Tuesday, November 12, 2013

வாமன புராணம் - 09

வாமன புராணம் - 09
சிவலிங்க பூஜை: ஒரு ஸமயம் உமாமஹேச்வரி பரமேச்வரனிடம், தாருகாவனத்தில் ஆயிரமாண்டுகளாக தவம் புரிந்து கொண்டிருக்கும் எண்பத்தெட்டாயிரம் வாலகில்ய மஹர்ஷிகளிடம் தயை புரியுமாறு வேண்டினாள்.  ஈச்வரன் அவர்களுக்கு இன்னும் காம, க்ரோதம் அகலவில்லை என்று கூறினார்.  மறுபடியும் தேவி வற்புறுத்தவே, பரமன் திகம்பர ஸன்யாஸி வேடம் பூண்டு அவர்களிடம் சென்று பிக்ஷை கேட்டார்.  அவர்கள் எதையும் இவருக்குக் கொடுக்கவில்லை.  அவர்கள் மனைவிகள் இவர் மேல் ப்ரியங்கொண்டு உணவளித்து, மயங்கி இவர் பின்னாலேயே சென்றனர்.  இதைக் கண்ட அம்முனிவர்கள் ஸன்யாஸியின் லிங்கம் அறுந்து விழட்டும் என சபித்து விட்டனர்.  அவ்வாறே நடக்க, ஈச்வரன் தேவியிடம் சென்று இவர்களுக்கு எப்படி அருள் புரிவது என்று கேட்டார்.  முனிவர்கள் வந்தது ஈச்வரனென்பதை உணர்ந்து, ப்ரஹ்மனிடம் சென்று வருந்தினர்.  அவர் சர்வேச்வரனையே சரணமடையுமாறு கூற, முனிவர்கள் தேவதேவனை ப்ரார்த்திக்க, அவர் ப்ரத்யக்ஷமாகி லிங்க பூஜையை உபதேசித்து அருளினார்.

இந்த லிங்கத்தை மனிதர்கள் எடுத்துச் சென்று விடக்கூடாது என்று எண்ணிய தேவேந்த்ரன் தன் சஹாக்களுடம் இதை எடுக்க முயற்சி செய்தான். அது அசையவேயில்லை.  ப்ரஹ்மா கூறியபடி மருத்துக்கள் உதவியோடு அதன் மேல் புழுதியை மூடினான்.  அதுவும் ஒரு லிங்கமாயிற்று,  அதையும் முனிவர் எடுத்துச் சென்று விட்டனர்.  இப்படி ஏழு நாட்கள் புழுதியால் ஏழு லிங்கங்கள் உண்டாயின.  இதன் அருகில் ஸன்னிஹிதம் எனும் தீர்த்தமும், ஒரு ஆல மரமும் உள்ளது.  இந்த தீர்த்தமே த்ரேதாயுகத்தில் வாயு தீர்த்தம் என்றும், த்வாபர, கலி யுகங்களில் ருத்ரஹ்ரதம் என்றும் வழங்கப்படுகிறது.  இதனருகே ராவணன் கோகர்ணத்தையும், மேகநாதன் ஸித்திதம் எனும் லிங்கத்தையும், கும்பகர்ணன், விபீஷணன், கர, தூஷணன் முதலானவர்கள் வெவ்வேறு லிங்கங்களையும் ப்ரதிஷ்டை செய்து பூஜித்தனர்.  ஹாரீதர், ம்ருகண்டர், சித்ராங்கதன், விஷ்ணு, கார்த்தவீர்யன், ஹனுமான் முதலியவர்கள் சிவ லிங்க பூஜையாலேயே வேண்டிய வரங்களைப் பெற்றனர்.

வேனனும், ஸ்தாணு தீர்த்தமும்: மனுவின் முகத்திலிருந்து உண்டான க்ஷுவதனுக்கும், யமனுடைய புத்ரியான பயை என்பவளுக்கும் திருமணமாகி அவர்களுக்கு வேனன் என்ற ஒரு துஷ்டன் மகனாகப் பிறந்தான்.  அவன் வேத கர்மாக்களைத் தடுத்து, தன்னையே வழிபடுமாறு உலகங்களை ஹிம்ஸித்தான்.  இவன் ஸ்வபாவத்தால் மனம் நொந்த க்ஷுவதன் தவம் செய்து நற்கதியை அடைந்தான்.  மஹர்ஷிகள் இவனுக்கு எவ்வளவு அறிவுரைகள் கூறியும் இவன் திருந்தாததால் இவனை சபித்து விழச் செய்தனர்.  உலகம் அரசனில்லாது போகவே, இவன் இடக்கையைக் கடைந்து ஒருவனை வெளிக் கொணர்ந்தனர்.  வேனனுடைய பாபத்தால், தோன்றியவன் கொடுமையான குணங்கொண்டவனா இருக்கவே அவனை நிஷாதனெனும் வேடனாக்கி விட்டு, வேனனுடைய வலக்கையை கடைந்தனர்.  அதிலிருந்து ராஜகுணங்களோடு ஒரு புதல்வன் தோன்றினான். 
ராஜன் தன் தந்தை எந்த சரீரமெடுத்து இப்போது துன்புற்றுக் கொண்டிருக்கிறாரோ என்று வருந்திக் கொண்டிருக்கும் போது, நாரதர் அவனிடம் வந்து வேனன் மிலேச்ச ஜாதியில் ஒரு குஷ்ட ரோகியாகப் பிறந்திருப்பதை கூறினார்.  ராஜன் அவன் தந்தையைக் கண்டு பிடித்து அவர் பாபம் அகல அவரை ஸ்தாணு தீர்த்தத்தில் தீர்த்தமாட, ஒரு பல்லக்கில் வைத்து தூக்கி வந்தான்.  அப்போது "வேதநிந்தை செய்த இந்த பாபியைக் கொண்டு தீர்த்தத்தைக் கெடுத்து விடாதே, நீ ஸ்தாணுவில் தீர்த்தமாடி, அதன் தீர்த்தத்தைக் கொண்டு கரையில் வைத்து இவனை நீராட்டு, இவன் பாபங்கள் அகலும்" என்று அசரீரி கூறியது.  இந்த ஸமயத்தில் யமனுடைய சபையில் இருந்து தேவர்களுடைய பொருள்களை அஸுரர்கள் எடுத்துச் செல்லுவதைக் கண்டும், பேசாமலிருந்த ஸாரமேயன் எனும் தாஸனை யமன் பூமியில் நாயாகப் பிறக்குமாறு சபித்து விட்டான்.  அதுவும் ஸ்தாணு தீர்த்தத்தினருகில் அலைந்து கொண்டிருந்தது.  வேனன் அருகிலிருந்து அந்த நாயைத் தொடவே, அது பயந்து துள்ளி அருகில் இருந்த நதியில் விழுந்து, கரையேறி உடலை உதறியது.  அதன் மேலிருந்த ஸ்தாணு தீர்த்தத்தின் ஜலம் பட்டவுடன் வேனன் தன் பாபங்கள் அகன்று ம்லேச்ச உடல் நீங்கி அழகான உருவம் பெற்றான்.

பாபங்கள் அகன்ற வேனன் பரமேச்வரனைத் துதிக்க, அவர் ப்ரத்யக்ஷமாகி அவன் தன் பாபத்தால் அடுத்த பிறவியில் ஹிரண்யாக்ஷனுக்கு அந்தகன் என்ற பெயரில் பிறந்து, அம்பிகையின் மேல் காமம் கொள்வான் என்றும், அப்போது தானே சூலாயுதத்தால் அவனைக் கொன்று ப்ரிங்கிரிடன் எனும் சிவகணமாக்கி தன்னருகில் வைத்துக் கொள்வேன் என்றும் அருளினார்.  வேனன் தன் பாபங்களைப் போக்கிய அந்த நாய்க்கும் ஸ்வர்க்கத்தை அருள வேண்ட, இறைவனும் அவ்வாறே அருளி மறைந்தார்.  வேனன் ராஜனுக்கு ஆசிகள் கூறி, விமானமேறி மேலுலகம் சென்றான்.  ராஜன் அதன் பின் தன் ராஜ்யத்திற்கு வந்து பல வேத விஹித கர்மாக்களைச் செய்து, தன் புத்ரர்களிடம் ராஜ்யத்தைக் கொடுத்து விட்டு, குருக்ஷேத்ரத்தில் தவம் செய்து, உடல் நீங்கி அழியாப் பதவியைப் பெற்றான்.

ஒரு ஸமயம், ப்ரஹ்மாவின் உடலிலிருந்து அழகான ஒரு பெண் தோன்ற, அவர் அவளிடம் காமங்கொண்டு அவள் பின் ஓடினார்.  உடனே அவருடைய ஐந்தாவது தலை வெடித்துச் சிதறியது.  அவர் பரமேச்வரனை நோக்கித் தவம் புரிய, அவர் ப்ரத்யக்ஷமாகி, தான் வராஹ கல்பத்தில் ப்ரஹ்மாவின் ஐந்தாவது தலையைப் போக்கியதால், இனி ஒவ்வொரு கல்பத்திலும், எந்த காரணத்திலாவது அவர் ஐந்தாவது தலை போகும் என்று கூறி மறைந்தார்.  அதன் பின் ப்ரஹ்மா நான்கு லிங்கங்களைப் படைத்து குருக்ஷேத்ரத்திலும், வேறு சில இடங்களிலும் அவைகளை ப்ரதிஷ்டை செய்து பூஜித்தார்.

No comments:

Post a Comment