Thursday, January 21, 2010

விஷ்ணு புராணம் - 46

03_08. "மஹரிஷி! அந்த ஜகன்னாதனை ஆராதிக்கும் முறையையும், அதனால் பெறும் பலன்களையும் கூறியருள வேண்டும்" என்கிறார் மைத்ரேயர். "இதே கேள்வியை முன்னொரு ஸமயம் ப்ருகு மஹரிஷியின் புத்ரரான ஔர்வ மஹரிஷியிடம் ஸகர ராஜன் கேட்டபோது அவர் கூறிய அனைத்து சாஸ்த்ரங்களையும் நான் உனக்குக் கூறுகிறேன்" என்று பதிலுரைக்கிறார் பராசரர். இவ்வுலக ஸுகங்களையும், ஸ்வர்கத்தின் ஸுகங்களையும், ப்ரஹ்ம பதவியையும், மோக்ஷத்தையும் அளிக்கவல்லது பகவானின் ஆராதனை என்று ஆரம்பிக்கிறார் ஔர்வர். ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்ய, வேளாள என்று நான்கு வர்ணங்கள். ப்ரஹ்மசர்ய, கார்ஹஸ்த்ய, வானப்ரஸ்த, ஸன்யாஸ என்று ஆச்ரமங்கள் நான்கு. வர்ணங்களுக்கும், ஆச்ரமங்களுக்கும் தர்மங்கள் வேறுபடும். அந்தந்த தர்மங்களை அனுஷ்டிப்பதே பரமனுக்கு மிக உகந்தது. அதுவே அவனுக்கு மிகுந்த ஆராதனையுமாகும்.

யாகங்களை அனுஷ்டிப்பதும் விஷ்ணுவின் ஆராதனையே. பல தேவதைகளைக் குறித்து அவைகளில் மந்த்ரங்களைக் கூறினாலும், அவையனைத்தும் அவர்களுக்கும் அந்தராத்மாவாக இருக்கும் விஷ்ணுவையே குறிக்கும். எனவெ எந்த தேவதையின் மந்த்ரங்களும் விஷ்ணுவின் மந்த்ரமேயாகும். அதே போல மற்ற ஜீவன்களைத் துன்புறுத்தும்போதும் அவனே துன்புறுத்தப்படுகிறான். எவரையும் நேரிலோ(அபவாதம்), மறைவிலோ (பைசுன்யம்) நிந்திக்கவும் கூடாது. பொய் சொல்லவோ, பிறர் மனம் வருந்தும் வகையிலோ பேசக்கூடாது. பிறர் மனைவி, பொருள்களில் பற்றுதல் வைக்கக் கூடாது. ப்ராணிகளைக் கொல்லவோ, அடிக்கவோ கூடாது. தேவர், ப்ராஹ்மணர், ஆசார்யர்களிடம் பணிவிடை செய்வதில் விருப்பத்தோடு இருக்கவேண்டும். நம்முயிர் போல அனைத்துயிர்களையும் நினைக்க வேண்டும்.

அந்தணர்கள் முடிந்த வரை தானங்களை அவச்யம் செய்ய வேண்டும். யாகங்களால் தேவதைகளை ஆராதிக்க வேண்டும். அதற்காக வேதாத்யாயனம் செய்ய வேண்டும். தினமும் ஸ்னான, தர்பணங்களை குறைவின்றி செய்ய வேண்டும். அக்னிஹோத்ரம், ஔபாசனங்களைக் காத்துவர வேண்டும். நல்வழியில் பொருளீட்டியவர்களிடமிருந்து ப்ரதிக்ரஹம் பெற வேண்டும். எல்லா ப்ராணிகளுக்கும் இதத்தையே செய்ய வேண்டும். நட்பு கொள்ள வேண்டும். அடுத்தவர் பொருளை துச்சமாக மதிக்க வேண்டும். ருது காலத்தில் பத்னியோடு சேர வேண்டும்.

க்ஷத்ரியன் தானம், யாகம், அத்யயனம் மூன்றையும் அவச்யம் செய்யவேண்டும். ப்ராஹ்மணர்களுக்கு தானமும், பல யாகங்களும் செய்ய வேண்டும். போர் செய்வதும், பூமியைக் காப்பதும் இவர்களுக்கு முக்யம். நாட்டில் நடக்கும் யக்ஞம் முதலான அனைத்து கார்யங்களிலும் இவனுக்கு ஆறில் ஒரு பங்கு உண்டாகையால் இவன் நிச்சயம் மக்களைக் காக்க வேண்டும். துஷ்டர்களைத் தண்டிக்க வேண்டும், தயவு காட்டி விடக் கூடாது. நல்லவர்களைக் காக்க வேண்டும். வர்ணாச்ரமம் இப்படி அரசனால் காப்பாற்றப்படுமானால் அவன் விரும்பிய நல்ல லோகங்களை அடைவான்.

பசு பராமரிப்பு, தானம், யாகம், அத்யயனம், நித்ய, நைமித்திக கர்மாக்கள், வர்த்தம் செய்தல், பயிரிடல் இவைகள் வைச்யனுக்கு ஜீவனம். இம்மூவர்க்கும் பணிவிடை செய்து, அவர்களுக்கு அடிபணிந்திருப்பதே சூத்ரனின் வேலையாகும். அப்படிச் சம்பாதித்த பொருளைக் கொண்டு அவன் குடும்ப பரிபாலனம் செய்யவேண்டும். எதுவும் அப்படிக் கிடைக்காத போது பல சரக்கு வ்யாபாரம், தச்சு வேலை முதலியவைகளைச் செய்து குடும்பத்தைக் காக்க வேண்டும். தானமும் சக்திக்க்கேற்றபடி செய்ய வேண்டும். நமஸ்கார மந்த்ரங்களைக் கொண்டு வைச்வதேவம், பித்ரு கார்யங்கள் முதலியவைகளைச் செய்யலாம். வேத, வேதாங்களை ஓதக்கூடாது.

ந்யாயமான முறையில் பொருளீட்டல், ருது காலத்தில் மனைவியோடு சேர்தல், உயிர்களிடத்து அன்பு, பொறுமை, தற்பெருமையின்மை, இதமான வார்த்தை கூறல், பிறர் பொருள் விரும்பாமை, மலர் சூடுதம் முதலான மங்கலச் செயல்கள், உடல் வாடாமல் வேலை செய்தல், அன்புடைமை, பேராசையின்மை, கருமித்தனமின்மை, குறை கூறாமை, சோம்பலின்மை இவை யாவர்க்கும் பொதுவான தர்மங்கள். இவையாவுமே ஸுபிக்ஷமான காலத்தில் அனுஷ்டிக்க வேண்டியவை. ஆபத்கால தர்மங்களை இனி கூறுகிறேன். சக்தியில்லையெனில் ஆபத்காலத்தில் ப்ராஹ்மணன் க்ஷத்ரியனுடையதையும், க்ஷத்ரியன் வைச்யனுடையதையும், வைச்யன் சூத்ரனுடையதையும் மேற்கொள்ளலாம். சூத்ரனுக்கு ஆபத்தர்மம் முன்னமே கூறப்பட்டது. எக்காரணம் கொண்டும் ப்ராஹ்மண, க்ஷத்ரியர்கள் சூத்ர தர்மத்தைக் கொள்ளக்கூடாது. கர்மங்களை கலக்கக் கூடாது. சக்தியுள்ளவர்கள் தம் கர்மாக்களைத் தவிர்த்தலும், சக்தியற்றவர்கள் மேல் கர்மாக்களையனுஷ்டித்தலுமே கலக்கம் (ஸாங்கர்யம்).

No comments:

Post a Comment