Tuesday, December 25, 2012

விஷ்ணு புராணம் - 126

06_08 "நிலையான ப்ரஹ்மத்திடம் ஜீவன் இப்படி லயித்து விடுவது தான் முக்தி எனும் மூன்றாவதான ஆத்யந்திக ப்ரளயமாகும்.  மைத்ரேயரே! இப்படி அனைத்தையும் உமக்கு இதுவரை விளக்கி விட்டேன்.  இந்த விஷ்ணு புராணம் எல்லா பாவங்களையும் போக்கக் கூடியது.  சாஸ்த்ரங்களில் சிறந்தது.  புருஷார்த்தங்களை நன்கு விளக்குவது.  நீங்கள் விரும்பிக் கேட்டதால் நான் உள்ளதை ஒன்று விடாமல் உபதேசித்து விட்டேன்.  இன்னும் ஏதாவது கேட்க வேண்டுமானால் கேளுங்கள்" என்று பராசரர் கூறி முடித்தார்.

மைத்ரேயர் "ஆசார்யரே! நான் கேட்டதனைத்தையும் நன்கு உபதேசித்து விட்டீர்கள்.  நானும் பக்தியுடன் கேட்டேன்.  இனி வேண்டுவது ஒன்றுமில்லை.  என் ஸந்தேஹங்கள் யாவும் இப்போது நீங்கி விட்டன.  மனதும் சுத்தமானது.  உற்பத்தி, ஸ்திதி, லயங்களையும், இதன் காரண பூதர்களான ப்ரஹ்ம, விஷ்ணு ருத்ர சக்திகளையும், பாவனைகளையும் தங்கள் அனுக்ரஹத்தால் நன்கு அறிந்து கொண்டேன்.  நாம் காணும் இந்த ப்ரபஞ்சம் முழுதும் அந்த விஷ்ணுவின் சரீரமே, அதைத் தவிர வேறில்லை என்பதே அறியவேண்டுவது.  அதை அறிந்து கொண்டேன்.  வேறு விஷயங்களால் ஒரு பயனும் இல்லை.

குருவே! தங்கள் அனுக்ரஹத்தாலேயே நான் என் ஸந்தேஹங்களும், விபரீத ஞானமும் அழியப் பெற்றேன்.  பலன் பெற்றவனானேன்.  வர்ணாச்ரம தர்மங்கள், ப்ரவ்ருத்தி, நிவ்ருத்தி கர்மாக்களையும் அறிந்தேன்.  இனி அறிய வேண்டுவது ஒன்றுமில்லை.  என்னாலேயே தங்களுக்கு இவ்வளவு ச்ரமமும் நேர்ந்தது.  இந்த அபராதத்தைப் பொறுத்தருள வேண்டும்.  என்னைத் தங்கள் புத்ரனாகவே கருதி இவ்வளவு தத்வங்களையும் ச்ரமம் பாராமல் உபதேசித்து அருளினீர்கள்" என்று கூறி நமஸ்கரித்தார்.

இதைக் கேட்டு மகிழ்ந்த பராசரர் விஷ்ணு புராணத்தின் பெருமைகளை அவருக்கு மேலும் எடுத்துரைக்கிறார்.  "மைத்ரேயரே!  இப்படி சொல்லி முடித்த இந்த விஷ்ணு புராணம் வேதங்களுக்கு ஸமமானது.  இதைக் கேட்ட மாத்ரத்தில் எல்லா பாவங்களும் அழியும்.  இதில் ஸர்க்கம் முதலாக, தேவாஸுரர்கள், முனிவர்கள், மஹான்கள் வரலாறும், வர்ணாச்ரம தர்மங்களும், புண்ய ப்ரதேசங்களும், நதிகள், கடல்கள், மலைகள், சாஸ்த்ரங்கள் என அனைத்தையும் உங்களுக்கு விரிவாகக் கூறியுள்ளேன்.  இவைகள்  நினைத்த பொழுதிலேயே நம் பாவங்களைப் போக்கி விடும்.  மேலும், ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹார கர்த்தாவான விஷ்ணு இந்த புராணத்தில் பல இடங்களில் சொல்லப்படுகிறான்.  எப்படி பயந்திருக்கும் மானைச் சூழ்ந்திருக்கும் ஓநாய்கள் எல்லாம் அங்கு தற்செயலாய் வந்த ஸிம்ஹத்தைக் கண்டதும் ஓடிவிடுமோ, அப்படியே நம்மைத் துன்புறுத்த வந்திருக்கும் பாதகங்கள் அனைத்தும் தற்செயலாய் அவன் பெயரைச் சொன்னாலே ஓடிவிடும்.

அவன் திருநாமத்தை ஒருவன் பக்தியோடு பாடினாலே அவன் பாவங்கள் அனைத்தும் அழிந்து விடுகின்றன.  நெருப்பு எப்படி தங்கத்தின் அழுக்குகளைப் போக்கி சுத்தீகரிக்கிறதோ அப்படியே அவன் நாம ஸங்கீர்த்தனமும் நம் அழுக்குகளைப் போக்கி நம்மை பரிசுத்தப்படுத்துகிறது.  அவன் பெயரைச் சொல்லக்கூட வேண்டாம்.  ஒரு நொடி நினைப்பே மிகவும் கொடூரமான இந்த கலி தோஷத்தை அழித்து விடும்.  மேரு மலையின் முன் ஒரு அணு எப்படியோ அப்படியே மஹாவிஷ்ணுவுக்கு முன் இந்த ப்ரஹ்மாண்ட ப்ரபஞ்சமும்.

ப்ரஹ்மாதி தேவ ஜாதிகளும், ஸித்தர்களும், அஸுரர்களும், அப்ஸரஸ்ஸுகளும், நக்ஷத்ரங்களும், க்ரஹங்களும், ஸப்தரிஷிகளும், லோகங்களும், லோக பாலர்களும், ப்ராஹ்மணர் முதலான மனுஷ்யர்களும், பசுக்களும், ம்ருகங்களும், பாம்புகளும், பக்ஷிகளும், மரங்களும், காடுகளும், கடல்களும், நதிகளும், இந்த்ரியங்களுக்கான விஷயங்களும், இன்னும் பலவும் நிறைந்திருக்கும் இந்த ப்ரபஞ்சம் அவனுக்கு முன் அணுவேதான்.  இந்த ப்ரஹ்மாண்டத்திற்கு ஆத்மாவும் அவனே.  எல்லாமும், எல்லாம் அறிந்தவனாகவும் இருப்பவனும் அந்த விஷ்ணுவே.  இப்படி எல்லா பாவங்களையும் போக்கும் அவனை இந்த புராணம் பல இடங்களில் கூறுகிறது.

அச்வமேத யாகத்தின் முடிவில் செய்யும் அவப்ருத ஸ்நானமும், ப்ரயாகை முதலான க்ஷேத்ரங்களில் இருக்கும் உபவாஸமும், ஒரு வருஷ அக்னிஹோத்ரமும் கொடுக்கும் பலனை இந்த புராணம் கேட்பதாலேயே கொடுக்கிறது.  ஆனி மாத சுக்ல பக்ஷ ஏகாதசியில் உபவாஸமிருந்து, த்வாதசியில் யமுனையில் நீராடி, மதுராவில் பிறந்தவனை நமஸ்கரிப்பதால் ஒருவனுக்குக் கிடைக்கும் அச்வமேத புண்ய பலன், இந்த புராணத்தின் ஒரு அத்யாயத்தை அவன் திருவடிகளை நினைத்து மனதோடு கேட்டாலே கிடைத்து விடும்.  இந்த த்வாதசியில் நம் குலத்தில் பிறந்த யாராவது யமுனையில் நீராடி நமக்குப் பிண்டம் தரமாட்டார்களா? நாமும் மோக்ஷத்தை அடைய மாட்டோமா? என்று ஏங்கும் பித்ருக்களும் இந்த புராணத்தின் ஒரு அத்யாயத்தை ஒருவன் கேட்டாலே அடைந்து விடுகின்றனர்.

இந்தப் புராணம் ஸம்ஸார பயத்தைப் போக்கக் கூடியது.  கேட்கவேண்டிய விஷயங்களில் சிறந்தது.  புண்யங்களுக்குள் புண்யமானது.  கெட்ட கனவுகளின் பலன்களைப் போக்கக் கூடியது.  எல்லா தோஷங்களையும் நீக்கக் கூடியது.  பிள்ளைப் பேற்றைத் தரக்கூடியது.  இப்படிப் பட்ட இதை முதலில் நாராயண ரிஷி ப்ரஹ்மாவுக்கும், அவர் ருபு என்பவருக்கும் உபதேசித்தார்.  அவரிடமிருந்து ப்ரியவ்ரதருக்கும், பாகுரிக்கும், ஸ்தம்பமித்ரருக்கும், ததீசருக்கும், ஸாரஸ்வதருக்கும், ப்ருகுவிற்கும், புருகுத்ஸருக்கும், நர்மதைக்கும் வழி வழியாக வந்தது.  பின் நர்மதை இதை த்ருதராஷ்ட்ரன், ஆபூரணன் என்ற நாகர்களுக்கு உபதேசிக்க, அவர்கள் அதை நாகராஜனான வாஸுகிக்கும், அவர் வத்ஸருக்கும், அவர் அச்வத்தாமருக்கும், அவர் கம்பளருக்கும், அவர் ஏலாபுத்ரருக்கும் உபதேசிக்க இது பாதாள லோகத்தில் பரவி இருந்தது.

ஒரு ஸமயம் பாதாள லோகம் சென்றிருந்த வேதசிரஸ் என்ற முனிவர் இதை அங்கிருந்து பெற்று வந்து பூலோகத்தில் ப்ரமதிக்குக் கொடுத்தார்.  அவர் அதை ஜாதுகர்ணருக்குத் தந்தார், அவர் அதைப் புண்யம் செய்த பலருக்கும் சொல்லி வைத்தார்.  இப்படி பரம்பரையில் வந்த இந்த புராணம் இப்போது புலஸ்த்யரின் வரத்தினால் என் நினைவுக்கு வர நானும் இதை உனக்கு உபதேசித்தேன்.  நீயும் இதைக் கலியுகத்தின் முடிவில் சினீகர் என்பவருக்கு உபதேசிக்கப் போகிறீர்கள்.

இப்படி கலிதோஷத்தைப் போக்க வல்லதும், பரம ரஹஸ்யமுமான இந்த புராணத்தைப் பக்தியோடு கேட்பவன் ஸர்வ பாபங்களிலிருந்தும் விடுபடுகிறான்.  புண்ய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்த பலனையும், ஸர்வ தேவதைகளையும் துதித்த பயனையும் பெறுகிறான்.  இதில் பத்து அத்யாயங்களைக் கேட்பவன் காராம்பசுவை தானம் செய்த பலனைப் பெறுகிறான்.  இதில் முதல், இடை, முடிவு என எங்கும் விஷ்ணுவே சொல்லப்பட்டிருப்பதால் இதைக் கேட்பதாலும், படிப்பதாலும், சொல்வதாலும் கிடைக்கும் பலன் வேறெதிலும் மூவுலகிலும் கிடையாது.  இதில் மோக்ஷத்தைத் தரும் அவனே பலனாகக் கிடைக்கிறான்.  அவன் ப்ரபாவங்களை நினைத்துப் பார்த்தால், அவனைச் சொல்வதால் பாவம் தொலையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

அந்த மஹாவிஷ்ணுவை நினைப்பவன் நரகம் செல்வதில்லை, அவனுக்கு ஸ்வர்க்கமும் ஒரு தடையே. ப்ரஹ்ம லோக ப்ராப்தியும் அவனுக்கு ஸ்வல்பமே.  அவன் மனதிலிருந்து கொண்டு மஹாவிஷ்ணு அவனுக்கு மோக்ஷத்தையே அளிக்கிறான் என்றால் அவனைப் பாடுவதால் பாவங்கள் தொலைகின்றன என்பதில் ஒரு வியப்புமில்லை.  இவனையே யாகாதி கர்மங்களும் ஸ்துதிக்கின்றன. ஞானிகளும் இவனையே த்யானிக்கின்றனர்.  இவனைத் தவிர நாம் கேட்க வேண்டும் பொருள் வேறொன்றுமில்லை.  இவனே பித்ரு ரூபத்தில் ஸ்வதா எனப்படும் கவ்யத்தையும், தேவ ரூபத்தில் ஸ்வாஹா எனப்படும் ஹவ்யத்தையும் ஏற்கிறான்.  இவன் ப்ரமாணங்களால் அளவிட முடியாதவன்.

அந்த மஹாவிஷ்ணு பிறப்பு, இறப்பற்றவன், எந்த மாறுபாடுகளும், வளர்ச்சியும், தேய்வும் அவனுக்கில்லை.  அவனுக்கு நமஸ்காரம்.  புருஷனும் அவனே, அவன் நியமனத்தாலேயே புருஷன் விஷயங்களை அனுபவித்தும், ஞான ஸ்வரூபியாகவும், பேதமின்றியும், சுத்தனாகவும், சரீர ஸம்பந்தத்தால் அசுத்தனாகவும், கர்மங்களால் மஹதாதி தத்வங்களுக்குக் காரணனாகவும், அழிவற்றவனாகவும் இருக்கிறான்.  அந்த புருஷ ஸ்வரூபனுக்கு நமஸ்காரம்.

அவ்யக்தமான ப்ரக்ருதி ஸத்வாதி குணங்களால் உண்டாகும் கார்யங்களுக்கு லயஸ்தானமாக இருக்கிறது.  அது ஆத்மாக்களின் கர்மங்களுக்கு ஏற்ப பலன்களைத் தரவல்லது.  அதுவே கர்மாக்களுக்குக் காரணமுமாகும்.  நித்யமும் அதுவே.  இப்படி அவ்யக்த ஸ்வரூபமாயிருக்கும் விஷ்ணுவுக்கு நமஸ்காரம்.  பஞ்ச பூதங்களின் வடிவாகவும், கர்மேந்த்ரியங்களாகவும், ஞானேந்த்ரியங்களாகவும், இவைகளுக்கு விஷயங்களாகவும் இருந்து ஆத்மாவுக்கு உதவி செய்கிறதும், ஸூக்ஷ்ம ஸ்வரூபமாகவும் இருக்கும் வ்யக்தனான விஷ்ணுவுக்கு நமஸ்காரம்.

வ்யக்தம், அவ்யக்தம் என இருவகைப்பட்ட ப்ரக்ருதியும், பரமான ஜீவ சரீரங்களும், ஆத்ம ஸ்வரூபமும், பிறப்பு, இறப்பில்லாதவனும், நித்யனுமான விஷ்ணுவுக்கு உடலாய் இருக்கின்றன.  ஞானம் முதலான ஐச்வர்யங்களை உடைய அவன் எல்லா ஆத்மாக்களுக்கும் பிறப்பு, இறப்பில்லாத மோக்ஷ ஸுகத்தை ஆசிர்வதிப்பானாக.

எட்டாம் அத்யாயம் முற்றும்.  ஆறாம் அம்சம் முற்றும்.  விஷ்ணு புராணம் முற்றும்.

25 டிஸம்பர் 2012, செவ்வாய்க் கிழமை, வைகுண்ட ஏகாதசி இன்று.

ஸர்வே ஜனா: ஸுகினோ பவந்து!

எல்லா உயிரும் இன்புற்றிருப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே!

குறைகளைப் பொறுத்து ஆசிர்வதியுங்கள்.

Monday, December 24, 2012

விஷ்ணு புராணம் - 125

06_07 குருதக்ஷிணையாக, கேட்பதையெல்லாம் தருவதாகக் கூறிய தன்னிடம் யோகமார்க்கத்தை மட்டுமே உபதேசிக்குமாறு கேட்ட காண்டிக்ய ஜனகரைக் கண்டு பெரு வியப்புடன் "அரசர்கள் ராஜ்யத்தையல்லவா விரும்புவர்? அதுவும் சண்டை, எதிரிகள் இன்றி எளிதில் கிடைக்கும் ராஜ்யத்தை யாராவது மறுப்பார்களா?  நீர் ஏன் ராஜ்யத்தைக் கேட்கவில்லை?  அதுவும் ராஜ்யபரிபாலனம் நமது தர்மமாயிற்றே? ஸ்வதர்மத்தை விடுவது குற்றமல்லவா?" என்று கேட்கிறார் கேசித்வஜர்.  தான் ஏன் அந்தப் பெரும் ராஜ்யத்தை விரும்பவில்லையென்பதை என்று பின்வருமாறு பதிலுரைக்கிறார் காண்டிக்யர்.

"இந்த அரசை அறிவுள்ளவர்கள் விரும்ப மாட்டார்கள்.  நீர் கூறியது சரியே.  க்ஷத்ரியர்களுக்கு ராஜ்ய பரிபாலனமும், தர்மயுத்தங்களும் ஸ்வதர்மமே.  சக்தியிருந்து என் தர்மத்தை நான் விட்டிருந்தால் அது குற்றமே.  ஆனால் அதற்கு எனக்கு சக்தியும் இல்லை, ஆசையும் இல்லை.  ஆகையால்தான் நீங்களும் அதை பறித்துக் கொண்டீர்கள்.  எனவே இதில் என் குற்றம் எதுவுமில்லை. எனக்கும், என் மந்த்ரிகளுக்கும் இந்த ராஜ்யத்தில் தர்மத்தைக் காரணமாகக் கொண்டு ஆசை வரவில்லை.  எனக்கு வந்த ஆசை முன் ஜென்ம கர்மபலன்களை அனுபவிப்பதற்காக வந்தது.  மந்த்ரிகளுக்குள்ள ஆசை ராகத்வேஷங்களால் வந்தது.  எவருக்குமே தர்ம பரிபாலனம் செய்வதற்காக இந்த ராஜ்யத்தில் ஆசை வரவில்லை.

மேலும் நான் இப்போது ராஜ்யபரிபாலனம் செய்ய வேண்டுமானால் உம்மிடம் இந்த ராஜ்யத்தை யாசிக்க வேண்டும்.  க்ஷத்ரியர்கள் யாசிக்கக் கூடாது என்கிறது சாஸ்த்ரம்.  எனவேதான் நான் இதை விரும்பவில்லை.  மேலும் பகுத்தறிவு இல்லாதவர்களே பெரும்பாலும் இந்த ராஜ்யங்களை விரும்புவர்.  நான், எனது என்று மதிமயங்கி இருப்பார்கள்.  என் போன்ற விவேகிகள் இதை மதிக்க மாட்டார்கள்" என்று கேசித்வஜ ஜனகருக்கு, காண்டிக்ய ஜனகர் கூறினார்.  இதைக் கேட்டு மகிழ்ந்த கேசித்வஜரும் காண்டிக்யருக்கு யோக மார்க்கத்தை பின்வருமாறு உபதேசிக்கிறார்.

ஸம்ஸாரத்தில் உள்ள துன்பங்களுக்குக் காரணங்களைக் கூறி, அவைகளை விலக்குவதற்கான வழிகளையும் கூறுகிறார்.  "யோகம் செய்பவர்கள் முதலில் பரமாத்மா, ஜீவாத்மாவின் ஸ்வரூபங்களை பகுத்தறிய வேண்டும்.  வர்ணாச்ரம தர்மங்களையும் ஒரு அங்கமாகவே செய்து வர வேண்டும்.  காண்டிக்யரே! நானும் அவ்வாறே இந்த ப்ரஜா பரிபாலனம், யாகம் முதலியவைகளைச் செய்து வருகிறேன்.  இதனால் பாவங்கள் அழிந்து, உபாஸனம் நன்கு வளர்கிறது.  ஸுகங்களை அனுபவிப்பதால் புண்யபலனையும் அழித்து வருகிறேன்.  பாவ, புண்யங்கள் இரண்டுமே உபாஸனம் செய்பவனுக்கு விரோதிகளாதலால் இரண்டையுமே அவன் போக்கிக் கொள்ள வேண்டும்.  இப்படிக் கடினமான வழிகளால் தான் நானும் ரஜ, தமோ குணங்களை ஒழித்து, ஸத்வ குணத்தால் அறிவை வளர்த்துக் கொள்கிறேன்.

உங்கள் மனமோ இயற்கையாகவே விவேகத்துடன் விளங்குகிறது.  இப்போது அவித்யையின் ஸ்வரூபத்தைக் கூறுகிறேன், கேளும்.  பலன்களில் பற்று கொண்டு செய்யப்படும் கர்மாக்கள் அவித்யை என்று அறியப்படுகிறது.  இந்த காம்ய கர்மாவாகிய மரத்தை வளர்ப்பதால் ஸம்ஸாரம் என்ற பலன் உண்டாகிறது.  இதற்கு இரண்டு காரணங்கள்.  ஒன்று ஆத்மாவை விட்டு சரீரத்தையே ஆத்மாவாக நினைப்பது.  மற்றொன்று ஆத்ம வளர்ச்சிக்கு உதவாமல், இந்த சரீரத்தை மட்டுமே வளர்க்கும் உணவு, நீர், மனை, மக்கள் முதலானவைகளைத் தனதாக நினைத்துக் கொள்வது. இவ்விரண்டுமே ப்ரமைகள்.

இந்த சரீரம் பஞ்ச பூதங்களாலானது.  ஆத்மாவோ பஞ்சபூதங்களிலிருந்து வேறுபட்டு நிற்பது.  ஆனால், மூடர்கள் அனாத்மாவான இந்த சரீரத்தையே நான் என்றும், சரீர ஸுக, துக்கங்களுக்கு உண்டான உணவு, நீர், மனைவி, மக்கள் இவைகளை என்னுடையவை என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.  இப்படி இந்த ஜீவாத்மா முன் ஜென்ம கர்ம வினைகளால் எல்லா விஷயங்களிலும் இருளில் மூழ்கிக் கிடக்கிறான்.  உண்மையை அறிந்து கொள்ளாமல் இந்த ப்ரமைகளால் சரீர ஸுகத்திற்கான கார்யங்களையே செய்து வருகிறான்.  அவித்யையான இந்த கர்மாக்களால் மறுபடி ஸம்ஸாரமே உண்டாகிறது.

மண்ணாலான வீட்டுச் சுவர்களை மீண்டும் மண்ணைக் கொண்டே பூசி, மெழுகி உறுதி செய்து கொள்வது போலவே, பஞ்ச பூதங்களாலான இந்த உடலையும் உணவு, நீர் இவைகளைக் கொண்டே காத்து வளர்த்துக் கொள்கிறோம்.  பஞ்ச பூத மயமான இவைகளால் உடல் வளர்ந்து உறுதி பெறுமேயல்லாது, ஆத்மாவிற்கு ஒரு ப்ரயோஜனமுமில்லை.  ஆத்ம வளர்ச்சிக்கு உபாஸனமே வழியாகும்.  மேலும், ஆயிரக்கணக்கில் பிறவிகளை உடைய ஸம்ஸார வழியில் வந்த இந்த ஜீவன் அஞ்ஞானம் மற்றும் கர்ம வாஸனைகள் என்ற புழுதியால் துக்கங்களையே பெறுகிறான்.

உடலின் புழுதியையும், ச்ரமங்களையும் வெந்நீர்க் குளியல் எப்படிப் போக்கி ஸுகத்தைத் தருமோ, அப்படியே, வருந்தும் இந்த ஆத்மாவின் அஞ்ஞான, மோஹங்களால் உண்டாகும் துக்கங்களையும் தத்வ ஞானம் போக்கும்.  மோஹம் தொலைந்தால் ஜீவன் தன்னிலையில் இருப்பான்.  பின் ஒப்புயர்வற்ற மோக்ஷ ஸுகத்தையும் அடைகிறான்.  ஜீவன் குற்றமற்ற ஆனந்த ஸ்வரூபமே. மோக்ஷமும், ஞானமும் ஜீவன்களுக்கு இயல்பாகவே உள்ளவை,  கர்ம பலன்களைப் போல் அவை புதிதாக உண்டானவைகளல்ல.

ஆனந்த மயனான இந்த ஆத்மாவுக்கு ஸம்ஸாரத்தில் உண்டாகும் துக்கமும், அஞ்ஞானமும் இயல்பான குணங்காளாகாது.  அவை ப்ரக்ருதியின் ஸம்பந்தத்தால் வந்தவையே.  தண்ணீர் இயற்கையில் குளிர்ச்சியாகவும், பொங்காமலும், சப்தமில்லாமலும் இருக்கிறது.  ஆனால் அது தங்கியிருக்கும் பாத்ரத்திற்கு அக்னி ஸம்பந்தம் ஏற்பட்டால், அது சூடாகிறது, சப்தத்தை உண்டாக்குகிறது, பொங்கவும் செய்கிறது.  தண்ணீருக்கும் அக்னிக்கும் நேரில் ஸம்பந்தமும் கிடையாது,  அது அந்த பாத்ரத்தில் தங்கியிருப்பதால் தான் இந்த மாறுபாடுகளை அடைகிறது.  ஆனந்த ஸ்வரூபமான ஆத்மாவும் இந்த ஜலம் போன்றதே.  ப்ரக்ருதி பாத்ரம் போன்றது.  இந்த ப்ரக்ருதியுடனே தாப த்ரயங்கள் (ஆத்யாத்மிகம், ஆதிபௌதிகம், ஆதிதைவிகம்)  நெருப்பு போல ஸம்பந்தப்படுகின்றன.  இதனாலேயே  ஆத்மாவும் அஞ்ஞானம், துக்கம், பசி, தாகம் முதலான மாறுதல்களை அடைகிறது.  ஆனாலும் ஆத்மா நித்யமானது.

இப்படி அவித்யைக்குக் காரணமான இருவகை ப்ரமைகளும், அதனால் வரும் துன்பங்களும் அழிவதற்கு உபாஸனம் ஒன்றே வழி.  அந்த யோகத்தைப் பற்றிக் கூறுகிறேன், கேளுங்கள்.  யோகத்தில் உள்ளவன் இந்த ஸம்ஸாரத்தை அடைவதில்லை.  இந்த மோக்ஷத்தை அடைவதற்கு முக்ய காரணம் மனம்.  இந்த மனம் வேறு விஷயங்களைப் பற்றியிருக்கும் போது அது ஸம்ஸாரத்திற்குக் காரணமாகிறது.  அவைகளில் பற்றாமலிருந்தால் அதுவே மோக்ஷத்திற்குக் காரணமாகிறது.  ப்ரக்ருதி, ஜீவன், ஈச்வரன் இம்மூன்று விஷயங்களைப் பகுத்தறிந்தவன் இதில் வென்று மனதை ப்ரஹ்மத்திடம் செலுத்த வேண்டும்.  அப்படிச் செய்தால் அந்த ப்ரஹ்மம் அவன் அழுக்குகளைப் போக்கி, தன்வயப்படுத்திக் கொள்கிறது.  காந்தமும், அக்னியும் தன் அருகில் இருப்பவைகளை எப்படி தன்னிடம் இழுத்துக் கொள்கிறதோ, சுத்தப்படுத்துகிறதோ அதைப் போலவே ப்ரஹ்மமும் தன்னை த்யானிப்பவனைச் செய்கிறது.

இப்படி பற்பல விஷயங்களிலேயே சுழன்று கொண்டிருக்கும் மனதை இதுவரை நினைத்துப் பார்க்காத இந்த விஷயத்தில் திருப்ப பெரு முயற்சி செய்ய வேண்டியிருக்கும்.  இறை த்யானத்தின் நடுவில் வேறு நினைவொன்றும் புகாதவாறு அவனை ஸ்மரிக்க வேண்டும்.  இந்த ஸ்ம்ருதியே ஒரு நிலையில் ஆனந்தமாகும்.  இறைவனிடம் நம்மை சேர்ப்பிக்கும்.

