Monday, December 24, 2012

விஷ்ணு புராணம் - 123

06_05 ஆத்யந்திக ப்ரளயம்
மோக்ஷமே ஆத்யந்திக ப்ரளயம்.  ஞானமும், வைராக்யமும் வந்தால்தான் இந்த மோக்ஷத்தை அடைய முடியும்.  நாம் அனுபவிக்கும் விஷயங்களில் இருக்கும் கஷ்டங்களையெல்லாம் அறிந்து கொண்டால் தான் அந்த விஷயங்களையெல்லாம் அதனால் வெறுத்து அவற்றிலிருந்து விடுபட வழி தேடத் தோன்றும்.  ஆத்யாத்மிகம், ஆதிபௌதிகம், ஆதிதைவிகம் என்ற தாபத்ரயங்களை இதற்கு நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

ஆத்யாத்மிக தாபம் சரீர சம்பந்தமாகவும், மன சம்பந்தமாகவும் வரலாம்.  உடலுக்கு வரும் வ்யாதிகள் சரீர சம்பந்தமான தாபங்கள்.  காம, க்ரோதாதி வ்யாதிகள் மன சம்பந்தமானவை.  இவ்வாறே மற்ற விலங்குகள், பறவைகளால் உண்டாகும் துக்கங்கள் ஆதிபௌதிகம்.  இயற்கையான சீதோஷ்ணங்களால் உண்டாகும் துக்கங்கள் ஆதிதைவிகமாகும்.  இந்த தாபங்கள் கர்ப்ப ஸம்பந்தத்தாலும், நம் வினைகளாலும், அஞ்ஞானம், நரகம் இவைகளாலும் உண்டாகி ஆயிரக்கணக்கில் சூழ்ந்து இருக்கின்றன.

கர்ப்பவாஸ துக்கங்கள்
கர்ப்பத்தில் இந்த உயிர் மிகவும் ம்ருதுவான சரீரத்தோடு இருக்கிறது.  மலங்களில் நடுவே தாயின் வயிற்றில் வசிக்கிறது.  உல்பம் என்ற தோல் இதன் உடலை மூடியிருக்கிறது.  முதுகு, கழுத்து எலும்புகள் வளைந்து, கை, கால்களை நீட்ட முடியாமல், மூச்சு விடவும் கஷ்டப்பட்டுக் கொண்டு, இந்த உயிர் அப்போது முடங்கிக் கொண்டிருக்கிறது.  தாயின் உணவில் இருக்கும் காரம், புளிப்புகளால் இது கடுமையாக தாக்கப்படுகிறது.  தன் அறிவைக் கொண்டு தான் செய்த வினைகளாலேயே இப்போது கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பதை அறிந்து மிகுந்த வேதனையோடு இருக்கும்.

பின் ப்ரஹ்மத்தின் காற்றால் மேலும் சரீர எலும்புகள் நொறுங்கும்படி ஒடுக்கப்பட்டு, ப்ரஸவ வாயுக்களால் தலை கீழாக திருப்பப்பட்டு மல, மூத்ர சேற்றுப்பூச்சோடு மிகவும் ச்ரமப்பட்டு தாயின் கர்ப்பத்திலிருந்து வெளியே வந்து விழுகிறது.  துர்நாற்றமுடைய யோனி த்வாரத்திலிருந்து விழும்போது முட்களால் குத்தப்படுவது, வாளால் அறுக்கப்படுவது போன்ற துன்பங்களை அனுபவித்து ஒரு புழு வெளியே வந்து விழுவதைப் போலவே இந்த ஜீவனும் வந்து விழுகிறது.  வெளியே விழுந்ததும் வெளிக்காற்றான சடம் என்ற காற்று பட்டதும் மூர்ச்சையடைந்து கர்ப்பவாஸத்தில் உண்டான விவேகத்தை முழுதும் மறந்து விடுகிறது.

பிறந்தபிறகும் உடல் அறித்தால் சொறிந்து கொள்ள முடியாது.  உடலைத் தன்னிஷ்டப்படி திருப்ப முடியாது. குளிப்பது, குடிப்பது, உண்பது என எதுவும் ஏனையோர் இஷ்டப்படியே.  எண்ணத்தை வெளிப்படுத்தவும் முடியாது.  மல, மூத்ரங்கள் நிறைந்த படுக்கை.  எறும்பு, கொசுக்கள் கடித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.

