Thursday, December 17, 2009

விஷ்ணு புராணம் - 1

விஷ்ணுபுராணக் குறிப்புகள்:
க்ருஷ்ண த்வைபாயனர் என்ற வ்யாஸர் தொகுத்தருளிய 18 புராணங்களில் இதுவும் ஒன்று.

எங்க தாத்தா "அமரபாரதி" நடராஜ சர்மா என்று மஹாபெரியவாளால் அழைக்கப்பட்டவர். ஸம்ஸ்க்ருத பண்டிதர், ஜிம்னாஸ்டிக் கேப்டன், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதில் ஒரு கண்ணை இழந்தவர், வேத பண்டிதர், சமுதாய மற்றும் க்ராம மக்களின் முன்னேற்றத்தில் உழைத்தவர், திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளியில் பணி புரிந்தவர், கால்பந்தாட்ட வீரர், சொற்பொழிவாளர், ஆசார, அனுஷ்டானங்களில் ஈடுபாடு மிகுந்தவர் என பல முகம் கொண்டவர் (சுருக்கமாகச் சொன்னால் அந்த காலத்தவர்). அவரும், குடும்பத்தின் மற்ற பெரியவர்கள், புஸ்தகங்கள் எனவற்றில் விஷ்ணு புராணத்தைப் பற்றிக் கிடைத்ததையும், என் கருத்தையும் இங்கு பகிர்ந்து கொள்ள ஆரம்பிக்கிறேன். ஆசியுங்கள்

வேதம் - அரச கட்டளை போன்றது. உண்மை சொல், தர்மம் செய், உணவை அதிகமாக உண்டாக்கு, உணவை நிந்திக்காதே என பலவற்றை கட்டளையிடும். ஏன், எப்படி, எதற்கு என்பதெற்கெல்லாம் அதிகமாக பதில் சொல்லாது. இப்படி சொன்னால் கேட்பவர்கள் சிலர்.

ஸ்ம்ருதி - பராசர ஸ்ம்ருதி போன்றவை வேதத்தில் சொல்லப்பட்டவைகளை எப்படி, எப்போது, எதற்காக என கொஞ்சம் விளக்கிக்கூறுபவை. இவைகளை நண்பர்கள் வாக்கு போன்றவை என்பர். நண்பன் சொல்லும் விதத்தில் சொன்னால் இன்னும் கொஞ்சம் அதிகமானோர் கடைபிடிப்பர்.

புராணம் - இவைகள் மனைவி வாக்கு போன்றவை. வேதமும், ஸ்ம்ருதிகளும் சொன்னபடி வாழ்ந்தவர்களாக சிலரைப் பற்றிக் கூறி, நடைமுறைக்கு சாத்தியமே என்று இன்னும் எல்லோருக்கும் புரியும்படி நயமாக, பிடித்தமுறையில், இதமாக சொல்பவை.

நம் மதத்தில் நம் வாழ்க்கை, பழக்க வழக்கங்களுக்கேற்ப கடவுள் வடிவங்களும் பல. இந்த புராணங்கள் அப்படிப்பட்ட வடிவங்களை பரம்பொருளாக சித்தரித்து, சிறப்பாகவும், உயர்வாகவும் கூறி வழி நடத்தக் கூடியவைகள். சரி கதையைப் பார்ப்போம்.

அம்சம் - 1, அத்யாயம் - 1 (1.1)

ஒரு நாள் காலை, புத்தி புத்துணர்வோடு இருக்கும் நேரம். வ்யாஸரின் தந்தை பராசரர் அப்போது செய்யவேண்டிய ஜப, பூஜை, வேலைகளை முடிக்கிறார். அவர் சித்தமாக இருப்பதைக் கண்ட அவரது சிஷ்யர் மைத்ரேயர் அவரை முறைப்படி நமஸ்கரித்து, பரமாத்ம தத்துவத்தை அறிய விரும்புகிறார்."குருதேவரே, வேதங்கள், சிக்ஷை, வ்யாகரணம் போன்ற அவற்றின் அங்கங்கள், ஸாஸ்த்ரங்கள் என அனைத்தையும் தங்களிடம் பயின்று, தங்களருளாலேயே கற்றோரும் பாராட்டும் விதம் தேர்ச்சியும் அடைந்துள்ளேன். இவ்வாறே கீழ்கண்டவைகளையும் அறிய விரும்புகிறேன்.

உலகம் எப்படி இருந்தது, மறுபடி எப்படி உண்டாகப்போகிறது, எதிலிருந்து உண்டாகிறது, எப்படி நிலை பெறுகிறது, எங்கு மறுபடி லயமடைகிறது. பஞ்ச பூதங்கள், தேவர்கள், கடல், மலை, சூரியன் முதலானவற்றின் அளவுகள், உருவங்கள், தேவ, மனு, கல்பம், ப்ரம்மாவின் காலம், யுகங்கள், ப்ரளயம், யுக தர்மங்கள், தேவ, ரிஷி, அரசர்களின் வரலாறு, வ்யாஸர் வேதங்களை வகுத்த விதம், வர்ண, ஆச்ரம தர்மங்கள் இவையாவற்றையும் அறிய விரும்புகிறேன்" என்றார்.

உலகமே பரப்ரும்ம ஸ்வரூபம்தான். இந்த கேள்விகளுக்குப் பதில் கூற வேண்டுமென்றால் அந்த ஸ்வரூபத்தையே விளக்கியாக வேண்டும். அவை சிஷ்யனுக்குப் புரிய வேண்டும். அவன் ச்ரத்தையோடும், கவனத்தோடும் கேட்டு க்ரஹித்துக் கொள்ள வேண்டும். ஒரு விஷயத்தை விளக்குவதற்கு முன் அதனைப் பற்றியும், அதைத் தான் அறிந்த விதத்தையும் கூறுவதால் சிஷ்யனுக்கு அதில் இன்னும் விருப்பமும் வரும், ஆசிரியரும் முக்யப்பாடத்திற்கு சீடனைத் தயார் படுத்துவதற்கும் ஆகும், தனக்குப் போதித்த ஆசிரியர்களையும் நினைவு கூறலாம். இதையே பராசரரும் செய்தார். இந்த விஷயங்கள் அனைத்தும் தான் அறிந்திருப்பதாகவும், அதற்குக் காரணமாயிருந்த பூர்வ வரலாற்றையும் மைத்ரேயருக்கு கூற ஆரம்பிக்கிறார்.

கல்மாஷபாதன், ககுத்ஸ்த வம்சத்தில் அவதரித்த ஓரரசன், வஸிஷ்டரின் சிஷ்யன். இவன் ஒரு சமயம் காட்டில் வெகு நேரம் வேட்டையாடி, களைத்து ஓர் ஒற்றையடிப் பாதையில் நடந்து வந்து கொண்டிருந்தான். எதிரில் வஸிஷ்டரின் மூத்த குமாரரும், தேஜஸ்வியுமான சக்தி என்ற ரிஷி வந்து கொண்டிருந்ததைக் கண்டான். ஓரிடத்தில் இருவரும் சந்திக்க நேர்ந்தது. யாருக்கு யார் வழி விடுவது? கல்மாஷபாதன் தான் அரசனென்பதால் ரிஷியை வழிவிடுமாறு செருக்குடன் கூறினான். "ப்ராஹ்மணனும், அரசனும் எதிரெதிரில் சந்தித்துக் கொண்டால் அரசனே வழிவிட வேண்டும்" என்கிறது சாஸ்திரம். இதனை தன் தந்தையின் சிஷ்யனுக்குப் போதிக்க எண்ணி அவனையே வழிவிடுமாறு இதமாகக் கூறுகிறார் ரிஷி. காலத்தின் கோலம். கோபம் கொண்ட அரசன் ரிஷியை துன்புறுத்தி, சாட்டையால் அடித்து வழிவிடக் கூறுகிறான். அப்போது தானும் சினம் கொண்ட சக்தி மஹரிஷி, "நீ ராக்ஷஸனைப் போல் துன்புறுத்துவதால், மனித மாம்ஸங்களை உண்ணும் ராக்ஷஸனாகவே ஆவாய்" என சபித்து விடுகிறார்.

பரம்பரை பரம்பரையாக வஸிஷ்டரின் சீடர்களாக இருந்த வம்சத்தை தனக்கு சீடர்களாக ஆக்கிக் கொள்ளவும், எப்போதும் வஸிஷ்டரிடம் கோபப்போக்கும் கொண்டவருமான விச்வாமித்ரர் அப்போது அங்கு வந்து சேர்கிறார். இந்த சந்தர்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த அவர் தான் அவனுக்குத் துணையாக இருப்பதாகக் கூறித் தேற்றுகிறார். எனினும் ருஷியின் சாபத்தால் "கிங்கரன்" என்ற ராக்ஷஸன் வசம் தன்னை இழந்து, சோகத்தோடு நாடு திரும்பிக் கொண்டிருந்தான்.

வழியில் பெரும் பசியோடிருந்த ஒரு ப்ராஹ்மணன் அரசனை வணங்கி தனக்கு மாம்ஸத்தோடு கூடிய அன்னத்தை அளிக்குமாறு பெரும் மகிழ்ச்சியுடன் வேண்டுகிறான். அரசனும் ஏற்பாடு செய்வதாகக் கூறிவிட்டு அரண்மனைக்குத் திரும்புகிறான். நடுநிசி. அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். பரிசாரகனை எழுப்பி உடனே மாம்ஸத்தோடு கூடிய உணவு வகைகளுக்கு ஏற்பாடு செய்யுமாறுக் கூறுகிறான். அரண்மனையிலும் அப்போது மாம்ஸம் இல்லை. எங்கும் தேடியும் கிடைக்கவுமில்லை. இதனை அரசனிடம் பரிசாரகர்கள் கூறுகின்றனர். அரசன் விதிவசத்தாலும், ப்ராஹ்மணனுக்கு அளித்த வாக்கை நினைத்தும் நர மாம்ஸத்தையாவது ஏற்பாடு பண்ணுமாறு கட்டளையிடுகிறான். அப்படியே செய்து, அந்த உணவை ப்ராஹ்மணனிடம் சேர்க்கின்றனர். நரமாம்ஸத்தை அறிந்து கொண்ட ப்ராஹ்மணர், "அரக்கர் மட்டுமே உண்ணும், உண்ணத்தகாத மாம்ஸத்தைத் தனக்கு அளித்ததாகக் கூறி, அவ்வரசனும் நரமாம்ஸம் உண்ணும் அரக்கனாகக் கடவான்" என சபித்துவிடுகிறார். சாபம் வலுப்பெற்று முழுவதுமாக ராக்ஷஸ குணம் கொண்டு அங்குமிங்கும் திரிய ஆரம்பித்து விடுகிறான் அரசன்.

மேலும் கோபம் கொண்டதாலும், ராக்ஷஸ குணத்தாலும் அறிவிழந்த அரசன் இவையனைத்திற்கும் அந்த ருஷியே காரணம் என அவரிடம் செல்கிறான். "நீங்கள்தான் இவையனைத்திற்கும் காரணம், என் ராக்ஷஸத்தன்மையே உங்களிடமே ஆரம்பிக்கிறேன்" எனக் கூறி அவரை அடித்துக் கொன்று தின்று விடுகிறான். மேலும் விச்வாமித்ரரின் தூண்டுதலால் வஸிஷ்டரின் வம்சத்தையே அழிக்க நினைத்து அவரின் மீதமுள்ள நூறு புத்ரர்களையும் கொன்று தின்றான். விச்வாமித்ரர், அரசன் இருவரின் கோபமும் ஒருவாறு தணிந்தது.

இவ்வளவு நடந்தும் அளவு கடந்த பொறுமையும், கருணையும், தவமும் கொண்ட வஸிஷ்டர் ஆத்திரப்படவில்லை. மாறாக வாட்டி வதைத்த புத்ர சோகத்தால் பலமுறைத் தன்னையே மாய்த்துக் கொள்ள முயல்கிறார். அவர் தவம் அவரை அழியவிடாமல் அனைத்திலிருந்தும் காக்கிறது. அமைதி கொள்கிறார். சக்தி மஹரிஷி இறக்கும் போது, அவர் மனைவி, "அத்ருச்யந்தி" கர்ப்பவதியாக இருக்கிறாள். ஒருநாள் அவளது ஆச்ரமத்திற்குச் சென்று ஆறுதல் கூறிக்கொண்டிருக்கும்போது, வேதம் சொல்லும் குரலோசையைக் கேட்கிறார். சக்தியின் குரலை ஒத்திருக்கும் அந்தக் குரலைத் தவிர அங்கு யாரையும் காணவில்லை. திகைக்கும் வஸிஷ்டரிடம் அவரது நாட்டுப்பெண் அந்த ஒலி தன் வயிற்றிலிருந்தே வருவதாகவும், தந்தை தினமும் ஓதிய வேதத்தைக் கேட்டுக்கொண்டிருந்த கரு, அப்போதிலிருந்தே தானும் ஓதி வருவதாகக் கூறுகிறாள். தன் பேரனை நினைத்து, புத்ர சோகத்தைக் கொஞ்சம், கொஞ்சமாக மறந்து, பெருமகிழ்ச்சியில் திளைக்கிறார்.

