Thursday, November 28, 2013

வாமன புராணம் - 21

வாமன புராணம் - 21

பலி இந்த்ரனானது: "ஐந்தாவது கலியுகத்தின் ஆரம்பத்தில் ஒரு ஸமயம் மஹாவிஷ்ணுவின் உதவியோடு தேவர்களுக்கும், பலியின் தலைமையில் அஸுரர்களுக்கும் யுத்தம் நடந்தது.  அப்போது அஸுரர் படை பின் வாங்கிய போது காலநேமி என்பவன் தனது நூறு தலைகளோடு யுத்த அரங்கில் புகுந்து கண்ணில் பட்ட தேவர்களையெல்லாம் விழுங்கினான்.  மஹாவிஷ்ணு அவனையெதிர்த்து அவன் தலைகளைக் கொய்து, கைகளை அறுத்து, உதைத்துத் தள்ளிக் கொன்று விட்டு மறைந்தார்.  ஆனால் பலி தேவர்களனைவரையும் துரத்தி விட்டு, பாணனை யமனாகவும், மயனை வருணனாகவும், ராகுவை ஸோமனாகவும், ஸ்வர்ப்பானுவை ஸூர்யனாகவும், சுக்ராச்சார்யாரை ப்ருஹஸ்பதியாகவும் செய்து கொண்டு, தானே அனைத்துலகையும் ஆண்டு வரலானான்.  ப்ரஹ்லாதரை அழைத்துப் பட்டாபிஷேகம் செய்து கொள்ளச் சொன்னான்.  அவர் பகவத்பக்தியில் லயித்து அதை மறுக்க, அவரைத் தன்னருகிலேயே இருந்து தர்மோபதேசங்களைச் செய்து கொண்டு இருக்கச் சொன்னான்.  அப்படியே அவரும் அவனுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார்.

பயந்தோடிய தேவர்கள் மீண்டும் நாராயணரைச் சரணடைய அவர் தேவர்களுக்கு அபயம் அளித்து, அவர்களைக் காக்க அதிதிக்கும், காச்யபருக்கும் வாமனராக அவதரித்தார்.  அப்போது தோன்றிய அபசகுனங்களைக் கண்ட ப்ரஹ்லாதர், இனி நடக்கப்போகின்றவைகளை பலிக்கு எடுத்துக் கூறினார்.  அவன் அவைகளை மதிக்காது மஹாவிஷ்ணுவை நிந்திக்கவே, ப்ரஹ்லாதர் கோபங்கொண்டு ராஜ்யத்தை அவன் இழப்பான் என சபித்து விட்டு தீர்த்த யாத்ரைக்குக் கிளம்பி விட்டார். 

துந்து ஸம்ஹாரம்: மானஸதீர்த்தம், கௌசிகீ, ஹஸ்தினாபுரம் முதலான இடங்களுக்குச் சென்று விட்டு, வந்து கொண்டிருந்த போது யமுனா நதி தீரத்தில் த்ரிவிக்ரமரைத் தர்சித்தார்" என்று புலஸ்த்யர் கூறவும், நாரதர் "இனிதானே பலிக்காக த்ரிவிக்ரம அவதாரம் எடுக்கப் போகிறார்.  இந்த த்ரிவிக்ரம அவதாரம் யாரை சிக்ஷிக்க?" என்று கேட்டார்.  புலஸ்த்யர் "நான்காவது கலியுகத்தின் ஆரம்பத்தில் கச்யபருக்கும், தனுவுக்கும் துந்து என்ற தானவன் ஒருவன் பிறந்தான்.  அவனே அப்போது தேவர்களை விரட்டி விட்டு, இந்த்ரனாக ஆனான்.  ஹிரண்யாக்ஷன் முதலானோர் அவனை அண்டி ஸ்வர்க்க லோகத்தில் வாழ்ந்து வந்தனர்.  ஒரு ஸமயம் துந்து, "ஓடிப்போன தேவர்கள் எங்கு சென்றிருப்பார்கள்" என்று கேட்க, "அவர்கள் ஸத்ய லோகத்திலிருக்கிறார்கள்" என்று அஸுரர்கள் பதிலுரைத்தனர்.  உடனே துந்து நாமும் அங்கு செல்வோம் என்று கிளம்பினான்.  அஸுரர்கள் அவனைத் தடுத்து, "அரசே! நாமங்கு செல்ல முடியாது.  இந்த ஸ்வர்க்க லோகத்திலிருந்து பல்லாயிரம் யோஜனை தூரத்தில் மஹர் லோகமும், அங்கிருந்து பல கோடி யோஜனை தூரத்தில் ஜன லோகமும், அங்கிருந்து முப்பது கோடி யோஜனை தூரத்தில் ஸத்யலோகமும் இருக்கிறது.  மஹர் லோகத்திலிருக்கும் ரிஷிகளும், ஜன லோகத்து கோமாதாக்களும் நம்மை பார்வையாலேயே பஸ்மமாக்கி விடுவர்.  ஸத்ய லோகத்திலோ ஸதா வேதம் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.  அது நம்மை தஹித்து விடும்" என்றனர்.  "அப்படியானால் அவர்கள் மட்டும் அங்கு எப்படி சென்றனர்?" என்று துந்து கேட்க, சுக்ரர் "நூற்றோரு அச்வமேத யாகங்களைச் செய்தவர் அங்கு செல்லலாம்" என்று கூறினார்.

துந்து உடனே தேவகீ நதிதீரத்தில் அஸுரர்களையும், சுக்ரரையும், பார்க்கவரிஷிகளையும் துணையாகக் கொண்டு யாகசாலைகளை அமைத்துக் கொண்டு அச்வமேதங்களைச் செய்யலானான்.  அப்போது அதன் வெப்பம் தாளாத தேவர்கள் மஹாவிஷ்ணுவைச் சரணடைய, அவர்களைக் காப்பதாக இந்த வாமனாவதாரத்தைச் செய்தார்.  தேவகீ நதியில் அவர் அப்போது மூழ்குவது போல மிதந்து வருவதைக் கண்ட வேதியர்கள், அதைக் காப்பாற்றிக் கரையேற்றி, விபரங்களைக் கேட்டனர்.  இந்த்ரனுக்கு ஸஹோதரனாய், கச்யபருக்குப் பிறந்து, பாற்கடலில் சயனித்திருப்பதையே மறைத்து, தான் வருண கோத்ரத்தைச் சேர்ந்த ப்ரபாஸன் என்ற அந்தணரின் இரண்டாவது மகனென்றும், தன் பெயர் கதிபாஸனென்றும், தன் அண்ணன் பெயர் நேத்ரபாஸன் என்றும் வாமனர் கூறினார். தந்தைக்குப் பின் அவர் சொத்தை இருவரும் பிரித்துக் கொள்ளலாம் என்று தான் கூறியதாகவும், நேத்ரபாஸன் "கூனன், குருடன், வாமனன், அலி, பித்தன், குஷ்டரோகி இவர்களுக்குச் சொத்தில் உரிமையில்லை.  அவர்களுக்கு உண்ண உணவும், உடுத்த உடையும் தந்து சொத்தை மற்றவர் பிரித்துக் கொள்வதே முறை" என்று கூறி தன்னைக் கோபித்து இந்த நதியில் தள்ளி விட்டதாகவும் கூறினார்.  எவரும் அவர் மாயையில் லயித்து சொன்னதை நம்பினர்.

வாமனர் அவர்களையும், துந்துவையும் பற்றி கேட்க, அவர்கள் விபரங்களைக் கூறி, துந்துவிடம் வாமனரைப் பூஜிக்குமாறு கூறினர்.  அவனும் அவருக்கு அதிதி பூஜைகளைச் செய்து, வேண்டியதைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறினான்.  "அண்ணனே பிடுங்கிக் கொள்ளும் இந்த செல்வங்கள் எதுவும் எனக்கு வேண்டாம்.  என் காலால் மூன்றடி மண் தந்தாலே போதும்" என்று வாமனர் பதிலுரைக்க, அஸுரனும் அதை அங்கீகரிக்க, த்ரிவிக்ரமராய் இரண்டடிகளில் உலகங்களை அளந்த மூர்த்தி மூன்றாவது அடிக்கு இடமில்லாது, கோபத்தால் துந்துவை மிதித்து, முப்பதாயிரம் அடியில் அவனை பூமியில் புதைத்தழித்து, தேவர்க்கு மீண்டும் ஸ்வர்க்கத்தை அளித்து யமுனையாய் மறைந்தார்" என்று கூறினார்.

No comments:

Post a Comment