவிரலில் அறுபட்டபோது அங்கு இரத்தம் வராமல் வாஸனையோடு ஒரு ஜலம் பெருக்கெடுப்பதைக் கண்டு தன் தவத்தை மெச்சி ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருந்தார்.  உலகம் மூன்றாவது முறையாக நடுங்கத் தொடங்கியது.  இதை அறிந்த கைலாஸபதி முனிவர் வேஷத்தில் அவரிடம் சென்று "ஏன் இப்படி ஆடிக் கொண்டிருக்கிறீர்" என்றார்.  அவர் நடந்ததைக் கூறி "என்னை விட தவத்தில் உயர்ந்தவர் உண்டோ" என்று கேட்டார்.  உடனே ஈச்வரன் சிரித்து தன் கையை ஒரு விரலால் அடித்தார்.  அதிலிருந்து வாசனையோடு விபூதி வந்தது.  இதைக் கண்டதும் வந்திருப்பவர் யாரென அறிந்து கொண்ட மங்கணர் அவரைத் துதித்தார். ருத்ரரும் அவருக்குக் காட்சியளித்து அவர் ப்ரார்த்தனைக்கிணங்கி ஸப்தஸாரஸ்வத க்ஷேத்ரத்தில் தன் ஸான்னித்யம் இருக்குமென அருளினார்.  மங்கணர் மகிழ்ந்து ப்ரஹ்மலோகம் சென்றார்.

Sunday, November 24, 2013

வாமன புராணம் - 15

வாமன புராணம் - 15

புத்ரன் யார்? சிஷ்யன் யார்?: ஸனத்குமாரர் ஒரு ஸமயம் பகவத் ஸ்வரூபத்தைத் தனக்கு விளக்கிக் கூறுமாறு ப்ரஹ்மனிடம் வேண்டினார்.  ப்ரஹ்மன் "அது பரம ரஹஸ்யம். ரஹஸ்யத்தை புத்ரனுக்கே உபதேஸிக்க வேண்டும்.  நீயோ தர்மத்திற்கும், அஹிம்ஸைக்கும் பிறந்த நால்வரில் மூத்தோன். உனக்கு அதை எப்படி உபதேஸிப்பது?" என்று கேட்டார்.  ஸனத்குமாரர் தன்னை புத்ரனாக பாவித்து உபதேஸிக்குமாறு வேண்ட, ப்ரஹ்மா "புத் எனும் நரகத்திலிருந்து காப்பவனே புத்ரன், நீ சேஷ நரகங்களிலிருந்து காக்கும் சிஷ்யன், நீ புத்ரனாகமாட்டாய்" என்று கூற, ஸனத்குமாரர் உடனே அந்நரகங்களைப் பற்றி விவரித்துக் கூறுமாறு ப்ரஹ்மனைக் கேட்டார்.

புத் எனும் 16 நரகங்கள்: ப்ரஹ்மா கீழ்வரும் பதினாறு நரகங்களை வரிசைப்படுத்தி, "இவைகளே புத் எனும் நரகங்கள். இவைகளிலிருந்து பிதாவைக் காப்பவனே புத்ரன் எனப்படுகிறான்" என்று கூறினார். 1. பிறன் மனைவியைப் புணர்வது, பாபிகளின் சேர்க்கை, க்ரூரகுணம். 2. பழங்களைத் திருடுவது, வீணாய் அலைவது, பச்சைமரங்களை வெட்டுவது. 3. தகாதோரிடம் தானம் வாங்குதல், ப்ராணிகளைக் கூண்டிலடைப்பது, கொல்வது, பந்துக்களல்லாதோரிடத்தில் மணம் செய்து கொள்வது 4. பிறரை பயமுறுத்துதல், இறை நிந்தனை, ஸ்வதர்மத்தை விடுதல். 5. நண்பர்களை ஏமாற்றுவது, அபவாதம் சொல்வது, ருசியான பதார்த்தத்தைத் தானொருவனாக புஜிப்பது.  6. வண்டியில் யாத்ரை செல்வது, பழத்தைப் பிடுங்குவது, யோகத்தைக் கெடுப்பது, வண்டி மாட்டைத் திருடுவது. 7. வருமானத்தில் அரசனுடைய பாகத்தைக் கொடாதிருத்தல், ராஜஸ்த்ரீயைக் கெடுப்பது, அரசனுக்கு அப்ரியத்தைச் செய்தல்.  8. கஞ்சனாயிருத்தல், ஸ்த்ரீலோலனாயிருத்தல், வாயிலிருந்து எப்போதும் நீரைப் பெருக்குதல்.  9.  வேதத்தைத் திருடுதல், ப்ராஹ்மணர்களை நிந்திப்பது, உறவினர்களை பகைத்துக் கொள்வது.  10. சிஷ்டாசாரத்தை நிந்திப்பது, கெடுப்பது, சாஸ்த்ரத்தைத் திருடுவது, குழந்தைக் கொலை.  11. வேதாங்கங்களை அழித்தல், பகவத்குண நிந்தனை.  12. ஸாதுக்களையும், அவர்களுடைய ஆசாரத்தையும் நிந்திப்பது, துராசாரங்களை கைகொள்வது, வைதிக ஸம்ஸ்காரங்களில்லாமை
  13. ரஹஸ்யங்களை வெளிவிடுவது, தர்ம, அர்த்த, காமங்களை விடுதல்.  14. முறையில்லாத ஸன்யாஸம், வீட்டிற்கு நெருப்பு வைத்தல்.  15. சுத்தமில்லாமை, பொய் சொல்லுதல், அக்ஞானம், சோம்பேறித்தனம்.  16. கோபமும், தேவையில்லாத டம்பமும், அலட்டலும்.

சேஷ பாபங்கள்: தேவ, ரிஷி, பித்ரு கார்யங்களைத் தடுப்பது, அடுத்தவர் பொருளில் ஆசைப்படுவது, அனைத்து வர்ணங்களும் ஒன்றென்று நினைப்பது, ஜபம் செய்யாமை, குருவோடு வாதிப்பது, தன் குற்றத்தை மறைத்து, பிறர் குற்றத்தை வெளிவிடுவது, பொறாமை, கடுமையான சொற்கள், முறட்டுத்தனம் இவைகளே சேஷ பாபங்கள் என்பவை. இவைகளிலிருந்து குருவைக் காப்பவதாலேயே ஒருவன் சிஷ்யனாகிறான்.

ஔரஸ புத்ரனும், தத்துக் கொடுக்கப்பட்டவனுமே கலியுகத்தில் சிறந்தவர்களாவார்கள்.  தன் வயிற்றில் பிறந்தால் ஔரஸன். குழந்தையில்லாதவர்களுக்குப் பெற்றோரால் தானம் கொடுக்கப்பட்டவன் தத்தன்.  புருஷன் அலியாகவோ, பைத்யமாகவோ இருந்தால் ஒரே ஒரு முறை மஹர்ஷியோடோ அல்லது மைத்துனனோடோ சேர்ந்து குழந்தை உண்டானால் அவன் க்ஷேத்ரஜன்.  நண்பனின் புத்ரனைத் தன் புதல்வனைப் போல் பாவிப்பது க்ருத்ரிமன்.  மனைவி இருக்கும்போது யார் மூலம் உண்டானான் என்பதே தெரியாமல் உண்டானவன் கூடஜன்.  அனாதை அபவித்தன்.  கன்யகையாயிருக்கும்போதே பிறந்தவன் கானீகன்.  திருமணத்தின் போதே கர்ப்பமாயிருந்தவளுக்குப் பிறந்தவன் ஸஹோடஜன்.  விலைக்கு வாங்கப்பட்டவன் க்ரீதன்.  இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவன் பௌனர்பூ.  ப்ராம்மணனுக்கும், சூத்ரஸ்த்ரீக்கும் பிறந்தவன் பாரசவன்.  இந்த பதினோறு புத்ரர்களில் ஔரஸனையும், தத்தனையும் தவிர வேறெதையும் கலியில் மனதாலும் நினைக்கக்கூடாது."

இப்படி ப்ரஹ்மா கூறியதும், ஸனத்குமாரர் தன் பெற்றோர்களால் தன்னை ப்ரஹ்மாவிற்குத் தத்துக் கொடுக்கச் சொன்னார்.  தத்தனாகிவிட்டபடியால் தனக்கு இப்போது பகவத் ஸ்வரூபத்தை விளக்குமாறு அவர் ப்ரஹ்மனிடம் வேண்டினார்.                                             

வாமன புராணம் - 14

வாமன புராணம் - 14

முராஸுர வதம்: ஸுப்ரமண்யரால் அரக்கர் படை பெருமளவு அழிந்ததும் அந்தகாஸுரன் மீதமிருந்த கொஞ்ச ஸேனையுடன் பூமியில் அலைந்து கொண்டிருந்தான்.  அப்போது அவன் மந்த்ரமலையில் தவமிருந்து கொண்டிருந்த பார்வதி தேவியின் மீது மோஹங்கொண்டான். "இவளை என்னிடம் கொண்டு வந்து கொடுப்பவனே எனக்கு நண்பன். அவனுக்கு நான் எதையும் கொடுப்பேன். இவளை அணைக்காமலிருந்தால் இந்த ஜன்மம் வீண்" என்று பிதற்றலானான்.  உடனே அவன் ஸஹோதரனான ப்ரஹ்லாதன் தன் இரு செவிகளையும் மூடிக் கொண்டு "அந்தகா! இப்படிப் பேசாதே, பிறன் மனைவியைப் பார்ப்பதே பாபம்.  நீயோ ஜகன்மாதாவிடமே இந்த எண்ணம் கொள்கிறாய்.  அடுத்தவரை ஹிம்ஸிப்பதை விட தன்னுயிரை விடுவதும், பொய் சொல்வதை விட பேடியாய் இருப்பதும், பிறர் பொருளில் வாழ்வதை விட உபவாஸமிருப்பதுமே சிறந்ததல்லவா?" என்று அவனுக்கு உபதேசித்தார்.  அவன் இவர் உபதேசங்களைக் கேளாது காம வெறி கொண்டு மயனுடனும், தாரகனுடனும் சேர்ந்து தேவியிடம் சென்றான்.  காவலுக்கிருந்த நந்திதேவரை அடித்துத் தள்ளினான்.  தேவி உடனே அவனை மயக்கத் தன்னைப் போலவே நூறு உருவங்களைப் படைத்தாள்.  அவன் குழப்பத்தில் இருக்கும் போது சதாவரீ என்ற சக்தி அவனைத் தாக்கிக் கீழே தள்ளியது.  விநாயகர் மற்ற அஸுர கணங்களை அழிக்க, தேவி அதன் பின் தன்னைப் போன்ற உருவங்களை பூலோகத்தில் உத்யானவனங்களிலும், நதி, குளங்களிலும் இருக்குமாறு கூறி விட்டு தன் பரிவாரங்களோடு மறைந்து விட்டாள்.  மயக்கம் தெளிந்தெழுந்த அந்தகன் தன் படைகள் அழிக்கப்பட்டிருப்பதையும், தான் அடிபட்டதையும் நினைத்து வெட்கமடைந்தும், காம வெறியோடும் பாதாளத்திற்குச் சென்று விட்டான்.

தேவி தவம் புரிந்து கொண்டிருந்த போது சிவபெருமான் ஏன் அங்கு இல்லை என்று நாரதர் புலஸ்த்யரிடம் கேட்டார்.  "தேவியோடு ஆயிரமாண்டுகள் இல்லற சுகத்தில் லயித்திருந்ததால் தன் சக்தி குறைந்து விட்டதாக நினைத்த பரமேச்வரன், நந்தியையும், கணேச்வரரையும் தேவிக்குக் காவலாக வைத்து விட்டு தவமியற்ற பூலோகத்திற்குச் சென்று விட்டார். அவர் நீர், காற்று இவைகளை மட்டுமே உண்டு பலகாலம் தவமிருந்த போது அவர் பாரம் தாங்காது மந்த்ரமலை பிளந்து தரைமட்டமாயிற்று.  அங்கிருந்து ஒரு நதி தோன்றி ப்ரவஹித்து ஓடியது.  தேவதேவர் அதற்குக் கேதாரம் என்று பெயரிட்டு, அதில் நீராடி, விதிமுறைகள் தவறாது பித்ரு கார்யங்களைச் செய்வோர் கைலாஸத்தை அடைவர் என்று கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு யமுனை, ஸரஸ்வதி நதிகளில் நீராடி, ஜலத்திலிருந்தே தவத்தைத் தொடர்ந்தார்.  இந்த தவத்தின் உக்ரம் தாங்காது தேவர்களோடு, ப்ரஹ்மனும் சேர்ந்து முராரியிடம் சென்று முறையிடலாயினர்" என்று புலஸ்த்யர் கூறியதும் நாரதர் "யாரிந்த முரன்?  அவனை எப்படி விஷ்ணு கொன்றார்?" என்று கேட்டார்.

புலஸ்த்யர் "முரன் என்ற தானவன் தனுவுக்கும், கச்யபருக்கும் பிறந்தவன்.  இவன் தேவர்களால் அரக்கர்கள் அழிக்கப்படுவதை அறிந்து, தேவர்களைக் கொல்ல வேண்டி ப்ரஹ்மனை நோக்கிக் கடுந்தவம் இருந்தான்.  முடிவில் "தன் கை யார் மேல் பட்டாலும் அவர்கள் அழிய வேண்டும்" என்ற வரத்தைப் பெற்றுக் கொண்டு, தேவர்களை விரட்டி அவர் பொருள்களைக் கொள்ளை கொண்டு பாதாளத்திலிருந்த தன் படைகளை மீண்டும் தன்னோடு சேர்த்துக் கொண்டு மூவுலகையும் ஆண்டு கொண்டிருந்தான்.  அப்போது ஸரயூ நதிக்கரையில் யாகஞ்செய்து கொண்டிருந்த ஸூர்யவம்சத்தரசனான ரகுவிடம் சென்று "தேவர்களைக் குறித்துச் செய்யும் இந்த யாகங்களைச் செய்யாதே, இல்லையேல் என்னோடு யுத்தம் செய்" என்று கூறினான்.  அவன் தன் குருவான வஸிஷ்டரைச் சரணடைந்தான்.

வஸிஷ்டர் முரனிடம் "மஹாஸூரனே! மனிதர்களை வெல்வதால் உனக்கு என்ன பெருமை, கொல்வதால் தான் என்ன பெருமை, எல்லா உயிர்களையும் எடுத்துச் செல்லும் யமனல்லவா நீ வெல்லத் தகுந்தவன்" என்று கூற, முரன் யமனிடம் சென்றான்.  இவன் வருகையை அறிந்த யமன் வைகுண்டத்திற்கு ஓடினான்.  அங்கு மஹாவிஷ்ணு அவனைத் தன்னிடம் அனுப்புமாறு யமனிடம் கூறினார்.  யமன் முரனிடம் சென்று "நான் உங்களோடுப் போரிடும் பலவானல்ல, உயிர்களை எடுத்தால் நீங்கள் தண்டிப்பீர்கள். ஆனால், உயிர்களை எடுக்காமலிருந்தாலோ மஹாவிஷ்ணு என்னை தண்டித்து விடுவாரே" என்று வருந்தினான்.  முரன் "அப்படியானால் அவன் இருக்குமிடத்தைக் காட்டு, அவனை வெல்கிறேன்" என்றான்.  யமன் வைகுண்டம் செல்லும் வழியைக் காட்ட அங்கு சென்ற முரன் மஹாவிஷ்ணுவை சரணடையுமாறு கூறினான்.  மஹாவிஷ்ணு அவனைப் பரிஹஸித்து "முரனே! நீ வீரனானால், என்னைக் கண்டதும் ஏன் உன் மார்பு இப்படி அடித்துக் கொள்கிறது? என்னிடம் பயமா?  நீயே உன் மார்பை தொட்டுப்பார்" என்று சிரித்தார்.  "எனக்கென்ன பயம்? என் மார்பு எங்கே துடிக்கிறது" என்று கூறிக்கொண்டே தன் மார்பில் கைவைத்தான்.  அவன் வாங்கிய வரத்தாலேயே அவன் அப்போதே கீழே விழுந்து இறந்தான்.  தேவர்களும் மஹாவிஷ்ணுவைத் துதித்துக் கொண்டாடித் தத்தம் இருப்பிடங்களுக்கு மீண்டும் சென்றனர்" என்று நாரதருக்குக் கூறினார்.

Tuesday, November 19, 2013

வாமன புராணம் - 13

வாமன புராணம் - 13

கார்த்திகேய ஜனனம்: சிவதேஜஸ்ஸை ஐயாயிரமாண்டு சுமந்திருந்த அக்னி பகவான் உடல் இளைத்து, தேவர்களுடன் சென்று ப்ரஹ்மனிடம் வழி கேட்க,  இதற்காகவே கடுந்தவம் புரிந்து கொண்டிருந்த பார்வதி தேவியின் ஸஹோதரி குடிலை இந்த தேஜஸைத் தான் சுமப்பதாகப் பெற்றுக் கொண்டாள்.  அவளுக்கும் ஐயாயிரம் ஆண்டுகள் கழிந்தும் குழந்தை தோன்றாது போகவே மீண்டும் ப்ரஹ்மாவிடம் வந்தாள்.  அவர் சொற்படி அதனை உதயகிரியில் இருக்கும் நூறு யோஜனை விசாலம் கொண்ட சரவணப் பொய்கையில் விட்டாள்.  அங்கிருந்த புல், பூண்டுகளும், அக்னியும், குடிலையும் சிவதேஜஸை சுமந்ததால் பொன் போல் ஜ்வலித்தனர்.  ஆயிரமாண்டுகள் கழிந்த பின் பொய்கையில் கோடி ஸுர்யர்களுடைய ப்ரகாசத்தோடு ஒரு அழகான குழந்தை தோன்றி கால் கட்டை விரலைத் தன் வாயில் வைத்துக் கொண்டு அழுதது.

அப்போது அங்கு வந்த ஆறு க்ருத்திகா நக்ஷத்ரங்களும் அழுது கொண்டிருக்கும் குழந்தையைக் கண்டதும், போட்டியிட்டுக் கொண்டு பால் கொடுக்கச் சென்றனர்.  குழந்தை அவர்களிடம் கருணை கொண்டு ஆறு உருவம் கொண்டு அறுவரிடமும் பால் குடித்தது.  குழந்தைப் பிறந்திருப்பதை ப்ரஹ்மனிடமிருந்து அறிந்து கொண்ட அக்னி அதனைக் காண்பதற்காக ஓடினார்.  அவரிடமிருந்து விஷயத்தை அறிந்து கொண்ட குடிலையும் தன் மகனைக் காண்பதற்காக சரவணப் பொய்கைக்கு ஓடினாள்.  இவர்கள் குழந்தைக்கு உரிமை கொண்டு சண்டையிடுவதைக் கண்ட ப்ரஹ்மா பரமேச்வரனிடமே சென்று குழந்தை யாருடையது என்று அறிந்து கொள்ளுங்கள் என்றார்.  அங்கு ஈசனும், ஈச்வரியுமே குழந்தை தன்னுடையது, தன்னுடையது என்று போட்டி போடலாயினர்.  தேவி உடனே குழந்தையிடமே சென்று கேட்போம், அது கூறுவதை ஏற்றுக் கொள்வோம் என்று கூற அனைவரும் பொய்கைக்குச் சென்றனர். 

குழந்தை இவர்கள் எண்ணத்தை அறிந்து நான்கு ரூபங்கொண்டு இந்த நால்வரிடமும் சென்றது.  தேவதேவன் அறுவர் ஸம்பந்தமுமிருப்பதால் ஷண்முகன் எனவும், க்ருத்திகைகள் பால் கொடுத்ததால் கார்த்திகேயன், குடிலையின் தொடர்பால் குமரன், கௌரியால் ஸ்கந்தன், என்னால் குஹன், அக்னியால் மஹாஸேனன், சரவணத்தால் ஸாரஸ்வதன் என்றும் திருநாமங்கள் கொண்டு இவன் அழைக்கப்படுவான் என்று அருளினார்.  தேவர்கள் அவரைப் பணிந்து, குழந்தையைக் கொண்டாடி, குருக்ஷேத்ரத்தில் தேவஸேனாபதியாகப் பட்டாபிஷேகம் செய்தனர்.

பரமேச்வரன் குழந்தைக்கு கண்டாகர்ணன்,லோஹிதாக்ஷன், நந்திஷேணன், குமுதமாலி என்ற நான்கு ப்ரதம கணங்களையும், கொடியையும் காணிக்கையாக்கினார். கருடன் தன் புத்ரனான மயிலையும், அருணன் தாம்ப்ரசூடனனையும், அக்னி சக்தியையும், பார்வதி வஸ்த்ரத்தையும், ப்ருஹஸ்பதி தண்டத்தையும், குடிலா கமண்டலத்தையும், விஷ்ணு மாலையையும், இந்த்ரன் தான் அணிந்திருந்த ஹாரத்தையும் அளித்தனர். இன்னும் ப்ரம்மனும், மற்ற தேவர்களும், வஸுக்களும், பித்ருக்கள், ஸித்தர், மாத்ருகணங்கள், கந்தர்வ, கின்னர, கிம்புருஷர், மலைகள், நதிகள், பக்ஷிகள், நாகங்கள் என அனைவரும் எண்ணிலடங்கா கணங்களை அவனுக்களித்தன.

தேவஸேனாபதி உமா மஹேச்வரன், குடிலை, அக்னி, க்ருத்திகைகளை நமஸ்கரித்து, கணங்கள் புடைசூழ அஸுரர்களை எதிர்த்து யுத்தம் செய்ய ப்ரயாணித்தான். பார்வதி மஹாவிஷ்ணுவை நமஸ்கரித்து அவர் ஆசிகளையும் பெற்றுக் கொள்ளச் சொன்னாள்.  ஸ்கந்தன் அவர் யார் என்று கேட்க,  தேவதேவர் அவர் நம்மைத் தவிர வேறில்லை என்று என்று எனக்குக் கூறி இருக்கிறார் என்று தேவி பதிலளிக்க, ஷண்முகன் மஹாவிஷ்ணுவைப் பணிந்தான்.  அவர் வெற்றியோடு திரும்புமாறு ஸ்வஸ்திவசனம் கூறி அனுப்பினார்.  ஜய கோஷமும், வாத்யங்களின் ஒலியும் உலகெங்கும் ஒலிக்க ஸேனை புறப்பட்டபோது மஹிஷன், தாரகன், விரோசனன், அந்தகன், கும்ப, நிகும்பன் என ராக்ஷஸர் அனைவரும் பயந்து ஒன்று கூடி இந்த ஒலி எங்கிருந்து வருகிறது என்று ஆலோசிக்கலாயினர்.

அப்போது பாதாளகேது எனுமரக்கன் ஓடிவந்து "நான் பன்றி வேஷங்கொண்டு காலவ ரிஷியினுடைய ஆச்ரமத்தை நாசஞ்செய்ய சென்றபோது ஒருவன் வில்லுடன் என்னைத் துரத்திக் கொண்டு வந்தான்.  நான் தென் ஸமுத்ரக் கரைக்கு ஓடினேன்.  அங்கு ஒரு பெரும் ஸேனை "நான் மஹிஷனைக் கொல்வேன், நான் அந்தகனைக் கொல்கிறேன், நான் தாரகனைக் கொல்வேன்" என்று பலவாறு கோஷமிட்டுக் கொண்டிருந்தது.  நான் அதைக் கவனிப்பதற்குள் துரத்தி வந்தவன் என் மேல் பாணத்தை விட நான் வலி பொறுக்காமல் ஹிரண்யபுரத்தை விட்டு உங்களிடம் சேதி கூற ஓடி வந்து விட்டேன்" என்றான்.  இதைக் கேட்டதும் அஸுர ஸேனை கோபம் கொண்டு அந்தகன், மஹிஷன் முதலானோர் தலைமையில் போருக்குப் புறப்பட்டது.

உலகங்கள் நடு, நடுங்க பூலோகத்தில் கடும் போர் நிகழ்ந்தது. ராக்ஷஸர்களை பெருமளவில் கொன்று குவித்த மாத்ரு கணங்களைத் தன் கதையால் அடித்துத் தள்ளி மஹிஷன் ஸ்கந்தனை நோக்கி முன்னேறினான்.  வழியில் சக்ராக்ஷன் எனும் கணாதிபன் அவனை எதிர்க்க, ஸ்கந்தன் அப்போது கத்தியோடு வந்த தாரகனை சக்தியாயுதத்தால் கொன்றார்.  ஸஹோதரன் இறந்ததும் மஹிஷன் பயந்தோடி க்ரௌஞ்ச பர்வதத்தின் குஹையில் தஞ்சம் புகுந்தான்.  ஏனையோர் கடலில் குதித்து பாதாளத்திற்கு ஓடினர்.  க்ரௌஞ்ச கிரி பார்வதி தேவியின் ஸஹோதரனான ஸுநாபனின் மகனாதலால், மும்மூர்த்திகளும், தேவர்களும் எடுத்துக் கூறியும் ஸுப்ரமண்யர் "சாஸ்த்ரத்தின் படி பசு, ப்ராஹ்மணன், வயோதிகன், தனிகன், குழந்தைகள், ஸ்வபந்து, பெண்கள் இவர்கள் குற்றமே செய்யினும் கொல்லக்கூடாதவர் அன்றோ? எனவே என் மாமனுக்கு வருத்தம் உண்டாக, க்ரௌஞ்சனைக் கொல்ல மாட்டேன்" என்றார்.

க்ரௌஞ்சன் பல ராக்ஷஸர்களுக்கு இடமளித்திருப்பதால் அவனும் கொல்லப்பட வேண்டியவனே, குஹனாலன்றி வேறொருவராலும் அவனைக் கொல்லவும் முடியாது என்று தேவர்கள் நினைத்துக் கொண்டிருக்கையில், தேவேந்த்ரன் தான் தன் ஸஹோதரன் நமுசியைக் கொன்றதை எடுத்துக் கூறி, "தாங்கள் உண்மையான வீரனானால் க்ரௌஞ்ச கிரியோடு சேர்த்து, மஹிஷனை வீழ்த்துங்கள்" என்று கூற, குஹன் தேவேந்த்ரன் மீது கோபங்கொண்டு "நீயே பலசாலி, பலத்தைப் பரீக்ஷித்துக் கொள்வோம், வா யுத்தத்திற்கு" என்று அழைத்தார்.  அவன் "இந்த க்ரௌஞ்சத்தை யார் முதலில் சுற்றி வருகிறாரோ அவரே பலசாலி" என்று கூற இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.  முடிவில் தானே முன் வந்ததாக இருவரும் வாதிட, மும்மூர்த்திகளும் தேவ கார்யத்தை முன்னிட்டு தாங்கள் பதில் கூறாது, அம்மலையையே கேட்போம் என்றனர்.  க்ரௌஞ்சம் தேவேந்த்ரனே முன்னால் வந்தான் என்று கூற, ஸ்கந்தன் பெருங்கோபங்கொண்டு சக்தியை அதன் மேல் ஏவ, க்ரௌஞ்சத்தோடு, மஹிஷனும் வீழ்ந்தழிந்தான்.  தேவஸேனை தங்கள் கார்யம் முடிந்ததென பேரானந்தம் கொண்டது.

தன் புதல்வனை குஹன் கொன்றதை அறிந்து ஸுநாபன் கோபத்தோடு வர, குஹன் அவன் மேலும் சக்தியை ஏவினார்.  மஹாவிஷ்ணு உடனே ஓடிவந்து "மாமனைக் கொல்வது ந்யாயமன்று, சக்தியை நிறுத்து" என்று கூற, ஷண்முகனும் சக்தியைத் திருப்பிப் பெற்றுக் கொண்டார்.  பந்துவைக் கொன்றதற்காக வருந்திய குஹப்பெருமான் பின்னர் "மோஹத்தினாலன்றோ இவ்வாறு செய்து விட்டேன், உபவாசமிருந்து உடலை வருத்தி பாபத்தைப் போக்கிக் கொள்வேன்" என்றார்.  மஹாவிஷ்ணு "உபவாஸம் செய்யாதே, பூலோகத்தில் ப்ருதூதகம் எனும் தீர்த்தம் ஒன்று உள்ளது, அது ஸகல பாபங்களையும் போக்கவல்லது.  அதில் ஸ்நானஞ்செய்து கரையில் ஈச்வர பூஜை செய்" என்று கூற, அப்படியே செய்தார் ஸ்வாமி.  ஈச்வரன் உடனே ஓடிவந்துக் குழந்தையைக் கட்டித் தழுவி, வேண்டிய வரத்தைக் கேட்கச் சொன்னார்.  ஸ்கந்தன் "உங்களைப் போல பலமுள்ளவனாயினும், அவன் கைகள் மலைபோல வளர்ந்து வந்தாலும் அவனை அறுத்து வெற்றிக் கொள்ள அருள வேண்டும்" என்று வரம் கோர, இறைவனும் அப்படியே ஆகுக என்றருளிச் சென்றார்.

முன்பு பாதாளகேதுவின் மீது பாணத்தை எறிந்தவன் ரிதத்வஜன் எனும் சூர்ய வம்சத்தரசன்.  இவன் தந்தை சத்ருஜித்.  பாதாளகேது பன்றி உருவமெடுத்து முனிவர்களை கொன்றது மட்டுமல்லாது விச்வாவஸு என்ற கந்தர்வராஜனின் பெண்ணான மதாலஸையையும் கடத்திச் சென்று பாதாளத்தில் வைத்திருந்தான்.  தவவலிமை குறைந்து விடக்கூடாது என்ற எண்ணத்தால் காலவர் அவனைத் தான் கொல்லாது பரம்பொருளிடம் வேண்டினார்.  அப்போது அசரீரி தோன்றி ஒரு பகலில் பத்தாயிரம் யோஜனை தூரம் ஓடும் விச்வாவஸுவின் குதிரையை அவரிடம் தந்து ரிதத்வஜனை அதன் மீதேறிச் சென்று பாதாளகேதுவைக் கொல்லமாறு கூறச் சொல்லியது.  காலவரின் வேண்டுதலின் பேரில் ரிதத்வஜனும் அந்த குதிரையின் மேலேறி பாதாளகேதுவைத் துரத்திச் சென்று பாணத்தை எறிந்தான்.  இந்த விஷயத்தைப் பின்னர் அறிந்ததாக பாதாளகேது அந்தகாஸுரனிடம் கூறினான்.

Monday, November 18, 2013

வாமன புராணம் - 12

வாமன புராணம் - 12

சண்ட முண்ட வதம்:  கச்யபருக்கு தனுவிடம் சும்பன், நிசும்பன், நமுசி என்ற மூன்று தானவர்கள் தோன்றினர்.  மூவரும் ஈச்வரனை வேண்டி பல வரங்களைப் பெற்று, ராக்ஷஸர்களாய் உலகைப் பீடித்தனர்.  நமுசியைக் கொல்வதற்காக இந்த்ரன் வஜ்ரத்தை எடுத்தபோது அவன் ஓடிச் சென்று ஸூர்யனுடைய ரதத்தில் பதுங்கிக் கொள்ள, இந்த்ரன் அவனை ஈரமான பொருள்களாலேயே கொல்வேன் என்று கூறிச் சென்றான்.  பின்னர் நதியில் குளித்துக் கொண்டிருக்கையில் ஒரு நுரை வந்தது, அதைக் கையில் எடுத்துக் கொண்ட நமுசி சிரித்துக் கொண்டே "இது ஈரமான பொருள்தானே, இது என்னைக் கொல்லட்டும்" என்று தன் மேல் போட்டுக்கொண்டான்.  இது தான் ஸமயமென்று தேவேந்த்ரன் தன் வஜ்ரத்தை அந்த நுரையில் செலுத்த, நமுசி அதனாலடிபட்டு இறந்தான்.  தேவேந்த்ரன் அந்த பாபத்தை தீர்த்தங்களில் நீராடிப் போக்கிக் கொண்டான்.

நமுசி கொல்லப்பட்டதால் கோபங்கொண்ட சும்ப, நிசும்பர்கள் பெரும் சைன்யத்துடன் தேவேந்த்ரனை விரட்டி விட்டு மூவுலகையும் ஆளலாயினர்.  பாதாளத்தில் இத்தனை காலம் பதுங்கிக் கொண்டிருந்த ராக்ஷஸர்களும் வெளி வந்து இவர்களோடு சேர்ந்து கொண்டனர்.  மஹிஷாஸுரனது மந்த்ரிகளான ரக்தபிந்து, சண்டன், முண்டன் ஆகிய மூவரும் மஹிஷாஸுரனைக் கொன்ற தேவியை ஸும்ப, நிசும்பர்களில் ஒருவருக்கு மணம் செய்து வைக்க நினைத்தனர். சும்பன் ஸுக்ரீவனென்பவனைத் தூதனுப்பி தன்னை மணக்கும்படி தேவியைக் கோர, தேவி தன்னை வெல்பவரையே தான் மணக்கப்போவதாக அவனைத் திருப்பி அனுப்பி வைத்தாள்.  சும்பன் தேவியை பலாத்காரமாகத் தூக்கி வரும்படி தூம்ராக்ஷனை அனுப்ப, அவன் தேவியின் ஹூங்காரத்தாலேயே இறந்து போனான்.

பின்னர் சண்ட, முண்டர்கள் பெரும் சேனையோடு வந்தனர்.  தேவியின் வாஹனமான ஸிம்ஹம் ராக்ஷஸப்படைகளைக் கீறி, கிழித்து, அடித்து, கடித்து அரை க்ஷணத்தில் கொன்றது.  தேவியின் புருவத்திலிருந்து சண்டமாரீ என்ற யோகினி உக்ரமான ரூபத்தோடு, எருமைக் கொம்பைக் கையிலெந்திக் கிளம்பினாள்.  இவளது ஸ்வரூபத்தைக் கண்டு கருடனின் இறக்கைகள் உதிர்ந்தன.  அவள் அவைகளைத் தொடுத்து மாலையாகக் அணிந்து கொண்டு, கார்க்கோடகத்தால் சண்ட, முண்டர்களைக் கட்டிக் கொண்டு வந்தாள்.  மேலும் பலரை சண்டமாரீ கொன்று குவித்தாள்.  கௌசிகீ சண்ட, முண்டர்களோடுப் போரிட்டு, அவர்கள் தலைகளை வெட்டி மாலையாக அணிந்து கொண்டு, சாமுண்டா என்று பெயர் பெற்றாள்.

பிறகு ரக்தபீஜன் முப்பது கோடி சேனைகளோடு போருக்கு வந்தான்.  தேவியின் அருளால் அவளிடமிருந்து இந்த்ராணீ, வாராஹி, வைஷ்ணவி, நாரஸிம்ஹீ, கௌமாரீ, மாஹேச்வரீ முதலிய சக்திகள் தோன்றின.  ரக்தபீஜன் தன் உடலிலிருந்து விழும் ஒவ்வொரு ரக்தத் துளியிலிருந்தும் ஒரு ரக்தபீஜன் தோன்றவேண்டும் என்று வரம் பெற்றிருந்தான்.  தேவி அவன் ரக்தம் கீழே சிந்தும் முன் அதனைக் குடித்து விடும்படி தன் சக்திகளுக்குக் கட்டளையிட்டுவிட்டு, ரக்தபீஜனைக் கொன்று அட்டஹாஸமாய்ச் சிரித்தாள்.  இந்த தீரத்வனியைக் கேட்டு பரமேச்வரன் அங்கு வர, அவரையே சும்ப, நிசும்பர்களிடம் தூதனுப்பினாள்.  அதைக் கேட்காமல் சும்ப, நிசும்பர்கள் போருக்கு வந்து தேவியிடம் கடும் போரிட்டு மாண்டனர். 

தேவர்கள் பூமாரி பொழிய, தேவி சாந்தஸ்வரூபியாகி, எப்போதும் தேவர்களைக் காப்பதாக வரமருளினாள்.  இதே போல் த்வாபர யுகத்தில் யசோதையினிடம் தோன்றி, பல ராக்ஷஸர்களைக் கொல்வேன் என்று கூறி மறைந்தாள்.

வாமன புராணம் - 11

வாமன புராணம் - 11

விநாயகர் வரலாறு: உமா மஹேச்வர விவாஹம் முடிந்து, இறைவன் ஆணைப்படி விச்வகர்மா நிர்மாணித்த நாற்பத்தாறு யோஜனை விசாலமுள்ள அரண்மனையில் ஆதிதம்பதிகள் அனுஷ்டானங்களுடன் ஸுகமாய் இருந்தனர்.  ஒரு ஸமயம் ஸ்வாமி தேவியை கருப்பாய் இருக்கிறாயே என்று பரிஹஸிக்க, அன்னை கோபம் கொண்டு ஹிமாசலத்தில் சென்று தவமிருக்கச் ஆரம்பித்து விட்டாள்.  ஜயா, விஜயா, ஜயந்தீ, அபராஜிதா என்ற தோழிகள் பணிவிடை செய்ய, தேவி நூறாண்டுகள் ஒற்றைக் காலில் நின்று கடுந்தவம் செய்து கொண்டிருந்தாள்.  அவள் எங்கே கீழே விழுந்து விடுவாளோ என்று தாங்கிக் கொள்வதற்காக ஒரு புலியும் அன்னையினருகிலேயே நூறாண்டும்  நின்று கொண்டிருந்தது.  அப்போது அங்கே தோன்றிய ப்ரஹ்மா தேவியின் விருப்பப்படி அந்தப் புலியை கணங்களுக்குப் பதியாகச் செய்து, தேவிக்கும் ஸ்வர்ண மயமான சரீரத்தை அளித்தார்.  தேவியின் கருப்பு உடல் கௌசிகீ என்ற பெயரோடு கிளம்பி, தேவேந்த்ரன் ப்ரார்த்தித்தபடி விந்த்யாசலத்தில் காத்யாயனி, விந்த்யாசல நிவாஸினீ என்று பல பெயர்களோடு வஸிக்கலாயிற்று.

ஸ்வர்ணவர்ணத்தில் கௌரீ என்ற நாமத்தோடு தேவியும், பரமனும் அதன் பின் ஆயிரமாண்டுகள் இல்லற ஸுகத்தில் ஆழ்ந்திருக்க, அனைத்துலகும் அதனால் நடுங்கலாயிற்று.  தேவேந்த்ரன் பயந்து தேவர்களோடு ப்ரஹ்மனிடம் ஓட, அவர் தேவியின் வயிற்றில் தேவதேவன் அம்சத்துடன் ஒரு குழந்தை பிறந்தால் அது நிச்சயம் தேவேந்த்ரன் பட்டணத்தைப் பிடித்துக் கொள்ளும் என்று கூறினார்.  அனைவரும் அங்கிருந்து கைலாஸம் சென்றனர்.  நந்திக்குப் பயந்து அனைவரும் சேர்ந்து அக்னியை உள்ளே செல்லுமாறு பணித்தனர்.  அவர் ஹம்ஸ ரூபங்கொண்டு உள்ளே சென்று மஹாதேவன் காதில் சென்று தேவர்கள் வெளியில் காத்துக் கொண்டிருப்பதாகக் கூற, ஈச்வரன் வெளியே வந்தார்.  தன் வீர்யத்தை யார் வஹிக்கப் போகிறீர்கள் என்று கங்காதரன் கேட்க, எல்லோரும் பயந்து நிற்க அக்னி, தான் ஏற்றுக் கொள்வதாகக் கூறினார்.  இறைவனும் அப்படியே செய்து விட்டு, அம்பிகையிடம் வந்து நடந்ததைக் கூறினார்.  அம்பிகை தன்னைக் கர்ப்பமில்லாமல் செய்து தேவர்களுக்கும் குழந்தைகள் பிறக்காது என்று கோபத்தில் சபித்து விட்டாள்.