ஒரு நல்ல நாளில் பராசரர் என்ற அந்த அற்புதக் குழந்தைப் பிறக்கிறது. தன்னை சீரும், சிறப்புமாக வளர்த்து வரும் தாத்தாவையே தந்தை என நினைத்து "அப்பா, அப்பா" என அழைத்தும் வளர்ந்து வருகிறது. ஒரு நாள், பராசரனின் தாய் வேறு வழியின்றி, "உன் அப்பாவை ஒரு ராக்ஷஸன் அடித்துத் தின்று விட்டான். நீ அப்பா என்று அழைத்துவருபவர் உன் அப்பா இல்லை. அவர் உன் தாத்தா" என உண்மையைக் கூறி விடுகிறாள். குழந்தையின் சோகம் ராக்ஷஸர்களின் மேல் பெரும் கோபமாக உருவெடுக்கிறது. ராக்ஷஸர்களை அழித்து விட வேண்டும் என்ற உறுதியோடே குழந்தை வளர்ந்தும் வருகிறது.

தக்க பருவமும், கல்வியும் பெற்றபோது ராக்ஷஸர்களைக் கூண்டோடு அழிக்கும் நோக்கத்தில் பல நாட்கள் செய்யத்தக்க ஸத்ரயாகத்தை ஆரம்பித்து விடுகிறார் பராசரர். ஆயிரக்கணக்கில் ராக்ஷஸர்கள் மந்திரத்தால் தூண்டப்பட்டு யாகத்தீயில் விழுந்தழிந்தனர். பராசரர் மனமும் சந்தோஷப்பட்டது. இதைக் கண்டு வஸிஷ்டர் பெரும் துயரம் அடைந்தார். தனக்கு எத்தகைய தீங்கிழைத்தாலும், அவர்கள் மேல் பதிலுக்குக் கோபப்படாதவர் அவர். இப்போது யாரோ ஒரு ராக்ஷஸன் செய்த தவறுக்கு, பலர் அழிவதைக் கண்டு மிகவும் வேதனையடைந்தார் அவர். தன் பேரனிடம் சென்று, "யாரோ ஒருவன் செய்த தவறுக்கு பலரை வாட்டுவதும், தண்டிப்பதும் தவறு. உன் தந்தை இறந்ததற்கு உன் தந்தையும் காரணமே. கல்மாஷபாதனை ராக்ஷஸனாக சபித்தது உன் தந்தையே. அதை அவரிடமே காண்பித்தான் அவன். கோபம் அறிஞர்களுக்கு ஆகாதது. கோபத்தை விட்டுவிடு. நன்கு யோசித்து ஆராய்ந்து பார். கோபம் அறிவையும், தவத்தையும், புகழையும், பக்தியையும் அழித்துவிடும். சாந்தமடைவாயாக" என வாஞ்சையுடன் போதிக்கிறார்.

தாத்தாவின் சொல்லை ஆராய்ந்த பேரனும் உடனே யாகத்தை நிறுத்தி, தாத்தாவின் கவலையைப் போக்கி, சந்தோஷப்படுத்துகிறார். அப்போது ராவண, கும்பகர்ணாதி ராக்ஷஸர்களின் குலபதியும், ப்ரஹ்மாவின் புதல்வருமான புலஸ்த்யர் என்ற மஹரிஷி அங்கு வருகிறார். அவரை வஸிஷ்டர் வரவேற்று, உபசரித்து மகிழ்கிறார். அவரும் யாகம் நிறுத்தப்பட்டதை அறிந்து பெருமகிழ்ச்சியடைகிறார். அவர் பராசரரை அழைத்து ஆசிர்வதிக்கிறார். "பராசரா, உன் கோபம், ராக்ஷஸர்களுடன் ஏற்பட்ட பகை ந்யாயமானது. அதை நானறிவேன். ஆனால் உன் தாத்தாவின் சொல்லுக்கு மதிப்பளித்து யாகத்தை நிறுத்தியது உன் மேலான பொறுமையைக் காட்டுகிறது. இந்த யாகம் மேலும் தொடர்ந்திருந்தால் என் வம்சமே அழிந்திருக்கும். அவர்கள் மேல் கோபமிருந்தும், அவர்கள் உன் பொறுமையால் அழியாமல் காக்கப்பட்டார்கள். நான் பெருமகிழ்வடைகிறேன். இதற்குப் பதிலாக உனக்கு நான் வரமளிக்கிறேன். நீ மிக உன்னதமான ஒரு புராணத்தை இயற்றுவாய். மேலும் பரம்பொருளைப் பற்றிய உண்மைகளையும், பலனை வேண்டியோ, வேண்டாமலோ செய்யும் கர்மாக்கள், மற்ற பல ரகஸ்யங்கள் உனக்குத் தானாகப் புலப்படும். இவற்றில் எந்தவொரு சந்தேகமும் இல்லாத தெளிவான அறிவை நீயடைவாய்" என்றார். வஸிஷ்டரும் அதனை உறுதிபடுத்தி பராசரரை ஆசிர்வதித்தார்.

மேற்கண்ட வரலாற்றை மைத்ரேயரின் கேள்விகளால் நினைவுபடுத்திக் கொண்ட பராசரர், அவற்றையெல்லாம் மைத்ரேயரிடம் கூறி, "என் தாத்தா வஸிஷ்டரும், மஹரிஷி புலஸ்த்யரும் அளித்த வரம் பலிக்கும் காலம் வந்துவிட்டது. நீ கேட்ட கேள்விகளுக்கு பதிலாக நான் ஒரு புராணத்தைக் கூறுகிறேன். நீ தெளிவடைவாயாக" என்றார்.

ஒரு சமயம் வைசம்பாயனர், ஜனமேஜய மஹாராஜனையணுகி அவனுக்குப் பாரதக்கதையைக் கூற எண்ணினார். பலமுறை முயன்றும் "நேரமில்லை, நேரமில்லை" எனக் கூறிவந்தான். ஒரு பர்வத்தையாவது அல்லது ஒரு அத்யாயத்தையாவது கேள் என்றார். அவன் அதற்கும் நேரமில்லையென்றான். வைசம்பாயனர் யோசித்தார். அவனுக்கு விருப்பத்தை உண்டாக்கி, முழுபாரதத்தையும் அவனுக்கு சொல்லிவிடவேண்டும் என நினைத்தார். அவனிடம் சென்று ஒரு ச்லோகத்தையாவது கேட்குமாறுக் கூறினார். அவனும் சரியென இசைந்தான். இதை எதிர்ப்பார்த்திருந்த வைசம்பாயனர் உடனே அவன் ஆவலைத் தூண்டுமாறு, "விராட நகரத்தில் அர்ஜுனன் பசுக்களை தான் ஒருவனாக பலரை எதிர்த்து மீட்டதை அறிந்தும், அசோக வனத்தை ஹனுமன் அழித்ததைக் கண்டும் துரியோதனனும், ராவணனும் மூடத்தனமாக பலமுறை யுத்தம் செய்தார்கள்" என்றார். இப்படி முழுதும் விளங்காததாகக் கூறியவுடன் அரசனுக்கு ஆவல் அதிகரித்தது. அவன் கேள்விகள் கேட்க ஆரம்பித்தான். வைசம்பாயனரும் முழுக்கதையையும் கூறி தன் வேலையை முடித்துக்கொண்டார்.

இதைப்போலவே சுருங்கக் கூறி, ஆர்வத்தைத் தூண்டி, பின் விளக்கமாகக் கூற நினைத்தார். உலகம் எதனிடமிருந்து உண்டாகிறது - உலகை விஷ்ணுவே மீண்டும், மீண்டும் ஸ்ருஷ்டித்து விளையாடுகிறார். எப்படி ஸ்ருஷ்டிக்கிறார் - முன்பிருந்தது போலவே ஸ்ருஷ்டிக்கிறார். எங்கு லயமடைகிறது - ப்ரளய காலத்தில் இந்த உலகத்தில் விஷ்ணுவினிடமே சூக்ஷ்மமாய் ஒடுங்குகிறது. உலகத்திற்கு மூலப்பொருள் எது - வளையல்கள் தங்கமும், பானைகளுக்கு மண்ணும் போல இந்த உலகத்திற்கு விஷ்ணுவே மூலப்பொருள் என சுருக்கமாகக் கூறுகிறார்.

5 comments:

  1. thank you very much Mr.Seetharaman.Om Namo Narayanaya.

    ReplyDelete
  2. HARE KRISHNA ! IT IS A GREAT JOB TO GIVE THE PURANA IN SIMPLE LANGUAGE. வணக்கங்கள்

    ReplyDelete
  3. vanakam Mr. seetharaman .
    neenga yeludhinadhai padithen
    very nice.
    puthagam vadivil yenga kidaikum?
    yenaku idhai patri konjam details venum.

    ReplyDelete
  4. great work, god bless you and your family.

    ReplyDelete