Tuesday, November 26, 2013

வாமன புராணம் - 17

வாமன புராணம் - 17

ப்ரஹ்லாதன் அந்தகனுக்கு உபதேசம்: பார்வதி தேவியின் மீது காமம் கொண்டிருந்த அந்தகாஸுரன் மீண்டும் தன் மந்த்ரிகளைக் கூட்டி ஆலோசித்தான்.  அப்போது ப்ரஹ்லாதன் "அன்னையிடம் ஆசை கொள்ளாதே, குழந்தை வேண்டி சிவபெருமானிடம் உன் தந்தை தவம் புரிந்த போது, ஈச்வரன் அவரெதிரில் தோன்றி "அஸுர! இந்தக் குழந்தை விளையாட்டாக உமை என் கண்களை மூடிய போது பிறந்தவன்.  இவனை எடுத்துச் சென்று வளர்த்து வா.  தமோகுணமே மிகுந்திருக்கும் இவனை எவரும் கொல்ல இயலாது.  எப்போது இவன் அன்னையையே விரும்புகிறானோ அப்போது இவனை நானே சூலத்தால் கொன்று நற்கதி அளிப்பேன்." என்று கூறினார்.  எனவே உமா, மஹேச்வரர்கள் உன் தாய், தந்தையர்கள்.  உலகிற்கே தாய், தந்தையர்களான அவர்கள் உனக்கு விசேஷமன்றோ?  இந்த எண்ணத்தை விடு.  பிறன் மனைவியிடம் ஆசை கொண்ட தண்டனுக்கு நடந்ததை நீ அறியாயோ" என்று ப்ரஹ்லாதன் அவனுக்கு கீழ் வரும் கதையைக் கூறுகிறார்.

ஸூர்ய வம்சத்தரசனான தண்டன் சுக்ரரை தனக்கு புரோஹிதராக இருக்கும் படி வேண்டி, அவரருளோடு பல யாகங்களைச் செய்தான்.  சுக்ரர் ஒரு ஸமயம் அஸுர ராஜனான வ்ருஷபர்வாவைப் பார்க்கச் சென்றிருந்த போது, அவன் விரும்பியபடி அங்கு சில காலம் தங்கியிருந்தார்.  அந்த ஸமயம் தண்டன் சுக்ராச்சார்யாரைப் பார்ப்பதற்காக அவராச்ரமத்திற்குச் சென்றான்.  அப்போது அங்கு தனித்திருந்த சுக்ரரது பெண்ணான வ்ரஜையைக் கண்டு அவள் மேல் அடங்காத காமம் கொண்டான்.  அவளது அதிதி பூஜைகளை ஏற்காது அவளிடம் தன்னைச் சேருமாறு வேண்டினான்.  அவள் "என் தந்தையிடம் இந்த்ரனும் எதிர் நிற்க மாட்டானே.  அவர் கோபத்திற்கு நீங்கள் எம்மாத்திரம்?  தவிர குரு தந்தைக்குச் சமமன்றோ?  அவரது புதல்வியான என்னிடம் ஸஹோதரியாக உரிமை பாராட்டாது, இப்படி காமவெறி கொள்வது எப்படி தகும்?  பெண்ணும் தாய், தந்தையர் உத்தரவின்றி ஒருவனை மணப்பது தர்மமா? எனவே என் தந்தை வரும்வரையாவது பொருத்திருங்கள்.  அவர் என்னை உங்களுக்கு அளித்தால் ஏற்றுக் கொள்ளும்" என்றாள்.  தண்டனோ "சில காலம் கழித்தே கோபம் கொண்ட உன் தந்தை என்னை எரிப்பார்.  ஆனால் காமன் பாணமோ என்னை இப்போதே எரித்துக் கொல்கிறது, எனவே காலம் கடத்தாமல் என்னை இதிலிருந்து காப்பாற்று.  பெண் பெற்றோர் அனுமதியின்றி ஒருவனை மணப்பதும் அதர்மமன்று" என்று கூறி விச்வகர்மாவின் புத்ரியான சித்ராங்கதையின் கதையைக் கூறினான்.

"சித்ராங்கதை நைமிஷாரண்யத்தில் ஒரு நதியில் தன் தாதிகளோடு குளித்துக் கொண்டிருக்கையில் அங்கு வந்த ஸுதேவ ராஜனின் புதல்வன் ஸுரதன் அவளழகில் மயங்கி அவளிடம் தன் காமத்தைத் தீர்க்குமாறு வேண்டினான்.  அவள் தாதிகள் அவனைத் தடுத்து "பெண்கள் சுதந்திரமாக எந்த ஆடவனையும் விரும்பலாகாது.  அவள் தந்தையிடம் சென்று அவளை வேண்டும்.  பாக்யமிருந்தால் அவள் உங்களுக்குக் கிடைப்பாள்" என்று கூறினர்.  அவனோ மீண்டும் சித்ராங்கதையிடம் "நீ உன் தந்தையின் உத்தரவிற்குக் காத்திருந்து ஒரு உயிரைக் கொல்லப் போகிறாயா? அல்லது என் ஆசையைத் தீர்த்து என் உயிரைக் காக்கப் போகிறாயா" என்று மயங்கி விழுந்தான்.

No comments:

Post a Comment