01_09. மைத்ரேயா, இந்த மஹாலக்ஷ்மீயின் அவதார ரஹஸ்யத்தை நான் முன்பு காச்யபரின் பிதாவான மரீசி என்பவரிடமிருந்தறிந்துள்ளேன். அதை இப்போது உனக்குக் கூறுகிறேன். ஒரு சமயம் சிவனின் பாகமான மஹரிஷி துர்வாஸர் ஒரு அடர்ந்த காட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வித்யாதர ஸ்த்ரீயைக் கண்டார். அவள் கையில் தேவலோகத்து ஸந்தானகம் என்ற மலர்களால் ஆன மாலை இருந்தது. அரிய அந்த மாலையால் அந்த கானகமே மணம் கமழ்ந்தது. அதைத் தான் யாஸித்துப் பெற்றுக்கொண்டார் மஹரிஷி.
அந்த பெருமை மிகுந்த மாலையை தேவலோகத்தில் இந்த்ரன் ஐராவதத்தில் வலம் வந்து கொண்டிருந்தபோது அவனிடம் ஆசையாகவும், அது இருக்கவேண்டிய மதிப்பான, உயர்ந்த இடம் இதுவே என்றும் நினைத்துக் கொடுத்தார். செருக்கிலிருந்த இந்த்ரன் மஹரிஷி வீசியெறிந்த அந்த மாலையை பெருமையறியாது ஐராவதத்தின் மேல் வைத்தான். கைலாஸத்தில் கங்கை போல அந்த மாலை ஐராவதத்தின் மேல் விளங்கியது. ஐராவதம் அதனையெடுத்து வீசியெறிந்து விட்டது. பெரும் கோபம் கொண்ட மஹரிஷி, "அமரர் வேந்தே! நீ செல்வச்செருக்கிலிருக்கிறாய். மஹாலக்ஷ்மி வாஸம் செய்யும், கிடைத்தற்கரிய இந்த மாலையை உனக்கு நான் கொடுத்தேன். அரிய பொருளொன்று கிடைத்தால் பேரருள் என்று அதைப் போற்றிக் கொண்டாட வேண்டும். ஸாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணி ஸந்தோஷத்துடன் சிரஸில் தரித்துக்கொள்ள வேண்டிய இந்த மாலையை நீ உன் செல்வச்செருக்கால் மதிக்கவில்லை. அதனால் உன் செல்வம் முழுவதும் அழிவதுறுதி.
என்னையும் உள்ளபடி உணராது, மற்றவர்களுக்குச் சமமாக நினைக்கிறாய். அதனால்தான் இந்த மானக்கேட்டை எனக்கு விளைவித்தாய். [தங்கம் கூட பொற்கொல்லன் காய்ச்சும்போதும், உருக்கும்போதும், அடிக்கும்போது, நீட்டும்போதும் வருந்தவில்லையாம். ஆனால் காட்டில் கேட்பாரற்று கிடக்கும் குந்துமணியை தனக்கு சமமாக வைத்து நிறுக்கும் போது வருந்துமாம்] என் கோபத்திற்கு மூவுலகும் நடுங்கும். அப்படிப்பட்ட என்னை நீ அவமதித்து, நான் கொடுத்த மாலையை பூமியில் எறிந்து விட்டாய். ஆகையால் மூவுலகும் லக்ஷ்மீகடாக்ஷமின்றி அழியும் என்று சபித்துவிட்டார்.
தேவராஜன் இதைக்கேட்டு பெரிதும் துயரமும், பயமும் கொண்டு நடுக்கத்துடன் கீழேயிறங்கி ரிஷியின் பாதங்களில் விழுந்து மன்னிக்க வேண்டினான். ஆனால் துர்வாஸரோ, "இரக்கத்தை என்னிடம் எதிர்ப்பார்க்காதே. உன் ப்ரார்த்தனைக்கு மகிழ்ந்து உன்னிடம் தயை கொண்டு உனக்குத் தக்கவாறு நடந்து கொள்ளும் மஹரிஷிகள் வேறு பலர் உள்ளனர். நான் அவர்களைப் போலில்லை. நான் துர்வாஸன்.
உன் கர்வத்திற்குக் காரணம் கௌதமர் போன்ற ரிஷிகளே. நீ அஹல்யையின் கற்பை அழித்தபோது, உன் உடலனைத்தும் பெண் குறிகள் நிறைந்திருக்குமாறு சபித்த அவர், அதன் பின் உன் வேண்டுதலுக்கிரங்கி அவைகள் கண்களாக இருக்கும்படி அனுக்ரஹித்தார். அவர் அன்றே தன் சாபத்தை மாற்றாமலிருந்திருந்தால், உனக்கு இந்த பழக்கம் வந்திருக்காது. செல்வச்செருக்கும் இருந்திருக்காது. மீண்டும் தவறுகளைச் செய்திருக்கமாட்டாய். ஆனால் என்னிடம் அந்த பொறுமையை எதிர்பார்க்காதே.
வஸிஷ்டாதிகளும் உன்னை அவ்வப்போது போற்றிப் புகழ்ந்து உன்னை இந்த நிலைக்கும், எண்ணத்திற்கும் உயர்த்தியுள்ளனர். ஆனால் ப்ரகாசிக்கின்ற சடைகள் சூழ்ந்த சிரஸையுடைய என் புருவங்கள் எப்போதும் கோபத்தால் வளைந்து நடு நெற்றியில் ஏறியிருக்கும். என்னுடைய இந்த உருவத்தைப் பார்த்து அஞ்சாதவர் எவருமில்லை. உன்னுடைய இந்த கெஞ்சுதலும் கபடமானதே. உன் குற்றத்தை ஒருக்காலும் பொறுக்கமாட்டேன். என் சாபம் உறுதி" என்று கூறிச் சென்றுவிட்டார். இந்த்ரனும் வருத்தத்துடன் சென்றுவிட்டான்.
சாபமும் பலிக்கலாயிற்று. ஸகல ஸம்பத்துகளும், ஓஷதி, கொடி, மரம் என அனைத்தும் அழிந்தன. யாகமும், தவமும், ஸத்கர்மங்களும், தானங்களும், தைர்யமும் அழிந்தன. ஸத்வ குணமும், அதனையடுத்து லக்ஷ்மியும் ஒழியவே, அந்த சமயத்தில் தேவர்களோடு போரிட்ட அரக்கர்களும், அஸுரர்களும் வென்றனர். இப்படிப் பலமுறை தன் தவறால் தோல்வியடைந்த இந்த்ரனும், தேவர்களும் ப்ரஹ்மனை வேண்ட, அவர் இது தன்னாலாகாததெனவுணர்ந்து, "தேவர்களே! நீங்கள் அனந்தனை அரணாகக் கொள்ளுங்கள். விஷ்ணுவை வேண்டுங்கள். அவனே உங்கள் குறைகளைப் போக்கி, நன்மைகளைக் கொடுக்க வல்லவன். அவன் தேவதேவன். பிறப்பிறப்பற்றவன். வெல்ல முடியாதவன். அடியவர்களைத் துன்பக்கடலிலிருந்து மீட்பவன்" எனக்கூறித் தானே அவர்களையழைத்துக்கொண்டு பாற்கடலின் கரையையடைந்தார். இந்த லக்ஷ்மியே ப்ருஹுவின் பெண்.
தேவர்களும், ரிஷிகளும், நானும், சங்கரனும் அறியாத பரப்ரஹ்ம ஸ்வரூபத்தை, விஷ்ணுரூபத்தை வணங்குகிறோம் என்று பலவாறுத் துதித்தார். தேவர்களும் நாங்கள் பூஜிக்கும் இந்த நான்முகனும் அறியாத பரப்ரஹ்மத்தை வணங்கித் துதிக்கிறோம் என்று போற்றினர். இதன்பின் ப்ருஹஸ்பதியை முன்னிட்டுக்கொண்டு தேவரிஷிகளும் ஸ்தோத்ரிக்க, விஷ்ணுவும் ப்ரத்யக்ஷமானார். அழகிற்கு அழகு செய்வது போல ஸர்வேச்வரன் ஸுந்தரமூர்த்தியாய் சங்கு, சக்ர முதலிய பஞ்சாயுதங்களுடன் தோன்றினான். ப்ரத்யக்ஷமாய் அவனைக் கண்ட தேவர்கள் பலமுறை விழுந்து விழுந்து வணங்கித்தொழுதனர்.
பின்னர் மீண்டும் துதித்து வேண்டிக் கொண்டனர். "உலகப்பொருள்கள் யாவும் நீயே! அஸுரர்களால் பீடிக்கப்பட்ட நாங்கள் உன்னைச் சரணடைகிறோம். இழந்த செல்வத்தையும், புது செல்வத்தையும், ஆத்மஞானத்தையும், பேரின்பத்தையும் வேண்டும் பலரின் குறைகளும் உன்னைச் சரணடைந்ததும் நீங்குகின்றன. அப்படிப்பட்ட நீ எங்கள் குறைகளையும் நீக்க வேண்டும் என வேண்டுகின்றனர். இவைகளைக் கேட்டு அமரர் குறைகளைக் களைய காலம் வந்ததையறிந்த பரமனும் அவர்களிடம் இரக்கம் கொள்கிறான். அவர்களுக்கொரு உபாயத்தைக் கூறுகிறான்.
"நான் உங்களுக்கு சொல்லப் போகும் உபாயம் மிகக் கடினமானது. அஸுரர்களின் பலமின்றி, இப்போது உங்களால் இதைச் சாதிக்கவும் முடியாது. மந்திர மலையை மத்தாகவும், வாஸுகியை கயிராகவும் கொண்டு, பல பச்சிலைகளை இந்த பாற்கடலில் நிரப்பி இதை அஸுரர்களுடன் கூடச் சேர்ந்துக் கடையுங்கள். அவர்கள் உங்களை நம்ப மாட்டார்கள். அவர்களிடம் நயமாகவும், வஞ்சகமாகவும் பேசி பாற்கடலிலிருந்து கிடைக்கும் அம்ருதத்தை இருவரும் பருகி அமரர்களாவோம் என்று கூறி வேலையை ஆரம்பியுங்கள். பிடாரன் பெட்டியில் அகப்பட்ட பாம்பு, எலியுடன் கூட நயமாகப் பேசி, நயவஞ்சகமாக நட்பு கொண்டு, அந்த பெட்டியில் ஒரு த்வாரமேற்படுத்திக் கொண்டு வெளிவந்ததும், அந்த எலியையே இரையாகவும் பிடித்துத் தின்று விடுகிறது. இதில் தவறில்லை. அவர்களுக்கு இறுதியில் அம்ருதம் கிடைக்காமலிருக்கப் பல வழிகளை இடையில் நான் செய்கிறேன்" என்று கூறினார்.
தானே தேவர்களுக்கு வேண்டியதை செய்ய சக்தியிருந்தும் பாற்கடலைக் கடையவும், தான் ஆமையாக அவதரிக்க ஒரு சமயத்தை உருவாக்கி விளையாடவும், மீண்டும் பெரிய பிராட்டியாகிய மஹாலக்ஷ்மியையும் அடையவும் எண்ணம் கொண்டான் எளியோன். குறுக்குவழியில் தேர்ந்த தேவர்களுக்குப் பரமனே இப்படி ஒரு வழியையும் கூறிவிட உடனே அவர்கள் அஸுரர்களுடன் கூடியிருக்கும் மஹாபலியிடம் சென்று வஞ்சக வார்த்தைகளால் அவனை இசையவும் வைத்தனர்.
அவனும் உடனே மந்திரமலையை எடுத்து வர தன் ஆட்களோடும் தேவர்களோடும் சென்றான். வழியில் அதன் பாரம் தாங்காமல் அதைக் கீழே விட்டு அதனடியில் பலரும் சிக்கிக் கொண்டனர். கருணை கொண்ட விஷ்ணு உடனே கருட வாஹனத்தில் எழுந்தருளி தேவர்களை மட்டும் உயிர்ப்பித்தான். மந்திரமலையையும் அனைவரும் புடைசூழ கருடனைக் கொண்டே எடுத்துவந்து பாற்கடலில் வைத்தான். இதன்பின் வாஸுகியென்ற ஸர்ப்பராஜனையும் வார்த்தைகளால் ஏமாற்றிக் கயிராகக் கொண்டு பாற்கடலைக் கடைய ஆரம்பித்தனர் தேவாஸுரர்கள்.
வாஸுகியின் மூச்சின் விஷத்தில் தேவர்கள் மாய்வதை வேண்டாத பரமன், தேவர்களை வால் பக்கத்தில் இருந்து கடையச் சொல்ல நினைத்தார். அஸுரர்களின் புத்தியையும், மூர்க்கத்தனத்தையும் சாதகமாக்கிக் கொள்ளவும் திட்டமிட்டு "தலைப்பக்கத்தை தேவர்களும், வால்பக்கத்தை அஸுரர்களும் பிடித்துக் கடையட்டும்" எனக் கூறினார். உடனே அஸுரர்கள் அவர்கள் இயல்பினால், "நாங்களும் கல்வி, கேள்விகளிலும், பிறப்பிலும் உயர்ந்தவர்களே. எனவே நாங்களே தலைப்பக்கத்தைப் பிடிப்போம், அமங்கலமான வால்பகுதியைப் பிடிக்க மாட்டோம்" என மறுத்தனர். எண்ணம் பலித்ததை நினைத்துப் பரமனும் தேவர்களை வால் பக்கத்தைப் பிடிக்கச் சைகை செய்து தானும் அவர்களோடு சேர்ந்து கொண்டான்.
மூலிகைகளால் பல வண்ணங்களைக் காண்பித்துக் கொண்டிருந்த பாற்கடலை இவ்வாறு கடைய ஆரம்பித்ததும் வாஸுகியின் விஷக்காற்றால் அஸுரர்கள் பலம் குன்றத் தொடங்கியது. வால்பக்கம் நின்றிருந்த தேவர்களுக்கு நன்மை செய்ய நினைத்த பரமன் அங்கு மேகங்களைக் கொண்டு மழை பொழியச் செய்தான். அப்போது ஆதாரமெதுவுமின்றி அந்த ஆழ்ந்த கடலில் சுழன்று கொண்டிருந்த பெரிய மந்திர மலை தன் பாரத்தால் மூழ்கத் தொடங்கியது. தேவாஸுரர்கள் எவ்வளவு முயன்றும் அதனைத் தடுக்கவோ, தூக்கி நிறுத்தவோ முடியவில்லை. இதனைக் கண்ட பரமன் லக்ஷம் யோஜனை அளவு கொண்ட அற்புதமான ஆமை வடிவெடுத்து, அந்த மலைக்கு ஆதாரமாக இருந்தருளினார்.
இன்னும் பலப்பல வடிவமெடுத்து தேவர்களோடும், அஸுரர்களோடும் கடையவும் செய்தார். இத்தனை பேர் கடைந்த போது ஒரு நிலையில் நில்லாது ஆடிக் கொண்டிருந்த அந்த மலையை, உச்சியில் வேறொரு உருவம் எடுத்து ஆயிரம் கைகளால் ஆடாமல் பிடிக்கவும் செய்தார். ஒன்றும் வருவது போல் தெரியவில்லை பாற்கடலிலிருந்து. மேகவண்ண திருமேனி, காதுகளில் மிளிரும் குண்டலங்கள், அவிழ்ந்து அங்குமிங்குமலைபாயும் கூந்தல் கற்றைகள், மார்பிலாடும் மாலைகள், செந்தாமரைக் கண்கள் இவற்றுடன் பரமனே தன் காக்கும் கரங்களால் வாஸுகியைப் பற்றி ஒரு மலை மற்றொரு மலையைத் தாங்கியும், கடையவும் செய்தது போல் கடைந்தார். அந்தர்யாமியாக இருந்து தேவாஸுரர்களுக்கும், வாஸுகிக்கும் பலத்தையும் தந்தார்.
