Monday, November 18, 2013

வாமன புராணம் - 12

வாமன புராணம் - 12

சண்ட முண்ட வதம்:  கச்யபருக்கு தனுவிடம் சும்பன், நிசும்பன், நமுசி என்ற மூன்று தானவர்கள் தோன்றினர்.  மூவரும் ஈச்வரனை வேண்டி பல வரங்களைப் பெற்று, ராக்ஷஸர்களாய் உலகைப் பீடித்தனர்.  நமுசியைக் கொல்வதற்காக இந்த்ரன் வஜ்ரத்தை எடுத்தபோது அவன் ஓடிச் சென்று ஸூர்யனுடைய ரதத்தில் பதுங்கிக் கொள்ள, இந்த்ரன் அவனை ஈரமான பொருள்களாலேயே கொல்வேன் என்று கூறிச் சென்றான்.  பின்னர் நதியில் குளித்துக் கொண்டிருக்கையில் ஒரு நுரை வந்தது, அதைக் கையில் எடுத்துக் கொண்ட நமுசி சிரித்துக் கொண்டே "இது ஈரமான பொருள்தானே, இது என்னைக் கொல்லட்டும்" என்று தன் மேல் போட்டுக்கொண்டான்.  இது தான் ஸமயமென்று தேவேந்த்ரன் தன் வஜ்ரத்தை அந்த நுரையில் செலுத்த, நமுசி அதனாலடிபட்டு இறந்தான்.  தேவேந்த்ரன் அந்த பாபத்தை தீர்த்தங்களில் நீராடிப் போக்கிக் கொண்டான்.

நமுசி கொல்லப்பட்டதால் கோபங்கொண்ட சும்ப, நிசும்பர்கள் பெரும் சைன்யத்துடன் தேவேந்த்ரனை விரட்டி விட்டு மூவுலகையும் ஆளலாயினர்.  பாதாளத்தில் இத்தனை காலம் பதுங்கிக் கொண்டிருந்த ராக்ஷஸர்களும் வெளி வந்து இவர்களோடு சேர்ந்து கொண்டனர்.  மஹிஷாஸுரனது மந்த்ரிகளான ரக்தபிந்து, சண்டன், முண்டன் ஆகிய மூவரும் மஹிஷாஸுரனைக் கொன்ற தேவியை ஸும்ப, நிசும்பர்களில் ஒருவருக்கு மணம் செய்து வைக்க நினைத்தனர். சும்பன் ஸுக்ரீவனென்பவனைத் தூதனுப்பி தன்னை மணக்கும்படி தேவியைக் கோர, தேவி தன்னை வெல்பவரையே தான் மணக்கப்போவதாக அவனைத் திருப்பி அனுப்பி வைத்தாள்.  சும்பன் தேவியை பலாத்காரமாகத் தூக்கி வரும்படி தூம்ராக்ஷனை அனுப்ப, அவன் தேவியின் ஹூங்காரத்தாலேயே இறந்து போனான்.

பின்னர் சண்ட, முண்டர்கள் பெரும் சேனையோடு வந்தனர்.  தேவியின் வாஹனமான ஸிம்ஹம் ராக்ஷஸப்படைகளைக் கீறி, கிழித்து, அடித்து, கடித்து அரை க்ஷணத்தில் கொன்றது.  தேவியின் புருவத்திலிருந்து சண்டமாரீ என்ற யோகினி உக்ரமான ரூபத்தோடு, எருமைக் கொம்பைக் கையிலெந்திக் கிளம்பினாள்.  இவளது ஸ்வரூபத்தைக் கண்டு கருடனின் இறக்கைகள் உதிர்ந்தன.  அவள் அவைகளைத் தொடுத்து மாலையாகக் அணிந்து கொண்டு, கார்க்கோடகத்தால் சண்ட, முண்டர்களைக் கட்டிக் கொண்டு வந்தாள்.  மேலும் பலரை சண்டமாரீ கொன்று குவித்தாள்.  கௌசிகீ சண்ட, முண்டர்களோடுப் போரிட்டு, அவர்கள் தலைகளை வெட்டி மாலையாக அணிந்து கொண்டு, சாமுண்டா என்று பெயர் பெற்றாள்.

பிறகு ரக்தபீஜன் முப்பது கோடி சேனைகளோடு போருக்கு வந்தான்.  தேவியின் அருளால் அவளிடமிருந்து இந்த்ராணீ, வாராஹி, வைஷ்ணவி, நாரஸிம்ஹீ, கௌமாரீ, மாஹேச்வரீ முதலிய சக்திகள் தோன்றின.  ரக்தபீஜன் தன் உடலிலிருந்து விழும் ஒவ்வொரு ரக்தத் துளியிலிருந்தும் ஒரு ரக்தபீஜன் தோன்றவேண்டும் என்று வரம் பெற்றிருந்தான்.  தேவி அவன் ரக்தம் கீழே சிந்தும் முன் அதனைக் குடித்து விடும்படி தன் சக்திகளுக்குக் கட்டளையிட்டுவிட்டு, ரக்தபீஜனைக் கொன்று அட்டஹாஸமாய்ச் சிரித்தாள்.  இந்த தீரத்வனியைக் கேட்டு பரமேச்வரன் அங்கு வர, அவரையே சும்ப, நிசும்பர்களிடம் தூதனுப்பினாள்.  அதைக் கேட்காமல் சும்ப, நிசும்பர்கள் போருக்கு வந்து தேவியிடம் கடும் போரிட்டு மாண்டனர். 

தேவர்கள் பூமாரி பொழிய, தேவி சாந்தஸ்வரூபியாகி, எப்போதும் தேவர்களைக் காப்பதாக வரமருளினாள்.  இதே போல் த்வாபர யுகத்தில் யசோதையினிடம் தோன்றி, பல ராக்ஷஸர்களைக் கொல்வேன் என்று கூறி மறைந்தாள்.

No comments:

Post a Comment