தேவி அதன் பின் ஸ்னானம் செய்யச் செல்கையில் தன் உடம்பிலிருந்த அழுக்கையெல்லாம் திரட்டி நான்கு கைகளும், பெரும் வயிரும், யானை முகமும் கொண்ட ஒரு பொம்மையாகச் செய்து வைத்து விட்டு, குழந்தை பிறக்க வேண்டும் என்றாசையோடு குளித்துக் கொண்டிருந்தாள்.  அதை பரமேச்வரன் வந்து ஸ்பர்சிக்க, அது உயிர்பெற்று வந்தது.  நாயகன் இன்றி பிறந்ததால் அதற்கு விநாயகன் என்று பெயரிட்டு, அதற்குத் துணையாகப் பல கணங்களையும் படைத்து கணபதியாக்கி, மஹாதேவன் தேவியிடம் உன் குழந்தையைப் பார் என்றார்.  தேவி மகிழ்ந்து குழந்தையைக் கொஞ்சி
 "உன்னைப் பூஜிப்பவர்களது விக்னங்களைப் போக்குவாயாக" என்று அருளினாள்.

Thursday, November 14, 2013

வாமன புராணம் - 10

வாமன புராணம் - 10

பார்வதி வரலாறு: ஒரு ஸமயம் தேவர்கள் ப்ருஹஸ்பதியோடு கூடி குருக்ஷேத்ரத்தில் தீர்த்தங்களில் நீராடி, பூஜை செய்து, பித்ருக்களுக்கு ச்ராத்தம் செய்தனர்.  தேவர்களுக்கு ஹிதத்தைச் செய்ய நினைத்த பித்ருக்களும் தங்கள் ஸஹோதரியான மேனையை ஹிமாலயத்திற்கு விவாஹம் செய்து வைத்தனர்.  இவர்களுக்கு குடிலா, ராகினீ, காலி என்ற புத்ரிகளும், ஸுநாபன் என்ற புதல்வனும் தோன்றினர்.  இப்பெண்கள் மூவரும் தேவதேவனை மணப்பதற்காக ஆறு வயதிற்குள்ளாகவே தவம் புரிய, தேவர்கள் இவர்களை ப்ரஹ்மதேவனிடம் அழைத்துச் சென்றனர்.  ப்ரஹ்மா அவர்களில் குடிலையைப் பார்த்து அவளால் சிவ தேஜஸ்ஸை ஸஹிக்க முடியாது என்று கூற, அவள் கோபித்துக் கொண்டு விஷ்ணுவை நோக்கித் தவம் புரிந்து சக்தி பெற்று, சிவனை வணங்கச்செய்வேன் என்று கூறினாள்.  ப்ரஹ்மா அவளை நதியாகும்படி சபித்து விட, அவள் தன் ப்ரவாஹத்தால் ப்ரஹ்மலோகத்தையே அழிக்க நினைத்தாள்.  ப்ரஹ்மா அவளை நான்கு வேதங்களால் கட்டி விட்டார்.

இரண்டாவது பெண்ணான ராகினியும் அப்படியே ப்ரஹ்ம சாபத்தால் க்ருத்திகா நக்ஷத்ரமாகி விட்டாள்.  மூன்றாமவளான காலி சிவனைக் குறித்து தவம் புரியலானாள்.  மேனைக் குழந்தையின் கடுந்தவத்தைக் கண்டு வருந்தி உமா (உ-பெண்ணே, மா-வேண்டாம்) என்று தடுத்தாள்.  இதனால் அவளுக்கு உமா என்ற பெயரும் உண்டாயிற்று.  தேவர்களும் இவளை நெருங்க முடியவில்லை.  ப்ரஹ்மா இவளிடமே தாரகன் முதலானோர்களை அழிக்கும் படியான சிவனுடைய அம்சம் உண்டாகப்போகிறது என்று கூறினார்.  தேவி தன் தோழிகள் செய்து கொடுத்த சிவ விக்ரஹத்தை நோக்கி மீண்டும் கடுந்தவம் புரிந்து கொண்டிருந்தாள்.  அப்போது அவளைப் பரீக்ஷிக்க ப்ரஹ்மசாரி வேஷத்தில் வந்த ஈசன், ஸோமப்ரபை எனும் அவளது தோழியாள் பார்வதியின் தவத்தின் நோக்கத்தை அறிந்து, ஈசனையா மணக்க நினைக்கிறாய் என்று பலவாறு சிவநிந்தனை செய்தார்.  தேவி இதனைப் பொறுக்காது எழுந்து செல்ல, ஈச்வரன் ஸ்வரூபத்தைக் காட்டி, தேவி பூஜித்த விக்ரஹம் பத்ரேசம் என்றழைக்கப்படும் என்றும், தானே ஸப்தரிஷிகளை அனுப்பி அவளை மணந்து கொள்ளப் போவதாக அனுக்ரஹித்து மறைந்தார்.

அவ்வாறே கச்யபர், அத்ரி, வஸிஷ்டர், விச்வாமித்ரர், கௌதமர், பரத்வாஜர், ஆங்கிரஸர் என்ற ஸப்த ரிஷிகளும், வஸிஷ்டரின் மனைவியான அருந்ததியோடு சென்று பர்வதராஜனிடம் பெண் கேட்க, அவனும் உதயன், ஹேமகூடன், ரம்யகன், மந்த்ரன், உத்தாலகன், வாருணன், வராஹன், கருடாஸனன், சக்திமான், வேகஸானு, த்ருடச்ருங்கன், ச்ருங்கவான், சித்ரகூடன், திருகூடன் முதலான மற்ற பர்வதங்களின் ஆலோசனையையும், மேனையின் கருத்தையும் பெற்று ரிஷிகளிடம் உமா மஹேச்வர கல்யாணத்திற்கு இசைந்தான்.  ஸப்தரிஷிகளும் விவாஹ தினத்தைக் குறித்து விட்டு, ஈச்வரனிடம் சென்று செய்தியைக் கூறினார்கள்.

விவாஹத்திற்காக நந்தியின் ஆணைப்படி விஷ்ணு முதலான அனைத்து தேவர்களும் பரமன் வஸித்து வந்த மந்திர மலைக்கு வந்து சேர்ந்தனர்.  அதிதி, ஸுரபி, ஸுரமை என்ற மூவரும் பரமாத்மாவிற்கு அலங்காரங்களைச் செய்தனர்.  விஷ்ணுவும், ப்ரஹ்மனும் இருபுறத்திலும் செல்ல ஸுந்தரேசன் வ்ருஷபாரூடராய் திருமணத்திற்குப் புறப்பட்டார்.  தேவேந்த்ரன் ஐராவதத்தின் மேலிருந்து குடை பிடிக்க, கங்கையும், யமுனையும் சாமரம் வீச, கந்தர்வர் பாட, கின்னரர்கள் வாத்யம் இசைக்க, அப்ஸரஸ்ஸுகள் ஆட, பதினோரு கோடி ருத்ரரும், பனிரெண்டு கோடி ஆதித்யரும், எட்டு கோடி வஸுக்களும், அறுபத்தேழு கோடி கணங்களும், இருபத்தினான்கு சிவ கணங்களும் புடை சுழ இறைவன் ஆகாச வீதியில் சென்றார்.

அவர்கள் அனைவரையும் வரவேற்று உபசரித்து, ரத்ன வேதியில் தன் புத்ரியை அமர்த்தி, வரனை அர்ச்சித்து, புலகன் பேத்தியும், என் கன்யகையும், பித்ருக்களின் தௌஹித்ரியுமான பார்வதியை கன்யாதானம் செய்கிறேன், ஏற்றுக் கொண்டு அருள் புரிய வேண்டுமென்று ஈசனை வேண்ட, அவர் தனக்குத் தாய், தந்தையர் இல்லை என்று கூறி தேவியை மணந்து கொண்டார்.  ப்ரஹ்மா வைதிக கார்யங்களைச் செய்து வைத்தார்.  அப்போது பார்வதியின் தோழியும், சிவபக்தையுமான மாலினீ என்பவள் ஈச்வரனது பாதார விந்தங்களில் பணிந்து தன் தோழிக்கு ஸகல ஸம்பத்தையும் அளிக்க வேண்டுமென ப்ரார்த்திக்க, பகவான் தேவியை சங்கு, சக்ர, கதாபாணியாக மஹாவிஷ்ணுவாகவே செய்து, போதுமா என்று கேட்க அனைவரும் அதைக் கண்டு ஆனந்தித்தனர்.

அப்போது பார்வதியின் அழகைக் கண்டு ப்ரஹ்மன் மோஹம் கொள்ள அவன் இந்த்ரியம் வெளிப்பட்டு மணலில் விழுந்தது, அவன் அதை யாருக்கும் தெரியாமல் மணலில் மறைக்க முற்பட, தேவதேவன் அதை ஞானத்தால் உணர்ந்து, அதை மறைக்காதே, அதிலிருந்து எண்பத்தெட்டாயிரம் எண்ணிக்கையுள்ள வாலகில்ய ரிஷிகள் தோன்றப்போகின்றனர் என்று கூறினார்.  அப்படியே அவர்களும் தோன்றி கௌரீகல்யாணத்தைக் கண்டு ஸந்தோஷித்தனர்.  ஸகல ஜீவராசிகளும் மகிழ, தேவதேவன் தேவியோடு வ்ருஷபத்தில் ஏறி கைலாஸம் சென்றார்.

Tuesday, November 12, 2013

வாமன புராணம் - 09

வாமன புராணம் - 09
சிவலிங்க பூஜை: ஒரு ஸமயம் உமாமஹேச்வரி பரமேச்வரனிடம், தாருகாவனத்தில் ஆயிரமாண்டுகளாக தவம் புரிந்து கொண்டிருக்கும் எண்பத்தெட்டாயிரம் வாலகில்ய மஹர்ஷிகளிடம் தயை புரியுமாறு வேண்டினாள்.  ஈச்வரன் அவர்களுக்கு இன்னும் காம, க்ரோதம் அகலவில்லை என்று கூறினார்.  மறுபடியும் தேவி வற்புறுத்தவே, பரமன் திகம்பர ஸன்யாஸி வேடம் பூண்டு அவர்களிடம் சென்று பிக்ஷை கேட்டார்.  அவர்கள் எதையும் இவருக்குக் கொடுக்கவில்லை.  அவர்கள் மனைவிகள் இவர் மேல் ப்ரியங்கொண்டு உணவளித்து, மயங்கி இவர் பின்னாலேயே சென்றனர்.  இதைக் கண்ட அம்முனிவர்கள் ஸன்யாஸியின் லிங்கம் அறுந்து விழட்டும் என சபித்து விட்டனர்.  அவ்வாறே நடக்க, ஈச்வரன் தேவியிடம் சென்று இவர்களுக்கு எப்படி அருள் புரிவது என்று கேட்டார்.  முனிவர்கள் வந்தது ஈச்வரனென்பதை உணர்ந்து, ப்ரஹ்மனிடம் சென்று வருந்தினர்.  அவர் சர்வேச்வரனையே சரணமடையுமாறு கூற, முனிவர்கள் தேவதேவனை ப்ரார்த்திக்க, அவர் ப்ரத்யக்ஷமாகி லிங்க பூஜையை உபதேசித்து அருளினார்.

இந்த லிங்கத்தை மனிதர்கள் எடுத்துச் சென்று விடக்கூடாது என்று எண்ணிய தேவேந்த்ரன் தன் சஹாக்களுடம் இதை எடுக்க முயற்சி செய்தான். அது அசையவேயில்லை.  ப்ரஹ்மா கூறியபடி மருத்துக்கள் உதவியோடு அதன் மேல் புழுதியை மூடினான்.  அதுவும் ஒரு லிங்கமாயிற்று,  அதையும் முனிவர் எடுத்துச் சென்று விட்டனர்.  இப்படி ஏழு நாட்கள் புழுதியால் ஏழு லிங்கங்கள் உண்டாயின.  இதன் அருகில் ஸன்னிஹிதம் எனும் தீர்த்தமும், ஒரு ஆல மரமும் உள்ளது.  இந்த தீர்த்தமே த்ரேதாயுகத்தில் வாயு தீர்த்தம் என்றும், த்வாபர, கலி யுகங்களில் ருத்ரஹ்ரதம் என்றும் வழங்கப்படுகிறது.  இதனருகே ராவணன் கோகர்ணத்தையும், மேகநாதன் ஸித்திதம் எனும் லிங்கத்தையும், கும்பகர்ணன், விபீஷணன், கர, தூஷணன் முதலானவர்கள் வெவ்வேறு லிங்கங்களையும் ப்ரதிஷ்டை செய்து பூஜித்தனர்.  ஹாரீதர், ம்ருகண்டர், சித்ராங்கதன், விஷ்ணு, கார்த்தவீர்யன், ஹனுமான் முதலியவர்கள் சிவ லிங்க பூஜையாலேயே வேண்டிய வரங்களைப் பெற்றனர்.

வேனனும், ஸ்தாணு தீர்த்தமும்: மனுவின் முகத்திலிருந்து உண்டான க்ஷுவதனுக்கும், யமனுடைய புத்ரியான பயை என்பவளுக்கும் திருமணமாகி அவர்களுக்கு வேனன் என்ற ஒரு துஷ்டன் மகனாகப் பிறந்தான்.  அவன் வேத கர்மாக்களைத் தடுத்து, தன்னையே வழிபடுமாறு உலகங்களை ஹிம்ஸித்தான்.  இவன் ஸ்வபாவத்தால் மனம் நொந்த க்ஷுவதன் தவம் செய்து நற்கதியை அடைந்தான்.  மஹர்ஷிகள் இவனுக்கு எவ்வளவு அறிவுரைகள் கூறியும் இவன் திருந்தாததால் இவனை சபித்து விழச் செய்தனர்.  உலகம் அரசனில்லாது போகவே, இவன் இடக்கையைக் கடைந்து ஒருவனை வெளிக் கொணர்ந்தனர்.  வேனனுடைய பாபத்தால், தோன்றியவன் கொடுமையான குணங்கொண்டவனா இருக்கவே அவனை நிஷாதனெனும் வேடனாக்கி விட்டு, வேனனுடைய வலக்கையை கடைந்தனர்.  அதிலிருந்து ராஜகுணங்களோடு ஒரு புதல்வன் தோன்றினான். 
ராஜன் தன் தந்தை எந்த சரீரமெடுத்து இப்போது துன்புற்றுக் கொண்டிருக்கிறாரோ என்று வருந்திக் கொண்டிருக்கும் போது, நாரதர் அவனிடம் வந்து வேனன் மிலேச்ச ஜாதியில் ஒரு குஷ்ட ரோகியாகப் பிறந்திருப்பதை கூறினார்.  ராஜன் அவன் தந்தையைக் கண்டு பிடித்து அவர் பாபம் அகல அவரை ஸ்தாணு தீர்த்தத்தில் தீர்த்தமாட, ஒரு பல்லக்கில் வைத்து தூக்கி வந்தான்.  அப்போது "வேதநிந்தை செய்த இந்த பாபியைக் கொண்டு தீர்த்தத்தைக் கெடுத்து விடாதே, நீ ஸ்தாணுவில் தீர்த்தமாடி, அதன் தீர்த்தத்தைக் கொண்டு கரையில் வைத்து இவனை நீராட்டு, இவன் பாபங்கள் அகலும்" என்று அசரீரி கூறியது.  இந்த ஸமயத்தில் யமனுடைய சபையில் இருந்து தேவர்களுடைய பொருள்களை அஸுரர்கள் எடுத்துச் செல்லுவதைக் கண்டும், பேசாமலிருந்த ஸாரமேயன் எனும் தாஸனை யமன் பூமியில் நாயாகப் பிறக்குமாறு சபித்து விட்டான்.  அதுவும் ஸ்தாணு தீர்த்தத்தினருகில் அலைந்து கொண்டிருந்தது.  வேனன் அருகிலிருந்து அந்த நாயைத் தொடவே, அது பயந்து துள்ளி அருகில் இருந்த நதியில் விழுந்து, கரையேறி உடலை உதறியது.  அதன் மேலிருந்த ஸ்தாணு தீர்த்தத்தின் ஜலம் பட்டவுடன் வேனன் தன் பாபங்கள் அகன்று ம்லேச்ச உடல் நீங்கி அழகான உருவம் பெற்றான்.

பாபங்கள் அகன்ற வேனன் பரமேச்வரனைத் துதிக்க, அவர் ப்ரத்யக்ஷமாகி அவன் தன் பாபத்தால் அடுத்த பிறவியில் ஹிரண்யாக்ஷனுக்கு அந்தகன் என்ற பெயரில் பிறந்து, அம்பிகையின் மேல் காமம் கொள்வான் என்றும், அப்போது தானே சூலாயுதத்தால் அவனைக் கொன்று ப்ரிங்கிரிடன் எனும் சிவகணமாக்கி தன்னருகில் வைத்துக் கொள்வேன் என்றும் அருளினார்.  வேனன் தன் பாபங்களைப் போக்கிய அந்த நாய்க்கும் ஸ்வர்க்கத்தை அருள வேண்ட, இறைவனும் அவ்வாறே அருளி மறைந்தார்.  வேனன் ராஜனுக்கு ஆசிகள் கூறி, விமானமேறி மேலுலகம் சென்றான்.  ராஜன் அதன் பின் தன் ராஜ்யத்திற்கு வந்து பல வேத விஹித கர்மாக்களைச் செய்து, தன் புத்ரர்களிடம் ராஜ்யத்தைக் கொடுத்து விட்டு, குருக்ஷேத்ரத்தில் தவம் செய்து, உடல் நீங்கி அழியாப் பதவியைப் பெற்றான்.

ஒரு ஸமயம், ப்ரஹ்மாவின் உடலிலிருந்து அழகான ஒரு பெண் தோன்ற, அவர் அவளிடம் காமங்கொண்டு அவள் பின் ஓடினார்.  உடனே அவருடைய ஐந்தாவது தலை வெடித்துச் சிதறியது.  அவர் பரமேச்வரனை நோக்கித் தவம் புரிய, அவர் ப்ரத்யக்ஷமாகி, தான் வராஹ கல்பத்தில் ப்ரஹ்மாவின் ஐந்தாவது தலையைப் போக்கியதால், இனி ஒவ்வொரு கல்பத்திலும், எந்த காரணத்திலாவது அவர் ஐந்தாவது தலை போகும் என்று கூறி மறைந்தார்.  அதன் பின் ப்ரஹ்மா நான்கு லிங்கங்களைப் படைத்து குருக்ஷேத்ரத்திலும், வேறு சில இடங்களிலும் அவைகளை ப்ரதிஷ்டை செய்து பூஜித்தார்.

Sunday, November 10, 2013

வாமன புராணம் - 08

வாமன புராணம் - 08

தீர்த்தங்கள்: இதன் பின், மஹர்ஷிகள் தீர்த்தங்களின் மஹிமைகளைக் கூறுமாறு ஸூதரை வேண்ட அவர் கூறுகிறார்.  ஒரு ஸமயம் த்வைத வனத்தில் இருக்கும் போது, மார்க்கண்டேயர் மஹாவிஷ்ணுவின் நாவிலிருந்து உண்டான ஸரஸ்வதி நதியில் நீராடி, அதனைத் துதித்தார்.  உடனே ப்ரத்யக்ஷமான ஸரஸ்வதி அவரோடே அவர் செல்லும் வழியெல்லாம் வருவதாக அருளினாள்.  அவர் அவளை குருக்ஷேத்ரத்துக்கு அழைத்துச் செல்ல அங்கு ப்ரஹ்மஸரஸ், நாகஹ்ரதம், விஷ்ணு ஸ்தானம், விமலம், பாரிப்லவம், ஸததம், பஞ்சநதம், கோடி, ஸோம, ஏகஹம்ஸம், காணபத்யம், ராமஹ்ரதம்,ஸ்ரீ, ஸூர்ய, ப்ரஹ்மாவர்த்தம், ஸுதீர்த்தம், தசாச்வமேதம் முதலிய ஆயிரம் தீர்த்தங்கள் ஸரஸ்வதியின் அருளால் தோன்றின.  இங்குள்ள ஸரஸ்வதி, வைதரணீ, கங்கா, மந்தாகினீ, மதுச்ரவா, அம்லு, கௌசிகீ என்ற ஏழு நதிகளுக்கு புதிய ப்ரவாஹத்தின் போது வரும் ரஜஸ்வலா தோஷம் கிடையாது.  இங்குள்ள ஸுப்ரபை, காஞ்சனாக்ஷி, விமலா, மானஸஹ்ரதா, ஸரஸ்வத்தோயா, ஸுவர்ணா, விமலோதகா எனும் ஏழு நதிகள் கூடும் இடத்திற்கு ஸப்தஸாரஸ்வதம் என்று பெயர்.  இவைகளின் அருகில் காம்யகம், அதிதி, வ்யாஸ, பலகீ, ஸூர்ய, மது, சீத வனங்கள் இருக்கின்றன.  இந்த குருக்ஷேத்ரத்துக்குப் போவதாக நினைத்துக் கொண்டாலே புண்யம். இங்கு வஸிப்பவர்களுக்கு ப்ரஹ்மஞானம் உண்டாகும். அதிதி வாமனருக்காக தவம் புரிந்த அதிதி வனத்தைத் தர்சிப்பவர்க்கு சத்புத்ரர்கள் பிறப்பார்கள்.

ஒரு ஸமயம், ராமர் வனவாஸத்தில் துஷ்டர்களை சிக்ஷிக்கையில், ஒரு ராக்ஷஸனுடைய தலை அறுந்து ரஹோதரர் என்ற முனிவரின் தலையில் சென்று ஒட்டிக் கொண்டு விட்டது.  எந்த முயற்சியிலும் அங்கிருந்து அகலாத அந்த தலை, பல தீர்த்தங்களிலும் நீராடி பலனில்லாத போது ஔசனஸம் என்ற தீர்த்தத்தில் நீராடிய போது அகன்றது, இதனால் அந்த தீர்த்தத்திற்கு கபால மோசன தீர்த்தம் என்றும் பெயர் உண்டானது.

த்ருதராஷ்ட்ரன் ஒரு ஸமயம் தன்னிடம் யாசிக்க வந்த மஹர்ஷிகளை இகழ்ந்து பேசினான்.  தால்ப்யர் என்ற ரிஷி ப்ராஹ்மணர்களை அவமதித்த அவனை தண்டிக்க எண்ணி, தன் மாம்ஸத்தையே அறுத்து அருகிலிருந்த தீர்த்தத்தில் ஹோமம் செய்தார்.  த்ருதராஷ்ட்ரனின் ராஜ்யம் இதனால் கொஞ்சம், கொஞ்சமாக அழிய ஆரம்பித்தது.  தன் தவறை உணர்ந்த ராஜன் ப்ராஹ்மணர்களுக்கு போதுமென்ற அளவுக்கு மேலாக பொருளை அளித்து, தால்ப்ரது பாதங்களில் விழுந்து தன் தவறை மன்னிக்கக் கோரினான்.  அவரும் அவனுக்கு ஹிதோபதேசம் செய்து, தான் ஹோமம் செய்த தீர்த்தத்திலேயே அவனை நீராடும் படி கூறினார்.  அந்த தீர்த்தமே அவகீர்ணா என்று அழைக்கப்படுகிறது.

மற்றொரு ஸமயம், வஸிஷ்டரது ஆச்ரமத்தினருகே வஸித்துக் கொண்டிருந்த விச்வாமித்ரர் தன் தபோபலத்தால் ஸரஸ்வதி நதியை அருகே ஓடும்படி செய்து கொண்டு ஈச்வர ஆராதனை செய்து வந்தார்.  அப்போது அவர் வஸிஷ்டர் மேலிருந்த கோபத்தால் அவரை தன்னருகே அடித்து வரும்படி ஸரஸ்வதி நதியை ஏவினார்.  விச்வாமித்ரரின் கோபத்திற்குப் பயந்த ஸரஸ்வதியும் வஸிஷ்டரிடம் சென்று வருந்தினாள்.  அவரும் தன்னை அழைத்துப் போகும்படி சொன்னதால், ஸரஸ்வதியும் அவரை தன் ப்ரவாஹத்தால் விச்வாமித்ரர் ஆச்ரமத்திற்கு இழுத்து வந்தாள்.  அவரைக் கண்டவுடன் அவரை அடிக்க விச்வாமித்ரர் ஆயுதத்தைத் தேடுவதைக் கண்ட ஸரஸ்வதி, "இவர் சொற்படி வஸிஷ்டரை இங்கு இழுத்து வந்து விட்டோம், இப்போது இவரைக் காப்பாற்றி விட வேண்டும்" என்று மேலும் பெருகி வஸிஷ்டரைக் காப்பாற்றிச் சென்று விட்டாள்.  இந்த செயலைக் கண்ட விச்வாமித்ரர் ஸரஸ்வதியை ரக்தமாக ஓடும்படி சபித்துவிட்டார்.  ரக்த ஆறாக ஓடிய ஸரஸ்வதியை அண்டி பூத, ப்ரேத, ராக்ஷஸர்களும் சந்தோஷமாக ரக்தபானம் செய்து கொண்டு வஸித்து வரலாயின. 

பல காலத்திற்குப் பின் தீர்த்தயாத்ரையின் போது ஸரஸ்வதி நதியில் ரக்த வெள்ளத்தைக் கண்ட மஹர்ஷிகள், அவள் மூலமாக விச்வாமித்ரரது செயலை அறிந்து கொண்டனர்.  தங்கள் தபோபலத்தால் அருணை நதியை அங்கு அழைத்து ஸரஸ்வதியை மீண்டும் சுத்தப்படுத்தினர்.  அங்கு வஸித்து வந்த பூத, ப்ரேத, ராக்ஷஸர்கள் "ப்ராஹ்மணர்கள், ஆசார்யர்கள், பெற்றோர்களை அவமதித்ததால் நாங்கள் இவ்வாறு ஆனோம்.  நாங்கள் இனி உணவுக்கு என்ன செய்வோம்" என்று ரிஷிகளை வேண்ட, அவர்கள் "கவலை வேண்டாம், புழு, மயிர் இவைகளுள்ளது, ஆசாரமற்றவன் உண்ட மிச்சம், மூச்சுக் காற்று கலந்தது, இப்படிப்பட்ட அன்னம் இனி உங்களுடையது" என்று கூறினர்.  மேலும் அருணை, ஸரஸ்வதியின் ஸங்கமத்தில் அவர்களையும் நீராடச் செய்து அவர்களுக்கும் நற்கதி அளித்தனர்.  இந்த தீர்த்தம் வஸிஷ்டோத்வாஹம் எனப்படும்.

இந்த வெளியிலுள்ள தீர்த்தங்கள் எல்லாம் சரீரசுத்தியை மட்டுமெ செய்யும்.  இவற்றையல்லாது ஒவ்வொருவருடைய உடலிலும், ஆத்மாவெனும் பரம புண்ணியமான ஓர் நதி உள்ளது.  சீலம், சத்யம் இவைகளே அதன் தீர்த்தம்.  அடக்கமென்பது படித்துறை.  இந்த நதியில் தீர்த்தமாடினால் அவரவர் பாபங்களகன்று சித்தம் சுத்தமாகும்.  இந்த சுத்தமான எண்ணங்களை பரமாத்வாவிடம் அர்ப்பணிப்பதை விட வெறு புண்ய ஸ்நாநம் இல்லை.  சாதுக்களுக்கு ஸத்யம்,ஸமரஸம், ஒழுக்கம், கபடமில்லாமை, வெளி விஷயங்களிலிருந்து மனதை திருப்புவது இவைகளைத் தவிர வேறு தனங்களில்லை.

வாமன புராணம் - 07

வாமன புராணம் - 07

வாமனாவதாரம்: தைத்யேந்த்ரனான ஹிரண்யாக்ஷனின் மகன் ப்ரஹ்லாதன். அவன் மகன் விரோசனன். விரோசனன் மகன் பலி.  இந்த பலி சக்ரவர்த்தி தாத்தாவின் உபதேசங்களால் உயர்ந்த தர்மங்களைக் கொண்டு ராஜ்ய பரிபாலனம் செய்து வரலானான்.  ராக்ஷஸர் யாவரும் இவன் வழியிலேயே தேவ தர்மங்களில் ஈடுபட, தர்மம் நான்கு பாதங்களோடு நன்கு தழைத்தோங்கியது.  லக்ஷ்மியும் இதனால் தேவேந்த்ரனை விட்டு இவன் உடலில் ஆவிர்பவித்து வஸித்து வரலானாள்.  மூவுலகையும் பலி சக்ரவர்த்தியே ஆண்டு வரலானான்.

பதவியை இழந்த இந்த்ரன் மேருமலையில் இருக்கும் தன் தாயான அதிதி தேவியைக் கண்டு தன் நிலையைக் கூறினான்.  அவன் தந்தையான கச்யபர் அவனையும், தேவர்களையும் அழைத்துக் கொண்டு ப்ரஹ்மலோகத்திற்குச் சென்றார்.  வேத, இதிஹாஸங்களால் ஸ்வரூபத்துடன் துதிக்கப்பட்டுக் கொண்டிருந்த ப்ரஹ்மதேவர் இவர்கள் குறைகளைக் கேட்டு, ச்வேத த்வீபத்தில் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரமனிடம் செல்லுமாறு கூறினார்.  அங்கு அனந்த சயனத்தில் இருந்த மஹாவிஷ்ணு கச்யபர் ஸ்துதிகளில் மகிழ்ந்து அவர் முன் தோன்றினார்.  மஹாவிஷ்ணுவே தனக்குக் குழந்தையாக அவதரிக்க வேண்டும் என்று கச்யபர் வரம் வேண்டினார்.  அவரும் அவ்வாறே தோன்றி, தேவேந்த்ரனுக்கு அவன் பதவியை மீட்டுக் கொடுப்பதாக வரமளித்தார்.

அதிதியும் பல்லாண்டுகள் தவம் செய்தபின், அவள் கர்ப்பத்தில் பகவான் கருவானார். அவளால் உலகமே அதிர்ந்தது.  அதிதி கால் வைத்த இடமெல்லாம் தாழ்ந்தது.  இந்த சகுனங்களைக் கண்ட பலி, தாத்தாவிடம் இதன் காரணத்தைக் கேட்டான்.  அவர் தன் ஞான த்ருஷ்டியால் நடக்கப் போவதையெல்லாம் கூறினார்.  தன் ராஜ்யம் கைவிட்டுப் போகப்போவதைக் கேட்ட ராஜன் கோபம் கொண்டு பகவானை நிந்தித்து, அவரைக் கொல்லப்போவதாகக் கூறினான்.  இந்த நிந்தைகளைப் பொறுக்காத ப்ரஹ்லாதர், தன் காதுகளை மூடிக் கொண்டார்.  தன் இஷ்ட தேவதையை நிந்தித்த அவனை விட்டு நிச்சயம் ராஜ்யம் அகன்று விடும் என்று சபித்து விட்டுக் கிளம்பலானார்.  தன் தவறுகளுக்கு வருந்திய பலி அவரை மன்னித்து விடுமாறு வேண்டினான்.  ப்ரஹ்லாதனும் தன் சாபத்தை நினைத்து வருந்தி, ஹரியையே சரணமடையுமாறு அவனுக்கு போதித்து விட்டு தீர்த்த யாத்ரைக்குச் சென்று விட்டார்.

பத்து மாதங்களில் அதிதி வாமனரைப் பெற்றாள்.  தேவ வாத்யங்கள் முழங்க, தேவர்கள் பூமாரி பொழிய, சாதுக்கள் ஜயஜய என்று கோஷிக்க கச்யபர் குழந்தைக்கு ஜாத கர்மம் முதலாக உபநயனத்தையும் செய்து வைத்தார்.  ப்ரஹ்மா குழந்தைக்கு மான் தோலையும், ப்ருஹஸ்பதி பூணூலையும், மரீசி தண்டத்தையும், வஸிஷ்டர் கமண்டலத்தையும், ஆங்கிரஸ் தர்ப்பையையும், புலஹர் ஆஸனத்தையும், இன்னும் பலர் பல பொருள்களையும் தந்தனர். வேத, சாஸ்த்ரங்கள் உருக்கொண்டு வாமனரைப் போற்ற, ப்ருஹஸ்பதியை முன்னிட்டுக் கொண்டு, முனிவர்களோடு அவர் புவியதிர பலி சக்ரவர்த்தியின் யாகசாலைக்குப் புறப்பட்டார்.

பூமி அதிர்வதற்குக் காரணம் என்ன என்று யாகசாலையில் பலி சுக்ராச்சார்யரைக் கேட்க அவர் தன் த்ருஷ்டியால் வாமனர் வருவதை அறிந்து, "தேவர்களுக்குப் பாகம் அளிக்காமல் நடக்கும் இந்த யக்ஞம் விஷ்ணுவுக்கு ப்ரியமானதல்ல.  எனவே உன் ராஜ்யத்தைப் பறித்து தேவேந்த்ரனுக்கு அளிப்பதற்காக அவரே வாமனராக இங்கு வந்து கொண்டிருக்கிறார்.  அவருக்குத் தகுந்த மரியாதைகளை அளித்து அவரைத் திருப்பி அனுப்பி விடு.  சிறு பொருளைக் கூட அவருக்குத் தானம் கொடுப்பதாக ப்ரதிக்ஞை செய்து விடாதே" என்று பலியை எச்சரித்தார்.  அவனோ தன் தர்மத்தால், "சாமான்யர் கேட்டாலே நான் கொடுத்து விடுவேன். அப்படி இருக்க, எந்த பரம புருஷனைக் காண சாதுக்களும் பூஜை, வ்ரதம், யக்ஞம், தவம் இவைகளால் தங்களை வருத்திக் கொள்கிறார்களோ, அந்த புருஷோத்தமனே என்னிடம் வரும்போது அவருக்கு எதையும் அளிப்பேன்.   அனைத்துயிர்க்கும் படியளக்கும் அவரே என்னிடம் யாசிக்கையில் என் உயிரையும் அவருக்குக் கொடுப்பேன்.  இதை விட எனக்கு வேண்டியது வேறெதுவுமே இல்லை.  ஒருவன் தான் ஒரு பொருளை அனுபவிப்பதை விட, பிறருக்கு அதைக் கொடுப்பதிலேயே பல மடங்கு மகிழ்வான்.  அவர் என்னிடம் யாசித்துப் பெற்றாலும் சரி, அல்லது என்னைக் கொன்றாலும் சரி, எதுவும் எனக்கு சிறப்பே" என்று கூறினான்.

யாகசாலையில் நுழைந்த வாமனரை அனைவரும் எழுந்து பூஜித்தனர்.  பலியும் அவரிடம் மெய் மறந்து அவருக்கு நீரளித்து, ஆஸனமிட்டு நமஸ்கரித்து, தன் ராஜ்யமுட்பட எதையும் அவருக்குத் தானமளிக்க சித்தமாக இருப்பதாகக் கூறி, எதை வேண்டுமானாலும் பெற்றுக் கொண்டு தன்னை தன்யனாக்க வேண்டுமென்றுக் கேட்டுக் கொண்டான். வாமனரோ தான் அக்னி பூஜை செய்ய தன் காலால் மூன்றடி மண் வேண்டுமென்று அவனைக் கேட்டார்.  இதைக் கேட்டுச் சிரித்த பலிச்சக்ரவர்த்தி இன்னும் வேண்டுமளவு, வேண்டியவைகளைக் கேட்கவேண்டுமென்று ப்ரார்த்தித்தான்.  பகவான் "அவைகளைக் கேட்பவர்களுக்கு அவைகளைக் கொடு, எனக்கு இதை மட்டும் கொடு, போதும்" என்றார்.  பலியும் அவ்வாறே ஆகட்டும் என்று அவர் கைகளில் தீர்த்தத்தை விடலானான்.  உடனேயே வாமனர் தன் விச்வரூபத்தை அவனுக்குக் காட்டி, ஸகல லோகங்களையும் தன் கால்களால் அளந்து தேவேந்த்ரனுக்குக் கொடுத்தார்.

பலிச்சக்ரவர்த்தியை ஆசிர்வதித்து அவனை பாதாள லோகத்தில் சென்று வஸிக்குமாறு கூறினார்.  தனக்கு அளித்த தான மஹிமையால் ஒரு கல்ப காலத்திற்கு அவனுக்கு ஆயுள் இருக்குமென்றும், ஸாவர்ணிக மன்வந்த்ரத்தில் அவனே தேவேந்த்ர பதவியையும் அடைவான் என்றும், ப்ராஹ்மணர்களையும், தேவர்களையும் ஹிம்ஸிக்காத வரை ஸகல செல்வங்களையும் அடைவான் என்றும் ஆசிர்வதித்து அனுப்பினார்.  பலி பாதாள லோகத்தில் தனக்கு உணவை வேண்ட, வாமனர் "விதிப்படி செய்யாத தானமும், ச்ரத்தை, நெய் இவைகளில்லாத ஹோமமும், தக்ஷிணையில்லாத யாகமும், தீர்த்தமில்லாத பூஜையும் உனக்கு உணவாகும்" என்று கூறி அருளினார். 

மேலும், ஆடி மாத சுக்ல பக்ஷ ஏகாதசியில் உபவாஸமிருந்து, த்வாதசியில் தனது இந்த அவதாரத்தைப் பூஜிப்போர் வைகுண்டததை அடைவர் என்று கூறி மஹாவிஷ்ணு மறைந்தார்.  இந்த வாமன சரிதத்தைப் படிப்பவர்களது ஸகல பாவங்களும் அகலும், கேட்பவர் நினைத்த பலனை அடைவர் என்று சூதரும் சரிதத்தை முடித்தார்.

Friday, November 8, 2013

வாமன புராணம் - 06

வாமன புராணம் - 06

குருக்ஷேத்ர வரலாறு: க்ருதயுகத்தில் சந்த்ர வம்சத்து அரசனான ரிக்ஷனுக்கு ஸம்வரணன் என்றோர் மகன் பிறந்தான்.  அவன் குணத்தில் அதிசயித்த வஸிஷ்டர் அவனை விரும்பி அவனுக்கு புரோஹிதரானார்.  அவனது சந்தோஷத்தை விரும்பிய வஸிஷ்டர் ஒரு ஸமயம் ஸூர்யனிடம் சென்று "என் சிஷ்யன் ஸம்வரண ராஜன் உன் புத்ரியான தபதியை தோழிகளுடன் வனத்தில் கண்டு, அவளை விரும்புகிறான்.  சிறந்த குணவானானதால் அவனுக்கு அவளை மணம் செய்து வைக்க வேண்டும்" என்று வேண்டினார்.  அவனும் அவருக்குத் தக்க மரியாதைகளைச் செய்து அந்த அப்ஸரஸை அவருடன் அனுப்பி வைத்தான்.  வஸிஷ்டர் விதிப்படி அவர்களுக்கு விவாஹத்தை செய்து வைத்தார்.

இவர்களுக்கு குரு எனும் குழந்தை பிறந்தான்.  அவன் சௌதாமினி என்ற கன்யகையை மணந்து, வெகுகாலம் நீதி தவறாது ஆட்சி புரிந்த போது ஒரு ஸமயம் த்வைத வனத்திற்கு வந்தான்.  பாபம் போக்கும் பல நதிகளை அங்கு கண்டான்.  அங்கு ஒரு வேள்வி செய்ய ஆசைப்பட்டு தானே தங்கக் கலப்பையால் பூமியை உழ ஆரம்பித்தான். இதைக் கண்ட தேவேந்த்ரன் எதற்காக உழுகிறீர் என்று அவனைக் கேட்டான்.  ராஜன் தபம், ஸத்யம், பொறுமை, தயை, சௌசம், தானம்,யோகம், ப்ரஹ்மசர்யம் ஆகியவைகளை அங்கு பயிரிடப்போவதாகக் கூற அவன் சிரித்துக் கொண்டே சென்று விட்டான்.  மீண்டும் மஹாவிஷ்ணு அங்கு வந்து கேட்க, ராஜனும் அதே பதிலையே கூறினான்.  விஷ்ணு இதற்கு விதைகளை எங்கு தேடுவாய் என்று கேட்க அரசன் தன்னிடமே அவைகள் இருப்பதாக, தன் கைகளைக் காட்டினான்.  விஷ்ணு தன் சக்ரத்தால் அவைகளை பூமியில் அறுத்துத் தள்ளினார்.  இப்படி அவனது ஒவ்வொரு உறுப்புகளையுமே அறுத்துத் தள்ளினார்.  இறக்கும் தருவாயில் அரசன் தான் உழுத இந்த இடம் புண்ய பூமியாக இருக்க வேண்டும், அங்கு அனுஷ்டிக்கும் ஸத்கர்மாக்கள் அபரிமிதமான பலன்களைத் தரவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டான்.

மஹாவிஷ்ணு குருராஜனின் த்யாகத்தை ஆசிர்வதித்து "இந்த பூமி குருக்ஷேத்ரம் என்ற பெயரோடே இருக்கும்.  உலகுள்ளவரை உன் புகழும் அழியாது.  இந்த க்ஷேத்ரத்தைக் காக்க யக்ஷன், வாஸுகி, சங்குகர்ணன் முதலானவர்களை நியமிக்கிறேன், ப்ருதூதகமெனும் நதியும் இங்கு ஓடும்படி செய்கிறேன்" என்று கூறி மறைந்தார்.

வாமன புராணம் - 05

வாமன புராணம் - 05

மஹிஷாஸுர வதம்: ரம்பன், கரம்பன் என்ற இரு ராக்ஷஸ ஸஹோதரர்கள் எவராலும் வெல்லத்தகாத புத்ரனை வேண்டி பஞ்சநத க்ஷேத்ரத்தில் தவமிருந்தனர்.  ரம்பன் ஓர் ஆலமரத்திற்கருகே பஞ்சாக்னி மத்தியிலும், கரம்பன் ஜலத்தில் மூழ்கியும் தவம் புரிந்தனர்.  இதையறிந்த தேவேந்த்ரன் முதலையாக வந்து கரம்பனைக் கொன்று விட்டான். இதனால் பெருந்துயர் கொண்ட ரம்பன் தன் தலையையே அறுத்து நெருப்பிலிட்டு தவம் புரியத் தொடங்கினான்.  உடனே அக்னிதேவன் அவனெதிரில் தோன்றி அவனுக்கு எவராலும் வெல்ல இயலாத, நினைத்த உருவெடுக்கும் ஒரு புத்ரன் பிறப்பான் என்று வரமளித்து, வாழ்த்தி மறைந்தான்.

வெகுகாலம் தவம்புரிந்து வரம் பெற்ற சந்தோஷத்தில் ரம்பன் அங்கிருந்து கிளம்பி வந்து கொண்டிருந்த போது வழியில் யக்ஷர்கள் வஸிக்குமிடமான மாலவடம் எனும் ஆலமரத்தினருகே ஓய்வெடுத்துக் கொண்டிருந்த யானை, குதிரை, எருமை முதலான விலங்குகளைக் கண்டான்.  அங்கிருந்த ஒரு பெண்ணெருமையைக் கண்டவுடன் இவனுக்கு காமம் தோன்றியது.  அந்த எருமையும் இதற்கு இசைந்து கர்ப்பமாயிற்று.  இதனால் பாதாள லோகத்தில் எவரும் இவனுக்கு இடமளிக்காது விரட்டி விட்டனர்.  மீண்டும் ஆலமரத்திற்கே வந்தான்.  அங்கு அவனுக்கு மஹிஷன் பிறந்தான்.  பெண்ணெருமையிடம் ஆசை கொண்டிருந்த மற்றொரு எருமைக்கிடா ரம்பனைக் கொன்று விட்டது.  பெண்ணெருமை பயந்து ஓடி யக்ஷர்களைத் தஞ்சமடைந்தது.  கிடா எருமை அருகிலிருந்த நதியில் ஓடித் தன் உயிரை விட்டது.  அதுவே நமரன் என்ற அஸுரனாகத் தோன்றிற்று.  ரம்பன் உடலை பெண்ணெருமைத் தீயிலிட அதிலிருந்து ரக்தபீஜன் எனுமரக்கனும் தோன்றினான்.  நமரன், மஹிஷன், ரக்தபீஜன் மூவரும் உலகை பீடிக்கலாயினர்.

இவர்கள் கொடுமைகளைத் தாங்காத தேவர்கள் மஹாவிஷ்ணுவையும், மஹேச்வரனையும் சரணடைந்தனர்.  இதைக் கேட்டு கோபம் கொண்ட ஹரிஹராதி தேவர்களின் முகங்களிலிருந்தும் தேஜஸ் வெளிக்கிளம்பிற்று.  அது காத்யாயனர் எனும் மஹர்ஷியின் தேஜஸ்ஸோடு கலந்து காத்யாயனீ எனும் தேவியாக உருவெடுத்து நின்றது.  எல்லா தேவர்களும் தேவியைத் துதித்து ஸகல ஆபரணங்களையும், ஆயுதங்களையும் அளித்தனர்.  தேவியும் ஸந்தோஷமடைந்து காலம் வரும்போது ராக்ஷஸர்களைக் கொல்வதாகக் கூறி ஸிம்ஹத்தின் மீதேறி விந்த்ய மலைக்குச் சென்றாள்.

விந்த்ய மலையும், அகஸ்த்யரும்: ஒரு ஸமயம் விந்த்ய பர்வதம் ஸூர்யனும் கடக்க முடியாத அளவிற்கு வளர்ந்து நின்றது. ஸூர்யனின் வேண்டுகோளின்படி அகஸ்த்யர் விந்த்ய பர்வதத்திடம் சென்று, தான் அதைக் கடந்து தெற்கே செல்ல விரும்புவதாகவும், தான் சென்று, வரும் வரை தனக்கு வசதியாக அதன் உயரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வேண்டினார்.  விந்த்ய பர்வதமும் அதற்கு ஒப்புக் கொண்டு தன் உயரத்தைக் குறைத்துக் கொண்டு அவரை அனுப்பி வைத்தது.  தெற்கே சென்ற அகஸ்த்யர் விதர்ப ராஜனின் புத்ரியான லோபாமுத்ரையை மணந்து கொண்டு, அங்கேயே ஆச்ரமம் அமைத்துக் கொண்டு இருந்து விட்டார்.

அந்த விந்த்ய மலையில் தேவியைக் கண்ட சண்ட, முண்டாஸுரர்கள் உடனே அவள் அழகையும், சக்தியையும் மஹிஷனிடம் சென்று கூறினர்.  அவனும் உடனே ஸுந்தரியின் அழகில் மயங்கி, அவளை மணம் புரியக் கருதி படையோடு வந்து மலையடிவாரத்தில் தங்கினான்.  அவன் தூதுவனாக மயனுடைய மகன் துந்துபி தேவியிடம் சென்று, மஹிஷனின் பராக்ரமங்களை எடுத்துக் கூறி அவனை மணக்குமாறு கூறினான்.  தேவி சிரித்துக் கொண்டே தன்னை யுத்தத்தில் ஜயிப்பவரையே தான் மணக்க நிச்சயித்திருப்பதாகக் கூறினாள்.  போர் மூண்டது, தேவி தனது கணங்களோடு தாண்டவமாடி, மஹிஷனையும் அவன் சேனைகளையும் விளையாட்டாகக் கொன்று குவித்தாள்.  தேவர்கள் பூமாரி பொழிந்து தேவியை வணங்கித் துதித்தனர்.  தேவியும் அவர்களை ஆசிர்வதித்து மறைந்தாள்.

மற்றொரு ஸமயம் ஸும்ப,நிஸும்பர்களின் அட்டஹாஸம் பொறுக்காது தேவர்கள் ச்வேத த்வீபத்தில் பாற்கடலில் பள்ளிக் கொண்டிருக்கும் பரமனிடம் சென்று, அவர்கள் வதத்தை வேண்டி நின்றனர்.  அவர் "தாக்ஷாயணியைப் பிரிந்து தக்ஷிணாமூர்த்தியாக தவம் புரிந்து கொண்டிருக்கும் பரமேச்வரன் மீண்டும் தேவியை பர்வதராஜனின் புத்ரியாக மணம் புரிந்து, ஸுப்ரமண்யன் எனும் திருக்குமாரனை தோற்றுவிப்பான்.  அவனே தேவஸேனாபதியாகி இந்த அஸுரர்களைக் கொல்வான்.  அதை வேண்டி நீங்கள் குருக்ஷேத்ரத்தில் சென்று தவம் செய்யுங்கள்" என்று கூறினார்.

Tuesday, November 5, 2013

வாமன புராணம் - 04

வாமன புராணம் - 04

தேவர்கள் உறங்கும் காலம்: மஹாவிஷ்ணு ஆடி மாத சுக்ல பக்ஷ ஏகாதசியில் ஆதிசேஷன் மீது படுத்துக் கொண்டு த்வாதசியன்று ப்ராஹ்மணர்களிடம் விடை பெற்றுக் கொண்டு உறங்குகிறார்.  த்ரயோதசியில் மன்மதன் புஷ்பங்களின் மீதும், சதுர்த்தசியில் யக்ஷர்கள் தங்கத் தாமரையிலும், பௌர்ணமியில் சிவன் புலித்தோலிலும், ப்ரதமையில் ப்ரஹ்மா நீலோத்பலத்திலும், த்விதீயையில் விச்வகர்மாவும், த்ருதீயையில் பார்வதியும், சதுர்த்தியில் பிள்ளையாரும், பஞ்சமியில் யமனும், ஷஷ்டியில் முருகனும், ஸப்தமியில் ஸூர்யனும், அஷ்டமியில் காத்யாயனியும், நவமியில் லக்ஷ்மியும், தசமியில் பாம்புகளும், ஏகாதசியில் ஸாத்யர்களும் உறங்குகின்றனர்.

த்விதீயையில் விஷ்ணுவை லக்ஷ்மியோடு தங்கக் கட்டிலில் படுக்க வைத்து பூஜிப்பது அசூன்ய சயன த்விதீயை வ்ரதமாகும்.  ஆச்வயுஜ அஷ்டமியில் உபவாஸமிருந்து நவமியில் சிவபூஜை செய்வது காலாஷ்டமி வ்ரதமாகும்.

ஊர்வசி தோன்றியது: ஒரு ஸமயம் நர, நாராயணர்களது தவத்தைப் பொறுக்காத தேவேந்த்ரன் அவர்களது தவத்தைக் கலைக்க, தேவலோகத்தின் சிறந்த அப்ஸரஸ்ஸுகளையும், காமனையும், வஸந்த ருதுவையும் அனுப்பி வைத்தான்.  இவர்கள் வருகையின் நிமித்தத்தை அறிந்த, நாராயணர் அவர்களும் மயங்கும்படியான ஒரு அழகியை தன் தொடையைத் தட்டி உருவாக்கினா.  அவளும் அவர்களை வரவேற்று, நன்கு உபசரித்தாள்.  நாராயணரது வலிமையைக் கண்ட அவர்கள் வெட்கித் தலைகுனிந்தனர்.  தன் தொடையிலிருந்து தோன்றிய அவளை ஊர்வசி என்று அவர்களுக்கு (ஊரு=தொடை)அறிவித்து, அவளையும் தேவலோகத்திற்கு அழைத்துச் செல்லும்படி கூறினார்.  இந்த்ரனும் அவளழகைக் கண்டு, நர, நாராயணர்களது பராக்ரமத்தை அறிந்தான்.

வாமன புராணம் - 03

வாமன புராணம் - 03

ஸுகேசி பெற்ற தர்மோபதேசம்:  வித்யுத்கேசியின் மகனான இவனுடைய நீண்ட கடுந்தவத்தால் மகிழ்ந்து சிவபெருமான் எங்கும் ஸஞ்சரிக்கும் ஒரு நகரையே இவனுக்கு அளித்தார்.  ஒரு ஸமயத்தில் மாகத வனத்திலிருந்த மஹர்ஷிகளைத் துதித்துத் தனக்கு தர்மோபதேசம் செய்யக் கேட்டுக் கொண்டான் ஸுகேசி.  அவர்களும் தேவர் முதல் மனுஷ்யர் வரையிலான பன்னிருவர்களுக்கும் ப்ரஹ்மா விதித்த தர்மங்களை பின்வருமான விரிவாக எடுத்துக் கூறினர்.

யஜ்ஞம், வேதார்த்த விசாரம், விஷ்ணுவை பூஜிப்பது இவை தேவ தர்மம்.  பலம், பொறாமை, சண்டை, நீதி விசாரம், சிவபக்தி இவை தைத்ய தர்மம்.  யோகம், வேதம், ப்ரஹ்ம ஞானம், விஷ்ணு பக்தி இவை ஸித்த தர்மம்.  உபாஸனம், நடனம், வாத்யம், ஸரஸ்வதி பக்தி ஆகியவை கந்தர்வர்களுக்கு தர்மம்.  வித்யாதரர்களுக்கு கல்வி, பௌருஷம், பவானி பக்தி ஆகியவையே தர்மங்கள்.  ப்ரஹ்மசர்யம், யோகாப்யாஸம், எங்கும் ஸஞ்சரித்தல் ஆகியவை பித்ரு தர்மங்கள்.  ஸத்யம், ஞானம், ஜபம், நியமம், தர்ம விசாரம் இவை ரிஷி தர்மங்கள்.  மனுஷ்யர்களுக்கு வேதம், தானம், யாகம், பொறாமையில்லாமை, தயை, அஹிம்ஸை, பொறுமை, இந்த்ரிய ஜயம், சுத்தம், விஷ்ணு, ஸூர்யன், சிவ-பார்வதி பக்தி ஆகியவையே தர்மங்கள்.  தனாதிபத்யம், ஸுகம், வேதம், சிவபக்தி, அஹங்காரம் இவை குஹ்ய தர்மங்கள்.  பரதார, பரத்ரவ்யங்களில் ஆசை, வேதம், சிவபக்தி ஆகியவை ராக்ஷஸ தர்மங்கள்.  விவேகமில்லாமை, பொய், அனாசாரம், மாம்ஸத்தில் ஆசையோடிருத்தல் இவை பிசாச தர்மங்கள்.

ஜலத்தின் மீது ஐம்பது கோடி யோஜனை விசாலத்துடன் மிதந்து கொண்டிருக்கும் இந்த பூமியில் ஜம்பூ, ப்லக்ஷ, சால்மலீ, குச, க்ரௌஞ்ச, சாக, புஷ்கர என்ற ஏழு த்வீபங்களுள்ளன.  இதில்  ஜம்பூ த்வீபமே கர்மங்களுக்கு உரியது.  இந்த ஜம்பூ த்வீபத்தில் பாரத, கிம்புருஷ, ஹரி, ரம்யக, ஹிரண்மய, குரு, பத்ராச்வ, இலாவ்ருத, கேதுமாதலம் ஆகிய ஒன்பது வர்ஷங்கள் இருக்கின்றன.  மஹேந்த்ர, மலய, விந்த்ய, ஸஹ்ய முதலான பர்வதங்களும், அவைகளிலிருந்து உண்டான ஸரஸ்வதி, யமுனா முதலான நதி, நதங்களும் பாரத வர்ஷத்தில் உள்ளன. ப்லக்ஷ முதல் சாக வரையிலான த்வீபங்களில் தேவ தர்மமே விதிக்கப்பட்டுள்ளது.  புஷ்கரத்தில் ரௌரவம், மஹாரௌரவம், தாமிஸ்ரம், அந்ததாமிஸ்ரம், காலஸூத்ரம், அப்ரதிஷ்டம், கடீயந்த்ரம், அஸிபத்ரவனம், தப்தகும்பம், கூடசால்மலி, கரபத்ரம், ச்வானபோஜனம், ஸந்தம்சம், லோஹபிண்டம், கரம்பஸிகதம், க்ஷாரநதி, க்ருமி போஜனம், வைதரணீ, க்ஷுராக்ரதாரம், சக்ரகம், ஸம்சோஷணம் என்ற இருபத்தோரு கொடிய நரகங்கள் இருக்கின்றன.

தண்டனைகள்: தேவர், த்விஜர், வேத புராணங்கள், குரு இவர்களை நிந்திப்பவர், யாக, தானங்களைக்  கெடுப்பவர், நண்பர்கள், தம்பதிகளைக் கலைப்பவர், ஒருவருக்குத் தானம் செய்யப்பட்ட கன்யகையை வேறொருவருக்கு மீண்டும் தானம் செய்பவர் முதலியவர்கள் கூர்மையான கத்தியால் இரண்டாகப் பிளக்கப்படுவர்.  பிறருக்கு வருத்தமளிப்பவன், சந்தனம், விசிறி இவைகளைத் திருடுபவன் கரம்பஸிகதம் செல்வர்.  தேவ, பித்ரு கார்யங்களில் புஜிப்பதற்காக வரிக்கப்பட்டவர் பணத்தாசையால் வேறிடம் சென்றால் கழுகுகளால் குத்தி, இரண்டாக கிழிக்கப்படுவர்.  ஸாதுக்களை கடுஞ்சொற்களால் துன்புறுத்துபவனது நாக்கை கழுகு கிழிக்கும்.  தேவர், அதிதி, பெற்றோர், சிறுவர்கள், கர்ப்பிணிகள் உண்பதற்கு முன்பு உண்பவன் மல, மூத்ரங்களைப் புஜித்து புழுவாய்ப் பிறப்பான்.  பந்தி வஞ்சனை செய்வோரும் மலத்தை புஜிப்பர்.  எச்சிலோடு பசு, ப்ராஹ்மணர், அக்னி இவைகளைத் தொடுபவனது கைகள் தப்த கும்பத்தில் காய்ச்சப்படும்.  இவர்களுக்கு எதிராக மல, ஜலம் கழிப்பவர்களது ஆஸன த்வாரங்களை காக்கை கொத்தும்.

எச்சிலோடு ஸூர்ய, சந்த்ர, நக்ஷத்ரங்களைப் பார்ப்பவரது கண்கள் பிடுங்கப்படும்.  பெரியவர்களைக் கால்களால் மிதிப்பவர்களது கால்கள் கட்டப்பட்டு நரகத்தில் தள்ளப்படும்.  பாயஸம், பக்ஷணங்களை நிவேதனத்திற்கல்லாது தனக்காக செய்து உண்பவர்கள் வாயில் உருக்கிய இரும்பு விடப்படும்.  தண்ணீர்ப்பந்தல், மடம், கோவில், குளம், பூங்காக்களை அழிப்பவர்கள் தோல் கத்தரிக்கோலால் வெட்டப்படும்.  பஞ்சம் வந்த போது பிறர்க்கு எதுவும் அளிக்காமல் தன்னை மட்டுமே காத்துக் கொள்பவன் நாயாகப் பிறப்பான்.  நம்பி வந்தவர்களைக் கைவிட்டவன் எந்திரத்தில் தள்ளப்படுவான்.  புரோஹிதர்களைத் துன்புறுத்துபவனைப் பாறையில் அடிப்பர்.  கொடுத்து வைத்திருந்த பொருளை இல்லை என்பவன் தேள்கள் நிறைந்த குழியில் விழுவான்.  ச்ராத்த திதியில் இரு முறை புஜிக்கும் கர்த்தாவும், வரிக்கப்பட்ட ப்ராஹ்மணனும் ஒருவரை ஒருவர் அடித்துத் தின்பர்.  வேதம், அக்னி, குரு இவர்களைக் கைவிட்டவன் மலையிலிருந்து தள்ளப்படுவான்.  சண்டாளனிடம் தானம் வாங்குபவன் கல்லினுள் தேரையாக ஜனிப்பான்.

ப்ரஹ்மஹத்தி, கள்ளுண்ணுதல், பொன் திருட்டு, குரு மனைவியோடு சேர்தல், இந்த நான்கு பாபங்களையும் செய்தவர்களோடு சேருதல் இந்த ஐந்தும் பஞ்ச மா பாபங்கள் எனப்படும்.  இவர்களும், பசு, நிலங்களை அபஹரித்தவர்களும், பசு, வேதம் இவைகளை விற்பவர்களும், நன்றி மறந்தவர்களும் பத்தாயிரமாண்டுகள் தாமிஸ்ரம், அந்ததாமிஸ்ரம், அஸிபத்ரவனம், கடீயந்த்ரம், தப்தகும்பம் இவைகள் ஒவ்வொன்றிலும் இருப்பர்.

தேவரில் விஷ்ணுவும், நதிகளில் கங்கையும், க்ஷேத்ரத்தில் குருஜாங்கலமும், லோகங்களில் ப்ரஹ்மலோகமும், சாஸ்த்ரங்களில் வேதமும், ரிஷிகளில் அகஸ்த்யரும், புராணங்களில் மத்ஸ்யமும், புஷ்பங்களில் ஜாதியும், ஸ்ம்ருதிகளில் மனுவும், நாற்கால் ப்ராணிகளில் பசுவும், நகரங்களில் காஞ்சியும், வ்யாதிகளில் அஜீர்ணமும், சுவைகளில் உப்பும், பதிவ்ரதைகளில் பார்வதியும், நரகத்தில் வைதரணியும், பாபத்தில் நன்றி மறப்பதும் சிறந்தவைகளாகும்.

ஆச்ரம தர்மம்: ப்ரஹ்மசாரி குருவிடம் காட்டாமல் எதையும் உண்ணக்கூடாது.  குரு கூப்பிடும்போதே கற்கச் செல்ல வேண்டும்.  தக்ஷிணை கொடுத்த பின் பக்குவத்திற்கேற்ப  கார்ஹஸ்த்யம், வானப்ரஸ்தம், ஸன்யாஸம் இவைகளைக் கொள்ளலாம்.  ஆசாரமில்லாமல் செய்யும் கார்யங்களெல்லாம் வீணே.  ஆசாரமெனும் மரத்திற்கு தர்மமே வேர், பொருளே கிளைகள், ஆசைகளே புஷ்பங்கள், மோக்ஷமே பழம்.  காலையில் எழுந்ததும் ஸுப்ரபாதம் சொல்லிவிட்டு வெகுதூரம் சென்று மல, ஜல விஸர்ஜனம் செய்து, மண்ணால் ஸுத்தம் செய்து கொண்டு ஸ்னானம் செய்ய வேண்டும்.  அனாவச்யமாக வெளியில் செல்லக்கூடாது.  வீட்டு விலக்காய் இருக்கும் பெண்களோடு பேசக்கூடாது.  எந்த ஸ்த்ரீயோடும் ஒரே ஆஸனத்தில் அமரக்கூடாது.  உடையில்லாமல் தூங்கவோ, குளிக்கவோ கூடாது.  ஞாயிறில் எண்ணெய்க் குளியலும், வெள்ளியில் க்ஷவரமும் கூடாது.  தெற்கு, மேற்கு திசைகளைப் பார்த்து உண்ணக்கூடாது.  பிறரது புஷ்பம், உடை, படுக்கை, பாதுகை, உணவு, தீர்த்தம் இவைகளை ஏற்கலாகாது.  க்ரஹண காலமில்லாமல் வேறெப்போதும் இரவில் குளிக்கக் கூடாது.  ஸ்னானம் செய்த பின் மயிரை உதரக்கூடாது.  துணியால் உடலைத் தேய்த்துக் குளிக்கக்கூடாது.  தெருவிலுள்ள நீரும், சேறும் ஸூர்யனால் சுத்தப்படுத்தப்படுகிறது.

சுத்தமில்லாதவர் அன்னம், தேவ, பித்ரு கார்யங்களில்லாத அன்னம், டம்பமாக அனுஷ்டானம் செய்பவர் (மார்ஜாரர்) அன்னம், நடுநிலையாகப் பேசாதவர் (குக்குரர்) அன்னம், பரதர்மத்தைக் கொண்டவர் (பதிதர்) அன்னம், வேத சாஸ்த்ரமில்லாதவர் (நக்னர்) அன்னம், நம்பிக்கை த்ரோகம் செய்பவர் (சண்டாளர்) அன்னம் ஆகியவை பாபமானவை.  இவைகளைத் தெரியாமல் உண்பவர்கள் சாந்த்ராயணத்தால் சுத்தமாவர்.  பிறர் அறுவறுக்கும், அச்சப்படும் கார்யங்களைச் செய்யக்கூடாது. 

ப்ராஹ்மண, க்ஷத்ரியர்களுக்கே வானப்ரஸ்தம் உண்டு.  வைச்யர்களுக்கு கார்ஹஸ்த்யம் வரையே ஆச்ரமம்.  சூத்ரருக்கு க்ருஹஸ்தாச்ரமம் மட்டுமே.  ஸ்வதர்மத்தை அனுஷ்டிப்பவர் ப்ரஹ்மலோகம் செல்வர்.  பரதர்மத்தைக் கொள்பவர் ஸூர்யனால் தண்டிக்கப்படுவர்."

இந்த உபதேசங்களைக் கேட்ட ஸுகேசி அஹிம்ஸை, ஸத்யம், திருடாமை, சுத்தம், இந்த்ரிய ஜயம், தானம், தயை, கர்வமில்லாமை முதலிய குணங்களை ராக்ஷஸருக்கு உபதேஸித்து, அனுஷ்டிக்கவும் செய்வித்தான்.  ஸூர்ய, சந்த்ரர்களின் ஒளி மங்குமளவு இவர்களின் நகரம் ஒளிர ஆரம்பித்தது.  பரதர்மத்தைக் கொண்டான் என்ற காரணத்தைக் கொண்டு ஸூர்யன் ஸுகேசியை அவன் நகரத்தோடு கீழே தள்ளிவிட்டான்.  தன் பக்தனுக்கு நேர்ந்த கதியைக் கண்ட ருத்ரன் ஸூர்யனை கோபத்தோடு பார்த்தார்.  அவனும் கூட இருந்த மற்ற ஸூர்யர்கள், மஹர்ஷிகளோடு தேரோடு கீழே விழுந்தான்.  அனைவரும் ப்ரஹ்மாவிடம் ஓடிச் சென்றனர்.  அவர் காசிநாதனைச் சரணடைந்தார்.  அவர் ஸூர்யனை மன்னித்து லோலன் என்ற பெயரோடு மீண்டும் தேரோடு வானில் எறிந்தார்.  ப்ரஹ்மாவும் ஸுகேசியை பழையபடி செய்தார்.