இப்படிக் கடைந்தபோது முதலில் பாற்கடலிலிருந்து அனைவரும் மயங்கும் அழகுடன் காமதேனு தோன்றியது. யாகத்திற்குதவுமென்று அதனை ரிஷிகள் பெற்றுக் கொண்டனர். அதன்பின் வருணனைத் தேவதையாகக் கொண்ட வாருணீ எனப்படும் (மது) ஸுராதேவி தோன்றினாள். அவளழகைக் கண்டு சித்தர்களும் அதிசயித்தனர். விஷ்ணுவின் நியமனம் பெற்று அஸுரர்கள் அதைப் பெற்றுக் கொண்டனர். பின் உலகை மயக்கும் நறுமணத்துடன் பாரிஜாத மரம் தோன்றியது. அதை தேவஸ்த்ரீகள் பெற்றுக் கொண்டனர். அதன்பின் சந்த்ரன் தோன்றினான். [பகவானின் மனதிலிருந்து தோன்றியதாக வேதம் கூறும் சந்த்ரனுக்கு இரண்டு உருவங்கள், பாற்கடலிலிருந்து தோன்றிய சந்த்ரனை பரமேச்வரன் தரித்துக் கொண்டார். அத்ரி மஹரிஷியின் கண்ணிலிருந்து தோன்றிய மற்றொரு உருவம் பகவானால் ஏவப்பட்டு உலகிற்கு வெளிச்சம் தருகிறது]
இதன்பின் ஹாலாஹலம் என்ற கொடிய விஷம் நாற்புறங்களிலும் கொழுந்து விட்டெரியும் ஜ்வாலையுடன் தோன்றியது. அனைவரும் பரமேச்வரனைத் துதித்தனர். அவனும் ஸர்வேச்வரனுடைய அருளால் எனக்கும், மக்களுக்கும் க்ஷேமமுண்டாகட்டும் என்று பார்வதியிடம் கூறி விஷத்தை உண்டான். அந்த விஷம் தன் வீர்யத்தை பரமேச்வரனிடமே காட்டவே, அதைத் தன் கழுத்திலேயே நிறுத்திக் கொண்டு, நீலகண்டன் எனப் பெயர் பெற்றான். அப்போது அவன் கைவிரல் சந்துகளிலிருந்து வழிந்து விழுந்த அந்த விஷந்தை தேள், பாம்பு மற்றும் சில பச்சிலைகளும் க்ரஹித்து அன்றிலிருந்து கொடிய விஷமுள்ளவைகளாயின.
இதன் பின் பகவானின் அம்சமாக தன்வந்த்ரி வெள்ளாடையுடன் கையில் அம்ருத கலசத்துடன் தோன்றினார். முயற்சி பலித்த நிம்மதியுடன் தேவாஸுரர்களும் மகிழ்ந்தனர். பின் பெரிய பிராட்டியும் மின்னல் போன்ற காந்தியுடன் திசைகள் விளங்க தாமரை மலரேந்தி தாமரையில் தோன்றினாள். தன் புன்முறுவல், கடாக்ஷத்தாலேயே திருமகள் தேவர்தலைவனின் அல்லல்களையும் போக்கினாள். மஹரிஷிகள் ஸ்ரீ ஸூக்தத்தால் தேவியைத் துதித்தனர். விச்வாவஸு முதலான கந்தர்வர்கள் பாட, க்ருதாசீ முதலிய அப்ஸரஸ்ஸுகள் ஆட அனைவரும் மகிழ்ந்திருக்கும் போது, மஹேந்த்ரன் அற்புதமான ஓராஸனத்தைப் பிராட்டிக்களித்தான்.
கங்கை முதலான புண்ய நதிகள் உருவங்கொண்டு அபிஷேஹித்தன. மேகங்கள் பலவித வாத்யங்களாக முழங்கின. ப்ராஹ்மணர்கள் ஸூக்தங்களை ஜபித்தனர். திக்கஜங்கள் பொற்குடங்களில் புண்ய தீர்த்தம் கொண்டு அம்ருத ஸஹோதரியை நீராட்டின. இப்படி நீராடி, நல்லாடையுடுத்தி, மலர்மாலை சூடி, அணிகள் பல பூண்டு நின்றாள் ஸ்ரீ.
கடற்கரையிலேயே ஸ்வயம்வரம் நடக்கிறது. பார்க்கும் ஒவ்வொருவரையும் தீர யோசிக்கிறாள். துர்வாஸர் கோபத்தை ஜயிக்காமல், அதற்கு வசப்பட்டவர். ப்ருஹஸ்பதி, சுக்ராச்சார்யார் ஆகியோர் ஞானிகளென்றாலும் பற்றுள்ளவர்கள். ப்ரஹ்மா, சந்த்ரன் முதலியவர்கள் காமம் உள்ளவர்கள். தன் நன்மையை தானே சாதித்துக் கொள்ளாமல் பிறரை அண்டும் இந்த்ரன் எப்படி ஆற்றலுடையவனாகவோ, ப்ரபுவாகவோ இருக்க முடியும். பரமேச்வரன் காட்டில் வஸிக்கும் மங்களத் தன்மையில்லாதவன். இப்படி ஒவ்வொருவரையும் குற்றங்களையாராய்ந்து விலக்கிய பிராட்டி எப்படி ஆராய்ந்தும் எவ்விதக் குற்றமுமின்றி கல்யாண குணங்களால் நிறைந்து நிற்கும் நாராயணனை பர்த்தாவாகக் கொள்ள நினைத்தாள். ஆனால் அவன் அவளை விரும்பாதது போல நின்று விட்டான். தேவர்களனைவரும் பார்த்துக் கொண்டிருக்க அவன் தோள்களில் மாலையை அணிவித்து, திருமார்பில் வீற்றிருந்தாள். அனைவரும் விரும்பும் ஸ்ரீ அவனை விரும்பியடைந்தது.
அதன்பின் மஹாலக்ஷ்மி தன் கடாக்ஷங்களால் தேவர்களை அனுக்ரஹிக்க அவர்கள் தாங்கள் இழந்த தேஜஸ், செல்வம், வீர்யம் முதலியவைகளை மீண்டும் பெற்றனர். அஸுரர்கள் விஷ்ணு த்வேஷமுடையவர்களாதலால் அவர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவர்கள் தங்கள் பலம், செல்வங்களை இழந்தனர். கோபம் கொண்ட அவர்கள் தன்வந்த்ரியின் கைகளிலிருந்து அம்ருத கலசத்தைப் பிடிங்கிக் கொண்டனர். இதைக் கண்டு செய்வதறியாத தேவர்கள் பரமனிடம் வேண்டினர். உடனே அவன் ஒரு அழகிய அஸுர ஸுந்தரியாய் நீண்ட கூந்தலில் மல்லிகைச் செண்டுடன், இடையிலாடும் தங்க ஒட்டியாணத்துடன், கால்களில் தண்டையுடன், நாணம், சிரிப்பு, நெளிந்து தவழும் புருவ வளைப்புகளுடன் தோன்றினாள். அவளிடம் மயங்கிய அஸுரர்கள் கலசத்தை அவளிடமே கொடுத்து, தங்களுக்கு அவளையே பகிர்ந்து கொடுக்கச் சொன்னார்கள்.
அதை வாங்கிக் கொண்ட மோஹினி தேவாஸுரர்களை ஸ்நாநம் செய்து, ஹோமங்கள், தானங்களைச் செய்து விட்டு முறையாக, ஸுத்தமாக வந்து அமரும் படி கூறினாள். இரு பிரிவினரும் அவ்வாறே வந்து நடுவில் நடக்க வழி விட்டு கிழக்கு முகமாக தர்ப்பத்தில் அமர்ந்தனர். முதலில் இருந்த அஸுரர்களை விட்டு, தேவர்களுக்கு அம்ருதத்தைப் பங்கிடலானாள். இதனால் மிகுந்த கோபம் கொண்ட போதும் அவள் அழகிலும், சேஷ்டைகளிலும் மயங்கிய அஸுரர்கள் அவள் அன்பு வேண்டி பேசாதிருந்தனர். ராஹு என்ற அஸுரன் மட்டும் தேவ வேஷம் பூண்டு தேவர்களோடு அமர்ந்து அம்ருதத்தையும் வாங்கிப் பருகிவிட்டான். இதனை சந்த்ர, ஸூர்யர்கள் காட்டிக் கொடுக்க, பகவான் அவன் தலையைச் சக்ராயுதத்தால் சீவி விட்டான். எனினும் அம்ருதம் பருகியதால் அவனை ஒரு க்ரஹமாக அனுக்ரஹித்தார் பரமன். இந்த காரணத்தாலேயே ராஹு பருவ காலங்களில் சந்த்ர, ஸூர்யர்களைப் பிடித்துக் கொள்கிறான்.
அம்ருதமனைத்தையும் தேவர்களுக்கே பங்கிட்ட பின் மீண்டும் தன்னுருக் கொண்ட பரமன் மீதும், தேவர்கள் மீதும் வஞ்சகத்தால் ஏமாந்த அஸுரர்கள் மிகுந்த கோபத்துடன் போரிடத் தொடங்கினர். ஆனாலும் அம்ருதத்தால் பலமும், புத்துணர்வும் பெற்ற தேவர்களிடம் தோற்று திக்குகளையும், பாதாளத்தையும் நோக்கி ஓடி விட்டனர். தேவர்கள் மிக்க மகிழ்ச்சி கொண்டு பரமனை அடிபணிந்து மீண்டும் தத்தம் பணிகளை மேற்கொண்டனர்.
"உலகில் உள்ள ஸர்வ வித்யைகளும் நீயே. மோக்ஷத்தைத் தருபவள் நீ. உலகிற்கு நீ தாய். பகவானே பிதா. உலகம் உங்கள் இருவராலும் தான் சூழப்பட்டுள்ளது. உன்னால் விடப்பட்டவனிடம் தூய்மை, உண்மை முதலியன இருக்காது. உன் கடாக்ஷத்தாலேயே எல்லோரும் நல்லொழுக்கத்தையும், ஐச்வர்யத்தையும் பெறுகின்றனர். குணக்கேடான ஒருவனும் உன் கடாக்ஷம் பெற்று விட்டால் மேம்பட்டவனாகி விடுகிறான். நான்முகனின் நான்கு நாக்குகளுமே உன் பெருமையே பேசி முடிக்க முடியாது. நான் எப்படிப் பேசுவது. இனி எக்காரணம் கொண்டும் எங்களையும், இம்மூவுலகங்களையும் விட்டு நீ செல்லக் கூடாது" என இந்த்ரன் தேவியைப் ப்ரார்த்திக்க, அவளும் அப்படியே என அனுக்ரஹித்தாள். இரு வேளைகளிலும் இந்த ஸ்தோத்ரம் கொண்டு என்னைத் துதிப்பவனை அவனை நான் கைவிட மாட்டேன் என்றாள்.
இப்படியாக ப்ருஹு மஹரிஷியின் புத்ரியாய்ப் பிறந்த ஸ்ரீ, பின் துர்வாஸரின் சாபத்தால் மறைந்தாள். அதன் பின் தேவாஸுரரகளின் முயற்சியால் மீண்டும் ஆவிர்பவித்தாள். இப்படித் தேவைப்படும்போதெல்லாம் பகவான் அவதரிப்பது போல், அவளும் அவ்வப்போது அவதரிக்கிறாள். பகவான் அதிதிக்குப் பிறந்த போது அவள் பத்மையெனப் பிறந்தாள். பரசுராமனுக்கு தரணியென்பவளாகவும், ராமனுக்கு ஸீதையாகவும், க்ருஷ்ணனுக்கு ருக்மிணியாகவும் அவதரிக்கிறாள். இப்படி தேவனுக்குத் தேவியாகவும், மனிதனுக்கு மனுஷியாகவும் அவதரிக்கிறாள். இந்த அவதார கட்டம் மிகவும் சிறந்தது, இதை மீண்டும் மீண்டும் படித்தும், கேட்டும் கொண்டிருக்கும் பக்தர்களின் க்ருஹத்தில் என்றென்றும் பிராட்டி நித்யவாஸம் செய்வாள். இந்த்ரன் செய்த ஸ்ரீ ஸ்துதி எல்லா செல்வங்களையும் கொடுக்க வல்லது. மூதேவியை நெருங்க விடாது. எனவே அதை நித்யம் ஸுத்தமாயிருந்து பாராயணம் செய்ய வேண்டும்.
Thursday, December 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment