Friday, January 8, 2010

விஷ்ணு புராணம் - 21

01_21. ப்ரஹ்லாதனுக்கு சிபி, பாஷ்கலன், விரோசனன் என்று மூன்று புத்ரர்கள். விரோசனன் மகனே பலிச் சக்ரவர்த்தி. இவனுக்கு பாணாஸுரன் முதலான நூறு பிள்ளைகள் பிறந்தனர்.
ஹிரண்யாக்ஷனுக்கு ஜர்ஜரன், சகுனி, பூதஸந்தாபனன், மஹாநாபன், மஹாபாஹு, காலதாபன் என்று ஆறு பிள்ளைகள்.
த்விமூர்த்தா, சம்பரன், அயோமுகன், சங்குசிரஸ், கபிலன்,சங்கரன், ஏகவக்த்ரன், மஹாபாஹு, தாரகன், ஸ்வர்பானு, வ்ருஷபர்வா, புலோமா, விப்ரசித்தி, உபதானவன், வைச்வாநரன் முதலான நூறு பேர்கள் தனுவின் பிள்ளைகள். ஸ்வர்பானுவிற்கு ப்ரபா என்பவளும், வ்ருஷபர்வாவிற்கு சர்மிஷ்டாவும், உபதானவனுக்கு ஹயசிரஸும், வைச்வாநரனுக்கு புலோமா, காலகா என்ற இருவரும் பெண்கள். இந்த புலோமா, காலகா என்பவர்கள் மரீசியின் மனைவிகளாயினர். இவர்களுக்குப் பிறந்த அறுபதினாயிரம் பிள்ளைகள் பௌலோமர் மற்றும் காலகேயர் என்ற அஸுரக்கூட்டத்தினர். ஹிரண்யகசிபுவின் பெண் ஸிம்ஹிகா விப்ரஸித்தி என்ற அஸுரனை மணந்து த்ர்யம்சன், சல்யன், நபன், வாதாபி, நமுசி, இல்வலன், கஸ்ருமன், அந்தகன், நரகன், காலநாபன், ஸ்வர்பானு என்ற ராஹு ஆகிய பிள்ளைகளைப் பெற்றாள். இப்படி தானவர்கள் வம்சம் மேலும் ஆயிரமாயிரமாய் வ்ருத்தியானது. இந்த ப்ரஹ்லாதனின் குலத்திலேயே தவத்தில் சிறந்த நிவாத கவசர்கள் என்ற தைத்யர்கள் தோன்றினர்.

காச்யபரின் மனைவிகளில் ஒருத்தியான தாம்ரைக்கு சுகி, ச்யேனி, பாஸீ, ஸுக்ரீவி, சுசீ, க்ருத்ரகா என்று ஆறு பெண்கள். இதில் சுகீக்கு கோட்டான்களும், அவற்றின் பகையான காக்கைகளும் பிறந்தன. ச்யேனீக்கு பருந்துகளும், பாஸீக்கு செம்போத்துக்களும் க்ருத்ரகாவிற்கு கழுகுகளும், சுசீக்கு நீர்ப் பறவைகளும், ஸுக்ரீவீக்கு குதிரை, ஒட்டகம், கழுதைகளும் பிறந்தன. இன்னொரு மனைவி வினதைக்கு ப்ரஸித்தி பெற்ற அருணன், கருடன் இருவரும் பிறந்தனர். கருடன் பறவைகளில் சிறந்தவன், பகைவரிடம் மிகக் கொடியவன், ஸர்ப்பங்களைப் புஜிப்பவன். ஸுரஸைக்கு பல தலைகளுடன், பறக்கும் சக்தியுடைய ஆயிரம் ஸர்ப்பங்களைப் பெற்றாள். கத்ருவும் இதேபோன்று பல ஸர்ப்பங்களைப் பெற்றாள். இவைகள் வரத்தால் கருடனுக்கு அடிமைகளாக, உணவாக இருந்தன.

க்ரோதவசைக்கு ராக்ஷஸர்களும், ஸர்ப்பங்களும், மாம்ஸ போஜனம் செய்யும் பயங்கரமான நிலம் மற்றும் நீரில் ஸஞ்சரிக்கும் பறவைகளும் பிறந்தன. ஸுரபி பசுக்களையும், எருமைகளையும் பெற்றாள். இராவிற்கு மரம், செடி, கொடி, புல் வகைகளும், கஷாவிற்கு யக்ஷ, ராக்ஷஸர்களும், முனிக்கு அப்ஸரஸ்ஸுகளும் பிறந்தன. இது ஸ்வாரோசிஷ மன்வந்த்ரத்தில் நடந்தது. இந்த வைவஸ்வத மன்வந்த்ரத்தின் தொடக்கத்தில் வருணன் செய்த யாகத்தில் ப்ரஹ்மா ஹோதாவாக இருந்ததால் அவரால் ஸ்ருஷ்டியில் கவனம் செலுத்த முடியவில்லை. எனவே முன் மன்வந்த்ரத்தில் மனதால் படைத்த ஸப்தரிஷிகளையழைத்து தேவ, தானவர்களைப் படைக்குமாறு நியமித்தார்.

திதியின் புத்ரர்கள் தேவர்களால் அழிந்ததில் மிகுந்த வருத்தம் கொண்ட திதி காச்யபரிடம் இந்த்ரனைக் கொல்லும் சக்தியுள்ள பிள்ளை வேண்டும் என்று வரம் பெறுவதற்காக அவருக்குப் பலகாலம் பணிவிடை செய்து அவரை மகிழ்வித்தாள். இதனால் மனம் மகிழ்ந்த காச்யபரும் "அப்படியொரு பிள்ளை பிறக்க விஷ்ணுவை நூறுவருஷ காலம் த்யானித்து, அமைதியுடனும், தூய்மையுடனும் கர்ப்பத்தை சுமக்க வேண்டும். கர்ப்பிணிகளுக்குரிய நியமங்களையும் கடைபிடித்து வரவேண்டும்" என்று அருளுகிறார். அவ்வாறே அவருடன் சேர்ந்து கர்ப்பத்தைக் காத்து வந்தாள் திதி. இந்த விஷயத்தையறிந்த இந்த்ரன் பணிவிடை செய்வது போல் அவளை நெருங்கி அவள் சுத்தம் குறைவாக இருக்கும் சமயத்தில் கருவைக் கலைக்க திட்டம் தீட்டினான்.

நூறு வருடங்கள் முடிய இன்னும் சில நாட்களே இருக்க, ஒரு நாள் அசதியில் கால்களை சுத்தம் செய்து கொள்ளாமலே படுக்கையில் படுத்து உறங்கி விட்டாள் திதி. இத்தகைய தருணத்தையே எதிர்பார்த்திருந்த இந்த்ரன் ஸூக்ஷ்மமாய் அவள் வயிற்றில் புகுந்து, கருவை அழ, அழ நாற்பத்தொன்பது துண்டுகளாக வெட்டி விட்டான். அழாதே (மா ரோதீ:) என்று கூறிக் கொண்டே வெட்டப்பட்ட இந்த கர்ப்பமே மருத்துக்கள் என்று பெயர் பெற்ற தேவர்களாகி தாயின் சொற்படி இந்த்ரனுக்குத் தோழர்களாயின.

No comments:

Post a Comment