Friday, November 29, 2013

வாமன புராணம் - 24

வாமன புராணம் - 24

ப்ரஹ்லாதர் யாத்ரைக்குப் புறப்பட்டபின், மஹாபலி தன் தர்மபத்னி விந்த்யாவளியோடு குருக்ஷேத்ரத்தில் அச்வமேத யாகத்திற்கான தீக்ஷை செய்து கொண்டு யாக கார்யங்களை ஆரம்பிக்கலானான்.  சுக்ரர் அழைப்பை ஏற்று பார்க்கவ ரிஷிகள் யாகத்தில் கலந்து கொண்டனர்.  அத்ரி, கௌதம, ஆங்கிரஸ, கௌசிக வழித்தோன்றல்கள் அதையேற்க மறுத்து குருக்ஷேத்ரத்தை விட்டு வெளிச்சென்றனர். யாகத்தின் அங்கமாக தாரகாக்ஷன் என்பவன் துணையோடு யாக குதிரையும் புறப்பட்டுச் சென்றது.  மூன்று மாதங்களானதும், தேவர்களைக் காப்பதற்காக மஹாவிஷ்ணுவும் அதிதிக்கும், காச்யபருக்கும் வாமனராகத் தோன்றினார்.  ப்ரஹ்மதேவர் கூறியபடி பரத்வாஜர் குழந்தைக்கு ஜாதகர்மா, யக்ஞோபவீத கர்மாக்களை செய்து வைத்து, வேதங்களையும் ஓதுவித்தார்.  பரத்வாதரிடமிருந்து ஒரே மாதத்தில் வேதங்களைக் கற்றுக் கொண்டார்.  ரிஷிகளோடு சேர்ந்து பலியின் யாகசாலையை நோக்கிப் புறப்படலானார். அப்போது பரத்வாஜர் மஹாவிஷ்ணுவின் சான்னித்யம் இருக்கும் இடங்களை அருள வேண்டுமென்று வாமனரிடம் கேட்டார்.

தெய்வ சான்னித்யம்:  பகவான் "ப்ரஹ்மன் முதல் தோன்றி உலகங்களிலுள்ள அசையாப் பொருள் வரை தன் சான்னித்யம் எதிலுமுள்ளது.  எனினும் விசேஷமானவைகளைக் கூறுகிறேன். மானஸ ஸரோவரில் மத்ஸ்யமாகவும், கௌசிகியில் கூர்மமாகவும், க்ருஷ்ணையில் ஹயக்ரீவராகவும், ஹஸ்தினாபுரத்தில் கோவிந்தனாகவும், யமுனையில் த்ரிவிக்ரமனாகவும், பதரியில் நாராயணனாகவும், பத்ரகர்ணத்தில் ஜயேசனாகவும், வராஹத்தில் கருடத்வஜனாகவும், மணிமதியில் சம்புவாகவும், ஹிமாசலத்தில் சூலபாணியாகவும், சக்ரதீர்த்தத்தில் அர்த்தநாரீச்வரனாகவும், குமாரதாரையில் ஸுப்ரஹ்மண்யனாகவும், மாஹிஷ்மதியில் த்ரிநேத்ரனாகவும், ஸப்தகோதாவரத்தில் ஹடகேச்வரனாகவும், ஸிம்ஹத்வீபத்தில் உபேந்த்ரனாகவும், பாதாளத்தில் கபிலராகவும், பூலோகத்தில் கோகனதேசனாகவும், புவர்லோகத்தில் கருடனாகவும், ஸுவர்லோகத்தில் விஷ்ணுவாகவும், மஹர்லோகத்தில் அகஸ்த்யராகவும், ஜநலோகத்தில் கபிலராகவும், தபோலோகத்தில் வேதமாகவும், ஸத்யலோகத்தில் ப்ரஹ்மாவாகவும், ஜம்பூ த்வீபத்தில் நான்கு கைகளோடும், குசத்வீபத்தில் குசேசயனாகவும், ப்லக்ஷ த்வீபத்தில் கருட வாஹனத்தோடும், க்ரௌஞ்ச த்வீபத்தில் பத்மநாபனாகவும், சால்மல த்வீபத்தில் வ்ருஷப த்வஜனாகவும், சாக த்வீபத்தில் ஸஹஸ்ராக்ஷங்களோடும், புஷ்கர த்வீபத்தில் வாமனனாகவும் இருக்கிறேன்" என்றார்.

புவனம் முழுதும் கிடுகிடுவென ஆடுவதைக் கண்ட மஹாபலியிடம் சுக்ராச்சார்யார் வாமனரின் வருகையைக் கூறி, அவருக்கு உபசாரமான வார்த்தைகளைக் கூறி அனுப்பி விட வேண்டுமேயல்லாது ஒரு புல்லைக் கூட அவருக்குத் தானமாக அளித்து விடக்கூடாது என்றும், அப்படி ஏதாவது செய்து விட்டால், அதைப் பற்றியே அவர் பலியின் ராஜ்யம் முழுதையும் அபஹரித்து தேவர்க்கு அளித்து விடுவார் என்றும் எச்சரித்தார்.  ஆனால் பலியோ, யாகத்தில் எவர்க்கும் இஷ்டமானதை அளிப்பதே தன் குணமாதலால் அதை மாற்ற இயலாது என்று கூறி, அதற்கு உதாரணமாக பின் வரும் கதையையும் சொன்னான்.

"முத்கல ரிஷியின் புத்ரனான கோசகாரனுக்கும், வாத்ஸ்யாயனரின் புத்ரியான தர்மிஷ்டைக்கும் இல்லற தர்மத்தில் ஒரு குழந்தை பிறந்தது.  ஆனால், அது ஆறு நாட்களாகியும் சிறிதும் அசைவின்றி இருந்ததைக் கண்ட தர்மிஷ்டை மிகவும் மனம் நொந்து அதை எறிந்து விட்டாள். சூர்ப்பாக்ஷி எனும் ராக்ஷஸி அந்தக் குழந்தையைக் கண்டதும், இளைப்பாய் இருந்த தன் குழந்தையை அங்கு விட்டு விட்டு கோசகாரனின் குழந்தையை எடுத்துச் சென்றாள். சாலோதரம் எனும் ப்ரதேசத்திலிருந்த கடோதரன் எனும் தன் குருட்டுக் கணவனிடம் அந்தக் குழந்தையைக் கொடுத்து அதை புஜிக்கலாம் என்று சொன்னாள்.  குழந்தையைத் தடவிப் பார்த்த அவன் "இது யாரோ ரிஷி புத்ரன் போலத் தெரிகிறது.  நம்மை இது சபித்து விடும்" என்று கூறி வேறு குழந்தையைக் கொண்டு வரும்படி கூறினான்.  அவள் மீண்டும் தன் குழந்தையையே எடுத்து வரச் சென்ற போது, கோசகாரர் அழுது கொண்டிருந்த அந்தக் குழந்தையைச் சுற்றி மந்த்ரங்களால் ரக்ஷை செய்திருந்தார்.  ராக்ஷஸியால் அதனருகில் செல்ல முடியாது, ரிஷி புத்ரனையும் அங்கேயே விட்டு விட்டு்ச் சென்றாள்.

சிறிது நேரத்தில் வெளியே வந்த கோசகாரர் இரு குழந்தைகளையும் எடுத்துச் சென்று தன் குழந்தைக்கு நிசாகரனென்றும், ராக்ஷஸக் குழந்தைக்கு திவாகரனென்றும் பெயரிட்டு, கபிலைப் பசுவின் பால் கொடுத்து வளர்த்து வரலானார்.  ஏழு வயதில் உபநயனம் செய்வித்து வேதம் ஓதுவித்தார்.  நிசாகரன் அப்பொழுதும் எதுவும் பேசாமலிருந்ததைக் கண்ட கோசகாரர் அவனை ஒரு கிணற்றில் தள்ளி மூடிவிட்டார்.  பத்தாண்டுகள் அங்கேயே நிசாகரன் அதிலிருந்த ஒரு நெல்லிமரத்தின் கனிகளை மட்டுமே உண்டு ஜீவித்திருந்தான்.  ஒரு நாள் அங்கு வந்த தர்மிஷ்டை யார் இந்தக் கிணற்றை மூடியது? என்று தனக்குத் தானே பேசிக் கொண்டாள்.  நிசாகரன் அப்போது வாய் திறந்து "தாயே! நானே உங்கள் குழந்தை" என்றான். அவள் "எங்கள் குழந்தை பேசாது.  எனவே தான் நாங்கள் அவனை விரட்டி விட்டோம், நீ யார்?" என்று கேட்க, நிசாகரன் தானெ அவர்கள் புத்ரன் என்று பதில் கூற, அவள் குழந்தையை கிணற்றிலிருந்து வெளியேற்று, பதியிடம் அழைத்துச் சென்று, "இதுவரை பேசாமலிருந்த நீ, இப்போது பேசக் காரணம் என்ன?" என்று கேட்க, நிசாகரன் தன் சரிதத்தைக் கீழ் கண்டவாறு கூறுகிறான்.

"முன்பு வ்ருஷாகபி என்ற தேவனுக்கும், மாலா என்பவளுக்கும் மகனாகப் பிறந்து, கலைகள் பல கற்றும், காமம், களவு போன்ற துராசாரங்களைக் கைக்கொண்டதால் பல நரகங்களை அனுபவித்து, ஒரு புலியாகப் பிறந்தேன்.  அரசனின் காட்சிசாலையில் அடைத்து வைத்திருந்த போது, அரசனில்லாத சமயத்தில் அவன் மனைவி அஜிதா என்பவளிடம் இச்சை கொண்டு, அவளைப் பேச்சால் மயக்கினேன், அவளும் என்னைக் கூண்டிலிருந்து திறந்து விட்டு, என்னோடு இன்புற்றிருந்த போது, காவலர்கள் புலி ராணியைத் தாக்குகிறது என்றெண்ணி, என்னைக் கொன்று விட்டார்கள்.  பல நரக வேதனைகளை மீண்டும் அனுபவித்து, அக்னிவேச்யர் என்ற அந்தணரிடம் கழுதையாகப் பிறந்து, அவர் மனைவி விமதி என்பவள் மேல் மீண்டும் ஆசை கொண்டு பாய்ந்தேன்.  அவர் சீடர்கள் என்னை அடித்துக் கொன்று விட்டனர்.  மீண்டும் பல நரகங்களை அனுபவித்து, சந்த்ராவளி என்ற வைச்யக் கன்யகையிடம் கிளியாக அன்போடு வளர்ந்த போது, அவள் மேல் மோஹிக்க, அவள் என்னைத் விரட்டி விட்டாள்.  அப்போது ஒரு குரங்கின் கையில் அகப்பட்டு இறந்தேன்.  அதன் பின் ஒரு சண்டாளன் வீட்டில் காளையாகப் பிறந்த போது அவன் மனைவி மேல் மோஹங்கொண்டு, அவன் கையில் அடிபட்டு இறந்து, இப்போது உங்கள் மகனாகப் பிறந்துள்ளேன்.  இனி இந்த வலையில் அகப்படக்கூடாது என்றெண்ணியே நான் பேசாமலிருந்தேன்.  கிணற்றில் இருந்த போது பரமனை நினைத்துத் தவம் புரிந்தேன்.  இனி பூர்வ ஜன்ம வாசனை வராதென்ற நம்பிக்கையிலேயே பேச ஆரம்பித்தேன்.  நான் இனி வெளியே சென்று பெரியோர்களை அணுகி, பேரின்பம் அடைய ஆசைப் படுகிறேன். நீங்கள் திவாகரனைக் கொண்டு புத்ரனால் கிடைக்கும் இன்பங்களை அடையுங்கள், நான் பத்ரிகாச்ரமம் செல்கிறேன்" என்று கூறி அவர்களைப் பணிந்து சென்றான்.

இந்தக் கதையை சுக்ரருக்கு உரைத்த மஹாபலி அதேபோல் தனக்கும் தன் முன் பிறவிகளால் இந்த தானங்களில் இஷ்டம் இருக்கிறது போலும் என்று கூறினான்.  அதே போல் வந்த வாமனருக்கும் தானம் அளிக்க, அவர் தன் இரண்டடிகளாலேயே அனைத்து உலகங்களையும் அளந்து கொண்டு, மூன்றாவதடிக்கு இடம் கேட்டார்.  பலியின் புத்ரன் பாணன் "புவனத்தை ஏன் இப்படிச் சிறியதாகப் படைத்தீர்கள்.  பெரிதாகச் செய்திருந்தால் வேண்டிய அளவு எடுத்துக் கொண்டிருக்கலாம் அல்லவா?" என்று கேட்க, அவர் சிரித்துக் கொண்டே தான் நினைத்திருந்தால் ஒரே அடியில் அனைத்துலகங்களையும் அளந்திருக்க முடியும் என்றும், பலியின் மீது கருணை கொண்டே அவ்வாறு செய்யவில்லை என்றும் கூறினார்.  பின்னர் தன் மூன்றாவதடியால் பலியைப் பாதாளத்துக்கனுப்பிய வாமனர் முறைதவறிச் செய்யப்படும் நற்கார்யங்களின் பலனை ஆஹாரமாகக் கொள்ளுமாறு கூறி, அவன் பெயரால் தீபப்ரதானம் எனும் பண்டிகையும் இனி கொண்டாடப்படும் என்று அருளினார்.  அதையே நாம் கார்த்திகையாகக் கொண்டாடுகிறோம்.

No comments:

Post a Comment