Tuesday, November 5, 2013

வாமன புராணம் - 02

வாமன புராணம் - 02

ப்ரஹ்லாத-நாராயண யுத்தம்: ஒரு ஸமயம் ச்யவன முனிவர் நர்மதையில் ஸ்னானம் செய்து கொண்டிருக்கையில் நாகப்பாம்பு ஒன்று அவரைக் கடித்து நாகலோகத்திற்கு இழுத்துச் சென்றது.  அவர் மஹாவிஷ்ணுவை ஸ்மரித்தவுடன் விஷமகன்றது.  இவர் வருகையை அறிந்த ப்ரஹ்லாதன் அவரை உடனே வந்து வரவேற்று அர்க்க, பாத்யங்களை அளித்து உபசரித்து தனக்கு தர்மோபதேசம் செய்ய வேண்டுமென்று ப்ரார்த்தித்தான்.  அவர் அவனுக்கு தீர்த்தயாத்ரையின் மஹிமையை எடுத்துக் கூறினார்.  இதைக் கேட்ட ப்ரஹ்லாதன் தீர்த்தயாத்ரைக்குக் கிளம்பினான்.  பூலோகத்தில் நைமிச தீர்த்தத்தில் ஸ்னானம் செய்யச் சென்ற போது அங்கு ஜடாமகுடம் தரித்து, அஸ்த்ர பாணிகளாய் தவம் புரிந்து கொண்டிருந்த நர, நாராயணர்களைக் கண்டான்.  உடனே "இந்த வேஷத்தில் நீங்கள் வில்லைக் கையில் கொண்டிருக்கும் காரணமென்ன?  சக்தியிருந்தால் என்னோடு சண்டைக்கு வாருங்கள்" என்று அவர்களை சண்டைக்கு அழைத்தான். நரனுக்கும், ப்ரஹ்லாதனுக்கும் பல ஆண்டுகள் சண்டை நடந்தன.  இருவரும் பல திவ்யாஸ்த்ரங்களை உபயோகித்துக் கொண்டிருந்தனர்.  உலகம் இருளில் மூழ்கியது.  வெற்றி, தோல்வி நிர்ணயிக்க முடியாததாயிற்று.  தேவர்கள் அவரவர் விமானங்களில் வந்து இந்த யுத்தத்தைக் களித்துக் கொண்டிருந்தனர்.  அஸ்த்ரங்களின் ஜ்வாலை எழும்போதெல்லாம் ஆரவாரம் பொங்கியது.

ப்ரஹ்லாதன் நாராயணரையும் போருக்கு அழைத்தான்.  அவரும் யுத்தத்தில் ஈடுபட்டார்.  தேவ வர்ஷத்தில் ஆயிரமாண்டுகள் கடந்தன.  நாராயணர் அவனை அடித்து வீழ்த்தினார்.  மூர்ச்சையுற்று தேர்த்தட்டில் விழுந்த அவனை ஸாரதி தேருடன் உடனே அங்கிருந்து அப்புறப்படுத்தி மூர்ச்சை தெளிவித்தான்.  விழித்தெழுந்த ப்ரஹ்லாதன் மீண்டும் நர, நாராயணர்களைப் போருக்கு அழைத்தான்.  நாராயணன் அவனை மாலைக் கடன்களை முடித்து, ஓய்வெடுத்துக் கொண்டு காலையில் மீண்டும் போருக்கு வருமாறு கூறினார்.  இரவெல்லாம் தூக்கமின்றி ஏன் இன்னும் எனக்கு வெற்றி கிடைக்கவில்லை என்று பகவானை ப்ரார்த்திக் கொண்டிருந்தான்.  மஹாவிஷ்ணு அவனெதிரில் தோன்றி நர, நாராயணர்களை இப்படி வெல்ல முடியாது, பக்தியால் வெல்ல முயற்சி செய் என்று கூறி மறைந்தார்.  ப்ரஹ்லாதன் உடனே பாதாள லோகம் திரும்பி தன் ஸஹோதரன், ஹிரண்யாக்ஷனின் மகனான அந்தகனிடம் ராஜ்ய பாரத்தை ஒப்படைத்து விட்டு, பத்ரிகாச்ரமம் சென்று நர, நாராயணர்களை பக்தியுடன் துதித்தான்.  அவர்கள் அவனுக்கு விஷ்ணு பக்தி, ப்ராஹ்மண பக்தி எனும் வரங்களை அளித்து அதை அவன் குலத்தோருக்கும் உபதேசிக்குமாறு கூறினர்.  அவனும் பாதாள லோகம் திரும்பி அரசைத் துறந்து, ஆச்ரமம் அமைத்து, அங்கிருந்து கொண்டு தைத்யர்களுக்கு பக்தியை போதித்துக் கொண்டிருந்தான்.

அந்தகன்: கண்ணில்லாதவன்.  இருந்த போதிலும் ப்ரஹ்லாதனளித்த ராஜ்யத்தை நன்கு பரிபாலனம் செய்தான்.  பல வருஷங்கள் கடும் தவமிருந்து சிவபெருமானிடமிருந்து பெரும் வரங்களைப் பெற்று, திக்விஜயத்திற்குக் கிளம்பினான்.  தேவேந்த்ரனும் போருக்குத் தயாரானான்.  தனுவின் கையிலிருந்து தோன்றிய வெள்ளை யானையில் அவன் ஏறிக் கொண்டான்.  ருத்ரனுடைய தேஜஸிலிருந்து தோன்றிய பௌண்ட்ரகமெனும் எருமையில் எமனும், அவருடைய காதுக் குரும்பையிலிருந்து தோன்றிய சிம்சுமாரத்தில் வருணனும், பார்வதியின் பாதங்களிலிருந்து தோன்றிய நர வாஹனத்தில் குபேரனும் ஏறிப் போருக்குச் சென்றனர்.  ஆயிரம் குதிரைகள் பூட்டிய ரதத்திலேறி அந்தகன் கிளம்பினான்.  உலகமே நடுங்கும்படியான அந்தக் கடும் போரில் வித்யுத்கேசியின் புதல்வனான ஸுகேசியை ஸூர்யன் அடித்து வீழ்த்தினான்.  முடிவில் அந்தகனே அனைவரையும் வென்று மூவுலகையும் தனதாக்கிக் கொண்டான்.

No comments:

Post a Comment