இந்த யோகம் யம, நியம, ஆஸன, ப்ராணாயாம, ப்ரத்யாஹார, தாரண, த்யான, ஸமாதி என்று எட்டு அங்கங்களுடன் கூடியது.  இதில் முதல் நிலையிலுள்ளவன் யுஞ்ஜானன் என்று அறியப்படுகிறான்.  ஸமாதி கைகூடியவன் விநிஷ்பன்னஸமாதி என்றும் யோகி என்றும் அழைக்கப்படுகிறான்.  த்யானம் வரை அடைந்தவன் யோகயுக் எனப்படுகிறான்.  இதில் யுஞ்ஜானன் பயிற்சியின் போது இடையூறுகள் வந்து மனம் வேறு வழிகளில் சிதறுமாயின் மேலும் பல பிறவிகள் யோகம் செய்து அதன் பிறகே மோக்ஷத்தை அடைகிறான்.  யோகி அவன் பாவங்கள் அனைத்தையும் த்யானத்தின் போதே போக்கிக் கொண்டு விடுவதால் அந்தப் பிறவியிலேயே மோக்ஷத்தை அடைந்து விடுகிறான்.

இந்தப் பயிற்சியிலுள்ளவன் தன் தகுதியை உறுதி செய்து கொள்ள ப்ரஹ்மசர்யம், அஹிம்ஸை, ஸத்யம், திருடாமை, தானம் வாங்காமை என்ற யமத்தின் அங்கங்களையும், ஸ்வாத்யாயம் (வேதமோதுதல்), தூய்மை, ஸந்தோஷம், தவம் முதலான நியமத்தின் அங்கங்களையும் பலனைச் சிறிதும் கருதாமல் ப்ரஹ்மத்தில் மனதை வைத்துச் செய்து வர வேண்டும்.  இதன் பின் அவன் யோகாஸனங்களில் ஒன்றில் இருந்துகொண்டு பயிற்சியைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.  இதையடுத்த ப்ராணாயாமம் என்பது ப்ராண வாயுவை பயிற்சியின் மூலம் வசப்படுத்துதல்.  அதை ஒரு இறையுருவை த்யானித்து, மந்த்ர ஜபங்களோடு செய்தால் ஸபீஜம் என்றும், இல்லையேல் அபீஜம் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த ப்ராணாயாமம் பூரகம், கும்பகம், ரேசகம் என்ற மூன்று அங்கங்களுடையது.  காற்றை மூக்கு, வாய்களால் வெளியே மட்டும் விடுவது ரேசகம், உள்ளே இழுப்பதை மட்டும் செய்வது பூரகம், காற்றை வெளியேயும் விடாமல், உள்ளேயும் இழுக்காமல் ஹ்ருதயத்திலேயே நிறுத்துதல் கும்பகம். இதையடுத்த ப்ரத்யாஹாரம்
என்பது இந்த்ரியங்களை வெளியே நாட்டம் காட்ட விடாது, இறை வழிபாட்டில் திருப்பி விடுவது.  இப்படி ப்ராணனையும், இந்த்ரியங்களையும் வசப்படுத்தி விட்டால் அதன் பின் இறையுருவை மனதில் நிலை கொள்ளச் செய்ய வேண்டும்.  அது தாரணையாகும்.

இந்த தாரணை மூர்த்தம், அமூர்த்தம் என்று இரு வகையாகும்.  சரீரத்தோடு கூடின ப்ரஹ்ம ஸ்வரூபத்தை மனதில் கொள்ளும் மூர்த்தம் அபரம் என்றும், மூர்த்தியற்ற ஸ்வரூபத்தை எங்கும் காணும் அமூர்த்தம் பரம் என்றும் அழைக்கப்படுகிறது.  இந்த தாரணை ப்ரஹ்ம பாவனை, கர்ம பாவனை, உபய பாவனை என்று மூன்று பாவனைகளோடு விளங்குகிறது.  எப்போதும் ப்ரஹ்மத்தையே நினைத்துக் கொண்டிருத்தல் ப்ரஹ்ம பாவனை.  நாம் செய்யும் கர்மாக்களையே எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பது கர்ம பாவனை.  ப்ரஹ்மத்தையே ஸதா சிந்தித்துக் கொண்டு கர்மாக்களைச் செய்து கொண்டிருப்பது உபய பாவனை.

சரீரத்தைக் கொண்டே தேவ, மனுஷ்ய வேறுபாடுகள் வருகின்றன.  ஜீவனுக்கு இது உண்மையில் கிடையாது.  இதை அறியாத வரையில் மூர்த்த ப்ரஹ்மமும் இருக்கும்.  அமூர்த்த ப்ரஹ்மத்தில் சரீரம் கிடையாது.  எனவே ஜாதி, அழிவு முதலிய பேதங்களும் அங்கில்லை.  அது ஞானத்தை முக்யமாகக் கொண்டு ஸ்வயம் ப்ரகாசமாய் இருப்பது.  இந்த பரப்ரஹ்மத்தை யோகத்தில் ஆரம்ப நிலையில் உள்ளவனால் சிந்திக்க முடியாது.  அவனுக்கு முதலில் மூர்த்த ப்ரஹ்மமே சிந்திக்க இயல்பானது.  அப்போது தேவ, கந்தர்வ, தானவ, யக்ஷ முதலான தேவ ஜாதிகளும், மனுஷ்யர்கள், பசுக்கள், மலைகள், கடல்கள், நதிகள், மரங்கள், கொடிகள் என அனைத்து ரூபங்களும், அதன் காரணங்களும், ஒன்று, இரண்டு என பல பாதங்கள் உள்ளவையும், பாதங்கள் அற்றவையும் மஹாவிஷ்ணுவின் ஸ்வரூபமே.

இந்த மூர்த்தம் முன் கண்ட பாவனைகளோடு இருப்பதால் இது சுபத்தைத் தரப்போவதில் சிறந்ததில்லை.  இந்த ப்ரபஞ்சம் விஷ்ணு சக்தியால் வ்யாபிக்கப்பட்டிருக்கிறது.  இதுவே முக்த ஸ்வரூபத்தில் பரசக்தியாகவும், பக்தஜீவர்களின் ஸ்வரூபத்தில் க்ஷேத்ரக்ஞ சக்தியாகவும்,  வேத விஹிதமான கர்மசக்தியான அவித்யையாகவும் மூன்று விதத்தில் பிரிந்திருக்கிறது.  கர்மசக்தியான அவித்யையால் க்ஷேத்ரக்ஞர்கள் மறைக்கப்பட்டு அவரவர் சரீரத்திற்கேற்றார்ப்போல் அறிவு, சுக, துக்கம் முதலியவற்றில் ஏற்றத் தாழ்வுகளை அடைகின்றனர்.

உயிரில்லாத பாறை, மரக்கட்டைகளில் இருக்கும் ஜீவன் அறிவையும், ஆனந்தத்தையும் மிகவும் குறைவாகவே பெறுகிறது.  தாவரங்கள் இவைகளை விட கொஞ்சம் அதிகமாக பெறுகின்றன.  இப்படி பாம்பு முதலான ஊர்வனவைகள், பின் பறப்பனவைகள், ம்ருகங்கள், மனிதர்கள், தேவர்கள், தேவராஜன், ப்ரஜாபதி, ஹிரண்யகர்பன் என வரிசைப்படி ஜாதிகள் ஒன்றை விட ஒன்றாக ஞானம், ஆனந்தம் இவைகளை அதிகமாகக் கொண்டுள்ளன.  நல்ல விலை கொடுத்து வாங்கும் உடை எப்படி சிறந்திருக்கிறதோ அப்படியே இந்த ஞானம், ஆனந்தத்தின் அளவுகள், செய்யும் நல்ல கர்மாக்களின் அளவைக் கொண்டே அமைகின்றன.  இதனால் அந்தந்த சரீரங்களும், அதைச் சார்ந்து இருக்கும் ஆத்மாவும் அமைகின்றன.

மஹாவிஷ்ணுவின் அமூர்த்தமான ரூபமே ஸத் என்று பண்டிதர்களால் அழைக்கப்படுகிறது.  அதை யோகத்தில் தேர்ச்சி பெற்றவனே சிந்திக்க முடிகிறது.  அந்த அமூர்த்த ப்ரஹ்மம் கீழ் கண்ட மூவகை சக்திகளுக்கு இருப்பிடமாகவும், விவரிக்கப்பட்ட ப்ரபஞ்சத்தை விட வேறாகவும் இருக்கிறது.  அதிலிருந்து கொண்டே மஹாவிஷ்ணு பலவகை ரூபங்களில் அவதரிக்கிறான்.  உபேந்த்ரனாக அவதரித்து தேவ கர்மாக்களையும், மீன் முதலானவைகளாக அவதரித்து விலங்குகளின் செயல்களையும், ராம, க்ருஷ்ண அவதாரங்களில் மனுஷ்ய செயல்களையும், நரஸிம்ஹமாக அவதரித்து இடைப்பட்ட செயல்களையும் இந்த அமூர்த்த ப்ரஹ்மமே செய்தது.

இந்த அவதாரங்களும், அவைகளும் செயல்களும் நம்மால் அளவிட முடியாதவை.  அவை எந்தப் பலனையும் கருதி செய்யப்பட்டவை அல்ல.  எந்த கர்மத்தின் பலனாகவும் நடந்தவை அல்ல.  அவை லோக உபஹாரமாக நடந்தவையே.  இந்த ரூபத்தையே யோகி பயிற்சி செய்ய வேண்டும்.  எப்படி நெருப்பு கிளம்பினால் சுற்றியிருக்கும் எரித்து விடுமோ, அப்படியே இந்த ஸ்வரூபமும் யோகியின் மனதில் நிலைபெற்றால் அவனது பாவங்கள் அனைத்தையும் ஸம்ஹரித்து விடும்.  இதுவே தாரணை.  சுபத்தைக் கொடுப்பதாலும், தாரணைக்கு ஆதரவாக (ஆச்ரயம்) இருப்பதாலும் இந்த அமூர்த்த ஸ்வரூபமே ஸுபாச்ரயம்.  பக்தர்களின் ஸ்வரூபம் தாரணைக்கு ஆச்ரயமாக இருந்தாலும் அவை கீழ்க்கண்ட மூவகை பாவனைகளோடு இருப்பதால் அவை சுபமாயிருப்பதில்லை.  விஷ்ணுவின் இந்த அமூர்த்த ஸ்வரூபமே இந்த இரு குணங்களோடும் இருப்பதால் அதுவே சுபம்.

எங்கெங்கோ அலைந்து, எதையெதையோ பற்றிக்கொண்டிருக்கும் மனதிற்கு பற்றுக் கோடாக இருப்பதும், ஸம்ஸார சக்ரத்திலிருந்து யோகிகளுக்கும் மோக்ஷத்தைக் கொடுப்பதும் இந்த மங்கள ஸ்வரூபமே.  தேவர் முதலான வேறெந்த ஸ்வரூபங்களுமே கர்ம வசத்தில் இருப்பதால் சுபஞ்செய்ய சக்தியற்றவர்களே.  வேறெதிலும் ஆசையில்லாது விஷ்ணுவின் மங்கள ஸ்வரூபம் ஒன்றையே மனத்தில் நிலை கொள்ளச் செய்வதே தாரணை.

எங்கும் ஒளி நிறைந்த சந்த்ர வதனமும், தாமரையையொத்த பெரிய கண்களும், அழகிய தாடைகளும், பரந்து விரிந்த நெற்றியும், ஒத்த அளவில் தொங்கும் ஒளி மிகுந்த குண்டலங்கள் கொண்ட காதுகளும்,  சங்கு போன்ற கழுத்தும், லக்ஷ்மியைக் கொண்டிருக்கும் சிறந்த மார்பும், மூன்று மடிப்போடும், ஆழ்ந்து சுழிந்துள்ள தொப்புளும் கொண்டு விளங்கும் திருவயிறும், நீண்டு திரண்ட நான்கு கைகளும், ஸமமான துடைகளும், கணுக்கால்களும், மலர்களையொத்தத் திருவடிகளும், அரையில் சிவப்பாடையும், க்ரீடம், ஹாரங்களைப் பெற்று பொலிவோடு விளங்கும் மஹாவிஷ்ணுவான பரப்ப்ரஹ்மத்தைத் த்யானிக்க வேண்டும்.

விஷ்ணுவுக்கு நான்கு கைகள், எட்டு கைகள் என்று சாஸ்த்ரங்கள் கூறுகின்றன.  எட்டு கைகள் என்று கொண்டால் அவைகளில் சார்ங்கம், சங்கம், கதை, கட்கம், சக்ரம், அக்ஷமாலைகளையும், மற்ற இரு கைகளில் தாமரையும், பாணமுமோ அல்லது வர, அபய முத்ரைகளையோ கொள்ள வேண்டும்.  நான்கு கரங்கள் எனக் கொண்டால் அவைகளில் சங்கம், சக்ரம், கதை, தாமரை இவைகளைக் கொண்டு த்யானிக்க வேண்டும்.  இப்படி அஸ்த்ரம், ஆபரணம், ப்ரத்யங்கம், ப்ரதான அங்கம் முதலியவைகளோடு கூடின ஸ்வரூபத்தை நினைத்து நிற்பது முதல் வகை தாரணை.  அஸ்த்ரங்களை விட்டு மற்ற மூன்று அங்கங்களையும் கொள்வது, பின் ஆபரணங்களையும் விடுவது, பின் கடைசியில் ப்ரதான அங்கம் ஒன்றை மட்டுமே பற்றி இருப்பது என தாரணை நான்கு வகையாகிறது.  நிற்கும் போதும், நடக்கும் போதும், எந்த செயலையும் செய்து கொண்டிருக்கும் போதும் இந்த உருவம் மனதை விட்டு அகலாதிருப்பின் யோகி தன் தாரணை ஸ்திரப்பட்டு விட்டதாகக் கொள்ளலாம்.

இதற்கடுத்த த்யானம், அஸ்த்ரம் முதலான நான்கு அங்கங்களோடு கூடின விஷ்ணுவின் ஸ்வரூபத்தை வேறெந்த நினைவுகளும் இன்றி ஸதா நினைப்பது.  இந்த த்யானம் ஸ்வரூபத்தைப் பற்றி இருப்பதால் ஸாலம்பன யோகம் என்றும், ஸபீஜ யோகம் என்றும் கூறப்படுகிறது.  இதுவே எந்த ஸ்வரூபமும், நாமமுமின்றி அமூர்த்தமான ஆத்ம ரூபமாக த்யானித்து லயிக்கும் போது ஸமாதி என்று அறியப்படுகிறது.  பரவித்யை என்றும், விவேகஜன்ய ஞானம் என்று அழைக்கப்படுகிறது.

ப்ரஹ்மத்தை அடைவிப்பது இந்த ஞானமே.  மூவகை பாவனைகளை அழித்து இந்த ஞானமே அடைய வேண்டியதான ப்ரஹ்மத்தை ஸமாதி என்ற உபாஸனத்தால் ஆத்மாவிற்குத் தருகிறது.  மோக்ஷத்தையும் தருகிறது.  இந்த உபாஸன ஞானம் இப்படி ஆதிகாலமாக மாயையால் மறைக்கப்பட்டிருந்த ஜீவாத்மாவுக்கு கருவியாக இருந்து மோக்ஷத்தைக் கொடுத்து தன் கடமையை நிறைவேற்றி, அனுக்ரஹிக்கிறது.  இப்படி மோக்ஷமடைந்த ஜீவாத்மா அந்த பரப்ரஹ்மத்தோடு லயித்து பேதமற்று விடுகிறது.

இயற்கையில் ஆனந்த மயமான இந்த ஆத்மா கர்மாக்களால் பேதங்களைக் கொள்கிறது.  பின் ஸமாதி தர்சனத்தில் கர்மங்கள் முற்றும் அழிகையில் அதன் கார்யமான பேதங்களும் முற்றிலும் அழிந்து விடுகிறது.  அப்போது எந்த பேதங்களையும் உண்டு பண்ணுபவனும் இல்லை, அவைகளை அறிபவனும் இல்லை.  இத்தகைய மோக்ஷத்தைக் கொடுப்பது இந்த ஸமாதி" என்று காண்டிக்யருக்கு கேசித்வஜர் அஷ்டாங்க யோகத்தை சுருக்கியும், விவரித்தும் கூறி "வேறு என்ன செய்ய வேண்டும்" என்று கேட்டார்.

காண்டிக்யர் "கேசித்வஜரே! நான் ப்ரார்த்தித்தபடி எனக்கு அஷ்டாங்க யோகத்தை முழுதாக உபதேசித்தீர்கள்.  தங்கள் உபதேசத்தால் என் மனதிலிருந்த அஞ்ஞானம் முதலான அழுக்குகள் முற்றும் அழிந்தன.  என் மமகாரமும், அஹங்காரமும் தவறே.  ஆத்ம ஸ்வரூபம் அழிவற்றது, அது சொல்லிற்கு எட்டாதது.  இனி ஆண், பெண், ஆடு, மாடு என்ற பேத வ்யவஹாரங்கள் எனக்கில்லை.  வேண்டிய நன்மைகள் யாவும் எனக்குச் செய்து விட்டீர்கள்.  இனி நீங்கள் செல்லலாம்" என உபசரித்து அனுப்பினார்.  கேசித்வஜரும் மீண்டும் ராஜ்யத்திற்குத் திரும்பினார்.

காண்டிக்யர் இதன் பின் மீண்டும் ராஜ்யத்தையும் பெற்றார்.  தன் குமாரனை ராஜ்யத்தில் அபிஷேகம் செய்து வைத்து விட்டு அவர் வனம் சென்று அஷ்டாங்க யோகத்தால் மோக்ஷத்தை அடைந்தார்.  கேசித்வஜரும் கர்ம பலன்களான விஷயங்களை அனுபவித்து, பலன் கருதாது கர்மங்களையும் செய்து புண்ய, பாவங்களைத் தீர்த்துக் கொண்டு மோக்ஷத்தை அடைந்தார்.

விஷ்ணு புராணம் - 124

06_06  அளவற்ற கல்யாண குணங்கள், செல்வம், திவ்ய மங்கள விக்ரஹங்களையுடைய அந்த இறைவனை நம் ஊணக்கண்களால் அறிய முடியாது.  அதற்கு ஸ்வாத்யாயம், யோகம் என்ற இரு கண்கள் தேவை.  வேதாந்த சாஸ்த்ரம், த்வாதசாக்ஷரீ, ப்ரணவம் முதலிய தத்வங்களை அறிந்து தனதாக்கிக் கொள்வதே ஸ்வாத்யாயம்.  இந்த வாக்ய விசாரங்களால் தத்வங்களை நன்கு அறிந்த பிறகு அந்த ப்ரஹ்மத்தை உபாஸிக்க வேண்டும்.  இந்த உபாஸனையே யோகம்.  இந்த ஞானங்கள் ப்ரஹ்மத்தையே விஷயமாகக் கொண்டிருப்பதாலும், ப்ரஹ்மத்தையே அடைவிப்பதாலும் இவைகளே ப்ரஹ்மம் என்றும் சொல்லப்பெறுகின்றன.  யோகம் செய்ய ஆரம்பித்த பின்பும் அவ்வப்போது சாஸ்த்ரார்த்த சிந்தனையான ஸ்வாத்யாயமும் வேண்டும்.  இவ்விரண்டினுள்ளும் ஸ்வாத்யாயம் ஸாதாரணக் கண்.  யோகம் சிறந்த கண்.  இந்த சிறந்த யோகத்தைத் தனக்கு விரிவாய் விளக்குமாறு மைத்ரேயர் பராசரரை வேண்டிக் கொள்ள அவர் இது ஸம்பந்தமாக கேசித்வஜருக்கும் சாண்டிக்ய ஜனகருக்கும் நடந்த ஸம்வாதத்தைக் கூறுகிறார்.

ஜனக வம்சத்தில் தர்மத்வஜர் என்ற ஜனகர் ஒருவர் இருந்தார்.  அவருக்கு மிதத்வஜர், க்ருதத்வஜர் என்ற இரு பிள்ளைகள் இருந்தனர்.  இவர்களில் க்ருதத்வஜர் எப்போதும் வேதாந்த விசாரம் செய்து கொண்டு, மகிழ்ந்திருப்பார்.  மிதத்வஜர் கர்ம மார்க்கத்தில் அரசாண்டு கொண்டிருந்தார்.  க்ருதத்வஜருக்கு கேசித்வஜர் என்ற மகனும், மிதத்வஜருக்கு காண்டிக்யரும் பிறந்தனர்.  இருவரும் அவரவர் தந்தை வழியில் சிறந்தவர்களாக இருந்தனர்.  ஒரு ஸமயம் இவர்களிடையே பகை மூண்டு, அதில் கேசித்வஜர் வென்று, காண்டிக்யரை ராஜ்யத்திலிருந்து விரட்டி விட்டார்.  காண்டிக்ய ஜனகர் தன் மந்த்ரி, புரோஹிதருடன் காட்டிற்கு சென்று வஸிக்கலானார்.

ப்ரஹ்மத்தை உபாஸித்துக் கொண்டே ராஜ்ய பரிபாலனம் செய்து வந்த கேசித்வஜர் தன் தீவினைகள் தீர பல யாகங்களையும் செய்து வந்தார்.  அப்படி ஒரு ஸமயம் யாகம் செய்து கொண்டிருக்கையில், அதற்கு பால் தரும் அவருடைய பசுவை காட்டில் புலி ஒன்று கொன்று விட்டது.  இந்த யாகம் இப்படித் தடைபட்டதற்குக் கவலைப்பட்ட கேசித்வஜர் அதற்கான ப்ராயச்சித்தத்தை ருத்விக்குகளிடம் கேட்டார்.  அவர்கள் தங்களுக்கு அதுபற்றி தெரியவில்லை என்றும், கசேரு என்பவர் அறிவார் என்றனர்.  கசேரு தனக்கும் தெரியாது என்று கூறி பார்க்கவர் என்பவரிடம் கேட்குமாறு கூறினார்.  பார்க்கவர் சுனகர் என்பவரிடம் கேட்குமாறு கூறினார்.  அவர் அரசரிடம் தங்கள் யாருக்கும் தெரியாது என்றும், அரசரால் தோற்கடிக்கப்பட்டு, ஓடிய காண்டிக்ய ஜனகரே இந்த விஷயம் தெரிந்தவர் என்றும், விருப்பமிருந்தால் அவரிடமே சென்று கேட்டுக் கொள்ளும் என்று கூறிவிட்டார்.

"தர்மகார்யம் செய்து கொண்டிருக்கும்போது ஒருவன் மரணமடைந்தால் அவன் தர்ம பலனைப் பெற்று விடுகிறான் என்றே சாஸ்த்ரங்கள் கூறுகின்றன.  எனவே தவறாகப் புரிந்து கொண்டு, ப்ராயச்சித்தம் கேட்க வரும் நம்மைக் காண்டிக்யர் கொன்று விட்டாலும், நமக்கு ஒரு குறையுமில்லை.  யாகப்பலன் கிடைத்து விடும்.  இல்லாது ப்ராயச்சித்தத்தைக் கூறினாலோ யாகம் நிறைவேறி விடும், ஆகவே எது நடந்தாலும் பிழையில்லை" என ஒரு நிமிஷம் இதை யோசித்த கேசித்வஜர், பின் தன் சத்ருவான அவரிடத்திலேயே ப்ராயச்சித்தம் அறிந்து கொள்ள முடிவு செய்து அவரிடம் சென்றார்.

மான்தோலைப் போர்த்திக் கொண்டு தன்னை நோக்கி காட்டில் வந்து கொண்டிருக்கும் கேசித்வஜனைக் கண்டதும்,  காண்டிக்யரின் கண்கள் சிவந்தன.  வில்லில் நாணேற்றி, பாணத்தைக் கையில் எடுத்துக் கொண்டார்.  கேசித்வஜனை நோக்கி "அடே மூடா! உன் வேஷத்தில் நான் ஏமாறுவேன், அப்போது என்னைக் கொன்று விடலாம் என்று நீ நினைக்கிறாய். நீ க்ருஷ்ணாஜினம் தரித்துக் கொண்டு வந்தாலும் நான் ஏமாற மாட்டேன்.  உன்னைக் கொல்லவே செய்வேன்.  நானும், நீயும் சேர்ந்து எத்தனை மான்களைக் கொன்றுள்ளோம், அவைகள் க்ருஷ்ணாஜினம் போர்த்திக் கொண்டிருக்கவில்லையா?  என் ராஜ்யத்தைப் பறித்துக் கொண்ட நீ எனக்கு ஆததாயீ ஆவாய்.  உன்னைக் கொல்வதில் ஒரு தவறுமில்லை, என் கையில் நீ இறப்பது நிச்சயம்" என்று கூறினார்.

கேசித்வஜர் சிரித்துக் கொண்டே "காண்டிக்யரே! நாம் உம்மிடம் ஒரு ஸந்தேஹத்தைத் தீர்த்துக் கொள்ளவே வந்துள்ளேன்.  கொல்ல வரவில்லை.  இதையறிந்த பின் நீங்கள் கோபத்தையோ அல்லது பாணத்தையோ விடுங்கள்" என்றார். உடனே தன் மந்த்ரிகளுடன் இதை ஆலோசித்தார் காண்டிக்யர்.  மந்த்ரிகள் பகைவன் சிக்கியிருக்கும்போதே அவனைக் கொன்று விட்டால் ராஜ்யம் மீண்டும் வசமாகிவிடுமாதலால், அவனைக் கொன்று விடுவதே நல்லது என்று கூறினர்.  ஆனால் காண்டிக்யர் "இவனைக் கொன்று நான் இந்த ராஜ்யத்தை அடைந்தால் இவனுக்கு பரலோகம் வசமாகும்.  நான் இவனைக் கொல்லாது விட்டால் எனக்குப் பரலோகமும், இவனுக்கு பூலோகமும் கிடைக்கும்.  பூலோகஜயம் குறுகிய காலத்திற்கே ஸுகத்தையளிக்கும்.  பரலோகஸுகமோ நீண்ட காலத்திற்காகும்.  ஆகவே நான் பரலோகத்தையே பெறுவேன்.  இவனைக் கொல்ல மாட்டேன்" என்று கூறினார்.

அப்படியே கேசித்வஜருக்கு நேர்ந்ததற்கான ப்ராயச்சித்தத்தை விரிவாகக் கூறி, அவர் யாகம் முடிப்பதற்கான உதவியைச் செய்தார்.  ஆனால் யாகம் நன்கு முடிந்த பின்பும் கேசித்வஜருக்கு மனம் சந்தோஷமாயில்லை.  குழப்பமாகவே, நிம்மதியின்றியே இருந்தது.  யோசித்துப் பார்த்தார்.  "ப்ராஹ்மண பூஜைகள் நன்கு நடந்தன.  பொது மக்களுக்கும் வேண்டியவைகள் செய்யப்பட்டன.  யாசகர்களும் சந்தோஷமாகவே சென்றனர்.  எல்லாருக்குமே தகுந்த முறையில் உபசாரம் செய்தோம்.  இருந்தாலும் ஏதோ ஒன்றை விட்டு விட்டதாகவே தோன்றுகிறதே" என்று சிந்திக்கலானார்.  இறுதியில் ப்ராயச்சித்த உபதேசம் செய்த காண்டிக்ய ஜனகருக்கு குருதக்ஷிணை என்று ஒன்றும் தரவேயில்லை என்பது நினைவிற்கு வந்தது.  மீண்டும் காட்டிற்கு ஓடினார்.

தன்னைப் பார்த்ததும் மீண்டும் கோபமடைந்த காண்டிக்யரிடம் தான் வந்த காரணத்தைக் கூறினார் கேசித்வஜர்.  காண்டிக்யர் உடன் மந்த்ரிகளிடம் கலந்தாலோசித்தார்.  அவர்கள் மீண்டும் ராஜ்யத்தையே கேட்டுப் பெறுமாறு கூறினர்.  "மந்த்ரிகளுக்கு செல்வம் சேர்ப்பதைத் தவிர வேறென்ன வேலை" என்று அவர்களிடம் கூறிச் சிரித்தார்.  பின் அவர்களிடம் நிலையான மோக்ஷத்தை விளக்கி விட்டு, கேசித்வஜரிடம் ஸம்ஸார துக்கத்தைப் போக்கும் அத்யாத்ம வித்யையான யோக மார்க்கத்தைத் தனக்கு உபதேசிக்குமாறு கேட்டுப் பெற்றார்.

விஷ்ணு புராணம் - 123

06_05 ஆத்யந்திக ப்ரளயம்
மோக்ஷமே ஆத்யந்திக ப்ரளயம்.  ஞானமும், வைராக்யமும் வந்தால்தான் இந்த மோக்ஷத்தை அடைய முடியும்.  நாம் அனுபவிக்கும் விஷயங்களில் இருக்கும் கஷ்டங்களையெல்லாம் அறிந்து கொண்டால் தான் அந்த விஷயங்களையெல்லாம் அதனால் வெறுத்து அவற்றிலிருந்து விடுபட வழி தேடத் தோன்றும்.  ஆத்யாத்மிகம், ஆதிபௌதிகம், ஆதிதைவிகம் என்ற தாபத்ரயங்களை இதற்கு நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

ஆத்யாத்மிக தாபம் சரீர சம்பந்தமாகவும், மன சம்பந்தமாகவும் வரலாம்.  உடலுக்கு வரும் வ்யாதிகள் சரீர சம்பந்தமான தாபங்கள்.  காம, க்ரோதாதி வ்யாதிகள் மன சம்பந்தமானவை.  இவ்வாறே மற்ற விலங்குகள், பறவைகளால் உண்டாகும் துக்கங்கள் ஆதிபௌதிகம்.  இயற்கையான சீதோஷ்ணங்களால் உண்டாகும் துக்கங்கள் ஆதிதைவிகமாகும்.  இந்த தாபங்கள் கர்ப்ப ஸம்பந்தத்தாலும், நம் வினைகளாலும், அஞ்ஞானம், நரகம் இவைகளாலும் உண்டாகி ஆயிரக்கணக்கில் சூழ்ந்து இருக்கின்றன.

கர்ப்பவாஸ துக்கங்கள்
கர்ப்பத்தில் இந்த உயிர் மிகவும் ம்ருதுவான சரீரத்தோடு இருக்கிறது.  மலங்களில் நடுவே தாயின் வயிற்றில் வசிக்கிறது.  உல்பம் என்ற தோல் இதன் உடலை மூடியிருக்கிறது.  முதுகு, கழுத்து எலும்புகள் வளைந்து, கை, கால்களை நீட்ட முடியாமல், மூச்சு விடவும் கஷ்டப்பட்டுக் கொண்டு, இந்த உயிர் அப்போது முடங்கிக் கொண்டிருக்கிறது.  தாயின் உணவில் இருக்கும் காரம், புளிப்புகளால் இது கடுமையாக தாக்கப்படுகிறது.  தன் அறிவைக் கொண்டு தான் செய்த வினைகளாலேயே இப்போது கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பதை அறிந்து மிகுந்த வேதனையோடு இருக்கும்.

பின் ப்ரஹ்மத்தின் காற்றால் மேலும் சரீர எலும்புகள் நொறுங்கும்படி ஒடுக்கப்பட்டு, ப்ரஸவ வாயுக்களால் தலை கீழாக திருப்பப்பட்டு மல, மூத்ர சேற்றுப்பூச்சோடு மிகவும் ச்ரமப்பட்டு தாயின் கர்ப்பத்திலிருந்து வெளியே வந்து விழுகிறது.  துர்நாற்றமுடைய யோனி த்வாரத்திலிருந்து விழும்போது முட்களால் குத்தப்படுவது, வாளால் அறுக்கப்படுவது போன்ற துன்பங்களை அனுபவித்து ஒரு புழு வெளியே வந்து விழுவதைப் போலவே இந்த ஜீவனும் வந்து விழுகிறது.  வெளியே விழுந்ததும் வெளிக்காற்றான சடம் என்ற காற்று பட்டதும் மூர்ச்சையடைந்து கர்ப்பவாஸத்தில் உண்டான விவேகத்தை முழுதும் மறந்து விடுகிறது.

பிறந்தபிறகும் உடல் அறித்தால் சொறிந்து கொள்ள முடியாது.  உடலைத் தன்னிஷ்டப்படி திருப்ப முடியாது. குளிப்பது, குடிப்பது, உண்பது என எதுவும் ஏனையோர் இஷ்டப்படியே.  எண்ணத்தை வெளிப்படுத்தவும் முடியாது.  மல, மூத்ரங்கள் நிறைந்த படுக்கை.  எறும்பு, கொசுக்கள் கடித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.

இதன் பின் யௌவனம் வந்த பின்பும் அஞ்ஞானத்தால் அறிவிழந்து சிற்றின்பங்களிலேயே நாட்டம் செலுத்துகிறது இந்த ஜீவன்.  நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எங்கே செல்வேன்? நான் பிறந்த காரணம் என்ன? ஏன் இப்படிக் கட்டுண்டிருக்கிறேன்? காரண, கார்யங்கள் என்ன? எதைச் செய்யலாம்? எதைச் செய்யக் கூடாது? எதைப் பேசலாம்? பேசக்கூடாது? தர்மாதர்மங்கள் எவை? எதில் குணம் உள்ளது? எதில் தோஷம் உள்ளது? இவையெதிலுமே ஆர்வம் செலுத்தாது விலங்குகளைப் போல புணர்வதையும், உண்பதையுமே முக்யமாகக் கொண்டு காலம் கழிக்கிறது இந்த ஜீவன்.  தமோகுணத்தால் வந்த அஞ்ஞானத்தால் கெட்ட கார்யங்களைச் செய்கிறான்.  வைதீக கார்யங்கள் அழிகின்றன.  இதனால் மேலும் புண்ய, பாவங்களைச் சேர்த்துக் கொள்கிறான்.

முதுமை எய்தியதும் உடல் சிதைந்து விடுகிறது.  பற்களும், அவயவங்களும் ஆடி விடுகிறது.  பற்கள் விழுந்தும் விடுகிறது. கண்பார்வை மங்கி, தலை நரைத்து, உடல் சுருங்கி விடுகிறது.  கருவிழிகள் கண்குழிகளில் ஒடுங்கி விடும்.  முதுகெலும்பு வளைந்து, மற்ற எலும்புகள் வெளிப்படையாகத் தெரிய, ஜீர்ண சக்தி குறைந்து, நடக்கவும், படுக்கவும் முடியாமல் துன்படைகிறது இதே ஜீவன்.  எதற்கும் அடுத்தவர் உதவியை நாடி, இந்த்ரியங்கள் செயலிழந்து வார்த்தையும் வெளிவராது அனைவரிடமும் அவமானப்படுகிறான்.  தான் இளமையில் அனுபவித்தவைகளை முன் ஜன்மத்தில் நடந்தவைகளைப் போல நினைக்கிறான்.

மரணத் தருவாயிலும் சிந்தையை மனை, மக்கள், சுற்றம், செல்வம் இவைகளில் செலுத்தி, கவலை கொள்கிறான்.  வ்யாதிகள் ரம்பங்களைப் போலவும், யம பாசங்கள் போலவும் வாட்டி, வதைக்க, கண்கள் சுழல, உடல் உதற, நாக்கு உலரத் திண்டாடுகிறான்.  உதான வாயு மேலெழும்பித் தொண்டையை அடைக்க, நெஞ்சில் கர், கர் எனக் கோழைச் சப்தம் உண்டாகி, யமபடர்கள் பிடித்திழுக்க, பழகிய உடலை விட்டு பெரும் கஷ்டத்தோடு இந்த ஜீவன் மிகுந்த தாபத்தோடும், பசி, தாகத்தோடும் வெளிக்கிளம்புகிறான்.

வெளிக்கிளம்பியதும் தன் தீவினைப்பயன்களை அனுபவிக்க யாதனா சரீரத்தைப் பெறுகிறான்.  யமகிங்கரர்கள் ஜீவனைப் பாசத்தால் கட்டி, தடியால் அடித்து, துன்பங்கள் நிறைந்த பாதையில் நடத்தி யமனிடம் இட்டுச் செல்கிறார்கள்.  பின் காய்ந்த மணலிலும்,  நெருப்பிலும் வாட்டுதல், கத்தி, வாள், கோடரிகளால் பிளப்பது, சூலத்தில் இடுவது, கொடிய விலங்குகளிடம் உணவாக விடுவது எனப் பல வகையில் துன்புறுத்துவர்.  ஸ்வர்க்கத்திற்கு சென்றாலும் புண்ய பலன் தீர்ந்து என்று மீண்டும் பிறந்து துன்பத்தை அனுபவிக்க நேருமோ என்ற நினைப்பிலேயே கிடைக்கும் ஸுக விஷயங்களையும் அனுபவிக்க முடியாமல் தவிக்கிறான்.  பின் மீண்டும் பிறப்பு.  எப்போது இறப்போம் என்பதும் தெரியாது.  இப்படி மீண்டும், மீண்டும் இந்த சக்ரத்தில் ஜீவனுக்கு, எப்படி பருத்திக் கொட்டையை பஞ்சுகள் சூழ்ந்திருக்குமோ அப்படி எங்கும் துன்பமே.  ஸுகம் தரும் என்று நினைக்கும் பல விஷயங்களையும் ஆராய்ந்து பார்த்தால் துன்பமே அதிகம்.

கொடிய ஸூர்யனைப் போன்ற இந்த துக்கங்களிலிருந்து ஜீவன்களுக்கு விடுதலை மோக்ஷமே.  அந்த மரமே ஸம்ஸார துக்கமென்கிற இந்த வெயிலில் வாடிய ஜீவன்களுக்கு நிழல் தந்து ஸுகம் அளிக்கும்.  வேறெங்கும் அது கிடைக்கப் போவதில்லை.  பிறப்பு, இறப்புகளால் உண்டாகும் மூவகைத் துன்பங்களுக்கும் இறைநினைப்பே மிகச்சிறந்த ஒரே மருந்தாகும்.  இறைவனை நினைத்து அனுபவிப்பதில் உண்டாகும் ஆனந்தம் மற்றெதையும் மறக்கச் செய்து விடும்.  துன்பம் சிறிதும் கலவாத அத்தகைய உயர்வுடையது பகவத்ப்ராப்தி.

அதனால் அறிஞர்கள் இந்த ஸுகத்தைப் பெற முயற்சிக்க வேண்டும்.  நம் கார்யங்களால் ஸித்திக்கும் ஆகமஜம், விவேகத்தால் ஸித்திக்கும் விவேகஜம் என்ற இருவகை ஞானமும், அதற்குரிய செயல்களுமே இதை அடையும் வழி.  சாஸ்த்ரங்களைப் படிப்பதாலும், நடைமுறைப்படுத்துவதாலும் கிடைக்கும் ஞானம் விளக்கு போன்றது. இது அஞ்ஞானத்தால் உண்டான இருளைக் களைந்து ஆத்மாவிற்கும், சரீரத்துக்கும் உள்ள வேற்றுமை, ஜீவாத்மா, பரமாத்மாவிற்குள்ள வேற்றுமை, இவைகளின் உண்மை ஸ்வரூபம் முதலியவைகளை விளங்கச் செய்கிறது.  நம் நற்கார்யங்களால் கிடைக்கும் இந்த ஞானம் ஆகமஜம்.  விவேகஜந்ய ஞானம் இதைவிட உயர்ந்தது.  அது ஸூர்யனுக்கு ஒப்பானது.  விளக்கை விட ஸூர்யன் எப்படிப் பொருட்களைத் தெளிவாக நமக்குக் காட்டுமோ அதுபோல இந்த விவேகஜம் அஞ்ஞானத்தை அடியோடு அழித்து விடும்.  இந்த காரணத்தாலேயே மனு ஸ்ம்ருதி வேதார்த்தங்களான உபநிஷத்துகள் போதிக்கும் விவேகஜன்ய ஞானத்தை பரப்ரம்ஹம் என்றே கோஷிக்கிறது.

அதர்வ வேதத்தைச் சேர்ந்த முண்டகோபநிஷத்  விவேகஜன்ய ஞானத்தை பரவித்யை என்றும், ஆகமஜன்ய ஞானத்தை அபர வித்யை என்றும் கூறுகிறது.  பரப்ரஹ்மமான இந்த விவேகஜமே இறைவனாகும்,  ஜீவன்முக்தர்களும் அதுவே.  பகவான் என்ற பதத்திற்குப் பொருள் படைத்து, காத்து, பின் தன்னுள் லயப்படுத்துதலே.  ஸம்ஸ்க்ருத பதமான "பக" என்பது ஞானம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் என்ற ஆறு குணங்களைக் குறிக்கும்.  இந்த குணங்களை உடையவனே பகவான் எனக் குறிக்கப்படுகிறான்.  இந்த சொல்லே முக்தர்களைக் குறிக்கும் போது ப்ரஹ்மத்தை அறிந்தவர் என்ற பொருளில் உபயோகிக்கப்படுகிறது.  வாஸு என்ற நாமம் எங்கும் நிறைந்திருப்பதையும், அவனிடத்திலேயே எல்லாம் வஸிக்கின்றன என்பதையும் குறிக்கும்.

இந்த விஷயத்தை முன்பே ஒரு ஸமயம் கேசித்வஜன் என்பவர் காண்டிக்ய ஜனகருக்கு உபதேஸித்திருக்கிறார்.  இந்த வாஸுதேவன் ப்ரக்ருதியும், அதன் கார்யமான துக்கமும், அஞ்ஞானமும் அற்றவன்.  அவன் அசேதனனுமில்லை, சேதனனுமில்லை.  அனைத்திற்கும் ஆத்மா அவன்.  அனைத்து நற்குணங்களும் நிறைந்தவன்.  தன் சக்தியின் சிறு அம்சத்தாலேயே உலகனைத்தையும் தாங்கக் கூடியவன்.  ஸாது ஸம்ரக்ஷணத்திற்காக தன்னிச்சைப்படியே பல அவதாரங்களை எடுக்கக் கூடியவன்.  உலகிற்கு எல்லா நன்மைகளையும் தருபவன்.  முன்பு கூறிய ஷட்குணங்களின் இடமாய் இருப்பவன்.  கர்மங்களும், அதன் தோஷங்களும் அற்றவன்.  பரப்ரஹ்மமாயிருக்கையில் அவ்யக்தனாக நமக்கு விளங்காதவனாகவும், ராம, க்ருஷ்ணாதி வ்யூஹ நிலைகளில் வ்யக்தமாக நமக்கு விளங்கும்படி இருப்பவனும் இவனே.  ஸர்வக்ஞன், ஸர்வ சக்தன், ஸர்வேச்வரன்.  இவனையே சாஸ்த்ரஞ்ய ஞானம் பொதுவாகக் கூறுகிறது.  விவேகஜம் தெளிவாகக் கூறுகிறது.

Sunday, December 9, 2012

விஷ்ணு புராணம் - 122

06_04 இந்த வெள்ளம் ஸப்தரிஷி மண்டலத்தையும் மூழ்கடித்து அப்போது எங்கும் ஒரே ஜல மயமாக இருக்கும்.  அப்போது மஹாவிஷ்ணுவின் முகத்திலிருந்து பெருங்காற்று உண்டாகி இந்த மழை மேகங்களைக் கலைத்து விடும்.  பின் இந்த காற்று நூறு வருஷங்களுக்கு வீசிக் கொண்டிருக்கும்.  பின் இதுவும் விஷ்ணுவிடம் லயித்து விடும்.  அப்போது ப்ரளயக் கடலில் ஆதிசேஷன் மேல் சயனித்துக் கொண்டிருக்கும் ப்ரஹ்மரூபமான மஹாவிஷ்ணுவை ஜன லோகத்திலிருக்கும் ஸனகர் முதலான ஸித்தர்களும், முக்திபெற்று ப்ரஹ்ம லோகத்திலிருப்பவர்களும் வணங்கித் துதிப்பார்கள்.  வாஸுதேவன் என்ற பெயருடன் ப்ரஹ்ம ரூபியான மஹாவிஷ்ணு அப்போது ஆயிரம் சதுர்யுகங்கள் யோகநித்ரையில் இருப்பார்.  இவர் தூங்குவதன் நிமித்தமாக இந்த ப்ரளயம் நிகழ்வதாலேயே இதற்கு நைமித்திக ப்ரளயம் (அவாந்தர) என்று பெயர்.  இந்த இரவு கழிந்து அவர் கண் விழித்து மீண்டும் ஆரம்பத்தில் கூறிய ப்ரகாரம் ஸ்ருஷ்டியைத் தொடங்குகிறார்.
இனி ப்ராக்ருத ப்ரளய வர்ணனை.  நைமித்திக ப்ரளயத்தின் முடிவில் எல்லா லோகங்களும் அழிந்து விட, அதன் பின் மஹாவிஷ்ணு தத்வங்களும் அழியும்படி நினைக்கிறார்.  அப்போது ப்ராக்ருத ப்ரளயம் தொடங்குகிறது.  முதலில் தண்ணீர் நிலத்தின் (ப்ருத்வி) குணமான கந்தத்தைப் (வாஸனை)பறித்து விடும்.  அப்போது தன் குணம் அழியவே நிலம் நீரோடு நீராகி விடும்.  பின் நீரின் குணமான ரஸத்தை (ருசி) நெருப்பு எடுத்துக் கொண்டு விடும்.  அப்போது நீர் முழுதும் வற்றி நெருப்பில் ஒன்றி விடும்.  பின் நெருப்பு தன் குணமான ரூபத்தை வாயுவிடம் இழந்து, அதோடு ஒன்றி விடும்.  பின் அதுவும் தன் குணமான ஸ்பர்சத்தை ஆகாயத்திடம் இழந்து ஆகாயத்தோடு ஒன்றி விடும்.  கடைசியில் இந்த ஆகாயத்தின் குணமான சப்தத்தையும் தாமஸ அஹங்காரம் எடுத்துக் கொண்டு தன்னோடு லயப்படுத்திக் கொள்கிறது.  (இவ்வாறே பஞ்சேந்த்ரியங்கள் ஸாத்விக அஹங்காரத்தில் லயமடைகின்றன)
இந்த அஹங்காரங்கள் பின் மஹத் தத்வத்தில் ஒடுங்குகின்றன.  பின் அதுவும் ப்ரக்ருதியில் ஒடுங்குகிறது.  ஸத்வ, ரஜ, தமோ குணங்கள் சமமாக இருக்கையில் இது ப்ரக்ருதி எனப்படுகிறது.  இது வ்யக்த, அவ்யக்தங்கள் என இரு வகையில் இருக்கும்.  இதில் வ்யக்தம் இறுதியில் அவ்யக்தத்தில் லயப்படும்.  இப்படியே வ்யக்தமான ஜீவனும் முடிவில் அவ்யக்தமான பரமாத்ம ஸ்வரூபத்தில் ஒடுங்கி விடுகிறான்.  இப்படி ஜீவனும், ப்ரக்ருதியும் லயப்பட்ட பரமாத்ம ஸ்வரூபத்தையே வேதங்களும், வேதாங்கங்களும் மஹாவிஷ்ணு என்று அழைக்கின்றன.
வேதம் ப்ரவ்ருத்தி, நிவ்ருத்தி என இரு வழிகளை போதிக்கிறது.  இவையிரண்டுமே பரமாத்மாவான விஷ்ணுவையே ஆராதிக்கின்றன.  ப்ரவ்ருத்தி மார்க்கத்தில் ருக், யஜுஸ், ஸாம வேதங்கள் இந்த விஷ்ணுவையே யாகங்களில் யக்ஞேச்வரனாக ஆராதிக்கின்றன.  நிவ்ருத்தி மார்க்கமான யோகவழியில் நிலைபெற்ற யோகிகளும் ஞானமாகவும், ஞான மூர்த்தியாகவும், மோக்ஷத்திற்கு அதிகாரியாகவும் இவனையே துதிக்கின்றனர்.  குறில், நெடில் முதலான சொற்களில் அடங்கும் அசேதனப் பொருட்களும், சொல்லில் பொருளாகாத சேதனங்களும் இவனுடைய அவயவங்களே.
இந்த ப்ரமாத்மாவிற்கு இரண்டு பரார்த்தங்கள் ஒரு பகல்.  இப்படி வ்யக்தங்கள் அவ்யக்தத்தில் ஒடுங்கவும், அந்த அவ்யக்தங்கள் ஜீவனில் ஒடுங்கவும், பின் அதுவும் பரமாத்மாவில் ஐக்யப்படவும் ஆகும் காலமான இந்த த்விபரார்த்தங்கள் பரமாத்மாவுக்கு ஒரு இரவாகும்.  கார்யங்களை ஒட்டியே இந்த இரவு, பகல் கணக்குகளேயன்றி புருஷோத்தமனுக்கு இவையெதுவுமில்லை.

விஷ்ணு புராணம் - 121

06_03  ப்ரளய ஸ்வரூபம்
ப்ரளயம் என்பது எல்லா உயிரினங்களின் அழிவு.  அது நைமித்திகம், ப்ராக்ருதம், ஆத்யந்திகம் என்று மூன்று வகைப்படுகிறது.  ஒவ்வொரு கல்பத்தின் முடிவில் ப்ரஹ்மாவால் செய்யப்படுவது நைமித்திகம்.  ப்ரஹ்மாவின் ஆயுஸ் முடிவில் எல்லா வ்யக்தங்களும், அவ்யக்தத்தில் (ஸ்வரூபமற்ற பரம்பொருளில்) லயப்படுவது ப்ராக்ருதம்.  ஒன்றை பத்தினால் பெருக்க பத்து கிடைக்கும். அதை மீண்டும் பத்தால் பெருக்க நூறு கிடைக்கும்.  இப்படி பதினெட்டு முறை பெருக்கினால் கிடைப்பது பரார்த்தம்.  இதை இரண்டால் பெருக்கினால் த்விபரார்த்தம்.  இதன் முடிவிலேயே ப்ராக்ருத ப்ரளயம் ஏற்படுகிறது.  ஆத்யந்திகம் என்பது மோக்ஷமே.
மனிதர்களின் நிமிஷத்தின் அளவு ஒரு மாத்ரை.  பதினைந்து மாத்ரைகள் ஒரு காஷ்டை.  30 காஷ்டைகள் ஒரு கலை.  பதினைந்து கலைகள் ஒரு நாழிகை.  இரண்டு நாழிகைகள் ஒரு முஹூர்த்தம்.  முப்பது முஹூர்த்தம் ஒரு நாள்.  முப்பது நாள் ஒரு மாதம்.  பன்னிரண்டு மாதங்கள் ஒரு வருஷம்.  இந்த ஒரு வருஷம் தேவர்களுக்கு ஒரு நாள் (அஹோராத்ரம்).  தேவர்களுக்கு 360 நாட்கள் ஒரு வருஷம்.  இந்த வருஷங்கள் 12000 ஒரு சதுர்யுகம்.  ஆயிரம் சதுர்யுகங்கள் ப்ரஹ்மாவின் ஒரு பகல். இதற்குக் கல்பம் என்று பெயர்.  பதினான்கு மனுக்கள் ஒரு கல்பத்தில் மாறி மாறி வருவர்.  இந்த கல்பத்தின் முடிவில் ப்ரஹ்மாவால் செய்யப்படும் நைமித்திக ப்ரளயம் மிகக் கொடியது.
கல்பத்தின் முடிவில் வரும் சதுர்யுகத்தின் முடிவில் பூலோகம் பெரும்பாலும் அழிந்துவிடும்.  நூறு வருஷங்கள் மழையின்றி பஞ்சம் தலைத்தோங்கும்.  அற்ப உயிரினங்கள் அப்போது தாமாகவே அழிந்துபடும்.  அப்போது மஹாவிஷ்ணு ருத்ர ஸ்வரூபம் கொண்டு ஸம்ஹாரத்திற்கு வேண்டிய வேலைகளைச் செய்வான்.  ஸூர்யனின் ஏழு கிரணங்களைக் கொண்டு பூமியிலிருக்கும் ஜலங்களையும், ரத்தங்களையும் சுண்ட உறிஞ்சுவான்.  நதி, ஸமுத்ரங்கள் வரண்டுபடும்.  இப்படி உறிஞ்சின உற்சாகத்தில் அவனது ஏழு ரச்மிகளும் ஏழு ஸூர்யர்களைப் போல ப்ரகாசித்து உலகெங்கும் ஜ்வலித்து பூமி, பாதாளம் என ஏழு உலகங்களையும் சிறு புல் கூட இல்லாமல் எரித்துப் பொசுக்கி ஆமை ஓட்டைப் போல் கடினமாகச் செய்து விடும்.
ஆதிசேஷனுடைய சுவாசத்திலிருந்து காலாக்னி உண்டாகி ருத்ர ஸ்வரூபத்தில் பாதாள லோகங்களையும் எரித்து, பூ, புவர், ஸுவர் லோகத்தையும் எரித்து அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கும்.  இந்த காலாக்னியின் ஜ்வாலைகளால் சூழப்பட்டு மூவுலகும் வறுக்கும் சட்டியைப் போலாகும்.  சராசரங்கள் அனைத்தும் அழிந்து போம்.
இந்த இடங்களில் இருக்கும் மனு முதலான அதிகாரிகள் அனைவருடன் சேர்ந்து அங்கிருந்து ஓடி மஹர் லோகத்தையும் அங்கிருந்து ஜன லோகத்தையும் அடைவர்.  இவர்களில் பரப்ரஹ்மத்தை அடைய விரும்புகிறவர்கள் அங்கிருந்து தபோலோகம், ஸத்யலோகத்தை அடைந்து பரப்ரஹ்மத்தை அடைவர்.  மற்ற ஜீவர்களும் தங்கள் ஆத்மாவில் லயித்து விடுவர்.
இதன் பின் ருத்ரனின் மூச்சுக் காற்றிலிருந்து மேகக்கூட்டங்கள் உண்டாகும்.  யானைக்கூட்டங்கள் போன்ற இந்த பயங்கரமான கரிய பெரிய மேகங்களிலிருந்து இடி, மின்னல்களும், பெரிய தாரைகளோடும் கூடின பெருமழை தோன்றி மூவுலகையும் பற்றி எரிக்கும் தீயை அணைத்து விட்டு, மேலும் நூறு வருஷங்களுக்கு விடாது பொழியும்.  மூவுலகங்களும் நீரில் ஆழ்ந்து விடும் என்று நைமித்திக ப்ரளயத்தின் ஸ்வரூபத்தை மைத்ரேயருக்கு வர்ணித்தார் பராசரர்.

விஷ்ணு புராணம் - 120

06_02 குறைந்த முயற்சியால் மிகுந்த பலனை எளியோனும் இந்த கலியில் அடையலாம் என்பது குறித்து தன் மகனான வ்யாஸரின் கருத்தை பராசரர் இங்கு விவரிக்கிறார்.
ஒரு ஸமயம் மஹர்ஷிகளிடையே "எந்த காலம் சிறிய தர்மத்திற்கும் பெரும் பலனைக் கொடுக்கும்? அந்த தர்மத்தையும் எளிதில் அனுஷ்டிக்கத் தகுந்தவர் யார்?" என்ற வினா எழுந்தது.  இதற்கு விடையறிய அவர்களனைவரும் வ்யாஸரிடம் சென்றனர்.  அப்போது என் மகனான வ்யாஸர் கங்கையில் மூழ்கியிருந்தார்.  அவர்களும் காத்துக் கொண்டிருந்தனர்.  ஒரு முறை வெளியே வந்த அவர் "சூத்ரன் நல்லவன், கலி நல்லது" என்று கூறி விட்டு மீண்டும் மூழ்கிவிட்டார்.  மீண்டும் வெளியே வந்த அவர் "ஆமாம், சூத்ரனே மிகுந்த புண்யசாலி" என்று கூறினார்.  சிறிது நேரத்தில் மீண்டும் நீரிலிருந்த எழுந்த அவர் "பெண்களே புண்யவதிகள், அவர்களை விட புண்யம் செய்தவர் யாருமில்லை" என்று கூறிவிட்டு மூழ்கினார்.
பின் ஸநானம், அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு வந்த அவரிடம் இந்த மஹர்ஷிகள் "நீங்கள் கங்கையிலிந்து அவ்வப்போது வெளியே வந்து கூறின வார்த்தைகளின் பொருளை அறிய விரும்புகிறோம்.  ரஹஸ்யமில்லையென்றால் அருள வேண்டும்" என்று விண்ணப்பித்துக் கொண்டனர்.  வ்யாஸர் சிரித்துக் கொண்டே "க்ருத யுகம் புண்ய பலனை பத்து வருஷங்களிலும், த்ரேதாயுகம் ஒரு வருஷத்திலும், த்வாபரயுகம் ஒரு மாதத்திலும் தரும்.  ஆனால் கலியோ ஒரே நாளில் தரும்.  அதேபோல் க்ருதயுகத்தில் கடினமான நெடுந்தவத்தாலும், த்ரேதா யுகத்தில் பெரும் யாகங்களாலும், த்வாபரத்தில் பூஜைகள், அர்ச்சனைகளாலும் அடையும் பயனை கலியில் கேசவனின் நாமஸங்கீர்த்தனத்தாலேயே அடைந்து விடலாம், சிறு முயற்சிகளான இந்த காரணங்கள் பற்றியே கலி நல்லது என்று சொன்னேன்.
அவ்வாறே ப்ராஹ்மணனுக்கும் கடும் கட்டுப்பாடுகள் உள்ளன.  வேதாத்யயனத்தை முறையோடு செய்து, பின் தர்ம வழியில் பொருளீட்டி, அதை வேதத்தில் விதித்துள்ள கர்மங்களில் டம்பமின்றி செலவிட வேண்டும்.  வீண் பேச்சு, செயல்களில் ஈடுபடாது, ஸதா இறை த்யானத்திலேயே இருக்க வேண்டும்.  உணவையும், நீரையும் கூட இஷ்டப்படி எடுத்துக் கொள்ள சுதந்திரம் இல்லை.  சாத்வீகமான உணவை இறைவனுக்குப் படைத்த பின்பே உண்ண வேண்டும்.  புலனடக்கத்தோடு இருக்க வேண்டும்.  இவர்கள் எப்போதும் இப்படி சாஸ்த்ரங்களுக்குக் கட்டுப்பட்டே இருக்க வேண்டும். இந்த கடும் விதிகளாலேயே அவர்களுக்கு புண்ய லோகங்கள் கிடைக்கின்றன.  இல்லையென்றால் ப்ராஹ்மணன் பாபிஷ்டனாகி, தீண்டத்தகாதவனாகி விடுகின்றான்.
வேளாளர்களுக்கு இப்படி எந்த விதக் கட்டுப்பாடுகளும் இல்லை.  வேதாத்யயனம் இல்லை.  மந்த்ரங்களின்றியே எளிய ஹோமங்களைச் செய்யலாம்.  மேல் வர்ணத்தாருக்குப் பணி செய்தே நல்ல உலகங்களை அடைகின்றனர்.  இதனாலேயே சூத்ரர்களை நல்லவர்கள் என்று கூறினேன்.
பெண்களும் இவ்வாறே.  ஆண்கள் சம்பாதிக்க வேண்டும், அதைக் காக்க வேண்டும்.  பின் ஸத்பாத்ரங்களைத் தேடி அதை செலவிட வேண்டும். இதனாலேயே புருஷர்களுக்கு மேலான லோகங்கள் கிடைக்கின்றன.  ஆனால் அவர்களுக்கு உண்மையாகப் பணிவிடை செய்வதாலேயே பெண்கள் புண்ய லோகங்களைப் பெற்று விடுகின்றனர்.  இதனாலேயே பெண்கள் புண்யவான்கள் என்று கூறினேன்" என்றார் வ்யாஸர்.  இவ்வாறாக தங்கள் ஐயம் தீர்ந்த மஹர்ஷிகளும் வ்யாஸரைப் பூஜித்துப் புகழ்ந்து கொண்டே தங்கள் இடத்திற்குச் சென்றனர்.
இவ்வாறாக கலி ஸ்வரூபத்தை மைத்ரேயருக்கு விளக்கினார் பராசரர்

விஷ்ணு புராணம் - 119

06_01 கலியுக தர்மம்
ஸ்ருஷ்டி, அரச வம்சங்கள், மன்வந்த்ரங்கள் இவைகளை இதுவரை பராசரரிடமிருந்து கேட்டு மகிழ்ந்த மைத்ரேயர் கல்பத்தின் முடிவில் (ப்ரஹ்மாவின் பகல்) நிகழும் மஹா ப்ரளயத்தைப் பற்றிக் கூறுமாறு கேட்கிறார்.
"க்ருத, த்ரேதா, த்வாபர, கலி என்று யுகங்கள் நான்கு.  மனிதர்களின் ஒரு மாதம் பித்ருக்களுக்கு ஒரு நாள்.  மனிதர்களின் ஒரு வருஷம் தேவர்களுக்கு ஒரு நாள். இப்படி நமது இரண்டாயிரம் சதுர்யுகங்கள் ப்ரஹ்மாவுக்கு ஒரு நாள் (கல்பம்).  ஒவ்வொரு கல்பத்தின் முதல் க்ருதயுகத்தையும், முடிவான கலியுகத்தையும் விட்டு மற்ற சதுர்யுகங்கள் யாவும் அளவு, தர்மாதர்மங்களில் சமமாகவே இருக்கும்" என்று கூறிக்கொண்டிருக்கும் போதே மைத்ரேயர் கலியின் லக்ஷணங்களைக் கூறுமாறு கேட்கிறார்.
"கலியுகத்தில் ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்ய, சூத்ர முதலான வர்ணங்களும், அவற்றிற்குரிய ஆசாரங்களும் கெடும்.  நான்கு வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள க்ரியைகள் நடக்காது.  தர்ம விரோதமாகக் கல்யாணங்கள் நடக்கும்.  குரு-சிஷ்ய, கணவன்-மனைவி உறவுகளில் தர்மங்கள் அழியும்.  அக்னி கார்யங்களும், தேவ பூஜைகளும் கெடும்.  பலம் உள்ளவன் அரசனாவான்.  கன்னிகையை மணக்க வர்ணம், ஜாதி, கல்வி, ஒழுக்கம் எதுவும் தேவையின்றி பணமிருப்பவனே வரனாவான்.  ப்ராஹ்மணன் எந்த தகுதியுமின்றி தீக்ஷிதனாவான்.  சாஸ்த்ரங்களில் விதிக்கப்படாத க்ரியைகள் ப்ராயச்சித்தமாக ஏற்கப்படும்.  ப்ரியமான வார்த்தைகளே சாஸ்த்ரங்களாகும்.  அவைதீகமான காளி முதலான தேவதைகளையே அனைவரும் வணங்குவர்.  ப்ரஹ்மசர்ய, க்ருஹஸ்த, வானப்ரஸ்த, ஸன்யாஸ ஆச்ரமங்கள் கெடும்.  வைராக்யமில்லாமலேயே எவரும் எந்த ஆச்ரமத்தையும் கொள்வர்.
சாஸ்த்ரத்தை அனுஸரிக்காமல் தங்கள் இஷ்டப்படி உபவாஸம், தீர்த்த யாத்ரை, தானங்களைச் செய்வர்.  கொஞ்சம் பணம் இருப்பவனும் செருக்கடைவான்.  கூந்தல் அழகை மட்டும் கொண்டே பெண்கள் தங்களை அழகிகளாகக் கர்வம் கொள்வர்.  தங்கம், மணி, ரத்னங்கள், துணி முதலானவை குறைந்து அழிந்து போகும்.  இவைகளின்றி பெண்கள் கூந்தலாலேயே தங்களை அலங்கரித்துக் கொள்வர்.  பெண்கள் பணமில்லாத கணவனை விட்டு, பணம் வைத்திருப்பவனைக் கணவனாகக் கொள்வர்.  நல்ல குடும்பம், ஞானம் இவைகளை விட்டு நிறைய பணம் கொடுப்பவனையே ஆண்டவனாகக் கொள்வர்.  புத்தியை ஆத்ம ஞானம் அடைவதில் செலுத்தாது, எவரும் பணம் சம்பாதிப்பதற்கே செலுத்தி, கிடைத்த பணத்திலும் யாகாதி கர்மங்களைச் செய்யாது வீடு கட்டுவதற்கே செலவழிப்பர்.  அந்த வீடுகளும் அவர்களுக்கும், அதிதிகளுக்கும் பயன்படாத வகையிலேயே இருக்கும். 
அழகான ஆடவர்களையே விரும்பி பெண்கள் வேசிகளாவர்.  அதர்ம வழியில் சம்பாதித்திருந்தாலும், அவனிடமே மக்கள் விரும்பிச் செல்வர்.  நெருங்கிய நண்பன் கெஞ்சிக் கேட்டாலும் சுயநலத்தால் உதவ மாட்டார்கள்.  தாழ்ந்தவர்கள் ப்ராஹ்மணர்களை மதிக்க மாட்டார்கள்.  ஜாதியைக் கொள்ளாது பால் தருவதாலேயே பசுவும் கொண்டாடப்படும்.  மழை பொய்த்துப் போகும்.  இதனால் எவரும் உணவின்றி முனிவர்களைப் போல் வேர், கிழங்கு, கனிகளையே உண்டு பின் அதுவும் கிடைக்காமல் பசியால் தற்கொலை செய்து கொள்வர்.  சந்தோஷமும், சௌக்யமும் ஜனங்களிடையே கெடும்.  எங்கும் பஞ்சமும், துன்பமுமே மிகும்.  ஆசாரங்கள் கெடும், குளிக்காமலேயே சாப்பிடுவர்.  தேவ, பித்ரு, அதிதி பூஜைகள் அழியும்.
பெண்கள் நிறைய உண்டும், மெலிந்தும், பேராசையோடும் இருப்பார்கள்.  நிறைய குழந்தைகள் பிறந்தும் ஏழ்மையில் வாடுவார்கள்.  இரண்டு கைகளாலும் தலையை சொரிந்து கொள்வர்.  மாமனார், மாமியார் வார்த்தைகளைக் கேளார்.  சுயநலமும், கோபமும், தாழ்வு மனப்பான்மையும் மிகுந்து தீய சொற்களையே பயன்படுத்துவர்.  நல்ல குடும்பத்துப் பெண்களும் தீயவர்களிடம் ஆசை கொண்டு தங்கள் கணவனுக்கே பல கெடுதிகளைச் செய்வர்.
ப்ரஹ்மசாரிகள் வ்ரதங்கள், அனுஷ்டானங்களின்றியே அத்யயனம் செய்வர்.  க்ருஹஸ்தர்கள் ஹோம, தானாதிகளைச் செய்யார்.  வானப்ரஸ்தர்கள் காட்டில் கிடைக்கும் கிழங்கு, பழ வகைகளை உண்ணாது அருகிலுக்கும் க்ராமங்களுக்குச் சென்று அங்கு கிடைப்பவைகளை உண்பர்.  ஸன்யாஸிகள் பெற்றோர், உடன்பிறந்தோரை விட்டு வந்தும், புதிதாக நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு அவர்கள் வசமாகி விடுவர்.
அந்யாயமாக வரி என்ற பெயரில் அரசர்கள் பணம் பறித்தும், மக்களை நன்கு போஷிக்க மாட்டார்கள்.  வ்யாபாரிகளின் பணத்தைப் பறித்துக் கொள்வர்.  ஸேனை உள்ளவனே அரசனாவான்.  அரச குலத்தோனும் பலமின்றி ஸேவித்து ஊழியம் செய்வான்.  மேல் வர்ணத்தோர் அவர்களுக்கு அடுத்த தாழ்ந்த வர்ணத்தாரின் தொழிலை மேற்கொள்வர்.  நான்காம் வர்ணத்தவர் மேல் வர்ணத்தாரின் தொழில் செய்து ஜீவிப்பர். 
அரசர்களின் உபத்ரவம் தாங்காது மக்கள் வேறு நீச ராஜ்யங்களுக்கு சென்று வசிப்பர்.  வேத மார்க்கம் மறைந்து பாஷண்டிகள் மலிவர்.  அதர்மம் அதிகரிக்கும்.  முறை தவறிய அரசுகளால் மக்களும் முறை தவறுவர்.  வீணான தவங்களைச் செய்து இளமையிலேயே மரணமடைவர்.  ஆயுசு குறையும்.  பெண்கள் ஐந்து, ஆறு வயதிலேயே குழந்தை பெறுவர்.  ஆண்கள் எட்டு, ஒன்பது வயதிலேயே ப்ரஜா வ்ருத்தி செய்யும் சக்தியைப் பெறுவர்.  பன்னிரண்டாவது வயதில் தலை நரைத்து, இருபது வயதுக்கு மேல் வாழமாட்டார்கள். 
அறிவு குறைந்து, வைதீக வேஷம் அதிகரிக்கும். தீய எண்ணத்தால் விரைவிலேயே மக்கள் அழிவர்.  தர்ம கார்யங்கள் பாதியிலேயே தடைபடும்.  இவைகளாலேயே புத்திசாலிகள் கலி வளர்வதை அறிந்து கொள்வர்.  பாஷண்டிகளால் மதி மயங்கிய மக்கள் விஷ்ணுவை ஆராதிக்க மாட்டார்கள்.
தெய்வம், வேதம், ப்ராஹ்மணர்களால் யாருக்கு என்ன பயன்?  நீரால் செய்யப்படும் புண்யாஹவாசனங்கள் எதற்கு? என்ற கேள்விகள் மிகும்.  மழையும், விளைச்சலும் குறையும்.  கோணி போன்ற ஆடைகளை அணிவர்.  மரங்கள் யாவும் வன்னி மரங்களைப் போல் மலிவடையும்.  யாவரும் சூத்ர ஜாதியைப் போலிருப்பர்.  தான்யங்கள் சிறுத்து விடும்.  பால் நெய் போல இருக்கும்.  சந்தனம் கோரைக் கிழங்கு போலாகும்.  கிடைப்பது அரிதாகும்.  ஆண்கள் மாமனார், மாமியார்களையே மதிப்பர்.  மைத்துனர்களுக்கும், அழகிய மனைவியை உடையவர்களுக்கும் மதிப்பு ஏற்படும்.  யார் தாய்? யார் தகப்பன்? என்று தத்வங்களைக் கூறுவர்.  மனதாலும், வாக்காலும், உடலாலும் தினந்தோறும் மக்கள் பாவங்களையே செய்வர்.  சத்யமும், தூய்மையும், தகாத செயல்களில் வெட்கமும் அழியும்.  தர்மம் எங்கோ ஒளிந்து கொண்டு வசிக்கும். 
இந்தக் கொடுமைகளால், க்ருத யுகத்தில் தவத்தால் அடையும் பயன், கலியுகத்தில் நாம ஸங்கீர்த்தனம் முதலிய சிறு முயற்சிகளிலேயே கிடைக்கும்.

Thursday, December 6, 2012

விஷ்ணு புராணம் - 118

05_37. வ்யாஸர் அர்ஜுனனுக்கு உண்மையை அறிவிப்பது.
தாருகனிடமிருந்து க்ருஷ்ணனின் கட்டளைகளை அறிந்த
அர்ஜுனன் உடனே த்வாரகைக்கு விரைந்தான்.  ஈமக்
கடன்களைச் செய்தான். பலராமனின் மனைவி ரேவதி,
க்ருஷ்ணனின் எட்டு பட்ட மஹிஷிகள் ஆகியோர்கள்
தங்கள் கணவர்களோடு சிதையிலேறினர்.  அவ்வாறே
உக்ரஸேனன், வஸுதேவர், தேவகி, ரோஹிணி
ஆகியோரும் அக்னியில் ப்ரவேஸித்து விட்டனர்.
மீதமிருந்த க்ருஷ்ண பத்னிகளையும், வஜ்ரன் முதலான
ஆயிரக் கணக்கானவர்களோடு த்வாரகையை விட்டுப்
புறப்பட்டான் அர்ஜுனன். கலி பரவலாயிற்று.  த்வாரகை
கடலில் மூழ்கியது.  உக்ரஸேனின் ஸுதர்மா என்ற தேவ
ஸபையும், பாரிஜாத மரமும் தேவலோகம் சென்றது.  வரும்
வழியில் நன்கு செழித்திருந்த பஞ்சநதம் என்ற தேசத்தில்
அர்ஜுனன் அனைவருடன் தங்கியிருந்தான்.  அப்போது
அங்கிருந்த ஆயிரக் கணக்கான இடையர்கள்
அர்ஜுனனைத் தாக்கி, அடக்கிவிட்டு க்ருஷ்ணபத்னிகள்
உட்பட எல்லா பெண்களையும், பொருள்களையும்
கொள்ளை கொண்டனர். 

அர்ஜுனனால் காண்டீவத்தில் நாணேற்றக் கூட
முடியவில்லை.  அக்னி பகவான் அளித்திருந்த வற்றாத
அம்பறாத்துணியில் அம்புகள் வற்றின.  அஸ்த்ரங்களை
ஏவும் எந்த மந்த்ரங்களும் அவனுக்கு நினைவுக்கு
வரவில்லை. "பாரத யுத்தத்தின் போது எந்த கைகளும்,
ஆயுதங்களும், தேரும், குதிரைகளும், மந்த்ரங்களும்
எனக்கு உதவியதோ, அவைகளே இப்போது க்ருஷ்ணன்
என்ற தெய்வபலம் உடன் இல்லாததால் வேதாத்யயனம்
செய்யாதவனுக்குத் தந்த தானம் போல் பயனற்றுப்
போனதே, தெய்வபலத்தாலே அன்றோ எந்தக் கடையனும்
வெற்றி அடைகிறான்" என்று வாய்விட்டு வருந்தினான்.
மீதமிருந்தோரை அழைத்துச் சென்று இந்த்ரப்ரஸ்தத்தில்
வஜ்ரனுக்கு முடி சூட்டினான்.

அங்கிருந்து ஹஸ்தினாபுரம் செல்லும் வழியில் ஒரு காட்டில்
சக்தியற்று சென்று கொண்டிருந்த அர்ஜுனனை வ்யாஸர்
கண்டார்.   "அர்ஜுனா! ஏன் இவ்வாறு ஒளியிழந்து
காணப்படுகிறாய்? ஆடு, கழுதைகள் கால்களால் கிளப்பிய
புழுதியில் சென்றாயா? ப்ரஹ்மஹத்தி செய்தாயா?
நம்பிக்கை த்ரோகம் செய்தாயா?  சேரத் தகாத
பெண்களோடு சேர்ந்தாயா? நல்ல உணவை
ப்ராஹ்மணர்களோடு பகிர்ந்து கொள்ளாமல் நீயே
உண்டாயா? ஏழையின் பொருளை அபஹரித்தாயா?
முறத்தின் காற்று படுமாறு நின்று கொண்டிருந்தாயா? எவர்
கண்ணேனும் பட்டு விட்டதா? நகம் பட்ட நீரை
உட்கொண்டாயா? குடத்து நீர் ததும்பி உன் மேல்
தெளித்ததா? தாழ்ந்தவர்களால் வெல்லப்பட்டாயா?
இவைகளாலன்றோ நம் தேஜஸ் குறையும், என்ன நடந்தது?"
என்று கேட்டார். 

அர்ஜுனன் பெருமூச்செறிந்து "எங்களுக்குப் பலம், வீர்யம்,
செல்வம், காந்தி, தெஜஸ், பராக்ரமம் என்று எல்லாமுமாக
இருந்த க்ருஷ்ணன் இப்போது எங்களை விட்டுச் சென்று
விட்டான்.  ஈச்வரனான அவன் எங்களோடு அவனாகவே
ஒரு சாமான்யனைப் போல வந்து பழகினான்.  அவனைப்
பிரிந்த நாங்கள் இப்போது வைக்கோல் அடைத்த
பொம்மைகளைப் போலானோம்.  அவன்
மஹிமையாலேயே பீஷ்மர், த்ரோணர், கர்ணன்,
துர்யோதனன் முதலான பெரும் வீரர்களும் சாம்பலாயினர். 
இப்போது அவனன்றி நான் மட்டுமல்ல, இந்த பூமி
முழுமையுமே சக்தியும், செல்வமுமற்று காணப்படுகிறது. 
நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே என்னையும், என்
அஸ்த்ரங்களையும் தடிகளால் தாக்கி வழியிலிருந்த
இடையர்கள் க்ருஷ்ண பத்னிகளையும், பொருள்களையும்
கொள்ளை கொண்டனர்.  பெரும் வீரர்களையும் வென்று
மூவுலகிலும் ப்ரஸித்தி பெற்றிருந்த என் காண்டீவமும்,
சக்தியும் இடையர் கைத்தடிகளில் தாழ்ந்து அழிந்தது. இதில்
நான் ஒளியிழந்து இருப்பதில் ஒரு ஆச்சர்யமும் இல்லை. 
இவ்வளவிற்குப் பின்னும் நான் வெட்கமின்றி உயிரோடு
இருக்கிறேனே, அதுதான் ஆச்சர்யம்" என்று அழுது
கொண்டே கூறினான்.

வ்யாஸர் அவனுக்குக் காலத்தின் போக்கைக் கூறி
அவனைத் தேற்றுகிறார். "அர்ஜுனா! துக்கப்படாதே,
வெட்கப்படாதே, இவை யாவும் காலத்தினாலெயே
நடக்கிறது.  ப்ராணிகள் உண்டாவது, அழிவதும் அந்த
காலத்தினாலேதான்.  நதிகள், ஸமுத்ரங்கள், மலைகள், பூமி,
தேவதைகள், மனிதர்கள், விலங்குகள், மற்ற தாவரங்கள்
என அனைத்தையுமே பகவான் தான் கால ஸ்வரூபியாக
இருந்து கொண்டு படைத்து, மீண்டும் அழிக்கவும்
செய்கிறான்.  பூபாரம் தீர்ப்பதற்காக பூதேவியின்
ப்ரார்த்தனையைக் கேட்டே க்ருஷ்ணன் இங்கு
அவதரித்தான்.  துஷ்ட ஸம்ஹாரமும் செய்தான்.  அவதார
கார்யம் நிறைவேறிவிடவே மீண்டும் வைகுண்டம் சென்று
விட்டான்".

"அந்த க்ருஷ்ணனே ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்களை
செய்கிறான்.  உன் தோல்வியைக் குறித்து நீ வருந்த
வேண்டாம்.  நல்ல காலம் அமைந்தால் ஒருவனுக்குப்
புகழும், கெட்ட காலத்தில் அவனுக்கே அவமானமும்
உண்டாகின்றன.  பகவத் ஸங்கல்பத்தால் நீ அன்று பீஷ்மர்,
த்ரோணர், கர்ணன் முதலானோரைக் கொன்றாய்.  
தாழ்ந்தவனான உன்னால் அன்று அவர்களுக்கு அவமானம்
நேர்ந்தது.  இன்று உன்னை விடத் தாழ்ந்தவர்களால்
உனக்கு அவமானம் ஏற்பட்டிருக்கிறது.  பகவத்
ஸங்கல்பமில்லையென்றால் நீ அவர்களை அன்று
வென்றதையும், இன்று இடையர்கள் உன்னை வென்றதையும்
யாராவது நம்புவார்களா?  க்ருஷ்ண பத்னிகள் கொள்ளை
போனதும் அவன் ஸங்கல்பத்தினாலேயே.  இவையாவும்
அவன் செயல் என்று ஆற்றிக்கொள்".

"க்ருஷ்ண பத்னிகள் திருடர்கள் கையிலகப்பட்டதன்
காரணத்தையும் கூறுகிறேன் கேள்.  முன்பொரு ஸமயம்
தேவாஸுர யுத்தத்தில் வெற்றியைக் கொண்டாடுவதற்காக
தேவர்கள் மேருமலைக்குச் சென்று கொண்டிருந்தனர். 
அப்போது வழியில் கழுத்தளவு நீரில் இருந்து கொண்டு பல
காலம் ப்ரஹ்மத்தை ஜபித்துக் கொண்டிருந்த அஷ்டாவக்ரர்
என்ற மஹர்ஷியை அப்ஸர ஸ்த்ரீகள் கண்டு வணங்கிச்
சென்றனர்.  அவர்கள் ஸ்தோத்ரங்களால் மனமகிழ்ந்த
மஹர்ஷி அவர்களுக்கு வரமளிப்பதாகக் கூறினார்.  ரம்பை,
திலோத்தமை முதலானோர் தேவரீரின் தர்சனமும், மன
மகிழ்ச்சியுமே போதும் என்று கூறிச் சென்றனர்.  மற்ற
அப்ஸரஸ்ஸுகள் பரவாஸுதேவனையே பதியாக அடைய
வரம் வேண்டினர்.  அவரும் அவ்வாறே அளித்தார். 
அப்போது அவர் நீரிலிருந்து வெளியே வந்தார்.  அவர்
உடலில் இருந்த எட்டு கோணல்களாலேயே அவருக்கு
அஷ்டாவக்ரர் என்ற பெயர் இருந்தது.  அந்த கோணல்கள்
அவர் நீரிலிருந்து வெளியே வந்ததும் தெரிய ஆரம்பித்தன.
 அவர் தோற்றத்தைக் கண்டதும் அந்த அப்ஸரஸ்ஸுகள்
அடக்க முடியாமல் சிரித்து விட்டனர்.  இதனால்
கோபமடைந்த அவர் ஆண்டவனையே பதியாக
அடைந்தாலும் முடிவில் நீங்கள் திருடர்கள் கையில்
அகப்படுவீர்கள் என்று சபித்து விட்டார்.  பின் அவர்கள்
வேண்டிக்கொண்டதால் திருடர்கள் கையில் சிக்கிக்
கொண்டாலும் எந்த களங்கமுமின்றி ஸ்வர்க்கத்தை
அடைவீர்கள் என்று கூறிச் சென்றார்".

"இதுவே விஷயம்.  இது குறித்து நீ வருந்துவதற்கு
ஒன்றுமில்லை.  பிறப்பிற்கு இறப்பும், சேமிப்புக்கு செலவும்,
சேர்க்கைக்கு பிரிவும் தவிர்க்க முடியாதது.  இதையறிந்த
அறிஞர்கள் இவைகளால் பாதிக்கப்படாமல் இருக்கிறார்கள்.
 உங்களுக்கும் முடிவு காலம் நெருங்கி விட்டது. 
அதனாலேயே உங்கள் பலம் அழிந்து விட்டது.  இதை
உடனே தர்மபுத்ரனிடம் சென்று கூறி, 
உடன்பிறந்தோருடன் நாளை மறுதினமே தவம் செய்யக்
காட்டிற்குப் புறப்பட்டு விடுங்கள்" என்று கூறிச்சென்றார்.  
அர்ஜுனனும் அப்படியே செய்தான்.  பரீக்ஷித்திற்கு பட்டம்
சூட்டி விட்டு அனைவரும் காட்டிற்குச் சென்று விட்டனர்."

பராசரர் இவ்வாறு யது வம்சத்திலவதரித்த க்ருஷ்ணனின்
சரித்ரத்தை மைத்ரேயருக்குக் கூறி, இந்த சரிதத்தை
விரும்பிக் கேட்பவனுக்கு எல்லா பாவங்களும் நசித்து
விஷ்ணு லோகம் கிடைக்கும் என்பதை பலச்ருதியாகக்
கூறினார்.