02_13. பரதன் என்ற அரசன் முன்பு ஸாளக்ராமம் செய்து தவம் செய்தும் மோக்ஷம் ஏன் பெறவில்லை. ஏன் மீண்டும் அந்தணராகப் பிறந்தார். அதைக் கூறுங்கள் என்று மைத்ரேயர் கேட்க, அதைக் கூறுகிறார் பராசரர். ஸாளக்ராமத்திலேயே பலகாலம் வஸித்து வந்த பரதர் மனத்தை பரமனிடமே செலுத்தி வந்தார். சொல் பரமனின் திருநாமமாகவும், செயல் அவன் பூஜையும், பூஜைக்குத் தேவையான பொருள்களை சேகரிப்பதாகவும், மனம் அவனிடம் லயித்துமிருந்து வேறெந்த நினைவும் இல்லாமல் காலத்தை மகிழ்வுடன் கழித்து வந்தார். அவருக்கும் உறவும், செயலும் வந்தது. ஒரு நாள் அவர் குளித்துக் கொண்டிருந்த நதிக்கரையில் முழுதும் கருவுற்றிருந்த ஒரு பெண் மான் நீர் குடித்துக் கொண்டிருந்தது. அப்போது எங்கிருந்தோ கேட்ட சிங்கத்தின் கர்ஜனையில் அதிர்ந்த மான் செய்வதறியாது நீரைத் தாண்டி ஓட முயன்றதில், குட்டியை ஈன்று விட்டு, தான் அதிர்ச்சியில் இறந்து விட்டது. வெள்ளத்தில் அடித்து வந்த அந்த மான் குட்டியை பரதர் தனக்கு பரமன் தந்த குழந்தையாக மகிழ்வுடன் பாவித்து அதைப் பரிவுடன் ஆச்ரமத்திற்கு எடுத்து வந்தார்.
அது நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தது. ஆரம்பத்தில் ஆச்ரமத்திலேயே புலிக்குப் பயந்து மேய்ந்து கொண்டிருந்த அந்த குட்டி, வளர, வளர தைரியமாக வனத்தினுள் சென்று மேயத்தொடங்கியது. பரதர் மனமோ எப்போதும் அந்தக் குட்டியிடமே. அரசுரிமை, சொந்த, பந்த, போகங்களை விட்டு வந்த அவர் இப்பொது இந்த மான் குட்டியிடம் பெரும் பாசம் கொண்டு, அது திரும்ப சிறிது நேரமானாலும் பெரிதும் பயம் கொள்வார். அது சாப்பிட்ட, பழகிய, நடந்த, விளையாடிய இடங்களைக் கண்டு நினைத்து, நினைத்து வருந்துவார். யஜுர் வேதக் குழந்தைகள் குடுமியும், ஸாம வேதக் குழந்தைகள் மொட்டையும் சௌளத்தின் போது செய்து கொள்வது வழக்கம். இந்த மானுக்குப் பல் முளைத்து சில நாட்களே ஆகியிருக்கிறது. அதனால் அது மேய்ந்திருந்த தர்ப்பை, புல், செடி முதலியவைகளைப் பார்க்கும் போது, "மான்குட்டி மேய்ந்த புல் ஸாமவேதம் ஓதும் சிறுவர்கள் போல மொட்டையாக இருக்கின்றன. மான்குட்டியை மட்டும் காணவில்லையே" என்பார்.
இப்படி எந்த சொந்தமுமில்லாமல் மானோடே பழகிய தோஷத்தால் மோக்ஷத்தையுமிழந்த இந்த பரதர் இறக்கும் போது அந்த குட்டியைத் தனயனைப் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டே இறந்து போனார். இந்த பாவனையின் பலனாய் ஜம்பூமார்க்கம் என்ற கங்கைக் கரையில் மானாகவே மீண்டும் பிறந்தார். ஆனால் முன் ஜன்மத்து பக்தி வாசனையால், முற்பிறவி நினைவுடன் இருந்தார். முன்பிருந்த தன் நிலையையும், இப்போதைய நிலையையும் பார்த்த அவர் பெரும் வருத்தத்துடன் தவறைச் சரிசெய்ய நினைத்து, தாயை விட்டுப் பிரிந்து மீண்டும் ஸாளக்ராமத்திற்கே சென்று, உலர்ந்த புல், இலைகளை மட்டுமே உண்டு பிறப்பை முடித்தார்.
யோகம் தாங்களும் அனுஷ்டித்து, பிறருக்கும் போதிக்க ஞானம் பெற்றவர்களின் குலத்திலேயே இத்தகைய உயர்ந்த யோகத்திலிருந்து தவறியவர்கள் மீண்டும் பிறப்பர். அவ்வாறே ஒரு உயர்ந்த அந்தண குலத்தில் மீண்டும் பிறந்தார் பரதர். அனைத்து சாஸ்த்ரங்களையும் அறிந்தவர் ஆனார். ஞானத்தால் ஆத்மாவை உடலிலிருந்து வேறுபட்டதாய், அழிவில்லாததாய் அனைத்து ஜீவர்களுக்கும், தேவர்களுக்கும் பொதுவானதாய் அறிந்தார். இதனாலேயே உபனயனம் ஆன பின் குருகுலத்திலும் வேதத்தையும் பயிலவில்லை. கர்மாக்களையும் செய்யவில்லை. சாஸ்த்ரங்களையும் பின்பற்றவில்லை. பிறர் ஏசும்படி பேசியும், நடந்தும் வந்தார். உடை, நடவடிக்கைகளால் பிறரால் அருவருத்து ஒதுக்கப்பட்டார்.
பிறர் தம்மை வெறுத்து ஒதுங்கினால் கர்வமும், அஹங்காரமும் ஒழியும், பாபங்களும் அழியும். யோகமும் வளரும். எனவே ஜனங்கள் தம்மை அவமதித்தே நடக்க வேண்டும், அவர்களுடன் நமக்கு எந்தத் தொடர்பும் கூடாது என்ற இத்தகைய உபதேசங்களைக் கொண்டதால் பரதர், ஜடபரதர் ஆனார். பரமனும் தன்னிடம் பக்தியுடையோர் தரும் சிறு பொருளையும் பெரிதாகவும், பக்தியில்லாதோர் தருவது பெரியதாயினும் அதைச் சிறுமையாகவும் நினைப்பான். இவரோ எவர் தந்தாலும், எதைத் தந்தாலும் அதைப் பெரிதாகவே நினைத்து மகிழ்வார், அனுபவிப்பார். ஆனந்திப்பார். பெற்ற பிள்ளையாதலால் இவரைப் பெரிதும் காத்து வந்த இவர் தகப்பனாரும் இறந்தார்.
சுற்றத்தாரும், உடன் பிறந்தவர்களும், அவர்கள் புத்ரர்களும் இவரைக் கொண்டு தங்கள் வேலைகளைச் செய்து கொண்டனர். கூலியாக அல்ப உணவு மட்டுமே. அதுவும் வேறெவரும் உண்ண விரும்பாததே. இவரோ பெரு மகிழ்வோடு அவைகளை உண்டுத் தொடர்ந்து வேலைகளைச் செய்து வந்தார். உடலும் இளைக்கவில்லை. கண்களும் இருளவில்லை. எதுவும் ஆகவில்லை இவருக்கு. இதைக் கண்டு மற்றவர்களும் இவரையே குறைந்த கூலியில் நிறைந்த வேலை செய்பவராக ஆக்கிக் கொண்டனர். பல் தேய்க்க மாட்டார். தேய்த்துக் குளிக்க மாட்டார். பூணல், குடுமி, ஸந்த்யாவந்தனங்கள் இவைகளை மட்டுமே செய்து வந்தார்.
இந்த சமயத்தில் இவரைத் திடகாத்ர உருவத்துடன் பார்த்த ஸௌவீர ராஜாவின் ஸாரதி காளிக்கு நரபலியிடுவதற்காகப் பிடித்துச் சென்று, அலங்கரித்துப் பலியிட வாளை ஓங்கிய போது, தானே அந்த வாளைப் பிடுங்கிக் காளி அந்த சாரதியைப் பலியிட்டுத் தானும் பரிவாரங்களுடன் உண்டு மகிழ்ந்தாள். அதன் பின் ஒரு ஸமயம் ஸௌவீர ராஜா இந்த துக்க ஸம்ஸாரத்தில் நன்மை தருவது எது என்று கபில முனிவரிடம் கேட்டு அறிவோம் என புறப்பட்டான். பல்லக்கு சுமக்க பலர் வேண்டியிருந்தது. கூலியின்றி வேலை செய்யும் (அமிஞ்சி) வெலைக்கு இவரைத் தகுந்தவராக நினைத்த ராஜ ஸேவகன் உத்தரவுப்படி பல்லக்கையும் சுமந்தார் ஜடபரதர். பாபங்கள் தொலைய வேண்டும் என்பதையே முக்யமாக நினைத்தார் அவர்.
