Tuesday, October 8, 2019

ப்ரஹ்ம புராணக் குறிப்புகள்

ப்ரஹ்ம புராணம்
- ஆதி புராணம்
- 246 அதிகாரங்களையும், 14,000 பாடல்களையும் கொண்டது
- 12 ஆண்டுகள் நைமிசாரண்யத்தில் நடந்த யாகத்தில் ரோமஹர்ஷணர் கூறியது.
- புராண லக்ஷணங்கள்: அண்டங்கள், படைப்பும் ஒடுக்கமும், மன்வந்த்ரங்கள், ஸூர்ய சந்த்ர வம்ச வர்ணனை, அரச பரம்பரைகள்
- ப்ரஹ்மா தக்ஷனுக்குக் கூறியது

குறிப்புகள்:
- தக்ஷன் ப்ரஹ்மாவின் புத்ரன் அல்ல !!
- பல்லுயிர்கள், தேவர், அசுரர் படைப்பு விதம்
- குமரன் தோற்றம்
- படைப்புகளின் அதிபதிகள்
- இக்ஷ்வாஹு பரம்பரை பெயர்க் காரணங்கள்
- தமிழ் மன்னர் பரம்பரை குறிப்புகள்
- கோனார்க் கோவிலும், பன்னிரெண்டு ஆதித்யர்களும், அஷ்டோத்ரமும்
- பூரி ஜகன்னாதர், புவனேஶ்வர் வரலாறு
- கௌதம கங்கை பிறப்பும், சிறப்பும்
- ததீசி முனிவரும், வஜ்ராயுதமும்
- மணிகுண்டலனும், விபீஷணனும்
- யோகம், காயத்ரீ மஹிமை
எங்கும் நீர் சூழ்ந்திருந்த உலகில் நாராயணன் சயனித்திருக்க, அந்த நீரிலிருந்து வெளியே வந்த பொன்னிற முட்டையின் இரு பகுதிகளாக ஆகாயம், பூமியையும், அவைகளில் திசைகள், மொழிகள், உணர்வுகள், காலங்களை ஸ்வயம்புவான நான் உண்டாக்கினேன்.  மனதால் ஸப்த ரிஷிகளையும், ருத்ரன், சனகாதியர்களையும் படைத்தேன்,  ஸ்வாயம்புவ மனு-ஶதரூபையிடம் வீரன், ப்ரியவ்ரதன், உத்தானபாதனை உண்டாக்கினேன்.   உத்தானபாதன் மகன் த்ருவன், அவன் பரம்பரையில் வந்த ப்ராசீனபர்ஹிக்கு ப்ரசேதனர்கள் எனும் பத்து பேர் பிறந்தனர்.  அவர்கள் தவத்தில் நாட்டம் கொண்டு ராஜ்யத்தை விட்டதால் எங்கும் காடாய் பெருகியது.    அவர்கள் கோபம் கொண்டு வாயு, அக்னியை தோற்றுவித்து காட்டை அழிக்கலாயினர்.  இதைத்தடுத்து சந்த்ரன் மரீஷை என்ற பெண்ணை அவர்களுக்கு மணம் முடித்து, அவள் மூலம் அரசாள ஒருவனை உண்டாக்குமாறு கூற, அப்படியே அவர்கள் தக்ஷனை உண்டு பண்ணினர்.  (தக்ஷ ப்ரஜாபதி ப்ரஹ்மன் கால் கட்டை விரலிலிருந்து தோன்றினான் என்பது வேறொரு சதுர்யுகத்தில்).

தக்ஷன் ஆட்சியில் தான் உண்டுபண்ணின ஆயிரக்கணக்கானவர்களையும் ஒவ்வொரு முறையும் நாரதர் தவம் செய்ய அனுப்பி விட, தக்ஷன் 60 பெண்களை படைத்து, 27 பெண்களை சோமனுக்கும், பத்துப் பெண்களை தர்ம தேவதைக்கும், 13 பேர்களை கஶ்யபருக்கும், எஞ்சிய பெண்களை அரிஷ்டநேமி, ஆங்கீரசா முதலிய முனிவர்களுக்கும் ,  ப்ரியா என்பவளை பிரம்மனுக்கும் மணம் முடித்தான்.  தர்ம தேவதையை மணந்த பத்துப் பெண்களுள் அருந்ததிக்கு 'உலகத்திலுள்ள பொருள்கள்’எனும் குழந்தைகளும், வசுவிற்கு அஷ்டவசுக்களும் பிறந்தன. அஷ்ட வசுக்களுள் ஒருவனாகிய அனலன் என்பவனுக்குக் குமரன் பிறந்தான்.   கார்த்திகைப் பெண்கள் வளர்த்தமையின் அவன் கார்த்திகேயன் எனப் பெயர் பெற்றான். அஷ்ட வசுக்களுள் ஒருவனாகிய பிரபசாவுக்கு விஸ்வகர்மா பிள்ளையாகப் பிறந்தான்.    சாத்யாவின் மக்கள் சாத்ய தேவர்கள், விஶ்வாவின் மக்கள் விஶ்வேதேவர்கள்,   அதிதிக்கு 12 ஆதித்தர்களும், திதிக்கு ஹிரண்யன், ஹிரண்யாக்ஷன் முதலிய அரக்கர்களும், அவர்கள் சகோதரியாகிய சிம்ஹிகாவிற்கு வாதாபி, வில்வலன், மாரீசன் முதலிய அரக்கர்களும் தோன்றினர்.  தானவர் வம்சத்தில் பௌலமர், காலகேயர்கள் தோன்றினர், அரிஷ்டாவிற்கு(அர்ஷிதா) கந்தர்வர்களும், காசாவிற்கு யக்ஷர்களும், சுரபிக்கு பசுக்களும், எருமைகளும்,  வினதைக்கு அருணனும், கருடனும்,  தாம்ராவின் ஆறு பெண்களிடம் ஆந்தை, கழுகு, ராஜாளி, காக்கை, நீர்ப்பறவைகள், குதிரை, ஒட்டகங்கள், கழுதைகளும், க்ரோதவசைக்கு நாகர்களும், இளையிடம் கொடி, புதர், மரங்களும், கத்ருவுக்கு அனந்தன், வாசுகி, தக்ஷன், நஹுஷன் போன்ற நாகர்களும், முனிக்கு அப்ஸரஸ்ஸுகளும் தோன்றினர்.  

