Sunday, November 10, 2013

வாமன புராணம் - 07

வாமன புராணம் - 07

வாமனாவதாரம்: தைத்யேந்த்ரனான ஹிரண்யாக்ஷனின் மகன் ப்ரஹ்லாதன். அவன் மகன் விரோசனன். விரோசனன் மகன் பலி.  இந்த பலி சக்ரவர்த்தி தாத்தாவின் உபதேசங்களால் உயர்ந்த தர்மங்களைக் கொண்டு ராஜ்ய பரிபாலனம் செய்து வரலானான்.  ராக்ஷஸர் யாவரும் இவன் வழியிலேயே தேவ தர்மங்களில் ஈடுபட, தர்மம் நான்கு பாதங்களோடு நன்கு தழைத்தோங்கியது.  லக்ஷ்மியும் இதனால் தேவேந்த்ரனை விட்டு இவன் உடலில் ஆவிர்பவித்து வஸித்து வரலானாள்.  மூவுலகையும் பலி சக்ரவர்த்தியே ஆண்டு வரலானான்.

பதவியை இழந்த இந்த்ரன் மேருமலையில் இருக்கும் தன் தாயான அதிதி தேவியைக் கண்டு தன் நிலையைக் கூறினான்.  அவன் தந்தையான கச்யபர் அவனையும், தேவர்களையும் அழைத்துக் கொண்டு ப்ரஹ்மலோகத்திற்குச் சென்றார்.  வேத, இதிஹாஸங்களால் ஸ்வரூபத்துடன் துதிக்கப்பட்டுக் கொண்டிருந்த ப்ரஹ்மதேவர் இவர்கள் குறைகளைக் கேட்டு, ச்வேத த்வீபத்தில் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரமனிடம் செல்லுமாறு கூறினார்.  அங்கு அனந்த சயனத்தில் இருந்த மஹாவிஷ்ணு கச்யபர் ஸ்துதிகளில் மகிழ்ந்து அவர் முன் தோன்றினார்.  மஹாவிஷ்ணுவே தனக்குக் குழந்தையாக அவதரிக்க வேண்டும் என்று கச்யபர் வரம் வேண்டினார்.  அவரும் அவ்வாறே தோன்றி, தேவேந்த்ரனுக்கு அவன் பதவியை மீட்டுக் கொடுப்பதாக வரமளித்தார்.

அதிதியும் பல்லாண்டுகள் தவம் செய்தபின், அவள் கர்ப்பத்தில் பகவான் கருவானார். அவளால் உலகமே அதிர்ந்தது.  அதிதி கால் வைத்த இடமெல்லாம் தாழ்ந்தது.  இந்த சகுனங்களைக் கண்ட பலி, தாத்தாவிடம் இதன் காரணத்தைக் கேட்டான்.  அவர் தன் ஞான த்ருஷ்டியால் நடக்கப் போவதையெல்லாம் கூறினார்.  தன் ராஜ்யம் கைவிட்டுப் போகப்போவதைக் கேட்ட ராஜன் கோபம் கொண்டு பகவானை நிந்தித்து, அவரைக் கொல்லப்போவதாகக் கூறினான்.  இந்த நிந்தைகளைப் பொறுக்காத ப்ரஹ்லாதர், தன் காதுகளை மூடிக் கொண்டார்.  தன் இஷ்ட தேவதையை நிந்தித்த அவனை விட்டு நிச்சயம் ராஜ்யம் அகன்று விடும் என்று சபித்து விட்டுக் கிளம்பலானார்.  தன் தவறுகளுக்கு வருந்திய பலி அவரை மன்னித்து விடுமாறு வேண்டினான்.  ப்ரஹ்லாதனும் தன் சாபத்தை நினைத்து வருந்தி, ஹரியையே சரணமடையுமாறு அவனுக்கு போதித்து விட்டு தீர்த்த யாத்ரைக்குச் சென்று விட்டார்.

பத்து மாதங்களில் அதிதி வாமனரைப் பெற்றாள்.  தேவ வாத்யங்கள் முழங்க, தேவர்கள் பூமாரி பொழிய, சாதுக்கள் ஜயஜய என்று கோஷிக்க கச்யபர் குழந்தைக்கு ஜாத கர்மம் முதலாக உபநயனத்தையும் செய்து வைத்தார்.  ப்ரஹ்மா குழந்தைக்கு மான் தோலையும், ப்ருஹஸ்பதி பூணூலையும், மரீசி தண்டத்தையும், வஸிஷ்டர் கமண்டலத்தையும், ஆங்கிரஸ் தர்ப்பையையும், புலஹர் ஆஸனத்தையும், இன்னும் பலர் பல பொருள்களையும் தந்தனர். வேத, சாஸ்த்ரங்கள் உருக்கொண்டு வாமனரைப் போற்ற, ப்ருஹஸ்பதியை முன்னிட்டுக் கொண்டு, முனிவர்களோடு அவர் புவியதிர பலி சக்ரவர்த்தியின் யாகசாலைக்குப் புறப்பட்டார்.

பூமி அதிர்வதற்குக் காரணம் என்ன என்று யாகசாலையில் பலி சுக்ராச்சார்யரைக் கேட்க அவர் தன் த்ருஷ்டியால் வாமனர் வருவதை அறிந்து, "தேவர்களுக்குப் பாகம் அளிக்காமல் நடக்கும் இந்த யக்ஞம் விஷ்ணுவுக்கு ப்ரியமானதல்ல.  எனவே உன் ராஜ்யத்தைப் பறித்து தேவேந்த்ரனுக்கு அளிப்பதற்காக அவரே வாமனராக இங்கு வந்து கொண்டிருக்கிறார்.  அவருக்குத் தகுந்த மரியாதைகளை அளித்து அவரைத் திருப்பி அனுப்பி விடு.  சிறு பொருளைக் கூட அவருக்குத் தானம் கொடுப்பதாக ப்ரதிக்ஞை செய்து விடாதே" என்று பலியை எச்சரித்தார்.  அவனோ தன் தர்மத்தால், "சாமான்யர் கேட்டாலே நான் கொடுத்து விடுவேன். அப்படி இருக்க, எந்த பரம புருஷனைக் காண சாதுக்களும் பூஜை, வ்ரதம், யக்ஞம், தவம் இவைகளால் தங்களை வருத்திக் கொள்கிறார்களோ, அந்த புருஷோத்தமனே என்னிடம் வரும்போது அவருக்கு எதையும் அளிப்பேன்.   அனைத்துயிர்க்கும் படியளக்கும் அவரே என்னிடம் யாசிக்கையில் என் உயிரையும் அவருக்குக் கொடுப்பேன்.  இதை விட எனக்கு வேண்டியது வேறெதுவுமே இல்லை.  ஒருவன் தான் ஒரு பொருளை அனுபவிப்பதை விட, பிறருக்கு அதைக் கொடுப்பதிலேயே பல மடங்கு மகிழ்வான்.  அவர் என்னிடம் யாசித்துப் பெற்றாலும் சரி, அல்லது என்னைக் கொன்றாலும் சரி, எதுவும் எனக்கு சிறப்பே" என்று கூறினான்.

யாகசாலையில் நுழைந்த வாமனரை அனைவரும் எழுந்து பூஜித்தனர்.  பலியும் அவரிடம் மெய் மறந்து அவருக்கு நீரளித்து, ஆஸனமிட்டு நமஸ்கரித்து, தன் ராஜ்யமுட்பட எதையும் அவருக்குத் தானமளிக்க சித்தமாக இருப்பதாகக் கூறி, எதை வேண்டுமானாலும் பெற்றுக் கொண்டு தன்னை தன்யனாக்க வேண்டுமென்றுக் கேட்டுக் கொண்டான். வாமனரோ தான் அக்னி பூஜை செய்ய தன் காலால் மூன்றடி மண் வேண்டுமென்று அவனைக் கேட்டார்.  இதைக் கேட்டுச் சிரித்த பலிச்சக்ரவர்த்தி இன்னும் வேண்டுமளவு, வேண்டியவைகளைக் கேட்கவேண்டுமென்று ப்ரார்த்தித்தான்.  பகவான் "அவைகளைக் கேட்பவர்களுக்கு அவைகளைக் கொடு, எனக்கு இதை மட்டும் கொடு, போதும்" என்றார்.  பலியும் அவ்வாறே ஆகட்டும் என்று அவர் கைகளில் தீர்த்தத்தை விடலானான்.  உடனேயே வாமனர் தன் விச்வரூபத்தை அவனுக்குக் காட்டி, ஸகல லோகங்களையும் தன் கால்களால் அளந்து தேவேந்த்ரனுக்குக் கொடுத்தார்.

பலிச்சக்ரவர்த்தியை ஆசிர்வதித்து அவனை பாதாள லோகத்தில் சென்று வஸிக்குமாறு கூறினார்.  தனக்கு அளித்த தான மஹிமையால் ஒரு கல்ப காலத்திற்கு அவனுக்கு ஆயுள் இருக்குமென்றும், ஸாவர்ணிக மன்வந்த்ரத்தில் அவனே தேவேந்த்ர பதவியையும் அடைவான் என்றும், ப்ராஹ்மணர்களையும், தேவர்களையும் ஹிம்ஸிக்காத வரை ஸகல செல்வங்களையும் அடைவான் என்றும் ஆசிர்வதித்து அனுப்பினார்.  பலி பாதாள லோகத்தில் தனக்கு உணவை வேண்ட, வாமனர் "விதிப்படி செய்யாத தானமும், ச்ரத்தை, நெய் இவைகளில்லாத ஹோமமும், தக்ஷிணையில்லாத யாகமும், தீர்த்தமில்லாத பூஜையும் உனக்கு உணவாகும்" என்று கூறி அருளினார். 

மேலும், ஆடி மாத சுக்ல பக்ஷ ஏகாதசியில் உபவாஸமிருந்து, த்வாதசியில் தனது இந்த அவதாரத்தைப் பூஜிப்போர் வைகுண்டததை அடைவர் என்று கூறி மஹாவிஷ்ணு மறைந்தார்.  இந்த வாமன சரிதத்தைப் படிப்பவர்களது ஸகல பாவங்களும் அகலும், கேட்பவர் நினைத்த பலனை அடைவர் என்று சூதரும் சரிதத்தை முடித்தார்.

Friday, November 8, 2013

வாமன புராணம் - 06

வாமன புராணம் - 06

குருக்ஷேத்ர வரலாறு: க்ருதயுகத்தில் சந்த்ர வம்சத்து அரசனான ரிக்ஷனுக்கு ஸம்வரணன் என்றோர் மகன் பிறந்தான்.  அவன் குணத்தில் அதிசயித்த வஸிஷ்டர் அவனை விரும்பி அவனுக்கு புரோஹிதரானார்.  அவனது சந்தோஷத்தை விரும்பிய வஸிஷ்டர் ஒரு ஸமயம் ஸூர்யனிடம் சென்று "என் சிஷ்யன் ஸம்வரண ராஜன் உன் புத்ரியான தபதியை தோழிகளுடன் வனத்தில் கண்டு, அவளை விரும்புகிறான்.  சிறந்த குணவானானதால் அவனுக்கு அவளை மணம் செய்து வைக்க வேண்டும்" என்று வேண்டினார்.  அவனும் அவருக்குத் தக்க மரியாதைகளைச் செய்து அந்த அப்ஸரஸை அவருடன் அனுப்பி வைத்தான்.  வஸிஷ்டர் விதிப்படி அவர்களுக்கு விவாஹத்தை செய்து வைத்தார்.

இவர்களுக்கு குரு எனும் குழந்தை பிறந்தான்.  அவன் சௌதாமினி என்ற கன்யகையை மணந்து, வெகுகாலம் நீதி தவறாது ஆட்சி புரிந்த போது ஒரு ஸமயம் த்வைத வனத்திற்கு வந்தான்.  பாபம் போக்கும் பல நதிகளை அங்கு கண்டான்.  அங்கு ஒரு வேள்வி செய்ய ஆசைப்பட்டு தானே தங்கக் கலப்பையால் பூமியை உழ ஆரம்பித்தான். இதைக் கண்ட தேவேந்த்ரன் எதற்காக உழுகிறீர் என்று அவனைக் கேட்டான்.  ராஜன் தபம், ஸத்யம், பொறுமை, தயை, சௌசம், தானம்,யோகம், ப்ரஹ்மசர்யம் ஆகியவைகளை அங்கு பயிரிடப்போவதாகக் கூற அவன் சிரித்துக் கொண்டே சென்று விட்டான்.  மீண்டும் மஹாவிஷ்ணு அங்கு வந்து கேட்க, ராஜனும் அதே பதிலையே கூறினான்.  விஷ்ணு இதற்கு விதைகளை எங்கு தேடுவாய் என்று கேட்க அரசன் தன்னிடமே அவைகள் இருப்பதாக, தன் கைகளைக் காட்டினான்.  விஷ்ணு தன் சக்ரத்தால் அவைகளை பூமியில் அறுத்துத் தள்ளினார்.  இப்படி அவனது ஒவ்வொரு உறுப்புகளையுமே அறுத்துத் தள்ளினார்.  இறக்கும் தருவாயில் அரசன் தான் உழுத இந்த இடம் புண்ய பூமியாக இருக்க வேண்டும், அங்கு அனுஷ்டிக்கும் ஸத்கர்மாக்கள் அபரிமிதமான பலன்களைத் தரவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டான்.

மஹாவிஷ்ணு குருராஜனின் த்யாகத்தை ஆசிர்வதித்து "இந்த பூமி குருக்ஷேத்ரம் என்ற பெயரோடே இருக்கும்.  உலகுள்ளவரை உன் புகழும் அழியாது.  இந்த க்ஷேத்ரத்தைக் காக்க யக்ஷன், வாஸுகி, சங்குகர்ணன் முதலானவர்களை நியமிக்கிறேன், ப்ருதூதகமெனும் நதியும் இங்கு ஓடும்படி செய்கிறேன்" என்று கூறி மறைந்தார்.

வாமன புராணம் - 05

வாமன புராணம் - 05

மஹிஷாஸுர வதம்: ரம்பன், கரம்பன் என்ற இரு ராக்ஷஸ ஸஹோதரர்கள் எவராலும் வெல்லத்தகாத புத்ரனை வேண்டி பஞ்சநத க்ஷேத்ரத்தில் தவமிருந்தனர்.  ரம்பன் ஓர் ஆலமரத்திற்கருகே பஞ்சாக்னி மத்தியிலும், கரம்பன் ஜலத்தில் மூழ்கியும் தவம் புரிந்தனர்.  இதையறிந்த தேவேந்த்ரன் முதலையாக வந்து கரம்பனைக் கொன்று விட்டான். இதனால் பெருந்துயர் கொண்ட ரம்பன் தன் தலையையே அறுத்து நெருப்பிலிட்டு தவம் புரியத் தொடங்கினான்.  உடனே அக்னிதேவன் அவனெதிரில் தோன்றி அவனுக்கு எவராலும் வெல்ல இயலாத, நினைத்த உருவெடுக்கும் ஒரு புத்ரன் பிறப்பான் என்று வரமளித்து, வாழ்த்தி மறைந்தான்.

