Tuesday, October 19, 2010

விஷ்ணு புராணம் - 114

05_34. இந்தக் கதையைக் கேட்ட மைத்ரேயர் ஆச்சர்யமுற்று இது போல் தேவர்களை வென்ற வேறு கதைகள் இருந்தால் அவற்றையும் கூறும்படி வேண்டிக் கொள்ள, பராசரர் காசி தஹனத்தைக் கூறலானார். பௌண்ட்ரக தேசத்தை கர்வம் கொண்ட ஓரரசன் ஆண்டு கொண்டிருந்தான். கல்லாதோர் பேச்சையும், புகழுரைகளையும் கேட்டு அவன் தன்னை வாஸுதேவனாகவே நினைத்துக் கொண்டிருந்தான். அப்படியே தன்னை எவரும் அழைக்கவும், நடந்து கொள்ளவும் வேண்டுமென்று எவருக்கும் உத்தரவுமிட்டான். போலியாக சங்கு, சக்ரம் முதலிய ன்னங்களையும், இரு பொம்மைக் கைகளையும், மார்பில் மறுவையும் வைத்துக் கொண்டு உண்மையான க்ருஷ்ணனோடு பொறாமையும், பகைமையும் பாராட்டத் தொடங்கிவிட்டான். தினமும் புதிதாக புனைந்த வனமாலையையும் அணிந்து கொண்டு அனைவரிடம் க்ருஷ்ணனின் லீலைகளைத் தானே செய்ததாக ப்ரசாரம் செய்து கொண்டிருந்தான். தன் மந்த்ரிகளுக்கும் தேவர்களின் பெயர்களைச் சூட்டி போலி கருட வாஹனத்தையும், ஆதிஸேஷனையும் உண்டாக்கி உபயோஹித்துக் கொண்டிருந்தான்.இவன் ஒரு ஸமயம் தன் சின்னங்களையும், பெயரையும் வேறு எவரும் தரிக்கக் கூடாதென்று உண்மையான வாஸுதேவனுக்கே தூது விடுத்தான். அவனிடம் க்ருஷ்ணன் 'நானே அங்கு வந்து சக்ரத்தை அரசரிடம் செலுத்தி விட்டு, சரணமடைகிறேன். பயமில்லாத நிலையை ஏற்படுத்துகிறேன்" என்று சிரித்துக் கொண்டே பல பொருள் பட கூறி அனுப்பிவிட்டு, அவ்வாறே கருடன் மீதேறி பௌண்ட்ரகமும் வந்து சேர்ந்தான். இதையறிந்த பௌண்ட்ரக வாஸுதேவனின் நண்பனான காசி தேசத்தரசன் தானும் தன் படைகளோடு வந்து போரில் சேர்ந்து கொள்கிறான். பௌண்ட்ரக வாஸுதேவனின் தேர்க் கொடி, தேர், க்ரீடம், குண்டலம் முதலான ஆபரணங்கள், நான்கு கைகள், ஆயுதங்கள், மறு என அனைத்தையும் கண்ட கண்ணன் தன்னையும் ஒப்பிட்டுப் பார்த்து சிரித்துக் கொள்கிறான். சிறிது நேரத்திலேயே பௌண்ட்ரகனையும், காசிராஜனையும் சேனையோடு அழித்து, பௌண்ட்ரகனை நோக்கி "உன் தூதனிடம் நீ சொல்லியனுப்பியபடியே இப்போது என் சின்னங்களான கதை, கருடன், சக்ரம் இவைகளை உன்னிடம் விடுகிறேன்" என்று கூறி அவைகளை ஏவினான். சக்ரம் அவனைப் பிளக்க, கதை அவனை கீழே தள்ள, கருடன் அவன் கொடியை வீழ்த்த பௌண்ட்ரகன் உயிரிழந்தான். அதன் பின் காசி ராஜனின் படைகளையும் நாசமாக்கி, அவன் தலையையும் அறுத்து அதனை காசியில் போய் விழுமாறு செய்து விட்டு, மக்கள் வியப்பும், மகிழ்வும் கொண்டாட த்வாரகை திரும்பினான் கோபாலன். அங்கே காசியில் திடீரென விழுந்த தலையைக் கண்ட மக்கள், அது தங்கள் மன்னன் தலையென அறிந்து அதிர்ச்சியுற்றனர். காசிராஜனின் மகன் உடனே கோபம் கொண்டு தன் புரோஹிதர் ஆலோசனையின் படி, ஜப, ஹோம, யாகாதிகளால் விச்வநாதரை வழிபட்டான். அவற்றால் மகிழ்வுற்று அவன் முன் தோன்றிய சிவபெருமானிடம் க்ருஷ்ணனைக் கொல்ல ஒரு பூதத்தை உண்டாக்கித் தருமாறு வரம் வேண்ட, சிவனும் தக்ஷிணாக்னியிலிருந்து அப்படி ஒரு பூதத்தை உண்டாக்கி அருள்கிறார். (இவன் வரம் வேண்டும் இந்த ச்லோகத்திற்கு "என் அப்பாவைக் கொன்ற க்ருஷ்ணன் என்னைக் கொல்வதற்கு பூதம் உண்டாகட்டும்" என்றும் ஒரு மாற்றுப் பொருள் உண்டு என்று என் தாத்தா கூறுவார், நிர்தேவத்வம் என்று கேட்பதற்கு பதில் நித்ராவத்வம் என்று வாய் குழறி கும்பகர்ணன் கேட்டதைப் போலுள்ளது இது).க்ருஷ்ணனை நோக்கி த்வாரகைக்கு இந்த நெருப்பு பூதம் சென்ற போது, கண்ணன் தன் தேவியர்களுடன் கோழிச் சண்டை, சொக்கட்டான் என்று விளையாடிக் கொண்டிருந்தான். இந்த பூதத்தைக் கண்டஞ்சிய த்வாரகாவாஸிகள், க்ருஷ்ணனை சரணடைந்தனர். அவன் விளையாடல்களை நிறுத்தாமலேயே அந்த பூதத்தைக் கொல்ல தன் சக்ரத்தை ஏவினான். அதனிடம் தோற்றோடிய அந்த பூதத்தைத் துரத்திச் சென்றது சக்ரமும். காசியில் அதனைக் காக்க வந்த சிவ சைன்யத்தையும், அரசனின் சைன்யத்தையும், யானை, குதிரை, கஜானா, வீடுகள், மதில்கள் என காசி நகரத்தையே சக்ரம் பொசுக்கி விட்டு, அந்த உக்ரத்தோடேயே மீண்டும் கண்ணன் கைகளை வந்தடைந்தது.

1 comment:

  1. Have you not posted further to vishnu puranam 114? You have done a great service to the society. I located this blog just yesterday only and found all your postings of very easy flow and valuable. Now I am greatly disappointed with sudden end with the posting of 5th Amsa.
    Pl. send me your response to me at vasans2008@gmail.com or vasans2004@yahoo.com.
    With regards,
    S.Srinivasan

    ReplyDelete