Sunday, November 10, 2013

வாமன புராணம் - 08

வாமன புராணம் - 08

தீர்த்தங்கள்: இதன் பின், மஹர்ஷிகள் தீர்த்தங்களின் மஹிமைகளைக் கூறுமாறு ஸூதரை வேண்ட அவர் கூறுகிறார்.  ஒரு ஸமயம் த்வைத வனத்தில் இருக்கும் போது, மார்க்கண்டேயர் மஹாவிஷ்ணுவின் நாவிலிருந்து உண்டான ஸரஸ்வதி நதியில் நீராடி, அதனைத் துதித்தார்.  உடனே ப்ரத்யக்ஷமான ஸரஸ்வதி அவரோடே அவர் செல்லும் வழியெல்லாம் வருவதாக அருளினாள்.  அவர் அவளை குருக்ஷேத்ரத்துக்கு அழைத்துச் செல்ல அங்கு ப்ரஹ்மஸரஸ், நாகஹ்ரதம், விஷ்ணு ஸ்தானம், விமலம், பாரிப்லவம், ஸததம், பஞ்சநதம், கோடி, ஸோம, ஏகஹம்ஸம், காணபத்யம், ராமஹ்ரதம்,ஸ்ரீ, ஸூர்ய, ப்ரஹ்மாவர்த்தம், ஸுதீர்த்தம், தசாச்வமேதம் முதலிய ஆயிரம் தீர்த்தங்கள் ஸரஸ்வதியின் அருளால் தோன்றின.  இங்குள்ள ஸரஸ்வதி, வைதரணீ, கங்கா, மந்தாகினீ, மதுச்ரவா, அம்லு, கௌசிகீ என்ற ஏழு நதிகளுக்கு புதிய ப்ரவாஹத்தின் போது வரும் ரஜஸ்வலா தோஷம் கிடையாது.  இங்குள்ள ஸுப்ரபை, காஞ்சனாக்ஷி, விமலா, மானஸஹ்ரதா, ஸரஸ்வத்தோயா, ஸுவர்ணா, விமலோதகா எனும் ஏழு நதிகள் கூடும் இடத்திற்கு ஸப்தஸாரஸ்வதம் என்று பெயர்.  இவைகளின் அருகில் காம்யகம், அதிதி, வ்யாஸ, பலகீ, ஸூர்ய, மது, சீத வனங்கள் இருக்கின்றன.  இந்த குருக்ஷேத்ரத்துக்குப் போவதாக நினைத்துக் கொண்டாலே புண்யம். இங்கு வஸிப்பவர்களுக்கு ப்ரஹ்மஞானம் உண்டாகும். அதிதி வாமனருக்காக தவம் புரிந்த அதிதி வனத்தைத் தர்சிப்பவர்க்கு சத்புத்ரர்கள் பிறப்பார்கள்.

ஒரு ஸமயம், ராமர் வனவாஸத்தில் துஷ்டர்களை சிக்ஷிக்கையில், ஒரு ராக்ஷஸனுடைய தலை அறுந்து ரஹோதரர் என்ற முனிவரின் தலையில் சென்று ஒட்டிக் கொண்டு விட்டது.  எந்த முயற்சியிலும் அங்கிருந்து அகலாத அந்த தலை, பல தீர்த்தங்களிலும் நீராடி பலனில்லாத போது ஔசனஸம் என்ற தீர்த்தத்தில் நீராடிய போது அகன்றது, இதனால் அந்த தீர்த்தத்திற்கு கபால மோசன தீர்த்தம் என்றும் பெயர் உண்டானது.

த்ருதராஷ்ட்ரன் ஒரு ஸமயம் தன்னிடம் யாசிக்க வந்த மஹர்ஷிகளை இகழ்ந்து பேசினான்.  தால்ப்யர் என்ற ரிஷி ப்ராஹ்மணர்களை அவமதித்த அவனை தண்டிக்க எண்ணி, தன் மாம்ஸத்தையே அறுத்து அருகிலிருந்த தீர்த்தத்தில் ஹோமம் செய்தார்.  த்ருதராஷ்ட்ரனின் ராஜ்யம் இதனால் கொஞ்சம், கொஞ்சமாக அழிய ஆரம்பித்தது.  தன் தவறை உணர்ந்த ராஜன் ப்ராஹ்மணர்களுக்கு போதுமென்ற அளவுக்கு மேலாக பொருளை அளித்து, தால்ப்ரது பாதங்களில் விழுந்து தன் தவறை மன்னிக்கக் கோரினான்.  அவரும் அவனுக்கு ஹிதோபதேசம் செய்து, தான் ஹோமம் செய்த தீர்த்தத்திலேயே அவனை நீராடும் படி கூறினார்.  அந்த தீர்த்தமே அவகீர்ணா என்று அழைக்கப்படுகிறது.

மற்றொரு ஸமயம், வஸிஷ்டரது ஆச்ரமத்தினருகே வஸித்துக் கொண்டிருந்த விச்வாமித்ரர் தன் தபோபலத்தால் ஸரஸ்வதி நதியை அருகே ஓடும்படி செய்து கொண்டு ஈச்வர ஆராதனை செய்து வந்தார்.  அப்போது அவர் வஸிஷ்டர் மேலிருந்த கோபத்தால் அவரை தன்னருகே அடித்து வரும்படி ஸரஸ்வதி நதியை ஏவினார்.  விச்வாமித்ரரின் கோபத்திற்குப் பயந்த ஸரஸ்வதியும் வஸிஷ்டரிடம் சென்று வருந்தினாள்.  அவரும் தன்னை அழைத்துப் போகும்படி சொன்னதால், ஸரஸ்வதியும் அவரை தன் ப்ரவாஹத்தால் விச்வாமித்ரர் ஆச்ரமத்திற்கு இழுத்து வந்தாள்.  அவரைக் கண்டவுடன் அவரை அடிக்க விச்வாமித்ரர் ஆயுதத்தைத் தேடுவதைக் கண்ட ஸரஸ்வதி, "இவர் சொற்படி வஸிஷ்டரை இங்கு இழுத்து வந்து விட்டோம், இப்போது இவரைக் காப்பாற்றி விட வேண்டும்" என்று மேலும் பெருகி வஸிஷ்டரைக் காப்பாற்றிச் சென்று விட்டாள்.  இந்த செயலைக் கண்ட விச்வாமித்ரர் ஸரஸ்வதியை ரக்தமாக ஓடும்படி சபித்துவிட்டார்.  ரக்த ஆறாக ஓடிய ஸரஸ்வதியை அண்டி பூத, ப்ரேத, ராக்ஷஸர்களும் சந்தோஷமாக ரக்தபானம் செய்து கொண்டு வஸித்து வரலாயின. 

பல காலத்திற்குப் பின் தீர்த்தயாத்ரையின் போது ஸரஸ்வதி நதியில் ரக்த வெள்ளத்தைக் கண்ட மஹர்ஷிகள், அவள் மூலமாக விச்வாமித்ரரது செயலை அறிந்து கொண்டனர்.  தங்கள் தபோபலத்தால் அருணை நதியை அங்கு அழைத்து ஸரஸ்வதியை மீண்டும் சுத்தப்படுத்தினர்.  அங்கு வஸித்து வந்த பூத, ப்ரேத, ராக்ஷஸர்கள் "ப்ராஹ்மணர்கள், ஆசார்யர்கள், பெற்றோர்களை அவமதித்ததால் நாங்கள் இவ்வாறு ஆனோம்.  நாங்கள் இனி உணவுக்கு என்ன செய்வோம்" என்று ரிஷிகளை வேண்ட, அவர்கள் "கவலை வேண்டாம், புழு, மயிர் இவைகளுள்ளது, ஆசாரமற்றவன் உண்ட மிச்சம், மூச்சுக் காற்று கலந்தது, இப்படிப்பட்ட அன்னம் இனி உங்களுடையது" என்று கூறினர்.  மேலும் அருணை, ஸரஸ்வதியின் ஸங்கமத்தில் அவர்களையும் நீராடச் செய்து அவர்களுக்கும் நற்கதி அளித்தனர்.  இந்த தீர்த்தம் வஸிஷ்டோத்வாஹம் எனப்படும்.

இந்த வெளியிலுள்ள தீர்த்தங்கள் எல்லாம் சரீரசுத்தியை மட்டுமெ செய்யும்.  இவற்றையல்லாது ஒவ்வொருவருடைய உடலிலும், ஆத்மாவெனும் பரம புண்ணியமான ஓர் நதி உள்ளது.  சீலம், சத்யம் இவைகளே அதன் தீர்த்தம்.  அடக்கமென்பது படித்துறை.  இந்த நதியில் தீர்த்தமாடினால் அவரவர் பாபங்களகன்று சித்தம் சுத்தமாகும்.  இந்த சுத்தமான எண்ணங்களை பரமாத்வாவிடம் அர்ப்பணிப்பதை விட வெறு புண்ய ஸ்நாநம் இல்லை.  சாதுக்களுக்கு ஸத்யம்,ஸமரஸம், ஒழுக்கம், கபடமில்லாமை, வெளி விஷயங்களிலிருந்து மனதை திருப்புவது இவைகளைத் தவிர வேறு தனங்களில்லை.

No comments:

Post a Comment