வெகுகாலம் தவம்புரிந்து வரம் பெற்ற சந்தோஷத்தில் ரம்பன் அங்கிருந்து கிளம்பி வந்து கொண்டிருந்த போது வழியில் யக்ஷர்கள் வஸிக்குமிடமான மாலவடம் எனும் ஆலமரத்தினருகே ஓய்வெடுத்துக் கொண்டிருந்த யானை, குதிரை, எருமை முதலான விலங்குகளைக் கண்டான்.  அங்கிருந்த ஒரு பெண்ணெருமையைக் கண்டவுடன் இவனுக்கு காமம் தோன்றியது.  அந்த எருமையும் இதற்கு இசைந்து கர்ப்பமாயிற்று.  இதனால் பாதாள லோகத்தில் எவரும் இவனுக்கு இடமளிக்காது விரட்டி விட்டனர்.  மீண்டும் ஆலமரத்திற்கே வந்தான்.  அங்கு அவனுக்கு மஹிஷன் பிறந்தான்.  பெண்ணெருமையிடம் ஆசை கொண்டிருந்த மற்றொரு எருமைக்கிடா ரம்பனைக் கொன்று விட்டது.  பெண்ணெருமை பயந்து ஓடி யக்ஷர்களைத் தஞ்சமடைந்தது.  கிடா எருமை அருகிலிருந்த நதியில் ஓடித் தன் உயிரை விட்டது.  அதுவே நமரன் என்ற அஸுரனாகத் தோன்றிற்று.  ரம்பன் உடலை பெண்ணெருமைத் தீயிலிட அதிலிருந்து ரக்தபீஜன் எனுமரக்கனும் தோன்றினான்.  நமரன், மஹிஷன், ரக்தபீஜன் மூவரும் உலகை பீடிக்கலாயினர்.

இவர்கள் கொடுமைகளைத் தாங்காத தேவர்கள் மஹாவிஷ்ணுவையும், மஹேச்வரனையும் சரணடைந்தனர்.  இதைக் கேட்டு கோபம் கொண்ட ஹரிஹராதி தேவர்களின் முகங்களிலிருந்தும் தேஜஸ் வெளிக்கிளம்பிற்று.  அது காத்யாயனர் எனும் மஹர்ஷியின் தேஜஸ்ஸோடு கலந்து காத்யாயனீ எனும் தேவியாக உருவெடுத்து நின்றது.  எல்லா தேவர்களும் தேவியைத் துதித்து ஸகல ஆபரணங்களையும், ஆயுதங்களையும் அளித்தனர்.  தேவியும் ஸந்தோஷமடைந்து காலம் வரும்போது ராக்ஷஸர்களைக் கொல்வதாகக் கூறி ஸிம்ஹத்தின் மீதேறி விந்த்ய மலைக்குச் சென்றாள்.

விந்த்ய மலையும், அகஸ்த்யரும்: ஒரு ஸமயம் விந்த்ய பர்வதம் ஸூர்யனும் கடக்க முடியாத அளவிற்கு வளர்ந்து நின்றது. ஸூர்யனின் வேண்டுகோளின்படி அகஸ்த்யர் விந்த்ய பர்வதத்திடம் சென்று, தான் அதைக் கடந்து தெற்கே செல்ல விரும்புவதாகவும், தான் சென்று, வரும் வரை தனக்கு வசதியாக அதன் உயரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வேண்டினார்.  விந்த்ய பர்வதமும் அதற்கு ஒப்புக் கொண்டு தன் உயரத்தைக் குறைத்துக் கொண்டு அவரை அனுப்பி வைத்தது.  தெற்கே சென்ற அகஸ்த்யர் விதர்ப ராஜனின் புத்ரியான லோபாமுத்ரையை மணந்து கொண்டு, அங்கேயே ஆச்ரமம் அமைத்துக் கொண்டு இருந்து விட்டார்.

அந்த விந்த்ய மலையில் தேவியைக் கண்ட சண்ட, முண்டாஸுரர்கள் உடனே அவள் அழகையும், சக்தியையும் மஹிஷனிடம் சென்று கூறினர்.  அவனும் உடனே ஸுந்தரியின் அழகில் மயங்கி, அவளை மணம் புரியக் கருதி படையோடு வந்து மலையடிவாரத்தில் தங்கினான்.  அவன் தூதுவனாக மயனுடைய மகன் துந்துபி தேவியிடம் சென்று, மஹிஷனின் பராக்ரமங்களை எடுத்துக் கூறி அவனை மணக்குமாறு கூறினான்.  தேவி சிரித்துக் கொண்டே தன்னை யுத்தத்தில் ஜயிப்பவரையே தான் மணக்க நிச்சயித்திருப்பதாகக் கூறினாள்.  போர் மூண்டது, தேவி தனது கணங்களோடு தாண்டவமாடி, மஹிஷனையும் அவன் சேனைகளையும் விளையாட்டாகக் கொன்று குவித்தாள்.  தேவர்கள் பூமாரி பொழிந்து தேவியை வணங்கித் துதித்தனர்.  தேவியும் அவர்களை ஆசிர்வதித்து மறைந்தாள்.

மற்றொரு ஸமயம் ஸும்ப,நிஸும்பர்களின் அட்டஹாஸம் பொறுக்காது தேவர்கள் ச்வேத த்வீபத்தில் பாற்கடலில் பள்ளிக் கொண்டிருக்கும் பரமனிடம் சென்று, அவர்கள் வதத்தை வேண்டி நின்றனர்.  அவர் "தாக்ஷாயணியைப் பிரிந்து தக்ஷிணாமூர்த்தியாக தவம் புரிந்து கொண்டிருக்கும் பரமேச்வரன் மீண்டும் தேவியை பர்வதராஜனின் புத்ரியாக மணம் புரிந்து, ஸுப்ரமண்யன் எனும் திருக்குமாரனை தோற்றுவிப்பான்.  அவனே தேவஸேனாபதியாகி இந்த அஸுரர்களைக் கொல்வான்.  அதை வேண்டி நீங்கள் குருக்ஷேத்ரத்தில் சென்று தவம் செய்யுங்கள்" என்று கூறினார்.

Tuesday, November 5, 2013

வாமன புராணம் - 04

வாமன புராணம் - 04

தேவர்கள் உறங்கும் காலம்: மஹாவிஷ்ணு ஆடி மாத சுக்ல பக்ஷ ஏகாதசியில் ஆதிசேஷன் மீது படுத்துக் கொண்டு த்வாதசியன்று ப்ராஹ்மணர்களிடம் விடை பெற்றுக் கொண்டு உறங்குகிறார்.  த்ரயோதசியில் மன்மதன் புஷ்பங்களின் மீதும், சதுர்த்தசியில் யக்ஷர்கள் தங்கத் தாமரையிலும், பௌர்ணமியில் சிவன் புலித்தோலிலும், ப்ரதமையில் ப்ரஹ்மா நீலோத்பலத்திலும், த்விதீயையில் விச்வகர்மாவும், த்ருதீயையில் பார்வதியும், சதுர்த்தியில் பிள்ளையாரும், பஞ்சமியில் யமனும், ஷஷ்டியில் முருகனும், ஸப்தமியில் ஸூர்யனும், அஷ்டமியில் காத்யாயனியும், நவமியில் லக்ஷ்மியும், தசமியில் பாம்புகளும், ஏகாதசியில் ஸாத்யர்களும் உறங்குகின்றனர்.

த்விதீயையில் விஷ்ணுவை லக்ஷ்மியோடு தங்கக் கட்டிலில் படுக்க வைத்து பூஜிப்பது அசூன்ய சயன த்விதீயை வ்ரதமாகும்.  ஆச்வயுஜ அஷ்டமியில் உபவாஸமிருந்து நவமியில் சிவபூஜை செய்வது காலாஷ்டமி வ்ரதமாகும்.

ஊர்வசி தோன்றியது: ஒரு ஸமயம் நர, நாராயணர்களது தவத்தைப் பொறுக்காத தேவேந்த்ரன் அவர்களது தவத்தைக் கலைக்க, தேவலோகத்தின் சிறந்த அப்ஸரஸ்ஸுகளையும், காமனையும், வஸந்த ருதுவையும் அனுப்பி வைத்தான்.  இவர்கள் வருகையின் நிமித்தத்தை அறிந்த, நாராயணர் அவர்களும் மயங்கும்படியான ஒரு அழகியை தன் தொடையைத் தட்டி உருவாக்கினா.  அவளும் அவர்களை வரவேற்று, நன்கு உபசரித்தாள்.  நாராயணரது வலிமையைக் கண்ட அவர்கள் வெட்கித் தலைகுனிந்தனர்.  தன் தொடையிலிருந்து தோன்றிய அவளை ஊர்வசி என்று அவர்களுக்கு (ஊரு=தொடை)அறிவித்து, அவளையும் தேவலோகத்திற்கு அழைத்துச் செல்லும்படி கூறினார்.  இந்த்ரனும் அவளழகைக் கண்டு, நர, நாராயணர்களது பராக்ரமத்தை அறிந்தான்.

வாமன புராணம் - 03

வாமன புராணம் - 03

ஸுகேசி பெற்ற தர்மோபதேசம்:  வித்யுத்கேசியின் மகனான இவனுடைய நீண்ட கடுந்தவத்தால் மகிழ்ந்து சிவபெருமான் எங்கும் ஸஞ்சரிக்கும் ஒரு நகரையே இவனுக்கு அளித்தார்.  ஒரு ஸமயத்தில் மாகத வனத்திலிருந்த மஹர்ஷிகளைத் துதித்துத் தனக்கு தர்மோபதேசம் செய்யக் கேட்டுக் கொண்டான் ஸுகேசி.  அவர்களும் தேவர் முதல் மனுஷ்யர் வரையிலான பன்னிருவர்களுக்கும் ப்ரஹ்மா விதித்த தர்மங்களை பின்வருமான விரிவாக எடுத்துக் கூறினர்.

யஜ்ஞம், வேதார்த்த விசாரம், விஷ்ணுவை பூஜிப்பது இவை தேவ தர்மம்.  பலம், பொறாமை, சண்டை, நீதி விசாரம், சிவபக்தி இவை தைத்ய தர்மம்.  யோகம், வேதம், ப்ரஹ்ம ஞானம், விஷ்ணு பக்தி இவை ஸித்த தர்மம்.  உபாஸனம், நடனம், வாத்யம், ஸரஸ்வதி பக்தி ஆகியவை கந்தர்வர்களுக்கு தர்மம்.  வித்யாதரர்களுக்கு கல்வி, பௌருஷம், பவானி பக்தி ஆகியவையே தர்மங்கள்.  ப்ரஹ்மசர்யம், யோகாப்யாஸம், எங்கும் ஸஞ்சரித்தல் ஆகியவை பித்ரு தர்மங்கள்.  ஸத்யம், ஞானம், ஜபம், நியமம், தர்ம விசாரம் இவை ரிஷி தர்மங்கள்.  மனுஷ்யர்களுக்கு வேதம், தானம், யாகம், பொறாமையில்லாமை, தயை, அஹிம்ஸை, பொறுமை, இந்த்ரிய ஜயம், சுத்தம், விஷ்ணு, ஸூர்யன், சிவ-பார்வதி பக்தி ஆகியவையே தர்மங்கள்.  தனாதிபத்யம், ஸுகம், வேதம், சிவபக்தி, அஹங்காரம் இவை குஹ்ய தர்மங்கள்.  பரதார, பரத்ரவ்யங்களில் ஆசை, வேதம், சிவபக்தி ஆகியவை ராக்ஷஸ தர்மங்கள்.  விவேகமில்லாமை, பொய், அனாசாரம், மாம்ஸத்தில் ஆசையோடிருத்தல் இவை பிசாச தர்மங்கள்.

ஜலத்தின் மீது ஐம்பது கோடி யோஜனை விசாலத்துடன் மிதந்து கொண்டிருக்கும் இந்த பூமியில் ஜம்பூ, ப்லக்ஷ, சால்மலீ, குச, க்ரௌஞ்ச, சாக, புஷ்கர என்ற ஏழு த்வீபங்களுள்ளன.  இதில்  ஜம்பூ த்வீபமே கர்மங்களுக்கு உரியது.  இந்த ஜம்பூ த்வீபத்தில் பாரத, கிம்புருஷ, ஹரி, ரம்யக, ஹிரண்மய, குரு, பத்ராச்வ, இலாவ்ருத, கேதுமாதலம் ஆகிய ஒன்பது வர்ஷங்கள் இருக்கின்றன.  மஹேந்த்ர, மலய, விந்த்ய, ஸஹ்ய முதலான பர்வதங்களும், அவைகளிலிருந்து உண்டான ஸரஸ்வதி, யமுனா முதலான நதி, நதங்களும் பாரத வர்ஷத்தில் உள்ளன. ப்லக்ஷ முதல் சாக வரையிலான த்வீபங்களில் தேவ தர்மமே விதிக்கப்பட்டுள்ளது.  புஷ்கரத்தில் ரௌரவம், மஹாரௌரவம், தாமிஸ்ரம், அந்ததாமிஸ்ரம், காலஸூத்ரம், அப்ரதிஷ்டம், கடீயந்த்ரம், அஸிபத்ரவனம், தப்தகும்பம், கூடசால்மலி, கரபத்ரம், ச்வானபோஜனம், ஸந்தம்சம், லோஹபிண்டம், கரம்பஸிகதம், க்ஷாரநதி, க்ருமி போஜனம், வைதரணீ, க்ஷுராக்ரதாரம், சக்ரகம், ஸம்சோஷணம் என்ற இருபத்தோரு கொடிய நரகங்கள் இருக்கின்றன.

தண்டனைகள்: தேவர், த்விஜர், வேத புராணங்கள், குரு இவர்களை நிந்திப்பவர், யாக, தானங்களைக்  கெடுப்பவர், நண்பர்கள், தம்பதிகளைக் கலைப்பவர், ஒருவருக்குத் தானம் செய்யப்பட்ட கன்யகையை வேறொருவருக்கு மீண்டும் தானம் செய்பவர் முதலியவர்கள் கூர்மையான கத்தியால் இரண்டாகப் பிளக்கப்படுவர்.  பிறருக்கு வருத்தமளிப்பவன், சந்தனம், விசிறி இவைகளைத் திருடுபவன் கரம்பஸிகதம் செல்வர்.  தேவ, பித்ரு கார்யங்களில் புஜிப்பதற்காக வரிக்கப்பட்டவர் பணத்தாசையால் வேறிடம் சென்றால் கழுகுகளால் குத்தி, இரண்டாக கிழிக்கப்படுவர்.  ஸாதுக்களை கடுஞ்சொற்களால் துன்புறுத்துபவனது நாக்கை கழுகு கிழிக்கும்.  தேவர், அதிதி, பெற்றோர், சிறுவர்கள், கர்ப்பிணிகள் உண்பதற்கு முன்பு உண்பவன் மல, மூத்ரங்களைப் புஜித்து புழுவாய்ப் பிறப்பான்.  பந்தி வஞ்சனை செய்வோரும் மலத்தை புஜிப்பர்.  எச்சிலோடு பசு, ப்ராஹ்மணர், அக்னி இவைகளைத் தொடுபவனது கைகள் தப்த கும்பத்தில் காய்ச்சப்படும்.  இவர்களுக்கு எதிராக மல, ஜலம் கழிப்பவர்களது ஆஸன த்வாரங்களை காக்கை கொத்தும்.

