Friday, November 29, 2013

வாமன புராணம் - 25

வாமன புராணம் - 25

பகவத்பக்தியும், மோக்ஷமும்: பாதாளத்தில் மீண்டும் மோகங்களில் ஆழ்ந்து பகவானை மஹாபலி மறந்த போது விஷ்ணுவின் சுதர்சனம் அவன் முன் தோன்றி அவனுக்கு மோக்ஷ மார்க்கத்தை நினைவுபடுத்தியது.  உடனே தெளிந்த அவனும் ப்ரஹ்லாதரை நினைக்க, அவரும் தீர்த்தயாத்ரையை முடித்துக் கொண்டு அவன் முன் தோன்றினார்.  கரையேற வழி கேட்டுப் பணிந்த பலிக்கு, ப்ரஹ்லாதர் ஹிதோபதேசம் செய்யலானார். "பகவத்பக்தியை விட மோக்ஷ ஸாதனம் வேறில்லை.  பலமுறை பகவந்நாமங்களைக் கூறுபவனே நாவு படைத்தவன்.  அவனை ஆராதிக்கும் கரங்களே கரங்கள்.  விஷ்ணு சரிதங்களை விரும்பிக் கேட்கும் செவிகளே செவிகள்.  தினம் காலையில் எழுந்தவுடன் எவன் உள்ளத்தில் விஷ்ணுவின் பாதங்களும், நாவில் அவர் திருநாமங்களும் உள்ளதோ, அவனருகில் எமனும் வர அஞ்சுவான். 

பக்தியில்லாதோர் இருந்தும் இறந்தவரே. அவர்கள் செய்யும் கர்மங்களனைத்தும் வீணே. கடலின் ரத்னங்களைக் கூட கணக்கிட்டு விடலாம்.  ஆனால் விஷ்ணுவின் கல்யாண குணங்கள் கணக்கிலடங்கா.  மனஸ், வாக்கு, காயம் என்ற த்ரிகரணங்களையும் புருஷோத்தமனிடம் அர்ப்பிப்பவனுக்கு ஸம்ஸாரத்தில் பயமில்லை.  பகவத் சரிதமெனும் அம்ருதத்தை அருந்துபவனுக்குத் தாய்ப்பாலும் தேவையில்லை.  அவனுக்கு தோல்வியில்லை, ரோகமில்லை.  மூன்று ஸந்த்யா காலங்களிலும் பகவத் த்யானம் செய்வோர் உபவாஸ பலனை அடைவர்.  அவனை நினைத்து எந்த கார்யத்தையும் துவங்கி, அவனுக்கே அதை ஸமர்ப்பிப்போர் ஸம்ஸார ஸாகரத்தைத் தாண்டுவர்.  த்யானம், ஸ்மரணம், நாம ஸங்கீர்த்தனம், சரித ச்ரவணம் இவைகளை விட உயர்ந்த தர்மமில்லை.  ஸாளக்ராமமும், ப்ராஹ்மணர்களும் விஷ்ணுவின் ப்ரியமான ஸ்தலங்கள்.  ஆதலால் ப்ராஹ்மணன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் அவனை அவமதிக்காதே.

தானங்கள்: பகவானை நினைத்து ஸத் பாத்ரத்திற்கு கோ, பூமி, வஸ்த்ரம், அன்னம், ஸ்வர்ணம் இவைகளைக் கொடுப்பது சிறந்தது.  மாசி மாதத்தில் தில தானமும், விறகும், பங்குனியில் தான்யம், க்ருஷ்ணாஜினம், வஸ்த்ரம், சித்திரையில் விசித்ர வஸ்த்ரம், படுக்கை, ஆஸனம், வைகாசியில் வாஸனை த்ரவ்யங்கள், தீர்த்தபாத்ரம், விசிறி, ஆனியில் உப்பு, நெல்லி, குடை, செருப்பு, ஆடியில் வெல்லம், ரிஷபம், ஆவணியில் பாயஸம், தேன், தயிர், புரட்டாசியில் தாமிரம்,இரும்பு, ஐப்பசியில் வீடு, குதிரை, கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் அவரவர்க்கு ப்ரியமானவைகளையும் தானம் செய்தால் பரமாத்மா சந்தோஷமடைகிறார்.  இறைவனுக்கு ஆலயம் கட்டுவதும், ஆலயத்தை சுத்தம் செய்தலும், கொடிமரம், வாஹனங்கள் முதலியவைகளை அவனுக்கு ஸமர்ப்பிப்பதும் உத்தம தர்மங்கள்" என்று ப்ரஹ்லாதர் பலிக்கு உபதேசித்தார்.

அவனும், விந்த்யாவளியோடு சேர்ந்து சந்தோஷத்துடன் அவ்வாறே பல தானங்களைச் செய்தான்.  பாதாளத்தில் விஷ்ணுவுக்கு ஒரு ஆலயத்தை எழுப்பி தினமும் அவரை அர்ச்சித்து வந்தான். இப்படி பகவத் பக்தியில் ஈடுபடுவோரும், இந்த வாமன சரிதத்தை பக்தியோடு படிப்போரும், கேட்போரும், பிறருக்குக் கூறுவோரும், தன் சக்திக்குத் தகுந்தபடி பௌராணிகரைப் பூஜிப்போரும் வைகுண்டத்தில் வசிப்பர்" என்று புலஸ்த்யர் நாரதருக்கு உரைத்தார்.  நாரதரும் அந்தரங்க பக்தியோடு பகவானைப் பாடிக் கொண்டு சென்றார்.

No comments:

Post a Comment