Tuesday, October 24, 2017

அடியேனின் கந்த புராண சொற்பொழிவு

கந்த புராண சொற்பொழிவு
கம்பரசன்பேட்டை J சீதாராம ஶர்மா
இடம்: வரஸித்தி வினாயகர் ஆலயம், ரயில்வே காலனி, கிழக்குத் தாம்பரம்
நாள்: 22 அக்டோபர் 2017, ஞாயிறு

இது என்னோட மூனாவது சொற்பொழிவு.  மொதல்ல கிழக்குத் தாம்பரம் ஏரிக்கரைத் தெருவில் வீற்றிருக்கும் ஸ்ரீ கங்கையம்மன் கோவில்ல, ரெண்டாவது இதே பிள்ளையார் கோவில்ல, ரெண்டுமே இந்த வருஷத்து நவராத்ரியின் போது, அம்பாளை பத்தி.

மூன்று பாகங்களாக கீழே கொடுத்திருக்கும் யூ ட்யூப் லிங்க்ல  பதிவேற்றியிருக்கிறேன்.  ஆஸ்தீக, நாஸ்தீக நண்பர்கள், இருந்தா நல்லாயிருக்கும் இருக்கற எல்லா டீமும் கேக்கறா மாதிரி தான் முடிஞ்ச வரைக்கும் வந்திருக்குன்னு நினைக்கிறேன்.   முழுவதும் கேட்டு விட்டு, வழக்கம் போல குறை, நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.  உபயோகமாக இருக்கும்னா இன்னும் கொஞ்சம் பேருக்குப் பகிருங்கள்.  ரெண்டு மணி நேரத்துல சொன்னதால கொஞ்சம் கதை, கொஞ்சம் செய்யுள், கொஞ்சம் தத்வம்னு வேகமா போயிருக்கேன்.  பொறுத்துக் கொள்ளவும்.   நீங்க குழந்தைகளுக்கு மெல்ல சொல்லிக் குடுங்கோ.

https://www.youtube.com/playlist?list=PLKsNUmN3Ozf7mlSOgAEmquNVsLtBQ2fnX

Friday, August 18, 2017

Valmiki Ramayanam Tamil Audio - முழு வால்மீகி ராமாயணம் ஆடியோ புக்

சம்போ மஹாதேவ !

முழு வால்மீகி ராமாயணம் ஆடியோ

அனுக்ரஹ க்ரந்தமான இந்த வால்மீகி ராமாயணம் தமிழ்-ஸம்ஸ்க்ருத மொழிகளில் பெரும் புலமை பெற்ற என் தாத்தாவைப் போன்ற சிறந்த வித்வான்களிடமிருந்து க்ரஹித்தது. இது கேட்பவர்க்கும், படிப்பவர்க்கும் எல்லா இக, பர சௌபாக்யங்களையும் அளிக்கிறது என்பது என் அனுபவம்.


யூ டியூப்பில்  பதிவு செய்திருக்கிறேன். கேட்டுப் பயன் பெறுங்கள்.  

இது மூல க்ரந்தமான வால்மீகி ராமாயணத்தின் செம்மையான தமிழ்ப் பதிவு.   உங்களுக்குத் தெரிந்த கம்ப, துளசி ராமாயணங்களோடு ஒப்பிடுங்கள். 

கருத்துக்களைக் கூறுங்கள். லிங்க் ல் ஏதாவது பிரச்னை, கிடைக்கவில்லை என்றால் தெரிவியுங்கள்.

ஜய் ஸ்ரீ ராம்

https://www.youtube.com/playlist?list=PLKsNUmN3Ozf43uJEswb4MU7ibO4tmQNFW

உங்கள் ஆசிகளுடன் 
சீதாராமன். ஜ

Friday, November 29, 2013

வாமன புராணம் - 25

வாமன புராணம் - 25

பகவத்பக்தியும், மோக்ஷமும்: பாதாளத்தில் மீண்டும் மோகங்களில் ஆழ்ந்து பகவானை மஹாபலி மறந்த போது விஷ்ணுவின் சுதர்சனம் அவன் முன் தோன்றி அவனுக்கு மோக்ஷ மார்க்கத்தை நினைவுபடுத்தியது.  உடனே தெளிந்த அவனும் ப்ரஹ்லாதரை நினைக்க, அவரும் தீர்த்தயாத்ரையை முடித்துக் கொண்டு அவன் முன் தோன்றினார்.  கரையேற வழி கேட்டுப் பணிந்த பலிக்கு, ப்ரஹ்லாதர் ஹிதோபதேசம் செய்யலானார். "பகவத்பக்தியை விட மோக்ஷ ஸாதனம் வேறில்லை.  பலமுறை பகவந்நாமங்களைக் கூறுபவனே நாவு படைத்தவன்.  அவனை ஆராதிக்கும் கரங்களே கரங்கள்.  விஷ்ணு சரிதங்களை விரும்பிக் கேட்கும் செவிகளே செவிகள்.  தினம் காலையில் எழுந்தவுடன் எவன் உள்ளத்தில் விஷ்ணுவின் பாதங்களும், நாவில் அவர் திருநாமங்களும் உள்ளதோ, அவனருகில் எமனும் வர அஞ்சுவான். 

பக்தியில்லாதோர் இருந்தும் இறந்தவரே. அவர்கள் செய்யும் கர்மங்களனைத்தும் வீணே. கடலின் ரத்னங்களைக் கூட கணக்கிட்டு விடலாம்.  ஆனால் விஷ்ணுவின் கல்யாண குணங்கள் கணக்கிலடங்கா.  மனஸ், வாக்கு, காயம் என்ற த்ரிகரணங்களையும் புருஷோத்தமனிடம் அர்ப்பிப்பவனுக்கு ஸம்ஸாரத்தில் பயமில்லை.  பகவத் சரிதமெனும் அம்ருதத்தை அருந்துபவனுக்குத் தாய்ப்பாலும் தேவையில்லை.  அவனுக்கு தோல்வியில்லை, ரோகமில்லை.  மூன்று ஸந்த்யா காலங்களிலும் பகவத் த்யானம் செய்வோர் உபவாஸ பலனை அடைவர்.  அவனை நினைத்து எந்த கார்யத்தையும் துவங்கி, அவனுக்கே அதை ஸமர்ப்பிப்போர் ஸம்ஸார ஸாகரத்தைத் தாண்டுவர்.  த்யானம், ஸ்மரணம், நாம ஸங்கீர்த்தனம், சரித ச்ரவணம் இவைகளை விட உயர்ந்த தர்மமில்லை.  ஸாளக்ராமமும், ப்ராஹ்மணர்களும் விஷ்ணுவின் ப்ரியமான ஸ்தலங்கள்.  ஆதலால் ப்ராஹ்மணன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் அவனை அவமதிக்காதே.

தானங்கள்: பகவானை நினைத்து ஸத் பாத்ரத்திற்கு கோ, பூமி, வஸ்த்ரம், அன்னம், ஸ்வர்ணம் இவைகளைக் கொடுப்பது சிறந்தது.  மாசி மாதத்தில் தில தானமும், விறகும், பங்குனியில் தான்யம், க்ருஷ்ணாஜினம், வஸ்த்ரம், சித்திரையில் விசித்ர வஸ்த்ரம், படுக்கை, ஆஸனம், வைகாசியில் வாஸனை த்ரவ்யங்கள், தீர்த்தபாத்ரம், விசிறி, ஆனியில் உப்பு, நெல்லி, குடை, செருப்பு, ஆடியில் வெல்லம், ரிஷபம், ஆவணியில் பாயஸம், தேன், தயிர், புரட்டாசியில் தாமிரம்,இரும்பு, ஐப்பசியில் வீடு, குதிரை, கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் அவரவர்க்கு ப்ரியமானவைகளையும் தானம் செய்தால் பரமாத்மா சந்தோஷமடைகிறார்.  இறைவனுக்கு ஆலயம் கட்டுவதும், ஆலயத்தை சுத்தம் செய்தலும், கொடிமரம், வாஹனங்கள் முதலியவைகளை அவனுக்கு ஸமர்ப்பிப்பதும் உத்தம தர்மங்கள்" என்று ப்ரஹ்லாதர் பலிக்கு உபதேசித்தார்.

அவனும், விந்த்யாவளியோடு சேர்ந்து சந்தோஷத்துடன் அவ்வாறே பல தானங்களைச் செய்தான்.  பாதாளத்தில் விஷ்ணுவுக்கு ஒரு ஆலயத்தை எழுப்பி தினமும் அவரை அர்ச்சித்து வந்தான். இப்படி பகவத் பக்தியில் ஈடுபடுவோரும், இந்த வாமன சரிதத்தை பக்தியோடு படிப்போரும், கேட்போரும், பிறருக்குக் கூறுவோரும், தன் சக்திக்குத் தகுந்தபடி பௌராணிகரைப் பூஜிப்போரும் வைகுண்டத்தில் வசிப்பர்" என்று புலஸ்த்யர் நாரதருக்கு உரைத்தார்.  நாரதரும் அந்தரங்க பக்தியோடு பகவானைப் பாடிக் கொண்டு சென்றார்.

வாமன புராணம் - 24

வாமன புராணம் - 24

ப்ரஹ்லாதர் யாத்ரைக்குப் புறப்பட்டபின், மஹாபலி தன் தர்மபத்னி விந்த்யாவளியோடு குருக்ஷேத்ரத்தில் அச்வமேத யாகத்திற்கான தீக்ஷை செய்து கொண்டு யாக கார்யங்களை ஆரம்பிக்கலானான்.  சுக்ரர் அழைப்பை ஏற்று பார்க்கவ ரிஷிகள் யாகத்தில் கலந்து கொண்டனர்.  அத்ரி, கௌதம, ஆங்கிரஸ, கௌசிக வழித்தோன்றல்கள் அதையேற்க மறுத்து குருக்ஷேத்ரத்தை விட்டு வெளிச்சென்றனர். யாகத்தின் அங்கமாக தாரகாக்ஷன் என்பவன் துணையோடு யாக குதிரையும் புறப்பட்டுச் சென்றது.  மூன்று மாதங்களானதும், தேவர்களைக் காப்பதற்காக மஹாவிஷ்ணுவும் அதிதிக்கும், காச்யபருக்கும் வாமனராகத் தோன்றினார்.  ப்ரஹ்மதேவர் கூறியபடி பரத்வாஜர் குழந்தைக்கு ஜாதகர்மா, யக்ஞோபவீத கர்மாக்களை செய்து வைத்து, வேதங்களையும் ஓதுவித்தார்.  பரத்வாதரிடமிருந்து ஒரே மாதத்தில் வேதங்களைக் கற்றுக் கொண்டார்.  ரிஷிகளோடு சேர்ந்து பலியின் யாகசாலையை நோக்கிப் புறப்படலானார். அப்போது பரத்வாஜர் மஹாவிஷ்ணுவின் சான்னித்யம் இருக்கும் இடங்களை அருள வேண்டுமென்று வாமனரிடம் கேட்டார்.

தெய்வ சான்னித்யம்:  பகவான் "ப்ரஹ்மன் முதல் தோன்றி உலகங்களிலுள்ள அசையாப் பொருள் வரை தன் சான்னித்யம் எதிலுமுள்ளது.  எனினும் விசேஷமானவைகளைக் கூறுகிறேன். மானஸ ஸரோவரில் மத்ஸ்யமாகவும், கௌசிகியில் கூர்மமாகவும், க்ருஷ்ணையில் ஹயக்ரீவராகவும், ஹஸ்தினாபுரத்தில் கோவிந்தனாகவும், யமுனையில் த்ரிவிக்ரமனாகவும், பதரியில் நாராயணனாகவும், பத்ரகர்ணத்தில் ஜயேசனாகவும், வராஹத்தில் கருடத்வஜனாகவும், மணிமதியில் சம்புவாகவும், ஹிமாசலத்தில் சூலபாணியாகவும், சக்ரதீர்த்தத்தில் அர்த்தநாரீச்வரனாகவும், குமாரதாரையில் ஸுப்ரஹ்மண்யனாகவும், மாஹிஷ்மதியில் த்ரிநேத்ரனாகவும், ஸப்தகோதாவரத்தில் ஹடகேச்வரனாகவும், ஸிம்ஹத்வீபத்தில் உபேந்த்ரனாகவும், பாதாளத்தில் கபிலராகவும், பூலோகத்தில் கோகனதேசனாகவும், புவர்லோகத்தில் கருடனாகவும், ஸுவர்லோகத்தில் விஷ்ணுவாகவும், மஹர்லோகத்தில் அகஸ்த்யராகவும், ஜநலோகத்தில் கபிலராகவும், தபோலோகத்தில் வேதமாகவும், ஸத்யலோகத்தில் ப்ரஹ்மாவாகவும், ஜம்பூ த்வீபத்தில் நான்கு கைகளோடும், குசத்வீபத்தில் குசேசயனாகவும், ப்லக்ஷ த்வீபத்தில் கருட வாஹனத்தோடும், க்ரௌஞ்ச த்வீபத்தில் பத்மநாபனாகவும், சால்மல த்வீபத்தில் வ்ருஷப த்வஜனாகவும், சாக த்வீபத்தில் ஸஹஸ்ராக்ஷங்களோடும், புஷ்கர த்வீபத்தில் வாமனனாகவும் இருக்கிறேன்" என்றார்.

புவனம் முழுதும் கிடுகிடுவென ஆடுவதைக் கண்ட மஹாபலியிடம் சுக்ராச்சார்யார் வாமனரின் வருகையைக் கூறி, அவருக்கு உபசாரமான வார்த்தைகளைக் கூறி அனுப்பி விட வேண்டுமேயல்லாது ஒரு புல்லைக் கூட அவருக்குத் தானமாக அளித்து விடக்கூடாது என்றும், அப்படி ஏதாவது செய்து விட்டால், அதைப் பற்றியே அவர் பலியின் ராஜ்யம் முழுதையும் அபஹரித்து தேவர்க்கு அளித்து விடுவார் என்றும் எச்சரித்தார்.  ஆனால் பலியோ, யாகத்தில் எவர்க்கும் இஷ்டமானதை அளிப்பதே தன் குணமாதலால் அதை மாற்ற இயலாது என்று கூறி, அதற்கு உதாரணமாக பின் வரும் கதையையும் சொன்னான்.

"முத்கல ரிஷியின் புத்ரனான கோசகாரனுக்கும், வாத்ஸ்யாயனரின் புத்ரியான தர்மிஷ்டைக்கும் இல்லற தர்மத்தில் ஒரு குழந்தை பிறந்தது.  ஆனால், அது ஆறு நாட்களாகியும் சிறிதும் அசைவின்றி இருந்ததைக் கண்ட தர்மிஷ்டை மிகவும் மனம் நொந்து அதை எறிந்து விட்டாள். சூர்ப்பாக்ஷி எனும் ராக்ஷஸி அந்தக் குழந்தையைக் கண்டதும், இளைப்பாய் இருந்த தன் குழந்தையை அங்கு விட்டு விட்டு கோசகாரனின் குழந்தையை எடுத்துச் சென்றாள். சாலோதரம் எனும் ப்ரதேசத்திலிருந்த கடோதரன் எனும் தன் குருட்டுக் கணவனிடம் அந்தக் குழந்தையைக் கொடுத்து அதை புஜிக்கலாம் என்று சொன்னாள்.  குழந்தையைத் தடவிப் பார்த்த அவன் "இது யாரோ ரிஷி புத்ரன் போலத் தெரிகிறது.  நம்மை இது சபித்து விடும்" என்று கூறி வேறு குழந்தையைக் கொண்டு வரும்படி கூறினான்.  அவள் மீண்டும் தன் குழந்தையையே எடுத்து வரச் சென்ற போது, கோசகாரர் அழுது கொண்டிருந்த அந்தக் குழந்தையைச் சுற்றி மந்த்ரங்களால் ரக்ஷை செய்திருந்தார்.  ராக்ஷஸியால் அதனருகில் செல்ல முடியாது, ரிஷி புத்ரனையும் அங்கேயே விட்டு விட்டு்ச் சென்றாள்.

சிறிது நேரத்தில் வெளியே வந்த கோசகாரர் இரு குழந்தைகளையும் எடுத்துச் சென்று தன் குழந்தைக்கு நிசாகரனென்றும், ராக்ஷஸக் குழந்தைக்கு திவாகரனென்றும் பெயரிட்டு, கபிலைப் பசுவின் பால் கொடுத்து வளர்த்து வரலானார்.  ஏழு வயதில் உபநயனம் செய்வித்து வேதம் ஓதுவித்தார்.  நிசாகரன் அப்பொழுதும் எதுவும் பேசாமலிருந்ததைக் கண்ட கோசகாரர் அவனை ஒரு கிணற்றில் தள்ளி மூடிவிட்டார்.  பத்தாண்டுகள் அங்கேயே நிசாகரன் அதிலிருந்த ஒரு நெல்லிமரத்தின் கனிகளை மட்டுமே உண்டு ஜீவித்திருந்தான்.  ஒரு நாள் அங்கு வந்த தர்மிஷ்டை யார் இந்தக் கிணற்றை மூடியது? என்று தனக்குத் தானே பேசிக் கொண்டாள்.  நிசாகரன் அப்போது வாய் திறந்து "தாயே! நானே உங்கள் குழந்தை" என்றான். அவள் "எங்கள் குழந்தை பேசாது.  எனவே தான் நாங்கள் அவனை விரட்டி விட்டோம், நீ யார்?" என்று கேட்க, நிசாகரன் தானெ அவர்கள் புத்ரன் என்று பதில் கூற, அவள் குழந்தையை கிணற்றிலிருந்து வெளியேற்று, பதியிடம் அழைத்துச் சென்று, "இதுவரை பேசாமலிருந்த நீ, இப்போது பேசக் காரணம் என்ன?" என்று கேட்க, நிசாகரன் தன் சரிதத்தைக் கீழ் கண்டவாறு கூறுகிறான்.

"முன்பு வ்ருஷாகபி என்ற தேவனுக்கும், மாலா என்பவளுக்கும் மகனாகப் பிறந்து, கலைகள் பல கற்றும், காமம், களவு போன்ற துராசாரங்களைக் கைக்கொண்டதால் பல நரகங்களை அனுபவித்து, ஒரு புலியாகப் பிறந்தேன்.  அரசனின் காட்சிசாலையில் அடைத்து வைத்திருந்த போது, அரசனில்லாத சமயத்தில் அவன் மனைவி அஜிதா என்பவளிடம் இச்சை கொண்டு, அவளைப் பேச்சால் மயக்கினேன், அவளும் என்னைக் கூண்டிலிருந்து திறந்து விட்டு, என்னோடு இன்புற்றிருந்த போது, காவலர்கள் புலி ராணியைத் தாக்குகிறது என்றெண்ணி, என்னைக் கொன்று விட்டார்கள்.  பல நரக வேதனைகளை மீண்டும் அனுபவித்து, அக்னிவேச்யர் என்ற அந்தணரிடம் கழுதையாகப் பிறந்து, அவர் மனைவி விமதி என்பவள் மேல் மீண்டும் ஆசை கொண்டு பாய்ந்தேன்.  அவர் சீடர்கள் என்னை அடித்துக் கொன்று விட்டனர்.  மீண்டும் பல நரகங்களை அனுபவித்து, சந்த்ராவளி என்ற வைச்யக் கன்யகையிடம் கிளியாக அன்போடு வளர்ந்த போது, அவள் மேல் மோஹிக்க, அவள் என்னைத் விரட்டி விட்டாள்.  அப்போது ஒரு குரங்கின் கையில் அகப்பட்டு இறந்தேன்.  அதன் பின் ஒரு சண்டாளன் வீட்டில் காளையாகப் பிறந்த போது அவன் மனைவி மேல் மோஹங்கொண்டு, அவன் கையில் அடிபட்டு இறந்து, இப்போது உங்கள் மகனாகப் பிறந்துள்ளேன்.  இனி இந்த வலையில் அகப்படக்கூடாது என்றெண்ணியே நான் பேசாமலிருந்தேன்.  கிணற்றில் இருந்த போது பரமனை நினைத்துத் தவம் புரிந்தேன்.  இனி பூர்வ ஜன்ம வாசனை வராதென்ற நம்பிக்கையிலேயே பேச ஆரம்பித்தேன்.  நான் இனி வெளியே சென்று பெரியோர்களை அணுகி, பேரின்பம் அடைய ஆசைப் படுகிறேன். நீங்கள் திவாகரனைக் கொண்டு புத்ரனால் கிடைக்கும் இன்பங்களை அடையுங்கள், நான் பத்ரிகாச்ரமம் செல்கிறேன்" என்று கூறி அவர்களைப் பணிந்து சென்றான்.

இந்தக் கதையை சுக்ரருக்கு உரைத்த மஹாபலி அதேபோல் தனக்கும் தன் முன் பிறவிகளால் இந்த தானங்களில் இஷ்டம் இருக்கிறது போலும் என்று கூறினான்.  அதே போல் வந்த வாமனருக்கும் தானம் அளிக்க, அவர் தன் இரண்டடிகளாலேயே அனைத்து உலகங்களையும் அளந்து கொண்டு, மூன்றாவதடிக்கு இடம் கேட்டார்.  பலியின் புத்ரன் பாணன் "புவனத்தை ஏன் இப்படிச் சிறியதாகப் படைத்தீர்கள்.  பெரிதாகச் செய்திருந்தால் வேண்டிய அளவு எடுத்துக் கொண்டிருக்கலாம் அல்லவா?" என்று கேட்க, அவர் சிரித்துக் கொண்டே தான் நினைத்திருந்தால் ஒரே அடியில் அனைத்துலகங்களையும் அளந்திருக்க முடியும் என்றும், பலியின் மீது கருணை கொண்டே அவ்வாறு செய்யவில்லை என்றும் கூறினார்.  பின்னர் தன் மூன்றாவதடியால் பலியைப் பாதாளத்துக்கனுப்பிய வாமனர் முறைதவறிச் செய்யப்படும் நற்கார்யங்களின் பலனை ஆஹாரமாகக் கொள்ளுமாறு கூறி, அவன் பெயரால் தீபப்ரதானம் எனும் பண்டிகையும் இனி கொண்டாடப்படும் என்று அருளினார்.  அதையே நாம் கார்த்திகையாகக் கொண்டாடுகிறோம்.

வாமன புராணம் - 23

வாமன புராணம் - 23

ப்ரஹ்லாதன் இராவதி நதி, குருக்ஷேத்ரம், தேவிகா தீர்த்தம், கோகர்ண தீர்த்தம், ப்ராசி தீர்த்தம் என்று பல தீர்த்தக்ஷேத்ரங்களை இறைவனைத் தர்சித்துக் கொண்டு வரும் போது மது தீர்த்தத்தினருகே சூலபாணியாக விஷ்ணுவையும், சக்ரபாணியாக பரமேச்வரனையும் கண்டான்".  இவ்வாறு புலஸ்த்யர் கூறியதும் நாரதர் வியந்து அதற்கான காரணத்தைக் கேட்டார். புலஸ்த்யர் "ஜலோத்பலன் எனும் அரக்கன் தேவர்களைப் பீடித்துத் துன்புறுத்திக் கொண்டிருந்தான்.  தேவர்களைக் காக்க சக்ரபாணியாக பரமேச்வரனும், சூலபாணியாக மஹாவிஷ்ணுவும் தோன்றி ஜலத்தில் மறைந்திருந்த அவனை அடித்துக் கொன்றனர்.

வீதமன்யு, தர்மசீலை என்ற உத்தம ப்ராஹ்மண தம்பதியருக்கு உபமன்யு என்று ஒரு குழந்தை பிறந்தது.  அவர்கள் பொருளாசையை விட்டு தேவபூஜையில் ஈடுபட்டிருந்ததால் வறுமையின் காரணமாகக் குழந்தைக்கு மாவையே பாலாகக் கரைத்துக் கொடுத்து வளர்த்து வந்தனர்.  இடையில் ஒரு நாள் அதிதிகளாக வேறொருவர் இல்லத்திற்குச் சென்றிருந்தபோது அங்கு உண்மையான பாலைக் குடித்து ருசி கண்ட குழந்தை, அதன் பின் மாவில் கரைத்த பாலைக் குடிக்க மறுத்து அழுதது.  குழந்தையைப் பலவாறு தேற்றியும் கேளாததால் தர்மசீலை "பசுபதியின் அருளின்றி நமக்குப் பால் கிடைக்குமா? அவரைப் பூஜித்தால் பால் என்ன, அம்ருதமே கிடைக்கும்" என்று கூற, அதைக் கேட்ட குழந்தை "பசுபதி யார், அவர் எங்கிருக்கிறார்? அவரை எப்படி பூஜிப்பது?" என்றெல்லாம் கேட்க ஆரம்பித்தது.  தர்மசீலை உடனே குழந்தைக்குக் கீழே வரும் கதையைக் கூறினாள்.

