Wednesday, November 27, 2013

வாமன புராணம் - 18

வாமன புராணம் - 18

"வனத்தில் துன்பப்பட்டுக் கொண்டிருந்த சித்ராங்கதையிடம் கருணை கொண்ட ஒருவன் அவளை அழைத்துச் சென்று யமுனா தீரத்தில் இருந்த ஸ்ரீகண்டர் ஆலயத்தில் அவளை விட்டு, விரைவில் அவள் தன் பதியை அடையப்போவதாக ஆசிர்வதித்துச் சென்றான்.  அங்கு தர்சனத்திற்கு வந்த ரிதத்வஜர் எனும் முனிவர் காட்டில் தனியே துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் இவளைக் கண்டார்.  நமஸ்கரித்து நின்ற அவள் சரிதத்தை அறிந்தார்.  அவளிடம் கருணையும், விச்வகர்மாவிடம் கடும் கோபமும் கொண்டார்.  "பெண்ணாகப் பிறந்தவள் என்றைக்கிருந்தாலும் பிறர் பொருளன்றோ? நாமே அவளுக்குத் தகுந்த கணவனைத் தேடுவதன்றோ நம் கடமை.  தானே ஒருவனைத் தேடிக்கொண்ட இவளை அன்புள்ள தந்தையாயிருப்பவன் சபிக்கலாகுமோ? யோசனை செய்யாமல் பெண்ணை சபித்த விச்வகர்மா குரங்காகப் போகட்டும்" என்று சபித்தார்.  சிவபூஜை முடிந்து அவளை ஸப்தகோதாவரம் என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றார்.  அங்கிருந்த ஹடகேச்வரனை அவளைப் பூஜித்துக் கொண்டிருக்கும் படி கூறிவிட்டு, அவளைப் போன்றே அங்கு மேலும் மூன்று பெண்கள் வருவார்கள் என்றும், அங்கேயே அவள் தன் பதியை அடைவாள் என்றும் கூறினார். "இந்தப் பெண்ணின் துயரத்தைப் போக்குபவர் யாரோ" என்று அங்கிருந்த கல்லில் எழுதி வைத்து, சென்று விட்டார்.

குரங்காய்ப் போன விச்வகர்மா பூமியில் சாலூக நதிக்கரையில் ஒரு புதரில் வசித்து வந்தான்.  அங்கு ஒரு ஸமயம் கந்தரனெனும் தைத்யன், தன் மகளான தேவவதியுடன் வந்து கொண்டிருந்தான்.  குரங்கு அவர்கள் மேல் பாய்ந்து தேவவதியைத் தூக்கிச் சென்று, ஹிமகிரியிலுள்ள ஒரு ஆச்ரமத்தில் அவளைப் பத்திரப்படுத்தியது.  அதைத் துரத்தி வந்த கந்தரனை வாளோடு கண்டதும், யமுனையில் குதித்து விட்டது.  குரங்கு தன் மகளோடு நதியில் குதித்து விட்டது என்று நினைத்த கந்தரன் அவள் இறந்து விட்டாள் என்று நினைத்து பாதாளம் திரும்பி விட்டான்.  மீண்டும் கரையேறிய வானரம் ஆச்ரமத்திற்குச் சென்றது.  வழியில் அஞ்ஜனன் என்பவன் தன் மகளான தமயந்தியோடு சென்று கொண்டிருந்தான்.  அவளை தேவவதி என்று நினைத்த வானரம் அவர்களிடம் பாய்ந்தது.  பயந்து போன தமயந்தி அருகில் ஓடிக் கொண்டிருந்த ஹிரண்வதீ எனும் நதியில் குதித்து விட்டாள்.  அவள் இறந்தாள் என நினைத்த அஞ்ஜனன் அந்த அஞ்ஜன பர்வதத்திலேயே தவம் புரியலானான்.

நதியில் அடித்துச் செல்லப்பட்ட தமயந்தி கோஸல நாட்டில் கரையேறி, ஓர் ஆலமரத்தடியே வந்து அமர்ந்தாள்.  அங்கு "இந்த ரிஷி குமாரன் இங்கே கட்டப்பட்டிருப்பதை யாராவது அவன் தந்தையிடம் சொல்ல மாட்டீர்களா?" என்று ஒரு புலம்பல் சத்தத்தைக் கேட்டாள்.  தேடிப் பார்த்தால், மேலே ஒரு ஐந்து வயது குழந்தை அதன் ஜடாமுடியைக் கொண்டே, அந்த ஆலமரத்தில் கட்டப்பட்டிருப்பதைக் கண்டாள்.  அதனிடம் "நான் தான் மிகுந்த துயரத்தில் இருக்கிறேன் என்று நினைத்தேன், இங்கு என்னை விடத் துயரப்பட்டிருக்கும் நீங்கள் யார்?" என்று கேட்டாள்.  அந்தக் குழந்தை "அம்மா! நான் மனுபுரத்திலிருக்கும் ரிதத்வஜரெனும் முனிவரின் புத்ரன்.  நான் பிறந்தபோது என் மேலுண்டான வாசனையால் வண்டுகள் என்னை சூழ்ந்து கொண்டன.  அதனால் என் தந்தை எனக்கு ஜாபாலி என்று பெயரிட்டார்.  என்னைக் கண்ட பெரியவர்கள் நான் ஐயாயிரமாண்டுகள் குழந்தையாகவும், பத்தாயிரமாண்டுகள் குமரனாகவும், இருபதினாயிரமாண்டுகள் யுவனாகவும், நாற்பதாயிரமாண்டுகள் கிழவனாகவும் இருப்பேனெனவும், ஐந்து வயதில் நான் கட்டப்படுவேன் என்றும் கூறினர்.  அப்படியே நான் காட்டில் சுற்றிக் கொண்டிருக்கும் போது ஒரு குரங்கு ஓடி வந்து "ஏன் தேவவதியைத் தூக்கிச் சென்றாய்?" என்று என்னைப் பிடித்து இப்படிக் கட்டிப் போட்டு விட்டது.  யாரும் என்னைக் கண்டு பிடிக்காதபடி முட்களால் வழியையும் மூடி விட்டது, எனக்கு தேவவதி யாரென்றே தெரியாது, என் விதிதான் அந்தக் குரங்காக வந்ததென்று நினைக்கிறேன்" என்று கூறி அவளைப் பற்றி விசாரித்தது.

தமயந்தி தன் பெயரைக் கூறி "என் தந்தை அஞ்ஜனர், தாய் ப்ரம்லோசா. என்னை ஒரு சக்ரவர்த்தி மணப்பான் என்று நான் பிறந்த போது முத்கல முனிவர் கூறியிருந்தார்.  என் தந்தையோடு நான் தீர்த்த யாத்ரைக்கு வந்த போது எங்களை ஒரு குரங்கு துரத்த, நான் அதற்குப் பயந்து நதியில் குதித்து விட்டேன்.  விதி வசத்தால் கரையேறி இங்கு வந்தேன்" என்று கூறினாள்.  அவளை ஜாபாலி யமுனைக் கரையிலிருக்கும் ஸ்ரீ கண்டரைச் சென்று பூஜிக்கச் சொன்னார்.  அங்கு தன் தந்தை பூஜைக்கு வருவார் என்றும், அவர் உதவியால் அவளுக்கு நன்மை உண்டாகும் என்றும் கூறினார்.  அப்படியே அங்கு சென்ற தமயந்தி அங்கு எழுதியிருந்த ச்லோகத்தைக் கண்டாள்.  அதனருகிலேயே "ஜாபாலியை விடுவிக்கவும், என் துயரை அகற்றவும் யார் வருவரோ?" என்று எழுதி வைத்தாள்.  அங்கேயே தவம் செய்து கொண்டிருந்த தேவவதியையும் கண்டாள்.  அங்கு பூஜைக்கு வந்த ரிதத்வஜர் அங்கு எழுதி வைக்கப்பட்டிருந்த வாக்யங்களைக் கண்டு, தன் மகனை விடுவிக்க அயோத்யாபதியான இக்ஷ்வாகுவிடம் சென்றார்.

அதன் பின் ஸ்ரீகண்டரை தர்சிப்பதற்காக வந்த காலவமுனிவர் அங்கு இந்த இரு பெண்களையும் கண்டு, அறிந்து கொண்டார்.  அவர்களோடு ஒரு நாள் இருந்து விட்டு, அவர்களையும் அழைத்துக் கொண்டு புஷ்கர க்ஷேத்ரத்திற்குச் சென்றார்.  கார்த்திகை புஷ்கர ஸ்னானம் புண்யமானதால் அங்கு ஏராளமான மன்னர்களும், ரிஷிகளும் கூடியிருந்தனர்.  ஸ்நானம் செய்ய மூழ்கிய போது, ஒரு பெரிய ஆண் மீனை பல பெண் மீன்கள் சுற்றிக் கொண்டிருந்தன.  ஆண் மீன் அவைகளைப் பார்த்து "இப்படி என்னைச் சுற்றி வருகிறீர்களே, மக்கள் அவமானமாகப் பேச மாட்டார்களா?" என்றது.  அதற்குப் பெண் மீன்கள் "காலவரே பெண்களோடு சுற்றி கொண்டிருக்கிறார்.  அவரே அபவாதத்திற்கு அஞ்சவில்லை, நீ ஏன் பயப்படுகிறாய்?" என்று கேட்டன.  ஆண் மீன் "அவருக்கு மானமில்லை, நானும் அப்படி இருக்க முடியுமா?" என்றது.  இந்த சம்பாஷனைகளைக் கேட்ட காலவர் தன் தவறை உணர்ந்து நீரிலிருந்து வெளியேராது, அதனுள்ளேயே தவத்தைத் தொடங்கி விட்டார்.

