Sunday, February 28, 2010

விஷ்ணு புராணம் - 109

05_29. மூவுலகிற்கும் அதிபதியான தேவேந்த்ரன் ஒரு ஸமயம் அவனது மூர்க்கமான ஐராவதத்தின் மீதேறி சௌரியை சந்திப்பதற்காக த்வாரகை வந்தான். ஹரியால் வரவேற்கப்பட்ட அவன் நரகாஸுரனின் கொடுமைகளைப் பற்றிக் கூறலானான். "மதுஸூதனா! தேவதேவ! நீரே எங்களுக்குத் துயர் நேர்ந்த போதெல்லாம் அவற்றிலிருந்து எங்களைக் காத்தீர். மனிதனாகப் பிறந்தும் அரிஷ்டன், தேணுகன், சாணூரன், முஷ்டிகன், கேசினி, கம்ஸன், குவலயாபீடம், குழந்தைகளைக் கொல்லும் பூதனை இப்படி உலகைத் தங்கள் தீச்செயல்களால் அடக்கியாளும் அனைவரையும் அழித்தீர். உங்கள் பராக்ரமத்தாலும், அறிவாலுமே மூவுலகும் காக்கப்பட்டு, தேவர்களும் யாகப் பங்குகளைப் பெற்று த்ருப்தியோடிருக்கின்றனர். ஆனால் இப்போது மீண்டும் உங்களால் மட்டுமே தீர்க்கக்கூடிய ஒரு விஷயத்தோடு நான் இங்கு வந்திருக்கிறேன்.

பூமாதேவியின் புத்ரன், நரகனென்பவன் எல்லா உயிர்களுக்கும் பெரும் தீங்குகளை உண்டாக்கிக் கொண்டு ப்ராக்ஜ்யோதிஷ நகரத்தை ஆண்டு வருகிறான். தேவலோகத்துக் கன்னிகைகளையும், சாதுக்களையும், அரசர்களையும் அடக்கித் தன் அரண்மனையில் சிறை வைத்திருக்கிறான். எப்போதும் நீரைப் பொழிந்து கொண்டிருக்கும் வருணனின் குடை, மந்தர மலையின் மணி பர்வதமென்னும் சிகரம், என் தாய் அதிதி அணிந்திருந்த அமுத குண்டலங்கள் இப்படி அனைத்தையும் அபஹரித்துச் சென்றுள்ள அவன், இப்போது என் ஐராவதத்திற்கு ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறான். விஷயங்களை உங்களிடம் கூறி விட்டேன். நீங்கள் தான் செய்ய வேண்டியதைத் தீர்மானித்து, இவனிடமிருந்து எங்களைக் காக்க வேண்டும். இதற்கு முன் தோன்றிய ஹிரண்யன், ஹிரண்யாக்ஷன், மதுகைடபன் ஆகியோரை விட, உங்களிடம் தோன்றிய இவன் மிகவும் துஷ்டனாக, கொடியவனாக இருக்கிறான்" என்றான்.

இந்த்ரனின் குறைகளைக் கேட்ட க்ருஷ்ணன் புன்சிரிப்போடு ஸிம்ஹாஸனத்திலிருந்து எழுந்தான். இந்த்ரனைக் கையில் பிடித்துக் கொண்டு, ஸர்ப்பங்களை உணவாய்க் கொள்ளும் கருடனை மனதால் நினைத்தான். உடனே தோன்றினான் அவனும். ஸத்யபாமாவையும் தன் பின்னால் ஏற்றிக் கொண்டு, உடனே பறந்தான் க்ருஷ்ணன் ப்ராக்ஜ்யோதிஷ நகருக்கு. இந்த்ரன் த்வாரகா வாஸிகள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஐராவதத்தின் மீதேறி தன்னகருக்குச் சென்றான். ப்ராக்ஜ்யோதிஷம் நரகாஸுரனுடைய மந்த்ரி முரன் என்பவனால் கத்திகள் செருகப்பட்டிருந்த பாசக் கயிறுகளால் சுற்றிலும் காக்கப்பட்டிருந்தது. அதைத் தன் சக்ராயுதத்தால் அறுத்து விட்டு, தன்னை எதிர்த்து வந்த முரனையும், அவன் பிள்ளைகள் ஏழாயிரம் பேரையும், ஹயக்ரீவன், பஞ்சஜனன் என்பவர்களையும் பூச்சிகளைப் போல் சக்ரத்தாலேயே கொன்று விட்டு வேகமாக நகரத்திற்குள் நுழைந்தான் க்ருஷ்ணன்.

ஆயிரக்கணக்கில் நரகாஸுரனின் படைகளை வேகமாகக் கொன்று கொண்டிருந்த க்ருஷ்ணனை எதிர்த்து வந்த நரகாஸுரன் பல விதமான பாணங்களால் அடித்தான். அஸுரர்களைப் பூண்டோடு அழிக்கும் சக்ரதாரி அவனை இரு துண்டுகளாக அறுத்தெறிந்தார். நரகாஸுரன் மாய்ந்து வீழ்ந்ததும், பூமாதேவி(இப்போது ஸத்யபாமா) அவனிடமிருந்த அதிதியின் குண்டலங்களை எடுத்துக் கொண்டு லோகநாதனிடம் வந்தாள். "ப்ரபோ! தாங்கள் வராஹ மூர்த்தியாய் அவதரித்த போது, உங்கள் ஸம்பந்தத்தால் இவனை என்னிடம் உண்டாக்கினீர். நீங்களே அவனை அனுக்ரஹித்து, இப்போது மீண்டும் நீங்களே அவனை கொல்லவும் செய்தீர். இதோ இந்த குண்டலங்களை எடுத்துக் கொண்டு, அவன் ஸந்ததியை விட்டு விடுங்கள். பரம்பொருளின் அம்சமே, என் பாரத்தைக் குறைப்பதற்காக இந்த பூலோகத்தில் அவதரித்தீர்கள்.

நீங்களே படைத்து, காத்து, அழிப்பவர். உலகிற்கு ஆதாரமும், உலகமும் தாங்களே. என்னால் உங்கள் பெருமைகளைத் துதிக்க முடியுமா. எங்கும் வ்யாபித்திருப்பதும் தாங்களே. செயல், அதைச் செய்பவன், செயலின் பயன் அனைத்தும் நீங்களே. அழியாத ஆத்மாவும் தாங்களே. உன்னை முழுதும் உணர்ந்து துதிக்க என்னால் இயலாது. கருணை கொள்ளுங்கள். நரகனின் குற்றங்களை மன்னித்தருளுங்கள். பல பாவங்கள் செய்திருந்தும் உங்கள் புத்ரனான இவன் உங்களாலேயே அழிக்கப்பட்டதால் பாபமற்றவனானான்" என்று துதித்தாள். வேண்டிக் கொண்டாள். அனைத்துயிர்களுக்கும் ஸாரமான தேவதேவனும் அப்படியே அனுக்ரஹித்து விட்டு, பின்னர் நரகாஸுரனால் அடைத்து வைக்கப்பட்டிருந்தவைகளை விடுவிப்பதற்காக அவன் அரண்மனையில் ப்ரவேஸித்தான்.

நரகாஸுரனின் அந்தப்புரத்தில் பதினாறாயிரத்து நூறு கன்னிகைகளைக் கண்டான். மேலும் நான்கு தந்தங்கள் கொண்ட ஆறாயிரம் உயர்ந்த யானைகளையும், இருபத்தோரு லக்ஷம் காம்போஜத்துக் குதிரைகளையும், இன்னும் மேன்மையான இனங்களையும் கண்டான். இவைகள் அனைத்தையும் நரகாஸுரனின் சேவகர்களைக் கொண்டே த்வாரகைக்கு அனுப்பி வைத்தான் க்ருஷ்ணன். பின் வருணனின் குடை, மணி பர்வதம் இவைகளையும் கைப்பற்றி கருடன் மீதேற்றி, தானும், ஸத்யபாமையோடு ஏறிக் கொண்டு, அதிதியின் குண்டலங்களைத் திரும்பக் கொடுப்பதற்காக தேவலோகம் நோக்கிச் சென்றான்.

No comments:

Post a Comment