மஹாவிஷ்ணு சுதர்சனம் பெற்றது: ஸ்ரீதாமன் என்ற ஒரு அரக்கன் மஹாவிஷ்ணுவின் ஸ்ரீவத்ஸத்தைக் கொள்ளையடிக்கக் கருதினான்.  இதையறிந்த மஹாவிஷ்ணு இமயமலை சென்று ஆயிரமாண்டுகள் ஒற்றைக்காலில் நின்று தவம் புரிந்தார்.  அப்போது ருத்ரன் அவரெதிரில் தோன்றி அவருக்கு பனிரெண்டு மாதங்களையும், ஆறு ருதுக்களையும் ஆரக்கால்களாகக் கொண்ட சுதர்சன சக்ரத்தை, பக்தர்களைக் காத்து, துஷ்டர்களை அழிப்பதற்காக அளித்தார்.  மஹாவிஷ்ணு அந்த ஆயுதத்தைப் பரீக்ஷை செய்து பார்க்க நினைக்க, மஹேச்வரன் தன் மீதே அதை பரீக்ஷித்து பார்க்குமாறு கூறினார்.  மஹாவிஷ்ணு அதை பரமேச்வரன் மேல் ப்ரயோகிக்க, அவருடல் மூன்றாகப் பிளந்தது.  அதைக் கண்டதும் மஹாவிஷ்ணு தன் தவறைப் பொறுத்து, மன்னிக்குமாறு ஈசனை வேண்டினார்.  பரமேச்வரன் சிரித்து தனக்கு என்றும் அழிவில்லை என்றும், ஸுவர்ணாக்ஷன், விச்வரூபாக்ஷன், யஞ்க்யேசன் என்ற தனது மூன்று ரூபங்கள் தோன்றவே மஹாவிஷ்ணுவுக்கு அப்படி ஒரு எண்ணம் உதித்ததாகக் கூறி, ஸ்ரீதாமனை சுதர்சனத்தால் கொல்லுமாறு கூறினார்.  மஹாவிஷ்ணுவும் அப்படியே செய்து பாற்கடலுக்குத் திரும்பினார்.  இந்தக் கதையைக் கேட்ட உபமன்யு தானும் அவ்வாறே பரமேச்வரனைப் பூஜித்து மோக்ஷத்தை அடைந்தான்.

கஜேந்த்ர மோக்ஷமும், துஸ்வப்ன நாசமும்: அதன்பின் ப்ரஹ்லாதர் கஜேந்த்ரன் மோக்ஷமடைந்த த்ரிகூட பர்வதத்தை அடைந்தார்.  ஸுமேரு மலையின் மகனான த்ரிகூட பர்வதத்தின் ஒரு ஸரஸ்ஸில் ஹூஹூ என்ற கந்தர்வன் முதலையாக வசித்து வந்தான்.  அங்கு தீர்த்தமாட வந்த கஜேந்த்ரனை அவன் காலைப் பிடித்து நீருக்குள் இழுத்தான்.  ஆயிரமாண்டுகள் முயற்சித்துத் தளர்ந்து, களைத்த யானை நாராயணனைத் துதித்தது.  மஹாவிஷ்ணுவும் அங்கு உடனே தோன்றி அந்த முதலையைத் தன் சக்ரத்தால் அறுத்து, கஜேந்த்ரனைக் காப்பாற்றினார். யானையும் அவரைத் துதித்து கந்தர்வனாகிச் சென்றது.  ஹூஹூவும் தேவலர் சாபம் நீங்கி கந்தர்வ லோகம் சென்றான். இந்தக் கதையையும், அரசமரத்தையும், ஸூர்யன், கங்கை, நைமிசாரண்யம் இவைகளையும் ஸ்மரிப்பவர்களுக்கு துஸ்வப்னம் உண்டாகாது.

விஷ்ணு ரக்ஷா மந்த்ரம்: க்ஷத்ரியன் ஒருவன் ஸ்வதர்மத்தை விடுத்து சாதுக்களைத் துன்புறுத்தி வந்தான்.  தன் பாபங்களால் நரகங்களை அனுபவித்த அவன் மறு பிறவியில் ஒரு ராக்ஷஸனாகப் பிறந்தான்.  ஒரு ஸமயம் தவம் செய்து கொண்டிருந்த ஒரு முனிவரைப் புஜிக்க நினைத்தான்.  அவர் மஹாவிஷ்ணுவைத் துதித்துக் கொண்டிருந்ததால் அவனால் அவரருகில் நெருங்க முடியவில்லை.  இதில் ஆச்சர்யமடைந்த அவன் நான்கு மாதங்கள் அவர் சமாதியிலிருந்து வரும் வரைக் காத்திருந்து, அவரை நமஸ்கரித்துத் தனக்கும் உய்வதற்கு அந்த மந்த்ரத்தை உபதேசிக்குமாறு கோரினான்.  அவர் தான் ராக்ஷஸருக்கு உபதேசிப்பதில்லை என்று கூறி, அவனை வேறு தகுந்தவரை வேண்டுமாறு கூறிச் சென்றார்.  அதன் பின் தினம் ஒரே ஒரு ம்ருகத்தை மட்டுமே உண்டு வாழ்ந்து வந்த அவன், ஒரு நாள் மிகுந்த பசியில் இருக்கும் போது ஒரு ப்ரஹ்மசாரியைக் கண்டு, புஜிப்பதற்காக அவனைப் பிடித்துக் கொண்டான்.  அந்த ப்ரஹ்மசாரி தன் குருவுக்குக் கனிகளைக் கொடுத்து, பணிவிடைகளைச் செய்து விட்டு வருவதாகக் கூறி ராக்ஷஸனை வேண்டினான்.  அப்படி விடுவதானால் தன் பாபம் தீர வழியொன்றை உபதேசிக்குமாறு ராக்ஷஸன் அவனை வேண்டினான்.  ப்ரஹ்மசாரியும் தான் உண்மையில் குருவுக்குப் பணிவிடை செய்வதானால் இந்த அரக்கனுக்கு அருள் கிடைக்கட்டும் என்று அக்னியின் சன்னிதியில் வேண்ட, உடனே அங்கு ஸரஸ்வதி தோன்றி அவ்வரக்கனுக்கு விஷ்ணுரக்ஷா மந்த்ரத்தை உபதேசித்தாள்.  அவனும் சாலக்ராம க்ஷேத்ரம் சென்று, விஷ்ணு ரக்ஷா மந்த்ரத்தை ஜபித்து, பாபங்களகன்று ஸ்வர்க்கம் சென்றான்.

Thursday, November 28, 2013

வாமன புராணம் - 22

வாமன புராணம் - 22

ச்ரவண த்வாதசீ வ்ரதமும், புரூரவஸ் சரிதமும்: த்ரிவிக்ரமரைத் தர்சித்து விட்டு அதன் பின்னர் கேதாரம், பத்ரிகாச்ரமம், பத்ரகர்ணம் முதலான பல க்ஷேத்ரங்களைத் தர்சித்துக் கொண்டு, புரூரவஸ்ஸுக்கு சுபிக்ஷங்களை அருளிய ஜகன்னாதரின் இராவதி க்ஷேத்ரத்தை அடைந்தார். த்ரேதாயுகத்தில் மத்ர தேசத்தில் சாகல நகரில் தர்மன் என்று ஒரு வைச்யன் இருந்தான்.  மிகவும் தர்மிஷ்டனான அவன் வ்யாபாரத்திற்காக தன் குழுவினரோடு வெளியே சென்றிருந்தபோது வழியில் காட்டில் திருடர்கள் அவர்களைக் கொன்று பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.  தர்மன் மட்டும் உயிரோடு எஞ்சியிருந்தான்.  தனியாக ஒரு பாலைவனத்தில் நீரின்றி, உணவின்றி, எந்த பொருளும் இன்றி தவித்துக் கொண்டிருந்தான்.  பல காலம் திரிந்த அவன் ஒரு சமீமரத்தைக் கண்டு மிகவும் மகிழ்ந்து அதனடியில் சென்று இளைப்பாறினான்.  அப்போது பல ப்ரேதங்கள் தங்களுக்குள் ஒரு ப்ரேதத்தைத் தலைவனாக பல்லக்கில் வைத்து அந்த மரத்தடிக்குக் கொண்டு வந்து கொண்டிருந்தன.  அவைகளைக் கண்டதும் இவனுக்குப் பசி, தாகம் எல்லாம் போய் பயம் பற்றிக் கொண்டது.  தான் எப்படியும் இவைகளுக்கு உணவாகப் போகிறோம் என்று இவன் நினைத்துக் கொண்டிருக்கும்போதே இவனருகிலேயே அந்த பல்லக்கு இறக்கப்பட்டது.

அந்த ப்ரேதராஜா இவனை வரவேற்று இவனைப் பற்றிய விபரங்களைக் கேட்டறிந்து கொண்டான்.  அவனைத் தங்கள் விருந்தினன் என்று ஆறுதல் கூறி, தன் குழுவிற்குக் கட்டளைகளைப் பிறப்பித்தான்.  உடனே மற்ற ப்ரேதங்களும் அவனிடம் அன்பு கொண்டு அவனுக்கு ஒரு மண் பாத்ரத்தில் நீர் கொடுத்தன.  அவன் அதை அம்ருதமாய் நினைத்து, அதில் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு, அனுஷ்டானங்களைச் செய்து கொண்டான்.  மற்றொரு ப்ரேதம் இன்னொரு மண் பாண்டத்தில் தயிர் சாதம் கொண்டு வந்து அவனுக்குக் கொடுத்தது.  மிகவும் ருசியாய் இருந்த அதை அவன் விரும்பிப் புசித்துத் தன் பசியையும் போக்கிக் கொண்டான்.  அதன் பின் ப்ரேதராஜன் மற்ற ப்ரேதங்களுக்கு வேண்டிய மட்டும் நீர், தயிர் சாதத்தை அந்த மண் பாண்டங்களிலிருந்து கொடுத்து, அதன் பின் தானும் உண்டு முடித்தான்.  அவன் உண்டதும் அந்த சாதமும், நீரும் அங்கிருந்து மறைந்தன.  அதைக் கண்டதும் வியந்த தர்மன் ப்ரேதராஜாவிடம் "ஐயா! தாங்கள் யார்?  இவைகள் யார்? புல், பூண்டுகள் இல்லாத இந்த பாலைவனத்தில் எங்கிருந்து இந்த தயிர் சாதமும், நீரும் தங்களுக்குக் கிடைக்கின்றன?" என்று வினவினான்.

ப்ரேதராஜன் "நான் ஸோமசர்மா என்ற வைச்யன், சாகல நகரத்திலே பெரும் வசதிகளிருந்தும் நானும் எதையும் அனுபவிக்காது, ஒரு தான, தர்மமும் செய்யாது கருமியாக இருந்து வந்தேன்.  விலை குறைந்த கீரை, புண்ணாக்குகளையே புஜித்து வந்த நான், என்றாவது தயிர், பால் என்று விரும்பி உண்டு விட்டால் ஜீர்ணிக்காது, நோய் உண்டாகி விடும்.  அப்போது ஒரு ஸமயம் ச்ரவண த்வாதசீயை முன்னிட்டு ஊரில் எல்லோரும் வ்ரதமிருந்து மறுநாள் வெகுவாக தான, தர்மங்களைச் செய்தனர்.  கருமியான நானும் மனமின்றி, கௌரவத்திற்காக வாழ்நாளிலேயே முதல் தடவையாக அப்போது ஒரு ப்ராஹ்மணனுக்கு தயிர் சாதத்தை மண் பாத்ரத்தில் வைத்துக் கொடுத்து, ஒரு ஜோடி செருப்பும், குடையும் கொடுத்தேன்.  அவர் ஒரு சிறந்த ப்ராஹ்மணர்.  அந்த ச்ரவண த்வாதசி வ்ரதத்தில் நான் கொடுத்த பாதுகையும், தயிர் சாதமும், கொடையுமே இப்படி பல்லக்காகவும், தயிர் சாதமாகவும், இந்த சமீ மரமாகவும் இங்கு கிடைக்கின்றன.  இந்த ப்ரேதங்களும் அப்படி பொருளிருந்தும் தானங்கள் செய்யாமல் இருந்தவைகளே.  நான் உண்டதும் ஒரு பருக்கையும் வராது.  எனவேதான், அனைவரும் உண்டபின் நான் உண்கிறேன்" என்று கூறி தர்மனிடம் தங்களுக்காக ஒரு தடவை கயை சென்று ச்ராத்தம் செய்யுமாறு வேண்டினான்.  தர்மனும் அங்கிருந்து புறப்பட்டு, அவ்வாறே நன்றி மறவாது கயை சென்று அவைகளைக் குறித்து ச்ராத்தம் செய்தான்.  அந்த ப்ரேதங்களும் தங்கள் பாபமகன்று ஸ்வர்க்கம் சேர்ந்தன.

தர்மன் தானும் ச்ரவண த்வாதசீ வ்ரதத்தை அனுஷ்டித்து கந்தர்வ லோகம் சென்றான்.  அங்கு பல போகங்களை அனுபவித்து அடுத்த பிறப்பில் மன்னனாகப் பிறந்தான்.  மீண்டும் அந்த வ்ரதத்தை அனுஷ்டித்து சாகல நகரத்தில் ஒரு அந்தணனாகப் பிறந்தான்.  முற்பிறப்பில் செய்த சில பாபங்களால் இந்த பிறப்பில் அவனுக்கு அழகான உருவம் கிடைக்கவில்லை.  அதனால் அவன் மனைவி அவனிடம் அதிக ப்ரேமை கொள்ளாது இருந்தாள்.  அழகிய உருவத்தை வேண்டி அவன், இராவதீ நதிக்கரையில் நக்ஷத்ர புருஷனாக இறைவனைப் பூஜித்து, மன்மதனாக உருப்பெற்றான்.  அவனே அடுத்த பிறப்பில் சந்த்ர வம்சத்தில் புரூரவஸ் என்ற சக்ரவர்த்தியாகத் தோன்றினான்.

நக்ஷத்ர புருஷ பூஜா: மஹாவிஷ்ணுவின் அவயவங்களில் நக்ஷத்ரங்களை உருவகித்து, எந்த நக்ஷத்ரம் ஒவ்வொரு மாத பௌர்ணமியில் வருகிறதோ, அந்த அவயவத்தை அன்று பூஜித்து, பாரணை செய்வது நக்ஷத்ர புருஷ பூஜா ஆகும். பாதங்கள் மூலம், முழங்கால் ரோஹிணீ, தொடைகள் அச்வினீ, மலவழி பூராடம், ஜலவழி பூரம், இடை க்ருத்திகை, இடை முன்புறம் அனூராதா, இடை பின்புறம் அவிட்டம், தோள்கள் விசாகா, கைகள் ஹஸ்தம், புறங்கை புனர்வஸு, நகங்கள் ஆச்லேஷா, கழுத்து கேட்டை, காதுகள் திருவோணம், உதடுகள் பூரம், பற்கள் ஸ்வாதி, கன்னம் புனர்வஸு, மூக்கு மகம், கண்கள் ம்ருகசீர்ஷம், மயிர்கள் திருவாதிரை.  இந்த பூஜையால் அருந்ததி பெரும் கீர்த்தியையும், ஆதித்யன் புத்ரனையும், ரம்பை அழகையும், திலோத்தமை மதுரமான வாக்கையும், புரூரவஸ் அகண்ட ஸாம்ராஜ்யத்தையும், அழகையும் அடைந்தார்கள்.