திதி தேவர்களை வெல்ல ஒரு பிள்ளை வேண்டி வ்ரதமிருக்கையில் விரதபங்கமான சமயத்தில் இந்த்ரன் அணுவாய் நுழைந்து அந்த கருவை 7 துண்டுகளாகவும், மீண்டும் 49 துண்டுகளாகவும் சேதித்து விட அவர்கள் ஸப்த மருத்துக்களாக அவனுக்கு நண்பனாகவே பிறந்து போனார்கள்.  

துருவன் பரம்பரையில் வந்து நேர்மையாக அரசாண்டவன் அங்கன். அவன் மனைவியாகிய சுனிதா மிருத்யுவின் மகளாவாள். அவள் மகனான வேனன் மிருத்யுவுடன் சேர்ந்து கொண்டு எல்லையற்ற அகங்காரம் கொண்டவனாக திரிந்தான்.  அத்ரி முனிவர் வேனன் வலக்காலைக் கடைந்து. மிகக் குரூரமானதும், கொடியதும், பயங்கர மானதும், கரியதுமான குள்ளன் ஒருவனை வெளிக்கொணர்ந்தார்.  நிஷிதர்(உட்கார்) என்று அவனை அத்ரி கூறினார்.   துஷாரர்கள், துண்டுரர்கள், நிஷாதர்கள் இவன் வழி வந்தவர்கள்.  மீண்டும் வேனன் கையை கடைந்தபோது ஒளி வடிவுடன் சிறந்த கவசம் பூண்டு ப்ருது வெளிப்பட்டான்.  வேனன் இறந்து விட்டான்.  அவனை பூமிக்கு அரசனாக்கிய ப்ரஹ்மா, அவனுக்கு உதவி புரிய மரம், செடி, கொடிகள், விண்மீன்கள், கோள்கள், யாகங்கள், தியானம், வேதியர்களுக்கு சோமனையும், வருணனை கடலுக்கும், குபேரனை செல்வத்திற்கும் அரக்கர்களுக்கும். பன்னிரண்டு ஆதித்தியர்களுக்கும் விஷ்ணுவையும், அஷ்ட வசுக்களுக்கு அக்னியையும், பிரஜாபதிகளுக்கு  தக்ஷனையும், 49 மருத்துக்களுக்கும்  இந்திரனையும், தைத்திரியர்கள், தானவர்கள்களுக்கு பிரஹலாதனையும், பிதுர்க்களுக்கு யமனையும், யட்சர்கள், ராட்சதர்கள், பிசாசுகளுக்கு  ருத்ரனையும், மலைகளுக்கு  இமவானையும், நதிகளுக்குக் கடலையும், பாம்புகளுக்கு வாசுகியையும், கந்தர்வர்களுக்கு சித்ரரதனையும், பறவைகளுக்குக் கருடனையும், யானைகளுக்கு ஐராவதத்தையும் தலைவர்களாக நியமித்தார்.  நான்கு திசைகளுக்கும் நான்கு தலைவர்களை நியமித்தார்.

ப்ருதுவின் ஆட்சியை புகழ்ந்து பாட முனிவர்கள் யாக வேள்வியில் சூதர், மாகதர்களை தோற்றுவித்தனர்.  அவர்களால் ப்ருதுவின் புகழை அறிந்து வறட்சியில் இருந்த மக்கள் அவனிடம் முறையிட அவன் கோபம் கொண்டு பூமி தேவியை மிரட்ட, பசுவின் உருவில் இருந்த அவள் மிரண்டு மலைகளை சமவெளிகளாக்கி நீரைப் பாய்ச்சி வளம் கொழிக்க செய்து கொள்ளும் முறையை அவனுக்குக் கூற அவனும் அப்படியே செய்து நல்லாட்சி புரிந்தான்.  

மன்வந்த்ரங்கள்: இதுவரை சுவயம்புமனு முதல் ஆறு மனுக்கள் தோன்றி மறைந்துள்ளனர். இப்பொழுது நடைபெறும் ஏழாவது மன்வந்திரத்திற்குத் தலைவன் 'வைவஸ்வத மனு.  நான்கு யுகங்களும் சேர்ந்து ஒரு மகாயுகம்.  எழுபத்தோரு மகாயுகங்கள் ஒரு மன்வந்த்ரம்.   ஒவ்வொரு மன்வந்திரத்திலும் அதற்குரிய மனு, இந்திரன், தேவர்கள், முனிவர்கள் என்பவர்கள் மாறுவார்கள். இந்தக் கலியுகத்தில் அத்ரி, வசிஷ்டர், காசியபர், கெளதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர் மற்றும் ஜமதக்கினி ஸப்த ரிஷிகள்.   12 ஆதித்யர்கள், 11 ருத்ரர்கள், 8 வசுக்கள், 2 அஶ்வினி தேவர்களே இந்த மன்வந்த்ரத்திற்கு தேவர்கள்.  பதினான்கு மன்வந்த்ரங்கள் கொண்டது ஒரு கல்பம்.

ஸூர்ய வம்சம்: ஆதித்யனுக்கு ஸம்ஞா, சாயா என்று இரு மனைவிகள்.  சம்ஞாவிற்கு வைவஸ்வத மனு, யமன், யமுனையும், சாயாவிற்கு சாவர்ணி மனுவும் தோன்றினார்கள்.  வைவஸ்வத மனு யாகப்பயனாக இக்ஷ்வாஹு, ந்ருகன், த்ருஷ்டன், சர்யாதி, நரிஷ்யந்தன், நாபாகன், அரிஷ்டன், கரூஷன், வ்ருஷத்ரன் என்ற ஒன்பது மைந்தர்களையும், இளை எனும் பெண்ணையும் பெற்றான்.   இளைக்கும் சந்த்ரன் மகனான புதனுக்கும் புரூரவஸ் பிறந்தா, இளை ஸுத்யும்னன் எனும் ஆணாக மாறி விட்டான், அவனுக்கு உத்கலன், கயா, வினதஷ்வா எனும் புத்ரர்கள் பிறந்தனர்.  உத்கலன் கிழக்கையும், கயையை கயாவும், வினதஷ்வா மேற்கையும், இளையின் பூமியை புரூரவஸ்ஸும் ஆண்டனர், 

இக்ஷ்வாஹுவின் நூறு மகன்கள் மூத்தவன் விகுக்ஷி(சசகன்) யாக வேள்விக்கு கொண்டு வரவேண்டிய இறைச்சியை பசியால் உண்டுவிட, வஸிஷ்டர் ஆணைப்படி நாடு கடத்தப்பட்டு, இக்ஷ்வாஹுவுக்கு பின் வந்து அயோத்தியை ஆண்டான்.  (சசக - முயல் இறைச்சி).  விகுக்ஷியின் மகன் காகுஸ்தன்.  அந்த வம்சத்தில் வ்ரிஹதஷ்யன் மகன் குபலாஶ்வன்,  இவன் உதங்க முனிவன் வேண்டுதலில் தன் நூறு புத்ரர்களுடன் சென்று கடற்கரையில் தன் மூச்சுக்காற்றால் மணல் மேடுகளை உண்டாக்கி எல்லாரையும் ஹிம்சித்துக்கொண்டிருந்த துந்துபி எனும் அரக்கனை அழித்தான், த்ரிதஸ்வன், சந்த்ரஶ்வன், கபிலஶ்வன் என்ற புத்ரர்கள் தப்பினர்.  இதனால் இவன் துந்துமாறன் எனும் பெயரும் பெற்றான்.   துந்துமாறனுக்குப் பின் த்ரிதஸ்வனும் அவன் வழியில் த்ரையாருணியும் ஆண்டனர்.  த்ரையாருணி மகன் சத்யவ்ரதன் துஷ்டனானபடியால் வஸிஷ்டரால் காட்டுக்கு விரட்டப்பட்டான்.   த்ரையாருணி தவம் செய்ய வனம் புகுந்ததும் அரசனின்றி பஞ்சம் படர்ந்தது பன்னிரண்டு ஆண்டுகள்.  அப்போது விஶ்வாமித்ரர் காட்டில் தவத்தில் இருந்தார்.  நாட்டில் இருந்த அவர் மனைவி தன் மகனை கழுத்தில் கயிறு கட்டி (காலவன்) விற்க முற்பட்டபோது சத்யவ்ரதன் அவர்களை காத்து, பசித்த அவர்களுக்கு வஸிஷ்டரின் பசுவை கொன்று, தானும் உண்டு அவர்களுக்கும் தந்து காத்தான்.  வஸிஷ்டர் அவன் மீது தந்தை சொல் கேளாதது, பசு கடத்தல், பசு வதை என்று மூன்று குற்றங்களை சாட்டினார்.  அன்றிலிருந்து அவன் த்ரிசங்கு எனப்பட்டான்.  விஶ்வாமித்ரர் காட்டிலிருந்து வந்து அவனையே அரசனாக்கி ஆளச்செய்தார்.   அவனுக்கு ஸ்வர்க்கத்தையும் படைத்தார்.  

திரிசங்குவின் மகன் அரிச்சந்திரன். அவன் பரம்பரையில் வந்தவன் பாஹு, பகைவர்கள் படையெடுத்தபோது கர்ப்பிணி மனைவியோடு வனம் புகுந்த அவன் அங்கேயே இறந்தான்.  அவன் மனைவியைக் காத்து அவுர முனிவர் வளர்த்துவந்தார்.  அவள் சக்களத்தி கொடுத்த விஷத்தோடே பிறந்த குழந்தை சகரன்.   அவனை வளர்த்த முனிவர் அனுக்ரஹத்தாலும், உபதேசித்த ஆக்னேய அஸ்த்ரத்தாலும் அவன் கோனசர்ப்பர், மஹிஷகர், தார்வர், சோழ, கேரளர்களை வென்றான், வஸிஷ்டர் உத்தரவால் அவர்களை கொல்லாமல் விட்டான்.  சகரனுக்கு கேசினி, சுமதி என்று இரு மகன்கள்.  அவுர முனிவர் அருளால் கேசினிக்கு பஞ்ச ஜனனும், சுமதிக்கு நெய்க்குண்டத்தில் அறுபதினாயிரம் பிள்ளைகளும் பிறந்தனர்.  இவர்களில் வர்ஹிகேது, ஸுகேது, பஞ்சஜனன் ஆகியோர் தவிர ஏனையோர் தென் கடற்கரையில் கபிலர் பார்வையால் சாம்பலாயினர்,  பஞ்சஜனன் மகன் அம்ஶுமான், அவன் மகன் திலீபன். அவன் மகனாகிய பகீரதன். இவர்கள் வழியில் தோன்றியவன் ரகு. இவனுடைய பேரனே பிரசித்தி பெற்ற இராமனின் தந்தையாகிய தசரதன், அஜனின் மகன்.

சந்த்ர வம்ஶம்:
ப்ரஹ்மாவின் மானஸீக புத்ரர்களில் ஒருவரான அத்ரியின் தவப்பலனாக சோமன் பிறந்தான்.  அவன் பல்லாண்டுகள் தவமிருந்து செடி, கொடி, மரங்கள்,  பிராமணர்கள், சமுத்திரங்களின் தலைமைப் பதவியை ப்ரஹ்மனால் கொடுக்கப்பட்டான்.  ராஜசூய யாகமும் செய்த அவன் அகந்தையால் தேவகுரு ப்ருஹஸ்பதியின் மனைவியைக் கடத்திச் சென்று அவளிடம் புதனை மகனாகப் பெற்றான்.  அவளை மீட்க ப்ருஹஸ்பதியின் பக்கம் தேவர்களும், சிவபெருமானும் சோமனின் பக்கம் சுக்ராச்சார்யாருடன் அசுரர்களும் போரிட்டனர்.  ப்ரஹ்மா இதை நிறுத்தி தாரையை ப்ருஹஸ்பதிக்கு மீட்டுக்கொடுத்தார்.  தேவகுரு புதனை ஏற்கவில்லை.

புதனுக்கும் இளைக்கும் தோன்றியவன் புரூரவஸ்.  அந்த வம்சத்தில் வந்தவன் நகுஷன், அவனுக்கும் விரஜாவுக்கும் பிறந்தவர்கள் யதி, யயாதி, ஸம்யாதி, ஆயாதி, வியாதி, க்ருதி என்ற அறுவர்.  யயாதி, சுக்ரரின் மகள் தேவயானியையும், தானவர் மகளான ஶ்ரமிஷ்டையையும் மணந்து கொண்டான்.  தேவயானிக்கு யது, துர்வஸு என்ற புதல்வர்களும், த்ருஹ்யு, அனு, புரு மூவர் ஷ்ரமிஷ்டாவிற்கும் பிறந்தனர்.  

புருவிடம் இளமையைப் பெற்றுக் கொண்ட யயாதி, நீண்ட காலம் உலகைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்து மகனிடம் அவன் இளமையைத் தந்தான். புருவின் பரம்பரையில் வந்தவன் பரதகண்டம் என்று பெயர் வரக் காரணமான பரதனாவான். பரதனின் பரம்பரையில் வந்த 'குரு' என்ற மன்னனின் பரம்பரையில் வந்தவர்களே கெளரவர்கள்.

யயாதி மன்னனின் மகனாகிய துர்வாசுவின் பரம்பரையில் வந்தவர்களே பாண்டியர்கள், கேரளர்கள், சோழர்கள்.

த்ருஹ்யு பரம்பரையில் வந்தவர்களே காந்தார மன்னனாகிய சகுனி முதலிய காந்தார தேசத்தவர், யயாதியின் பேரனாகிய சஹஸ்ரதனின் வழியில் வந்தவனே இராவணனை வென்ற கார்த்தவீர்யார்ஜுனன், இவர்கள் ஹைதயர்கள் எனப்படுவர்.  யதுவிற்கு ஸஹஸ்ரதன், பயோதன், க்ரோஷ்டு, நீலன், அஞ்சிகன் புதல்வர்கள்.  குரோஷ்டுவின் வழியில் வந்தவர்கள் வ்ருஷ்ணிகள், அந்தகர்கள்.

பூமண்டல வர்ணனை: விஷ்ணு புராணத்தில் விரிவாக.  கல்பங்கள் முடியும் போது பூ, புவ:, ஸுவ: லோகங்கள் மட்டுமே அழியும்.  உத்கல (ஒரிஸ்ஸா) தேசத்தில் கோனார்க் அல்லது கோனாதித்யனுக்குக் கோவில் உள்ளது (அர்க்கன், ஆதித்யன் சூர்யனின் பேர்கள்).  இக்கோயிலின் எதிரே கிழக்கு முகமாக நின்று கொண்டு எதிரே உள்ள மணலில், எட்டு இதழ்களை உடைய ஒரு தாமரையை சந்தனக் கட்டையால் வரைய வேண்டும். அத்தாமரையின் நடுவே ஒரு தாமிரப் பாத்திரத்தில் நெய், எள், தண்ணிர், சிவந்த சந்தனக் கட்டை, சிவப்புப் பூக்கள், தர்ப்பை ஆகியவற்றைப் போட்டு, தாமரையின் நடுவே அப்பாத்திரத்தை வைத்து சூரியன் புறப்படுகின்ற நேரத்தில் வழிபட்டால் முன் ஏழு ஜென்மங் களில் செய்த பாவங்களைப் போக்கிக் கொள்ளலாம்.

ஒரே ஆதித்தன் பன்னிரண்டு வகையான பணிகளைச் செய்கிறான்.   இந்திரன் அசுரர்களை அழிக்கிறான்.  தத்தன் உயிர்களைப் படைக்கிறான்.  பர்ஜன்யன் மழை பொழிவிக்கிறான்.  த்வஷ்டா தாவரங்களிலும், பூஷ்ணன் தான்யங்களை உற்பத்தி செய்கிறான்,  அர்யமாவாக காற்றை வீசுகிறான்,  பகலனாக எல்லா உயிர்களிலும் இருக்கிறான்.  விவஸ்வான் நெருப்பிலும், விஷ்ணு பகைவர்களையும் அழிக்கிறான். அம்சுமான் காற்றிலும், வருணன் நீரில், மித்ரன் சந்த்ரனிலும், சமுத்ரத்திலும் இருக்கிறான்.
இப்படி ஒரே சூர்யன் 12 மாதங்களில் 12 அணுக்களில் ஒளிர்கிறான்.    12 சிறப்புப் பெயர்களும் அவனுக்குத் தரப்பட்டுள்ளன. அவை ஆதித்யா, சவிதா, சூர்யன், மித்ரன், அர்க்கன், பிரபாகரன், மார்த்தாண்டன், பாஸ்கரன், பானு, திவாகரன், சித்ரபானு, ரவி. தவிர நான்முகனே சூரியனுக்கு 108 பெயர்களைக் கூறுகிறார் பிரம்ம புராணத்தில்.

பூரி ஜகன்னாதர்: சத்தியயுகத்தில் மாளவ தேசத்தை அவந்தி என்னும் ஊரினைத் தலைநகராகக் கொண்டு இந்திரத்யும்னன் என்னும் மன்னன் ஆட்சி செய்து வந்தான்.  ஷிப்ரா நதி பாய்ந்தோடும் அவந்தி நகரத்தில், அந்நதிக் கரையில் மகாகாளர் கோயிலும், கோவிந்தஸ்வாமி, விக்ரம ஸ்வாமி என்ற இரண்டு விஷ்ணு ஆலயங்களும் ஏற்கெனவே இருந்தன.  மஹாகாளரை ஒருமுறை வழிபட்டால் ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்ததற்கான பலன் உண்டு,   இதெல்லாம் தாண்டி ஒரு புது ஆலயம் விஷ்ணுவுக்கு எழுப்ப இடம் தேடி புருஷோத்தம க்ஷேத்ரம் அடைந்தான்.   பல காலத்திற்கு முன் விஷ்ணுவின் சக்தியின் பெரும்பகுதி பெற்ற மகா விஷ்ணு விக்கிரகம் இந்த இடத்தில் இருந்தது. யார் வந்து அதனை ஒருமுறை தரிசித்தாலும் அவருடைய பாபங்கள் அனைத்தும் அப்பொழுதே நீங்கிவிடும். எனவே மக்கள் அனைவரும் இங்கு வந்து இந்தச் சிலையை தரிசித்து பாபங்களினின்று நீங்கினதால் எமனுக்கு வேலையில்லாமல் போயிற்று.   எமன் மகாவிஷ்ணுவை வணங்கித் தன் குறையைத் தெரிவித்தான். அவனுடைய குறையைப் போக்க வேண்டி மகாவிஷ்ணு இந்தப் பிரசித்திபெற்ற சிலையை மணலுக்குள் புதைத்து விட்டார்.

அந்த க்ஷேத்ரத்திலே தான் இப்போது கோயில் நிர்மாணம் தொடங்கு வதற்கு முன் ஒர் அஸ்வமேத யாகம் செய்யவேண்டுமென அரசன் விரும்பியதால் பொன்னாலேயே ஒரு மண்டபம் தயாரிக்கப்பட்டது. பரத கண்டம் முழுவதிலிருந்து மன்னரும், மக்களும் பொன்னையும் பொருளையும் கொண்டு வந்து சேர்த்தனர்.  எந்த விக்கிரகத்தை எவ்வாறு தேர்ந்தெடுத்து இங்கே பிரதிஷ்டை செய்வது என்ற கவலையுடன் உறங்கிய அரசனுக்கு விஷ்ணு கனவில் தோன்றி சமுத்திரக் கரையில் உள்ள மரத்தை அடையாளம் காட்டி அதனைப் பயன்படுத்திச் சிலைகள் செய்ய வழிகாட்டினார்.  மறுநாள் அந்த மரத்தை வெட்டித் தயாரித்த பொழுது விஷ்ணுவும், விஸ்வகர்மாவும் அந்தணர் வேடத்தில் வந்து உடனடியாக பலராமன், கிருஷ்ணன், சுபத்திரை ஆகிய மூவருடைய சிலைகளையும் விநாடி நேரத்தில் செய்து முடித்தனர்.

12 வருட பிரளய நெருப்பை அணைக்கும் மாமழை பன்னிரண்டு வருடங்கள் விடாது பெய்தது. இப்பொழுது நெருப்புக்குப் பதிலாக எங்கும் நீர் மயம். நீரில் மிதந்த ஆலமரத்தின் கிளை ஒன்றில் ஒரு பொன் படுக்கையில் பாலகன் ஒருவன் படுத்திருக்கக் கண்டார் மார்க்கண்டேயர். அப்பாலகனின் ஆணையின்படி அவன் வாயினுள் சென்றார் மார்க்கண்டேயர். பாலகன் வயிற்றினுள் அண்டங்கள் அனைத்தும் பாதுகாப்புடன் இருப்பது கண்ட மார்க்கண்டேயர் வெளியே வந்து விஷ்ணுவை துதித்துக் கொண்டு பல்லாண்டுகள் அவருடனேயே இருந்தார். அவர் தவத்தை மெச்சிய விஷ்ணு, அவர் வேண்டும் வரத்தைக் கொடுப்பதாகக் கூறினார். உடனே மார்க்கண்டேயர் புருஷோத்தம க்ஷேத்திரத்தில் சிவனுக்கு ஒரு கோயில் அமைக்க வேண்டும். மக்கள் மனத்தில் அரியும் சிவனும் ஒன்று என்ற எண்ணம் நிலைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். விஷ்ணுவும் அதற்கிசையவே சிவபெருமானுக்கு “புவனேஷ்வர்” ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது.   ஸ்வேதா என்ற நேர்மையுள்ள அரசன் ஜகந்நாதர் ஆலயத்திற்கு அருகில் ஸ்வேத மாதவன் என்ற பெயருடைய விஷ்ணு ஆலயத்தைக் கட்டினார்.

மஹாபலி கதை: மற்ற புராணங்களில் விரிவாக.

கங்கை கௌதமியான கதை:  விக்ரம அவதாரத்தில் ப்ரஹ்மன் கமண்டல நீரால் விஷ்ணுவின் பாதத்தைக் கழுவ, அது நாற்புறங்களில் பிரிந்து ஓடியது.  ஒரு பகுதி சிவனார் தலையில் கங்கையானது.  பார்வதியின் கவலையைப் போக்க கங்கையை சிவன் தலையிலிருந்து கீழே இறக்க விக்னேசர் விரும்பினார்.  எங்கும் பஞ்சம் படர்ந்திருந்த போது கௌதமர் ஆஶ்ரமம் மட்டும் செழிப்பாயிருக்கக்கண்டு தேவர்கள் அங்கிருந்தனர்.    பார்வதியின் தோழி ஜயாவை ஒரு பசுவாக அவர் ஆஶ்ரமத்தில் அங்குமிங்கும் ஓடச்சொன்னார்.  கௌதமர் ஒரு தர்ப்பையால் அதை விரட்ட முயன்ற போது அது இறந்து விட்டது.  பசுவைக் கொன்ற காரணத்தால் அங்கிருந்த புறப்பட்ட தேவர்கள் இருக்க,  விக்னேசர் கங்கையை வரவழைத்து அப்பசுவை எழுப்பச்சொன்னார்.  அப்படியே கௌதமர் தவம் செய்து சாதித்தார்.  

கபோத தீர்த்தம்: (கபோத - புறா) கங்கையின் ஒரு படித்துறை.  ஜோடிகளில் ஒரு புறாவை வேடன் பிடித்து, இரவு உறங்கும்போது மற்றொரு புறா அவன் குளிரைப் போக்க நெருப்பை மூட்டி அதில் விழுந்து உயிரை விட்டது, இதைக் கண்டு இரங்கிய வேடன் மற்றொரு புறாவை விடுவித்ததும் என்னை உணவாக்கிக்கொள் என்று அதுவும் அந்த தீயில் விழுந்து உயிரை விட்டது.  விருந்தோம்பலில் சிறந்த இரண்டையும் தேவலோக தேர் வந்து அழைத்துச்சென்றது கண்ட வேடன் அன்றிலிருந்து தன் தொழிலை விட்டான்.

கருட தீர்த்தம்: நாகர்களில் ஒருவனான அனந்தன் மகன் மணிநாகன் பரமேஶ்வரனைத் தவம் புரிந்து கருடனால் அழிக்க முடியாத வரம் பெற்றான்.  ஆனால் அவனை கருடன் பிடித்து சிறை வைத்து விட்டான், நந்திதேவர் மூலம் இதையறிந்த மஹாவிஷ்ணு அவனை விடுவிக்கச் சொன்னார்.  நீங்கள் என் பலத்தாலேயே பறந்து பகைவர்களை வென்றீர்கள், உங்களை விட பலவான் நான் என்று அவரிடமே கூறினான் கருடன்.  அவனைத் தன் சுண்டு விரலால் நசுக்கி விட்டார்.  வருந்தி விமோசனமாக ஈஶ்வரனைத் துதித்து அவர் சொற்படி 15 நாட்கள் மூழ்கி விடுதலை பெற்ற படித்துறை.

விஶ்வாமித்ர தீர்த்தம்: உலகெங்கும் பஞ்சம் படர்ந்த போது, வழியில்லாமல் இறந்து கிடந்த நாயின் உடலைத் தீயிலிட்டு தேவர்கள், பித்ருக்களுக்கு படைத்து சீடர்களோடு உண்ண முற்பட்டார்.   இந்த்ரன் அதற்கு பதில் அம்ருதம் தந்த போது உலகம் பஞ்சத்தில் இருக்க எனக்கு மட்டும் அம்ருதம் வேண்டாம்.  இந்த சூழலில் நாயிறைச்சியே போதும் என முற்பட்டபோது, வேறு வழியின்றி தேவேந்த்ரன் மழையைப் பொழிந்து வளத்தை உண்டாக்கினான்.  அந்த துறையே இது.

ஶ்வேதா என்ற வேதியன் பெரும் சிவபக்தன், அவன் இறந்த போது, உயிரை எடுத்துச்செல்ல வந்த யமபடர்களையும், யமனையும் கார்த்திகேயன் நந்தி, விக்னேசரோடு சேர்ந்து கொன்று விட்டார்.  கௌதமி தீர்த்தத்தை மீண்டும் கொண்டு வந்து தெளித்த போது அவர்கள் உயிர்த்தெழுந்தனர்.  சிவபக்தர்களை இனி அணுகுவதில்லை என்று சென்றனர்.  

குபேரனோடு நட்புடன் இருந்த ராவணாதியர்கள் தாய் சொற்படி அவனை விரட்டி விட அவன் தாத்தா புலஸ்த்யர் சொற்படி சிவனைக் குறித்து கௌதமி நதிக்கரையிலேயே தவமிருந்து அழியாத செல்வத்திற்கு அரசனானான். 

ஹரிச்சந்த்ரன் மகப்பேறின்றி வருந்தியபோது பர்வதர், நாரதர் சொற்படி வருணனை வேண்டி ரோஹிதனைப் பெற்றான்.  ஆனால் அவனைத் தனக்கே பலியாகக் கேட்டான் வருணன்.  ஒப்புக்கொண்ட ஹரிச்சந்த்ரன் தீட்டு கழியவில்லை, பல் முளைக்கவில்லை, இது பால் பற்கள், இன்னும் க்ஷத்ரிய கலைகளைக் கற்கவில்லை என்று தள்ளிக்கொண்டிருந்தான்.  அடுத்த முறை வருணன் வந்த போது ரோஹிதன் தான் விஷ்ணுவைக் குறித்து ஒரு யாகம் செய்து விட்டு பலியாகிறேன் என்று கூறினான்.  காட்டிற்குச் சென்றிருந்த போது அஜிகர்த்தா எனும் முனிவரிடம் பெரும் தானங்களைக் கொடுத்து அவர் மூன்று பிள்ளைகளை நடுவுள்ள ஸுனக்ஷேபனை யாகப்பசுவாகப் பெற்று வந்தான்.    ப்ராஹ்மண ஹத்திக்கு ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று ஹரிச்சந்த்ரன் மறுத்த போது, கௌதமி நதிக்கரையில் செய்யும் யாகங்களில் பலி தேவையில்லை, அங்கே செய்யுங்கள் என அசரீரி ஒலிக்க அனைவரும் அப்படியே செய்தனர்.  சுனக்ஷேபனை விஶ்வாமித்ரர் தத்தெடுத்துக்கொண்டார்.  

ததீசியின் தவபலத்தால் அவர் ஆஶ்ரமத்திற்கு அசுரர்கள் பயம் இல்லை.  இதையறிந்த தேவர்கள் தங்கள் ஆயுதங்களை அவரிடம் ஒப்படைத்திருந்தனர்.  பூஜை, உபயோகம் இன்றி ஒளி குறைந்து மறையத்தொடங்கிய ஆயுதங்களை, உலகப் பற்றை விட்டவர் இவைகளை வைத்திருத்தல் ந்யாயமில்லை, இதனால் அசுரர்களோடு விரோதம் வரும் என்று மனைவி லோபாமுத்ரை சொற்படி கங்கையில் கழுவி அதன் நீரை குடித்ததும் அவர் உடல் மேலும் பலமடங்கு ஒளி பெற்றது.  மீண்டும் தேவைப்பட்டபோது தேவர்கள் வந்து ஆயுதங்களைக் கேட்க அவர் யோக வழியில் தன் உடலை விட்டு தன் எலும்பில் ஆயுதங்களை உண்டாக்கிக்கொள்ள சொன்னார்.  அப்படியே விஶ்வகர்மா வஜ்ராயுதம் செய்து தந்தான்,  கர்ப்பவதியான முனிவர் மனைவி பின்னர் இதை அறிந்து குழந்தை பிறந்ததும் அதை ஒரு அத்தி (பிப்பலம்) மரத்தின் காப்பில் விட்டு, தீயில் உயிரை மாய்த்துக்கொண்டாள்.  பிப்பலன் வளர்ந்து தவத்தால் பலம் பெற்று சிவனைக்குறித்து தேவர்கள் அழிவிற்கு வேண்டினான்.  சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பூதம் முதலில் அவனும் தேவர்கள் படைப்பில் வந்தவனே என்று துரத்தியது.  சிவனிடம் பணிந்த அவனுக்கு தேவ விமானத்தில் அவன் பெற்றோர்களை காட்டியருளினார்.  பூதமும் ஒரு நதியாகி கங்கையோடு கலந்து விட்டது.  

விருத்த ஸங்கமம்: கௌதமரின் மகன் விருத்த கௌதமன் ஒரு மூக்கரையன், படிப்பில்லாதவன், இளவயதடைந்த அவன் ஒரு சமயம் காட்டில் ஒரு குகையைக் கண்டு அதில் இருந்த வயதான ஒரு மூதாட்டியை வணங்க முற்பட்டான்.  அவள் அவனை தனக்கு குரு என்று கூறி தடுத்து விட்டாள்.   நான் உன் குழந்தையல்லவா, நான் எப்படி உனக்கு குருவாவேன் என்று அவன் கேட்க, ரிஷத்வஜன் எனும் அரசனுக்கும் சுஷ்யமை எனும் அப்ஸர ஸ்த்ரீக்கும் தான் பிறந்ததாகவும், நான் முதலில் காணும் ஆடவனே எனக்குக் கணவன் என்று அவர்கள அங்கேயே விட்டுச்சென்று விட்டதாகவும், பல ஆண்டுகள் கழிந்த தான் இப்போது முதல் முதலாக ஒரு ஆடவனை, உன்னை காண்கிறேன், மணக்காவிட்டால் இறந்து விடுவேன் என்றாள்.  இவன் ஒரு வழியாக தான் அழகாகவும், கல்விமானாகவும் ஆனதும் உன்னை மணப்பேன் என்றான்.  அவள் தனது வருண, ஸரஸ்வதி உபாஸனையால் அவனை அங்கனமே செய்து மணந்து கொண்டாள்.  இந்த ஜோடியை மற்ற முனிசீடர்கள் கேலி செய்யவே, அகஸ்த்யர் சொற்படி கௌதம கங்கையில் நீராடி இருவருமே இளைய, அழகிய வடிவினரானார்கள்.  அந்த துறையே விருத்த ஸங்கமம்

நாக தீர்த்தம்: சூரசேன ராஜனுக்கு வெகு காலம் கழித்து ஒரு குழந்தை அதுவும் நாகமாக பிறந்தது.  ஆனால் காலம் கழிந்து அது மனித மொழியில் பேசி, வேத சாஸ்த்ரங்களையும் முடித்தது.  ஸ்வர்க்கம் கிட்ட தனக்கு மணம் முடித்து வைக்கவேண்டும் இல்லாவிட்டால் இறந்து விடுவேன் என்றது.  ஒருவருக்கும் தெரியாமல் வளர்ந்த இதன் விபரம் தெரியாத அவர் அமைச்சர் விஜயராஜனின் மகள் போகவதியை தேர்ந்தெடுத்தார்.  இளவரசன் சார்பில் அவன் வாளுக்கு மாலையிட்டு புகுந்த வீட்டுக்கு வந்த அவள் விஷயம் தெரிந்ததும், மானுடப்பிறவியான தனக்கு நாகராஜன் கிடைத்தது பாக்யமே என்று விட்டாள்.  சிவ கிங்கரர்களில் ஒருவனாயிருந்து சிவ-பார்வதி பேச்சின்போது சிரித்து விட்ட காரணத்தால் சபிக்கப்பட்ட அவனுக்கு முன் ஜென்ம நினைவுகளும் வந்தன.  கௌதம கங்கையில் நீராடி இருவரும் விமோசனம் பெற்றனர்.

நான்முகனும், மாத்ரி தீர்த்தம்: முன்பொரு சமயம் ஹரி, ப்ரஹ்மாதிகளாலும் வெல்ல முடியாத தேவர்களுக்கு ஆதரவாக பரமேஶ்வரன் இருந்து அசுரர்களை பாதாளத்திற்கு விரட்டியடித்தபோது, அவரின் வியர்வைத் துளிகளிலிருந்து மாத்ரி கணங்கள் புறப்பட்டு அவைகளும் அசுரர்களை கொன்று குவித்தன.  அந்த இடமே மாத்ரி தீர்த்தம்.  அப்போது ப்ரஹ்மனின் ஐந்தாவது தலை கழுதை உருவிலிருந்து கொண்டு பயந்தோடிய அசுரர்களை மீண்டும் போரிடச்சொல்லி ஆதரவாயிருப்பதாக பேசியது.  மற்ற தலைகள் தங்களுக்கு சார்பாக இருக்க இது மட்டும் அசுரர்களுக்கு சாதகமாயிருக்கக்கண்டு பயந்த தேவர்களை சிவபெருமானையே மீண்டும் சரணடையச்சொன்னார் மஹாவிஷ்ணு.  கீழே விழுந்தால் பூமி சிதறிவிடும் என்றிருந்த அந்த ஐந்தாவது தலையை கிள்ளி தன் கையிலேயே வைத்துக்கொண்டார் பரமேஶ்வரன்.  அந்த இடமே ப்ரஹ்ம தீர்த்தம்

யம தீர்த்தம், அக்னி தீர்த்தம்: அனுஹ்ரதன்-ஹேதி என்ற புறா ஜோடிகளும், உலூகன்-உலூகி என்ற ஆந்தை ஜோடியும் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருந்தன.  அனுஹ்ரதன் யமனின் பேரன், உலூகன் அக்னி குலத்தைச் சேர்ந்தது.  தங்களிடமிருந்து ஆயுதங்களையெடுத்து இவைகள் போரிட்டுக்கொண்டிருந்ததில் அழிவைக் கண்ட அவர்கள் இவர்களை சமாதானப்படுத்தினர்.   இவைகள் வசித்த இடமே இந்த தீர்த்தங்கள்.

பில்லா தீர்த்தம்: பில்லா என்ற வேடனும், வேதா என்ற ப்ராஹ்மணனும் மாறி, மாறி ஒருவரை ஒருவர் அறியாமல் காட்டிலிருந்து ஒரு சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வந்தனர்.  இவனுடைய இறைச்சி படையல்களை அகற்றி அவர் பூஜிப்பதும், அவர் பூக்களை அகற்றி இவனும் பூஜித்து இருந்தனர்.  ஒரு நாள் அவனுக்கு இறைவன் காட்சி தந்ததை கண்ட ப்ராஹ்மணர் உங்களை உடைப்பேன் என கோபித்தார்.  மறுநாள் வரை அவரை பொறுமை காக்கச் சொன்ன இறைவன் மறுநாள் ரத்தத்துளிகள் தென்பட இருந்தார்.  இந்த ப்ராஹ்மணர் அவைகளை துடைத்து விட்டு நீரால் கழுவி பூஜித்து முடித்தார்.  பின்னர் வேடன் வரும்போது மீண்டும் அவனையும் சோதித்தார்.  இறைவன் உடலில் ரத்தத்துளிகளை கண்ட அவன் தன் பாவங்களும் காரணமாயிருக்கும் என்று தன்னையும் உடல் முழுதும் கீறிக்கொண்டான்.  உண்மை பக்தியை உணர்ந்தார் ப்ராஹ்மணர்.  

கௌதமன் என்ற அதர்ம வழியில் வளர்ந்த அந்தணனும், மணிகுண்டலனெனும் தர்ம வழி வளர்ந்த வைஶ்யனும் நண்பர்கள்.  அயல் நாடு சென்று திரவியம் ஈட்டலாம் என்று கௌதமன் மணிகுண்டலனை வற்புறுத்தி பெரும் பொருளோடு வரச்செய்தான்.  வழியில் தர்மவழி தான் உயர்ந்தது, அதர்ம வழியே உயர்ந்தது என்றும் வாதிட்டுக்கொண்டே வந்தனர் இருவரும்.    யாரையாவது கேட்டு முடிவெடுக்கலாம் என்று கேட்டபோது அனைவரும் அதர்ம வழியில் வாழ்பவனே செழிக்கிறான் என்றே சொன்னார்கள்.  பணயத்தின் படி மணிகுண்டலன் செல்வமனைத்தையும் பிடுங்கிக்கொண்டான் கௌதமன்.  அப்போதும் தர்ம வழியையே பாராட்டிப் பேசினான் மணி குண்டலன்.  அடுத்தடுத்த பணயத்தில் கரங்களையும், கண்களையும் இழந்தான் மணிகுண்டலன்.   எனினும் தர்மத்தையே உயர்த்தி பேசிய அவனை காட்டில் விட்டுச்சென்று விட்டான் கௌதமன்.

அந்த இடம் கௌதமி நதிக்கரை.  அங்கிருந்த விஷ்ணு விக்ரஹத்திற்கு இரவில் விபீஷணனின் மகன் தினமும் வந்து பூஜை செய்வது வழக்கம்.  அன்றிரவு கீழே கிடந்த இவனைக் கண்ட அவன் விஷயங்களை அறிந்து தன் தந்தையிடம் சொன்னான்.  விபீஷணன் அப்போது மரமாய் வளர்ந்திருந்த விஶல்யகரணி மூலிகையைக் கொண்டு மணிகுண்டலனை குணப்படுத்தி அழைத்துச்சென்றான்.  வழியில் தன் குருட்டுப் பெண்ணை குணப்படுத்துபவனுக்கே அவளை மணம் முடித்து, ராஜ்யத்தை ஒப்படைப்பது என்ற முடிவில் இருந்த ஒரு அரசனின் பெண்ணை விஶல்யகரணியைக் கொண்டு குணப்படுத்திய மணிகுண்டலன் அந்நாட்டுக்கு அரசனாக்கப்பட்டான்.  பிற்காலத்தில் பொருள்களை இழந்து இழிவான நிலையில் கொண்டு வரப்பட்ட கௌதமனுக்கும் நிதிகளைத் தந்து தேற்றினான் மணிகுண்டலன்.

கண்டு முனிவரின் உக்ரமான தவத்தைக் கெடுக்க ப்ரேமலோசனை எனும் அப்ஸரஸை அனுப்பினான் இந்த்ரன்.  அவளும் அவரை மயக்கி மனைவியானாள்.  அவளோடு திளைத்திருந்த கண்டு முனிவர் பலகாலங்கள் அனுஷ்டானங்கள் இன்றி அதில் கழிந்து விட்டதை உணர்ந்து மனைவியானதால் அவளை சபிக்காமல் திருப்பி அனுப்பி விட்டு, புருஷோத்தம க்ஷேத்ரத்தில் விஷ்ணுவால் தவம் செய்ய ஆசிர்வதிக்கப்பட்டார்.  இவர்கள் பெண்ணே மரீஷை.

சண்டாளன் ஒருவன் ஒரு சமயம் ப்ரஹ்மராக்ஷஸனிடம் அகப்பட்டுக்கொண்டான்.  20 வருடங்களாக ஏகாதஸி கொண்டாடி வருவதாகவும், அன்றைய ஏகாதஸி முடிந்ததும் நான் உனக்கு உணவாகிறேன் என்று கூறி அதன்படியே வந்த அவனிடமிருந்து 2 மணி நேர ஏகாதஸி புண்ணியத்தை யாசித்துப் பெற்று அதனால் சாப விமோசனம் பெற்ற அந்த ப்ரஹ்ம ராக்ஷஸன் உபநயனத்திற்கு முன்பே யாகங்களில் கலந்து கொண்ட பாவத்தால் ப்ராஹ்மணனான தான் இந்த சாபம் பெற்றதைச்சொல்லி, சொல் தவறாது திரும்ப வந்த நீயும் சண்டாளனாக இருக்க முடியாது என்று கூறிச்சென்றான்.    பின் தவம் செய்த இந்த சண்டாளன் முற்பிறவியில் வேத பண்டிதனாயிருந்த போது, யாசித்துப் பெற்ற உணவில் பசுவின் தூளி சிறிது விழுந்து விட்டதால் அதை வீசியெறிந்து விட்டதற்காக சண்டாளனானது குறித்து நினைவு கொண்டான்.  தவத்தால் விமோசனம் பெற்றான்.  

ஸ்வயம்புவான ப்ரஹ்மாவின் தவத்தின் பலனாக ப்ரணவ ஒலி கேட்கப்பெற்றார்.  அதன் பிறகு அவரது முகங்களிலிருந்து 24 எழுத்துக்கள் கொண்ட காயத்ரியும், பின்னர் வேதங்களும் தோன்றின.  வேதங்களுக்கு காயத்ரியே மாதா.  

யோகம் என்பது ஆத்மாவை பரப்ரஹ்மத்துடன் சேர்ப்பது.  எல்லா உயிர்களிலும் உறையும் ஆத்மா ஒன்றே என நிலைப்படுவது.   வேத, புராணங்களை பயின்று முறையாக யோகப்பயிற்சி, புலனடக்கம், சாத்வீக உணவு, இனிய ப்ரதேசத்தில் வாசத்தை மேற்கொண்டால் இந்நிலையை அடையலாம்.

ப்ரஹ்ம புராணம் முற்றிற்று.