இதன் பின் யௌவனம் வந்த பின்பும் அஞ்ஞானத்தால் அறிவிழந்து சிற்றின்பங்களிலேயே நாட்டம் செலுத்துகிறது இந்த ஜீவன்.  நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எங்கே செல்வேன்? நான் பிறந்த காரணம் என்ன? ஏன் இப்படிக் கட்டுண்டிருக்கிறேன்? காரண, கார்யங்கள் என்ன? எதைச் செய்யலாம்? எதைச் செய்யக் கூடாது? எதைப் பேசலாம்? பேசக்கூடாது? தர்மாதர்மங்கள் எவை? எதில் குணம் உள்ளது? எதில் தோஷம் உள்ளது? இவையெதிலுமே ஆர்வம் செலுத்தாது விலங்குகளைப் போல புணர்வதையும், உண்பதையுமே முக்யமாகக் கொண்டு காலம் கழிக்கிறது இந்த ஜீவன்.  தமோகுணத்தால் வந்த அஞ்ஞானத்தால் கெட்ட கார்யங்களைச் செய்கிறான்.  வைதீக கார்யங்கள் அழிகின்றன.  இதனால் மேலும் புண்ய, பாவங்களைச் சேர்த்துக் கொள்கிறான்.

முதுமை எய்தியதும் உடல் சிதைந்து விடுகிறது.  பற்களும், அவயவங்களும் ஆடி விடுகிறது.  பற்கள் விழுந்தும் விடுகிறது. கண்பார்வை மங்கி, தலை நரைத்து, உடல் சுருங்கி விடுகிறது.  கருவிழிகள் கண்குழிகளில் ஒடுங்கி விடும்.  முதுகெலும்பு வளைந்து, மற்ற எலும்புகள் வெளிப்படையாகத் தெரிய, ஜீர்ண சக்தி குறைந்து, நடக்கவும், படுக்கவும் முடியாமல் துன்படைகிறது இதே ஜீவன்.  எதற்கும் அடுத்தவர் உதவியை நாடி, இந்த்ரியங்கள் செயலிழந்து வார்த்தையும் வெளிவராது அனைவரிடமும் அவமானப்படுகிறான்.  தான் இளமையில் அனுபவித்தவைகளை முன் ஜன்மத்தில் நடந்தவைகளைப் போல நினைக்கிறான்.

மரணத் தருவாயிலும் சிந்தையை மனை, மக்கள், சுற்றம், செல்வம் இவைகளில் செலுத்தி, கவலை கொள்கிறான்.  வ்யாதிகள் ரம்பங்களைப் போலவும், யம பாசங்கள் போலவும் வாட்டி, வதைக்க, கண்கள் சுழல, உடல் உதற, நாக்கு உலரத் திண்டாடுகிறான்.  உதான வாயு மேலெழும்பித் தொண்டையை அடைக்க, நெஞ்சில் கர், கர் எனக் கோழைச் சப்தம் உண்டாகி, யமபடர்கள் பிடித்திழுக்க, பழகிய உடலை விட்டு பெரும் கஷ்டத்தோடு இந்த ஜீவன் மிகுந்த தாபத்தோடும், பசி, தாகத்தோடும் வெளிக்கிளம்புகிறான்.

வெளிக்கிளம்பியதும் தன் தீவினைப்பயன்களை அனுபவிக்க யாதனா சரீரத்தைப் பெறுகிறான்.  யமகிங்கரர்கள் ஜீவனைப் பாசத்தால் கட்டி, தடியால் அடித்து, துன்பங்கள் நிறைந்த பாதையில் நடத்தி யமனிடம் இட்டுச் செல்கிறார்கள்.  பின் காய்ந்த மணலிலும்,  நெருப்பிலும் வாட்டுதல், கத்தி, வாள், கோடரிகளால் பிளப்பது, சூலத்தில் இடுவது, கொடிய விலங்குகளிடம் உணவாக விடுவது எனப் பல வகையில் துன்புறுத்துவர்.  ஸ்வர்க்கத்திற்கு சென்றாலும் புண்ய பலன் தீர்ந்து என்று மீண்டும் பிறந்து துன்பத்தை அனுபவிக்க நேருமோ என்ற நினைப்பிலேயே கிடைக்கும் ஸுக விஷயங்களையும் அனுபவிக்க முடியாமல் தவிக்கிறான்.  பின் மீண்டும் பிறப்பு.  எப்போது இறப்போம் என்பதும் தெரியாது.  இப்படி மீண்டும், மீண்டும் இந்த சக்ரத்தில் ஜீவனுக்கு, எப்படி பருத்திக் கொட்டையை பஞ்சுகள் சூழ்ந்திருக்குமோ அப்படி எங்கும் துன்பமே.  ஸுகம் தரும் என்று நினைக்கும் பல விஷயங்களையும் ஆராய்ந்து பார்த்தால் துன்பமே அதிகம்.

கொடிய ஸூர்யனைப் போன்ற இந்த துக்கங்களிலிருந்து ஜீவன்களுக்கு விடுதலை மோக்ஷமே.  அந்த மரமே ஸம்ஸார துக்கமென்கிற இந்த வெயிலில் வாடிய ஜீவன்களுக்கு நிழல் தந்து ஸுகம் அளிக்கும்.  வேறெங்கும் அது கிடைக்கப் போவதில்லை.  பிறப்பு, இறப்புகளால் உண்டாகும் மூவகைத் துன்பங்களுக்கும் இறைநினைப்பே மிகச்சிறந்த ஒரே மருந்தாகும்.  இறைவனை நினைத்து அனுபவிப்பதில் உண்டாகும் ஆனந்தம் மற்றெதையும் மறக்கச் செய்து விடும்.  துன்பம் சிறிதும் கலவாத அத்தகைய உயர்வுடையது பகவத்ப்ராப்தி.

அதனால் அறிஞர்கள் இந்த ஸுகத்தைப் பெற முயற்சிக்க வேண்டும்.  நம் கார்யங்களால் ஸித்திக்கும் ஆகமஜம், விவேகத்தால் ஸித்திக்கும் விவேகஜம் என்ற இருவகை ஞானமும், அதற்குரிய செயல்களுமே இதை அடையும் வழி.  சாஸ்த்ரங்களைப் படிப்பதாலும், நடைமுறைப்படுத்துவதாலும் கிடைக்கும் ஞானம் விளக்கு போன்றது. இது அஞ்ஞானத்தால் உண்டான இருளைக் களைந்து ஆத்மாவிற்கும், சரீரத்துக்கும் உள்ள வேற்றுமை, ஜீவாத்மா, பரமாத்மாவிற்குள்ள வேற்றுமை, இவைகளின் உண்மை ஸ்வரூபம் முதலியவைகளை விளங்கச் செய்கிறது.  நம் நற்கார்யங்களால் கிடைக்கும் இந்த ஞானம் ஆகமஜம்.  விவேகஜந்ய ஞானம் இதைவிட உயர்ந்தது.  அது ஸூர்யனுக்கு ஒப்பானது.  விளக்கை விட ஸூர்யன் எப்படிப் பொருட்களைத் தெளிவாக நமக்குக் காட்டுமோ அதுபோல இந்த விவேகஜம் அஞ்ஞானத்தை அடியோடு அழித்து விடும்.  இந்த காரணத்தாலேயே மனு ஸ்ம்ருதி வேதார்த்தங்களான உபநிஷத்துகள் போதிக்கும் விவேகஜன்ய ஞானத்தை பரப்ரம்ஹம் என்றே கோஷிக்கிறது.

அதர்வ வேதத்தைச் சேர்ந்த முண்டகோபநிஷத்  விவேகஜன்ய ஞானத்தை பரவித்யை என்றும், ஆகமஜன்ய ஞானத்தை அபர வித்யை என்றும் கூறுகிறது.  பரப்ரஹ்மமான இந்த விவேகஜமே இறைவனாகும்,  ஜீவன்முக்தர்களும் அதுவே.  பகவான் என்ற பதத்திற்குப் பொருள் படைத்து, காத்து, பின் தன்னுள் லயப்படுத்துதலே.  ஸம்ஸ்க்ருத பதமான "பக" என்பது ஞானம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் என்ற ஆறு குணங்களைக் குறிக்கும்.  இந்த குணங்களை உடையவனே பகவான் எனக் குறிக்கப்படுகிறான்.  இந்த சொல்லே முக்தர்களைக் குறிக்கும் போது ப்ரஹ்மத்தை அறிந்தவர் என்ற பொருளில் உபயோகிக்கப்படுகிறது.  வாஸு என்ற நாமம் எங்கும் நிறைந்திருப்பதையும், அவனிடத்திலேயே எல்லாம் வஸிக்கின்றன என்பதையும் குறிக்கும்.

இந்த விஷயத்தை முன்பே ஒரு ஸமயம் கேசித்வஜன் என்பவர் காண்டிக்ய ஜனகருக்கு உபதேஸித்திருக்கிறார்.  இந்த வாஸுதேவன் ப்ரக்ருதியும், அதன் கார்யமான துக்கமும், அஞ்ஞானமும் அற்றவன்.  அவன் அசேதனனுமில்லை, சேதனனுமில்லை.  அனைத்திற்கும் ஆத்மா அவன்.  அனைத்து நற்குணங்களும் நிறைந்தவன்.  தன் சக்தியின் சிறு அம்சத்தாலேயே உலகனைத்தையும் தாங்கக் கூடியவன்.  ஸாது ஸம்ரக்ஷணத்திற்காக தன்னிச்சைப்படியே பல அவதாரங்களை எடுக்கக் கூடியவன்.  உலகிற்கு எல்லா நன்மைகளையும் தருபவன்.  முன்பு கூறிய ஷட்குணங்களின் இடமாய் இருப்பவன்.  கர்மங்களும், அதன் தோஷங்களும் அற்றவன்.  பரப்ரஹ்மமாயிருக்கையில் அவ்யக்தனாக நமக்கு விளங்காதவனாகவும், ராம, க்ருஷ்ணாதி வ்யூஹ நிலைகளில் வ்யக்தமாக நமக்கு விளங்கும்படி இருப்பவனும் இவனே.  ஸர்வக்ஞன், ஸர்வ சக்தன், ஸர்வேச்வரன்.  இவனையே சாஸ்த்ரஞ்ய ஞானம் பொதுவாகக் கூறுகிறது.  விவேகஜம் தெளிவாகக் கூறுகிறது.

No comments:

Post a Comment