01_06. வகுப்பு முறை: ப்ரஹ்மனின் முகத்திலிருந்து ஸத்வ குணம் மிகுந்த ப்ராஹ்மணர்களும், மார்பிலிருந்து ரஜோகுணம் மிகுந்த க்ஷத்ரியர்களும், தொடைகளிலிருந்து ரஜோகுணமும், தமோகுணமும் கலந்த வைச்யர்களும், பாதங்களிலிருந்து தமோகுணம் மிகுந்த நான்காம் வர்ணத்தாரும் பிறந்தனர். மனிதர்கள் முறைப்படி கார்யங்களைச் செய்து, தேவர்களை த்ருப்தி செய்ய அவர்களும் மழை முதலானவற்றைக் கொடுத்து மனிதர்களை மகிழ்விக்கின்றனர். ப்ராஹ்மணர்கள் வேத, வேதார்த்தங்களைப் பிறர்க்குச் சொல்லிக் கொடுத்தும், க்ஷத்ரியன் தன் கைகளால் ப்ரஜைகளைக் காத்தும், வைச்யர்கள் த்ரவ்யம் சேர்த்தும், மற்றவர் இவர்களுக்குப் பணிபுரிந்தும் ஜீவிக்கின்றனர். இவர்கள் இப்படித் தங்கள் கர்மங்களையும், யாகங்களையும் செய்து ப்ராஜாபத்யம், இந்த்ரலோகம், மருத்துக்களின் உலகையும், கந்தவர்வ லோகத்தையும் முறையே அடைந்து வந்தனர். ஸ்வர்க்கம், மோக்ஷத்தையுமடைந்து வந்தனர்.
இவ்வாறே ப்ரஹ்மசாரிகள் எண்பத்தெட்டாயிரம் யதீச்வரர்கள் நித்யவாசம் செய்யும் புண்யலோகத்தையும், க்ருஹஸ்தர்கள் ப்ராஜாபத்யத்தையும், வானப்ரஸ்தர்கள் ஸப்தரிஷி லோகத்தையும், ஸன்யாஸிகள் ப்ரஹ்மலோகத்தையுமடைந்து வந்தனர்.
க்ருதலோகத்தில் இவர்கள் தங்கள் ஆச்ரம, வர்ண தர்மங்களை ச்ரத்தையுடன் அனுஷ்டித்து, சாஸ்த்ரங்களில் நம்பிக்கைக் கொண்டு, எவரிடமும் நட்பு பாராட்டி, நினைத்த இடங்களில் பயமின்றி வஸித்து, சீதோஷ்ணம், பசி, தாகம் முதலியவற்றால் துன்புறாது, சக்தியுடையவர்களாய், காம, கரோதங்களற்றவர்களாய் இருந்து வந்தனர். பரமனும் அவர்கள் இதயத்திலிருந்து வந்தான். அஷ்டமாசித்திகளைப் பெற்றிருந்தனர். உணவுப் பற்றாக்குறையில்லை. மாதம் மும்மாரி பொழிந்ததிலேயே பயிர்கள் முயற்சியின்றி உலகெங்கும் விளைந்து வந்தன.
த்ரேதாயுகத்தினாரம்பத்தில் மனிதர்களுக்குள் பாப எண்ணம் எழும்பத்தொடங்கியது. மக்கள் அங்ஞானத்தால் காம, க்ரோத, மோஹ, மத (திமிர்), மாத்ஸர்யங்களில் (பொறாமை) ஆட்பட்டனர். மோக்ஷத்தையிழந்தனர். ஆசை, பயம் கொண்டனர். அரண்களையும், நகர, க்ராமங்களையும் ஏற்படுத்திக்கொண்டனர். பசி, துக்கம், தூக்கம், சோம்பேறித்தனத்திற்குட்பட்டனர். வாழ்விற்காக உழவு, பசு மேய்த்தல், வ்யாபாரம் இவைகளை மேற்கொண்டனர்.
கம்பு, கோதுமை, பார்லி, பட்டானி, கேழ்வரகு, கடலைப் பருப்பு, உளுந்து, துவரை, மூங்கிலரிசி முதலிய பயிர்வகைகள் க்ராம்ய, க்ராம்யாரண்யங்கள் என வகைப்படுத்தப்பட்டன. க்ராம்ய ஆரண்ய பயிர்கள் யக்ஞங்கள் செய்யப் பயன்பட்டு வந்தன. இவைகள் யாவும் புறக்கணிக்கப்பட்டு, உடலை மட்டும் வளர்க்கத் தலைப்பட்டனர். ப்ரஹ்மத்தை உபாஸிப்பவர்கள் ப்ரஹ்மலோகத்தையும், த்வாதசாக்ஷரத்தை ஜபித்தவர்கள் பரமபதத்தையும் அடைந்து நித்யஸூரிகளாகின்றனர். மற்றவர்கள் அவரவர் புண்யங்களுக்குஹந்த இடங்களை அடைந்து, மீண்டும் ஜனிக்கின்றனர்.
வேதங்களை நிந்திப்பவர், வேதவிஹிதமான யக்ஞங்களையழிப்பவர், ஸ்வதர்மத்தை விட்டவர்கள் எனப் பல தீயவர்கள் தாமிஸ்ரம், அந்ததாமிஸ்ரம், ரௌரவம், மஹாரௌரவம், அஸிபத்ரவனம் காலஸூத்ரம், அவீசிகம் ஆகிய நரகங்களையடைகின்றனர்.
Thursday, December 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment