Monday, September 9, 2019

பாவயாமி ரகுராமம் தமிழ்ப் பொருளுடன்

பாவயாமி ரகுராமம்
ராகம்: சாவேரி ( ராகமாலிகா )
தாளம்: ரூபகம்
இயற்றியவர்: சுவாதி திருநாள்

முழு ராமாயணம் சிறிய ஸம்ஸ்க்ருத பாடல் வடிவில், புரிந்து பாட தமிழில் பொருளுடன்

- தினசரி பூஜை, பயணத்தின் போதும், தீட்டு அது, இதுன்னு ப்ரச்சினை இல்லாமல் எப்போதும் பாட, த்யானிக்க உகந்தது
- குழந்தைகளுக்கும், பொது இடங்களிலும் கதை சொல்ல ஒரு கையேடு போலவும் பயன்படுகிறது.
- பல ராகங்களில் இதன் பகுதிகளை மாலையாக தொடுத்துப் பழகவும் எளிதாக, கேட்க இனிமையான எம்.எஸ். சுப்புலட்சுமி,  ஸ்ரீ செம்மங்குடி ஸ்ரீனிவாஸ ஐயர் குரல்களில்  https://www.youtube.com/watch?v=P8S4Z9Khg-w

https://www.youtube.com/watch?v=oRXGs3Y0ZXQ

பல்லவி (சாவேரி)
भावयामि रघुरामम् भव्य सुगुणारामम् ।
பாவயாமி ரகுராமம் பவ்ய சுகுணாராமம் |
பொருள்:
ரகு குலத்து ராமனை த்யானிக்கிறேன், அவன் தெய்வீக நற்குணங்களின் உருவானவன்(தோட்டம்).

அனுபல்லவி
भावुक वितरण परापाङ्ग लीला लसितम् ।।
பாவுக விதரணபரா பாங்கலீலா லசிதம் ||
பொருள்:
ஒளிரும் தன் கடைக்கண்களாலேயே மகிழ்ச்சியும், வளமும் எல்லாருக்கும் தருவதில் மேலானவன்

ஸரிகஸரி, மபதபத, | ரிஸநிதநிதபமகரிஸத.|
ஸரிம, கரிமபத, பமபதஸ, நிதநிதபமபத|
கரிஸத, ரிஸத, ,ஸத, ,கரிநிதமகரிஸத| (பாவயாமி ரகுராமம்)

சரணம் 1 (நாட்டைகுறிஞ்சி)
दिनकरान्वय तिलकं दिव्य गाधिसुत सवना-
वन रचित सुबाहु मुख वधम् अहल्या पावनम् ।
अनघमीश चापभङगं जनक सुता प्राणेशं
घन कुपित भृगुराम गर्व हरमित साकेतम् ॥
தினகரான்வயதிலகம், திவ்யகாதி சுதசவனா
வன, ரசித சுபாஹுமுக வத, மஹல்யா பாவனம்,
அனக மீச சாப பங்க, ஜனகசுதா ப்ரானேசம்,
கன குபித ப்ருகுராம கர்வஹர, மிதசாகேதம்
பொருள்: சூர்ய குலத்திலகம், காதியின் மகன் யக்ஞம் காக்க
சுபாஹுவின் தலைமையிலான அரக்கர்களை அழித்தவன், அஹல்யைக்கு விமோசனம் அளித்தவன்,
தெய்வீகமான ஈஶனின் வில்லை முறித்து ஜனக புத்ரியின் உயிர் நாதனானவன்,
பெருங்கோபத்தோடு வந்த ப்ருகுராமனின் செறுக்கை அடக்கி, அயோத்தி திரும்பியவன்

மகஸ, நி.த.நி.ஸ,ரிகம | நிதம, கரிகமபகரிஸ|
நி.த.நி.ஸரிகமநிதநிபதநிஸநிதநிஸரிகமகசநி|
கரிஸத, ரிஸத, ,ஸத, ,கரிநிதமகரிஸத| (பாவயாமி ரகுராமம்)

சரணம் 2 (தன்யாசி)
विहिताभिषेकम् अथ विपिन गतम् आर्य वाचा
सहित सीता सौमित्रीं शान्ततम शीलम् ।
गुह निलय गतं चित्रकूटागत भरत दत्त-
महित रत्नमय पादुकं मदन सुन्दराङ्गम् ॥
விஹிதாபிஷேகம் அத விபின கதம் ஆர்யவாசா
சஹித சீதா சௌமித்ரீம், ஶாந்ததம ஶீலம்,
குஹநிலையகதம், சித்ரகூடாகத, பரத தத்த
மஹித ரத்னமய பாதுகம், மதனசுந்தராங்கம்
பொருள்:
பட்டாபிஷேகம் தடைபட்ட பின் தந்தை சொற்படி வனம் சென்று, ஸீதை, ஸௌமித்ரியுடன் வசித்தவன். அமைதியே உருவானவன்.
குஹன் இருக்குமிடம் சென்றவன், சித்ரகூட பர்வதத்தில் வந்து, பரதனுக்கு தன் மஹிமை பொருந்திய ரத்ன பாதுகைகளை தந்தவன், மன்மதனின் அழகிய அங்கங்கள் உடையவன்.

நி.ஸக,மபகமப, நிஸ | ரிஸரிநிஸபதபக, ரிஸ|
நிஸகமபக, மபநிஸப, நிஸகரிஸநிதபநிஸ
கரிஸத, ரிஸத, ,ஸத, ,கரிநிதமகரிஸத| (பாவயாமி ரகுராமம்)

சரணம் 3 (மோஹனம்)
वितत दण्डकारण्य गत विराध दलनं
सुचरित घटज दत्तानुपमित वैष्णवास्त्रम् ।
पतगवर जटायु नुतं पञ्चवटी विहितावासं
अति घोर शूर्पणखा वचनागत खरादि हरम् ॥
விதத தண்டகாரண்ய கத விராத தலனம்,
சுசரித கடஜ தத் தானுபம் இதவைஷ்ணவாஸ்த்ரம்,
பதக வர ஜடாயு நுதம், பஞ்சவடீ விஹிதவாசம்,
அதிகோர சூர்ப்பணகா வசனாகத கராதி ஹரம்
பொருள்:
அடர்ந்து விரிந்த தண்டகாரண்யத்தில் செல்லும் போது விராதனை அழித்தவன்,
சிறந்த குடமுனி(அகஸ்த்யர்) தந்த ஒப்பற்ற வைஷ்ணவாஸ்த்ரத்தைக் கொண்டவன்,
பக்ஷி ராஜனான ஜடாயுவால் பூஜிக்கப்பட்டு, பஞ்சவடீயில் வாசம் கொண்டவன்,
அதி கோர சூர்ப்பணகையின் சொல் கேட்டு வந்த கரன் முதலானோரைக் கொன்றவன்.

க, , பகரிகரிஸத.ஸரி| க, , பதஸதபகரிஸரி
கபககரிஸரிகரிரிஸதஸரிகரிகபகபதபதஸ|
கரிஸத, ரிஸத, ,ஸத, ,கரிநிதமகரிஸத| (பாவயாமி ரகுராமம்)

சரணம் 4 (முகாரி)
कनक मृग रूप धर खल मारीच हरमिह
सुजन विमत दशास्य हृत जनकजान्वेषणम् ।
अनघम् पम्पातीर संगताञ्जनेय नभोमणि
तनुज सख्यकरं वाली तनु दलनमीशम् ॥
கனக மிருக ரூபதர கல மாரீச ஹர, மிஹ
ஸுஜன விமத தஶாஸ்ய ஹ்ருத ஜனகஜா ன்வேஷணம்,
அனகம், பம்பாதீர சங்கதா ஞ்சனேய, நபோமணி
தனுஜ ஸக்யகரம், வாலீ தனு தலன, மீஶம்
பொருள்:
பொன்மானின் ரூபம் தரித்த வஞ்சக மாரீசனை வதைத்தவன்,
இங்கு உத்தமர்களை மதிக்காத (உற்றவர் சொல்கேளாத) தசமுகன் திருடிய ஜனகன் மகளை தேடி அலைந்தவன்,
பரிசுத்தமானவன், பம்பா நதிக்கரையில் ஆஞ்சநேயருடன் சேர்ந்தவன், விண்ணில் ஒளிரும் சூர்யபுத்ரனுடன் ஸ்னேஹம் கொண்டவன்,
வாலீயின் உடலை சாய்த்தவன், உயர்ந்தவன்

ப, , மகரிஸ,நி.த.ஸரி| ம, , கரிஸரிமபமநித|
ஸ, ஸநிதபப, மகரிஸநி.த.ஸரிமபநிதமபதஸ
கரிஸத, ரிஸத, ,ஸத, ,கரிநிதமகரிஸத| (பாவயாமி ரகுராமம்)

சரணம் 5 (பூர்வி கல்யாணி)
वानरोत्तम सहित वायुसूनु करार्पित
भानुशत भास्वर भव्य रत्नाङ्गुलीयम् ।
तेन पुनरानीतान्यून चूडामणी दर्शनं
श्रीनिधिमुदधि तीरेश्रित विभीषण मिलितम् ॥
வானரோத்தம ஸஹித வாயுஸூனு கரா ர்ப்பித
பானுஶத பாஸ்வர பவ்ய ரத்னாங்குலீயம்,
தேன புன ரானீதா ன்யூன சூடாமணி தர்சனம்,
ஸ்ரீநிதி முததி தீரே ஶ்ரித விபீஷணா மிலிதம்
பொருள்:
ஸுக்ரீவனுடன் இருந்தபோது, வாயு புத்ரன் கரங்களில், நூறு ஸூர்ய ஒளி பொருந்திய, தெய்வீகமான தன் ரத்ன மோதிரத்தைத் தந்தவன்,
பின்னர் அவனால் கொண்டுவரப்பட்ட குறையற்ற சூடாமணியைப் பெற்றவன்,
பொக்கிஷங்கள் உறையும் கடற்கரையில் அண்டின விபீஷணனை நண்பனாக்கிக் கொண்டவன்

க, மகரிஸத.ஸ,ரிகம| ப, ,தபஸநிதபமகரி|
கமபம, பக,, மரி, கஸ, ரிக, மபதபஸ, நி|
கரிஸத, ரிஸத, ,ஸத, ,கரிநிதமகரிஸத| (பாவயாமி ரகுராமம்)

சரணம் 6 (மத்யமாவதி)
कलित वर सेतुबन्धं खल निस्सीम पिशिताशन
दलनम् उरु दश कण्ठ विदारणम् अति  धीरम् ।
ज्वलन पूत जनक सुता सहितम् यात साकेतं
विलसित पट्टाभिषेकं विश्व पालं पद्मनाभम् ॥
கலித வரசேது பந்தம், கல நிஸ்ஸீம பிஶிதாஶன
தலனம், உரூ தஶகண்ட விதாரணம், அதி தீரம்,
ஜ்வலன பூத ஜனக ஸுதா ஸஹிதம் யாத சாகேதம்
விலஸித பட்டாபிஷேகம், விஸ்வபாலம், பத்மநாபம்
பொருள்:
சிறந்த கடல் பாலத்தைக் கட்டினவன், வஞ்சகர்களான எல்லையற்ற நரமாமிசம் உண்ணும் அரக்கர்களை அழித்தவன்,
பத்து கழுத்துக்களுடன் உருக்கொண்டவனை அழித்தவன்,  எதற்கும் அஞ்சாதவன்,
நெருப்பால் தூய்மையாக்கப்பட்ட ஜனகபுத்ரியுடன் சேர்ந்தவன், அயோத்தி திரும்பியவன்,
ஒளிரும் பட்டாபிஷேகம் கொண்டவன், உலகைக் காப்பவன், பத்மநாபன்.

ரி, மரிமபநி, பமபநி| ஸ, , நிஸநிபபமமரிஸ|

ராகம்1: ரிபமரிஸநி. ஸரிமப
ராகம்2: தபஸ, நிதபமகமகரி
ராகம்3: ஸ, நி. த.. ஸரிமக ரிஸரி
ராகம்4: க, தபகரிஸரிகபதஸ
ராகம்5: ரிஸத, பதபக, ரிஸ
ராகம்6: நி. ஸமகமநிதநிபதநிஸ
ராகம்0: கரிஸத, ரிஸத, ,ஸத, ,கரிநிதமகரிஸத|

(பாவயாமி ரகுராமம்)

Tuesday, September 3, 2019

நாம ராமாயணம்

நாம ராமாயணம்

- முழு ராமாயணம் சிறிய வடிவில்
- 108 வாக்கியங்கள், தினசரி பூஜை, பயணத்தின் போதும், தீட்டு அது, இதுன்னு ப்ரச்சினை இல்லாமல் எப்போதும் பாட, த்யானிக்க உகந்தது
- குழந்தைகளுக்கும், பொது இடங்களிலும் கதை சொல்ல ஒரு கையேடு போலவும் பயன்படுகிறது.
- ஒவ்வொரு வாக்கியமும் ராமன் பெயரில் முடிவதால் பாபங்களும் தொலைந்து, புண்ணியமும் பலனாக கிடைக்க:
- பல ராகங்களில் இதன் பகுதிகளை மாலையாக தொடுத்துப் பழகவும் எளிதாக, கேட்க இனிமையான எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் குரலின் நான் கேட்டது, https://gaana.com/playlist/shruthi-yazbh-mssubbulakshmi

- ஸம்ஸ்க்ருத வார்த்தைகள் மேல கம்ப்யூட்டர் மௌஸ நகர்த்தினா ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பு அருமையாக இங்கே:
https://www.greenmesg.org/stotras/rama/nama_ramayana.php


நாம ராமாயணம்
नाम रामायणम्

1. பால காண்டம்
॥ बाल काण्डम् ॥

1. சுத்த ப்ரஹ்ம பராத்பர ராம்
शुद्ध ब्रह्म परात्पर राम् ॥१॥
அனைத்திற்கும் மேலான, மெய்யறிவின் வடிவினன் ராமன்

2. காலாத்மக பரமேச்வர ராம்
कालात्मक परमेश्वर राम् ॥२॥
காலத்தின் வடிவான பரமேஶ்வரன் ராமன்

3. சேஷதல்ப ஸுகநித்ரித ராம்
शेषतल्प सुख निद्रित राम् ॥३॥
(ஆதிசேஷனெனும்) அரவின் மேல் சுகமாக (யோக) நித்திரை கொள்ளும் ராமன்

4. ப்ரஹ்மாத்யமர ப்ரார்த்தித ராம்
ब्रह्माद्यामर प्रार्थित राम् ॥४॥
ப்ரஹ்மா முதலான தேவர்களால் ப்ரார்த்திக்கப்படும் ராமன்

5. சண்டகிரண குல மண்டந ராம்
चण्डकिरण कुल मण्डन राम् ॥५॥
மஹிமையான சூர்ய குலத்தை அலங்கரித்த ராமன்

6. ஸ்ரீமத் தசரத நந்தன ராம்
श्रीमद्दशरथ नन्दन राम् ॥६॥
ஒப்பற்ற தசரதனின் மகன் ராமன்

7. கௌசல்யா ஸுக வர்த்தந ராம்
कौसल्या सुख वर्धन राम् ॥७॥
கௌசல்யையின் சந்தோஷம் வளர்த்த ராமன்

8. விச்வாமித்ர ப்ரியதன ராம்
विश्वामित्र प्रियधन राम् ॥८॥
விஶ்வாமித்ரரின் ப்ரியமான பொக்கிஷம் ராமன்

9. கோர தாடகா காதக ராம்
घोर ताटका घातक राम् ॥९॥
கோரமான தாடகையை அழித்த ராமன்

10. மாரீசாதி நிபாதக ராம்
मारीचादि निपातक राम् ॥१०॥
மாரீசன் முதலானவர்களை அழித்த ராமன்

11. கௌசிக மக ஸம்ரக்ஷக ராம்
कौशिक मख संरक्षक राम् ॥११॥
கௌசிக(விஶ்வாமித்ரர்) யாகத்தை காத்த ராமன்

12. ஸ்ரீமத் அஹல்யோத்தாரக ராம்
श्रीमदहल्योद्धारक राम् ॥१२॥
ஒப்பற்ற அஹல்யைக்கு விமோசனம் அளித்த ராமன்

13. கௌதம முனி ஸம்பூஜித ராம்
गौतम मुनि संपूजित राम् ॥१३॥
கௌதம முனிவரால் நன்கு பூஜிக்கப்பட்ட ராமன்

14. ஸுரமுனி வரகண ஸம்ஸ்துத ராம்
सुर मुनिवर गण संस्तुत राम् ॥१४॥
தேவர், சிறந்த முனிவர் கூட்டங்களால் துதிக்கப்பட்ட ராமன்

15. நாவிக தாவித ம்ருது பத ராம்
नाविक धावित मृदु पद राम् ॥१५॥
ஓடக்காரன் நீரால் சுத்தம் செய்த ம்ருதுவான பாதங்கள் கொண்ட ராமன்

16. மிதிலாபுர ஜன மோஹக ராம்
मिथिलापुर जन मोहक राम् ॥१६॥
மிதிலை மக்களை ஆட்கொண்ட ராமன்

17. விதேஹ மானஸ ரஞ்ஜக ராம்
विदेह मान स रञ्जक राम् ॥१७॥
மெய்யறிவை உணர்ந்தவரின் (ஜனகர்) கௌரவம் வளர்த்த ராமன்

18. த்ரியம்பக கார்முக பஞ்ஜக ராம்
त्र्यंबक कार्मुक भञ्जक राम् ॥१८॥
முக்கண்ணரின் வில்லை முறித்த ராமன்

19. ஸீதார்ப்பித வர மாலிக ராம்
सीतार्पित वर मालिक राम् ॥१९॥
சீதை அணிவித்த ஸ்வயம்வர மாலையுடைய ராமன்

20. க்ருத வைவாஹிக கௌதுக ராம்
कृत वैवाहिक कौतुक राम् ॥२०॥
சிறப்பான திருமணம் கொண்ட ராமன்

21. பார்க்கவ தர்ப்ப விநாசக ராம்
भार्गव दर्प विनाशक राम् ॥२१॥
பார்க்கவ(பரஶுராமன்) பெருமை அழித்த ராமன்

22. ஸ்ரீமத் அயோத்யா பாலக ராம்
श्रीमदयोध्या पालक राम् ॥२२॥
சீர் மிகு அயோத்தியின் காவலன் ராமன்

2. அயோத்யா காண்டம்
॥ अयोध्या काण्डम् ॥

23. அகணித குணகண பூஷித ராம்
अगणित गुणगण भूषित राम् ॥२३॥
எண்ணிலடங்கா குணக்குவியலை அலங்காரமாக கொண்ட ராமன்

24. அவநீ தநயா காமித ராம்
अवनी तनया कामित राम् ॥२४॥
பூமாதேவியின் மகள் விரும்பிய ராமன்

25. ராகாசந்த்ர ஸமாநந ராம்
राकाचन्द्र समानन राम् ॥२५॥
முழு நிலவினை ஒத்த முகம் கொண்ட ராமன்

26. பித்ரு வாக்கியாச்ரித காநந ராம்
पितृ वाक्याश्रित कानन राम् ॥२६॥
பெற்றோர் சொற்படி கானனம் சென்ற ராமன்

27. ப்ரியகுஹ விநிவேதித பத ராம்
प्रियगुह विनिवेदित पद राम् ॥२७॥
ப்ரியமான குஹன் தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட பாதம் கொண்ட ராமன்

28. தத்க்ஷாலித நிஜ ம்ருது பத ராம்
तत् क्षालित निज मृदु पद राम् ॥२८॥
குஹனால் நீரினால் சுத்தம் செய்யப்பட்ட ம்ருதுவான பாதம் கொண்ட ராமன்

29. பரத்வாஜ முகாநந்தக ராம்
भरद्वाज मुखानन्दक राम् ॥२९॥
பரத்வாஜரை ஆனந்தமடையச் செய்த ராமன்

30. சித்ரகூடாத்ரி நிகேதந ராம்
चित्रकूटाद्रि निकेतन राम् ॥३०॥
சித்ரகூட மலையில் வாசம் கொண்ட ராமன்

31. தசரத ஸந்தத சிந்தித ராம்
दशरथ सन्तत चिन्तित राम् ॥३१॥
தசரதரையே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருந்த ராமன்

32. கைகேயி தநயார்த்தித ராம்
कैकेयी तनयार्थित राम् ॥३२॥
கைகேயி மகனால் மீண்டும் ராஜாவாக அழைக்கப்பட்ட ராமன்

33. விரசித நிஜ பித்ரு கர்மக ராம்
विरचित निज पितृ कर्मक राम् ॥३३॥
அப்பாவின் ஈம க்ரியைகளை செய்த ராமன்

34. பரதார்ப்பித நிஜ பாதுக ராம்
भरतार्पित निज पादुक राम् ॥३४॥
பரதனுக்குத் தன் பாதுகைகளை தந்த ராமன்

3. ஆரண்ய காண்டம்
॥ अरण्य काण्डम् ॥

35. தண்டகாவந ஜந பாவன ராம்
दण्डकवन जन पावन राम् ॥३५॥
தண்டக ஆரண்ய மக்களை உய்வித்த ராமன்

36. துஷ்ட விராத விநாசன ராம்
दुष्ट विराध विनाशन राम् ॥३६॥
துஷ்ட விராதனை அழித்த ராமன்

37. சரபங்க ஸுதீக்ஷ்ணார்ச்சித ராம்
शरभङ्ग सुतीक्ष्णार्चित राम् ॥३७॥
ஶரபங்கர், ஸுதீக்ஷ்ணரால் பூஜிக்கப்பட்ட ராமன்

38. அகஸ்த்யாநுக்ரஹ வர்த்தித ராம்
अगस्त्यानुग्रह वर्धित राम् ॥३८॥
அகஸ்த்யரின் பரிபூர்ண அனுக்ரஹத்தைப் பெற்ற ராமன்

39. க்ருத்ராதிப ஸம்ஸேவித ராம்
गृध्राधिप संसेवित राम् ॥३९॥
பக்ஷிராஜனால் (ஜடாயு) நன்கு சேவிக்கப்பட்ட ராமன்

40. பஞ்சவடீ தட ஸுஸ்தித ராம்
पञ्चवटी तट सुस्थित राम् ॥४०॥
பஞ்சவடீ நதிக்கரையில் வாசம் செய்த ராமன்

41. சூர்ப்பணகார்த்தி விதாயக ராம்
शूर्पणखार्ति विधायक राम् ॥४१॥
சூர்ப்பணகைக்கு துக்கத்தை கற்பித்த ராமன்

42. கர தூக்ஷண முக ஸூதக ராம்
खर दूषण मुख सूदक राम् ॥४२॥
கரன், தூஷணர்களை அழித்த ராமன்

43. ஸீதா ப்ரிய ஹரிணாநுக ராம்
सीता प्रिय हरिणानुग राम् ॥४३॥
ஸீதை விரும்பிய மானைத் தொடர்ந்த ராமன்

44. மாரி சார்த்தி க்ருதாசுக ராம்
मारीचार्ति कृदाशुग राम् ॥४४॥
மாரீசனை அழிக்க அம்பை விட்ட ராமன்

45. விநஷ்ட ஸீதா அந்வேஷக ராம்
विनष्ट सीतान्वेषक राम् ॥४५॥
இழந்த ஸீதையை தேடியலைந்த ராமன்

46. க்ருத்ராதிப கதி தாயக ராம்
गृध्राधिप गति दायक राम् ॥४६॥
பக்ஷிராஜனுக்கு மோக்ஷமளித்த ராமன்

47. சபரீ தத்த பலாசந ராம்
शबरी दत्त फलाशन राम् ॥४७॥
சபரீ தந்த பழங்களை உண்ட ராமன்

48. கபந்த பாஹுச் சேதக ராம்
कबन्ध बाहुच्छेदक राम् ॥४८॥
கபந்தனின் தோள்களை சேதித்த ராமன்

4. கிஷ்கிந்தா காண்டம்
॥ किष्किन्धा काण्डम् ॥

49. ஹநுமத் ஸேவித நிஜபத ராம்
हनुमत्सेवित निजपद राम् ॥४९॥
ஹனுமனால் சேவிக்கப்பட்ட பாதங்களுடைய ராமன்

50. நத ஸுக்ரீவாபீஷ்ட த ராம்
नत सुग्रीवाभीष्ट द राम् ॥५०॥
சேவித்த ஸுக்ரீவனின் இஷ்டங்களை பூர்த்தி செய்த ராமன்

51. கர்வித வாலி ஸம்ஹாரக ராம்
गर्वित वालि संहारक राम् ॥५१॥
கர்வம் கொண்ட வாலியை வதைத்த ராமன்

52. வாநர தூத ப்ரேஷக ராம்
वानर दूत प्रेषक राम् ॥५२॥
வாநர தூதனை அனுப்பிய ராமன்

53. ஹிதகர லக்ஷ்மண ஸம்யுத ராம்
हितकर लक्ष्मण संयुत राम् ॥५३॥
தன்னையே அண்டின லக்ஷ்மணனுடனேயே இருந்த ராமன்

5. ஸுந்தர காண்டம்
॥ सुन्दर काण्डम् ॥

54. கபி வர ஸந்தத ஸம்ஸ்ம்ருத ராம்
कपि वर सन्तत संस्मृत राम् ॥५४॥
சிறந்த வானர(ஹனுமனால்) சதா நினைக்கப்பட்ட ராமன்

55. தத்கதி விக்ந த்வம்ஸக ராம்
तद्‍ गति विघ्न ध्वंसक राम् ॥५५॥
அந்த ஹனுமன் வழியில் தடைகளை தகர்த்த ராமன்

56. ஸீதா ப்ராணா தாரக ராம்
सीता प्राणाधारक राम् ॥५६॥
ஸீதையின் உயிருக்கு ஆதாரமான ராமன்

57. துஷ்ட தசாநந தூஷித ராம்
दुष्ट दशानन दूषित राम् ॥५७॥
துஷ்ட தசமுகனை(ராவணன்) பழித்த ராமன்

58. சிஷ்ட ஹநூமத் பூஷித ராம்
शिष्ट हनूमद्‍ भूषित राम् ॥५८॥
சீடனான ஹனுமனை அலங்கரித்த ராமன்

59. ஸீதா வேதித காகா வந ராம்
सीता वेदित काका वन राम् ॥५९॥
ஹனுமனிடம் ஸீதை சொன்ன காகாஸுர வதத்தை அறிந்த ராமன்

60. க்ருத சூடாமணி தர்சந ராம்
कृत चूडामणि दर्शन राम् ॥६०॥
ஸீதையின் சூடாமணியை தர்ஶித்த ராமன்

61. கபிவர வசனா ச்வாஸித ராம்
कपिवर वचनाश्वासित राम् ॥६१॥
வானர ஶ்ரேஷ்டனின் வார்த்தைகளால் பரிஹாரம் கொண்ட ராமன்

6. யுத்த காண்டம்
॥ युध्द काण्डम् ॥

62. ராவண நிதந ப்ரஸ்தித ராம்
रावण निधन प्रस्थित राम् ॥६२॥
ராவணன் அழிவை நிச்சயித்த ராமன்

63. வாநர ஸைந்ய ஸமாவ்ருத ராம்
वानर सैन्य समावृत राम् ॥६३॥
வானர சைன்யங்களால் சூழப்பட்ட ராமன்

64. சோஷித ஸரிதீசார்த்தித ராம்
शोषित सरिदीशार्थित राम् ॥६४॥
ஸமுத்ர ராஜனை வேண்டி, வற்றி விடச்செய்வேன் என பயங்கொள்ளச்செய்த ராமன்

65. விபீஷணாபய தாயக ராம்
विभीषणाभय दायक राम् ॥६५॥
விபீஷணனுக்கு அபயம் தந்த ராமன்

66. பர்வத ஸேது நிபந்தக ராம்
पर्वत सेतु निबन्धक राम् ॥६६॥
மலைப்பாறைகளால் ஸமுத்ரத்தில் பாலம் கட்டிய ராமன்

67. கும்பகர்ண சிரச்சேதக ராம்
कुम्भकर्ण शिरच्छेदक राम् ॥६७॥
கும்பகர்ணன் சிரசை அரிந்த ராமன்

68. ராக்ஷஸ ஸங்க விமர்த்தக ராம்
राक्षस सङ्घ विमर्दक राम् ॥६८॥
ராக்ஷஸ கூட்டத்தை அழித்த ராமன்

69. அஹிமஹி ராவண சாரண ராம்
अहिमहिरावण चारण राम् ॥६९॥
அஹி ராவணன், மஹி ராவணனின் தடைகளைத் தகர்த்த ராமன்

70. ஸம்ஹ்ருத தசமுக ராவண ராம்
संहृतद शमुख रावण राम् ॥७०॥
ராவணனை அழித்த ராமன்

71. விதி பவ முக ஸுர ஸம்ஸ்துத ராம்
विधि भव मुख सुर संस्तुत राम् ॥७१॥
ப்ரஹ்மா, ருத்ரன், தேவர்களால் துதிக்கப்பட்ட ராமன்

72. க ஸ்தித தசரத வீக்ஷித ராம்
ख स्थित दशरथ वीक्षित राम् ॥७२॥
ஸ்வர்கதிலிருந்த தசரதனால் பெருமையோடு பார்க்கப்பட்ட ராமன்

73. ஸீதா தர்சன மோதித ராம்
सीता दर्शन मोदित राम् ॥७३॥
ஸீதையின் தர்ஶனத்தால் திளைத்த ராமன்

74. அபிஷிக்த விபீஷண நத ராம்
अभिषिक्त विभीषण नत राम् ॥७४॥
பட்டாபிஷேகம் கொண்ட வீபீஷணனால் சேவிக்கப்பட்ட ராமன்

75. புஷ்பக யாநாரோஹண ராம்
पुष्पक यानारोहण राम् ॥७५॥
புஷ்பக விமானத்தில் ஏறிய ராமன்

76. பரத்வாஜாதி நிஷேவண ராம்
भरद्वाजादि निषेवण राम् ॥७६॥
பரத்வாஜர் முதலானோரை தரிசித்த ராமன்

77. பரத ப்ராண ப்ரியகர ராம்
भरत प्राण प्रियकर राम् ॥७७॥
பரதனுக்கு மகிழ்ச்சியான வாழ்வளித்த ராமன்

78. ஸாகேதபுரீ பூஷண ராம்
साकेतपुरी भूषण राम् ॥७८॥
அயோத்தியை அலங்கரித்த ராமன்

79. ஸகல ஸ்வீய ஸமாநத ராம்
सकल स्वीय समानत राम् ॥७९॥
அனைவரையும் சொந்தக்குழந்தைகளைப் போல பாவித்த ராமன்

80. ரத்ந லஸத் பீடாஸ்தித ராம்
रत्न लसत्पीठास्थित राम् ॥८०॥
ஒளியுள்ள ரத்ன ஸிம்ஹாஸனத்திலிருந்த ராமன்

81. பட்டாபிஷேகாலங்க்ருத ராம்
पट्टाभिषेकालंकृत राम् ॥८१॥
பட்டாபிஷேகத்தால் அலங்கரிக்கப்பட்ட ராமன்

82. பார்த்திவ குல ஸம்மாநித ராம்
पार्थिव कुल सम्मानित राम् ॥८२॥
மன்னர் குலங்களை கௌரவம் செய்த ராமன்

83. விபிஷணார்ப்பித ரங்கக ராம்
विभीषणार्पित रङ्गक राम् ॥८३॥
விபீஷணனுக்கு ரங்க விக்ரஹம் தந்த ராமன்

84. கீச குலாநுக்ரஹகர ராம்
कीश कुलानुग्रह कर राम् ॥८४॥
ஸூர்ய வம்சத்திற்குப் பெருமை தந்த ராமன்

85. ஸகல ஜீவ ஸம்ரக்ஷக ராம்
सकल जीव संरक्षक राम् ॥८५॥
எல்லா உயிர்களையும் நன்கு காத்த ராமன்

86. ஸம்ஸ்த லோக ஆதாரக ராம்
समस्त लोकाधारक राम् ॥८६॥
எல்லா உலகிற்கும் ஆதாரம் ராமன்

7. உத்தர காண்டம்
॥ उत्तर काण्डम् ॥

87. ஆகத முனி கண ஸம்ஸ்துத ராம்
आगत मुनि गण संस्तुत राम् ॥८७॥
வந்திருந்த முனிவர் கூட்டங்களால் துதிக்கப்பட்ட ராமன்

88. விச்ருத தச கண்டோத்பவ ராம்
विश्रुत दश कण्ठोद्भव राम् ॥८८॥
தசரதனின் உற்பத்தியை கேட்டறிந்த ராமன்

89. ஸீதா ஆலிங்கன நிர்வ்ருத ராம்
सीतालिङ्गन निर्वृत राम् ॥८९॥
ஸீதையின் அணைப்பில் சந்தோஷித்த ராமன்

90. நீதி ஸுரக்ஷித ஜந பத ராம்
नीति सुरक्षित जन पद राम् ॥९०॥
நீதியின் வழியில் ஜனங்களை நடத்தியவன்

91. விபிந த்யாஜித ஜநக ஜ ராம்
विपिन त्याजित जनक ज राम् ॥९१॥
ஜனக புத்ரியை வனத்தில் த்யாகம் செய்த ராமன்

92. காரித லவணாஸுர வத ராம்
कारित लवणासुर वध राम् ॥९२॥
லவணாஸுர வதத்தை நிச்சயித்த ராமன்

93. ஸ்வர்க்கத சம்புக ஸம்ஸ்துத ராம்
स्वर्गत शम्बुक संस्तुत राम् ॥९३॥
ஸ்வர்க்கம் சென்ற ஶம்புகனால் நன்கு துதிக்கப்பட்ட ராமன்

94. ஸ்வ தநய குச லவ நந்தித ராம்
स्व तनय कुश लव नन्दित राम् ॥९४॥
சொந்தக் குழந்தைகள் குஶன், லவனை மகிழ்வித்த ராமன்

95. அச்வமேத க்ரது தீக்ஷித ராம்
अश्वमेध क्रतु दीक्षित राम् ॥९५॥
அஶ்வமேத யாக விரதம் கொண்ட ராமன்

96. காலா வேதித ஸுரபத ராம்
काला वेदित सुरपद राम् ॥९६॥
ஸ்வர்க்கம் செல்ல வேண்டிய நேரமானதை காலனிடமிருந்து அறிந்த ராமன்

97. ஆயோத்யக ஜந முக்தித ராம்
आयोध्यक जन मुक्तिद राम् ॥९७॥
அயோத்யா ஜனங்களுக்கு முக்தியளித்த ராமன்

98. விதி முக விபுதாநந்தக ராம்
विधि मुख विबुधानन्दक राम् ॥९८॥
ப்ரஹ்மா முதலான தேவர்கள் முகத்தில் சந்தோஷம் தந்த ராமன்

99. தேஜோமய நிஜரூபக ராம்
तेजोमय निज रूपक राम् ॥९९॥
ஒளிமயமான நிஜரூபம் உடைய ராமன்

100. ஸம்ஸ்ருதி பந்த விமோசக ராம்
संसृति बन्ध विमोचक राम् ॥१००॥
சம்சார பந்தங்களிலிருந்து விடுதலை தரும் ராமன்

101. தர்ம ஸ்தாபந தத்பர ராம்
धर्म स्थापन तत्पर राम् ॥१०१॥
தர்மத்தை நிலைக்கச்செய்வதையே விரும்பிய ராமன்

102. பக்தி பராயண முக்தி த ராம்
भक्ति परायण मुक्ति द राम् ॥१०२॥
பக்தியோடு துதிப்பவருக்கு முக்தி தரும் ராமன்

103. ஸர்வ சராசர பாலக ராம்
सर्व चराचर पालक राम् ॥१०३॥
எல்லா உலகங்களையும் காக்கும் ராமன்

104. ஸர்வ பவாமய வாரக ராம்
सर्व भवामय वारक राम् ॥१०४॥
எல்லா உயிர்களையும் துக்கங்களிலிருந்து விடுவிக்கும் ராமன்

105. வைகுண்டாலய ஸம்ஸ்துத ராம்
वैकुण्ठालय संस्थित राम् ॥१०५॥
வைகுண்டத்தில் நிலைத்த ராமன்

106. நித்யாநந்த பத ஸ்தித ராம்
नित्यानन्द पद स्थित राम् ॥१०६॥
நித்ய ஆனந்த நிலையில் இருக்கும் ராமன்

107. ராம ராம ஜய ராஜா ராம்
राम् राम् जय राजा राम् ॥१०७॥
ஜயராமனுக்கே வெற்றி

108. ராம ராம ஜய ஸீதா ராம்.
राम् राम् जय सीता राम् ॥१०८॥
ஸீதாராமனுக்கே வெற்றி

Tuesday, October 24, 2017

அடியேனின் கந்த புராண சொற்பொழிவு

கந்த புராண சொற்பொழிவு
கம்பரசன்பேட்டை J சீதாராம ஶர்மா
இடம்: வரஸித்தி வினாயகர் ஆலயம், ரயில்வே காலனி, கிழக்குத் தாம்பரம்
நாள்: 22 அக்டோபர் 2017, ஞாயிறு

இது என்னோட மூனாவது சொற்பொழிவு.  மொதல்ல கிழக்குத் தாம்பரம் ஏரிக்கரைத் தெருவில் வீற்றிருக்கும் ஸ்ரீ கங்கையம்மன் கோவில்ல, ரெண்டாவது இதே பிள்ளையார் கோவில்ல, ரெண்டுமே இந்த வருஷத்து நவராத்ரியின் போது, அம்பாளை பத்தி.

மூன்று பாகங்களாக கீழே கொடுத்திருக்கும் யூ ட்யூப் லிங்க்ல  பதிவேற்றியிருக்கிறேன்.  ஆஸ்தீக, நாஸ்தீக நண்பர்கள், இருந்தா நல்லாயிருக்கும் இருக்கற எல்லா டீமும் கேக்கறா மாதிரி தான் முடிஞ்ச வரைக்கும் வந்திருக்குன்னு நினைக்கிறேன்.   முழுவதும் கேட்டு விட்டு, வழக்கம் போல குறை, நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.  உபயோகமாக இருக்கும்னா இன்னும் கொஞ்சம் பேருக்குப் பகிருங்கள்.  ரெண்டு மணி நேரத்துல சொன்னதால கொஞ்சம் கதை, கொஞ்சம் செய்யுள், கொஞ்சம் தத்வம்னு வேகமா போயிருக்கேன்.  பொறுத்துக் கொள்ளவும்.   நீங்க குழந்தைகளுக்கு மெல்ல சொல்லிக் குடுங்கோ.

https://www.youtube.com/playlist?list=PLKsNUmN3Ozf7mlSOgAEmquNVsLtBQ2fnX

Friday, August 18, 2017

Valmiki Ramayanam Tamil Audio - முழு வால்மீகி ராமாயணம் ஆடியோ புக்

சம்போ மஹாதேவ !

முழு வால்மீகி ராமாயணம் ஆடியோ

அனுக்ரஹ க்ரந்தமான இந்த வால்மீகி ராமாயணம் தமிழ்-ஸம்ஸ்க்ருத மொழிகளில் பெரும் புலமை பெற்ற என் தாத்தாவைப் போன்ற சிறந்த வித்வான்களிடமிருந்து க்ரஹித்தது. இது கேட்பவர்க்கும், படிப்பவர்க்கும் எல்லா இக, பர சௌபாக்யங்களையும் அளிக்கிறது என்பது என் அனுபவம்.


யூ டியூப்பில்  பதிவு செய்திருக்கிறேன். கேட்டுப் பயன் பெறுங்கள்.  

இது மூல க்ரந்தமான வால்மீகி ராமாயணத்தின் செம்மையான தமிழ்ப் பதிவு.   உங்களுக்குத் தெரிந்த கம்ப, துளசி ராமாயணங்களோடு ஒப்பிடுங்கள். 

கருத்துக்களைக் கூறுங்கள். லிங்க் ல் ஏதாவது பிரச்னை, கிடைக்கவில்லை என்றால் தெரிவியுங்கள்.

ஜய் ஸ்ரீ ராம்

https://www.youtube.com/playlist?list=PLKsNUmN3Ozf43uJEswb4MU7ibO4tmQNFW

உங்கள் ஆசிகளுடன் 
சீதாராமன். ஜ

Friday, November 29, 2013

வாமன புராணம் - 25

வாமன புராணம் - 25

பகவத்பக்தியும், மோக்ஷமும்: பாதாளத்தில் மீண்டும் மோகங்களில் ஆழ்ந்து பகவானை மஹாபலி மறந்த போது விஷ்ணுவின் சுதர்சனம் அவன் முன் தோன்றி அவனுக்கு மோக்ஷ மார்க்கத்தை நினைவுபடுத்தியது.  உடனே தெளிந்த அவனும் ப்ரஹ்லாதரை நினைக்க, அவரும் தீர்த்தயாத்ரையை முடித்துக் கொண்டு அவன் முன் தோன்றினார்.  கரையேற வழி கேட்டுப் பணிந்த பலிக்கு, ப்ரஹ்லாதர் ஹிதோபதேசம் செய்யலானார். "பகவத்பக்தியை விட மோக்ஷ ஸாதனம் வேறில்லை.  பலமுறை பகவந்நாமங்களைக் கூறுபவனே நாவு படைத்தவன்.  அவனை ஆராதிக்கும் கரங்களே கரங்கள்.  விஷ்ணு சரிதங்களை விரும்பிக் கேட்கும் செவிகளே செவிகள்.  தினம் காலையில் எழுந்தவுடன் எவன் உள்ளத்தில் விஷ்ணுவின் பாதங்களும், நாவில் அவர் திருநாமங்களும் உள்ளதோ, அவனருகில் எமனும் வர அஞ்சுவான். 

பக்தியில்லாதோர் இருந்தும் இறந்தவரே. அவர்கள் செய்யும் கர்மங்களனைத்தும் வீணே. கடலின் ரத்னங்களைக் கூட கணக்கிட்டு விடலாம்.  ஆனால் விஷ்ணுவின் கல்யாண குணங்கள் கணக்கிலடங்கா.  மனஸ், வாக்கு, காயம் என்ற த்ரிகரணங்களையும் புருஷோத்தமனிடம் அர்ப்பிப்பவனுக்கு ஸம்ஸாரத்தில் பயமில்லை.  பகவத் சரிதமெனும் அம்ருதத்தை அருந்துபவனுக்குத் தாய்ப்பாலும் தேவையில்லை.  அவனுக்கு தோல்வியில்லை, ரோகமில்லை.  மூன்று ஸந்த்யா காலங்களிலும் பகவத் த்யானம் செய்வோர் உபவாஸ பலனை அடைவர்.  அவனை நினைத்து எந்த கார்யத்தையும் துவங்கி, அவனுக்கே அதை ஸமர்ப்பிப்போர் ஸம்ஸார ஸாகரத்தைத் தாண்டுவர்.  த்யானம், ஸ்மரணம், நாம ஸங்கீர்த்தனம், சரித ச்ரவணம் இவைகளை விட உயர்ந்த தர்மமில்லை.  ஸாளக்ராமமும், ப்ராஹ்மணர்களும் விஷ்ணுவின் ப்ரியமான ஸ்தலங்கள்.  ஆதலால் ப்ராஹ்மணன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் அவனை அவமதிக்காதே.

தானங்கள்: பகவானை நினைத்து ஸத் பாத்ரத்திற்கு கோ, பூமி, வஸ்த்ரம், அன்னம், ஸ்வர்ணம் இவைகளைக் கொடுப்பது சிறந்தது.  மாசி மாதத்தில் தில தானமும், விறகும், பங்குனியில் தான்யம், க்ருஷ்ணாஜினம், வஸ்த்ரம், சித்திரையில் விசித்ர வஸ்த்ரம், படுக்கை, ஆஸனம், வைகாசியில் வாஸனை த்ரவ்யங்கள், தீர்த்தபாத்ரம், விசிறி, ஆனியில் உப்பு, நெல்லி, குடை, செருப்பு, ஆடியில் வெல்லம், ரிஷபம், ஆவணியில் பாயஸம், தேன், தயிர், புரட்டாசியில் தாமிரம்,இரும்பு, ஐப்பசியில் வீடு, குதிரை, கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் அவரவர்க்கு ப்ரியமானவைகளையும் தானம் செய்தால் பரமாத்மா சந்தோஷமடைகிறார்.  இறைவனுக்கு ஆலயம் கட்டுவதும், ஆலயத்தை சுத்தம் செய்தலும், கொடிமரம், வாஹனங்கள் முதலியவைகளை அவனுக்கு ஸமர்ப்பிப்பதும் உத்தம தர்மங்கள்" என்று ப்ரஹ்லாதர் பலிக்கு உபதேசித்தார்.

அவனும், விந்த்யாவளியோடு சேர்ந்து சந்தோஷத்துடன் அவ்வாறே பல தானங்களைச் செய்தான்.  பாதாளத்தில் விஷ்ணுவுக்கு ஒரு ஆலயத்தை எழுப்பி தினமும் அவரை அர்ச்சித்து வந்தான். இப்படி பகவத் பக்தியில் ஈடுபடுவோரும், இந்த வாமன சரிதத்தை பக்தியோடு படிப்போரும், கேட்போரும், பிறருக்குக் கூறுவோரும், தன் சக்திக்குத் தகுந்தபடி பௌராணிகரைப் பூஜிப்போரும் வைகுண்டத்தில் வசிப்பர்" என்று புலஸ்த்யர் நாரதருக்கு உரைத்தார்.  நாரதரும் அந்தரங்க பக்தியோடு பகவானைப் பாடிக் கொண்டு சென்றார்.

வாமன புராணம் - 24

வாமன புராணம் - 24

ப்ரஹ்லாதர் யாத்ரைக்குப் புறப்பட்டபின், மஹாபலி தன் தர்மபத்னி விந்த்யாவளியோடு குருக்ஷேத்ரத்தில் அச்வமேத யாகத்திற்கான தீக்ஷை செய்து கொண்டு யாக கார்யங்களை ஆரம்பிக்கலானான்.  சுக்ரர் அழைப்பை ஏற்று பார்க்கவ ரிஷிகள் யாகத்தில் கலந்து கொண்டனர்.  அத்ரி, கௌதம, ஆங்கிரஸ, கௌசிக வழித்தோன்றல்கள் அதையேற்க மறுத்து குருக்ஷேத்ரத்தை விட்டு வெளிச்சென்றனர். யாகத்தின் அங்கமாக தாரகாக்ஷன் என்பவன் துணையோடு யாக குதிரையும் புறப்பட்டுச் சென்றது.  மூன்று மாதங்களானதும், தேவர்களைக் காப்பதற்காக மஹாவிஷ்ணுவும் அதிதிக்கும், காச்யபருக்கும் வாமனராகத் தோன்றினார்.  ப்ரஹ்மதேவர் கூறியபடி பரத்வாஜர் குழந்தைக்கு ஜாதகர்மா, யக்ஞோபவீத கர்மாக்களை செய்து வைத்து, வேதங்களையும் ஓதுவித்தார்.  பரத்வாதரிடமிருந்து ஒரே மாதத்தில் வேதங்களைக் கற்றுக் கொண்டார்.  ரிஷிகளோடு சேர்ந்து பலியின் யாகசாலையை நோக்கிப் புறப்படலானார். அப்போது பரத்வாஜர் மஹாவிஷ்ணுவின் சான்னித்யம் இருக்கும் இடங்களை அருள வேண்டுமென்று வாமனரிடம் கேட்டார்.

தெய்வ சான்னித்யம்:  பகவான் "ப்ரஹ்மன் முதல் தோன்றி உலகங்களிலுள்ள அசையாப் பொருள் வரை தன் சான்னித்யம் எதிலுமுள்ளது.  எனினும் விசேஷமானவைகளைக் கூறுகிறேன். மானஸ ஸரோவரில் மத்ஸ்யமாகவும், கௌசிகியில் கூர்மமாகவும், க்ருஷ்ணையில் ஹயக்ரீவராகவும், ஹஸ்தினாபுரத்தில் கோவிந்தனாகவும், யமுனையில் த்ரிவிக்ரமனாகவும், பதரியில் நாராயணனாகவும், பத்ரகர்ணத்தில் ஜயேசனாகவும், வராஹத்தில் கருடத்வஜனாகவும், மணிமதியில் சம்புவாகவும், ஹிமாசலத்தில் சூலபாணியாகவும், சக்ரதீர்த்தத்தில் அர்த்தநாரீச்வரனாகவும், குமாரதாரையில் ஸுப்ரஹ்மண்யனாகவும், மாஹிஷ்மதியில் த்ரிநேத்ரனாகவும், ஸப்தகோதாவரத்தில் ஹடகேச்வரனாகவும், ஸிம்ஹத்வீபத்தில் உபேந்த்ரனாகவும், பாதாளத்தில் கபிலராகவும், பூலோகத்தில் கோகனதேசனாகவும், புவர்லோகத்தில் கருடனாகவும், ஸுவர்லோகத்தில் விஷ்ணுவாகவும், மஹர்லோகத்தில் அகஸ்த்யராகவும், ஜநலோகத்தில் கபிலராகவும், தபோலோகத்தில் வேதமாகவும், ஸத்யலோகத்தில் ப்ரஹ்மாவாகவும், ஜம்பூ த்வீபத்தில் நான்கு கைகளோடும், குசத்வீபத்தில் குசேசயனாகவும், ப்லக்ஷ த்வீபத்தில் கருட வாஹனத்தோடும், க்ரௌஞ்ச த்வீபத்தில் பத்மநாபனாகவும், சால்மல த்வீபத்தில் வ்ருஷப த்வஜனாகவும், சாக த்வீபத்தில் ஸஹஸ்ராக்ஷங்களோடும், புஷ்கர த்வீபத்தில் வாமனனாகவும் இருக்கிறேன்" என்றார்.

புவனம் முழுதும் கிடுகிடுவென ஆடுவதைக் கண்ட மஹாபலியிடம் சுக்ராச்சார்யார் வாமனரின் வருகையைக் கூறி, அவருக்கு உபசாரமான வார்த்தைகளைக் கூறி அனுப்பி விட வேண்டுமேயல்லாது ஒரு புல்லைக் கூட அவருக்குத் தானமாக அளித்து விடக்கூடாது என்றும், அப்படி ஏதாவது செய்து விட்டால், அதைப் பற்றியே அவர் பலியின் ராஜ்யம் முழுதையும் அபஹரித்து தேவர்க்கு அளித்து விடுவார் என்றும் எச்சரித்தார்.  ஆனால் பலியோ, யாகத்தில் எவர்க்கும் இஷ்டமானதை அளிப்பதே தன் குணமாதலால் அதை மாற்ற இயலாது என்று கூறி, அதற்கு உதாரணமாக பின் வரும் கதையையும் சொன்னான்.

"முத்கல ரிஷியின் புத்ரனான கோசகாரனுக்கும், வாத்ஸ்யாயனரின் புத்ரியான தர்மிஷ்டைக்கும் இல்லற தர்மத்தில் ஒரு குழந்தை பிறந்தது.  ஆனால், அது ஆறு நாட்களாகியும் சிறிதும் அசைவின்றி இருந்ததைக் கண்ட தர்மிஷ்டை மிகவும் மனம் நொந்து அதை எறிந்து விட்டாள். சூர்ப்பாக்ஷி எனும் ராக்ஷஸி அந்தக் குழந்தையைக் கண்டதும், இளைப்பாய் இருந்த தன் குழந்தையை அங்கு விட்டு விட்டு கோசகாரனின் குழந்தையை எடுத்துச் சென்றாள். சாலோதரம் எனும் ப்ரதேசத்திலிருந்த கடோதரன் எனும் தன் குருட்டுக் கணவனிடம் அந்தக் குழந்தையைக் கொடுத்து அதை புஜிக்கலாம் என்று சொன்னாள்.  குழந்தையைத் தடவிப் பார்த்த அவன் "இது யாரோ ரிஷி புத்ரன் போலத் தெரிகிறது.  நம்மை இது சபித்து விடும்" என்று கூறி வேறு குழந்தையைக் கொண்டு வரும்படி கூறினான்.  அவள் மீண்டும் தன் குழந்தையையே எடுத்து வரச் சென்ற போது, கோசகாரர் அழுது கொண்டிருந்த அந்தக் குழந்தையைச் சுற்றி மந்த்ரங்களால் ரக்ஷை செய்திருந்தார்.  ராக்ஷஸியால் அதனருகில் செல்ல முடியாது, ரிஷி புத்ரனையும் அங்கேயே விட்டு விட்டு்ச் சென்றாள்.

சிறிது நேரத்தில் வெளியே வந்த கோசகாரர் இரு குழந்தைகளையும் எடுத்துச் சென்று தன் குழந்தைக்கு நிசாகரனென்றும், ராக்ஷஸக் குழந்தைக்கு திவாகரனென்றும் பெயரிட்டு, கபிலைப் பசுவின் பால் கொடுத்து வளர்த்து வரலானார்.  ஏழு வயதில் உபநயனம் செய்வித்து வேதம் ஓதுவித்தார்.  நிசாகரன் அப்பொழுதும் எதுவும் பேசாமலிருந்ததைக் கண்ட கோசகாரர் அவனை ஒரு கிணற்றில் தள்ளி மூடிவிட்டார்.  பத்தாண்டுகள் அங்கேயே நிசாகரன் அதிலிருந்த ஒரு நெல்லிமரத்தின் கனிகளை மட்டுமே உண்டு ஜீவித்திருந்தான்.  ஒரு நாள் அங்கு வந்த தர்மிஷ்டை யார் இந்தக் கிணற்றை மூடியது? என்று தனக்குத் தானே பேசிக் கொண்டாள்.  நிசாகரன் அப்போது வாய் திறந்து "தாயே! நானே உங்கள் குழந்தை" என்றான். அவள் "எங்கள் குழந்தை பேசாது.  எனவே தான் நாங்கள் அவனை விரட்டி விட்டோம், நீ யார்?" என்று கேட்க, நிசாகரன் தானெ அவர்கள் புத்ரன் என்று பதில் கூற, அவள் குழந்தையை கிணற்றிலிருந்து வெளியேற்று, பதியிடம் அழைத்துச் சென்று, "இதுவரை பேசாமலிருந்த நீ, இப்போது பேசக் காரணம் என்ன?" என்று கேட்க, நிசாகரன் தன் சரிதத்தைக் கீழ் கண்டவாறு கூறுகிறான்.

"முன்பு வ்ருஷாகபி என்ற தேவனுக்கும், மாலா என்பவளுக்கும் மகனாகப் பிறந்து, கலைகள் பல கற்றும், காமம், களவு போன்ற துராசாரங்களைக் கைக்கொண்டதால் பல நரகங்களை அனுபவித்து, ஒரு புலியாகப் பிறந்தேன்.  அரசனின் காட்சிசாலையில் அடைத்து வைத்திருந்த போது, அரசனில்லாத சமயத்தில் அவன் மனைவி அஜிதா என்பவளிடம் இச்சை கொண்டு, அவளைப் பேச்சால் மயக்கினேன், அவளும் என்னைக் கூண்டிலிருந்து திறந்து விட்டு, என்னோடு இன்புற்றிருந்த போது, காவலர்கள் புலி ராணியைத் தாக்குகிறது என்றெண்ணி, என்னைக் கொன்று விட்டார்கள்.  பல நரக வேதனைகளை மீண்டும் அனுபவித்து, அக்னிவேச்யர் என்ற அந்தணரிடம் கழுதையாகப் பிறந்து, அவர் மனைவி விமதி என்பவள் மேல் மீண்டும் ஆசை கொண்டு பாய்ந்தேன்.  அவர் சீடர்கள் என்னை அடித்துக் கொன்று விட்டனர்.  மீண்டும் பல நரகங்களை அனுபவித்து, சந்த்ராவளி என்ற வைச்யக் கன்யகையிடம் கிளியாக அன்போடு வளர்ந்த போது, அவள் மேல் மோஹிக்க, அவள் என்னைத் விரட்டி விட்டாள்.  அப்போது ஒரு குரங்கின் கையில் அகப்பட்டு இறந்தேன்.  அதன் பின் ஒரு சண்டாளன் வீட்டில் காளையாகப் பிறந்த போது அவன் மனைவி மேல் மோஹங்கொண்டு, அவன் கையில் அடிபட்டு இறந்து, இப்போது உங்கள் மகனாகப் பிறந்துள்ளேன்.  இனி இந்த வலையில் அகப்படக்கூடாது என்றெண்ணியே நான் பேசாமலிருந்தேன்.  கிணற்றில் இருந்த போது பரமனை நினைத்துத் தவம் புரிந்தேன்.  இனி பூர்வ ஜன்ம வாசனை வராதென்ற நம்பிக்கையிலேயே பேச ஆரம்பித்தேன்.  நான் இனி வெளியே சென்று பெரியோர்களை அணுகி, பேரின்பம் அடைய ஆசைப் படுகிறேன். நீங்கள் திவாகரனைக் கொண்டு புத்ரனால் கிடைக்கும் இன்பங்களை அடையுங்கள், நான் பத்ரிகாச்ரமம் செல்கிறேன்" என்று கூறி அவர்களைப் பணிந்து சென்றான்.

இந்தக் கதையை சுக்ரருக்கு உரைத்த மஹாபலி அதேபோல் தனக்கும் தன் முன் பிறவிகளால் இந்த தானங்களில் இஷ்டம் இருக்கிறது போலும் என்று கூறினான்.  அதே போல் வந்த வாமனருக்கும் தானம் அளிக்க, அவர் தன் இரண்டடிகளாலேயே அனைத்து உலகங்களையும் அளந்து கொண்டு, மூன்றாவதடிக்கு இடம் கேட்டார்.  பலியின் புத்ரன் பாணன் "புவனத்தை ஏன் இப்படிச் சிறியதாகப் படைத்தீர்கள்.  பெரிதாகச் செய்திருந்தால் வேண்டிய அளவு எடுத்துக் கொண்டிருக்கலாம் அல்லவா?" என்று கேட்க, அவர் சிரித்துக் கொண்டே தான் நினைத்திருந்தால் ஒரே அடியில் அனைத்துலகங்களையும் அளந்திருக்க முடியும் என்றும், பலியின் மீது கருணை கொண்டே அவ்வாறு செய்யவில்லை என்றும் கூறினார்.  பின்னர் தன் மூன்றாவதடியால் பலியைப் பாதாளத்துக்கனுப்பிய வாமனர் முறைதவறிச் செய்யப்படும் நற்கார்யங்களின் பலனை ஆஹாரமாகக் கொள்ளுமாறு கூறி, அவன் பெயரால் தீபப்ரதானம் எனும் பண்டிகையும் இனி கொண்டாடப்படும் என்று அருளினார்.  அதையே நாம் கார்த்திகையாகக் கொண்டாடுகிறோம்.