Thursday, November 14, 2013

வாமன புராணம் - 10

வாமன புராணம் - 10

பார்வதி வரலாறு: ஒரு ஸமயம் தேவர்கள் ப்ருஹஸ்பதியோடு கூடி குருக்ஷேத்ரத்தில் தீர்த்தங்களில் நீராடி, பூஜை செய்து, பித்ருக்களுக்கு ச்ராத்தம் செய்தனர்.  தேவர்களுக்கு ஹிதத்தைச் செய்ய நினைத்த பித்ருக்களும் தங்கள் ஸஹோதரியான மேனையை ஹிமாலயத்திற்கு விவாஹம் செய்து வைத்தனர்.  இவர்களுக்கு குடிலா, ராகினீ, காலி என்ற புத்ரிகளும், ஸுநாபன் என்ற புதல்வனும் தோன்றினர்.  இப்பெண்கள் மூவரும் தேவதேவனை மணப்பதற்காக ஆறு வயதிற்குள்ளாகவே தவம் புரிய, தேவர்கள் இவர்களை ப்ரஹ்மதேவனிடம் அழைத்துச் சென்றனர்.  ப்ரஹ்மா அவர்களில் குடிலையைப் பார்த்து அவளால் சிவ தேஜஸ்ஸை ஸஹிக்க முடியாது என்று கூற, அவள் கோபித்துக் கொண்டு விஷ்ணுவை நோக்கித் தவம் புரிந்து சக்தி பெற்று, சிவனை வணங்கச்செய்வேன் என்று கூறினாள்.  ப்ரஹ்மா அவளை நதியாகும்படி சபித்து விட, அவள் தன் ப்ரவாஹத்தால் ப்ரஹ்மலோகத்தையே அழிக்க நினைத்தாள்.  ப்ரஹ்மா அவளை நான்கு வேதங்களால் கட்டி விட்டார்.

இரண்டாவது பெண்ணான ராகினியும் அப்படியே ப்ரஹ்ம சாபத்தால் க்ருத்திகா நக்ஷத்ரமாகி விட்டாள்.  மூன்றாமவளான காலி சிவனைக் குறித்து தவம் புரியலானாள்.  மேனைக் குழந்தையின் கடுந்தவத்தைக் கண்டு வருந்தி உமா (உ-பெண்ணே, மா-வேண்டாம்) என்று தடுத்தாள்.  இதனால் அவளுக்கு உமா என்ற பெயரும் உண்டாயிற்று.  தேவர்களும் இவளை நெருங்க முடியவில்லை.  ப்ரஹ்மா இவளிடமே தாரகன் முதலானோர்களை அழிக்கும் படியான சிவனுடைய அம்சம் உண்டாகப்போகிறது என்று கூறினார்.  தேவி தன் தோழிகள் செய்து கொடுத்த சிவ விக்ரஹத்தை நோக்கி மீண்டும் கடுந்தவம் புரிந்து கொண்டிருந்தாள்.  அப்போது அவளைப் பரீக்ஷிக்க ப்ரஹ்மசாரி வேஷத்தில் வந்த ஈசன், ஸோமப்ரபை எனும் அவளது தோழியாள் பார்வதியின் தவத்தின் நோக்கத்தை அறிந்து, ஈசனையா மணக்க நினைக்கிறாய் என்று பலவாறு சிவநிந்தனை செய்தார்.  தேவி இதனைப் பொறுக்காது எழுந்து செல்ல, ஈச்வரன் ஸ்வரூபத்தைக் காட்டி, தேவி பூஜித்த விக்ரஹம் பத்ரேசம் என்றழைக்கப்படும் என்றும், தானே ஸப்தரிஷிகளை அனுப்பி அவளை மணந்து கொள்ளப் போவதாக அனுக்ரஹித்து மறைந்தார்.

அவ்வாறே கச்யபர், அத்ரி, வஸிஷ்டர், விச்வாமித்ரர், கௌதமர், பரத்வாஜர், ஆங்கிரஸர் என்ற ஸப்த ரிஷிகளும், வஸிஷ்டரின் மனைவியான அருந்ததியோடு சென்று பர்வதராஜனிடம் பெண் கேட்க, அவனும் உதயன், ஹேமகூடன், ரம்யகன், மந்த்ரன், உத்தாலகன், வாருணன், வராஹன், கருடாஸனன், சக்திமான், வேகஸானு, த்ருடச்ருங்கன், ச்ருங்கவான், சித்ரகூடன், திருகூடன் முதலான மற்ற பர்வதங்களின் ஆலோசனையையும், மேனையின் கருத்தையும் பெற்று ரிஷிகளிடம் உமா மஹேச்வர கல்யாணத்திற்கு இசைந்தான்.  ஸப்தரிஷிகளும் விவாஹ தினத்தைக் குறித்து விட்டு, ஈச்வரனிடம் சென்று செய்தியைக் கூறினார்கள்.

விவாஹத்திற்காக நந்தியின் ஆணைப்படி விஷ்ணு முதலான அனைத்து தேவர்களும் பரமன் வஸித்து வந்த மந்திர மலைக்கு வந்து சேர்ந்தனர்.  அதிதி, ஸுரபி, ஸுரமை என்ற மூவரும் பரமாத்மாவிற்கு அலங்காரங்களைச் செய்தனர்.  விஷ்ணுவும், ப்ரஹ்மனும் இருபுறத்திலும் செல்ல ஸுந்தரேசன் வ்ருஷபாரூடராய் திருமணத்திற்குப் புறப்பட்டார்.  தேவேந்த்ரன் ஐராவதத்தின் மேலிருந்து குடை பிடிக்க, கங்கையும், யமுனையும் சாமரம் வீச, கந்தர்வர் பாட, கின்னரர்கள் வாத்யம் இசைக்க, அப்ஸரஸ்ஸுகள் ஆட, பதினோரு கோடி ருத்ரரும், பனிரெண்டு கோடி ஆதித்யரும், எட்டு கோடி வஸுக்களும், அறுபத்தேழு கோடி கணங்களும், இருபத்தினான்கு சிவ கணங்களும் புடை சுழ இறைவன் ஆகாச வீதியில் சென்றார்.

அவர்கள் அனைவரையும் வரவேற்று உபசரித்து, ரத்ன வேதியில் தன் புத்ரியை அமர்த்தி, வரனை அர்ச்சித்து, புலகன் பேத்தியும், என் கன்யகையும், பித்ருக்களின் தௌஹித்ரியுமான பார்வதியை கன்யாதானம் செய்கிறேன், ஏற்றுக் கொண்டு அருள் புரிய வேண்டுமென்று ஈசனை வேண்ட, அவர் தனக்குத் தாய், தந்தையர் இல்லை என்று கூறி தேவியை மணந்து கொண்டார்.  ப்ரஹ்மா வைதிக கார்யங்களைச் செய்து வைத்தார்.  அப்போது பார்வதியின் தோழியும், சிவபக்தையுமான மாலினீ என்பவள் ஈச்வரனது பாதார விந்தங்களில் பணிந்து தன் தோழிக்கு ஸகல ஸம்பத்தையும் அளிக்க வேண்டுமென ப்ரார்த்திக்க, பகவான் தேவியை சங்கு, சக்ர, கதாபாணியாக மஹாவிஷ்ணுவாகவே செய்து, போதுமா என்று கேட்க அனைவரும் அதைக் கண்டு ஆனந்தித்தனர்.

அப்போது பார்வதியின் அழகைக் கண்டு ப்ரஹ்மன் மோஹம் கொள்ள அவன் இந்த்ரியம் வெளிப்பட்டு மணலில் விழுந்தது, அவன் அதை யாருக்கும் தெரியாமல் மணலில் மறைக்க முற்பட, தேவதேவன் அதை ஞானத்தால் உணர்ந்து, அதை மறைக்காதே, அதிலிருந்து எண்பத்தெட்டாயிரம் எண்ணிக்கையுள்ள வாலகில்ய ரிஷிகள் தோன்றப்போகின்றனர் என்று கூறினார்.  அப்படியே அவர்களும் தோன்றி கௌரீகல்யாணத்தைக் கண்டு ஸந்தோஷித்தனர்.  ஸகல ஜீவராசிகளும் மகிழ, தேவதேவன் தேவியோடு வ்ருஷபத்தில் ஏறி கைலாஸம் சென்றார்.

No comments:

Post a Comment