Friday, November 8, 2013

வாமன புராணம் - 05

வாமன புராணம் - 05

மஹிஷாஸுர வதம்: ரம்பன், கரம்பன் என்ற இரு ராக்ஷஸ ஸஹோதரர்கள் எவராலும் வெல்லத்தகாத புத்ரனை வேண்டி பஞ்சநத க்ஷேத்ரத்தில் தவமிருந்தனர்.  ரம்பன் ஓர் ஆலமரத்திற்கருகே பஞ்சாக்னி மத்தியிலும், கரம்பன் ஜலத்தில் மூழ்கியும் தவம் புரிந்தனர்.  இதையறிந்த தேவேந்த்ரன் முதலையாக வந்து கரம்பனைக் கொன்று விட்டான். இதனால் பெருந்துயர் கொண்ட ரம்பன் தன் தலையையே அறுத்து நெருப்பிலிட்டு தவம் புரியத் தொடங்கினான்.  உடனே அக்னிதேவன் அவனெதிரில் தோன்றி அவனுக்கு எவராலும் வெல்ல இயலாத, நினைத்த உருவெடுக்கும் ஒரு புத்ரன் பிறப்பான் என்று வரமளித்து, வாழ்த்தி மறைந்தான்.

வெகுகாலம் தவம்புரிந்து வரம் பெற்ற சந்தோஷத்தில் ரம்பன் அங்கிருந்து கிளம்பி வந்து கொண்டிருந்த போது வழியில் யக்ஷர்கள் வஸிக்குமிடமான மாலவடம் எனும் ஆலமரத்தினருகே ஓய்வெடுத்துக் கொண்டிருந்த யானை, குதிரை, எருமை முதலான விலங்குகளைக் கண்டான்.  அங்கிருந்த ஒரு பெண்ணெருமையைக் கண்டவுடன் இவனுக்கு காமம் தோன்றியது.  அந்த எருமையும் இதற்கு இசைந்து கர்ப்பமாயிற்று.  இதனால் பாதாள லோகத்தில் எவரும் இவனுக்கு இடமளிக்காது விரட்டி விட்டனர்.  மீண்டும் ஆலமரத்திற்கே வந்தான்.  அங்கு அவனுக்கு மஹிஷன் பிறந்தான்.  பெண்ணெருமையிடம் ஆசை கொண்டிருந்த மற்றொரு எருமைக்கிடா ரம்பனைக் கொன்று விட்டது.  பெண்ணெருமை பயந்து ஓடி யக்ஷர்களைத் தஞ்சமடைந்தது.  கிடா எருமை அருகிலிருந்த நதியில் ஓடித் தன் உயிரை விட்டது.  அதுவே நமரன் என்ற அஸுரனாகத் தோன்றிற்று.  ரம்பன் உடலை பெண்ணெருமைத் தீயிலிட அதிலிருந்து ரக்தபீஜன் எனுமரக்கனும் தோன்றினான்.  நமரன், மஹிஷன், ரக்தபீஜன் மூவரும் உலகை பீடிக்கலாயினர்.

இவர்கள் கொடுமைகளைத் தாங்காத தேவர்கள் மஹாவிஷ்ணுவையும், மஹேச்வரனையும் சரணடைந்தனர்.  இதைக் கேட்டு கோபம் கொண்ட ஹரிஹராதி தேவர்களின் முகங்களிலிருந்தும் தேஜஸ் வெளிக்கிளம்பிற்று.  அது காத்யாயனர் எனும் மஹர்ஷியின் தேஜஸ்ஸோடு கலந்து காத்யாயனீ எனும் தேவியாக உருவெடுத்து நின்றது.  எல்லா தேவர்களும் தேவியைத் துதித்து ஸகல ஆபரணங்களையும், ஆயுதங்களையும் அளித்தனர்.  தேவியும் ஸந்தோஷமடைந்து காலம் வரும்போது ராக்ஷஸர்களைக் கொல்வதாகக் கூறி ஸிம்ஹத்தின் மீதேறி விந்த்ய மலைக்குச் சென்றாள்.

விந்த்ய மலையும், அகஸ்த்யரும்: ஒரு ஸமயம் விந்த்ய பர்வதம் ஸூர்யனும் கடக்க முடியாத அளவிற்கு வளர்ந்து நின்றது. ஸூர்யனின் வேண்டுகோளின்படி அகஸ்த்யர் விந்த்ய பர்வதத்திடம் சென்று, தான் அதைக் கடந்து தெற்கே செல்ல விரும்புவதாகவும், தான் சென்று, வரும் வரை தனக்கு வசதியாக அதன் உயரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வேண்டினார்.  விந்த்ய பர்வதமும் அதற்கு ஒப்புக் கொண்டு தன் உயரத்தைக் குறைத்துக் கொண்டு அவரை அனுப்பி வைத்தது.  தெற்கே சென்ற அகஸ்த்யர் விதர்ப ராஜனின் புத்ரியான லோபாமுத்ரையை மணந்து கொண்டு, அங்கேயே ஆச்ரமம் அமைத்துக் கொண்டு இருந்து விட்டார்.

அந்த விந்த்ய மலையில் தேவியைக் கண்ட சண்ட, முண்டாஸுரர்கள் உடனே அவள் அழகையும், சக்தியையும் மஹிஷனிடம் சென்று கூறினர்.  அவனும் உடனே ஸுந்தரியின் அழகில் மயங்கி, அவளை மணம் புரியக் கருதி படையோடு வந்து மலையடிவாரத்தில் தங்கினான்.  அவன் தூதுவனாக மயனுடைய மகன் துந்துபி தேவியிடம் சென்று, மஹிஷனின் பராக்ரமங்களை எடுத்துக் கூறி அவனை மணக்குமாறு கூறினான்.  தேவி சிரித்துக் கொண்டே தன்னை யுத்தத்தில் ஜயிப்பவரையே தான் மணக்க நிச்சயித்திருப்பதாகக் கூறினாள்.  போர் மூண்டது, தேவி தனது கணங்களோடு தாண்டவமாடி, மஹிஷனையும் அவன் சேனைகளையும் விளையாட்டாகக் கொன்று குவித்தாள்.  தேவர்கள் பூமாரி பொழிந்து தேவியை வணங்கித் துதித்தனர்.  தேவியும் அவர்களை ஆசிர்வதித்து மறைந்தாள்.

மற்றொரு ஸமயம் ஸும்ப,நிஸும்பர்களின் அட்டஹாஸம் பொறுக்காது தேவர்கள் ச்வேத த்வீபத்தில் பாற்கடலில் பள்ளிக் கொண்டிருக்கும் பரமனிடம் சென்று, அவர்கள் வதத்தை வேண்டி நின்றனர்.  அவர் "தாக்ஷாயணியைப் பிரிந்து தக்ஷிணாமூர்த்தியாக தவம் புரிந்து கொண்டிருக்கும் பரமேச்வரன் மீண்டும் தேவியை பர்வதராஜனின் புத்ரியாக மணம் புரிந்து, ஸுப்ரமண்யன் எனும் திருக்குமாரனை தோற்றுவிப்பான்.  அவனே தேவஸேனாபதியாகி இந்த அஸுரர்களைக் கொல்வான்.  அதை வேண்டி நீங்கள் குருக்ஷேத்ரத்தில் சென்று தவம் செய்யுங்கள்" என்று கூறினார்.

No comments:

Post a Comment