04_04. ஸகரனின் மனைவிகளாக சாச்யபரின் பெண் ஸுமதியும், விதர்ப்ப ராஜனின் பெண் கேசினீயும் அமைந்தனர். புத்ர பாக்யத்திற்காக இவ்விருவரும் ஔர்வரைப் பூஜித்தனர். அவர்களிடம் கருணை கொண்ட ஔர்வர் ஒருவருக்கு வம்ச வ்ருத்தி செய்யும் ஒருவனையும், மற்றொருவருக்கு அதற்கு உதவாத அறுபதினாயிரம் பிள்ளைகளையும் அனுக்ரஹிப்பதாக அருளினார். விதர்ப்பராஜனின் மகள் கேசினீ குலம் விளங்கும் ஒரு பிள்ளையையும், ஸுமதி அறுபதினாயிரம் பிள்ளைகளையும் இசைந்து பெற்றுக் கொண்டனர். கேசினீக்கு அஸமஞ்ஜஸனும், அவனுக்கு அம்சுமானும் பிறந்தனர்.
அஸமஞ்ஜஸனும், ஸுமதிக்குப் பிறந்த அறுபதினாயிரம் புதல்வர்களும் பிறந்ததிலிருந்தே தீய வழிகளில் சென்று கொண்டிருந்தனர். இளமைத் திமிர் அடங்கியதும் சரியாகிவிடுவார்கள் என்ற ஸகர மன்னனின் எண்ணம் பலிக்கவில்லை. யாகங்களையும், பல தர்ம கார்யங்களையும் அழித்துக் கொண்டிருந்தனர் அஸமஞ்ஜஸனும், அறுபதினாயிரம் பேரும். ஸகரன் வேறு வழியின்றி அஸமஞ்ஜஸனை நாடி கடத்தி விட்டான். அறுபதினாயிரம் பேர்களின் அட்டூழியங்களைப் பொறுக்காத தேவர்கள் மஹாவிஷ்ணுவின் அம்சமாய் அப்போது அவதரித்திருந்த கபில மஹரிஷியிடம் சென்று முறையிட்டனர். இவர்களின் துன்பங்களிலிருந்து உலகைக் காத்தருள வேண்டினர். அவரும் இன்னும் சில நாட்களிலேயே அவர்கள் அழிவார்கள் என்று ஆறுதல் கூறி அனுப்பினார்.
இந்த ஸமயத்தில் ஸகரன் அச்வமேதம் செய்ய ஆரம்பித்தான். யாகக் குதிரையைக் காக்கும் பொறுப்பைத் தன் அறுபதினாயிரம் புத்ரர்களிடம் விடுத்து யாகத்தை ஆரம்பித்தான். அவர்கள் பாதுகாப்புடன் உலகெங்கும் சுற்றிக் கொண்டிருந்த அந்தக் குதிரையை ஒருவன் ரஹஸியமாக பாதாள லோகத்திற்கு ஓட்டிச் சென்று விடுகிறான். பயமும், பெரும் கோபமும், பரபரப்பும் அடைந்த ஸகர புத்ரர்கள் குதிரையின் குளம்படியை அனுஸரித்து பாதாள லோகத்தை நோக்கி பூமியைத் தோண்டிக் கொண்டுச் சென்றனர். பாதாள லோகத்தையும் அடைந்தனர். அங்கே தவம் செய்து கொண்டிருந்த கபில மஹரிஷியையும், அவருக்கருகில் யாகக் குதிரையையும் கண்டனர். முனிவரையே குற்றவாளியாகத் தீர்மானித்து யாகத்தைக் கெடுத்த அவரைக் கொன்று விடுவதாக பெரும் கூச்சலுடன் அவரிடம் ஓடினர். தன் பார்வையாலேயே அறுபதினாயிரம் ஸகர புத்ரர்களையும் கொளுத்திச் சாம்பலாக்கி விட்டார் கபில மஹரிஷி.
பிள்ளைகளையும், யாகக் குதிரையையும் காணாத ஸகரன் தன் பேரனான அம்சுமானை அழைத்து அவர்களைத் தேடி அழைத்து வரச் சொன்னான். தந்தைமார்கள் தோண்டிய வழியே அவர்களைத் தேடிப் பாதாளத்தை அடைந்த அம்சுமான் அங்கு ப்ரகாசமாயிருக்கும் கபில மஹரிஷியைக் காண்கிறான். அவரைப் பலவாறு போற்றிப் புகழ்ந்து, நமஸ்கரிக்கிறான். இவனின் உபஸரிப்பால் பெரிதும் உவந்த மஹரிஷி "குழந்தாய்! யாகக் குதிரையை அழைத்துச் செல். தாத்தாவிடம் சேர்த்து விடு. உன் பௌத்ரன் பகீரதன் ஸ்வர்க லோகத்திலிருக்கும் கங்கையைப் பூலோகம் கொண்டு வரப் போகிறான். பெரும் பேறு பெற்ற நீயும் என்னிடம் வரத்தைப் பெற்றுக் கொள்" என்றார்.
மஹரிஷியின் வார்த்தைகளால் மகிழ்ந்த அம்சுமான் மஹரிஷியின் கோபத்தால் இறந்து போன தன் பித்ருக்களுக்கு ஸ்வர்கத்தை வேண்டுகிறான். "நான் முன்னமே கூறிய படி உன் பேரனால் பூலோகத்திற்கு வரும் கங்கையின் தீர்த்தம் இந்த சாம்பல் குவியலில் பட்டதும் இந்த ஆத்மாக்கள் ஸ்வர்கத்தை அடையும். இந்த கங்கை பகவானின் கால் கட்டை விரலிலிருந்து தோன்றியது. அளவிட முடியாத பெருமை பெற்றது. பாவங்களைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் ஸ்னானம் செய்யாவிட்டாலும், இறந்தவனுடைய சரீரத்தைச் சேர்ந்த சாம்பல், எலும்பு, தோல், நரம்பு, மயிர் என ஏதாவதொன்று இதில் நனைந்தாலும் அவன் பதிதனாக இருந்தாலும் அவனுக்கு ஸ்வர்கத்தைத் தரும் புனித கங்கை.
அம்சுமான் கொண்டு வந்த குதிரையைக் கொண்டு யாகத்தையும் முடித்த ஸகரன், அவன் பிள்ளைகள் பாதாளம் செல்வதற்காகத் தோண்டிய குழியில் நீர் நிரம்பி உண்டான ஸமுத்ரத்தைத் தன் பிள்ளையாக எண்ணினான் (ஸாகரம்). அம்சுமானுக்குத் திலீபனும், அவனுக்குத் தான் பகீரதனும் பிறந்தனர். அவன் பலகாலம் கடும் தவம் புரிந்து ஆகாச கங்கையையும் பூமிக்குக் கொண்டு வந்தான். அதனால் கங்கையும் பாகீரதி எனப்பட்டாள். பகீரதனுக்கு ஸுஹோத்ரனும், அவனுக்கு நாபாகனும், அவனுக்கு அம்பரீஷனும், அவனுக்கு ஸிந்துத்வீபனும், அவனுக்கு அயுதாயுவும், அவனுக்கு ருதுபர்ணனும் பிறந்தனர். இந்த ருதுபர்ணனே நள மஹராஜன் புஷ்கரனிடம் சொக்கட்டான் ஆடி தன் போகங்களை இழந்து தவித்த போது, ஆட்டத்தின் மர்மங்களை அவனுக்குச் சொல்லிக் கொடுத்து மீண்டும் புஷ்கரனிடமிருந்து ராஜ்ய போகங்களைப் பெறுவதற்கு உதவியவன்.
ருதுபர்ணனுக்கு ஸர்வகாமனும், அவனுக்கு ஸுதாஸனும், அவனுக்கு மித்ரஸஹனும் (ஸௌதாஸன்) பிறந்தனர். இந்த ஸௌதாஸன் ஒரு முறை வேட்டைக்குச் சென்றிருந்த போது மற்ற அனைத்து விலங்குகளையும் துன்புறுத்திக் கொண்டிருந்த இரு புலிகளைக் கண்டான். ஒன்றை வேட்டையில் கொன்றான். அது இறக்கும் போது பயங்கரமான ராக்ஷஸ உருவத்துடன் இறந்தது. மற்றதும் "இதற்கு உன்னை தகுந்த ஸமயத்தில் பழி வாங்குவேன்" என்று கூறி மறைந்து விட்டது. ஸமயத்தை எதிர்பார்த்திருந்த அது ஒரு ஸமயம் ஸௌதாஸன் யாகம் செய்ய ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கும் போது, குலகுரு வஸிஷ்டரின் உருவில் வந்து யாக முடிவில் நர மாம்ஸத்தைத் தனக்குத் தரவேண்டும் என்று கூறிவிட்டுச் சென்றது.
அதுவே சமையல்காரனாக உருவம் தாங்கி நர மாம்ஸத்தைப் பக்வம் செய்து அரசனிடம் பணிவுடன் கொடுத்தது. உண்மை அறியாத ஸௌதாஸனும் அதைத் தங்கத் தாம்பாளத்தில் வைத்து குருவிற்குச் சமர்பித்தான். உண்மையான வஸிஷ்டர் அதைக் கண்டு மாம்ஸம், அதுவும் நர மாம்ஸம் என்று உணர்ந்து பெரும் கோபத்துடன், நீயே இதை விரும்பிச் சாப்பிடுபவனாக ஆகக்கடவது என்று அரசனை சபித்து விட்டார். குழப்பமும், பதட்டமும் அடைந்த மன்னன் அவரிடமே நடந்த விஷயங்களைக் கூறி "நீங்களே ஏற்பாடு செய்யச் சொல்லி விட்டு, இப்போது என்னை சபித்து விட்டீர்களே" என்று வருந்தினான்.
த்யானத்தால் விஷயங்களை முழுதும் தெரிந்து கொண்ட வஸிஷ்டரும் ராக்ஷஸன் செய்த தவறுக்கு ஒன்றும் அறியாத இவனை சபித்து விட்டோமே என்று வருந்தினார். மீண்டும் அவனிடமே இந்த சாபம் பனிரெண்டு வருஷங்கள் உன்னிடம் இருந்து பின் விலகும் என்று அருளினார். தவறே செய்யாமல் நாம் ஏன் பனிரெண்டு வருஷங்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும். ஆராயாமல் சபித்த குருவை நாமும் சபித்தால் என்ன என்று கோபத்துடன் சபிப்பதற்காக ஜலத்தையும் எடுத்து ஜபித்தான். மனைவி மதயந்தீ கணவனின் எண்ணத்தை அறிந்து கொண்டாள். பூஜிக்கத்தக்க குலகுருவைச் சபிப்பதிலிருந்து தன் கணவனைத் தடுத்து, அவன் செய்ய நினைப்பது தகாத செயல். பாபச்செயல் என்று அறிவுரை கூறினாள்.
அவளின் உபதேஸத்தால் தான் செய்ய இருந்த தவறை உணர்ந்த ஸௌதாஸன் ஜபித்த நீரை எங்கு விட்டாலும் அங்குள்ள வளமை அழியும் என்று தன் காலிலேயே விட்டுக் கொண்டான். மந்த்ரதீர்த்தம் பட்ட அவனது கால் உடனே வெளுப்பும், கறுப்பும் கலந்த ஒரு விசித்ர வர்ணத்தில் (கல்மாஷம்) மாறிவிட்டது. இதனால் அன்றிலிருந்து அவன் கல்மாஷபாதன் என்று அழைக்கப்பட்டான். ராக்ஷஸனாக மாறிய கல்மாஷபாதன் (என்ற ஸௌதாஸன் என்ற மித்ரஸஹன்) காடுகளில் அலைந்து திரிந்து மனிதர்களைப் பிடித்துத் தின்று கொண்டிருந்தான். இப்படி ஒரு ஸமயம் காட்டில் தன் பத்னியுடன் சேர்ந்திருந்த ஒரு முனிவரைப் பிடித்துக் கொண்டான். முனிபத்னி அவனிடம் பலவாறு கெஞ்சினாள்.
அவனது பூர்வங்களையும், சிறப்புகளையும் எடுத்துக் கூறினாள். இக்ஷ்வாஹு குல திலகமான மித்ரஸஹனல்லவா நீ. உனக்குத் தெரியாத தர்மங்கள் உண்டோ. ஸ்த்ரீ தர்மத்திலிருக்கும் நான் ஸுகத்தை அனுபவிக்காமலிருக்கும் போது என் பர்த்தாவைக் கொல்வது பாபமல்லவா. எனவே அவரை விட்டுவிடு எனப் பலவாறு கெஞ்சினாள். புலிக்கு தர்மோபதேசம் செய்தால் அதற்குப் புரியவா போகிறது. முனிவரை அடித்துக் கொன்றான். சாப்பிட்டான். சொல்வதைக் கேட்காத, புரிந்து கொள்ளாத அவனிடம் கடுங்கோபம் கொண்ட முனிபத்னி நீயும் இதேபோல் காம ஸுகத்திற்கு முயலும் போது இறந்து படுவாய் என்று சபித்து விடுகிறாள். இரண்டாவது சாபம். பனிரெண்டு வருடங்கள் கழித்தும், இந்த முனிபத்னியின் சாபத்தை நினைவில் கொண்டு அவனும் பலகாலம் இல்லற சுகம் இல்லாமலேயே கவனமாக இருந்தான்.
ஸந்ததியே இல்லாமல் தன்னுடன் வம்சம் முடிவதால் வருந்திய கல்மாஷபாதனும், மனைவி மதயந்தீயும் புத்ர ப்ராப்திக்காக வஸிஷ்டரை வேண்டிக்கொண்டனர். அவருடைய அனுக்ரஹத்தால் மதயந்தீ கர்ப்பவதி ஆனாள். ஆனால் ஏழு வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. பொறுமையிழந்த அரசி கல்லினால் வயிற்றில் இடித்துக் கொண்டாள். ஆண்குழந்தை ஒன்று அப்போது பிறந்தது. அச்மகன் (அச்மா=கல்) என்று பெயர் வைத்தனர் இந்தக் குழந்தைக்கு. இவனுக்கு மூலகன் என்பவன் பிறந்தான். இவன் காலத்தில் தான் க்ஷத்ரியர்களைப் பூண்டோடு அழித்துக் கொண்டிருந்தார் பரசுராமர். இவனையும் கொல்ல வந்தபோது பல பெண்கள் ஆடையின்றி இவனை சூழ்ந்து மறைத்துக் கொண்டனர். இதனால் இவன் உயிர் தப்பினான். பெண்கள் இவனுக்குக் கவசமாய் இருந்து இவனுக்கு நாரீகவசன் என்ற பெயர் உண்டாயிற்று.
இந்த மூலகன் என்ற நாரீகவசனுக்கு தசரதனும், அவனுக்கு இலிபிலி என்பவனும், அவனுக்கு விச்வஸஹனும், அவனுக்கு கட்வாங்கனும் பிறந்தனர். கட்வாங்கன் தேவர்களுக்குத் துணையாயிருந்து அஸுரர்களை வெல்ல உதவினான். அதற்கு ப்ரதிபலனாக அவனை ஸ்வர்கத்திற்கு அழைத்துச் சென்று பல போகங்களை அவன் அனுபவிக்கச் செய்து, அதன் பின் வேண்டிய வரத்தைப் பெறுமாறு கூறுகின்றனர். புத்திசாலியான கட்வாங்கன் முதலில் தனது மீதமிருக்கும் ஆயுசைக் கூறுமாறும், அதற்குத் தக்கவாறு வரங்களைக் கேட்பதாகவும் கூறுகிறான். வேறு வழியின்றி தேவர்களும் அவனது ஆயுசைக் கணக்கிட்டு "இன்னும் ஒரு முஹூர்த்தமே உள்ளது உன் ஆயுள்" என்ற செய்தியைக் கூறுகின்றனர். (ஒரு முஹூர்த்தத்துல என்னத்த அனுபவிக்கறது, அவன் புத்திசாலிதான்) இதைக் கேட்டவுடன் விமானம் மூலம் உடனேயே பூலோகம் வந்து சேர்ந்தான் கட்வாங்கன்.
"ப்ராஹ்மணர்களுடன் இருப்பதை விட பெரிதொன்றுமில்லை. நான் ஒரு பொழுதும் ஸ்வதர்மங்களை விட்டதில்லை. அனைத்து ஸ்தாவர, ஜங்கம ஜீவ ராசிகளிலும் பரமனைத் தவிர வேறெதையும் நான் கண்டதில்லை. இவையெல்லாம் உண்மையானால் மஹரிஷிகள் உபாஸிக்கின்ற பெருமானையே நான் அடைவேனாக" என்று விஷ்ணுவினிடமே தன் ஆத்மாவை அர்ப்பணம் செய்து, அந்த ஒரு முஹூர்த்த காலத்திலேயே மோக்ஷத்தையும் அடைந்தான் கட்வாங்கன். இந்த கட்வாங்கனுக்குத் தீர்க்கபாஹுவும், அவனுக்கு ரகுவும், அவனுக்கு அஜனும், அவனுக்கு தசரதனும் பிறந்தனர்.
இந்த தசரதனுக்குத் தான் தன் அம்சங்களுடன் பகவான் ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்னர்களாகப் பிறந்தார். விச்வாமித்ரரின் யாகம் காக்க இளமையிலேயே கானகம் சென்று, தாடகையைக் கொன்று, மாரீசனை ஸமுத்ரத்தில் தள்ளி, ஸுபாஹு முதலான ராக்ஷஸர்களை அழித்தான். தன் பாதத்தால் அஹல்யைக்கு சாப விமோசனம் தந்து, விச்வாமித்ரரின் யாகம் காத்த ராமன் அவருடனேயே மிதிலை சென்று ஜனகரின் சிவதனுசை ஒடித்து, ஜனகருக்கு யாக சாலைக்காக பூமியை உழுதபோது கிடைத்த ஸீதை என்ற அயோநிஜையை பத்னியாக்கிக் கொண்டான். அயோத்தி செல்லும் வழியில் க்ஷத்ரியர்களை அழிப்பவரும், ஹைஹய குலத்தை ஒழித்தவருமான பரசுராமரின் வீர்யத்தை அடக்கி, அதன் பின் தந்தை சொல்படி ராஜ்யத்தைத் துறந்துத் தம்பியோடும், மனைவியோடும் கானகம் புகுந்தான்.
கானகத்தில் கர, தூஷணர்களைக் கொன்று, பின் ஸீதையின் பிரிவால் வருந்தி அலைந்து கொண்டிருந்த போது, வழியில் கபந்தனைக் கொன்று, ஸுக்ரீவனைத் தோழனாகக் கொண்டு, வாலியையும் கொன்றான். அதன் பின் அனுமன் மூலம் ஸீதை இருக்குமிடம் அறிந்து, கடலில் அணை கட்டி ராவணாதி அரக்கர் குலத்தை அழித்து, அக்னி ப்ரவேசத்தினால் ஸீதையைப் புனிதையாக்கி, தேவர்கள் புகழ்ந்த ஸீதையுடன் மீண்டும் அயோத்தி திரும்பினான். இப்படி ராமாயணத்தைச் சுருக்கிச் சொல்லி விட்டேனே என்று நினைக்க வேண்டாம். மைத்ரேயே! உண்மையில் பல நூறு வர்ஷங்கள் வர்ணித்தாலும் அந்த மஹோத்ஸவத்தை முடிக்க முடியாது. எனவே அந்த மங்களமான மஹோத்ஸவத்தைச் சுருங்கக் கூறுகிறேன் கேள்" என்றார் பராசரர்.
லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன் ஆகிய தம்பிகளுடன், விபீஷணன், ஸுக்ரீவன், அங்கதன், ஜாம்பவான், அனுமான் முதலான துணைவர்களுடம் மலர்ந்த முகத்துடன் குடை, சாமரங்களை ஏந்திக் கொண்டிருக்க, ப்ரஹ்மா, இந்த்ரன், அக்னி, யமன், நிருருதி, வருணன், வாயு, குபேரன், ருத்ரன் என எல்லா தேவர்களும் துதிக்க, வஸிஷ்டர், வாமதேவர், வால்மீகி, மார்க்கண்டேயர், விச்வாமித்ரர், பரத்வாஜர், அகஸ்த்யர் என ரிஷிகள் மூன்று வேதங்களால் துதி செய்ய, வீணை, புல்லாங்குழல், ம்ருதங்கம், பேரி, படஹம், சங்கம், காஹளம், கோமுகம் முதலான வாத்யங்கள் முழங்க, இன்னும் பல கோலாகலங்களுடன் ஸர்வ லோக ரக்ஷணனாக ராமன் பட்டாபிஷேகம் செய்யப் பட்டான். பதினோராயிரம் ஆண்டுகள் நல்லாட்சியும் புரிந்தான்.
இளவரசனான பரதன் மூன்று கோடி கந்தர்வர்களைக் கொன்று, அந்த ராஜ்யத்தை வென்றான். சத்ருக்னனும் மது புத்ரனான லவணன் என்ற அஸுரனைக் கொன்று மதுரா நகரை ஏற்படுத்தினான். இப்படி இந்த ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்னர்கள் தங்கள் பராக்ரமங்களால் துஷ்ட நிக்ரஹம் செய்து விட்டு இப்பூமியை விட்டுக் கிளம்பிய போது, அவர்களிடம் பக்தி கொண்ட அந்நாட்டு ப்ராணிகளும் கூட மோக்ஷத்தை அடைந்தன. ராமனுக்கு லவ, குசனும், லக்ஷமணனுக்கு அங்கதன், சந்த்ரகேதுவும், பரதனுக்குத் தக்ஷகன், புஷ்கலனும், சத்ருக்னனுக்கு ஸுபாஹு, சுரஸேனனும் பிறந்தனர்.
இந்த சந்ததி குசன், நிஷதன், அனலன், நபஸ், புண்டரீகன், க்ஷேமதன்வா, தேவானீகன், அஹீனகு, குரு, பாரியாத்ரன், பலன், சலன், உத்கன், வஜ்ரநாபன், சங்கணன், வ்யுஷிதாச்வன், விச்வஸஹன், ஹிரண்யநாபன், புஷ்யன், த்ருவஸந்தி, ஸுதர்சனன், அக்னிவர்ணன், சீக்ரகன், மரு,ப்ரசுச்ருகன், ஸுஸந்தி, அமர்ஷன், ஸஹஸ்வான், விச்வபவன், ப்ருஹத்பலன் என வளர்ந்தது. இதில் ஹிரண்யநாபன் ஜைமினி சிஷ்யரான மஹா யோகீச்வரர் யாக்ஞவல்க்யரிடமிருந்து யோகத்தைக் கற்றவன். மரு என்பவனே இன்றும் இமயமலைக்கருகில் கலாபம் என்ற க்ராமத்திலே தன் யோக பலத்தால் யாருக்கும் தெரியாமல் வஸித்து வருகிறான். இவனே இனி வரும் க்ருத யுகத்திலே ஸூர்ய வம்ச முதல்வனாகப் போகிறான். ப்ருஹத்பலனென்பவன் மஹாபாரத யுத்தத்திலே அர்ஜுன புத்ரன் அபிமன்புவால் கொல்லப் பட்டான். இப்படிப் பட்ட இந்த ஸூர்ய வம்சத்தைப் பற்றிக் கேட்பவர்களும், படிப்பவர்களும் இவ்வுலகிலும், ஸ்வர்கத்திலும் விரும்பிய போகங்களைப் பெற்று, எல்லோராலும் கொண்டாடப்படுவர்.
Sunday, January 31, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment