Thursday, January 28, 2010

விஷ்ணு புராணம் - 58

04_02. ககுத்மி ப்ரஹ்மலோகம் சென்றிருந்த போது குதஸ்தலியை புண்யஜனர் என்ற ராக்ஷஸக் கூட்டம் அவர் தம்பிகளை நான்கு திசைகளிலும் விரட்டி விட்டு தாங்கள் ஆண்டனர். தம்பிகளில் ஒருவனான வ்ருஷ்டனிடமிருந்து வார்ஷ்டகம் என்ற ராஜ குலம் உண்டாயிற்று. மனுவின் மற்றொரு புதல்வனான நாபாகனுக்கு நாபாகனும், அவனுக்கு அம்பரீஷனும், அவனுக்கு விரூபனும், அவனுக்கு ப்ருஷதச்வனும், அவனுக்கு ரதீதரனும் பிறந்தனர். ரதீரதனின் மனைவியிடம் அங்கிரஸ் என்ற ப்ராஹ்மணர் ப்ரம்ஹ வர்ச்சஸ் உள்ள பிள்ளைகளை உண்டாக்கவே, அவர்கள் ப்ராஹ்மண்யமும், க்ஷத்ரியத்வமும் கலந்தவர்கள் ஆனார்கள்.

இதேபோல் ஒரு ஸமயம் மனு தும்மியபோது அவர் மூக்கிலிருந்து தோன்றிய இக்ஷ்வாகுவிற்கு நூறு பிள்ளைகள் பிறந்தனர். விகுக்ஷி, நிமி, தண்டன் என்ற மூவரே அதில் முக்யமாயிருந்தனர். சகுனி முதலான ஐம்பது பேர்கள் உத்தராபதத்திற்கும், நாற்பத்தெட்டு பிள்ளைகள் தக்ஷிணாபதமென்ற நாட்டிற்கும் அரசராயினர். ஒரு ஸமயம் காட்டிற்கு வேட்டைக்குச் சென்றிருந்த விகுக்ஷி பல ம்ருகங்களைக் கொன்று மிகவும் களைத்திருந்தான். தந்தை அஷ்டகை ச்ராத்தத்திற்கு மாம்ஸம் கொண்டு வரச் சொல்லி உத்தரவிட்டிருந்ததை நினைவில் கொண்ட அவன் பசியால் சேமித்த விலங்குகளுள் முயலை மட்டும் தான் சாப்பிட்டு விட்டு, மற்ற அனைத்தையும் தந்தையிடம் ச்ராத்தத்திற்காகக் கொண்டு வந்து தந்தான்.

அவற்றை பரிக்ஷித்த வஸிஷ்டர் "அரசே! ச்ராத்தத்திற்கு என ஸம்பாதித்த இந்த மாம்ஸங்களுள் ஒன்றான முயல் மாம்ஸத்தை உன்னுடைய துராத்மாவான இந்த பிள்ளை தின்று விட்டதால் இவையனைத்துமே தோஷம் காரணமாக விலக்கத்தக்கவை, அசுத்தமாகிவிட்டன இவை" என்று கூறி விட்டார். இதனால் விகுக்ஷி சசாதன் (முயலைத் தின்றவன்) என்று அழைக்கப்பட்டான். இக்ஷ்வாகுவும் அவனைக் கைவிட்டான். இக்ஷ்வாகுவின் இறப்பிற்குப் பின் இவன் அரசாண்டான். புரஞ்ஜயன் என்ற புத்ரனையும் பெற்றான்.

முன்பொரு ஸமயம் த்ரேதா யுகத்தில் பலத்தால் அஸுரர்கள் தேவர்களை வென்றனர். விஷ்ணுவை ஆராதித்த அவர்களிடம் "சசாதனுடைய புத்ரன் புரஞ்ஜயன் உடலில் நான் புகுந்து அஸுரர்களை வெல்வேன். எனவே நீங்கள் அவனிடம் சென்று உதவி கோருங்கள்" என்றார். தேவர்களின் வேண்டுதலைக் கேட்ட புரஞ்ஜயன் "நூறு அச்வமேதங்கள் செய்த உங்கள் தலைவன் இந்த்ரன் எனக்கு வாஹமானால் ஒழிய அந்த அஸுரர்களை வெல்வது கடினம்" என்று நிபந்தனை விதித்தான். இந்த்ரன் இதற்குடன்பட்டு வ்ருஷபமானான் (எருது). எருதின் முதுகுக் கொண்டையின் (ககுத்)மீதிருந்து போர் புரிந்து வென்றதால், புரஞ்ஜயனுக்கு ககுத்ஸ்தன் என்ற பெயர் நிலைத்தது. இவனுக்கு அநேநஸ் என்பவனும், அவனுக்கு ப்ருதுவும், அவனுக்கு விஷ்டராச்வனும், அவனுக்கு யுவனாச்வனும் பிறந்தனர்.

யுவனாச்வனுக்கு சந்த்ராம்சம் பொருந்தியிருந்ததால் சாந்த்ரன் எனப்பட்டான். அவனுக்கு சாபஸ்தன் பிறந்து சாபஸ்தீ நகரை நிர்மாணித்தான். இவனுக்கு ப்ருஹதச்வனும், அவனுக்குக் குவலயாச்வனும் பிறந்தனர். அவன் உதங்க மஹரிஷியின் பகைவனான துந்து என்ற அஸுரனைத் தன் இருபத்தோராயிரம் புத்ரர்களோடு சென்று கொன்று, துந்துமாரன் என்ற பெயர் கொண்டான். அந்த சண்டையில் த்ருடாச்வன், சந்த்ராச்வன், கபிலாச்வன் என்ற மூன்று பிள்ளைகளைத் தவிர மீதம் ஆயிரமாயிரம் புத்ரர்களும் துந்துவின் மூச்சுக் காற்றால் இறந்தனர். த்ருடாச்வனுக்கு ஹர்யச்வனும், அவனுக்கு நிகும்பனும், அவனுக்கு அமிதாச்வனும், அவனுக்கு க்ருசாச்வனும், அவனுக்கு ப்ரஸேனஜித்தும், அவனுக்கு யுவனாச்வனும் பிறந்தனர்.

இந்த யுவனாச்வனுக்கு நெடுங்காலமாக புத்ரன் இல்லாமையால் வெறுத்துப் போய், காட்டிலும், ரிஷிகளின் ஆச்ரமங்களிலுமே இவன் திரிந்து கொண்டிருந்தான். இவனிடம் கருணை கொண்ட மஹரிஷிகள் தாங்களாகவே அவனுக்கு ஒரு புத்ரனை வேண்டி இஷ்டியைச்(வேள்வி) செய்தனர். நள்ளிரவில் அந்த வேள்வி முடியவே மந்த்ர தீர்த்தம் நிரம்பிய கலசத்தை யாக வேதியின் நடுவில் வைத்து விட்டு, மஹரிஷிகள் அயர்ந்து விட்டனர். அப்போது பெரும் தாஹத்துடன் அங்கு வந்த யுவனாச்வன் தூங்குபவர்களை எழுப்ப வேண்டாம் என்று, பராக்ரமம் வாய்ந்த பிள்ளையைப் பெற அவன் மனைவி அருந்த வேண்டிய அந்த மந்த்ர தீர்த்தத்தைத் தான் குடித்து விடுகிறான்.

முனிவர்கள் விஷயமறிந்து வருத்தமடைந்து கொண்டிருக்க, அவன் வயிற்றில் ஒரு கர்ப்பம் உண்டாகி, காலத்தில் வலக்கைக் கட்டை விரலாலேயே யுவனாச்வன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு ஒரு குழந்தை வெளியேயும் வந்து விடுகிறது. யுவனாச்வன் இறந்து விடுகிறான். இந்தக் குழந்தைக்கு யார் பால் கொடுப்பார்கள் என்று முனிவர்கள் வருந்தும்போது இந்த்ரன் "என்னைத் தாயாகக் கொண்டு இது பாலுண்ணும்" என்று கூறி தன் பவித்ர (மோதிர)விரலால் அம்ருதத்தை வர்ஷிக்க, அதை உண்ட குழந்தையும் விரைவில் வளர்ந்தது. இந்தக் குழந்தையே மாந்தாதா என்ற பெயரில் பின்னர் சக்ரவர்த்தியாகி ஸூர்யன் உதித்து அஸ்தமிக்கும் எல்லை வரை ஆண்டது. இவனுக்கும் சசிபிந்து என்பவனின் பெண்ணான இந்துமதிக்கும் புருகுத்ஸன், அம்பரீஷன், முசுகுந்தன் என்ற மூன்று பிள்ளைகளும், ஐம்பது பெண்களும் பிறந்தனர்.

இந்த நேரத்தில் ரிக் வேதியான ஸௌபரி மஹரிஷி, ஜலத்திற்குள் பனிரெண்டு வருஷமாகத் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வஸித்து வந்த ஸம்மதன் என்ற மீன்களின் அரசன் தன் பிள்ளை, பேரன்களோடு அங்குமிங்கும் உல்லாஸமாக அங்குமிங்கும் விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்ததில் தன் தவத்தைக் கலைத்துக் கொண்ட ஸௌபரி மஹரிஷி மீன்கள் ஸம்மதன் மேல் அங்குமிங்கும் விளையாடுவது போல தானும் பிள்ளை, பேரன்களோடு விளையாட வேண்டும் என்ற எண்ணம் கொண்டார். வந்தார் மாந்தாதாவிடம். அவனின் பூஜை, உபஸரிப்புகளை ஏற்றுக்கொண்டு "அரசே! நான் திருமணம் செய்ய நினைத்திருக்கிறேன். எனக்குப் பெண் தா.

எத்தனையே அரசர்கள் பெண் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனினும் ககுத்ஸ்த வம்சத்தவர்களே இரப்போரின் மன விருப்பத்தை நிறைவேற்றுபவர்கள் என்று உன்னிடம் நான் வந்துள்ளேன். உங்களிடம் வந்தவர்கள் வீணே திரும்புவதில்லை. உனக்கோ ஐம்பது பெண்கள். அவர்களில் ஒரு பெண்ணையாவது எனக்குக் கொடு. என் துக்கத்தைப் போக்கு" என்றார். உடல் தளர்ந்த கிழவரின் வேண்டுகோளுக்கும், அவர் கோபத்துக்கும் பயந்து அவன் யோஸிப்பதைக் கண்ட மஹரிஷி "பெண்ணாகப் பிறந்தால் யாருக்காவது கொடுத்துதானே ஆக வேண்டும். நான் என்ன தவறாகக் கேட்டு விட்டேன். உனக்கும், எனக்கும் லாபமே, கொடுத்து விடு" என்றார்.

அரசன் உசிதமாக "நற்குடியில் பிறந்த எவரையாவது தாங்களே எங்கள் பெண்கள் தேர்ந்தெடுப்பதே எங்கள் குல வழக்கம். நான் இதில் என்ன செய்ய. நீங்களோ கேட்டு விட்டீர்கள். எனக்கு ஒன்றும் தோன்றவில்லை, அதனால் தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்" என்றான். முனிவரா விடுவார். "சரி, குடும்ப வழக்கத்தைக் கெடுக்க வேண்டாம். என்னை அந்தப் புரத்திற்குள் விடச்சொல். எந்தப் பெண் என்னைத் தானாக வரிக்கிறாளோ அவளையே நான் மணக்கிறேன். ஒருவரும் வரிக்கவில்லையெனில், இந்த கிழப்பருவத்திற்கு இது வீண் என்று விட்டு விடுகிறேன்" என்றார். இந்தக் கிழவரை எவள் வரிக்கப் போகிறாள் என்று அரசனும் காவலாளியைக் கூப்பிட்டு முனிவரை அந்தப்புரத்திற்கு அழைத்துச் செல்லச் சொல்கிறான்.

அவனும் அவ்விடத்திற்கு அழைத்துச் சென்று "இவரை வரிப்பவர் எவராயினும் மன்னர் மறுப்பின்றி அவருக்கே இவரை மணம் முடிப்பார்" என்று அறிவிக்கிறான். முனிவர் இப்போது எவரும் வியக்கும், விரும்பும் அழகையும், உருவத்தையும் கொள்கிறார். ஐம்பது இளவரசிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு அவரிடம் மனதைப் பறி கொடுக்கின்றனர். இந்த விஷயத்தை அறிந்த மன்னன், வேறு வழியின்றி தன் வார்த்தையின் படி தன் ஐம்பது பெண்களையும் அவருக்கே விவாஹம் செய்து வைக்கிறான். அனைவரும் முனிவருடன் ஆச்ரமம் சென்று விடுகின்றனர்.

இளவரசிகளான அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக குடியிருப்புகளை உண்டாக்கித்தர நினைத்த மஹரிஷி விச்வகர்மாவை உடனே அழைத்து "பறவைகள் சப்தமிடும் தாமரைக் குளங்கள், பூச்செடிகள், பழ மரங்கள், நந்தவனங்கள், பரந்த மெத்தை, மேடைகள், மாடங்கள், கூடங்கள் நிறைந்த தனித்தனி மாளிகைகளை உண்டாக்கித் தர வேண்டும்" என உத்தரவிடுகிறார். அப்படியே செய்து முடிக்கிறான் விச்வகர்மா. நந்தனன் என்ற நித்ய நிதியையும் படைக்கிறார் மஹரிஷி. அவைகளோடும், பல போகங்களோடும், அவர்களோடும் அதிதி பூஜைகளோடும், மனம் மகிழ்வோடு உள்ள வேலைக் காரர்களோடும் காலத்தைக் கழித்து வந்தனர்.

ஆண்டுகள் கழிகின்றன. பெண்கள் ஸந்தோஷமாக இருக்கிறார்களா என்ற அறிய விரும்பிய மாந்தாதா மாப்பிள்ளையான ஸௌபரி மஹரிஷியின் ஆச்ரமத்திற்கு வருகிறான். வசதிகளைக் கண்டு வியந்தபடி ஒவ்வொரு பெண்ணின் மாளிகைக்கும் சென்று உபசரிப்புகளை ஏற்றுக் கொண்டு அவர்களை நலம் விசாரிக்கிறான். அனைவருமே அப்பாவின் ஆசியில் மிகவும் உல்லாசமாகவும், த்ருப்தியுடன் இருப்பதாகவும் கூறுகின்றனர். மேலும் ஒவ்வொருவருமே மஹரிஷி எப்போதும் தங்களுடனே இருப்பதாகவும், எனவே மற்ற ஸஹோதரிகளைப் பற்றி இது குறித்து வருந்துவதாகவும் கூறுகின்றனர். இதைக் கேட்டு ஆச்சர்யமடைந்த மன்னன் மஹரிஷியிடமும் சென்று அவரைப் பூஜித்து, கொண்டாடுகிறான்.

"தேவரீருடைய மஹிமையை நன்கு அறிகிறேன். இத்தகைய செல்வங்களும், சிறப்புகளும் வேறெங்கும் நான் கண்டதில்லை, தங்களின் தவத்தின் சக்தியைப் புரிந்து கொண்டேன்" என்று அவரைப் பலவாறு புகழ்ந்து விட்டு, சிலகாலம் தானும் அங்கு இருந்து அவைகளை அனுபவித்து விட்டு, நகருக்குத் திரும்புகிறான். நூற்றைம்பது குழந்தைகளுக்குத் தகப்பனாகிறார் ஸௌபரி மஹரிஷி. கொஞ்சி மகிழ்கிறார். அவர்கள் சிரிப்பையும், விளையாட்டையும், ஸேஷ்டைகளையும், தவழ்வதையும், நடப்பதையும் கண்டு ஸந்தோஷிக்கிறார். அவர்களின் பல்வேறு பருவங்களைப் பற்றி யோசித்தும் மகிழ்கிறார். இப்படி சிந்தித்துக் கொண்டிருக்கையில் ஒரு ஸமயம் அவருக்கு விழிப்பு வருகிறது.

"மோஹம் வளர்ந்து விட்டது, எவ்வளவு லக்ஷம் வருஷங்கள் கழிந்தாலும் இந்த ஆசைகள் முடியாது போலிருக்கிறதே. பிள்ளைகளைப் பார்த்தால், பேரன்களைப் பார்க்க வேண்டும் என்றும், அதன் பின் கொள்ளுப் பேரன்களைப் பார்க்க வேண்டும் என்றும் நீண்டு கொண்டே தான் இருக்கிறது. ஒவ்வொரு ஆசையும் பூர்த்தியானதும், புதிதாக இன்னொரு ஆசை பிறக்கிறது. மரணத்தின் போதுதான் இவைகளுக்கு முடிவு போலும். தவம் செய்து கொண்டிருந்த நான் மீனின் ஸஹவாசத்தால் இப்படி அழிந்து விட்டேனே. இனி எவரோடும் கூட்டு வைக்கக் கூடாது. அது பல தோஷங்களை உண்டாக்குகிறது. ஒரு மனைவியோடு இருப்பவனுக்கே பல கஷ்டங்கள் இருக்கும் போது, பலரை மணக்க நினைத்தேனே.

ஆஹா, எவ்வளவு தூரம் வந்து விட்டேன். யோகம், ஸித்திகளைப் பெற்றவர்களுக்கே ஸஹவாஸம் இவ்வளவு கஷ்டங்களைத் தருமென்றால், அல்பர்கள் இப்படிப்பட்டக் கூட்டுறவால் பதிதராகவே ஆகிவிடுவரே" இப்படிப் பலவாறு புலம்பி முடிவில் ஒரு முடிவுக்கு வந்தார். லோக குருவான விஷ்ணுவே இதற்கு கதி. அவனையே மீண்டும் சரணடைந்து தவத்தால் இந்த கஷ்டங்களை விட்டு விலகுவேன் என்று முடிவு செய்து போகங்களைத் துறந்து, மனைவிகளோடு வானப்ரஸ்தராகி, பல தர்மங்களை வனத்தில் அனுஷ்டித்து, பக்வம் அடைந்ததாக உணர்ந்த போது அக்னி ஹோத்ர அக்னிகளை தன் ஆத்மாவில் முடிந்து, ஸன்யாஸ ஆச்ரமத்திலிருந்து அழிவில்லாத மோக்ஷத்தையும் அடைந்தார்.

இந்த ஸௌபரி மஹரிஷியின் சரிதத்தை நினைப்பவனும், படிப்பவனும், படிக்கச் செய்பவனும், கேட்பவனும், கேட்கச் செய்பவனும், மனதில் வைப்பவனும், எழுதுபவனும், எழுதச் செய்பவனும், கற்பவன், கற்பிப்பவன் என அனைவரும் எட்டு பிறப்புக்கள் வரை தீய சிந்தையும், தீய ஒழுக்கமும் அண்டாது வாழ்வார்கள். அத்தனை புண்யமானது இந்த சரிதம்.

No comments:

Post a Comment