முழு ராமாயணம் எளிதில் மனம் கொள்ள தமிழ் வரிகளுடன், குழந்தைகள் உயிர் நடிப்புடன்
திரைப்படம்: லவகுசா
பாடலாசிரியர்: ஏ. மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: பி. சுசீலா, பி. லீலா
ஆண்டு: 1963
வீடியோ: https://youtu.be/8wgvpuiRrAM
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே (ஜகம்)
இகபர சுகமெலாம் அடைந்திடலாமே
இந்தக் கதை கேட்கும் எல்லோருமே
இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும் போதிலே
இணையே இல்லாத காவியமாகும் (ஜகம்)
அயோத்தி மன்னன் தசரதனின் அருந்தவத்தால்
அவன் மனைவி கௌசல்யா கைகேயி சுமித்திரை
கருவினிலே உருவானார் இராம லக்ஷ்மணர்
கனிவுள்ள பரதன் சத்ருக்னர் நால்வர்
நாட்டினர் போற்றவே நால்வரும் பலகலை
ஆற்றலும் அடைய மன்னன் வளர்த்து வந்தானே
காட்டினில் கௌசிகன் யாகத்தைக் காக்கவே
கண்மணி ராமலக்ஷ்மணரை அனுப்பினனே
தாடகை சுபாஹுவை தரையினில் வீழ்த்தியே
தவசிகள் யாகம் காத்து ஆசி கொண்டனரே
பாதையில் அகலிகை சாபத்தைத் தீர்த்தபின்
சீர்பெரும் மிதிலை நகர் நாடிச் சென்றனரே
வீதியில் சென்றிடும் போதிலே ராமன்
சீதையைக் கன்னிமாட மீதிலே கண்டான்
காதலினால் இருவர் கண்களும் கலந்தன
கன்னியை வில்லொடித்து சொந்தமும் கொண்டான்
ஆணவத்தால் அறிவிழந்த பரசுராமன்
அகந்தை தனை அடக்கி ராமன் வெற்றி கொண்டான்
அரும் புதல்வ வீரத்தைக் கண்ட மன்னன்
அளவில்லா ஆனந்த நிலையைக் கண்டான் (ஜகம்)
மன்னவன் தசரதன் கண்மணி ராமனுக்கு
மணிமுடி சூட்டவே நாள் குறித்தானே
மக்கள் யாவரும் மகிழ்வுடன் நகரையே
மகர தோரணத்தால் அலங்கரித்தாரே
மந்தரை போதனையால் மனம் மாறிக் கைகேயி
மணிமுடி பரதன் சூடி நாட்டை ஆளவும்
வனத்தில் ராமன் பதினான்காண்டுகள்
வாழவும் மன்னனிடம் வரமதைக் கேட்டாள்
அந்த சொல்லைக் கேட்ட மன்னர்
மரண மூர்ச்சை அடைந்த பின்னர்
ராமனையும் அழைக்கச் செய்தாள்
தந்தை உனை வனம் போகச் சொல்லி
தம்பி பரதனுக்கு மகுடத்தைத் தந்தார் என்றாள்
சஞ்சலமில்லாமல் அஞ்சன வண்ணனும்
சம்மதம் தாயே என வணங்கிச் சென்றான்
விஞ்சிய கோபத்தால் வெகுண்டே வில்லெடுத்த
தம்பி இலக்குவனை சாந்தமாக்கினான்
இளையவனும் ஜானகியும் நிழல் போல் தொடரவே
மரவுரி தரித்து ராமன் செல்வது கண்டு
கலங்கி நாட்டு மக்கள் கண்ணீர் சிந்தியே
உடனென போவதென தடுத்தனர் சென்று
ஆறுதல் கூறியே கார்முகில் வண்ணன்
அன்புடன் அவர்களிடம் விடையும் கொண்டானே
அன்னையும் தந்தையும் சொன்ன சொல் காக்கவே
அண்ணலும் கானகத்தை நாடிச் சென்றானே (ஜகம்)
கங்கைக் கரை அதிபன் பண்பில் உயர்ந்த குகன்
அன்பால் ராமபிரான் நண்பனாகினான்
பஞ்சவடி செல்லும் பாதையைக் காட்டினான்
அஞ்சனவண்ணன் அங்கு சென்று தங்கினான்
ராவணனின் தங்கை கொடியவள் சூர்ப்பனகை
ராமபிரான் மீது மையல் கொண்டாள்
கோபம் கொண்ட இளையோன் கூரம்பால் அவளை
மானபங்கம் செய்து விரட்டி விட்டான்
தங்கையின் போதையால் தசகண்ட ராவணன்
ஜானகி தேவியை சிறையெடுத்தான்
நெஞ்சம் கனலாகி கண்கள் குளமாகி
தம்பியுடன் தேவியைத் தேடிச்சென்றான்
ராமன் தேடிச் சென்றான்
வழியிலே ஜாடாயுவால் விவரமெல்லாம் அறிந்தான்
வாயு மைந்தன் அனுமானின் நட்பைக் கொண்டான்
ஆழியைத் தாண்டியே இலங்கை சென்ற அனுமான்
அன்னையை அசோகவனத்தில் கண்டான்
ராமசாமியின் தூதன் நானடா ராவணா என்றான் அனுமான்
லங்காபுரியைத் தீக்கிரையாக்கி கிஷ்கிந்தை சென்றான்
கண்டேன் அன்னையை என்றே ராமனை சேவித்தே நின்றான்
கடலைக் கடந்து ஐயன் வானர சேனையுடன் சென்றான்
விபீஷணனின் நட்பைக் கொண்டான் ராவணனை வென்றான்
வீரமாதா ஜானகி தேவியைத் தீக்குளிக்கச் செய்தான்
கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று அயோத்தி நகர் மீண்டான்
கலங்கிய மக்கள் களிப்புற ராமன் அரசுரிமை கொண்டான்
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே
ஸ்ரீ ராகவம் தசரதாத்மஜம் அப்ரமேயம்
சீதாபதிம் ரகு குலான்வய ரத்னதீபம்
ஆஜானுபாகும் அரவிந்த தளாயதாக்ஷம்
ராமம் நிசாசர விநாசகரம் நமாமி
அருமையான பணி,தொடருங்கள்
ReplyDeleteJai sri ram. Vazthukal. Ramram
ReplyDelete