05_31. தேவேந்த்ரனின் ஸ்துதியைக் கேட்டு, அர்த்தத்துடன் அமர்க்களமாகச் சிரித்தான் கண்ணன். ஒவ்வொரு முறையும் சண்டை செய்வதும், பிறகு தோற்றதும் துதிப்பதும் இந்த்ரனிடம் முதல் அனுபவமல்லவே. "தேவராஜரே! நீங்களோ தேவன். நானோ சாதாரண மனிதன். என் தவறை
தேவர்களான தாங்கள் தான் மன்னிக்க வேண்டும். என்னைப் பொறுத்தருளுங்கள். இந்த மரம் எனக்கு வேண்டாம். ஸத்யபாமா கேட்டதால் தான் நான் இதைப் பறித்தேன். இதையும், என் மீது நீங்கள் ஏவிய, சத்ருக்களை அழிக்கும் உங்கள் வஜ்ரத்தையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" என்று ஏளனமாகக் கூறினான் கண்ணன். மிகுந்த வெட்கம் கொண்ட இந்த்ரன், "க்ருஷ்ணா! என்னை மேலும் மயக்காதே. ஏன் இப்படிச் செய்கிறாய். உன்னை நானறிவேன். ஆனால் இப்போதுள்ள உன் நிலையில் தான். உன்னுடைய ஸூக்ஷ்ம ரூபத்தையல்ல. இந்த மரத்தை நீயே த்வாரகைக்
கொண்டு செல். நீ பூலோகத்தில் இருக்கும் வரை இதுவும் அங்கு இருக்கும். நீயே உலகைப் படைத்துக் காப்பவன். துஷ்டர்களை சிக்ஷிப்பவனும் நீயே. தேவராஜனும் நீயே. நானல்ல. நீயே ஜகன்னாதன். விஷ்ணுவும் நீயே. பஞ்சாயுதன் கொண்ட பரமனும் நீயே. என் அபராதத்தைப்
பொறுத்தருள்" என்று வேண்டிப் பணிந்தான்.
க்ருஷ்ணனும் அதையேற்று பாரிஜாத வ்ருக்ஷத்துடன் அனைவரும் புகழ கருடனுடன் த்வாரகை திரும்பினான். த்வாரகைக்கு மேலே வந்ததும் தன் சங்கத்தை முழக்கி, மக்களைத் தன் வரவால் மகிழச் செய்தான். பாரிஜாத மரத்தை ஸத்யபாமையின் தோட்டத்தில் நட்டான். மூன்று யோஜனை தூரம் மணம் பரப்பும் அதன் அழகில் மயங்கி எவரும் அதனருகில் சென்று ரஸிக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் அதன் சக்தியால் முற்பிறவியும் ஞாபகத்திற்கு வருகிறது. சரீரம் தேவசரீரம் போல் பொலிவு பெறுகிறது. இப்படி கொண்டாட்டத்திலிருக்கும் த்வாரகையில், க்ருஷ்ணன் தான்
ப்ராக்ஜ்யோதிஷத்திலிருந்து வெற்றி கொண்ட யானை, குதிரை என செல்வங்களைத் தன் பந்துக்களோடுப் பங்கிட்டுக் கொள்கிறான். நரகாஸுரனின் சிறையில் இருந்து விடுவித்த பதினாறாயிரம் பெண்களையும் அவர்கள் விரும்பியபடியே ஒரு சுப வேளையில் தானே விதிப்படி விவாஹம் செய்து கொண்டான் க்ருஷ்ணன். திருமண முஹூர்த்தத்தின் போதும், அதன் பின்னும் ஒவ்வொருவருடனும் அவரவர் மனம் விரும்பியபடி உருவங்களை ஏற்படுத்திக் கொண்டு, அவர்கள் மாளிகைகளில் மகிழ்வித்துக் கொண்டிருந்தான்.
Monday, October 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment