Tuesday, November 5, 2013

வாமன புராணம் - 03

வாமன புராணம் - 03

ஸுகேசி பெற்ற தர்மோபதேசம்:  வித்யுத்கேசியின் மகனான இவனுடைய நீண்ட கடுந்தவத்தால் மகிழ்ந்து சிவபெருமான் எங்கும் ஸஞ்சரிக்கும் ஒரு நகரையே இவனுக்கு அளித்தார்.  ஒரு ஸமயத்தில் மாகத வனத்திலிருந்த மஹர்ஷிகளைத் துதித்துத் தனக்கு தர்மோபதேசம் செய்யக் கேட்டுக் கொண்டான் ஸுகேசி.  அவர்களும் தேவர் முதல் மனுஷ்யர் வரையிலான பன்னிருவர்களுக்கும் ப்ரஹ்மா விதித்த தர்மங்களை பின்வருமான விரிவாக எடுத்துக் கூறினர்.

யஜ்ஞம், வேதார்த்த விசாரம், விஷ்ணுவை பூஜிப்பது இவை தேவ தர்மம்.  பலம், பொறாமை, சண்டை, நீதி விசாரம், சிவபக்தி இவை தைத்ய தர்மம்.  யோகம், வேதம், ப்ரஹ்ம ஞானம், விஷ்ணு பக்தி இவை ஸித்த தர்மம்.  உபாஸனம், நடனம், வாத்யம், ஸரஸ்வதி பக்தி ஆகியவை கந்தர்வர்களுக்கு தர்மம்.  வித்யாதரர்களுக்கு கல்வி, பௌருஷம், பவானி பக்தி ஆகியவையே தர்மங்கள்.  ப்ரஹ்மசர்யம், யோகாப்யாஸம், எங்கும் ஸஞ்சரித்தல் ஆகியவை பித்ரு தர்மங்கள்.  ஸத்யம், ஞானம், ஜபம், நியமம், தர்ம விசாரம் இவை ரிஷி தர்மங்கள்.  மனுஷ்யர்களுக்கு வேதம், தானம், யாகம், பொறாமையில்லாமை, தயை, அஹிம்ஸை, பொறுமை, இந்த்ரிய ஜயம், சுத்தம், விஷ்ணு, ஸூர்யன், சிவ-பார்வதி பக்தி ஆகியவையே தர்மங்கள்.  தனாதிபத்யம், ஸுகம், வேதம், சிவபக்தி, அஹங்காரம் இவை குஹ்ய தர்மங்கள்.  பரதார, பரத்ரவ்யங்களில் ஆசை, வேதம், சிவபக்தி ஆகியவை ராக்ஷஸ தர்மங்கள்.  விவேகமில்லாமை, பொய், அனாசாரம், மாம்ஸத்தில் ஆசையோடிருத்தல் இவை பிசாச தர்மங்கள்.

ஜலத்தின் மீது ஐம்பது கோடி யோஜனை விசாலத்துடன் மிதந்து கொண்டிருக்கும் இந்த பூமியில் ஜம்பூ, ப்லக்ஷ, சால்மலீ, குச, க்ரௌஞ்ச, சாக, புஷ்கர என்ற ஏழு த்வீபங்களுள்ளன.  இதில்  ஜம்பூ த்வீபமே கர்மங்களுக்கு உரியது.  இந்த ஜம்பூ த்வீபத்தில் பாரத, கிம்புருஷ, ஹரி, ரம்யக, ஹிரண்மய, குரு, பத்ராச்வ, இலாவ்ருத, கேதுமாதலம் ஆகிய ஒன்பது வர்ஷங்கள் இருக்கின்றன.  மஹேந்த்ர, மலய, விந்த்ய, ஸஹ்ய முதலான பர்வதங்களும், அவைகளிலிருந்து உண்டான ஸரஸ்வதி, யமுனா முதலான நதி, நதங்களும் பாரத வர்ஷத்தில் உள்ளன. ப்லக்ஷ முதல் சாக வரையிலான த்வீபங்களில் தேவ தர்மமே விதிக்கப்பட்டுள்ளது.  புஷ்கரத்தில் ரௌரவம், மஹாரௌரவம், தாமிஸ்ரம், அந்ததாமிஸ்ரம், காலஸூத்ரம், அப்ரதிஷ்டம், கடீயந்த்ரம், அஸிபத்ரவனம், தப்தகும்பம், கூடசால்மலி, கரபத்ரம், ச்வானபோஜனம், ஸந்தம்சம், லோஹபிண்டம், கரம்பஸிகதம், க்ஷாரநதி, க்ருமி போஜனம், வைதரணீ, க்ஷுராக்ரதாரம், சக்ரகம், ஸம்சோஷணம் என்ற இருபத்தோரு கொடிய நரகங்கள் இருக்கின்றன.

தண்டனைகள்: தேவர், த்விஜர், வேத புராணங்கள், குரு இவர்களை நிந்திப்பவர், யாக, தானங்களைக்  கெடுப்பவர், நண்பர்கள், தம்பதிகளைக் கலைப்பவர், ஒருவருக்குத் தானம் செய்யப்பட்ட கன்யகையை வேறொருவருக்கு மீண்டும் தானம் செய்பவர் முதலியவர்கள் கூர்மையான கத்தியால் இரண்டாகப் பிளக்கப்படுவர்.  பிறருக்கு வருத்தமளிப்பவன், சந்தனம், விசிறி இவைகளைத் திருடுபவன் கரம்பஸிகதம் செல்வர்.  தேவ, பித்ரு கார்யங்களில் புஜிப்பதற்காக வரிக்கப்பட்டவர் பணத்தாசையால் வேறிடம் சென்றால் கழுகுகளால் குத்தி, இரண்டாக கிழிக்கப்படுவர்.  ஸாதுக்களை கடுஞ்சொற்களால் துன்புறுத்துபவனது நாக்கை கழுகு கிழிக்கும்.  தேவர், அதிதி, பெற்றோர், சிறுவர்கள், கர்ப்பிணிகள் உண்பதற்கு முன்பு உண்பவன் மல, மூத்ரங்களைப் புஜித்து புழுவாய்ப் பிறப்பான்.  பந்தி வஞ்சனை செய்வோரும் மலத்தை புஜிப்பர்.  எச்சிலோடு பசு, ப்ராஹ்மணர், அக்னி இவைகளைத் தொடுபவனது கைகள் தப்த கும்பத்தில் காய்ச்சப்படும்.  இவர்களுக்கு எதிராக மல, ஜலம் கழிப்பவர்களது ஆஸன த்வாரங்களை காக்கை கொத்தும்.

எச்சிலோடு ஸூர்ய, சந்த்ர, நக்ஷத்ரங்களைப் பார்ப்பவரது கண்கள் பிடுங்கப்படும்.  பெரியவர்களைக் கால்களால் மிதிப்பவர்களது கால்கள் கட்டப்பட்டு நரகத்தில் தள்ளப்படும்.  பாயஸம், பக்ஷணங்களை நிவேதனத்திற்கல்லாது தனக்காக செய்து உண்பவர்கள் வாயில் உருக்கிய இரும்பு விடப்படும்.  தண்ணீர்ப்பந்தல், மடம், கோவில், குளம், பூங்காக்களை அழிப்பவர்கள் தோல் கத்தரிக்கோலால் வெட்டப்படும்.  பஞ்சம் வந்த போது பிறர்க்கு எதுவும் அளிக்காமல் தன்னை மட்டுமே காத்துக் கொள்பவன் நாயாகப் பிறப்பான்.  நம்பி வந்தவர்களைக் கைவிட்டவன் எந்திரத்தில் தள்ளப்படுவான்.  புரோஹிதர்களைத் துன்புறுத்துபவனைப் பாறையில் அடிப்பர்.  கொடுத்து வைத்திருந்த பொருளை இல்லை என்பவன் தேள்கள் நிறைந்த குழியில் விழுவான்.  ச்ராத்த திதியில் இரு முறை புஜிக்கும் கர்த்தாவும், வரிக்கப்பட்ட ப்ராஹ்மணனும் ஒருவரை ஒருவர் அடித்துத் தின்பர்.  வேதம், அக்னி, குரு இவர்களைக் கைவிட்டவன் மலையிலிருந்து தள்ளப்படுவான்.  சண்டாளனிடம் தானம் வாங்குபவன் கல்லினுள் தேரையாக ஜனிப்பான்.

ப்ரஹ்மஹத்தி, கள்ளுண்ணுதல், பொன் திருட்டு, குரு மனைவியோடு சேர்தல், இந்த நான்கு பாபங்களையும் செய்தவர்களோடு சேருதல் இந்த ஐந்தும் பஞ்ச மா பாபங்கள் எனப்படும்.  இவர்களும், பசு, நிலங்களை அபஹரித்தவர்களும், பசு, வேதம் இவைகளை விற்பவர்களும், நன்றி மறந்தவர்களும் பத்தாயிரமாண்டுகள் தாமிஸ்ரம், அந்ததாமிஸ்ரம், அஸிபத்ரவனம், கடீயந்த்ரம், தப்தகும்பம் இவைகள் ஒவ்வொன்றிலும் இருப்பர்.

தேவரில் விஷ்ணுவும், நதிகளில் கங்கையும், க்ஷேத்ரத்தில் குருஜாங்கலமும், லோகங்களில் ப்ரஹ்மலோகமும், சாஸ்த்ரங்களில் வேதமும், ரிஷிகளில் அகஸ்த்யரும், புராணங்களில் மத்ஸ்யமும், புஷ்பங்களில் ஜாதியும், ஸ்ம்ருதிகளில் மனுவும், நாற்கால் ப்ராணிகளில் பசுவும், நகரங்களில் காஞ்சியும், வ்யாதிகளில் அஜீர்ணமும், சுவைகளில் உப்பும், பதிவ்ரதைகளில் பார்வதியும், நரகத்தில் வைதரணியும், பாபத்தில் நன்றி மறப்பதும் சிறந்தவைகளாகும்.

ஆச்ரம தர்மம்: ப்ரஹ்மசாரி குருவிடம் காட்டாமல் எதையும் உண்ணக்கூடாது.  குரு கூப்பிடும்போதே கற்கச் செல்ல வேண்டும்.  தக்ஷிணை கொடுத்த பின் பக்குவத்திற்கேற்ப  கார்ஹஸ்த்யம், வானப்ரஸ்தம், ஸன்யாஸம் இவைகளைக் கொள்ளலாம்.  ஆசாரமில்லாமல் செய்யும் கார்யங்களெல்லாம் வீணே.  ஆசாரமெனும் மரத்திற்கு தர்மமே வேர், பொருளே கிளைகள், ஆசைகளே புஷ்பங்கள், மோக்ஷமே பழம்.  காலையில் எழுந்ததும் ஸுப்ரபாதம் சொல்லிவிட்டு வெகுதூரம் சென்று மல, ஜல விஸர்ஜனம் செய்து, மண்ணால் ஸுத்தம் செய்து கொண்டு ஸ்னானம் செய்ய வேண்டும்.  அனாவச்யமாக வெளியில் செல்லக்கூடாது.  வீட்டு விலக்காய் இருக்கும் பெண்களோடு பேசக்கூடாது.  எந்த ஸ்த்ரீயோடும் ஒரே ஆஸனத்தில் அமரக்கூடாது.  உடையில்லாமல் தூங்கவோ, குளிக்கவோ கூடாது.  ஞாயிறில் எண்ணெய்க் குளியலும், வெள்ளியில் க்ஷவரமும் கூடாது.  தெற்கு, மேற்கு திசைகளைப் பார்த்து உண்ணக்கூடாது.  பிறரது புஷ்பம், உடை, படுக்கை, பாதுகை, உணவு, தீர்த்தம் இவைகளை ஏற்கலாகாது.  க்ரஹண காலமில்லாமல் வேறெப்போதும் இரவில் குளிக்கக் கூடாது.  ஸ்னானம் செய்த பின் மயிரை உதரக்கூடாது.  துணியால் உடலைத் தேய்த்துக் குளிக்கக்கூடாது.  தெருவிலுள்ள நீரும், சேறும் ஸூர்யனால் சுத்தப்படுத்தப்படுகிறது.

சுத்தமில்லாதவர் அன்னம், தேவ, பித்ரு கார்யங்களில்லாத அன்னம், டம்பமாக அனுஷ்டானம் செய்பவர் (மார்ஜாரர்) அன்னம், நடுநிலையாகப் பேசாதவர் (குக்குரர்) அன்னம், பரதர்மத்தைக் கொண்டவர் (பதிதர்) அன்னம், வேத சாஸ்த்ரமில்லாதவர் (நக்னர்) அன்னம், நம்பிக்கை த்ரோகம் செய்பவர் (சண்டாளர்) அன்னம் ஆகியவை பாபமானவை.  இவைகளைத் தெரியாமல் உண்பவர்கள் சாந்த்ராயணத்தால் சுத்தமாவர்.  பிறர் அறுவறுக்கும், அச்சப்படும் கார்யங்களைச் செய்யக்கூடாது. 

ப்ராஹ்மண, க்ஷத்ரியர்களுக்கே வானப்ரஸ்தம் உண்டு.  வைச்யர்களுக்கு கார்ஹஸ்த்யம் வரையே ஆச்ரமம்.  சூத்ரருக்கு க்ருஹஸ்தாச்ரமம் மட்டுமே.  ஸ்வதர்மத்தை அனுஷ்டிப்பவர் ப்ரஹ்மலோகம் செல்வர்.  பரதர்மத்தைக் கொள்பவர் ஸூர்யனால் தண்டிக்கப்படுவர்."

இந்த உபதேசங்களைக் கேட்ட ஸுகேசி அஹிம்ஸை, ஸத்யம், திருடாமை, சுத்தம், இந்த்ரிய ஜயம், தானம், தயை, கர்வமில்லாமை முதலிய குணங்களை ராக்ஷஸருக்கு உபதேஸித்து, அனுஷ்டிக்கவும் செய்வித்தான்.  ஸூர்ய, சந்த்ரர்களின் ஒளி மங்குமளவு இவர்களின் நகரம் ஒளிர ஆரம்பித்தது.  பரதர்மத்தைக் கொண்டான் என்ற காரணத்தைக் கொண்டு ஸூர்யன் ஸுகேசியை அவன் நகரத்தோடு கீழே தள்ளிவிட்டான்.  தன் பக்தனுக்கு நேர்ந்த கதியைக் கண்ட ருத்ரன் ஸூர்யனை கோபத்தோடு பார்த்தார்.  அவனும் கூட இருந்த மற்ற ஸூர்யர்கள், மஹர்ஷிகளோடு தேரோடு கீழே விழுந்தான்.  அனைவரும் ப்ரஹ்மாவிடம் ஓடிச் சென்றனர்.  அவர் காசிநாதனைச் சரணடைந்தார்.  அவர் ஸூர்யனை மன்னித்து லோலன் என்ற பெயரோடு மீண்டும் தேரோடு வானில் எறிந்தார்.  ப்ரஹ்மாவும் ஸுகேசியை பழையபடி செய்தார்.

No comments:

Post a Comment