எச்சிலோடு ஸூர்ய, சந்த்ர, நக்ஷத்ரங்களைப் பார்ப்பவரது கண்கள் பிடுங்கப்படும்.  பெரியவர்களைக் கால்களால் மிதிப்பவர்களது கால்கள் கட்டப்பட்டு நரகத்தில் தள்ளப்படும்.  பாயஸம், பக்ஷணங்களை நிவேதனத்திற்கல்லாது தனக்காக செய்து உண்பவர்கள் வாயில் உருக்கிய இரும்பு விடப்படும்.  தண்ணீர்ப்பந்தல், மடம், கோவில், குளம், பூங்காக்களை அழிப்பவர்கள் தோல் கத்தரிக்கோலால் வெட்டப்படும்.  பஞ்சம் வந்த போது பிறர்க்கு எதுவும் அளிக்காமல் தன்னை மட்டுமே காத்துக் கொள்பவன் நாயாகப் பிறப்பான்.  நம்பி வந்தவர்களைக் கைவிட்டவன் எந்திரத்தில் தள்ளப்படுவான்.  புரோஹிதர்களைத் துன்புறுத்துபவனைப் பாறையில் அடிப்பர்.  கொடுத்து வைத்திருந்த பொருளை இல்லை என்பவன் தேள்கள் நிறைந்த குழியில் விழுவான்.  ச்ராத்த திதியில் இரு முறை புஜிக்கும் கர்த்தாவும், வரிக்கப்பட்ட ப்ராஹ்மணனும் ஒருவரை ஒருவர் அடித்துத் தின்பர்.  வேதம், அக்னி, குரு இவர்களைக் கைவிட்டவன் மலையிலிருந்து தள்ளப்படுவான்.  சண்டாளனிடம் தானம் வாங்குபவன் கல்லினுள் தேரையாக ஜனிப்பான்.

ப்ரஹ்மஹத்தி, கள்ளுண்ணுதல், பொன் திருட்டு, குரு மனைவியோடு சேர்தல், இந்த நான்கு பாபங்களையும் செய்தவர்களோடு சேருதல் இந்த ஐந்தும் பஞ்ச மா பாபங்கள் எனப்படும்.  இவர்களும், பசு, நிலங்களை அபஹரித்தவர்களும், பசு, வேதம் இவைகளை விற்பவர்களும், நன்றி மறந்தவர்களும் பத்தாயிரமாண்டுகள் தாமிஸ்ரம், அந்ததாமிஸ்ரம், அஸிபத்ரவனம், கடீயந்த்ரம், தப்தகும்பம் இவைகள் ஒவ்வொன்றிலும் இருப்பர்.

தேவரில் விஷ்ணுவும், நதிகளில் கங்கையும், க்ஷேத்ரத்தில் குருஜாங்கலமும், லோகங்களில் ப்ரஹ்மலோகமும், சாஸ்த்ரங்களில் வேதமும், ரிஷிகளில் அகஸ்த்யரும், புராணங்களில் மத்ஸ்யமும், புஷ்பங்களில் ஜாதியும், ஸ்ம்ருதிகளில் மனுவும், நாற்கால் ப்ராணிகளில் பசுவும், நகரங்களில் காஞ்சியும், வ்யாதிகளில் அஜீர்ணமும், சுவைகளில் உப்பும், பதிவ்ரதைகளில் பார்வதியும், நரகத்தில் வைதரணியும், பாபத்தில் நன்றி மறப்பதும் சிறந்தவைகளாகும்.

ஆச்ரம தர்மம்: ப்ரஹ்மசாரி குருவிடம் காட்டாமல் எதையும் உண்ணக்கூடாது.  குரு கூப்பிடும்போதே கற்கச் செல்ல வேண்டும்.  தக்ஷிணை கொடுத்த பின் பக்குவத்திற்கேற்ப  கார்ஹஸ்த்யம், வானப்ரஸ்தம், ஸன்யாஸம் இவைகளைக் கொள்ளலாம்.  ஆசாரமில்லாமல் செய்யும் கார்யங்களெல்லாம் வீணே.  ஆசாரமெனும் மரத்திற்கு தர்மமே வேர், பொருளே கிளைகள், ஆசைகளே புஷ்பங்கள், மோக்ஷமே பழம்.  காலையில் எழுந்ததும் ஸுப்ரபாதம் சொல்லிவிட்டு வெகுதூரம் சென்று மல, ஜல விஸர்ஜனம் செய்து, மண்ணால் ஸுத்தம் செய்து கொண்டு ஸ்னானம் செய்ய வேண்டும்.  அனாவச்யமாக வெளியில் செல்லக்கூடாது.  வீட்டு விலக்காய் இருக்கும் பெண்களோடு பேசக்கூடாது.  எந்த ஸ்த்ரீயோடும் ஒரே ஆஸனத்தில் அமரக்கூடாது.  உடையில்லாமல் தூங்கவோ, குளிக்கவோ கூடாது.  ஞாயிறில் எண்ணெய்க் குளியலும், வெள்ளியில் க்ஷவரமும் கூடாது.  தெற்கு, மேற்கு திசைகளைப் பார்த்து உண்ணக்கூடாது.  பிறரது புஷ்பம், உடை, படுக்கை, பாதுகை, உணவு, தீர்த்தம் இவைகளை ஏற்கலாகாது.  க்ரஹண காலமில்லாமல் வேறெப்போதும் இரவில் குளிக்கக் கூடாது.  ஸ்னானம் செய்த பின் மயிரை உதரக்கூடாது.  துணியால் உடலைத் தேய்த்துக் குளிக்கக்கூடாது.  தெருவிலுள்ள நீரும், சேறும் ஸூர்யனால் சுத்தப்படுத்தப்படுகிறது.

சுத்தமில்லாதவர் அன்னம், தேவ, பித்ரு கார்யங்களில்லாத அன்னம், டம்பமாக அனுஷ்டானம் செய்பவர் (மார்ஜாரர்) அன்னம், நடுநிலையாகப் பேசாதவர் (குக்குரர்) அன்னம், பரதர்மத்தைக் கொண்டவர் (பதிதர்) அன்னம், வேத சாஸ்த்ரமில்லாதவர் (நக்னர்) அன்னம், நம்பிக்கை த்ரோகம் செய்பவர் (சண்டாளர்) அன்னம் ஆகியவை பாபமானவை.  இவைகளைத் தெரியாமல் உண்பவர்கள் சாந்த்ராயணத்தால் சுத்தமாவர்.  பிறர் அறுவறுக்கும், அச்சப்படும் கார்யங்களைச் செய்யக்கூடாது. 

ப்ராஹ்மண, க்ஷத்ரியர்களுக்கே வானப்ரஸ்தம் உண்டு.  வைச்யர்களுக்கு கார்ஹஸ்த்யம் வரையே ஆச்ரமம்.  சூத்ரருக்கு க்ருஹஸ்தாச்ரமம் மட்டுமே.  ஸ்வதர்மத்தை அனுஷ்டிப்பவர் ப்ரஹ்மலோகம் செல்வர்.  பரதர்மத்தைக் கொள்பவர் ஸூர்யனால் தண்டிக்கப்படுவர்."

இந்த உபதேசங்களைக் கேட்ட ஸுகேசி அஹிம்ஸை, ஸத்யம், திருடாமை, சுத்தம், இந்த்ரிய ஜயம், தானம், தயை, கர்வமில்லாமை முதலிய குணங்களை ராக்ஷஸருக்கு உபதேஸித்து, அனுஷ்டிக்கவும் செய்வித்தான்.  ஸூர்ய, சந்த்ரர்களின் ஒளி மங்குமளவு இவர்களின் நகரம் ஒளிர ஆரம்பித்தது.  பரதர்மத்தைக் கொண்டான் என்ற காரணத்தைக் கொண்டு ஸூர்யன் ஸுகேசியை அவன் நகரத்தோடு கீழே தள்ளிவிட்டான்.  தன் பக்தனுக்கு நேர்ந்த கதியைக் கண்ட ருத்ரன் ஸூர்யனை கோபத்தோடு பார்த்தார்.  அவனும் கூட இருந்த மற்ற ஸூர்யர்கள், மஹர்ஷிகளோடு தேரோடு கீழே விழுந்தான்.  அனைவரும் ப்ரஹ்மாவிடம் ஓடிச் சென்றனர்.  அவர் காசிநாதனைச் சரணடைந்தார்.  அவர் ஸூர்யனை மன்னித்து லோலன் என்ற பெயரோடு மீண்டும் தேரோடு வானில் எறிந்தார்.  ப்ரஹ்மாவும் ஸுகேசியை பழையபடி செய்தார்.

வாமன புராணம் - 02

வாமன புராணம் - 02

ப்ரஹ்லாத-நாராயண யுத்தம்: ஒரு ஸமயம் ச்யவன முனிவர் நர்மதையில் ஸ்னானம் செய்து கொண்டிருக்கையில் நாகப்பாம்பு ஒன்று அவரைக் கடித்து நாகலோகத்திற்கு இழுத்துச் சென்றது.  அவர் மஹாவிஷ்ணுவை ஸ்மரித்தவுடன் விஷமகன்றது.  இவர் வருகையை அறிந்த ப்ரஹ்லாதன் அவரை உடனே வந்து வரவேற்று அர்க்க, பாத்யங்களை அளித்து உபசரித்து தனக்கு தர்மோபதேசம் செய்ய வேண்டுமென்று ப்ரார்த்தித்தான்.  அவர் அவனுக்கு தீர்த்தயாத்ரையின் மஹிமையை எடுத்துக் கூறினார்.  இதைக் கேட்ட ப்ரஹ்லாதன் தீர்த்தயாத்ரைக்குக் கிளம்பினான்.  பூலோகத்தில் நைமிச தீர்த்தத்தில் ஸ்னானம் செய்யச் சென்ற போது அங்கு ஜடாமகுடம் தரித்து, அஸ்த்ர பாணிகளாய் தவம் புரிந்து கொண்டிருந்த நர, நாராயணர்களைக் கண்டான்.  உடனே "இந்த வேஷத்தில் நீங்கள் வில்லைக் கையில் கொண்டிருக்கும் காரணமென்ன?  சக்தியிருந்தால் என்னோடு சண்டைக்கு வாருங்கள்" என்று அவர்களை சண்டைக்கு அழைத்தான். நரனுக்கும், ப்ரஹ்லாதனுக்கும் பல ஆண்டுகள் சண்டை நடந்தன.  இருவரும் பல திவ்யாஸ்த்ரங்களை உபயோகித்துக் கொண்டிருந்தனர்.  உலகம் இருளில் மூழ்கியது.  வெற்றி, தோல்வி நிர்ணயிக்க முடியாததாயிற்று.  தேவர்கள் அவரவர் விமானங்களில் வந்து இந்த யுத்தத்தைக் களித்துக் கொண்டிருந்தனர்.  அஸ்த்ரங்களின் ஜ்வாலை எழும்போதெல்லாம் ஆரவாரம் பொங்கியது.

ப்ரஹ்லாதன் நாராயணரையும் போருக்கு அழைத்தான்.  அவரும் யுத்தத்தில் ஈடுபட்டார்.  தேவ வர்ஷத்தில் ஆயிரமாண்டுகள் கடந்தன.  நாராயணர் அவனை அடித்து வீழ்த்தினார்.  மூர்ச்சையுற்று தேர்த்தட்டில் விழுந்த அவனை ஸாரதி தேருடன் உடனே அங்கிருந்து அப்புறப்படுத்தி மூர்ச்சை தெளிவித்தான்.  விழித்தெழுந்த ப்ரஹ்லாதன் மீண்டும் நர, நாராயணர்களைப் போருக்கு அழைத்தான்.  நாராயணன் அவனை மாலைக் கடன்களை முடித்து, ஓய்வெடுத்துக் கொண்டு காலையில் மீண்டும் போருக்கு வருமாறு கூறினார்.  இரவெல்லாம் தூக்கமின்றி ஏன் இன்னும் எனக்கு வெற்றி கிடைக்கவில்லை என்று பகவானை ப்ரார்த்திக் கொண்டிருந்தான்.  மஹாவிஷ்ணு அவனெதிரில் தோன்றி நர, நாராயணர்களை இப்படி வெல்ல முடியாது, பக்தியால் வெல்ல முயற்சி செய் என்று கூறி மறைந்தார்.  ப்ரஹ்லாதன் உடனே பாதாள லோகம் திரும்பி தன் ஸஹோதரன், ஹிரண்யாக்ஷனின் மகனான அந்தகனிடம் ராஜ்ய பாரத்தை ஒப்படைத்து விட்டு, பத்ரிகாச்ரமம் சென்று நர, நாராயணர்களை பக்தியுடன் துதித்தான்.  அவர்கள் அவனுக்கு விஷ்ணு பக்தி, ப்ராஹ்மண பக்தி எனும் வரங்களை அளித்து அதை அவன் குலத்தோருக்கும் உபதேசிக்குமாறு கூறினர்.  அவனும் பாதாள லோகம் திரும்பி அரசைத் துறந்து, ஆச்ரமம் அமைத்து, அங்கிருந்து கொண்டு தைத்யர்களுக்கு பக்தியை போதித்துக் கொண்டிருந்தான்.

அந்தகன்: கண்ணில்லாதவன்.  இருந்த போதிலும் ப்ரஹ்லாதனளித்த ராஜ்யத்தை நன்கு பரிபாலனம் செய்தான்.  பல வருஷங்கள் கடும் தவமிருந்து சிவபெருமானிடமிருந்து பெரும் வரங்களைப் பெற்று, திக்விஜயத்திற்குக் கிளம்பினான்.  தேவேந்த்ரனும் போருக்குத் தயாரானான்.  தனுவின் கையிலிருந்து தோன்றிய வெள்ளை யானையில் அவன் ஏறிக் கொண்டான்.  ருத்ரனுடைய தேஜஸிலிருந்து தோன்றிய பௌண்ட்ரகமெனும் எருமையில் எமனும், அவருடைய காதுக் குரும்பையிலிருந்து தோன்றிய சிம்சுமாரத்தில் வருணனும், பார்வதியின் பாதங்களிலிருந்து தோன்றிய நர வாஹனத்தில் குபேரனும் ஏறிப் போருக்குச் சென்றனர்.  ஆயிரம் குதிரைகள் பூட்டிய ரதத்திலேறி அந்தகன் கிளம்பினான்.  உலகமே நடுங்கும்படியான அந்தக் கடும் போரில் வித்யுத்கேசியின் புதல்வனான ஸுகேசியை ஸூர்யன் அடித்து வீழ்த்தினான்.  முடிவில் அந்தகனே அனைவரையும் வென்று மூவுலகையும் தனதாக்கிக் கொண்டான்.

Saturday, November 2, 2013

வாமன புராணம் - 01

வாமன புராணம் - 01

புராண வரலாறு: நாரதர் ஒரு ஸமயம் புலஸ்த்ய மஹர்ஷியிடம் சென்று "பதினெட்டு புராணங்களில் பதினான்கான வாமன புராணத்தைக் கூறுமாறு கேட்டார்.  ஏன் பக்த ப்ரஹல்லாதன் தேவர்களோடு சண்டையிட்டான்? தக்ஷ புத்ரியான ஸதி ஏன் தன் சரீரத்தை விட்டாள்? ஏன் ஹிமவானின் மகளாகத் தோன்றினாள்? மேலும் தீர்த்தங்கள், தானங்களின் மஹிமையையும், வ்ரதங்களையும் விரிவாகக் கூற வேண்டும்" என்று பல கேள்விகளைக் கேட்டார்.  புலஸ்த்யர் அவரை நன்கு கவனிக்குமாறு கூறி விஷயங்களைக் கூறினார்.

"ஒரு ஸமயம் மந்தர மலையில் வீற்றிருக்கும் போது தாக்ஷாயணி "உக்ரமான இந்த கோடை காலத்தில் இருக்க எனக்கொரு வீடில்லை, என்ன செய்வது" என்றாள்.  "ஒரு பிடிப்பும் இல்லாது காட்டில் வஸிக்கும் நான் வீட்டிற்கு எங்கு செல்வது" என்று சிரித்துக் கொண்டே கூறினார் பரமன்.  அவரை அறிந்த தேவி உடனே ஒரு மரத்தினடியில் சென்று வஸிக்கலானாள். மழைக்காலம் வந்ததும் அதுவும் ச்ரமமானது.  மழையிலும், குளிரிலும் வாடிய தேவி "இப்போதாவது கருணை காட்டக்கூடாதா" என்றாள்.  ஈச்வரன் "நானோ நித்ய தரித்ரன், ம்ருகங்களின் தோலை அணிந்து, பாம்புகளையே ஆபரணங்களாக அணிந்து கொண்டிருப்பவன்.  வீட்டிற்கு நான் எங்கு செல்வேன்" என்று கூறி தாக்ஷாயணியுடன் மேகக்கூட்டங்களுக்குள் வஸித்து வந்தார்.  மழைக்காலம் சென்றதும் மீண்டும் மந்தர மலைக்கே வந்தார்கள்.

தக்ஷ யஜ்ஞம்: ஒரு ஸமயம் தக்ஷன் தேவர்களோடு ஆலோஸித்து ஓர் யாகம் செய்ய ஆரம்பித்தான்.  எல்லா தேவர்களையும் மனைவியோடு அதில் கலந்து கொள்ளக் கூறினான்.  அஹிம்ஸையெனும் மனைவியோடு கூடின தர்மதேவனை த்வாரபாலகனாக ஆக்கினான்.  அரிஷ்டநேமியை ஸமித்து முதலான த்ரவ்யங்களைச் சேர்க்கச் சொன்னான்.  ஆங்கிரஸ் சந்த்ரையோடு கூட பாகசாலையிலும், ப்ருகு யாக சாலையிலும், ரோஹிணியும் சந்த்ரனும் பொக்கிஷ அறையிலும் இருந்து வேலைகளைப் பார்க்கச் சொன்னான்.  கபாலமும், சூலமும் கொண்ட பரமனை அசுத்தமானவன் என்று அழைக்காமல் இருந்து விட்டான்."

உடனே நாரதர் பரமசிவன் ஏன் கையில் கபாலத்தை வைத்துக் கொண்டிருக்கிறார் என்று புலஸ்யரைக் கேட்டார்.  அவர் "ஒரு ஸமயம் பரமனது நித்ரையின் போது ஆயிரமாண்டு எங்கும் இருள் சூழ்ந்திருந்தது.  அதன் பின் ரஜோகுணத்தோடு ஐந்து தலைகள் கொண்ட ப்ரஹ்மனும், தமோகுணம் நிரம்பிய முக்கண்ணனும் தோன்றினார்கள்.  விஷ்ணு அப்போது அஹங்காரத்தைப் படைக்க அதனால் ப்ரஹ்மனும், சிவனும் தானே உயர்ந்தவன் என்று சண்டையிடலானார்கள்.  ப்ரஹ்மனது ஐந்தாவது தலை சிவனை நோக்கி "உண்ண உணவில்லை, உடுத்த உடையில்லை, காளை மீதேறிச் சுற்றும் நீயோ எனக்கு ஈடு" என்று கூறிச் சிரித்தது.  உடனே கோபம் கொண்ட பரமேச்வரன் அந்த தலையை தன் கைவிரல் நகங்களால் கொய்து விட்டார்.  ப்ரஹ்மனது கோபத்திலிருந்து ஆயுதம் கொண்டு ஒரு வீரன் வந்து சிவனை எதிர்த்தான்.  சிவன் விரைவாக பதரிகாச்ரமம் சென்று கையில் ஒட்டிக் கொண்டிருந்த கபாலத்தைக் காட்டி நாராயணரிடம் பிக்ஷை கேட்டார்.  அவர் தனது வலக்கையைக் காட்டி சூலத்தால் அதில் அடித்து வேண்டியதைப் பெற்றுக் கொள்ளக் கூறினார்.  சூலம் அடிபட்ட இடத்திலிருந்து மூன்று வழிகளில் இரத்தம் வழிந்தோடியது.  ஒன்று நக்ஷத்ர மண்டலத்தையும், மற்றொன்று துர்வாஸராக அத்ரியிடமும், மூன்றாவது ஒரு வீரனாகவும் தோன்றியது.  சிவன் கூறியபடி அந்த வீரன் ப்ரஹ்ம புத்ரனைக் கொல்லச் சென்றான்.  இந்த ப்ரஹ்ம, ருத்ர வீரர்களுமே பின் வாலி-ஸுக்ரீவனாகவும், கர்ண-அர்ஜுனர்களாகவும் தோன்றினர். 

ப்ரஹ்மசிரத்தை அறுத்ததால் சிவனை ப்ரஹ்மஹத்தி பயங்கரமான பெண்ணுருவம் கொண்டு வந்தடைந்தது.  அதைப் போக்கிக் கொள்ள நர, நாராயணர்களைக் காண அவர் பத்ரிகாச்ரமம் சென்றார்.  அங்கு அவர்கள் தென்படவில்லை.  பின் யமுனையில் நீராடிப் பாபத்தைப் போக்கிக் கொள்வோம் என்று யமுனைக்குச் செல்ல, யமுனையும் உலர்ந்து போனது. புஷ்கரம், மாகதம், ஸைந்தவம், நைமிஷ ஆரண்யங்களுக்குச் சென்றும் அவர் பாபமகலவில்லை.  அவர் குருஜாங்கலமென்னும் தேசத்தில் மஹாவிஷ்ணுவைத் துதித்தார்.  மஹாவிஷ்ணு அவரை ப்ரயாகை, வாரணா எனும் நதிகளுக்கிடைப்பட்ட காசி க்ஷேத்ரத்துக்குச் செல்லச் சொன்னார்.  அங்கு சென்று கங்கையில் ஸ்னானம் செய்ததும் ப்ரஹ்மஹத்தி அவரை விட்டு அகன்றது.  ஆனால் கையிலிருந்த கபாலம் மட்டும் விடவில்லை.  விஷ்ணு உடனே எதிரிலிருந்த ஒரு தீர்த்தத்தைக் காட்டி அதில் ஸ்னானம் செய்யச் சொன்னார்.  அதில் குளித்ததும் சிவனது கையை விட்டு அந்த கபாலம் அகன்றது.  அந்த தீர்த்தமும் கபாலமோசனி என்று ப்ரஸித்தி பெற்றது." என்றார்

பார்வதி தேவி தன்னிடம் வந்த கௌதமரின் புத்ரியான ஜயையிடம் அவள் ஸஹோதரிகளான விஜயை, அபராஜிதா எங்கே எனக் கேட்டாள்.  ஜயை "தங்கள் தந்தை செய்யும் யாகத்திற்கல்லவா அவளும், ஏனையோரும் சென்றிருக்கின்றனர்.  உலகத்திலுள்ளோர் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளனரே.  உங்களை அழைக்கவில்லையா, அல்லது அழைத்து நீங்கள்தான் செல்லவில்லையா?" என்று கேட்டாள்.  இதைக் கேட்டதும் அதிர்ச்சியில் தேவி இறந்தாள்.  ஜயை தேவியின் மரணத்திற்கு நான் காரணமாகி விட்டேனே என்று அழுது கொண்டிருந்தாள்.  அப்போது அங்கு வந்த பரமேச்வரன் விஷயமறிந்து தக்ஷனிடம் பெரும் கோபம் கொண்டார்.  அவரது மயிர்க் கால்களிலிருந்து ஸிம்ஹ முகத்தோடு எண்ணிறந்த வீரர்கள் தோன்றினார்கள்.  ஜயை கதையை எடுத்துக் கொண்டாள்.  வீரபத்ரனோடும், பத்ரகாளியோடும் ஈசன் போர்க்கோலம் கொண்டு தக்ஷனுடைய யாகசாலைக்கு வந்தார்.

வாசலில் காவல் புரிந்த தர்மனை அடித்துக் கீழே தள்ளி விட்டு உள்ளே நுழைந்தார்.  உக்ரமான இவரது கோலத்தைக் கண்ட முனிவர்கள் ஓட்டமெடுத்தனர்.  எதிர்த்துப் போரிட முடியாமல் தேவர்கள் பயந்தோடினர்.  விஷ்ணு சக்ராயுதத்தால் வீரபத்ரனைக் கட்டி, சிவகிங்கரன் என்பதால் அவனைக் கொல்லாமல் விட்டார்.  அவன் தோல்வியைக் கண்ட பரமேச்வரன் தானே புறப்பட்டார்.  அவரைக் கண்டதும் மஹாவிஷ்ணு ஒரு மாமரத்தில் ஒளிந்து கொண்டார்.  அஷ்டவஸுக்களும் நதியாகி ஓடினர்.  கச்யபர் முதலியோர் சதருத்ரீயத்தால் பரமனைப் போற்றினர்.  பூஷா என்பவன் ஈசனைப் பார்த்துப் பல்லைக் காட்டிச் சிரித்துப் போருக்கழைத்தான்.  அவன் பற்கள் உதிர அவன் கன்னத்தில் ஒரு குத்து குத்தினார் பரமேச்வரன்.  எதிர்த்த எல்லோரையும் கொன்று குவித்தார்.  மூன்று கண்களாலும் மூன்று அக்னிகளையும் கொளுத்தினார்.  யஜ்ஞம் மான் உருக்கொண்டு பயந்தோடியது.  பகவான் இன்னுமொரு உருவம் தாங்கி அதைத் துரத்திச் சென்றார்.  தக்ஷன் நடுநடுங்கி அவரைத் துதித்து யாகத்தைப் பூர்த்தி செய்தான்.

தாக்ஷாயணியில்லாது தனித்திருந்த சிவன் மீது மன்மதன் உன்மாதமெனும் அம்பை ஏவினான்.  அவர் பித்து பிடித்தார்போல அலைய ஆரம்பித்தார்.  மீண்டும் ஸந்தாபினீ எனும் அம்பை ஏவினான்.  பெரும் துயரத்தில் திரிந்து கொண்டிருந்த மஹாதேவர் முன்பு குபேரனது மகன் பாஞ்சாலன் அகப்பட்டான்.  அவனைத் தன் தாபத்தை ஏற்குமாறுக் கேட்டுக் கொண்ட மஹேசன் அவனை ஆசிர்வதித்து "காலஞ்சர க்ஷேத்ரத்திற்கருகே பாஞ்சாலகேசன் என்ற பெயரோடு விளங்குவாய், உன்னை பூஜிப்பவர் இஷ்டம் பூர்த்தியாகும்" என்று கூறிச் சென்றார்.

மன்மதன் கணையோடு பின் தொடர கைலாஸநாதன் தாருகாவனம் சென்றார்.  மஹர்ஷிகள் அனைவரும் வரவேற்று நிற்க, அருந்ததியைத் தவிர மற்ற முனிபத்னிகள் அனைவரும் அம்பிகாபதியின் அழகில் மயங்கி அவரைப் பின் தொடர்ந்து சென்றனர்.  இதைக் கண்ட முனிவர்கள் தங்கள் தபோபலத்தின் கர்வத்தால் சிவனது லிங்கம் கீழே விழட்டும் என சபித்தனர்.  அது கீழே விழுந்து லோகங்களைக் கடந்து சென்றது.  அதிர்ச்சியில் ஸகல ஜீவராசிகளும் நடுங்கிற்று.  விஷ்ணுவும், ப்ரஹ்மாவும் அங்கு வந்து அதன் அடி, முடிகளைக் காண முயற்சித்துத் தோல்வி அடைந்தனர்.  அனைவரும் இறைவனைத் துதித்தனர்.  பரமேச்வரன் ப்ரத்யக்ஷமாகத் தோன்றி ப்ரஹ்மாதி தேவர்களுக்கு லிங்க பூஜையை உபதேசித்து மறைந்தார்.  அதைக் கொண்டு ப்ரஹ்மா சைவம், பாசுபதம், காலதாமனம், காபாலிகம் என்ற நான்கு சிவபூஜா சாஸ்த்ரங்களை இயற்றினார்.  சக்தி முனிவருக்கு கோபாயனர், பரத்வாஜர் என இரு சிஷ்யர்களிருந்தனர்.  பரத்வாஜரது சிஷ்யனான ஸோமகேச்வரன் எனும் அரசன், ஆபஸ்தம்பரது சிஷ்யனான க்ரோதேச்வரன் எனும் வைச்யன், அர்ணோதரன் எனும் சூத்ரன் மூவரும் சிவ பூஜா ஸம்ப்ரதாயத்தை உலகில் ஆரம்பித்தனர்.  மூன்றாம் முறை அம்பெய்ய காத்திருந்த காமனை பரமன் கண்ணால் எரித்தார்.  எரிந்து விழுந்த அவனது பாகங்கள் மரங்களாயின.