Thursday, December 31, 2009

விஷ்ணு புராணம் - 13

01_13. த்ருவனின் மனைவி சம்பு. இவர்களுக்கு சிஷ்டி, பவ்யன் என்று இரண்டு பிள்ளைகள். சிஷ்டி ஸுச்சாயை என்பவளை மணந்து ரிபு, ரிபுஞ்ஜயன், விப்ரன், வ்ருகபலன், வ்ருகதேஜஸன் என்று ஐந்து குழந்தைகளைப் பெற்றான். இதில் ரிபுவிற்கும், ப்ருஹதீ என்பவளுக்கும் சாக்ஷுஷன், ஸர்வதேஜஸன் என்ற இரு பிள்ளைகள் பிறந்தனர். சாக்ஷுஷன் வருணனுடைய வம்சத்தைச் சேர்ந்த வீரண ப்ரஜாபதியின் புத்ரியான புஷ்கரிணீயை மணந்து ஆறாவது மன்வந்த்ரத்திற்கு அதிபனான மனுவைப் பெற்றான். இவனுக்கும் வைராஜ ப்ரஜாபதியின் புத்ரியான நட்வலைக்கும் ஊரு, பூரு, சதத்யும்னன், தபஸ்வி, ஸத்யவான், சுசி, அக்னிஷ்டோமன், அதிராத்ரன், ஸுத்யும்னன், அபிமன்யு என்ற பத்துப் பிள்ளைகள் பிறந்தனர். ஊரு, அக்னியின் மகளை மணந்து அங்கன், ஸுமனஸ், ஸ்வாதி, க்ரது, அங்கிரஸ், சிபி என்ற ஆறு பிள்ளைகளைப் பெற்றான். அங்கன் ம்ருத்யுவின் மகளான ஸுனீதாவை மணந்து வேனன் என்ற பிள்ளையைப் பெற்றான். வேனனின் வலக்கையை வம்சம் வேண்டி ரிஷிகள் கடைந்த போது தோன்றியவனே வைன்யன் என்ற ப்ருது மஹராஜன். இவனே பசு உருவம் கொண்ட பூமியினிடமிருந்து மக்களுக்கு வேண்டிய பொருட்களைக் கறந்து கொடுத்தவன்.

வேனனின் கையைக் கடைய வேண்டிய அவசியத்தை மைத்ரேயர் கேட்க அதைக் கூறுகிறார் பராசரர். வேனன் பிறவியிலேயே அவனது தாய் வழி தாத்தாவின் குணங்களோடு கூடி துஷ்டனாக இருந்தான். ரிஷிகளால் அரசனாக அபிஷேகம் செய்விக்கப்பட்ட போது அவன் மனம் அதர்மத்திலேயே சென்றது. யாகம், தானம், ஹோமங்கள் எதுவும் நடக்கக் கூடாது. நானே ஆராதனைக்குத் தகுந்தவன். நானே பலன்களையும் தருபவன் என்று பறை சாற்றிக்கொண்டான். அவனுக்கு ரிஷிகளும், மற்ற பலரும் நன்மைகளை எடுத்துக் கூறினர். ஆயிரம் வருடங்கள் செய்யத்தக்க தீர்க்கஸத்ர யாகத்தைச் செய்து நாராயணனைப் பூஜிப்போம். இதில் ஆறில் ஒரு பங்கு பலன் உங்களுக்கும் உண்டு. மஹாவிஷ்ணுவும் யாகத்தால் சந்தோஷமடைந்து உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவார். யாகங்களைத் தடுக்காதீர்கள் என்று வேண்டிக் கொண்டனர். வேனன் இணங்கவில்லை.

அவன் மனம் நாஸ்தீகத்திலேயேயிருந்தது. அவன் யக்ஞபுருஷன் என்று நீங்கள் கூறும் ஹரி என்பவன் யார். அவனை ஏன் என்னிலும் மேலாக மதிக்கிறீர்கள். வரமும், சாபமும் கொடுக்கவல்ல மும்மூர்த்திகளும், வாயு, யமன், ஸூர்யன், அக்னி, வருணன், தாதா, பூஷா, பூமி, சந்த்ரன் இன்னும் மற்ற எல்லா தேவர்களும் அரசனிடமே உள்ளனர். அரசன் ஸர்வதேஜஸ்வரூபன். இது சாஸ்த்ரம். எனவே என் கட்டளைப்படியே எல்லாரும் செய்யுங்கள். நீங்கள் என் அடிமைகள். பதியின் சொல் பத்னிக்கு எப்படியோ அப்படியே நான் சொல்வதைக் கேட்பதே உங்களுக்கு தர்மம் என்றான். இவனது இந்த அதர்மச் சொற்களையும், செயல்களையும் திருத்த முயன்று தோல்வியடைந்த ரிஷிகள் மிகுந்த மனவருத்தமும், கடுங்கோபமும் கொண்டனர். வேனனைக் கொல்லவும் முடிவு செய்தனர். யாகத்தில் பயன்படுத்தி மந்த்ரங்களால் சுத்தம் செய்யப்பட்ட தர்ப்பங்களையே ஆயுதங்களாக்கி அவனை அடித்துக் கொன்று விட்டனர்.

ஏற்கனவே யாக, ஹோம, தர்ம கர்மங்களை நிந்தித்ததாலும், தற்புகழ்ச்சியாலும் கொல்லப்பட்டிருந்ததால் க்ஷத்ரியதோஷமும் உண்டாகவில்லை. ஆனால் அதன் பின் ராஜ்ய பரிபாலனம் அரசனின்றி சீரழிந்தது. அக்ரமங்கள் தலை தூக்கின. மக்கள் திருடத் தொடங்கினர். கொள்ளையடித்தனர். எங்கு பார்த்தாலும் துஷ்டர்களின் புழுதிப் படலமே நிறம்பியது. மஹரிஷிகளின் நிலைமையை உணர்ந்து, மீண்டும் ஓரரசனை உண்டாக்குவதற்காக வேனனின் தொடையைக் கடைந்தனர். அதிலிருந்து கோரமான, வெந்த கம்பத்தைப் போன்ற கரிய உருவத்துடன் ஒருவன் தோன்றி முனிவர்களிடன் தான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். முனிவர்கள் அவனிடம் வெறுப்படைந்தவர்களாய் "ஒன்றுமே செய்யவேண்டாம். நீ உட்கார் (நிஷீத)" என்றனர். இவனுடைய வம்சத்தவர்களே நிஷாதர்கள் என்ற விந்திய மலைக் காடுகளில் தீச்செயல்கள் புரிந்து கொண்டிருக்கின்ற வேடுவர்கள்.

மீண்டும் வேனனுடைய வலது கையைக் கடைந்த போது ப்ரகாசத்துடன் கூடிய வைன்யன் என்ற ப்ருது பிறந்தான். அவன் பிறந்த போதே ஆகாசத்திலிருந்து விழுந்த ஆடு, மாடுகளின் கொம்புகளால் செய்யப்பட்ட முதன்மையான ஆஜகவம் என்ற ஓர் உயர்ந்த வில்லையும், சிறந்த பாணங்களையும், கவசத்தையும் தனக்கு ஆயுதங்களாக எடுத்துக் கொண்டான். அவன் பிறந்த போது எங்கும் மகிழ்ச்சி பொங்கியது. வேனனுக்கும் ஸ்வர்கம் கிடைத்தது. நதிகளும், ஸமுத்ரங்களும் தானாகவே ரத்னங்களையும், நீரையும் கொண்டு வந்து ப்ருதுவின் பட்டாபிஷேகத்திற்காக வணங்கி நின்றன. ப்ரஹ்மனே ஆறாவது மன்வந்த்ரத்தில் தேவர்களாக இருக்கப்போகிற அங்கிரஸ் என்பவர்களுடனும், ஸ்தாவர ஜங்கமங்களுடனும் நேரில் வந்திருந்து ப்ருதுவிற்கு பட்டாபிஷேகம் செய்வித்தான். அவனது வலக்கையில் ஒரு சக்ர ரேகையும் சுத்தமாக இருப்பதைக் கண்டு வியந்தான் ப்ரஹ்மன்.

எவனது வலக்கையில் விஷ்ணுவின் சக்ர ரேகை காணப்படுகிறதோ அவனை தேவர்களாலும் வெல்ல இயலாது என்று மைத்ரேயரிடம் பராசரர் கூறுகிறார். ப்ருதுவும் தர்மம் தவறாமல் விதி முறைகளைப் பின்பற்றி அரசாண்டு வந்தான். வேனனால் வருந்தி, மெலிந்திருந்த மக்கள் ப்ருதுவால் மனம் மகிழ்ந்தனர். ப்ருதுவை ராஜா என்று அழைத்தனர். இவன் தேரில் செல்லும் போது ஸமுத்ரம் இரைச்சலின்றி பணிவாக இருக்குமாம். மலைகளும் பணிந்து வழிவிடுமாம். தேரின் கொடிகளுக்கு வழிவிட்டு காட்டு மரங்கள் வணங்கி நிற்குமாம். நிலம் உழாமல் விளைச்சலைத் தந்தன. நினைத்தபோதே பலன்கள் கிடைத்தன. பசுக்கள் குறைவின்றி பாலையும், பூக்கள் இலை மடிப்புகளிலேயே தேனையும் பெருக்கின.

ப்ருதுவின் பிறப்பிற்காக செய்யப்பட்ட யாகத்தில் சிறந்த அறிவுடன் ஸூத, மாகதர்களும் தோன்றினர். இவர்கள் ப்ருது சக்ரவர்த்தியைத் துதிப்பதற்காக ரிஷிகளால் பணிக்கப் பட்டனர். அவர்கள் இவன் இப்போது தானே பிறந்திருக்கிறான். இவன் குணங்கள் என்ன. வீரச் செயல்கள் என்ன. புகழ் என்ன எனப் பல கேள்விகளைக் கேட்டனர். அதற்கு அந்த அந்தணர்கள் இவன் மஹாபலவான், ராஜாதிராஜன், மக்களுக்குப் பல நன்மைகளைச் செய்யப் போகிறான். அப்போது இவன் நற்குணங்கள் விளங்கும். நீங்களும் அவைகளையே சொல்லித் துதியுங்கள் என்றனர். அதாவது ப்ருது என்னென்ன செய்யவேண்டும் என்பதை அவனிடம் தாங்கள் நேராகக் கூறாமல், இவர்களைக் கொண்டு துதிக்கச் செய்தால் அவற்றை சந்தோஷித்து ப்ருதுவும் செய்வான் என்று ஏற்படுத்தினர்.

இதைப் புரிந்து கொண்ட ப்ருதுவும், நற்குணங்களாலேயே ஒருவன் துதிக்கத் தக்கவனாகிறான். கீர்த்தியை அடைகிறான். நானும் அவற்றை அடைய வேண்டும். இதற்காகவே இந்த துதியை மஹரிஷிகள் ஏற்படுத்தியிருக்கின்றனர். ஆகவே நான் இந்த ஸூத, மாகதர்கள் கூறும் குணங்களைக் கொள்வேன். எவற்றை விடச்சொல்கிறார்களோ அவற்றை விடவும் விடுவேன் என்று நிச்சயப்படுத்திக் கொண்டான். ஸூத, மாகதர்களும் "இந்த ப்ருது மஹராஜன் உண்மை பேசுபவன், உத்தமன். கொடையாளி, சொன்னதைச் செய்பவன், தகாததில் நாணமுள்ளவன். எவரிடமும் நட்பு பூண்டவன். பொறுமையாளன், பராக்ரமன், கொடியவர்களைத் தண்டிப்பவன், தர்மவான், நன்றி மறவாதவன், அருளாளன், இனிமையாகப் பேசுபவன், யாகங்களைச் செய்பவன், அந்தணர்களிடம் அதிக அன்பு கொண்டவன், நல்லோரிடம் குறை காணாதவன், பக்ஷபாதமின்றி நீதி வழங்குபவன்" என்றெல்லாம் துதித்துரைத்தனர்.

