Tuesday, October 19, 2010

விஷ்ணு புராணம் - 113

05_33. பாணாஸுரன், ஆயிரம் கைகள் கொண்டவன். அவன் ஒரு ஸமயம் சிவபெருமானை வணங்கி "இத்தனை கைகளும் பயன் படுமாறு ஏதாவது யுத்தம் கிடைக்குமா? இல்லையேல் இந்தக் கைகள் வீணாகுமே" என்று வருந்தி கேட்டுக் கொண்டான். சிவபெருமானும் புன்சிரிப்புடன் "உன் மயிற்கொடி எப்போது முறிந்து விழுகிறதோ அப்போது அப்படி ஒரு வாய்ப்பு உனக்கு உண்டாகும்" என்று கூறினார். இதைக் கேட்டு அஸுரனும் மகிழ்வுற்று, அந்த நாளை எதிர்பார்த்திருந்தான். ஒரு நாள் அப்படி அந்த கொடியும் முறிந்து விழுந்தது. அந்த ஸமயத்தில் தான் சித்ரலேகையும் அனிருத்தனை தன் மாயையினால் மயக்கி த்வாரகையிலிருந்து உஷையின் கன்னிமாடத்தில் சேர்த்திருந்தாள். அனிருத்தனும் உஷையும் கூடிக் களித்திருந்தான். சில நாளில் இது காவலாளிகளுக்குத் தெரிந்து, அவர்களால் செய்தியறிந்த பாணாஸுரன் கிங்கரர் எனும் அஸுரக் கூட்டத்தாரை அனுப்பி அனிருத்தனைக் கொல்லக் கட்டளையிட்டான். ஆனால் அனிருத்தனை அவர்களனைவரையும் தடியாலேயே அடித்துக் கொன்றான். பாணாஸுரன் வந்தும் அனிருத்தனை வெல்ல முடியவில்லை. இறுதியில் தன் மந்திரியின் ஆலோசனையுடன் மாயப்போர் செய்தான் பாணாஸுரன். நாகாஸ்த்ரத்தால் அனிருத்தனை கன்னிமாடத்திலேயே கட்டிப் போட்டான்.

இந்த ஸமயம் த்வாரகையில் அனிருத்தனைக் காணாது தவித்த யாதவர்கள், பாரிஜாத மரத்தின் அபஹரிப்பு காரணமாக தேவர்கள் தான் அனிருத்தனை கொண்டு சென்றிருக்க வேண்டும் என்று தீர்மானித்தனர். நாரதர் அங்கு தோன்றி நடந்தவையனைத்தையும் அவர்களுக்குக் கூறினார். அதைக் கேட்ட க்ருஷ்ணன் கருடன் மீதேறி பாணாஸுரனின் சோணிதபுரம் நோக்கிப் பறந்தார். பலராமனும், ப்ரத்யும்னனும் அவனைப் பின் தொடர்ந்தனர். சோணிதபுரத்தை பரமேச்வரன் பக்தனுக்காக தன் ப்ரதம கணங்களைக் கொண்டு காவல் புரிந்து கொண்டிருந்தார். அவைகளை வென்று நகருக்குள் சென்ற க்ருஷ்ணன் சைன்யத்தின் மேல் பரமேச்வரனால் மூன்று கால்களும், தலைகளும் கொண்டதாக ஸ்ருஷ்டிக்கப்பட்டிருந்த ஜ்வர தேவதை சாம்பலையே ஆயுதமாக ப்ரயோகித்தது. அதனால் துன்பப்பட்ட பலராமர் க்ருஷ்ணன் மீது சாய்ந்தார். க்ருஷ்ணன் மீதும் படர்ந்த அந்த தேவதையை, க்ருஷ்ணனால் அதற்கு ப்ரதியாக படைக்கப்பட்ட ஜ்வர தேவதை வென்றது. க்ருஷ்ணன் கோபத்தை ப்ரஹ்மா அங்கு தோன்றி தணித்தார். அடங்கிய ஜ்வரதேவதையும் "இந்த யுத்தத்தை நினைப்பவர்களுக்கு ஜ்வர பீடை அனுகாமல் அனுக்ரஹிக்க வேண்டும்" என்று வரம் வேண்டிச் சென்றது.

மேலும் தொடர்ந்து வந்த கார்ஹபத்ய, ஆஹவனீய, தக்ஷிண, ஸப்ய, ஆவஸத்ய என்ற பஞ்சாக்னிகளையும், சிவ சைன்யங்களையும் க்ருஷ்ணன் வென்றான். இதற்கு மேல் போரில் பாணாஸுரனும், சிவபெருமானும், அவர் மகன் ஸுப்ரஹ்மண்யனும் சேனைகளோடு தோன்றினர். பரமேச்வரனுக்கும், க்ருஷ்ணனுக்கும் நேரிடையாக நடந்த அந்த உக்ரமான ப்ரளயம் போல் தோன்றிய யுத்தத்தை தேவர்களும், மற்றெவரும் அச்சத்துடன் கண்டு கொண்டிருந்தனர். இந்த ஸமயத்தில் தொடர்ந்து கொட்டாவி விடும்படி செய்யும் ஜ்ரும்பகாஸ்த்ரம் என்பதனை பரமேச்வரன் மேல் ஏவி அவரை அயர்ச்சியோடு தேர்த் தட்டில் உட்காரச் செய்து விட்டான் க்ருஷ்ணன். இந்த நிலையைக் கண்டு அஸுரனின் ஸேனை அஞ்சியது. ஸுப்ரமண்யரின் மயிலை, கருடன் அடித்து வீழ்த்தினான். ப்ரத்யும்னன் ஸுப்ரமண்யரை பாணங்களால் ச்ரமப்படுத்தினான். க்ருஷ்ணன் செய்த ஒரு ஹூங்காரத்தால் முருகனின் வேலும் ஒடிந்து விழவே, அவனும் யுத்தத்திலிருந்து விலகினான். சங்கரன் கொட்டாவி விட்டுக் கொண்டு நின்றான்! அஸுர ஸேனைகள் ஓடி ஒளிந்தன! குஹன் தோற்றான்! ப்ரதம கணங்கள் ஒழிந்தன!

