02_05. இப்போது கீழுலகங்களைப் பற்றிய விரிவு. பூமிக்குக் கீழே அதல, விதல, நிதல, கபஸ்திமத், மஹாதல, ஸுதல, பாதாள லோகங்கள் ஒவ்வொன்றும் ஆயிரம் யோஜனை கன அளவுடனும், ஒவ்வொன்றுக்கும் இடைவெளி ஒன்பதாயிரம் யோஜனையுடனும் ஆக மொத்தம் எழுபதினாயிரம் யோஜனையுடன் உள்ளது. வெண்மை, சிவப்பு, கருமை, மஞ்சள் நிற மலைகள் பல இங்குள்ளன. பூமி பொன் மயமாக உள்ளது. எங்கும் பல மாடிகளைக் கொண்ட மாளிகைகளே இங்குள்ளன.
ஒரு சமயம் இந்த லோகங்களுக்குச் சென்று வந்த நாரதர் தேவ சபையில் "பாதாள லோகத்தில் நாகர்கள் உயர்ந்த அணிகலன்களை அணிந்துள்ளனர். அவைகளில் பதிக்கப்பட்டுள்ள ரத்னங்கள் சுத்தமானவை, மிகுந்த ப்ரகாசமுடையவை. அழகிய தைத்ய, தானவ கன்னிகைகள் ஸஞ்சரித்துக் கொண்டிருக்கின்றனர். நிகரில்லாத உலகம் இது. விரக்தியடைந்தவர்களும் விரும்புவார்கள் இந்த உலகத்தை. பூமியின் சந்துகள் வழியாக இந்த லோகத்தில் நுழையும் ஸூர்யக் கதிர்கள் வெயிலைத் தராமல் வெளிச்சத்தை மட்டுமே தருகின்றன. நிலவும் குளிர்ச்சியைத் தராமல் வெளிச்சத்தை மட்டுமே தருகிறது. பல வகை உணவுகளை உண்டு, எப்போதும் ஸந்தோஷமாக இருக்கும் இந்த உலகத்தார் காலம் கழிவதைக் கூட அறிவதில்லை. பல நீர் நிலைகளும், பறவைகளின் இனிய ஸப்தங்களும், பலவகை இசைக் கருவிகளின் இனிய இசையும், ஆடை, ஆபரணங்களும், வாசனை த்ரவ்யங்களும், ஆடலும், பாடலும் எப்போதும் இங்கு நிறைந்திருக்கிறது" என்று வர்ணித்திருக்கிறார்.
இந்த லோகங்களுக்கு முப்பதினாயிரம் யோஜனைகளுக்குக் கீழே ஆதிசேஷன் அனந்தன் என்று அழைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். எவரும் இவரை வழிபட்டு வருகின்றனர். தன் ஆயிரம் தலைகளில் ஆபரணம் போன்ற ஸ்வஸ்திக ரேகையுடன் இருக்கும் இவர் அஸுரர்களை தன் பார்வையினாலேயே வீர்யமிழக்கச் செய்து வருகிறார். பல மணிகளும், ரத்னங்களும் ஜொலிக்கும் க்ரீடங்களையும், அணிகலன்களையும், நீலப் பட்டாடையும் தரித்திருக்கிறார். நீரருவி போன்ற முத்து மாலைகளையும், கலப்பை, உலக்கைகளைத் தாங்கியிருக்கும் இவரை இரு புறத்திலும், காந்தி மற்றும் வாருணீ தேவிகளால் துதிக்கப்படுகிறார். இவரருளாளும், விஷத்தாலுமே ருத்ரன் ப்ரளயம் செய்கிறார். இவர் குணங்களை தேவரும் அறியவில்லை.
இவர் கொட்டாவி விடும்போது பூமி நடுங்குகிறது. எவரும் இவரின் அந்தத்தை அறியாததால் அனந்தன் எனப்படுகிறார். நாகக் கன்னிகள் இவர் உடம்பில் பூசிய சந்தனம் இவரின் மூச்சுக் காற்றால் கிளம்பி வாஸனையை பரப்புகின்றன. கர்க மஹரிஷி இவரைத் துதித்தே க்ரஹங்கள், நக்ஷத்ரங்கள், சகுனங்கள் இவைகளின் பலாபலன்களை உணர்ந்தார். இப்படிப் பற்பல உலகங்களைத் தாங்கி நிற்கும் இந்த பூமியைத் தாங்கி நிற்கிறார் நாகராஜர்.
No comments:
Post a Comment