05_30. வருணனின் குடை, மணி பர்வதம், ருக்மிணி, ஹ்ருஷிகேசன் இவர்களை ஏற்றிக் கொண்டு அனாயாஸமாக இந்த்ர ஸபையை நோக்கிப் பறந்தான் கருடன். வாசலையடைந்ததும் ஹரி தன் சங்கத்தை எடுத்து ஊதினான். இதைக் கேட்டதும் தேவர்கள் ஸமர்ப்பணங்களுடன் க்ருஷ்ணனை வரவேற்பதற்கு வந்தனர். அவர்களின் மரியாதைகளை ஏற்றுக் கொண்ட க்ருஷ்ணன், தேவமாதாவான அதிதியின் மாளிகைக்குச் சென்றான். வெண் மேகங்களை ஒத்திருந்த ஒரு மாளிகையில் வஸித்து வந்த அதிதியை இந்த்ரனுடன் சேர்ந்து நமஸ்கரித்து, அவள் குண்டலங்களையும் ஒப்படைத்து, நரகாஸுரன் வதம் செய்யப்பட்டதையும் கூறினான். பெரிதும் மகிழ்ந்த தேவமாதா ஜகத்கர்த்தாவான ஹரியைத் துதிக்கலானாள்.
"தாமரைக் கண்ணா! உன்னைத் துதிப்போர்க்கு ஒரு பயமும் இல்லை. சாச்வதமானவன், லோகரூபமானவன், ஆத்மா, அனைத்திற்கும் ஆதாரம், முக்குணமும், அதற்கு அப்பாற்பட்டவனும், தூய்மையானவன், வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவன், அனைவரின் இதயத்தும் நிறைந்தவன், நிறம், வளர்ச்சி முதலிய மாறுபாடுகளில்லாதவன், பிறப்பு, இறப்பு, உறக்கம், விழிப்பு இவைகளால் பாதிப்பில்லாதவன் நீ. பகலும், இரவும், மாலையும், பூமியும், வானும், காற்றும், நீரும், நெருப்பும், மனமும், புத்தியும், குணங்களும், ப்ரஹ்ம, விஷ்ணு, சிவ, தேவ, யக்ஷ, தைத்ய, ராக்ஷஸ, சித்த, கூஷ்மாண்ட, பிசாச, கந்தர்வ, நர, ஸ்தாவர, புல், புதர், ஊர்வன, தாவுவன, பெரிது, மத்யமானது, சிறிது, உயர்ந்தது, தாழ்ந்தது என அனைத்தும் நீ.
உன் மாயையில் மோஹித்தே பலரும் உண்மையறியாமல் ஆத்மா அல்லாததை ஆத்மா என்றும், நான், எனது என்றும் கூறி வருகிறார்கள். இந்த மாயையே ஸம்ஸாரத்தை வளர்க்கும் தாய். ஸ்வதர்மங்களை அனுஷ்டித்து, உன்னைத் துதித்து வருபவர்கள் இந்த மாயைகளைக் கடந்து மோக்ஷத்தை அடைகிறார்கள். ப்ரஹ்மா முதல் அனைத்து தேவ, மனுஷயர்களும் உன் மாயையாகிற இந்த இருட்டினால் சூழப்பட்டவர்களே. மோக்ஷத்தைத் தரும் உன்னைத் துதிப்பவர்களும் தங்கள் ஆசை, பாதுகாப்பு இவைகளையே உன்னிடமும் யாஸிக்கிறார்கள். சாச்வதமானதை விடுத்து தங்கள் வம்சங்களின் வளர்ச்சி, எதிரிகளின் நாசம் இவைகளையே இவர்கள் உன்னிடம் வேண்டுவது உன்னுடைய விளையாட்டே.
எதையும் அருளும் கற்பக வ்ருக்ஷத்திடம் போய், தன் அரையை மறைக்க ஒரு துணி வேண்டுவது போல இவர்கள் இப்படி வேண்டுவது தங்கள் பாபங்களால் தானே. இப்படி அக்ஞானத்தாலுண்டாகும் மாயைகளான பாபங்களிலிருந்தும் நீயே காக்க வேண்டும். நானும் அப்படியே. ஹே சங்கு, சக்ரதாரி! சார்ங்கபாணி! கதாயுதத்தைத் தரிப்பவனே! உன் ஸ்வரூபத்தை நானும் அறியேன். என் மீது கருணை கொள். காத்தருள்" என்று துதித்தாள் அதிதி. இப்படித் துதிக்கப்பெற்ற விஷ்ணு தேவமாதாவிடம் "என்னை ஆசித்து அருளுங்கள்" என்று புன்னகையுடன் வேண்டினான். அதிதியும் "அப்படியே ஆகட்டும். தேவர்கள், அஸுரர்கள் என்று எவராலும் வெல்லமுடியாத புருஷோத்தமனாயிருப்பாய்" என்று க்ருஷ்ணனை ஆசிர்வதித்தாள்.
அதன் பின் இந்த்ராணியுடன் தன்னை வணங்கிய ஸத்யபாமையை "நிலையான அழகும், யௌவனத்தோடும் இருப்பாய்" என்று ஆசிர்வதித்தாள். தாயின் அனுமதியோடு இந்த்ரன் இந்த்ராணியோடு கூடி ஜனார்த்தனருக்கும், ஸத்யபாமைக்கும் வேண்டிய உபஸரிப்புகளைச் செய்து, அவர்களை தேவலோகத்து நந்தவனங்களுக்கு அழைத்துச் சென்றான். அங்கே கேசவர் பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து கிடைத்த, இந்த்ராணிக்கு மிகவும் ப்ரியமான பாரிஜாத மரத்தைக் கண்டார். அங்கிருந்த வேலைக்காரர்கள் பாரிஜாத மலர்களைக் கொண்டு வந்து சசீயினிடம் தந்தனர். மனிதப் பிறவியைச் சேர்ந்தவள் என்பதால் ஸத்யபாமைக்கு அந்தப் பூக்களைக் கொஞ்சமும் தராமல் தானே சூட்டிக் கொண்டாள் இந்த்ராணி. தங்க மயமான மரப்பட்டைகளோடும், தாம்ரத்தையொத்த இளந்தளிர்களோடும், மணம் மிக்க பழங்கள் பூத்துக் குலுங்கும் இந்த பாரிஜாத மரத்தைக் கண்ட ஸத்யபாமா ஆசையோடு கண்ணனிடம், "நாதா! ருக்மிணி, ஜாம்பவதி இவர்களை விட நான் தான் உங்களுக்கு எப்போதும் மிகவும் ப்ரியமானவள் என்று அடிக்கடி கூறுவீர்களே, நினைவிருக்கிறதா? அந்த வார்த்தைகளை முகஸ்துதிக்காக அப்போதெல்லாம் கூறினீர்களா, இல்லை உண்மையா?" என்று ஆரம்பித்தாள். க்ருஷ்ணன், "ப்ரியே! நான் ஒரு போதும் பொய் கூறுவதில்லை. அதுவும் உன்னிடம், உன்னைப் பற்றி ஏன் பொய் கூறுவேன்" என்றார்.
இதைக் கேட்டு மிகவும் சந்தோஷமடைந்த ஸத்யபாமா, "அப்படியானால், இந்த மரத்தை எடுத்துச் சென்று த்வாரகையில் என் வீட்டுத் தோட்டத்தில் நட வேண்டும். இதன் பூக்களை என் சக்களத்திகளின் மத்தியில், அவர்கள் ஏங்க, நான் என் தலையில் அழகாக சூட்டிக் கொள்ள வேண்டும். இதை நீங்கள் செய்ய வேண்டும்" என்றாள். அவ்வளவுதான், உடனேயே க்ருஷ்ணன் அந்த பாரிஜாத மரத்தைப் பிடுங்கி, கருடனின் சிறகுகளின் மத்தியில் வைத்துக் கொண்டு அங்கிருந்துப் புறப்பட்டு விட்டார். இதைக் கண்ட தோட்டத்துக் காவலர்கள், "ஏ கோவிந்தா! இது உன்னால் முடியாதது. இந்த மரம் அம்ருதம் கடைந்த போது பாற்கடலில் கிடைத்தது. தேவராஜனுக்கென்று கொடுக்கப்பட்ட இதை, அவர் தன் மனைவிக்கு மலர்களைக் கொண்டு அழகு படுத்திக் கொள்வதற்காகக் கொடுத்து விட்டார். சசிதேவிக்கு மிகவும் பிடித்த இதை நீ எடுத்துக் கொண்டு வீடு செல்ல முடியாது. மனைவியின் மனம் கோணாமல் நடந்து வரும் தேவராஜர், கையில் வஜ்ரத்தோடும், தேவர்களோடும் உன்னிடம் போர் புரிய வந்து விடுவார். கேடு விளைவிக்கும் செயலை புத்திசாலிகள் செய்ய மாட்டார்கள். இந்த மரத்தை இங்கேயே விட்டு விட்டுச் செல்" என்று அவமதித்துத் தடுத்தனர். இவர்களுக்குக் கண்ணன் பதில் கூறுவதற்குள்ளாகவே, ஸத்யபாமா "யாரிந்த இந்த்ரனும், சசியும். இது கடலைக் கடைந்த போது கிடைத்தது தானே. அம்ருதம், காமதேனு, சந்த்ரன் எனக் கடலில் கிடைத்த எல்லா பொருளும், பொதுவாயிருக்கையில், இதை மட்டும் அந்த சசிதேவி எடுத்துச் செல்வதைத் தடுத்தால், அது அவள் கணவனின் பலத்தில் கொண்ட கர்வத்தினால் தான் இருக்க வேண்டும். இப்போது அவளை விட கர்வம் கொண்டுள்ள நான் சொல்வதை உங்கள் ராணியிடம் சென்று சொல்லுங்கள். என்று பின் வருமாறு கூறினாள்.
"சசி தேவியே! என் நாதன் இப்போது உன் தோட்டத்திலிருந்து பாரிஜாத மரத்தை அபகரித்துச் செல்கிறார். நீ உன் பர்த்தாவுக்கு வேண்டியவளாயிருந்து, அவனும் உனக்கடங்கி இருப்பவனாயிருந்தால் இதைத் தடுத்து, மரத்தைக் காத்துக் கொள். உன்னையும், உன் கணவனையும், அவன் தேவர்களை ஆளும் திறனையும் அறிவேன். நான் சாதாரண மனுஷ்ய ஸ்த்ரீ என்று தானே, எனக்கு இந்தப் பாரிஜாதத்தின் பூக்களைத் தராமல் அவமதித்தாய். இப்போது அதே மனுஷ்ய ஸ்த்ரீ, தன் பர்த்தாவைக் கொண்டு இந்தப் பாரிஜாத மரத்தைக் கொண்டு செல்கிறாள். முடிந்தால் உன் கணவனை வந்து தன் பராக்ரமத்தைக் காட்டச் சொல்" என்று அலக்ஷ்யமாகக் கூறினாள். இதை அந்தக் காவலர்களும், சசியிடம் சொல்ல, அவள் இந்த்ரனை மரத்தை மீட்டு வருமாறு உற்சாகப்படுத்த, அவனும் சேனையுடன் புறப்பட்டு விட்டான் கண்ணனிடம் போரிட.. மூண்டது போர். எல்லா தேவர்களும் க்ருஷ்ணன் மீது அஸ்த்ரங்களை ப்ரயோகிக்கத் தொடங்கி விட்டனர். வருணனின் பாசங்களை கருடன் மூக்கால் துண்டிக்க, யமனின் கால தண்டத்தை கண்ணன் ஒடித்து, குபேரனின் பல்லக்கைப் பொடித்து, ஏகாதச ருத்ரர்களின் சூலங்களைத் தன் சக்ரத்தால் நாசமாக்கி, தேவர்களனைவரையும் இவ்வாறே கருடனும், க்ருஷ்ணனும் தோற்கடிக்கின்றனர். தானுட்பட அனைவரின் முயற்சியும் தோல்வியுறவே, இந்த்ரன் வேறு வழியின்றி வஜ்ராயுதத்தை ஏவி விடுகிறான். க்ருஷ்ணன் அதை விளையாட்டாகத் தன் கையில் பற்றிக் கொண்டு, சக்ரத்தை எடுத்துக் கொண்டு தேவேந்த்ரனைத் துரத்தலானான். கருடனும் ஐராவதத்தை அடித்து அயரச் செய்தான்.
அப்போது ஸத்யபாமையும், "ஏ இந்த்ரா! ஓடாதே, நில். இந்த மரத்தை எடுத்துக் கொள். கணவனின் பலத்தில் கர்வம் கொள்வது பெண்களின் இயற்கை. இதில் நானும், உன் மனைவியும் விலக்கல்ல. வீடு தேடி வந்த என்னை உன் மனைவி கௌரவப் படுத்தவில்லை. ஆனால் தன் அழகில் கர்வம் கொண்டு, என்னை மனுஷ்ய ஸ்த்ரீ என அவமதித்தாள். உன் மனைவிக்குப் பாடம் புகட்டவே நான் இவ்வாறு செய்தேன். இந்த மரத்தில் தானே உன் பெருமை இருக்கிறது. இப்போது மனுஷ்ய ஸ்த்ரீ தருகிறேன். மீண்டும் இதன் பூக்களை உன் மனைவியை சூடச் சொல். எனக்குப் பிறர் பொருளான இந்த மரத்தாலும், இதன் பூக்களாலும் ஆக வேண்டியதொன்றுமில்லை. என் பர்த்தாவின் பெருமையைக் காட்டவே, அவரைப் போருக்குத் தூண்டினேன். இதை இப்போது நீயே எடுத்துச் செல்" என்று கூறினாள். வஜ்ரத்தையிழந்து தோல்வியுற்றிருக்கும் போது, இவ்வாறு ஸத்யபாமா கூறிய கடுஞ்சொற்களைக் கேட்டு மனம் நொந்த இந்த்ரன், "கொடியவளே! இது எனக்குத் தோல்வியல்ல. அவமானமுமல்ல. உங்களின் நண்பனான என்னை அவமதித்தது போதும். ஜகத்காரணனிடமல்லவா நான் தோற்றிருக்கிறேன். மஹான்களாலும் அறிய முடியாதவனிவன். ஸூக்ஷ்மமானவன். உற்பத்தியில்லாதவன். கர்ம சம்பந்தமற்றவன். சாச்வதமானவன். இவனை யார்தான் ஜயிக்க முடியும்" என்று துதிக்கலானான்.
Monday, October 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment