03_05. யஜுர் வேதமும் இப்படி வைசம்பாயனரால் இருபத்தேழு பிரிவுகளாக்கப்பட்டு அவர் சிஷ்யர் பலருக்கும் ஓதுவிக்கப்பட்டது. ஒரு சமயம் பல மஹரிஷிகள் ஒன்று கூடி ஸபை ஒன்றுக்கு ஏற்பாடு செய்தனர். அதற்கு எல்லா மஹரிஷிகளும் வரவேண்டும் என்றும், அப்படி வராதவர்களுக்கு ஏழு நாட்களுக்குள் ப்ரஹ்மஹத்தி தோஷம் ஏற்படும் என்றும் முன்னதாக விதித்தனர். அந்த நாள் வந்த போது வைசம்பாயனர் மட்டும் வரவில்லை. தன் ஸஹோதரியின் ஆண் குழந்தை வழியில் இருப்பதை அறியாமல் அதை இடறிவிட அதுவும் உடனே இறந்து விட்டது. வைசம்பாயனருக்கும் இதைக் காரணமாகக் கொண்டு ப்ரஹ்மஹத்தி பற்றிக் கொண்டது.
அவர் உடனே தன் சிஷ்யர்களை அழைத்து நான் தெரியாமல் தான் இதைச் செய்து விட்டேன். எனினும் தெரிந்தே செய்தால் வரும் ப்ரஹ்மஹத்யா தோஷத்திற்கான ப்ராயச்சித்தத்தை அறிந்து, அதை உடனே அனுஷ்டித்து என்னைக் காப்பாற்றுங்கள் என்றார். ப்ரஹ்மராதனின் புத்ரர் யாக்ஞவல்க்யர் என்பவரும் வைசம்பாயனரின் ஒரு சிஷ்யர். தர்மங்களனைத்தையுமறிந்தவர். குரு சிஷ்ரூஷையில் பற்றுள்ளவர். அவர் ஆர்வத்தால் "இதற்கு எதற்கு அனைத்து சிஷ்யர்களும். நான் ஒருவனே போதுமே இதைத் தாங்கவும், போக்கவும். அவர்களுக்கு இதைத் தாங்க ஆற்றலும், தவமும் போதாதே" என்று கேட்டுக் கொண்டார். குருவின் மேலுள்ள பக்தி மேலீட்டால் இப்படிக் கூறிய யாக்ஞவல்க்யரை வைசம்பாயனர் கோபித்துக் கொண்டார்.
"நீ மற்ற ப்ராஹ்மணர்களை அல்ப சக்தியுள்ளவர்கள் என்றாய். இப்படி ப்ராஹ்மணர்களை அவமதிக்கும் சிஷ்யன் எனக்கு வேண்டாம். நீ என்னிடமிருந்து கற்றவை அனைத்தையும் உடனே கக்கிவிடு" என்று கூறி விட்டார். யாக்ஞவல்க்யர் வருத்தமடைந்தாலும் விஷயத்தைப் புரிந்து கொள்ளாமல், கோபித்துக் கொள்ளும் இந்த ஆசார்யரும் இனி நமக்கு வேண்டாம் என்று தன் வாயில் விரல்களை விட்டு யஜுர் வேதத்தை ரூபங்களாக, ரத்தத்துடன் வாந்தி எடுத்து விட்டுப் போய் விட்டார். மற்ற சிஷ்யர்கள் ரத்தத்துடன் இருந்ததால் அந்த பாகங்களை தித்திரி எனும் பறவை உருவங்கொண்டு அவற்றை உண்டனர். தைத்திரீயர்கள் என்று பெயரும் பெற்றனர். அந்த பாகமும் தைத்திரீயம் என்று பெயர் பெற்றது.
வேறு சில சிஷ்யர்கள் வைசம்பாயனரின் ப்ரஹ்மஹத்யா தோஷத்தைப் போக்குவதற்காக ஆத்வர்யவம் (அத்வர்யுவின் வேலை) என்ற வ்ரதத்தை அனுஷ்டித்தனர். அவர்களுக்கு சரணாத்வர்யு என்ற பெயர் உண்டாயிற்று. வேதங்களைக் கக்கிவிட்ட யாக்ஞவல்க்யர் மீண்டும் யஜுர் வேதங்களைக் கற்க விரும்பி ஸூர்யனை உபாஸித்தார். "பகவானே! நீரே மோக்ஷத்திற்கு வழியாயிருக்கிறீர். அளவற்ற தேஜஸ்வியும் நீரே. வேதங்களின் ஸ்வரூபமாயும், ப்ரகாசத்துடனும் இருக்கிறீர். வெயிலைக் கொடுக்கிறீர். சந்த்ரனைப் போஷிக்கிறீர். ஜகத்துக்குக் காரணமாயிருக்கிறீர். கலை, காஷ்டங்களும் உன்னைக் கொண்டே உலகத்தார் கணிக்கிறார்கள். நீரே த்யானிக்கத்தக்கவர். ப்ரபஞ்ச ஸ்வரூபியும் நீரே, பரப்ரஹ்ம ஸ்வரூபியும் நீரே, ப்ரணவ ஸ்வரூபியும் நீரே.
நீரே சந்த்ரனையும் வளர்த்து தேவதைகளையும், பித்ருக்களையும் ரக்ஷித்து வருகிறீர். த்ருப்தி ஸ்வரூபமாயிருப்பவரும் நீரே. பனி, வெப்பம், மழைகளை உண்டுபண்ணுபவரும் நீரே. முக்கால ஸ்வரூபியும் நீரே. இருளைப் போக்கி உலகிற்குப் பதியாய் இருப்பவரும் நீரே. உன் உதயமின்றி உலகில் ஒருவரும் ஸத்கர்மங்களை அனுஷ்டிக்கத் தகுதியடைய மாட்டான். தண்ணீரும் உன்னாலேயே சுத்தியடைகிறது. ஆதி தேவனும் நீரே. உமது தேரின் ஒளியே உலகிற்கு இதமாக இருக்கிறது. ஞான ரூபமாகவும், அம்ருத ரூபமாகவுமிருந்து உன் குதிரைகள் உமது தேரைத் தாங்குகின்றன. உலகிற்குக் கண் நீர்" என்று பலவாறுத் துதித்து வணங்கினார். குதிரை வடிவில் ஸூர்யனும் அவருக்குக் காட்சியளித்து வேண்டும் வரத்தை அளிப்பதாக மகிழ்வுடன் கூறினார். யாக்ஞவல்க்யர் என் முந்தைய குருவான வைசம்பாயனர் அறியாத யஜுர் வேதங்களை எனக்கு அருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். வ்யாஸர் வைசம்பாயனருக்கு உபதேஸிக்காத அயாதயாமம் என்ற யஜுஸ்ஸுக்களை ஸூர்யனும் யாக்ஞவல்க்யருக்கு உபதேசித்தார். குதிரையின் (வாஜி) உருவிலிருந்து உபதேஸித்ததால் இதை அத்யயனம் செய்பவர் வாஜிகள் என்றழைக்கப்பட்டனர். இந்த வாஜஸனேய சாகையை காண்வ சாகை முதலான பதினைந்து பிரிவுகளாகப் பிரித்து சிஷ்யர்களுக்குக் கொடுத்தார்.
Tuesday, January 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment