Thursday, December 31, 2009

விஷ்ணு புராணம் - 17

01_17. மைத்ரேயா! ப்ரஹ்லாஹன் சரிதம் மிக உயர்ந்தது. கெட்பவர்களுக்கு எல்லா நன்மைகளையும் தரக்கூடியது. இதைக் கவனத்துடன் கூறுகிறேன். கேள். திதியின் மகனான ஹிரண்யகசிபு கடுந்தவமிருந்து ப்ரஹ்மதேவனிடமிருந்து பல வரங்களைப் பெற்று செருக்குடன் இந்த்ரன் முதலானோர்களை விரட்டி விட்டுத் தானே அரசாளத் தொடங்கி விட்டான். யாகங்களிலும் தேவர்களின் பங்கைத் தானே அனுபவித்து வந்தான். தேவர்களும் அவனுக்குப் பயந்து நாட்டைத் துறந்து, மானிட லோகத்தில் பல வேஷங்களிலும், இடங்களிலும் மறைந்து வாழ்ந்து வந்தனர். மூவுலகிலும் கந்தர்வர்களும், ஸித்தர்களும் பலரும் அவனைப் போற்றிப் புகழ்ந்து, பாடத் தொடங்கினர். வாத்யங்களாலும், கோஷங்களாலும் அவனை மகிழ்வித்தனர்.

ஸ்படிகத்தாலான அப்ரகம் என்ற மாடியிலே இருக்கும் ஹிரண்யகசிபுவை அப்ஸரஸ்ஸுக்கள் ஆடிப் பாடிப் பரவசப்படுத்துவார்கள். மது, ரத்தம் இவைகளைப் பருகிப் பல போஹங்களை அனுபவித்து வந்தான். அவனுக்குத் தலைகீழான ஒரு பிள்ளையாக ப்ரஹ்லாதன் இருந்தான். எப்போதும் தவமிருப்பவர்களுக்கு ஒரு கெட்ட பிள்ளை வாய்ப்பதைப் போல, இவனுக்கு ஒரு பரம பாகவதன். குருகுலத்தில் கல்வி கற்று வந்த ப்ரஹ்லாதன் ஒரு முறை தன் குருவுடன் தந்தையிடம் வந்தான். மது மயக்கத்திலிருந்த ஹிரண்யகசிபு குழந்தையை எடுத்துத் தழுவி, குருகுலத்தில் கற்றவற்றுள் ஸாரமான விஷயத்தைக் கூறக் கூறுகிறான்.

குழந்தை "அப்பா! நீங்கள் கேட்பதால் உங்கள் உத்தரவுடன் கூறுகிறேன். கவனமாகக் கேளுங்கள். அச்யுதனை அடிபணிந்திருக்கிறேன் நான். அவன் அடியார்களைக் கைவிடாதவன். ஆதி, அந்தம், நடு என்பவைகளில்லாதவன். தேச, காலங்களால் அளவிடமுடியாதபடி எங்கும் எப்போதும் நிறைந்திருப்பவன். பிறப்பிறப்பில்லாதவன். வளர்ச்சியும், அழிவும் இல்லாதவன். அவனை வழிபடுவதே ஸாரமான விஷயம்" என்றான். இதைக் கேட்ட தகப்பனுக்கு கோபம் பொங்கியது. தன்னை விட ஒருவனை உயர்ந்தவனாக உபதேஸித்துள்ள ஆசிரியரிடம் தன் கோபத்தைக் காட்டினான். "ஏ! ப்ராஹ்மணோத்தமா! என்னை மதிக்காமல் குழந்தைக்கு ஸாரமற்ற ஒரு விஷயத்தைப் போதித்துள்ளீர். இவன் என் பகைவனைப் புகழ்ந்து பேசுவதற்கு நீரே காரணம். ஏன் இவைகளை இவனுக்கு கற்பித்தீர்கள்" என மிரட்டினான். அதற்கு அந்த ஆசிரியர் அவன் கூறும் விஷயங்களுக்குத் தான் பொறுப்பல்ல,அவன் தன் மனதுக்குத் தோன்றியதைக் கூறுகிறான், நான் கற்பித்ததைக் கேட்டால் நீங்கள் மகிழ்வீர்கள், வேண்டுமென்றால் கேட்டுப் பாருங்கள்" என்று கூறுகிறார்.

ஹிரண்யன் இதை உனக்கு உபதேஸித்தவர் யார் எனக் கேட்கிறான் குழந்தையிடம். ப்ரஹ்லாதன் அப்பா! வேறு யார்! அனைத்து இதயத்திலும் இருந்து கொண்டு ஞானத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ விஷ்ணுவே எனக்கு இதை உபதேஸித்தார். ஹிரண்யன் கடுங்கோபத்துடன் "யார் அந்த விஷ்ணு" எனக் கேட்கிறான். ப்ரஹ்லாதன் "அவன் ஸ்வரூபம் விளக்க முடியாதது. யோகிகளுக்கு மட்டுமே விளங்கக் கூடியது. அவனிடமிருந்தே அனைத்தும் தோன்றுகின்றன. அவனுக்கு உடலாக இருக்கின்றன. அவனே பரமேச்வரன்" என்றான் ப்ரஹ்லாதன். ஹிரண்யன் "மதிகெட்டவனே, பரமேச்வரன் நான் ஒருவனே. நீ வாழ விரும்பினால் என்னைத் துதி. விஷ்ணுவைத் துதித்தால் வீணே இறப்பாய்" என்கிறான்.

"அப்பா! கோபிக்காதீர்கள். அவனே உங்களையும் படைத்துக் காப்பவன், புத்தி தெளிவடையுங்கள்" என பதில் கூறுகிறான் பிள்ளை. "இவன் மனதில் எவனோ ஒருவன் புகுந்து கொண்டு இவனை இதையெல்லாம் பேசச் செய்கிறான். அவன் யார் என்று தெரியவில்லை" என்கிறான். ப்ரஹ்லாதன் அப்பா, நீங்கள் கூறுவது முற்றிலும் சரி. ஒருவன் புகுந்து தான் என்னை இப்படிப் பேச வைக்கிறான். அவனே விஷ்ணு. ஆனால் அவன் என் மனதில் மட்டுமில்லை. நீங்கள் உட்பட அனைவர் மனதிலும் உட்புகுந்து அவரவர் செயல்களைச் செய்ய வைக்கிறான்" என்றான். மேலும் வாதத்தைத் தொடர விரும்பாத ஹிரண்யன் அஸுரர்களைக் கூப்பிட்டுப் பிள்ளையை மீண்டும் கண்டிப்பு, தண்டனைகளோடு நல்ல கல்வி கற்க மீண்டும் குருகுலத்திற்கே அனுப்பச் சொல்கிறான். அவர்களும் அவ்வாறே செய்கின்றனர். குழந்தை மீண்டும் குருமார்களுக்குப் பணிவிடை செய்து கொண்டு கல்வியைக் கற்று வருகிறான்.

மீண்டும் சில காலம் சென்ற பின் குழந்தையை பரிக்ஷை செய்வதற்காக அழைத்து வரச் செய்து, கற்றதில் ஏதாவது ஒரு பாடலைச் சொல்லச் சொல்கிறான். "ப்ரக்ருதி, புருஷன், ஜகத் என அனைத்தும் பரமனிடமிருந்தே வெளிப்படுகின்றன. எல்லாவற்றிற்கும் அவனே காரணன். அவன் அருள் நமக்கு வேண்டும்" எனப் பாடுகிறான். பொருளற்ற சொற்களைக் கூறினாலும் கொண்டாட வேண்டிய குழந்தைப் பருவம். உறவும் இனிமையானதே. ஆனாலும் ஹிரண்யன் வெகுண்டான். அஸுரர்களை நோக்கி "இவன் என் பிள்ளைதான். எனினும் துராத்மா. இவன் வாழ்வதில் பயனில்லை. குலத்தை நாசம் செய்யும் நெருப்பே இவன். கொன்று விடுங்கள் இவனை" எனக் கட்டளையிடுகிறான். அவ்வளவுதான். பயங்கரமான ஆயுதங்களுடன் பல்லாயிரக் கணக்கில் கோரமான அஸுரர்கள் ஒரு குழந்தையைக் கொல்லச் சூழ்ந்தனர்.

"அஸுரர்களே, என்னிடமும், உங்களிடமும், உங்கள் ஆயுதங்களிலும் பரமன் நிறைந்திருக்கிறார். இது உண்மையானால் இந்த ஆயுதங்கள் என்னை ஒன்றும் செய்யாது" என உரைத்தான். அவ்வாறே ஒரு ஆயுதமும் அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. இதைக் கண்ட ஹிரண்யன் கொஞ்சிப் பார்க்கிறான். குழந்தாய்! பயம் வேண்டாம், நான் உனக்கு அபயமளிக்கிறேன் என்றான். குழந்தையோ "அப்பா! உங்களிடம் அபயம் வேண்டி நிற்கும் நிலைமை எனக்கு இல்லை. மிக பயங்கரமான, பயப்படவேண்டிய பிறப்பு, இறப்பு, மூப்புமே பெருமானை நினைத்த மாத்திரத்தில் அகன்று விடும். அவனோ என்னிடத்திலேயே இருக்கிறான். நான் எதற்காக அஞ்ச வேண்டும், நீங்கள் எதற்காக அபயமளிக்க வேண்டும், எதற்குமே தேவையில்லை இப்போது" என்று பரிஹஸிக்கிறான்.

தக்ஷகன் முதலான விஷப் பாம்புகளால் கடிக்க வைத்தும், அவைகள் தான் பல்லுடைந்தும், உடல் தளர்ந்தும் போனதேயன்றி ப்ரஹ்லாதன் மேல் தோலைக்கூட அவைகளால் அண்ட முடியவில்லை. பிறகு நான்கு தந்தங்களை உடைய திக்கஜங்களால் அவனைக் கொல்ல முயல்கின்றனர். ப்ரஹ்லாதன் "அப்பா! அவைகளின் தந்தங்கள் வஜ்ராயுதத்தின் நுனி போலத்தானிருந்தன. ஆனால் என் மார்பில் மோதியதும் ஒடிந்து சிதறின. இது என் பலமென்றா நினைக்கிறீர்கள். ஜனார்த்னனுடைய த்யானமும், பெருமையும், பலமும், பகவத் பக்தியுமே இவற்றிற்குக் காரணம்" என்கிறான். அடுத்ததாகப் பெருங்குழி ஒன்றை வெட்டி விறகுகளையும், பல குடங்கள் எண்ணை, கொழுப்புகளையும் கொட்டி, வாயு தேவனுக்கும் கட்டளையிட்டு பெரும் நெருப்பில் சிறுவனை இடுகின்றனர். அந்த தீ ஹிரண்யன் மனதைச் சுட்டதேயன்றி ப்ரஹ்லாதனைக் குளிர்விக்கவே செய்தது.

அப்பா! நீங்கள் மூட்டி, காற்றால் நன்கு வளர்க்கப் பட்ட இந்தத் தீயின் வெப்பம் தாளாமல் தாங்கள் தான் தூரத்திற்குச் சென்று விட்டீர்கள். நான் பத்துத் திசைகளிலும் தாமரை மலர்களால் சுற்றி நிரப்பப்பட்டது போலவே உணர்கிறேன்" என்கிறான் மீண்டும் ப்ரஹ்லாதன் அப்பாவிற்கு புத்தி வருமா என்று. இல்லை. அவன் திருந்தவில்லை, வருந்துகிறான் பிள்ளை இறக்கவில்லையே என்று, தன் செயல்கள் பலிக்கவில்லையே என்று. அப்போது அங்கு வந்த அவனுடைய புரோஹிதர்களான சுக்ராச்சார்யாரின் புதல்வர்கள் சண்டாமர்கர் முதலானோர் ஹிரண்யனை ஸ்தோத்ரிக்கின்றனர். "இவன் குழந்தை, இந்த பருவம் குற்றங்கள் செய்யத் தூண்டும். இவனைக் கோபித்துப் பயனில்லை. தங்கள் கோபத்தைத் தேவர்களிடம் செலுத்துங்கள். இவன் இனிப் பகைவனைப் போற்றாமல் நாங்கள் முயற்சிக்கிறோம். உங்களுக்கு உகந்தவனாக்குகிறோம். இல்லையென்றால் நாங்களே இவனை க்ருத்யையைக் (பூதம்) படைப்பித்துக் கொன்று விடுகிறோம். அது நிச்சயம் தோற்காது, இவனை எங்களிடம் ஒப்படையுங்கள்" எனக்கூறி அழைத்துச் செல்கின்றனர்.

இப்போது குருகுலத்தில் ப்ரஹ்லாதன் மற்ற அஸுரச் சிறுவர்களுக்கும் விஷ்ணு பக்தியை உபதேஸிக்கத் தொடங்கி விடுகிறான். "சிறுவர்களே! நான் சொல்லும் உண்மையைக் கேளுங்கள். ஆசார்யர் பணத்திற்காகப் பொய்யான பொருளை உபதேஸிக்கிறார். நான் எந்த ஆசைகளும் இன்றி உண்மையைப் போதிக்கிறேன். இந்த வாழ்க்கை துன்பம் நிறைந்தது. இதை நீங்களே அறிவீர்கள். பிறப்பிலும், இறப்பிலும் ஒரு சுகமும் இல்லை. உணவும், நெருப்பும் கூட பசியும், குளிரும் இருக்கும் போதே சுகம். மற்ற நேரங்களிலில்லை. உடல் முடங்கிக் கிடப்பவனுக்கு மிதியும், காதலனுக்குக் காதலியின் கால் ஸ்பரிசமும் இதைப் போன்றதே. எப்போதும் எதுவும் நிலையான சுகமில்லை. மேலும் எதையும் தேடியடைவதும் சுகமில்லை. இது ஒவ்வொரு பொருளுக்கும் பொருந்தும். மோஹமே எதையும் மறைக்கிறது.

மோஹத்தால் மறைக்கப்பட்டவர்களுக்கே இந்த உலகப் பொருட்கள் சுக ஸாதனங்கள். உண்மையை அறிந்தவர்கள் இவைகளை நினைக்க மாட்டார்கள். நாம் செலுத்தும் ஒவ்வொரு உலகப் பொருளின் மீதான் பற்றும் நாமே நம் நெஞ்சில் குத்திக் கொள்ளும் ஆணிகள். மாம்ஸமும், ரத்தமும் நிறைந்த இந்த உடல் நரகத்தை விட மேலான நரகம். இவற்றிலிருந்து வெளியேறுங்கள். நாராயணன் அருளை நாடுங்கள். பால்யர்கள் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். ஆத்மா பருவங்கள், பிறப்பு, இறப்பிற்கு அப்பாற்பட்டது. ஆசையாலும், பிறகு பார்த்துக் கொள்ளலாமென்றும் பால பருவத்திலிருந்து, யௌவனத்திற்கும், அங்கிருந்து மூப்பிற்கும் செல்லாதீர்கள். மூப்பு வரும்போது முன்பே இதைத் தேடாமலிருந்து விட்டோமே என்று எண்ணக் கூடாது.

நீரிலிருந்தாலும் வண்ணானும், மீன் பிடிப்பவர்களும் தங்கள் தாஹத்தைச் சிறிதும் எண்ணாமல் இதையும் தோய்த்து விட்டுப் பருகுவோம் என்றும், இன்னும் பிடித்து விட்டுப் பருகுவோமென்றுமே கடைசி வரையில் வருந்துவது போன்றது நம் நிலை. ஆகையால் தள்ளாமல் அவ்வப்போதே ஆத்மலாபத்தைத் தேடிக் கொள்வோம். இதற்கு சிறந்த வழி விஷ்ணுவை நினைப்பதே. அவனே எல்லா துக்கங்களிலுமிருந்து நம்மை விடுவிப்பவன். உங்களுக்காக இல்லாவிட்டாலும் எனக்காகவாவது அவனை நினையுங்கள். பாவங்கள் அகலும். அளவிலா நன்மைகளுண்டாகும்.

அவன் அனைத்துயிர்களுக்கும் அந்தர்யாமி. அவனிடம் நட்பு கொள்ளுங்கள். எல்லா ப்ராணிகளிடமும் நட்பு கொள்ளுங்கள். த்வேஷிக்காதீர்கள். புத்திமான்கள் நம்மைக் கண்டு அஞ்ஞானத்தால் இப்படி இருக்கிறார்களே என்று இரக்கப்படுகிறார்கள். வேதாந்திகளுக்கு உலகம் விஷ்ணுமயம். அவரின் விரிவே உலகம். அவனுடலே உலகம். இப்படியறிந்தால் பிறருக்குச் செய்யும் தீங்கு நமக்குச் செய்யப்பட்டதாகத் தோன்றும். பிற உயிர்களிடத்தில் பகைமை உண்டாகாது. ஆகையால் நாமனைவரும் இந்த அஸுரத்தன்மையை விட்டுப் பேரானந்தத்திற்கு முயல்வோம். இந்த மோக்ஷத்தை வேறெந்த தேவரும் தர முடியாது. கேசவனால் மட்டுமே இது கூடும். ப்ராணிகளிடத்தில் ஸமத்வ புத்தி செய்து அவனருளுக்குப் பாத்ரமாவோம். அற்பமான தர்மார்த்த, காமங்களை விரும்பாதீர்கள். மோக்ஷத்தையும் நீங்களாக விரும்பி முயல வேண்டாம். பழங்கள் நிறைந்த நல்ல மாமரத்தினடியில் இருந்தால் அவனுக்குக் கனிந்த பழங்கள் தானே கிடைப்பது திண்ணம். பகவானோ ஒரு ப்ரஹ்ம வ்ருக்ஷம், மோக்ஷத்தைத் தரும் பாரிஜாதம்" என்று தன் உபதேஸத்தை முடிக்கிறான் ப்ரஹ்லாதன்.

No comments:

Post a Comment