இக்ஷ்வாகுவிடம் சென்ற ரிதத்வஜர் அவனை வேண்டி அவன் புதல்வனான சகுனியோடு கானகத்தில் திரிந்து தன் மகனைக் கண்டார்.  அவனைச் சுற்றியிருந்த முட்களை அகற்றி சகுனி குழந்தையிடம் சென்றான்.  அவர்களால் ஜடையின் கட்டுகளைப் பிரிக்க முடியவில்லை.  ஜடை கட்டப்பட்டிருந்த கிளையை வெட்டி, அதனோடே ஜாபாலி கீழே இறங்கி வர உதவியாக தன் அம்புகளால் படிக்கட்டுகளை அமைத்தான்.  ஜாபாலி அதன் வழியே இறங்கி வந்து, தந்தையை நமஸ்கரித்து, சகுனியையும் வாழ்த்தினார்.  மூவரும், நாபாகனோடு சேர்ந்து மார்கழி புஷ்கர ஸ்நானத்திற்கு வந்திருந்தனர். ஆனால் அந்தப் பெண்களை அவர்கள் சந்திக்கவில்லை.

இதனிடையில் பர்ஜன்யனெனும் கந்தர்வனுக்கும், க்ருதாசீ என்பவளுக்கும் பிறந்த வேதவதி என்பவளும் ஒரு ஸமயம் துரத்திக் கொண்டு வந்த அந்த வானரத்திற்கு பயந்து ஒரு மரத்திலேறினாள்.  வானரம் அந்த மரத்தைக் காலால் உதைத்துத் தள்ளியது.  இந்தச் செயலைக் கண்ட தேவர்கள் "இவள் இக்ஷ்வாகுவின் ஸஹோதரனான இந்த்ரத்யும்னனின் மஹிஷியன்றோ? இவளுக்கா இந்த கதி" என்று சத்தமிட்டனர்.  அப்போது அங்கு தோன்றிய ஒரு புயல் காற்று வேதவதியையும் கொண்டு போய் புஷ்கரத்தில் தள்ளியது.

யமுனையின் இக்கரையில் தேவவதி, தமயந்தி.  நீரினுள்ளே காலவர்.  அக்கரையில் சித்ராங்கதை, வேதவதி.  பலநாட்களாகியும் காலவர் வெளியே வரவில்லை.  அனைவரும் சென்று விட இந்த நான்கு பெண்களும் கூடி தங்கள் கதைகளைப் பேசிக் கொண்டு, ஸ்ரீ கண்டரைப் பூஜித்து வந்தனர்.  ஜாபாலி, ரிதத்வஜர், சகுனி மூவரும் சகுனியின் தந்தையான இக்ஷ்வாகுவின் ஸஹோதரனான இந்த்ரத்யும்னனின் துணையோடு இந்தப் பெண்களைத் தேடலாயினர்.  அப்போது பத்ரிகாச்ரமத்தில் தவம் புரிந்து கொண்டிருந்த ஒரு யுவராஜனைக் கண்டனர்.  அவனை அணுகிய ரிதத்வஜர் சிறு வயதில் தவம் புரிவதைப் பற்றிக் கேட்டார்.  அவன் தான் ஸுரதனெனும் ராஜகுமாரனென்று கூறி தன் கதையைக் கூறினான்.  அவனையும் ரிதத்வஜ மஹர்ஷி தேரிலேற்றிக் கொண்டு ஸ்ரீகண்ட க்ஷேத்ரத்திற்கு வந்து சேர்ந்தார்.  அப்போது தன் மகளைத் தேடிக் கொண்டு க்ருதாசீயும் அங்கு வந்தாள்.  குரங்காய் சபிக்கப்பட்ட விச்வகர்மாவும் அங்கு திரிந்து கொண்டிருந்தான்.

No comments:

Post a Comment