Tuesday, November 26, 2013

வாமன புராணம் - 16

வாமன புராணம் - 16

பகவத் ஸ்வரூபம்: "மஹாவிஷ்ணுவின் ஓம், ந, மோ, ப, க, வ, தே, வா, ஸு, தே, வா, ய எனும் பனிரெண்டு அக்ஷரங்களையும், சிகை, முகம், புஜம், கண், ஹ்ருதயம், வித்யாஸ்தானம், மனஸ், நாபி, ஜனனம், கால், முழங்கால், பாதம் எனும் நமது பனிரெண்டு உறுப்புகளில், முறையே வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி, சித்திரை மாதங்களோடு கூடிய மேஷம், வ்ருஷம், மிதுனம், கடகம், ஸிம்ஹம், கன்னி, துலாம், வ்ருச்சிகம், தனுஸ், மகரம், கும்பம், மீனம் ராசிகளோடு வசிப்பதாக உபாஸிப்பது அவ்யக்த வாஸுதேவ ஸ்வரூபம்.  இப்படி உபாஸிப்பவர்களுக்கு மறுபிறவி என்பது இல்லை.  நான்கு வர்ணமுள்ள நான்கு முகங்களோடு இருப்பது இரண்டாவது ஸ்வரூபம்.  ஆயிரம் தலைகளோடு உலகைத் தாங்கியிருக்கும் ஆதிசேஷன் மூன்றாம் ஸ்வரூபம்.  நான்கு முகங்கள், இரு கைகளோடு கூடி உலகைப் படைப்பது பகவானின் நாலாவது ஸ்வரூபம்." என்று ப்ரஹ்மா ஸனத்குமாரருக்கு உபதேஸித்தார்.

ஒரு ஸமயம் உலகெமெல்லாம் தன்னிலையிலிருந்து தவறி நடுங்கியபோது, தேவர்களும், ப்ரஹ்மனும் சேர்ந்து விஷ்ணுவை சரணடைந்தனர்.  அவர் தேவர்களையும் கூட்டிச் சென்று கைலாஸநாதனைப் பணிந்தார்.  ஆனால் தேவதேவன், தேவர்கள் கண்களுக்குப் புலப்படவில்லை.  மஹாவிஷ்ணு தேவர்களிடம் "நீங்கள் பார்வதி தேவிக்குக் கர்ப்பமுண்டாமல் செய்ததால் வந்த பாபம் இது.  தப்தக்ருச்ரம் எனும் ப்ராயச்சித்தத்தைச் செய்து, பின்னர் நூறு குடம் பால், அறுபத்து நான்கு குடம் தயிர், முப்பத்திரண்டு குடம் ஹவிஸ், பதினாறு குடம் பஞ்சகவ்யம், எட்டு குடம் தேன், நூற்றெட்டு குடம் சந்தன ஜலத்தால் பரமேச்வரனுக்கு அபிஷேகம் செய்யுங்கள்.  உங்கள் பாபமகன்று தேவதர்சனம் கிடைக்கும் என்றார்.  தப்த க்ருச்ரம் என்பது முதல் மூன்று நாள் பனிரெண்டு பலம் உஷ்ண ஜலத்தையும், அடுத்த மூன்று நாட்கள் எட்டு பலம் பாலையும், அடுத்த மூன்று நாட்கள் ஆறு பலம் நெய்யையும், கடைசி மூன்று நாட்கள் வாயுவையும் புஜித்திருப்பது.  இதைச் செய்தபின் தேவர்களுக்கு ஈச்வரன் ஹரிஹரனாகக் காட்சி அளித்தார்.  பின் மீண்டும் மஹாவிஷ்ணு மட்டுமே இருந்தார்.  தேவர்கள் வேண்டியபடி மஹாவிஷ்ணு அவர்களோடு கூடி பூலோகத்தில் ஸரஸ்வதி நதியில் மூழ்கி தவமிருந்து கொண்டிருந்த ஈச்வரனைத் துதிக்க, அவரும் தவத்தை நிறுத்தி, நதியிலிருந்து வெளியேறி அவர்களுக்கு அருளினார்.  பூமி நடுங்குவதும் நின்றது.

இரண்டாவது முறை இப்படி உலகம் நடுங்கினபோது அதன் காரணத்தை அறிந்த மஹேச்வரன் குருக்ஷேத்ரத்தில் கடுந்தவம் புரிந்து கொண்டிருந்த சுக்ராச்சார்யாரிடம் தோன்றி வேண்டிய வரத்தைக் கேட்குமாறு கூறினார்.  தவம் கலைந்த சுக்ரரும் தேவனைப் பணிந்து இறந்தவரைப் பிழைப்பிக்கும் ஸஞ்ஜீவினீ வித்யையை வேண்டிப் பெற்றுக் கொண்டார்.  பிறகு ஸப்தஸாரஸ்வத க்ஷேத்ரத்தில் மங்கண முனிவர் தன் கைவிரலில் அறுபட்டபோது அங்கு இரத்தம் வராமல் வாஸனையோடு ஒரு ஜலம் பெருக்கெடுப்பதைக் கண்டு தன் தவத்தை மெச்சி ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருந்தார்.  உலகம் மூன்றாவது முறையாக நடுங்கத் தொடங்கியது.  இதை அறிந்த கைலாஸபதி முனிவர் வேஷத்தில் அவரிடம் சென்று "ஏன் இப்படி ஆடிக் கொண்டிருக்கிறீர்" என்றார்.  அவர் நடந்ததைக் கூறி "என்னை விட தவத்தில் உயர்ந்தவர் உண்டோ" என்று கேட்டார்.  உடனே ஈச்வரன் சிரித்து தன் கையை ஒரு விரலால் அடித்தார்.  அதிலிருந்து வாசனையோடு விபூதி வந்தது.  இதைக் கண்டதும் வந்திருப்பவர் யாரென அறிந்து கொண்ட மங்கணர் அவரைத் துதித்தார். ருத்ரரும் அவருக்குக் காட்சியளித்து அவர் ப்ரார்த்தனைக்கிணங்கி ஸப்தஸாரஸ்வத க்ஷேத்ரத்தில் தன் ஸான்னித்யம் இருக்குமென அருளினார்.  மங்கணர் மகிழ்ந்து ப்ரஹ்மலோகம் சென்றார்.

No comments:

Post a Comment