இவர் எந்த ஜந்துக்களுக்கும் பங்கம் வந்து விடக்கூடாது என்று பார்த்து, பார்த்து மெதுவாக நடந்தார். மற்றவர்களோ வேகமாக நடந்தனர். பல்லக்கு சீராக செல்லாததை அறிந்த ராஜா உத்தரவிட்ட பின்பும் இவ்வாறே நடந்தது. பொறுத்துப் பார்த்த ராஜா கோபிக்க அனைவரும் இவன் தான் மெதுவாக நடந்து வருகிறான் என்று கூறி விட்டனர். பரதரைக் கண்ட ராஜனும் "நன்கு பருத்திருக்கிறாய், சிறிது தூரத்திற்குள்ளாகவே களைத்து விட்டாயா, இதைக் கூட உன்னால் பொறுக்க முடியவில்லையா" எனக் கேட்டார். ஜடபரதர் "நான் பருத்தவனுமில்லை, பல்லக்கையும் நான் சுமக்கவில்லை, களைக்கவுமில்லை, வருந்தவுமில்லை, நீங்கள் தவறாகக் கூறுகிறீர்கள்" என்றார். குழம்பிய அரசர் விளக்கமாகக் கூறச் சொல்கிறார் அவனை. நானே பார்க்கிறேன் நீ பருத்து இருப்பதையும், பல்லக்கு சுமப்பதையும், களைத்து நடப்பதையும். பின் ஏன் மறுக்கிறாய் என்கிறார்.
பரதர் "ஒன்றைப் பற்றிய விசேஷத்தைக் கூற முதலில் அதை அறிந்து கொள்வதவசியம். நான், நீ என்பவை ஜீவாத்மாவைக் குறிப்பவை. அதற்கு எந்த விசேஷமும், குணமும் சிறப்பாகக் கிடையாது. அதைக் காணவும் இயலாது. அப்படி இருக்க என்னைப் பருத்தவனாக எப்படி நீங்கள் காண்கிறீர்கள். பல்லக்கை சுமக்கிறாய், பல்லக்கு உன் மீது இருக்கிறது என்று வேறு கூறுகிறீர்கள். இதுவும் பொய். கால்கள் பூமியின் மேலும், அதற்கு மேல் முழங்கால்களும், அதைப் பற்றித் தொடைகளும், தொடைகளின் மேல் இடுப்பும், மார்பும், தோள்களும் இருக்கின்றன. அந்த தோள்களே பல்லக்கைச் சுமக்கிறது. அதற்கு மேலேயே பல்லக்கு இருக்கிறது. அதற்குத் தானே பாரம். எனக்கு (ஜீவாத்மா) ஏது.
நீங்களும் அவ்வாறே பல்லக்கினுள் இருக்கும் உடலுக்குள் இருக்கிறீர்கள். எனவே ஆத்மா சுமக்கவுமில்லை, சுமக்கப்படவுமில்லை. உடல் தான் உடலைச் சுமக்கிறது. நம்மனைவரையுமே பரிணமித்த ப்ருத்வீ முதலான பூதங்களே சுமக்கின்றன. இவைகளோ ஸத்வ, ரஜ, தமோ குணங்களின் பரிணாமங்களுக்குக் கட்டுப்பட்டவை. அவைகளோ கர்ம வசப்பட்டவை. கர்மாவுக்குக் காரணம் அவித்யையே. உடலையே ஆத்மாவாக நினைப்பது. இது எல்லா ப்ராணிகளிடமுமே இருக்கிறது" என்றார். ஆத்மா விலக்ஷணமானது, கர்மாவிற்கப்பாற்பட்டது. அழிவு, பசி, தாகங்களற்றது. ஸத்வ முதலான குணங்களில்லாதது. மாற்றமில்லாதது. எல்லா ஜந்துக்களிடமும் ஒரே மாதிரியானது. இப்படியிருக்க நீங்கள் எதை வைத்து என்னைப் பார்த்து இவைகளைக் கூறினீர்கள் என்றார். அப்படி ஆத்மாவிற்கே பாரம் என்றால் அது என்னிடம் மட்டும் இல்லையே. உங்கள், மற்றும் எல்லார் ஆத்மாவிற்கும் பாரம் வர வேண்டுமே. இந்தப் பல்லக்கைச் செய்த மூலப்பொருள்களைக் கொண்டே என் உடலும் செய்யப்பட்டுள்ளது என்று கூறி மௌனமாகப் பல்லக்கைச் சுமந்து செல்லத் தொடங்கினார்.
(இதுக்கு மேல நமக்கு இந்த சிச்சுவேஷனுக்கு சுத்தத் தமிழ் வரல) அரசன் இதையெல்லாம் கேட்க, கேட்க அரண்டு போயி, அலறி அடிச்சினு கீழ குதிச்சு ஆசாமி கால்ல விழுந்தான். "ஐயா சாமி! நான் அறியாம, தெரியாம பண்ணின தப்ப மன்னிக்கனும். இந்த வேஷத்தில் திரியும் நீங்கள் யார், எதற்கு இங்கு வந்துள்ளீர்கள், எனக்குச் சொல்லுங்கள் (மறுபடி கேள்விகள் இவர் கிட்டயே, ஆனா இப்ப வேற நிலைல. இப்ப ஓகே!!). இப்ப நம்ம ஜடபரதர், "நான் யார் என்பதற்கு என்னால் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. ஏனெனில் ஆத்மாவிற்கு ஜாதி வித்யாசங்களில்லை. எதற்கு வந்துள்ளீர்கள் என்பதற்கு பதில் எல்லாரும் அறிந்ததே. ஸுக துக்க அனுபவமே. இதை நான் ஒரு முறைச் சொல்ல அவசியமில்லை. இந்த அனுபவங்கள் கால, தேச, கர்மங்களை அனுஸரித்திருக்கின்றன. அதாவது ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரும் நேரத்திலும், ஒரு சிலருக்கே இவைகள் அனுபவிக்கக் கிடைக்கின்றன. இவைகளையனுபவிக்கவே ஜீவாத்மாக்களுக்கு சரீரம் சரியான தேச காலங்களில் உண்டாகிறது. இப்படியிருக்க எதற்கு வந்தாய் என என்னை ஏன் கேட்டீர்கள் என்றார்.
அரசர் "அந்தணரே, புரிகிறது. ஆனால் ஆத்மாவை இன்னது என ஏன் கூற முடியாது என்றீர்கள். புரியவில்லை. அதை விளக்குங்கள்" என்றார். பரதர் "அரசே! ஆத்மாவை அஹம் (நான்) என்று குறிப்பதில் தவறில்லை. ஆனால் அதையே விசேஷத்துடன் சேர்த்து ஸோஹம் (நான் இன்னவன்) என்று கூறுவதுதான் தவறு. இந்த விசேஷங்கள், ஜாதி, வர்ணம் முதலியவைகள் சரீரத்துக்கே பொருந்தும். ஆனால் சரீரம் ஆன்மாவன்று. எனவே ஸோஹம் என்று கூறுவது ப்ராந்தி(ப்ராந்தி) ஞானத்தையே உண்டாக்கும். அது பெருந்தவறு" என்றார். அதேபோல் அஹம் என்ற சொல்லைக் கூறும் பற்களும், நாக்குமே ஆத்மா ஆகாதென்பதையும் தெரிந்து கொள்ளவேண்டும். அவைகள் பல, ஆனால் ஆத்மா தனியொருப் பொருள். அதைத்தவிர இந்த பற்கள், நாக்கு முதலியவைகளில் இருக்கும் இந்த்ரியங்களும் ஆத்மாவன்று. இவைகள் கருவிகளே, ஆத்மாவே கர்த்தாவாகும். ஆத்மாவோ ஸூக்ஷ்மமானது. அதை ஸ்தூலமாக நினைத்து நீ பருத்தவன் என்றெல்லாம் வழங்குவது எவ்வாறு தகும் என்றார்.
அதேபோல் சரீரம் அழியக்கூடியது, பல அவயவங்களை தலை, கை, கால் என உள்ளடக்கியது. ஆத்மா நிரவயமானதும் அழிவற்றதுமானது. எனவே சரீர அவயவங்களையோ, சரீரத்தையோ ஆத்மா எனக் கூறக்கூடாது. ஆத்மாக்கள் பல இருந்தாலும், அதில் ஒரு ஆத்மாவை அடைமொழியிட்டுக்கூற வேண்டிய நிர்பந்தமும், வேற்றுமைகளும் அவைகளுக்கில்லை. ஒரு மாட்டு மந்தையில் வெள்ளை மாடு, கருப்பு மாடு, குட்டை மாடு என வேறுபாடுகளை வைத்து அவற்றைக் கூறுகிறோம். இந்த ஆத்மாக்களுக்கோ அப்படி வேறுபாடுகளில்லை. பல இருந்தாலும் அனைத்தும் அணுவின் ஸ்வரூபங்களே. ஞான ஸ்வரூபங்களே, எனவே நீ யார் என்ற கேள்வியும், அதற்கு நான் இன்னவன் என்ற பதிலும் அர்த்தமற்றவைகளே. என்னை விட வேறானவர்கள் உண்டு, ஆனால் அவர்கள் வேறானவர்களல்ல" என்கிறார்.
உருவங்கள் வளர்ச்சியும், மாறுதலும் உடையன. நீங்கள், உங்கள் அரசு, பொருள்கள், இந்தப் பல்லக்கு, இதைச் சுமக்கும் நாங்கள் என அனைத்தும் உண்மையல்ல. உருவ மாறுபாட்டால் இவையனைத்தும் அழியக்கூடியவையே. இந்த பல்லக்கையே எடுத்துக் கொள்ளுங்கள். உயிருடன் வளரும் நிலையில் இருந்த போது இதை மரம் என்றும், வெட்டியபின் கட்டை என்றும் அழைத்தார்கள், பல கட்டைகளால் ஒன்று சேர்த்து, ஒன்றைச் செய்தபின் பல்லக்கு என்பதும் உண்டாயிற்று. இப்போது மரமும், கட்டையும் இல்லை. உங்களை கட்டையிலோ, மரத்திலோ அமர்ந்திருப்பதாக யாராவது இப்போது கூறுவார்களா. ஆனால் இந்த கட்டைகளைப் பிரித்தால் பல்லக்கும் மறைந்துவிடும். அதேபோல் இந்த குடையிலுள்ள கம்பிகளைப் பிரித்து விட்டால் குடையும் மறைந்து விடும்.
இதேபோல் தான் நாமும். ஒரு கர்ம விசேஷத்தினால் அரச குலத்தில், ராஜ சரீரத்துடன் நீங்கள் பிறந்துள்ளீர்கள், நாங்களும் உங்களை ராஜா என்கிறோம். நானும் அப்படியே ப்ராஹ்மண சரீரத்தில் இருக்கிறேன். ஆகையால் உலகம் ஆண், பெண், ஆடு, மாடு, மரம், பறவை என்று கூறுவதெல்லாம் கர்ம நிமித்தமான சரீரத்தைப் பற்றியே. ஆத்மா ஆணுமல்ல, பெண்ணுமல்ல, அலியுமல்ல, தேவனுமல்ல, மனிதனுமல்ல, ம்ருகமும் அல்ல. என்றும் பரிணாமத்தின் காரணமாக வேறு பெயரை அடையாமலிருப்பதே ஸத்துப் (நிலையான) பொருள்களாகும். நீங்கள் கூறும் பொருள்களில் எது இது என்று முடிந்தால் தெரிந்து கொள்ளுங்கள். நீங்களே அரசனாகவும், பகைவனாகவும், கணவனாகவும், மகனாகவும், தந்தையாகவும் இருக்கிறீர்கள். உங்களை எப்படி அழைப்பேன் நான். உடலுறுப்புகளையே ஆத்மாவென்றால் அவற்றுள் நீங்கள் தலையா, கையா, வயிறா, கால்களா. உமக்கு இந்த உடல் யார், அதேபோல் இந்த உடலுக்கு நீங்கள் யார், ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் இந்த உடலை விட வேறானவர். நிபுணராக இருந்தால் ஆராயுங்கள் என்றார் ஜடபரதர்.
Tuesday, January 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment