Monday, December 24, 2012

விஷ்ணு புராணம் - 123

06_05 ஆத்யந்திக ப்ரளயம்
மோக்ஷமே ஆத்யந்திக ப்ரளயம்.  ஞானமும், வைராக்யமும் வந்தால்தான் இந்த மோக்ஷத்தை அடைய முடியும்.  நாம் அனுபவிக்கும் விஷயங்களில் இருக்கும் கஷ்டங்களையெல்லாம் அறிந்து கொண்டால் தான் அந்த விஷயங்களையெல்லாம் அதனால் வெறுத்து அவற்றிலிருந்து விடுபட வழி தேடத் தோன்றும்.  ஆத்யாத்மிகம், ஆதிபௌதிகம், ஆதிதைவிகம் என்ற தாபத்ரயங்களை இதற்கு நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

ஆத்யாத்மிக தாபம் சரீர சம்பந்தமாகவும், மன சம்பந்தமாகவும் வரலாம்.  உடலுக்கு வரும் வ்யாதிகள் சரீர சம்பந்தமான தாபங்கள்.  காம, க்ரோதாதி வ்யாதிகள் மன சம்பந்தமானவை.  இவ்வாறே மற்ற விலங்குகள், பறவைகளால் உண்டாகும் துக்கங்கள் ஆதிபௌதிகம்.  இயற்கையான சீதோஷ்ணங்களால் உண்டாகும் துக்கங்கள் ஆதிதைவிகமாகும்.  இந்த தாபங்கள் கர்ப்ப ஸம்பந்தத்தாலும், நம் வினைகளாலும், அஞ்ஞானம், நரகம் இவைகளாலும் உண்டாகி ஆயிரக்கணக்கில் சூழ்ந்து இருக்கின்றன.

கர்ப்பவாஸ துக்கங்கள்
கர்ப்பத்தில் இந்த உயிர் மிகவும் ம்ருதுவான சரீரத்தோடு இருக்கிறது.  மலங்களில் நடுவே தாயின் வயிற்றில் வசிக்கிறது.  உல்பம் என்ற தோல் இதன் உடலை மூடியிருக்கிறது.  முதுகு, கழுத்து எலும்புகள் வளைந்து, கை, கால்களை நீட்ட முடியாமல், மூச்சு விடவும் கஷ்டப்பட்டுக் கொண்டு, இந்த உயிர் அப்போது முடங்கிக் கொண்டிருக்கிறது.  தாயின் உணவில் இருக்கும் காரம், புளிப்புகளால் இது கடுமையாக தாக்கப்படுகிறது.  தன் அறிவைக் கொண்டு தான் செய்த வினைகளாலேயே இப்போது கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பதை அறிந்து மிகுந்த வேதனையோடு இருக்கும்.

பின் ப்ரஹ்மத்தின் காற்றால் மேலும் சரீர எலும்புகள் நொறுங்கும்படி ஒடுக்கப்பட்டு, ப்ரஸவ வாயுக்களால் தலை கீழாக திருப்பப்பட்டு மல, மூத்ர சேற்றுப்பூச்சோடு மிகவும் ச்ரமப்பட்டு தாயின் கர்ப்பத்திலிருந்து வெளியே வந்து விழுகிறது.  துர்நாற்றமுடைய யோனி த்வாரத்திலிருந்து விழும்போது முட்களால் குத்தப்படுவது, வாளால் அறுக்கப்படுவது போன்ற துன்பங்களை அனுபவித்து ஒரு புழு வெளியே வந்து விழுவதைப் போலவே இந்த ஜீவனும் வந்து விழுகிறது.  வெளியே விழுந்ததும் வெளிக்காற்றான சடம் என்ற காற்று பட்டதும் மூர்ச்சையடைந்து கர்ப்பவாஸத்தில் உண்டான விவேகத்தை முழுதும் மறந்து விடுகிறது.

பிறந்தபிறகும் உடல் அறித்தால் சொறிந்து கொள்ள முடியாது.  உடலைத் தன்னிஷ்டப்படி திருப்ப முடியாது. குளிப்பது, குடிப்பது, உண்பது என எதுவும் ஏனையோர் இஷ்டப்படியே.  எண்ணத்தை வெளிப்படுத்தவும் முடியாது.  மல, மூத்ரங்கள் நிறைந்த படுக்கை.  எறும்பு, கொசுக்கள் கடித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.

இதன் பின் யௌவனம் வந்த பின்பும் அஞ்ஞானத்தால் அறிவிழந்து சிற்றின்பங்களிலேயே நாட்டம் செலுத்துகிறது இந்த ஜீவன்.  நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எங்கே செல்வேன்? நான் பிறந்த காரணம் என்ன? ஏன் இப்படிக் கட்டுண்டிருக்கிறேன்? காரண, கார்யங்கள் என்ன? எதைச் செய்யலாம்? எதைச் செய்யக் கூடாது? எதைப் பேசலாம்? பேசக்கூடாது? தர்மாதர்மங்கள் எவை? எதில் குணம் உள்ளது? எதில் தோஷம் உள்ளது? இவையெதிலுமே ஆர்வம் செலுத்தாது விலங்குகளைப் போல புணர்வதையும், உண்பதையுமே முக்யமாகக் கொண்டு காலம் கழிக்கிறது இந்த ஜீவன்.  தமோகுணத்தால் வந்த அஞ்ஞானத்தால் கெட்ட கார்யங்களைச் செய்கிறான்.  வைதீக கார்யங்கள் அழிகின்றன.  இதனால் மேலும் புண்ய, பாவங்களைச் சேர்த்துக் கொள்கிறான்.

முதுமை எய்தியதும் உடல் சிதைந்து விடுகிறது.  பற்களும், அவயவங்களும் ஆடி விடுகிறது.  பற்கள் விழுந்தும் விடுகிறது. கண்பார்வை மங்கி, தலை நரைத்து, உடல் சுருங்கி விடுகிறது.  கருவிழிகள் கண்குழிகளில் ஒடுங்கி விடும்.  முதுகெலும்பு வளைந்து, மற்ற எலும்புகள் வெளிப்படையாகத் தெரிய, ஜீர்ண சக்தி குறைந்து, நடக்கவும், படுக்கவும் முடியாமல் துன்படைகிறது இதே ஜீவன்.  எதற்கும் அடுத்தவர் உதவியை நாடி, இந்த்ரியங்கள் செயலிழந்து வார்த்தையும் வெளிவராது அனைவரிடமும் அவமானப்படுகிறான்.  தான் இளமையில் அனுபவித்தவைகளை முன் ஜன்மத்தில் நடந்தவைகளைப் போல நினைக்கிறான்.

மரணத் தருவாயிலும் சிந்தையை மனை, மக்கள், சுற்றம், செல்வம் இவைகளில் செலுத்தி, கவலை கொள்கிறான்.  வ்யாதிகள் ரம்பங்களைப் போலவும், யம பாசங்கள் போலவும் வாட்டி, வதைக்க, கண்கள் சுழல, உடல் உதற, நாக்கு உலரத் திண்டாடுகிறான்.  உதான வாயு மேலெழும்பித் தொண்டையை அடைக்க, நெஞ்சில் கர், கர் எனக் கோழைச் சப்தம் உண்டாகி, யமபடர்கள் பிடித்திழுக்க, பழகிய உடலை விட்டு பெரும் கஷ்டத்தோடு இந்த ஜீவன் மிகுந்த தாபத்தோடும், பசி, தாகத்தோடும் வெளிக்கிளம்புகிறான்.

வெளிக்கிளம்பியதும் தன் தீவினைப்பயன்களை அனுபவிக்க யாதனா சரீரத்தைப் பெறுகிறான்.  யமகிங்கரர்கள் ஜீவனைப் பாசத்தால் கட்டி, தடியால் அடித்து, துன்பங்கள் நிறைந்த பாதையில் நடத்தி யமனிடம் இட்டுச் செல்கிறார்கள்.  பின் காய்ந்த மணலிலும்,  நெருப்பிலும் வாட்டுதல், கத்தி, வாள், கோடரிகளால் பிளப்பது, சூலத்தில் இடுவது, கொடிய விலங்குகளிடம் உணவாக விடுவது எனப் பல வகையில் துன்புறுத்துவர்.  ஸ்வர்க்கத்திற்கு சென்றாலும் புண்ய பலன் தீர்ந்து என்று மீண்டும் பிறந்து துன்பத்தை அனுபவிக்க நேருமோ என்ற நினைப்பிலேயே கிடைக்கும் ஸுக விஷயங்களையும் அனுபவிக்க முடியாமல் தவிக்கிறான்.  பின் மீண்டும் பிறப்பு.  எப்போது இறப்போம் என்பதும் தெரியாது.  இப்படி மீண்டும், மீண்டும் இந்த சக்ரத்தில் ஜீவனுக்கு, எப்படி பருத்திக் கொட்டையை பஞ்சுகள் சூழ்ந்திருக்குமோ அப்படி எங்கும் துன்பமே.  ஸுகம் தரும் என்று நினைக்கும் பல விஷயங்களையும் ஆராய்ந்து பார்த்தால் துன்பமே அதிகம்.

கொடிய ஸூர்யனைப் போன்ற இந்த துக்கங்களிலிருந்து ஜீவன்களுக்கு விடுதலை மோக்ஷமே.  அந்த மரமே ஸம்ஸார துக்கமென்கிற இந்த வெயிலில் வாடிய ஜீவன்களுக்கு நிழல் தந்து ஸுகம் அளிக்கும்.  வேறெங்கும் அது கிடைக்கப் போவதில்லை.  பிறப்பு, இறப்புகளால் உண்டாகும் மூவகைத் துன்பங்களுக்கும் இறைநினைப்பே மிகச்சிறந்த ஒரே மருந்தாகும்.  இறைவனை நினைத்து அனுபவிப்பதில் உண்டாகும் ஆனந்தம் மற்றெதையும் மறக்கச் செய்து விடும்.  துன்பம் சிறிதும் கலவாத அத்தகைய உயர்வுடையது பகவத்ப்ராப்தி.

அதனால் அறிஞர்கள் இந்த ஸுகத்தைப் பெற முயற்சிக்க வேண்டும்.  நம் கார்யங்களால் ஸித்திக்கும் ஆகமஜம், விவேகத்தால் ஸித்திக்கும் விவேகஜம் என்ற இருவகை ஞானமும், அதற்குரிய செயல்களுமே இதை அடையும் வழி.  சாஸ்த்ரங்களைப் படிப்பதாலும், நடைமுறைப்படுத்துவதாலும் கிடைக்கும் ஞானம் விளக்கு போன்றது. இது அஞ்ஞானத்தால் உண்டான இருளைக் களைந்து ஆத்மாவிற்கும், சரீரத்துக்கும் உள்ள வேற்றுமை, ஜீவாத்மா, பரமாத்மாவிற்குள்ள வேற்றுமை, இவைகளின் உண்மை ஸ்வரூபம் முதலியவைகளை விளங்கச் செய்கிறது.  நம் நற்கார்யங்களால் கிடைக்கும் இந்த ஞானம் ஆகமஜம்.  விவேகஜந்ய ஞானம் இதைவிட உயர்ந்தது.  அது ஸூர்யனுக்கு ஒப்பானது.  விளக்கை விட ஸூர்யன் எப்படிப் பொருட்களைத் தெளிவாக நமக்குக் காட்டுமோ அதுபோல இந்த விவேகஜம் அஞ்ஞானத்தை அடியோடு அழித்து விடும்.  இந்த காரணத்தாலேயே மனு ஸ்ம்ருதி வேதார்த்தங்களான உபநிஷத்துகள் போதிக்கும் விவேகஜன்ய ஞானத்தை பரப்ரம்ஹம் என்றே கோஷிக்கிறது.

அதர்வ வேதத்தைச் சேர்ந்த முண்டகோபநிஷத்  விவேகஜன்ய ஞானத்தை பரவித்யை என்றும், ஆகமஜன்ய ஞானத்தை அபர வித்யை என்றும் கூறுகிறது.  பரப்ரஹ்மமான இந்த விவேகஜமே இறைவனாகும்,  ஜீவன்முக்தர்களும் அதுவே.  பகவான் என்ற பதத்திற்குப் பொருள் படைத்து, காத்து, பின் தன்னுள் லயப்படுத்துதலே.  ஸம்ஸ்க்ருத பதமான "பக" என்பது ஞானம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் என்ற ஆறு குணங்களைக் குறிக்கும்.  இந்த குணங்களை உடையவனே பகவான் எனக் குறிக்கப்படுகிறான்.  இந்த சொல்லே முக்தர்களைக் குறிக்கும் போது ப்ரஹ்மத்தை அறிந்தவர் என்ற பொருளில் உபயோகிக்கப்படுகிறது.  வாஸு என்ற நாமம் எங்கும் நிறைந்திருப்பதையும், அவனிடத்திலேயே எல்லாம் வஸிக்கின்றன என்பதையும் குறிக்கும்.

இந்த விஷயத்தை முன்பே ஒரு ஸமயம் கேசித்வஜன் என்பவர் காண்டிக்ய ஜனகருக்கு உபதேஸித்திருக்கிறார்.  இந்த வாஸுதேவன் ப்ரக்ருதியும், அதன் கார்யமான துக்கமும், அஞ்ஞானமும் அற்றவன்.  அவன் அசேதனனுமில்லை, சேதனனுமில்லை.  அனைத்திற்கும் ஆத்மா அவன்.  அனைத்து நற்குணங்களும் நிறைந்தவன்.  தன் சக்தியின் சிறு அம்சத்தாலேயே உலகனைத்தையும் தாங்கக் கூடியவன்.  ஸாது ஸம்ரக்ஷணத்திற்காக தன்னிச்சைப்படியே பல அவதாரங்களை எடுக்கக் கூடியவன்.  உலகிற்கு எல்லா நன்மைகளையும் தருபவன்.  முன்பு கூறிய ஷட்குணங்களின் இடமாய் இருப்பவன்.  கர்மங்களும், அதன் தோஷங்களும் அற்றவன்.  பரப்ரஹ்மமாயிருக்கையில் அவ்யக்தனாக நமக்கு விளங்காதவனாகவும், ராம, க்ருஷ்ணாதி வ்யூஹ நிலைகளில் வ்யக்தமாக நமக்கு விளங்கும்படி இருப்பவனும் இவனே.  ஸர்வக்ஞன், ஸர்வ சக்தன், ஸர்வேச்வரன்.  இவனையே சாஸ்த்ரஞ்ய ஞானம் பொதுவாகக் கூறுகிறது.  விவேகஜம் தெளிவாகக் கூறுகிறது.

Sunday, December 9, 2012

விஷ்ணு புராணம் - 122

06_04 இந்த வெள்ளம் ஸப்தரிஷி மண்டலத்தையும் மூழ்கடித்து அப்போது எங்கும் ஒரே ஜல மயமாக இருக்கும்.  அப்போது மஹாவிஷ்ணுவின் முகத்திலிருந்து பெருங்காற்று உண்டாகி இந்த மழை மேகங்களைக் கலைத்து விடும்.  பின் இந்த காற்று நூறு வருஷங்களுக்கு வீசிக் கொண்டிருக்கும்.  பின் இதுவும் விஷ்ணுவிடம் லயித்து விடும்.  அப்போது ப்ரளயக் கடலில் ஆதிசேஷன் மேல் சயனித்துக் கொண்டிருக்கும் ப்ரஹ்மரூபமான மஹாவிஷ்ணுவை ஜன லோகத்திலிருக்கும் ஸனகர் முதலான ஸித்தர்களும், முக்திபெற்று ப்ரஹ்ம லோகத்திலிருப்பவர்களும் வணங்கித் துதிப்பார்கள்.  வாஸுதேவன் என்ற பெயருடன் ப்ரஹ்ம ரூபியான மஹாவிஷ்ணு அப்போது ஆயிரம் சதுர்யுகங்கள் யோகநித்ரையில் இருப்பார்.  இவர் தூங்குவதன் நிமித்தமாக இந்த ப்ரளயம் நிகழ்வதாலேயே இதற்கு நைமித்திக ப்ரளயம் (அவாந்தர) என்று பெயர்.  இந்த இரவு கழிந்து அவர் கண் விழித்து மீண்டும் ஆரம்பத்தில் கூறிய ப்ரகாரம் ஸ்ருஷ்டியைத் தொடங்குகிறார்.
இனி ப்ராக்ருத ப்ரளய வர்ணனை.  நைமித்திக ப்ரளயத்தின் முடிவில் எல்லா லோகங்களும் அழிந்து விட, அதன் பின் மஹாவிஷ்ணு தத்வங்களும் அழியும்படி நினைக்கிறார்.  அப்போது ப்ராக்ருத ப்ரளயம் தொடங்குகிறது.  முதலில் தண்ணீர் நிலத்தின் (ப்ருத்வி) குணமான கந்தத்தைப் (வாஸனை)பறித்து விடும்.  அப்போது தன் குணம் அழியவே நிலம் நீரோடு நீராகி விடும்.  பின் நீரின் குணமான ரஸத்தை (ருசி) நெருப்பு எடுத்துக் கொண்டு விடும்.  அப்போது நீர் முழுதும் வற்றி நெருப்பில் ஒன்றி விடும்.  பின் நெருப்பு தன் குணமான ரூபத்தை வாயுவிடம் இழந்து, அதோடு ஒன்றி விடும்.  பின் அதுவும் தன் குணமான ஸ்பர்சத்தை ஆகாயத்திடம் இழந்து ஆகாயத்தோடு ஒன்றி விடும்.  கடைசியில் இந்த ஆகாயத்தின் குணமான சப்தத்தையும் தாமஸ அஹங்காரம் எடுத்துக் கொண்டு தன்னோடு லயப்படுத்திக் கொள்கிறது.  (இவ்வாறே பஞ்சேந்த்ரியங்கள் ஸாத்விக அஹங்காரத்தில் லயமடைகின்றன)
இந்த அஹங்காரங்கள் பின் மஹத் தத்வத்தில் ஒடுங்குகின்றன.  பின் அதுவும் ப்ரக்ருதியில் ஒடுங்குகிறது.  ஸத்வ, ரஜ, தமோ குணங்கள் சமமாக இருக்கையில் இது ப்ரக்ருதி எனப்படுகிறது.  இது வ்யக்த, அவ்யக்தங்கள் என இரு வகையில் இருக்கும்.  இதில் வ்யக்தம் இறுதியில் அவ்யக்தத்தில் லயப்படும்.  இப்படியே வ்யக்தமான ஜீவனும் முடிவில் அவ்யக்தமான பரமாத்ம ஸ்வரூபத்தில் ஒடுங்கி விடுகிறான்.  இப்படி ஜீவனும், ப்ரக்ருதியும் லயப்பட்ட பரமாத்ம ஸ்வரூபத்தையே வேதங்களும், வேதாங்கங்களும் மஹாவிஷ்ணு என்று அழைக்கின்றன.
வேதம் ப்ரவ்ருத்தி, நிவ்ருத்தி என இரு வழிகளை போதிக்கிறது.  இவையிரண்டுமே பரமாத்மாவான விஷ்ணுவையே ஆராதிக்கின்றன.  ப்ரவ்ருத்தி மார்க்கத்தில் ருக், யஜுஸ், ஸாம வேதங்கள் இந்த விஷ்ணுவையே யாகங்களில் யக்ஞேச்வரனாக ஆராதிக்கின்றன.  நிவ்ருத்தி மார்க்கமான யோகவழியில் நிலைபெற்ற யோகிகளும் ஞானமாகவும், ஞான மூர்த்தியாகவும், மோக்ஷத்திற்கு அதிகாரியாகவும் இவனையே துதிக்கின்றனர்.  குறில், நெடில் முதலான சொற்களில் அடங்கும் அசேதனப் பொருட்களும், சொல்லில் பொருளாகாத சேதனங்களும் இவனுடைய அவயவங்களே.
இந்த ப்ரமாத்மாவிற்கு இரண்டு பரார்த்தங்கள் ஒரு பகல்.  இப்படி வ்யக்தங்கள் அவ்யக்தத்தில் ஒடுங்கவும், அந்த அவ்யக்தங்கள் ஜீவனில் ஒடுங்கவும், பின் அதுவும் பரமாத்மாவில் ஐக்யப்படவும் ஆகும் காலமான இந்த த்விபரார்த்தங்கள் பரமாத்மாவுக்கு ஒரு இரவாகும்.  கார்யங்களை ஒட்டியே இந்த இரவு, பகல் கணக்குகளேயன்றி புருஷோத்தமனுக்கு இவையெதுவுமில்லை.

விஷ்ணு புராணம் - 121

06_03  ப்ரளய ஸ்வரூபம்
ப்ரளயம் என்பது எல்லா உயிரினங்களின் அழிவு.  அது நைமித்திகம், ப்ராக்ருதம், ஆத்யந்திகம் என்று மூன்று வகைப்படுகிறது.  ஒவ்வொரு கல்பத்தின் முடிவில் ப்ரஹ்மாவால் செய்யப்படுவது நைமித்திகம்.  ப்ரஹ்மாவின் ஆயுஸ் முடிவில் எல்லா வ்யக்தங்களும், அவ்யக்தத்தில் (ஸ்வரூபமற்ற பரம்பொருளில்) லயப்படுவது ப்ராக்ருதம்.  ஒன்றை பத்தினால் பெருக்க பத்து கிடைக்கும். அதை மீண்டும் பத்தால் பெருக்க நூறு கிடைக்கும்.  இப்படி பதினெட்டு முறை பெருக்கினால் கிடைப்பது பரார்த்தம்.  இதை இரண்டால் பெருக்கினால் த்விபரார்த்தம்.  இதன் முடிவிலேயே ப்ராக்ருத ப்ரளயம் ஏற்படுகிறது.  ஆத்யந்திகம் என்பது மோக்ஷமே.
மனிதர்களின் நிமிஷத்தின் அளவு ஒரு மாத்ரை.  பதினைந்து மாத்ரைகள் ஒரு காஷ்டை.  30 காஷ்டைகள் ஒரு கலை.  பதினைந்து கலைகள் ஒரு நாழிகை.  இரண்டு நாழிகைகள் ஒரு முஹூர்த்தம்.  முப்பது முஹூர்த்தம் ஒரு நாள்.  முப்பது நாள் ஒரு மாதம்.  பன்னிரண்டு மாதங்கள் ஒரு வருஷம்.  இந்த ஒரு வருஷம் தேவர்களுக்கு ஒரு நாள் (அஹோராத்ரம்).  தேவர்களுக்கு 360 நாட்கள் ஒரு வருஷம்.  இந்த வருஷங்கள் 12000 ஒரு சதுர்யுகம்.  ஆயிரம் சதுர்யுகங்கள் ப்ரஹ்மாவின் ஒரு பகல். இதற்குக் கல்பம் என்று பெயர்.  பதினான்கு மனுக்கள் ஒரு கல்பத்தில் மாறி மாறி வருவர்.  இந்த கல்பத்தின் முடிவில் ப்ரஹ்மாவால் செய்யப்படும் நைமித்திக ப்ரளயம் மிகக் கொடியது.
கல்பத்தின் முடிவில் வரும் சதுர்யுகத்தின் முடிவில் பூலோகம் பெரும்பாலும் அழிந்துவிடும்.  நூறு வருஷங்கள் மழையின்றி பஞ்சம் தலைத்தோங்கும்.  அற்ப உயிரினங்கள் அப்போது தாமாகவே அழிந்துபடும்.  அப்போது மஹாவிஷ்ணு ருத்ர ஸ்வரூபம் கொண்டு ஸம்ஹாரத்திற்கு வேண்டிய வேலைகளைச் செய்வான்.  ஸூர்யனின் ஏழு கிரணங்களைக் கொண்டு பூமியிலிருக்கும் ஜலங்களையும், ரத்தங்களையும் சுண்ட உறிஞ்சுவான்.  நதி, ஸமுத்ரங்கள் வரண்டுபடும்.  இப்படி உறிஞ்சின உற்சாகத்தில் அவனது ஏழு ரச்மிகளும் ஏழு ஸூர்யர்களைப் போல ப்ரகாசித்து உலகெங்கும் ஜ்வலித்து பூமி, பாதாளம் என ஏழு உலகங்களையும் சிறு புல் கூட இல்லாமல் எரித்துப் பொசுக்கி ஆமை ஓட்டைப் போல் கடினமாகச் செய்து விடும்.
ஆதிசேஷனுடைய சுவாசத்திலிருந்து காலாக்னி உண்டாகி ருத்ர ஸ்வரூபத்தில் பாதாள லோகங்களையும் எரித்து, பூ, புவர், ஸுவர் லோகத்தையும் எரித்து அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கும்.  இந்த காலாக்னியின் ஜ்வாலைகளால் சூழப்பட்டு மூவுலகும் வறுக்கும் சட்டியைப் போலாகும்.  சராசரங்கள் அனைத்தும் அழிந்து போம்.
இந்த இடங்களில் இருக்கும் மனு முதலான அதிகாரிகள் அனைவருடன் சேர்ந்து அங்கிருந்து ஓடி மஹர் லோகத்தையும் அங்கிருந்து ஜன லோகத்தையும் அடைவர்.  இவர்களில் பரப்ரஹ்மத்தை அடைய விரும்புகிறவர்கள் அங்கிருந்து தபோலோகம், ஸத்யலோகத்தை அடைந்து பரப்ரஹ்மத்தை அடைவர்.  மற்ற ஜீவர்களும் தங்கள் ஆத்மாவில் லயித்து விடுவர்.
இதன் பின் ருத்ரனின் மூச்சுக் காற்றிலிருந்து மேகக்கூட்டங்கள் உண்டாகும்.  யானைக்கூட்டங்கள் போன்ற இந்த பயங்கரமான கரிய பெரிய மேகங்களிலிருந்து இடி, மின்னல்களும், பெரிய தாரைகளோடும் கூடின பெருமழை தோன்றி மூவுலகையும் பற்றி எரிக்கும் தீயை அணைத்து விட்டு, மேலும் நூறு வருஷங்களுக்கு விடாது பொழியும்.  மூவுலகங்களும் நீரில் ஆழ்ந்து விடும் என்று நைமித்திக ப்ரளயத்தின் ஸ்வரூபத்தை மைத்ரேயருக்கு வர்ணித்தார் பராசரர்.

விஷ்ணு புராணம் - 120

06_02 குறைந்த முயற்சியால் மிகுந்த பலனை எளியோனும் இந்த கலியில் அடையலாம் என்பது குறித்து தன் மகனான வ்யாஸரின் கருத்தை பராசரர் இங்கு விவரிக்கிறார்.
ஒரு ஸமயம் மஹர்ஷிகளிடையே "எந்த காலம் சிறிய தர்மத்திற்கும் பெரும் பலனைக் கொடுக்கும்? அந்த தர்மத்தையும் எளிதில் அனுஷ்டிக்கத் தகுந்தவர் யார்?" என்ற வினா எழுந்தது.  இதற்கு விடையறிய அவர்களனைவரும் வ்யாஸரிடம் சென்றனர்.  அப்போது என் மகனான வ்யாஸர் கங்கையில் மூழ்கியிருந்தார்.  அவர்களும் காத்துக் கொண்டிருந்தனர்.  ஒரு முறை வெளியே வந்த அவர் "சூத்ரன் நல்லவன், கலி நல்லது" என்று கூறி விட்டு மீண்டும் மூழ்கிவிட்டார்.  மீண்டும் வெளியே வந்த அவர் "ஆமாம், சூத்ரனே மிகுந்த புண்யசாலி" என்று கூறினார்.  சிறிது நேரத்தில் மீண்டும் நீரிலிருந்த எழுந்த அவர் "பெண்களே புண்யவதிகள், அவர்களை விட புண்யம் செய்தவர் யாருமில்லை" என்று கூறிவிட்டு மூழ்கினார்.
பின் ஸநானம், அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு வந்த அவரிடம் இந்த மஹர்ஷிகள் "நீங்கள் கங்கையிலிந்து அவ்வப்போது வெளியே வந்து கூறின வார்த்தைகளின் பொருளை அறிய விரும்புகிறோம்.  ரஹஸ்யமில்லையென்றால் அருள வேண்டும்" என்று விண்ணப்பித்துக் கொண்டனர்.  வ்யாஸர் சிரித்துக் கொண்டே "க்ருத யுகம் புண்ய பலனை பத்து வருஷங்களிலும், த்ரேதாயுகம் ஒரு வருஷத்திலும், த்வாபரயுகம் ஒரு மாதத்திலும் தரும்.  ஆனால் கலியோ ஒரே நாளில் தரும்.  அதேபோல் க்ருதயுகத்தில் கடினமான நெடுந்தவத்தாலும், த்ரேதா யுகத்தில் பெரும் யாகங்களாலும், த்வாபரத்தில் பூஜைகள், அர்ச்சனைகளாலும் அடையும் பயனை கலியில் கேசவனின் நாமஸங்கீர்த்தனத்தாலேயே அடைந்து விடலாம், சிறு முயற்சிகளான இந்த காரணங்கள் பற்றியே கலி நல்லது என்று சொன்னேன்.
அவ்வாறே ப்ராஹ்மணனுக்கும் கடும் கட்டுப்பாடுகள் உள்ளன.  வேதாத்யயனத்தை முறையோடு செய்து, பின் தர்ம வழியில் பொருளீட்டி, அதை வேதத்தில் விதித்துள்ள கர்மங்களில் டம்பமின்றி செலவிட வேண்டும்.  வீண் பேச்சு, செயல்களில் ஈடுபடாது, ஸதா இறை த்யானத்திலேயே இருக்க வேண்டும்.  உணவையும், நீரையும் கூட இஷ்டப்படி எடுத்துக் கொள்ள சுதந்திரம் இல்லை.  சாத்வீகமான உணவை இறைவனுக்குப் படைத்த பின்பே உண்ண வேண்டும்.  புலனடக்கத்தோடு இருக்க வேண்டும்.  இவர்கள் எப்போதும் இப்படி சாஸ்த்ரங்களுக்குக் கட்டுப்பட்டே இருக்க வேண்டும். இந்த கடும் விதிகளாலேயே அவர்களுக்கு புண்ய லோகங்கள் கிடைக்கின்றன.  இல்லையென்றால் ப்ராஹ்மணன் பாபிஷ்டனாகி, தீண்டத்தகாதவனாகி விடுகின்றான்.
வேளாளர்களுக்கு இப்படி எந்த விதக் கட்டுப்பாடுகளும் இல்லை.  வேதாத்யயனம் இல்லை.  மந்த்ரங்களின்றியே எளிய ஹோமங்களைச் செய்யலாம்.  மேல் வர்ணத்தாருக்குப் பணி செய்தே நல்ல உலகங்களை அடைகின்றனர்.  இதனாலேயே சூத்ரர்களை நல்லவர்கள் என்று கூறினேன்.
பெண்களும் இவ்வாறே.  ஆண்கள் சம்பாதிக்க வேண்டும், அதைக் காக்க வேண்டும்.  பின் ஸத்பாத்ரங்களைத் தேடி அதை செலவிட வேண்டும். இதனாலேயே புருஷர்களுக்கு மேலான லோகங்கள் கிடைக்கின்றன.  ஆனால் அவர்களுக்கு உண்மையாகப் பணிவிடை செய்வதாலேயே பெண்கள் புண்ய லோகங்களைப் பெற்று விடுகின்றனர்.  இதனாலேயே பெண்கள் புண்யவான்கள் என்று கூறினேன்" என்றார் வ்யாஸர்.  இவ்வாறாக தங்கள் ஐயம் தீர்ந்த மஹர்ஷிகளும் வ்யாஸரைப் பூஜித்துப் புகழ்ந்து கொண்டே தங்கள் இடத்திற்குச் சென்றனர்.
இவ்வாறாக கலி ஸ்வரூபத்தை மைத்ரேயருக்கு விளக்கினார் பராசரர்

விஷ்ணு புராணம் - 119

06_01 கலியுக தர்மம்
ஸ்ருஷ்டி, அரச வம்சங்கள், மன்வந்த்ரங்கள் இவைகளை இதுவரை பராசரரிடமிருந்து கேட்டு மகிழ்ந்த மைத்ரேயர் கல்பத்தின் முடிவில் (ப்ரஹ்மாவின் பகல்) நிகழும் மஹா ப்ரளயத்தைப் பற்றிக் கூறுமாறு கேட்கிறார்.
"க்ருத, த்ரேதா, த்வாபர, கலி என்று யுகங்கள் நான்கு.  மனிதர்களின் ஒரு மாதம் பித்ருக்களுக்கு ஒரு நாள்.  மனிதர்களின் ஒரு வருஷம் தேவர்களுக்கு ஒரு நாள். இப்படி நமது இரண்டாயிரம் சதுர்யுகங்கள் ப்ரஹ்மாவுக்கு ஒரு நாள் (கல்பம்).  ஒவ்வொரு கல்பத்தின் முதல் க்ருதயுகத்தையும், முடிவான கலியுகத்தையும் விட்டு மற்ற சதுர்யுகங்கள் யாவும் அளவு, தர்மாதர்மங்களில் சமமாகவே இருக்கும்" என்று கூறிக்கொண்டிருக்கும் போதே மைத்ரேயர் கலியின் லக்ஷணங்களைக் கூறுமாறு கேட்கிறார்.
"கலியுகத்தில் ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்ய, சூத்ர முதலான வர்ணங்களும், அவற்றிற்குரிய ஆசாரங்களும் கெடும்.  நான்கு வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள க்ரியைகள் நடக்காது.  தர்ம விரோதமாகக் கல்யாணங்கள் நடக்கும்.  குரு-சிஷ்ய, கணவன்-மனைவி உறவுகளில் தர்மங்கள் அழியும்.  அக்னி கார்யங்களும், தேவ பூஜைகளும் கெடும்.  பலம் உள்ளவன் அரசனாவான்.  கன்னிகையை மணக்க வர்ணம், ஜாதி, கல்வி, ஒழுக்கம் எதுவும் தேவையின்றி பணமிருப்பவனே வரனாவான்.  ப்ராஹ்மணன் எந்த தகுதியுமின்றி தீக்ஷிதனாவான்.  சாஸ்த்ரங்களில் விதிக்கப்படாத க்ரியைகள் ப்ராயச்சித்தமாக ஏற்கப்படும்.  ப்ரியமான வார்த்தைகளே சாஸ்த்ரங்களாகும்.  அவைதீகமான காளி முதலான தேவதைகளையே அனைவரும் வணங்குவர்.  ப்ரஹ்மசர்ய, க்ருஹஸ்த, வானப்ரஸ்த, ஸன்யாஸ ஆச்ரமங்கள் கெடும்.  வைராக்யமில்லாமலேயே எவரும் எந்த ஆச்ரமத்தையும் கொள்வர்.
சாஸ்த்ரத்தை அனுஸரிக்காமல் தங்கள் இஷ்டப்படி உபவாஸம், தீர்த்த யாத்ரை, தானங்களைச் செய்வர்.  கொஞ்சம் பணம் இருப்பவனும் செருக்கடைவான்.  கூந்தல் அழகை மட்டும் கொண்டே பெண்கள் தங்களை அழகிகளாகக் கர்வம் கொள்வர்.  தங்கம், மணி, ரத்னங்கள், துணி முதலானவை குறைந்து அழிந்து போகும்.  இவைகளின்றி பெண்கள் கூந்தலாலேயே தங்களை அலங்கரித்துக் கொள்வர்.  பெண்கள் பணமில்லாத கணவனை விட்டு, பணம் வைத்திருப்பவனைக் கணவனாகக் கொள்வர்.  நல்ல குடும்பம், ஞானம் இவைகளை விட்டு நிறைய பணம் கொடுப்பவனையே ஆண்டவனாகக் கொள்வர்.  புத்தியை ஆத்ம ஞானம் அடைவதில் செலுத்தாது, எவரும் பணம் சம்பாதிப்பதற்கே செலுத்தி, கிடைத்த பணத்திலும் யாகாதி கர்மங்களைச் செய்யாது வீடு கட்டுவதற்கே செலவழிப்பர்.  அந்த வீடுகளும் அவர்களுக்கும், அதிதிகளுக்கும் பயன்படாத வகையிலேயே இருக்கும். 
அழகான ஆடவர்களையே விரும்பி பெண்கள் வேசிகளாவர்.  அதர்ம வழியில் சம்பாதித்திருந்தாலும், அவனிடமே மக்கள் விரும்பிச் செல்வர்.  நெருங்கிய நண்பன் கெஞ்சிக் கேட்டாலும் சுயநலத்தால் உதவ மாட்டார்கள்.  தாழ்ந்தவர்கள் ப்ராஹ்மணர்களை மதிக்க மாட்டார்கள்.  ஜாதியைக் கொள்ளாது பால் தருவதாலேயே பசுவும் கொண்டாடப்படும்.  மழை பொய்த்துப் போகும்.  இதனால் எவரும் உணவின்றி முனிவர்களைப் போல் வேர், கிழங்கு, கனிகளையே உண்டு பின் அதுவும் கிடைக்காமல் பசியால் தற்கொலை செய்து கொள்வர்.  சந்தோஷமும், சௌக்யமும் ஜனங்களிடையே கெடும்.  எங்கும் பஞ்சமும், துன்பமுமே மிகும்.  ஆசாரங்கள் கெடும், குளிக்காமலேயே சாப்பிடுவர்.  தேவ, பித்ரு, அதிதி பூஜைகள் அழியும்.
பெண்கள் நிறைய உண்டும், மெலிந்தும், பேராசையோடும் இருப்பார்கள்.  நிறைய குழந்தைகள் பிறந்தும் ஏழ்மையில் வாடுவார்கள்.  இரண்டு கைகளாலும் தலையை சொரிந்து கொள்வர்.  மாமனார், மாமியார் வார்த்தைகளைக் கேளார்.  சுயநலமும், கோபமும், தாழ்வு மனப்பான்மையும் மிகுந்து தீய சொற்களையே பயன்படுத்துவர்.  நல்ல குடும்பத்துப் பெண்களும் தீயவர்களிடம் ஆசை கொண்டு தங்கள் கணவனுக்கே பல கெடுதிகளைச் செய்வர்.
ப்ரஹ்மசாரிகள் வ்ரதங்கள், அனுஷ்டானங்களின்றியே அத்யயனம் செய்வர்.  க்ருஹஸ்தர்கள் ஹோம, தானாதிகளைச் செய்யார்.  வானப்ரஸ்தர்கள் காட்டில் கிடைக்கும் கிழங்கு, பழ வகைகளை உண்ணாது அருகிலுக்கும் க்ராமங்களுக்குச் சென்று அங்கு கிடைப்பவைகளை உண்பர்.  ஸன்யாஸிகள் பெற்றோர், உடன்பிறந்தோரை விட்டு வந்தும், புதிதாக நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு அவர்கள் வசமாகி விடுவர்.
அந்யாயமாக வரி என்ற பெயரில் அரசர்கள் பணம் பறித்தும், மக்களை நன்கு போஷிக்க மாட்டார்கள்.  வ்யாபாரிகளின் பணத்தைப் பறித்துக் கொள்வர்.  ஸேனை உள்ளவனே அரசனாவான்.  அரச குலத்தோனும் பலமின்றி ஸேவித்து ஊழியம் செய்வான்.  மேல் வர்ணத்தோர் அவர்களுக்கு அடுத்த தாழ்ந்த வர்ணத்தாரின் தொழிலை மேற்கொள்வர்.  நான்காம் வர்ணத்தவர் மேல் வர்ணத்தாரின் தொழில் செய்து ஜீவிப்பர். 
அரசர்களின் உபத்ரவம் தாங்காது மக்கள் வேறு நீச ராஜ்யங்களுக்கு சென்று வசிப்பர்.  வேத மார்க்கம் மறைந்து பாஷண்டிகள் மலிவர்.  அதர்மம் அதிகரிக்கும்.  முறை தவறிய அரசுகளால் மக்களும் முறை தவறுவர்.  வீணான தவங்களைச் செய்து இளமையிலேயே மரணமடைவர்.  ஆயுசு குறையும்.  பெண்கள் ஐந்து, ஆறு வயதிலேயே குழந்தை பெறுவர்.  ஆண்கள் எட்டு, ஒன்பது வயதிலேயே ப்ரஜா வ்ருத்தி செய்யும் சக்தியைப் பெறுவர்.  பன்னிரண்டாவது வயதில் தலை நரைத்து, இருபது வயதுக்கு மேல் வாழமாட்டார்கள். 
அறிவு குறைந்து, வைதீக வேஷம் அதிகரிக்கும். தீய எண்ணத்தால் விரைவிலேயே மக்கள் அழிவர்.  தர்ம கார்யங்கள் பாதியிலேயே தடைபடும்.  இவைகளாலேயே புத்திசாலிகள் கலி வளர்வதை அறிந்து கொள்வர்.  பாஷண்டிகளால் மதி மயங்கிய மக்கள் விஷ்ணுவை ஆராதிக்க மாட்டார்கள்.
தெய்வம், வேதம், ப்ராஹ்மணர்களால் யாருக்கு என்ன பயன்?  நீரால் செய்யப்படும் புண்யாஹவாசனங்கள் எதற்கு? என்ற கேள்விகள் மிகும்.  மழையும், விளைச்சலும் குறையும்.  கோணி போன்ற ஆடைகளை அணிவர்.  மரங்கள் யாவும் வன்னி மரங்களைப் போல் மலிவடையும்.  யாவரும் சூத்ர ஜாதியைப் போலிருப்பர்.  தான்யங்கள் சிறுத்து விடும்.  பால் நெய் போல இருக்கும்.  சந்தனம் கோரைக் கிழங்கு போலாகும்.  கிடைப்பது அரிதாகும்.  ஆண்கள் மாமனார், மாமியார்களையே மதிப்பர்.  மைத்துனர்களுக்கும், அழகிய மனைவியை உடையவர்களுக்கும் மதிப்பு ஏற்படும்.  யார் தாய்? யார் தகப்பன்? என்று தத்வங்களைக் கூறுவர்.  மனதாலும், வாக்காலும், உடலாலும் தினந்தோறும் மக்கள் பாவங்களையே செய்வர்.  சத்யமும், தூய்மையும், தகாத செயல்களில் வெட்கமும் அழியும்.  தர்மம் எங்கோ ஒளிந்து கொண்டு வசிக்கும். 
இந்தக் கொடுமைகளால், க்ருத யுகத்தில் தவத்தால் அடையும் பயன், கலியுகத்தில் நாம ஸங்கீர்த்தனம் முதலிய சிறு முயற்சிகளிலேயே கிடைக்கும்.

Thursday, December 6, 2012

விஷ்ணு புராணம் - 118

05_37. வ்யாஸர் அர்ஜுனனுக்கு உண்மையை அறிவிப்பது.
தாருகனிடமிருந்து க்ருஷ்ணனின் கட்டளைகளை அறிந்த
அர்ஜுனன் உடனே த்வாரகைக்கு விரைந்தான்.  ஈமக்
கடன்களைச் செய்தான். பலராமனின் மனைவி ரேவதி,
க்ருஷ்ணனின் எட்டு பட்ட மஹிஷிகள் ஆகியோர்கள்
தங்கள் கணவர்களோடு சிதையிலேறினர்.  அவ்வாறே
உக்ரஸேனன், வஸுதேவர், தேவகி, ரோஹிணி
ஆகியோரும் அக்னியில் ப்ரவேஸித்து விட்டனர்.
மீதமிருந்த க்ருஷ்ண பத்னிகளையும், வஜ்ரன் முதலான
ஆயிரக் கணக்கானவர்களோடு த்வாரகையை விட்டுப்
புறப்பட்டான் அர்ஜுனன். கலி பரவலாயிற்று.  த்வாரகை
கடலில் மூழ்கியது.  உக்ரஸேனின் ஸுதர்மா என்ற தேவ
ஸபையும், பாரிஜாத மரமும் தேவலோகம் சென்றது.  வரும்
வழியில் நன்கு செழித்திருந்த பஞ்சநதம் என்ற தேசத்தில்
அர்ஜுனன் அனைவருடன் தங்கியிருந்தான்.  அப்போது
அங்கிருந்த ஆயிரக் கணக்கான இடையர்கள்
அர்ஜுனனைத் தாக்கி, அடக்கிவிட்டு க்ருஷ்ணபத்னிகள்
உட்பட எல்லா பெண்களையும், பொருள்களையும்
கொள்ளை கொண்டனர். 

அர்ஜுனனால் காண்டீவத்தில் நாணேற்றக் கூட
முடியவில்லை.  அக்னி பகவான் அளித்திருந்த வற்றாத
அம்பறாத்துணியில் அம்புகள் வற்றின.  அஸ்த்ரங்களை
ஏவும் எந்த மந்த்ரங்களும் அவனுக்கு நினைவுக்கு
வரவில்லை. "பாரத யுத்தத்தின் போது எந்த கைகளும்,
ஆயுதங்களும், தேரும், குதிரைகளும், மந்த்ரங்களும்
எனக்கு உதவியதோ, அவைகளே இப்போது க்ருஷ்ணன்
என்ற தெய்வபலம் உடன் இல்லாததால் வேதாத்யயனம்
செய்யாதவனுக்குத் தந்த தானம் போல் பயனற்றுப்
போனதே, தெய்வபலத்தாலே அன்றோ எந்தக் கடையனும்
வெற்றி அடைகிறான்" என்று வாய்விட்டு வருந்தினான்.
மீதமிருந்தோரை அழைத்துச் சென்று இந்த்ரப்ரஸ்தத்தில்
வஜ்ரனுக்கு முடி சூட்டினான்.

அங்கிருந்து ஹஸ்தினாபுரம் செல்லும் வழியில் ஒரு காட்டில்
சக்தியற்று சென்று கொண்டிருந்த அர்ஜுனனை வ்யாஸர்
கண்டார்.   "அர்ஜுனா! ஏன் இவ்வாறு ஒளியிழந்து
காணப்படுகிறாய்? ஆடு, கழுதைகள் கால்களால் கிளப்பிய
புழுதியில் சென்றாயா? ப்ரஹ்மஹத்தி செய்தாயா?
நம்பிக்கை த்ரோகம் செய்தாயா?  சேரத் தகாத
பெண்களோடு சேர்ந்தாயா? நல்ல உணவை
ப்ராஹ்மணர்களோடு பகிர்ந்து கொள்ளாமல் நீயே
உண்டாயா? ஏழையின் பொருளை அபஹரித்தாயா?
முறத்தின் காற்று படுமாறு நின்று கொண்டிருந்தாயா? எவர்
கண்ணேனும் பட்டு விட்டதா? நகம் பட்ட நீரை
உட்கொண்டாயா? குடத்து நீர் ததும்பி உன் மேல்
தெளித்ததா? தாழ்ந்தவர்களால் வெல்லப்பட்டாயா?
இவைகளாலன்றோ நம் தேஜஸ் குறையும், என்ன நடந்தது?"
என்று கேட்டார். 

அர்ஜுனன் பெருமூச்செறிந்து "எங்களுக்குப் பலம், வீர்யம்,
செல்வம், காந்தி, தெஜஸ், பராக்ரமம் என்று எல்லாமுமாக
இருந்த க்ருஷ்ணன் இப்போது எங்களை விட்டுச் சென்று
விட்டான்.  ஈச்வரனான அவன் எங்களோடு அவனாகவே
ஒரு சாமான்யனைப் போல வந்து பழகினான்.  அவனைப்
பிரிந்த நாங்கள் இப்போது வைக்கோல் அடைத்த
பொம்மைகளைப் போலானோம்.  அவன்
மஹிமையாலேயே பீஷ்மர், த்ரோணர், கர்ணன்,
துர்யோதனன் முதலான பெரும் வீரர்களும் சாம்பலாயினர். 
இப்போது அவனன்றி நான் மட்டுமல்ல, இந்த பூமி
முழுமையுமே சக்தியும், செல்வமுமற்று காணப்படுகிறது. 
நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே என்னையும், என்
அஸ்த்ரங்களையும் தடிகளால் தாக்கி வழியிலிருந்த
இடையர்கள் க்ருஷ்ண பத்னிகளையும், பொருள்களையும்
கொள்ளை கொண்டனர்.  பெரும் வீரர்களையும் வென்று
மூவுலகிலும் ப்ரஸித்தி பெற்றிருந்த என் காண்டீவமும்,
சக்தியும் இடையர் கைத்தடிகளில் தாழ்ந்து அழிந்தது. இதில்
நான் ஒளியிழந்து இருப்பதில் ஒரு ஆச்சர்யமும் இல்லை. 
இவ்வளவிற்குப் பின்னும் நான் வெட்கமின்றி உயிரோடு
இருக்கிறேனே, அதுதான் ஆச்சர்யம்" என்று அழுது
கொண்டே கூறினான்.

வ்யாஸர் அவனுக்குக் காலத்தின் போக்கைக் கூறி
அவனைத் தேற்றுகிறார். "அர்ஜுனா! துக்கப்படாதே,
வெட்கப்படாதே, இவை யாவும் காலத்தினாலெயே
நடக்கிறது.  ப்ராணிகள் உண்டாவது, அழிவதும் அந்த
காலத்தினாலேதான்.  நதிகள், ஸமுத்ரங்கள், மலைகள், பூமி,
தேவதைகள், மனிதர்கள், விலங்குகள், மற்ற தாவரங்கள்
என அனைத்தையுமே பகவான் தான் கால ஸ்வரூபியாக
இருந்து கொண்டு படைத்து, மீண்டும் அழிக்கவும்
செய்கிறான்.  பூபாரம் தீர்ப்பதற்காக பூதேவியின்
ப்ரார்த்தனையைக் கேட்டே க்ருஷ்ணன் இங்கு
அவதரித்தான்.  துஷ்ட ஸம்ஹாரமும் செய்தான்.  அவதார
கார்யம் நிறைவேறிவிடவே மீண்டும் வைகுண்டம் சென்று
விட்டான்".

"அந்த க்ருஷ்ணனே ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்களை
செய்கிறான்.  உன் தோல்வியைக் குறித்து நீ வருந்த
வேண்டாம்.  நல்ல காலம் அமைந்தால் ஒருவனுக்குப்
புகழும், கெட்ட காலத்தில் அவனுக்கே அவமானமும்
உண்டாகின்றன.  பகவத் ஸங்கல்பத்தால் நீ அன்று பீஷ்மர்,
த்ரோணர், கர்ணன் முதலானோரைக் கொன்றாய்.  
தாழ்ந்தவனான உன்னால் அன்று அவர்களுக்கு அவமானம்
நேர்ந்தது.  இன்று உன்னை விடத் தாழ்ந்தவர்களால்
உனக்கு அவமானம் ஏற்பட்டிருக்கிறது.  பகவத்
ஸங்கல்பமில்லையென்றால் நீ அவர்களை அன்று
வென்றதையும், இன்று இடையர்கள் உன்னை வென்றதையும்
யாராவது நம்புவார்களா?  க்ருஷ்ண பத்னிகள் கொள்ளை
போனதும் அவன் ஸங்கல்பத்தினாலேயே.  இவையாவும்
அவன் செயல் என்று ஆற்றிக்கொள்".

"க்ருஷ்ண பத்னிகள் திருடர்கள் கையிலகப்பட்டதன்
காரணத்தையும் கூறுகிறேன் கேள்.  முன்பொரு ஸமயம்
தேவாஸுர யுத்தத்தில் வெற்றியைக் கொண்டாடுவதற்காக
தேவர்கள் மேருமலைக்குச் சென்று கொண்டிருந்தனர். 
அப்போது வழியில் கழுத்தளவு நீரில் இருந்து கொண்டு பல
காலம் ப்ரஹ்மத்தை ஜபித்துக் கொண்டிருந்த அஷ்டாவக்ரர்
என்ற மஹர்ஷியை அப்ஸர ஸ்த்ரீகள் கண்டு வணங்கிச்
சென்றனர்.  அவர்கள் ஸ்தோத்ரங்களால் மனமகிழ்ந்த
மஹர்ஷி அவர்களுக்கு வரமளிப்பதாகக் கூறினார்.  ரம்பை,
திலோத்தமை முதலானோர் தேவரீரின் தர்சனமும், மன
மகிழ்ச்சியுமே போதும் என்று கூறிச் சென்றனர்.  மற்ற
அப்ஸரஸ்ஸுகள் பரவாஸுதேவனையே பதியாக அடைய
வரம் வேண்டினர்.  அவரும் அவ்வாறே அளித்தார். 
அப்போது அவர் நீரிலிருந்து வெளியே வந்தார்.  அவர்
உடலில் இருந்த எட்டு கோணல்களாலேயே அவருக்கு
அஷ்டாவக்ரர் என்ற பெயர் இருந்தது.  அந்த கோணல்கள்
அவர் நீரிலிருந்து வெளியே வந்ததும் தெரிய ஆரம்பித்தன.
 அவர் தோற்றத்தைக் கண்டதும் அந்த அப்ஸரஸ்ஸுகள்
அடக்க முடியாமல் சிரித்து விட்டனர்.  இதனால்
கோபமடைந்த அவர் ஆண்டவனையே பதியாக
அடைந்தாலும் முடிவில் நீங்கள் திருடர்கள் கையில்
அகப்படுவீர்கள் என்று சபித்து விட்டார்.  பின் அவர்கள்
வேண்டிக்கொண்டதால் திருடர்கள் கையில் சிக்கிக்
கொண்டாலும் எந்த களங்கமுமின்றி ஸ்வர்க்கத்தை
அடைவீர்கள் என்று கூறிச் சென்றார்".

"இதுவே விஷயம்.  இது குறித்து நீ வருந்துவதற்கு
ஒன்றுமில்லை.  பிறப்பிற்கு இறப்பும், சேமிப்புக்கு செலவும்,
சேர்க்கைக்கு பிரிவும் தவிர்க்க முடியாதது.  இதையறிந்த
அறிஞர்கள் இவைகளால் பாதிக்கப்படாமல் இருக்கிறார்கள்.
 உங்களுக்கும் முடிவு காலம் நெருங்கி விட்டது. 
அதனாலேயே உங்கள் பலம் அழிந்து விட்டது.  இதை
உடனே தர்மபுத்ரனிடம் சென்று கூறி, 
உடன்பிறந்தோருடன் நாளை மறுதினமே தவம் செய்யக்
காட்டிற்குப் புறப்பட்டு விடுங்கள்" என்று கூறிச்சென்றார்.  
அர்ஜுனனும் அப்படியே செய்தான்.  பரீக்ஷித்திற்கு பட்டம்
சூட்டி விட்டு அனைவரும் காட்டிற்குச் சென்று விட்டனர்."

பராசரர் இவ்வாறு யது வம்சத்திலவதரித்த க்ருஷ்ணனின்
சரித்ரத்தை மைத்ரேயருக்குக் கூறி, இந்த சரிதத்தை
விரும்பிக் கேட்பவனுக்கு எல்லா பாவங்களும் நசித்து
விஷ்ணு லோகம் கிடைக்கும் என்பதை பலச்ருதியாகக்
கூறினார்.

Thursday, November 29, 2012

விஷ்ணு புராணம் - 117

05_37. க்ருஷ்ணர் பரமபதமேகுவது
இப்படியாக பலராம, க்ருஷ்ணர்கள் தீயவர்களைக் கொன்று ஒருவாறு பூபாரத்தைக் குறைத்தனர்.  பாரத யுத்தத்திற்குப் பின் ஒரு ஸமயம் யாதவர்கள் பிண்டாரகம் எனும் தீர்த்த க்ஷேத்ரத்திலிருந்த போது அங்கு வந்த விச்வாமித்ரர், நாரதர் முதலான தேவ ருஷிகளைக் கண்டனர்.  விதி வஸத்தால் அறிவிழிந்த அவர்கள் க்ருஷ்ணனுக்கும் ஜாம்பவதிக்கும் பிறந்த ஸாம்பனுக்கு கர்ப்பவதி போன்று வேஷமிட்டு அவர்களிடம் விளையாட்டாக அழைத்துச் சென்று இவளுக்கு என்ன குழந்தை பிறக்கும் என்று கேட்டனர்.  திவ்ய ஞானிகளான அவர்கள் இவனுக்கு ஒரு இரும்பு உலக்கை பிறக்கும். அதனால் யாதவ வம்சமே அழிந்து போகும் என்று சபித்து விட்டனர்.  அதுவும் நடந்தது.  உக்ரஸேனரின் ஆணையால் அந்த இரும்புலக்கையை பொடி செய்து கடலில் கறைத்து விட்டனர் யாதவர்.  அது ஆங்காங்கே கோரைப் புற்களாக முளைத்து காலத்திற்காகக் காத்துக் கிடந்தது.

கடலில் கறைத்த பொடிகளில் ஒரு துகள் மீனவர் கையிலகப்பட்ட மீனின் வயிற்றில் இருந்தது.  அதை ஜரை என்ற வேடன் எடுத்து தன் அம்பின் நுனியில் பொருத்திக் கொண்டான்.

அந்த ஸமயத்தில் தேவதூதனாக வாயுதேவன் ஸ்ரீ க்ருஷ்ணனிடம் வந்தான்.  க்ருஷ்ணர் பூபாரத்திற்காக அவதரித்து நூறாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதையும், அஸுரர்கள் அழிக்கப்பட்டதையும் கூறி மீண்டும் விண்ணுலகிற்கு வருவதைப் பற்றிய க்ருஷ்ணனின் அபிப்ராயத்தை ப்ரார்த்தித்தான்.  அப்போது க்ருஷ்ணன், "இந்த யாதவர்களில் ஒவ்வொருவனும் ஜராஸந்தனுக்கு ஈடானவனே.  இவர்கள் இருக்கும் வரை பூபாரம் குறைந்ததாக ஆகாது.  இவர்கள் அழிவையும் இப்போதுதான் துவக்கி இருக்கிறேன்.  இன்னும் ஏழு இரவுகளுக்குள் அனைத்தையும் முடித்து விட்டு, ஸமுத்ரத்தினிடமிருந்து முன்பு பெற்ற த்வாரகையையும் மீண்டும் அதனிடமே விட்டு விட்டு, என் மனுஷ்ய உடலையும் அழித்துக் கொண்டு ஸங்கர்ஷணனுடன் வந்து சேர்கிறேன் என்று தேவேந்த்ரனிடம் கூறு" என்று பதில் கூறி அனுப்பினான்.

அதன் பின்னர் த்வாரகையில் பல துர்நிமித்தங்கள் தோன்றின.  இவையாவும் யாதவ குல அழிவையே காட்டுவன என்று கூறி க்ருஷ்ணனும் யாதவர்களை த்வாரகையை விட்டு, ப்ரபாஸ தீர்த்தத்திற்குப் புறப்படுமாறு ஏகினான்.  இவைகளை அறிந்ததும் பரம பாகவதரான உத்தவர் என்ற யாதவர் க்ருஷ்ணனை அணுகி, "க்ருஷ்ணா, இவையாவும் உன்னிஷ்டப்படியே, கட்டளைப்படியே நடக்கின்றன.  இந்த நிலையில் நான் செய்ய வேண்டுவதை எனக்கு அனுக்ரஹித்தருள வேண்டும்" என்று பக்தி மேலிட கேட்டுக் கொண்டார்.  க்ருஷ்ணர் தான் த்வாரகையை விட்டு அகன்றதும் த்வாரகை கடலில் மூழ்கப் போவதையும், வரப்போகும் யாதவகுல அழிவையும், தானும் வைகுண்டம் செல்லப்போவதையும் அவரிடம் கூறி அவருக்குப் பல தத்வங்களையும், தன் பாத ரக்ஷைகளையும் அருளிச் செய்தார்.  அவருக்கு தேவ மார்க்கமாக செல்லும் ஆசியையும் அளித்து, கந்தமாதன பர்வதத்திலிருக்கும் பதரிகாச்ரமம் சென்று தன்னையே த்யானிக்குமாறு விடையளித்தார்.  அதன்படியே அவரும் மோக்ஷமடைந்தார்.

அதன் பின்னர் ப்ரபாஸ தீர்த்தத்தில் மது மயக்கத்தில் வீழ்ந்த யாதவர்கள் தன்னிலை அறியாது தம் ப்ரபாவங்களையும், மற்றவர் குறைகளையும் பெரிதாகப் பேசிடப் பெரும் கலகமேற்பட்டது.  ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள முற்பட்டனர்.  அவர்கள் ஆயுதங்கள் அழிந்து அங்கு முளைத்திருந்த கோரைப் புற்கற்றைகளைப் பறித்து அதனால் தாக்கிக் கொண்டனர்.  விதிப்படியே அவையாவும் இருப்புலக்கைப் போன்று மாறின.  இதை விலக்க வந்த க்ருஷ்ணனுக்கும் அடி விழுந்தது.  இதனால் பெரும் கோபம் கொண்ட க்ருஷ்ணன் தானும் அதே கோரைகளைப் பிடுங்கி அவர்களனைவரையும் அழிக்கலாயினான்.  இதன் முடிவில் க்ருஷ்ணன் புதல்வர்கள் உட்பட யாதவ குலமே இறந்தொழிந்தது.  பலராமர், க்ருஷ்ணன், க்ருஷ்ண ஸாரதியான தாருகன் ஆகியோரே பிழைத்திருந்தனர்.

தாருகன் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே க்ருஷ்ணனின் தேரும் குதிரைகளால் இழுத்துச் செல்லப்பட்டு கடலில் சென்று மறைந்தது.  க்ருஷ்ணனின் சங்கம், சக்ரம், சார்ங்கம், கட்கம் இவைகளும் அவனை ப்ரதக்ஷிணம் செய்து ஸூர்ய மார்க்கத்தில் மறைந்தன.  ஒரு மரத்தடியில் யோகாஸனத்திலிருந்த பலராமரின் முகத்திலிருந்தும் மஹா ஸர்ப்பமொன்று கிளம்பி ஸித்தர்களும், நாகர்களும் துதிக்க ஸமுத்ரராஜனின் அழைப்பையேற்று அதில் சென்று மறைந்தது.

பலராமர் பிரிந்ததும் க்ருஷ்ணர் தாருகனை அழைத்து அவனை உடனே த்வாரகைக்குச் சென்று நடந்தவைகளை வஸுதேவர், உக்ரஸேனர் முதலானோருக்குக் கூறி, தானும் யோக நிஷ்டையால் உடலை விடப்போவதையும் கூறச் சொன்னார்.  விரைவில் த்வாரகை அழியப் போவதால் வஜ்ரனை அரசனாகச் செய்து கொண்டு அர்ஜுனன் வந்து அழைத்துச் செல்லும் போது அவனுடன் அனைவரையும் செல்லுமாறுக் கூறினார்.  தாருகனையே ஹஸ்தினாபுரம் சென்று பாண்டவர்களிடமும் அனைத்தையும் கூறி அர்ஜுனனால் முடிந்த அளவு, யாதவர்களனைவரையும் அழைத்து வந்து காக்குமாறுக் கூறச் சொன்னார்.  தாருகனும் வேறு வழியின்றி க்ருஷ்ணனைப் பலமுறை ப்ரதக்ஷிணம் செய்து அவன் கூறியபடியே சென்று அவைகளைச் செய்து முடித்தான்.

முன்பொரு ஸமயம் துர்வாஸர் க்ருஷ்ண க்ருஹத்திற்கு அதிதியாக வந்து தங்கியிருந்தார்.  க்ருஷ்ணனும், ருக்மிணியும் அந்த ப்ராஹ்மணரைப் பெரிதும் உபஸரித்தனர்.  அவர்களை அனுக்ரஹிக்க நினைத்த துர்வாஸர் அவர்களைப் பரிக்ஷிக்கலானார்.  இஷ்டப்படி வருவார், வருவேனென்று கூறி வர மாட்டார்.  க்ருஷ்ணனின் படுக்கையில் படுத்துக் கொள்வார்.  எதையாவது எரித்து விடுவார். பலமாக சாப்பிடுவார். ஒரு நாள் சாப்பிடவே மாட்டார்.  அப்படி ஒரு முறை தனக்கு பாயஸம் கொண்டு வரச் சொன்னார்.  அவர் உண்டு மிகுந்த பாயஸத்தை க்ருஷ்ணனையும், ருக்மிணியையும் உடலில் பூசிக் கொள்ளச் சொன்னார்.  அவர்களும் அவ்வண்ணமே செய்தனர்.  அதன் பின் தேரிலேறிக் கொண்ட அவர் பாயஸம் பூசிக் கொண்ட உடலோடு ருக்மிணியை அந்தத் தேரை இழுத்துச் செல்லக் கட்டளையிட்டார்.  அவளை அதன் பின் குச்சியால் குத்தியும், அடித்தும் வேகமாகச் செல்லச் சொன்னார். ஓரளவில் அவள் கீழே விழுந்து விட்டாள்.  தேரிலிருந்து இறங்கி ஓடிச் சென்ற அவரை அப்போதும் க்ருஷ்ணர் சென்று மன்னித்து விடுமாறு வேண்டிக் கொண்டார்.  பெரிதும் மகிழ்ந்த துர்வாஸர், அவர்களிருவரையும் அன்போடும், கருணையோடும் அனுக்ரஹித்தார்.  ருக்மிணிக்குப் பெரும் கீர்த்தியையும், முதுமையில்லாமை, உடல் மாறுபாடில்லாமைகளை அருளிச் செய்தார்.  பின்னர் க்ருஷ்ணனிடம், "க்ருஷ்ணா! நீ இயற்கையிலேயே கோபத்தை வென்று விட்டாய்.  பல கொடுமைகளை நான் செய்த போதும் என்னை மீண்டும், மீண்டும் உபஸரித்து, சந்தோஷிக்கவே செய்தாய்.  நீ வேண்டும் வரங்களைத் தருகிறேன், எவரும் உன்னை விரும்புவர்.  மூவுலகிலும் நீ இன்புறுவாய்.  இந்த பாயஸத்தைப் பூசிக் கொண்ட எந்த பாகங்களிலும் உனக்கு மரண பயமில்லை.  ஆனால் அதைப் பூசிக்கொள்ளாத உன் பாதங்களே உன்னுடைய மர்ம ஸ்தானம்" என்று கூறியிருந்தார்.

அதை இப்போது நிறைவேற்றும் வண்ணம் க்ருஷ்ணன் கால் மீது கால் போட்டு, யோக நித்ரையிலாழ்ந்தான்.  அங்கு வந்த ஜரனும் ஏதோ விலங்கு என்று நினைத்துத் தொலைவிலிருந்தே அந்தத் துகள் பொருத்திய அம்பை விட்டான்.  விஷம் தோய்ந்த அம்பு க்ருஷ்ணனின் காலைப் பதம் பார்த்தது.  அருகில் வந்த வேடனும் நடந்ததை அறிந்து பதறினான்.  க்ருஷ்ணன் அவனையும் தேற்றி, சதுர்புஜங்களோடு தரிசனம் தந்து, உடனை ஒரு விமானத்தை வரவழைத்து அவனுக்கு ஸ்வர்க்கத்தையும் அளித்தான்.  தன் அவதார கார்யம் முடிந்து உடலையும் நீத்தான்.