Sunday, November 24, 2013

வாமன புராணம் - 14

வாமன புராணம் - 14

முராஸுர வதம்: ஸுப்ரமண்யரால் அரக்கர் படை பெருமளவு அழிந்ததும் அந்தகாஸுரன் மீதமிருந்த கொஞ்ச ஸேனையுடன் பூமியில் அலைந்து கொண்டிருந்தான்.  அப்போது அவன் மந்த்ரமலையில் தவமிருந்து கொண்டிருந்த பார்வதி தேவியின் மீது மோஹங்கொண்டான். "இவளை என்னிடம் கொண்டு வந்து கொடுப்பவனே எனக்கு நண்பன். அவனுக்கு நான் எதையும் கொடுப்பேன். இவளை அணைக்காமலிருந்தால் இந்த ஜன்மம் வீண்" என்று பிதற்றலானான்.  உடனே அவன் ஸஹோதரனான ப்ரஹ்லாதன் தன் இரு செவிகளையும் மூடிக் கொண்டு "அந்தகா! இப்படிப் பேசாதே, பிறன் மனைவியைப் பார்ப்பதே பாபம்.  நீயோ ஜகன்மாதாவிடமே இந்த எண்ணம் கொள்கிறாய்.  அடுத்தவரை ஹிம்ஸிப்பதை விட தன்னுயிரை விடுவதும், பொய் சொல்வதை விட பேடியாய் இருப்பதும், பிறர் பொருளில் வாழ்வதை விட உபவாஸமிருப்பதுமே சிறந்ததல்லவா?" என்று அவனுக்கு உபதேசித்தார்.  அவன் இவர் உபதேசங்களைக் கேளாது காம வெறி கொண்டு மயனுடனும், தாரகனுடனும் சேர்ந்து தேவியிடம் சென்றான்.  காவலுக்கிருந்த நந்திதேவரை அடித்துத் தள்ளினான்.  தேவி உடனே அவனை மயக்கத் தன்னைப் போலவே நூறு உருவங்களைப் படைத்தாள்.  அவன் குழப்பத்தில் இருக்கும் போது சதாவரீ என்ற சக்தி அவனைத் தாக்கிக் கீழே தள்ளியது.  விநாயகர் மற்ற அஸுர கணங்களை அழிக்க, தேவி அதன் பின் தன்னைப் போன்ற உருவங்களை பூலோகத்தில் உத்யானவனங்களிலும், நதி, குளங்களிலும் இருக்குமாறு கூறி விட்டு தன் பரிவாரங்களோடு மறைந்து விட்டாள்.  மயக்கம் தெளிந்தெழுந்த அந்தகன் தன் படைகள் அழிக்கப்பட்டிருப்பதையும், தான் அடிபட்டதையும் நினைத்து வெட்கமடைந்தும், காம வெறியோடும் பாதாளத்திற்குச் சென்று விட்டான்.

தேவி தவம் புரிந்து கொண்டிருந்த போது சிவபெருமான் ஏன் அங்கு இல்லை என்று நாரதர் புலஸ்த்யரிடம் கேட்டார்.  "தேவியோடு ஆயிரமாண்டுகள் இல்லற சுகத்தில் லயித்திருந்ததால் தன் சக்தி குறைந்து விட்டதாக நினைத்த பரமேச்வரன், நந்தியையும், கணேச்வரரையும் தேவிக்குக் காவலாக வைத்து விட்டு தவமியற்ற பூலோகத்திற்குச் சென்று விட்டார். அவர் நீர், காற்று இவைகளை மட்டுமே உண்டு பலகாலம் தவமிருந்த போது அவர் பாரம் தாங்காது மந்த்ரமலை பிளந்து தரைமட்டமாயிற்று.  அங்கிருந்து ஒரு நதி தோன்றி ப்ரவஹித்து ஓடியது.  தேவதேவர் அதற்குக் கேதாரம் என்று பெயரிட்டு, அதில் நீராடி, விதிமுறைகள் தவறாது பித்ரு கார்யங்களைச் செய்வோர் கைலாஸத்தை அடைவர் என்று கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு யமுனை, ஸரஸ்வதி நதிகளில் நீராடி, ஜலத்திலிருந்தே தவத்தைத் தொடர்ந்தார்.  இந்த தவத்தின் உக்ரம் தாங்காது தேவர்களோடு, ப்ரஹ்மனும் சேர்ந்து முராரியிடம் சென்று முறையிடலாயினர்" என்று புலஸ்த்யர் கூறியதும் நாரதர் "யாரிந்த முரன்?  அவனை எப்படி விஷ்ணு கொன்றார்?" என்று கேட்டார்.

புலஸ்த்யர் "முரன் என்ற தானவன் தனுவுக்கும், கச்யபருக்கும் பிறந்தவன்.  இவன் தேவர்களால் அரக்கர்கள் அழிக்கப்படுவதை அறிந்து, தேவர்களைக் கொல்ல வேண்டி ப்ரஹ்மனை நோக்கிக் கடுந்தவம் இருந்தான்.  முடிவில் "தன் கை யார் மேல் பட்டாலும் அவர்கள் அழிய வேண்டும்" என்ற வரத்தைப் பெற்றுக் கொண்டு, தேவர்களை விரட்டி அவர் பொருள்களைக் கொள்ளை கொண்டு பாதாளத்திலிருந்த தன் படைகளை மீண்டும் தன்னோடு சேர்த்துக் கொண்டு மூவுலகையும் ஆண்டு கொண்டிருந்தான்.  அப்போது ஸரயூ நதிக்கரையில் யாகஞ்செய்து கொண்டிருந்த ஸூர்யவம்சத்தரசனான ரகுவிடம் சென்று "தேவர்களைக் குறித்துச் செய்யும் இந்த யாகங்களைச் செய்யாதே, இல்லையேல் என்னோடு யுத்தம் செய்" என்று கூறினான்.  அவன் தன் குருவான வஸிஷ்டரைச் சரணடைந்தான்.

வஸிஷ்டர் முரனிடம் "மஹாஸூரனே! மனிதர்களை வெல்வதால் உனக்கு என்ன பெருமை, கொல்வதால் தான் என்ன பெருமை, எல்லா உயிர்களையும் எடுத்துச் செல்லும் யமனல்லவா நீ வெல்லத் தகுந்தவன்" என்று கூற, முரன் யமனிடம் சென்றான்.  இவன் வருகையை அறிந்த யமன் வைகுண்டத்திற்கு ஓடினான்.  அங்கு மஹாவிஷ்ணு அவனைத் தன்னிடம் அனுப்புமாறு யமனிடம் கூறினார்.  யமன் முரனிடம் சென்று "நான் உங்களோடுப் போரிடும் பலவானல்ல, உயிர்களை எடுத்தால் நீங்கள் தண்டிப்பீர்கள். ஆனால், உயிர்களை எடுக்காமலிருந்தாலோ மஹாவிஷ்ணு என்னை தண்டித்து விடுவாரே" என்று வருந்தினான்.  முரன் "அப்படியானால் அவன் இருக்குமிடத்தைக் காட்டு, அவனை வெல்கிறேன்" என்றான்.  யமன் வைகுண்டம் செல்லும் வழியைக் காட்ட அங்கு சென்ற முரன் மஹாவிஷ்ணுவை சரணடையுமாறு கூறினான்.  மஹாவிஷ்ணு அவனைப் பரிஹஸித்து "முரனே! நீ வீரனானால், என்னைக் கண்டதும் ஏன் உன் மார்பு இப்படி அடித்துக் கொள்கிறது? என்னிடம் பயமா?  நீயே உன் மார்பை தொட்டுப்பார்" என்று சிரித்தார்.  "எனக்கென்ன பயம்? என் மார்பு எங்கே துடிக்கிறது" என்று கூறிக்கொண்டே தன் மார்பில் கைவைத்தான்.  அவன் வாங்கிய வரத்தாலேயே அவன் அப்போதே கீழே விழுந்து இறந்தான்.  தேவர்களும் மஹாவிஷ்ணுவைத் துதித்துக் கொண்டாடித் தத்தம் இருப்பிடங்களுக்கு மீண்டும் சென்றனர்" என்று நாரதருக்குக் கூறினார்.

No comments:

Post a Comment