Friday, January 8, 2010

விஷ்ணு புராணம் - 22

01_22. ப்ருது மஹாராஜன் சக்ரவர்த்தியாக முடிசூட்டப்பட்ட போது, மேலும் சிலரை வர்க்கங்களில் தேர்ந்தெடுத்து பதவிகளில் அமர்த்தினான் ப்ரஹ்மன். நக்ஷத்ரங்கள், அந்தணர், ஓஷதிகள், யாகங்கள், தவம் இவற்றிற்கு சந்த்ரனை தலைமையாக்கினான். அரசர்களுக்குக் குபேரனையும், ஜலத்திற்கு வருணனையும், ஆதித்யர்களுக்கு விஷ்ணுவையும், வஸுவிற்கு வஹ்னியையும், கர்தமர் முதலான ப்ரஜாபதிகளுக்கு தக்ஷனையும், மருத்துக்களுக்கு இந்த்ரனையும், தைத்ய, தானவர்களுக்கு ப்ரஹ்லாதனையும், பித்ருக்களுக்கு யமனையும், யானைகளுக்கு ஐராவதத்தையும், பறவைகளுக்குக் கருடனையும், நாகங்களுக்கு (பல தலைகளுடையவை) வாஸுகியையும், குதிரைகளுக்கு உச்சைச்ரஸையும், பசுக்களுக்கு வ்ருஷபத்தையும், ம்ருகங்களுக்கு சிங்கத்தையும், ஸர்ப்பங்களுக்கு (ஒரு தலையுடையவை) ஆதிஸேஷனையும், ஸ்தாவரங்களுக்கு இமயத்தையும், முனிவர்களுக்குக் கபிலரையும், கொடும் பல்லும், நகமுமுடைய விலங்குகளுக்குப் புலியையும், மரங்களுக்குக் கல்லால மரத்தையும் என்று தலைமையாக்கினான்.

பின் கிழக்குத் திசைக்கு வைராஜனின் மகன் ஸுதன்வாவையும், தெற்கிற்குக் கர்தம ப்ரஜாபதியின் மகன் சங்கபதனையும், மேற்கிற்கு ரஜஸின் புத்ரன் கேதுமானையும், வடக்கிற்கு பர்ஜன்ய ப்ரஜாபதியின் மகன் ஹிரண்யரோமாவையும் திக் பாலர்களாக்கினான். மைத்ரேயா! இப்படிப் பல பதவிகளில் இருப்பவர்களும் மஹாவிஷ்ணுவின் அம்சங்களே. அவ்யக்தமான அவனே ஒரம்சத்தால் ப்ரஹ்மனாகவும், மற்றோர் அம்சத்தால் மரீசி முதலான ப்ரஜாபதிகளாகவும், மற்றோர் அம்சத்தால் காலமாகவும் இருந்து படைக்கிறான். இவ்வாறே காக்கும் போது ஓரம்சத்தால் விஷ்ணுவாகவும், இரண்டாவதம்சத்தால் மன்வாதிகளாகாவும், மூன்றாவதாக காலமாகவும், நான்காம் அம்சத்தால் ஸர்வ பூதங்களாகவுமிருந்து ஸத்வ குணத்தால் காக்கிறான். தமோகுணத்தால் இவ்வாறே ஓரம்சத்தால் ருத்ரனாகவும், மற்றொரு அம்சத்தால் அக்னி, அந்தகர்களாகவும், மூன்றாவதம்சத்தால் காலமாகவும், நான்காவதம்சத்தால் ஸர்வ பூதங்களாகவுமிருந்து அழிக்கிறான். இந்த அம்சங்களைக் கருவிகளாகக் கொள்கிறான்.

முக்தாத்மஸ்வரூபத்தை (ப்ரஹ்மத்தை)அடைவதென்பது ஸாத்யம் (கார்யம்), அதனை அடைவதற்கான ப்ராணாயாமம் முதலானவைகள் ஸாதனங்கள். இந்த ப்ராணாயாமம் முதலானவைகளைப் பற்றி அறிந்து கொள்ளும் ஞானம் முதலாவது பேதம். சாஸ்த்ரங்களைக் கொண்டு முக்தாத்மஸ்வரூபம் பற்றியறியும் ஞானம் இரண்டாவது பேதம். இவைகளால் ஆராய்ந்து பேதமற்ற சுத்த ஆத்மாவை அறியும் ஞானம் மூன்றாவது பேதம். நான்காவது பேதமே ஆத்ம ஸாக்ஷாத்காரம். இது முந்தைய மூன்று பேதங்களில் இருக்கும் விஷயங்களை விலக்குவதால் (நிராகரித்தால்) உண்டாகும் ஞானம். இந்த ஆத்மா எங்கும் நிறைந்தது, வர்ணம் முதலியவைகளுக்கு அப்பாற்பட்டது. இதுவே ப்ரஹ்ம ஸ்வரூபம்.

இந்த ப்ரஹ்மஸ்வரூபம் அந்திம காலத்தில் மிக அவச்யம். இத்தகைய யோகிகள் மீண்டும் இந்த ஸம்ஸார சக்ரத்தில் விழாமல் ப்ரஹ்மத்தில் லயிக்கிறார்கள். ப்ரஹ்மத்திற்கு இரண்டு ரூபங்கள். ஒன்று ப்ரஹ்மா முதலான ஸம்ஸார ஸம்பந்தமுள்ள ஜீவர்களின் மூர்த்த ஸ்வரூபம். இந்த சரீர ஸம்பந்தமில்லாத ஆத்ம ஸ்வரூபங்கள் அமூர்த்தம் என்றும், அக்ஷரம் (அழிவற்றது) என்றும் அழைக்கப்படும். இந்த ஸ்வரூபங்கள் ப்ரஹ்மத்திலிருந்து வேறுபட்டவை. ஏற்றத் தாழ்வுகளுடன் எங்கும் நிறைந்தவை. மும்மூர்த்திகள், தேவர்கள், ப்ரஜாபதிகள் என ஸ்தாவர ஜங்கமங்கள் வரை இந்த ப்ரஹ்ம ஸ்வரூபங்கள் ஞானத்தால் வேறுபட்டு இருக்கின்றன. யோகிகள் முதலில் ஸ்ரூபங்களையே த்யானித்து யோகத்தை பயிற்சி செய்கின்றனர்.

இப்படிப் பல தத்வங்களை பகவான் அஸ்த்ர, பூஷணங்களின் உருவில் தாங்கியிருப்பதை இனி மைத்ரேயருக்கு விளக்குகிறார் பராசரர். "மைத்ரேயா! சிறந்த மெய்ப்பொருளான இதை நான் என் தந்தை வஸிஷ்டரிடமிருந்து கற்றது. அவர் உபதேஸித்தபடியே அதை அளவிடற்கரியனை வணங்கிச் சொல்கிறேன், கேள். மார்பிலிருக்கும் கௌஸ்துப மணி ஜீவ தத்வத்திற்கு தேவதை. ப்ரக்ருதி தத்வம் ஸ்ரீவத்ஸம் என்ற மார்பிலிருக்கும் மஹாலக்ஷ்மி வாஸம் செய்யும் மயிர்ச்சுழி. புத்தி தத்வம் கதை, தாமஸம் சங்கம், ஸாத்விகம் சார்ங்கம், மனம் சக்ரம் என்று பலவும் அவன் மேனியில் இடம் பெற்றுள்ளது. அமூர்த்தியான விஷ்ணு இப்படி பக்தர்களுக்கு த்யானிக்க ஏதுவாக உருவம் தரிக்கிறான்.

"மைத்ரேயா! விஷ்ணு புராணத்தின் முதல் அம்சத்தை இருபத்திரண்டு அத்யாயங்களாக உனக்கு உபதேஸித்துள்ளேன். இதை மனப்பாடம் செய்பவனும், கேட்பவனும் மிகுந்த புண்யத்தை அடைவான். புஷ்கர க்ஷேத்ரத்தின் புஷ்கர தீர்த்தத்திலே பன்னிரண்டு ஆண்டுகள் கார்த்திகையில் நீராடினால் வரும் பலன் இந்த அம்சத்தைக் கேட்டாலே எவர்க்கும் கிடைக்கும். இதில் கூறப்பட்டுள்ள பலரின் பிறப்பு வரலாறுகளைக் கேட்பவர்களுக்கு அந்தந்த தேவர்கள் வரங்களைக் கொடுக்க முன் வருவார்கள்.

No comments:

Post a Comment