இவற்றைக் கண்ட பாணாஸுரன் இறுதியாக நந்தியை ஸாரதியாகக் கொண்டு ஒரு பெரிய தேரில் தானே தலைமையேற்று யுத்தத்தை நடத்தினான். அவனது ஸேனைகள் அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பலராமர் கலப்பையாலும், உலக்கைகளாலும் சிதறி ஓடின. க்ருஷ்ணனுக்கும், பாணனுக்கும் நேருக்கு நேர் யுத்தம் மூண்டது. இருவரது கவசங்களும் பிளக்கப் பட்டன. அஸ்த்ரங்கள் பயனற்றதாக்கப்பட்டன. ஆயுதங்கள் ஒடிக்கப்பட்டன. ஒருவரை ஒருவர் கொல்ல விரும்பி போர் புரியலாயினர். க்ருஷ்ணன் வேறு வழியின்றி அவனைக் கொல்ல முடிவு செய்து சக்ரத்தை எடுத்தான். அப்போது அவனெதிரே கௌரீதேவியின் சக்தியும், அஸுரர்களின் தேவதையுமான கோடரீ என்பவள் நிர்வாணமாகத் தோன்றினாள். பெண்களை ஆடையின்றி பார்க்கக்கூடாது என்ற சாஸ்த்ரத்தையொத்து க்ருஷ்ணனும் வேறு வழியின்றி கண்களை மூடிக் கொண்டான். வித்யாரூபிணியான அவள் நோக்கத்தையும் உணர்ந்து, பாணாஸுரனைக் கொல்லாது, அதிகமாயிருக்கும் அவனது கைகளை மட்டும் வெட்டி விடுமாறு தன் சக்ரத்தை ஏவினான் க்ருஷ்ணன். தோள்களை இழந்து மீதமிருக்கும் நான்கு கைகளுடன் மீண்டும் க்ருஷ்ணனோடு போரிட ஆரம்பித்தான் பாணன்.

இப்போது மீண்டும் அவனைக் கொல்வதற்காக சக்ரத்தை எடுப்பதைக் கண்ட சிவன் தன் பக்தனைக் காப்பதற்காகத் தானே கண்ணனிடம் வந்து "க்ருஷ்ணா! உன்னை மனிதனாக நினைத்து போரிட்டேன். என்னைத் தோற்கடித்து, அவன் கைகளையும் அறுத்த போதே உன்னை ஜகன்னாதனென்று அறிந்து கொண்டேன். உன் இந்த அவதாரமும் திருவிளையாடலேயன்றி, கர்ம பந்தத்தாலன்று. பாணாஸுரனைக் காப்பதாக நான் அபயம் கொடுத்துள்ளேன். எனவே பொறுத்தருள். அவன் அபராதத்தை நான் செய்ததாக நினைத்துக் கொள்" என்று வேண்டுகிறான். க்ருஷ்ணனும் முகம் மலர்ந்து "பார்வதிபதே! உன் வேண்டுகோளாலும், வரத்தாலும் அவன் பிழைத்தான். சக்ரத்தைத் திரும்பப் பெறுகிறேன். நானும், நீயும் வேறன்று. தேவர்கள், அஸுரர்கள், மனிதர்கள் என வேறுபட்டிருக்கும் இந்த உலகும் நானே. என்னை விட வேறு பொருளில்லை. நீ அவனுக்குத் தந்த வரம் நான் தந்ததே. அக்ஞானிகளே என்னையும், இந்த ப்ரபஞ்சத்தையும் வேறாகப் பார்கிறார்கள். சொல்கிறார்கள். அப்படியே உனக்கும், எனக்கும் வேற்றுமை காண்கிறார்கள். உன்னை எனக்கு ஆத்மாவாகவும், சரீரமாகவும் நினைப்பதில்லை. ஆகவே கவலையில்லை. பாணாஸுரனுக்கு அபயம் அளித்தேன்" என்றான்.

இதன் பிறகு அனிருத்தன் இருக்குமிடம் சென்றான் க்ருஷ்ணன். கருடனின் காற்று பட்டதுமே நாகாஸ்த்ரங்கள் தளர்ந்து போயின. அவனையும், உஷையையும் கருடனில் ஏற்றிக் கொண்டு பலராமன், ப்ரத்யும்னன் இவர்களோடு த்வாரகை திரும்பிய க்ருஷ்ணன் புத்ர, பௌத்ரர்களுடன் ஆனந்தித்துக் கொண்டிருந்தான்.

No comments:

Post a Comment