Friday, November 29, 2013

வாமன புராணம் - 23

வாமன புராணம் - 23

ப்ரஹ்லாதன் இராவதி நதி, குருக்ஷேத்ரம், தேவிகா தீர்த்தம், கோகர்ண தீர்த்தம், ப்ராசி தீர்த்தம் என்று பல தீர்த்தக்ஷேத்ரங்களை இறைவனைத் தர்சித்துக் கொண்டு வரும் போது மது தீர்த்தத்தினருகே சூலபாணியாக விஷ்ணுவையும், சக்ரபாணியாக பரமேச்வரனையும் கண்டான்".  இவ்வாறு புலஸ்த்யர் கூறியதும் நாரதர் வியந்து அதற்கான காரணத்தைக் கேட்டார். புலஸ்த்யர் "ஜலோத்பலன் எனும் அரக்கன் தேவர்களைப் பீடித்துத் துன்புறுத்திக் கொண்டிருந்தான்.  தேவர்களைக் காக்க சக்ரபாணியாக பரமேச்வரனும், சூலபாணியாக மஹாவிஷ்ணுவும் தோன்றி ஜலத்தில் மறைந்திருந்த அவனை அடித்துக் கொன்றனர்.

வீதமன்யு, தர்மசீலை என்ற உத்தம ப்ராஹ்மண தம்பதியருக்கு உபமன்யு என்று ஒரு குழந்தை பிறந்தது.  அவர்கள் பொருளாசையை விட்டு தேவபூஜையில் ஈடுபட்டிருந்ததால் வறுமையின் காரணமாகக் குழந்தைக்கு மாவையே பாலாகக் கரைத்துக் கொடுத்து வளர்த்து வந்தனர்.  இடையில் ஒரு நாள் அதிதிகளாக வேறொருவர் இல்லத்திற்குச் சென்றிருந்தபோது அங்கு உண்மையான பாலைக் குடித்து ருசி கண்ட குழந்தை, அதன் பின் மாவில் கரைத்த பாலைக் குடிக்க மறுத்து அழுதது.  குழந்தையைப் பலவாறு தேற்றியும் கேளாததால் தர்மசீலை "பசுபதியின் அருளின்றி நமக்குப் பால் கிடைக்குமா? அவரைப் பூஜித்தால் பால் என்ன, அம்ருதமே கிடைக்கும்" என்று கூற, அதைக் கேட்ட குழந்தை "பசுபதி யார், அவர் எங்கிருக்கிறார்? அவரை எப்படி பூஜிப்பது?" என்றெல்லாம் கேட்க ஆரம்பித்தது.  தர்மசீலை உடனே குழந்தைக்குக் கீழே வரும் கதையைக் கூறினாள்.

மஹாவிஷ்ணு சுதர்சனம் பெற்றது: ஸ்ரீதாமன் என்ற ஒரு அரக்கன் மஹாவிஷ்ணுவின் ஸ்ரீவத்ஸத்தைக் கொள்ளையடிக்கக் கருதினான்.  இதையறிந்த மஹாவிஷ்ணு இமயமலை சென்று ஆயிரமாண்டுகள் ஒற்றைக்காலில் நின்று தவம் புரிந்தார்.  அப்போது ருத்ரன் அவரெதிரில் தோன்றி அவருக்கு பனிரெண்டு மாதங்களையும், ஆறு ருதுக்களையும் ஆரக்கால்களாகக் கொண்ட சுதர்சன சக்ரத்தை, பக்தர்களைக் காத்து, துஷ்டர்களை அழிப்பதற்காக அளித்தார்.  மஹாவிஷ்ணு அந்த ஆயுதத்தைப் பரீக்ஷை செய்து பார்க்க நினைக்க, மஹேச்வரன் தன் மீதே அதை பரீக்ஷித்து பார்க்குமாறு கூறினார்.  மஹாவிஷ்ணு அதை பரமேச்வரன் மேல் ப்ரயோகிக்க, அவருடல் மூன்றாகப் பிளந்தது.  அதைக் கண்டதும் மஹாவிஷ்ணு தன் தவறைப் பொறுத்து, மன்னிக்குமாறு ஈசனை வேண்டினார்.  பரமேச்வரன் சிரித்து தனக்கு என்றும் அழிவில்லை என்றும், ஸுவர்ணாக்ஷன், விச்வரூபாக்ஷன், யஞ்க்யேசன் என்ற தனது மூன்று ரூபங்கள் தோன்றவே மஹாவிஷ்ணுவுக்கு அப்படி ஒரு எண்ணம் உதித்ததாகக் கூறி, ஸ்ரீதாமனை சுதர்சனத்தால் கொல்லுமாறு கூறினார்.  மஹாவிஷ்ணுவும் அப்படியே செய்து பாற்கடலுக்குத் திரும்பினார்.  இந்தக் கதையைக் கேட்ட உபமன்யு தானும் அவ்வாறே பரமேச்வரனைப் பூஜித்து மோக்ஷத்தை அடைந்தான்.

கஜேந்த்ர மோக்ஷமும், துஸ்வப்ன நாசமும்: அதன்பின் ப்ரஹ்லாதர் கஜேந்த்ரன் மோக்ஷமடைந்த த்ரிகூட பர்வதத்தை அடைந்தார்.  ஸுமேரு மலையின் மகனான த்ரிகூட பர்வதத்தின் ஒரு ஸரஸ்ஸில் ஹூஹூ என்ற கந்தர்வன் முதலையாக வசித்து வந்தான்.  அங்கு தீர்த்தமாட வந்த கஜேந்த்ரனை அவன் காலைப் பிடித்து நீருக்குள் இழுத்தான்.  ஆயிரமாண்டுகள் முயற்சித்துத் தளர்ந்து, களைத்த யானை நாராயணனைத் துதித்தது.  மஹாவிஷ்ணுவும் அங்கு உடனே தோன்றி அந்த முதலையைத் தன் சக்ரத்தால் அறுத்து, கஜேந்த்ரனைக் காப்பாற்றினார். யானையும் அவரைத் துதித்து கந்தர்வனாகிச் சென்றது.  ஹூஹூவும் தேவலர் சாபம் நீங்கி கந்தர்வ லோகம் சென்றான். இந்தக் கதையையும், அரசமரத்தையும், ஸூர்யன், கங்கை, நைமிசாரண்யம் இவைகளையும் ஸ்மரிப்பவர்களுக்கு துஸ்வப்னம் உண்டாகாது.

விஷ்ணு ரக்ஷா மந்த்ரம்: க்ஷத்ரியன் ஒருவன் ஸ்வதர்மத்தை விடுத்து சாதுக்களைத் துன்புறுத்தி வந்தான்.  தன் பாபங்களால் நரகங்களை அனுபவித்த அவன் மறு பிறவியில் ஒரு ராக்ஷஸனாகப் பிறந்தான்.  ஒரு ஸமயம் தவம் செய்து கொண்டிருந்த ஒரு முனிவரைப் புஜிக்க நினைத்தான்.  அவர் மஹாவிஷ்ணுவைத் துதித்துக் கொண்டிருந்ததால் அவனால் அவரருகில் நெருங்க முடியவில்லை.  இதில் ஆச்சர்யமடைந்த அவன் நான்கு மாதங்கள் அவர் சமாதியிலிருந்து வரும் வரைக் காத்திருந்து, அவரை நமஸ்கரித்துத் தனக்கும் உய்வதற்கு அந்த மந்த்ரத்தை உபதேசிக்குமாறு கோரினான்.  அவர் தான் ராக்ஷஸருக்கு உபதேசிப்பதில்லை என்று கூறி, அவனை வேறு தகுந்தவரை வேண்டுமாறு கூறிச் சென்றார்.  அதன் பின் தினம் ஒரே ஒரு ம்ருகத்தை மட்டுமே உண்டு வாழ்ந்து வந்த அவன், ஒரு நாள் மிகுந்த பசியில் இருக்கும் போது ஒரு ப்ரஹ்மசாரியைக் கண்டு, புஜிப்பதற்காக அவனைப் பிடித்துக் கொண்டான்.  அந்த ப்ரஹ்மசாரி தன் குருவுக்குக் கனிகளைக் கொடுத்து, பணிவிடைகளைச் செய்து விட்டு வருவதாகக் கூறி ராக்ஷஸனை வேண்டினான்.  அப்படி விடுவதானால் தன் பாபம் தீர வழியொன்றை உபதேசிக்குமாறு ராக்ஷஸன் அவனை வேண்டினான்.  ப்ரஹ்மசாரியும் தான் உண்மையில் குருவுக்குப் பணிவிடை செய்வதானால் இந்த அரக்கனுக்கு அருள் கிடைக்கட்டும் என்று அக்னியின் சன்னிதியில் வேண்ட, உடனே அங்கு ஸரஸ்வதி தோன்றி அவ்வரக்கனுக்கு விஷ்ணுரக்ஷா மந்த்ரத்தை உபதேசித்தாள்.  அவனும் சாலக்ராம க்ஷேத்ரம் சென்று, விஷ்ணு ரக்ஷா மந்த்ரத்தை ஜபித்து, பாபங்களகன்று ஸ்வர்க்கம் சென்றான்.

No comments:

Post a Comment