இவற்றையெல்லாம் ப்ருது சிறப்பாக செய்தபோதும் பூமி ஒரு வளத்தையும் தரவில்லை. மக்களின் வேண்டுதலைக் கேட்டு, பசுவின் உருவில் ஓடிச் செல்லும் பூமியின் மீது கோபம் கொண்டு ஆயுதங்களுடன் துரத்திச் சென்றான். மூவுலகில் எங்கு சென்றாலும் பின்னாலேயே ப்ருது மஹாராஜனையும் கொடும் ஆயுதங்களுடன் தொடர்ந்ததைக் கண்ட பூதேவி "அரசே! பெண் பாவம் பொல்லாததன்றோ. என்னைக் கொல்லாதீர்கள்" என்று கெஞ்சினாள். "பலருக்கு நன்மை ஏற்படுமெனில் ஆணானாலும், பெண்ணானாலும் கொல்வதில் தவறில்லை" என்று ப்ருதுராஜன் மறுப்புரைத்தான். பூதேவி, "நானன்றோ மக்களுக்கு ஆதாரம், நானில்லையென்றால் மக்கள் கதி என்னாகும்" என்றாள். ப்ருது "நானே என் சக்தியால் அவர்களுக்கு ஆதாரமாயிப்பேன்" என்றான். வேறு வழியில்லாத பூமி, பயத்துடனும், பணிவுடனும் "மக்களுக்குத் தேவையான ஓஷதிகளை நான் இப்போது பசுவின் ரூபத்தில் இருப்பதால் பாலாகக் கொடுக்கிறேன். அவை எங்கும் பரவ வசதியாக பூமியை சமமாக்கி, தகுந்த கன்றுடன் வந்து கரந்து கொள்ளுங்கள்" என்றாள்.

வைன்யனும் தன் வில் நுனியால் மலைகளை ஆயிரமாயிரமாக தூக்கி எறிந்து பூமியைச் சமப்படுத்தினான். பசுவை சந்தோஷப்படுத்தி பாலைப் பெருக்க ஸ்வாயம்புவ மனுவையே கன்றாக்கி, தன் கையையே பாத்ரமாக்கி மக்களுக்குத் தேவையான ஓஷதிகள், பயிர்களைக் கறந்து கொடுத்தான். இப்படி அஞ்சி ஓடிய பூமியையும் ரக்ஷித்தமையால் ப்ருது பூமிக்குத் தந்தையுமானான். பூமியும் ப்ருத்வி என்று அழைக்கப்படலாயிற்று. இப்படியே தேவர்களும், முனிவர்களும், ராக்ஷஸர்களும், கந்தர்வர்களும், யக்ஷர்களும், பித்ருக்களும், மலைகளும், மரங்களும் தங்கள் ஜாதிக்கேற்ற பலவற்றைப் பாத்ரமாகவும், கறப்பவனாகவும், கன்றாகவும் கொண்டு பூமியைக் கறந்து தங்களுக்கு வேண்டியதைப் பெற்றுக் கொண்டனர்.

பூமித் தாயும் ப்ருதுவினால் மகிழ்ந்து, ப்ருதுவும் மக்களை மகிழ்வித்து சிறந்து அரசாண்டான்.
இந்த ப்ருதுச் சக்ரவர்த்தியின் புனிதமான கதையை கேட்பவர்களையும், படிப்பவர்களையும் எந்த தீங்கும் அணுகாது. தீய கனவுகளும் வராது புண்யங்களைக் கொடுத்து நலங்களைக் கொடுக்க வல்லது இந்த ப்ருது மஹராஜனின் வரலாறு.

No comments:

Post a Comment