Monday, January 11, 2010

விஷ்ணு புராணம் - 30

02_08. ஸூர்யன் முதலான க்ரஹங்களின் அமைப்பும், அளவுகளையும் இனி கூறுகிறார். ஸூர்யனின் தேர் பத்தாயிரம் யோஜனையாகும். இதில் ஒன்பதினாயிரம் ஸூர்ய மண்டலத்தாலும், பரிவாரங்கள் ஆயிரம் யோஜனைகளாலும் அமைந்துள்ளது. அச்சையும், நுகத்தடியையும் பிணைக்கும் ஏர்க்கால் இருபதினாயிரம் யோஜனையும், அச்சானது ஒரு கோடியே ஐம்பத்தேழு லக்ஷம் யோஜனையுமாகும். மிகப் பெரிய இந்த அச்சு இரிசு என்றும் அழைக்கப்படுகிறது. இதில் மாட்டப்பட்டுள்ள ஒரு சக்ரமே ஸம்வத்ஸர ஸ்வரூபம். முற்பகல், நடுப்பகல், பிற்பகல் மூன்றும் அச்சு கோர்க்கும் இடம். ஸம்வத்ஸரம், பரிவத்ஸரம், இடாவத்ஸரம், அநுவத்ஸரம், இத்வத்ஸரம் என்ற ஐந்து வகை வருஷங்கள் ஆரைக்கால்களாகும். ஆறு ருதுக்களும் வட்டைக் கால்களாகும். காயத்ரீ, ப்ருஹதீ, உஷ்ணிக், ஜகதீ, த்ரிஷ்டுப், அநுஷ்டுப், பங்க்தி என்ற ஏழு சந்தஸ்ஸுக்கள் ஏழு குதிரைகளாகும்.

இந்த ரதத்தின் மற்றொரு அச்சு நாற்பத்தையாயிரத்து ஐனூறு யோஜனையாகும். இதன் நுகத்தடியும் அதே அளவாகும். இந்த நுகத்தடி பெரிய நுகத்தடியின் பாதியில் வாயுவைக் கயிராகக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. த்ருவனை ஆதாரமாகக் கொண்டுள்ளது. தேர்ச்சக்கரம் பெரிய அச்சில் கோர்க்கப்பட்டு மானஸோத்தர பர்வதத்தின் மேல் இருக்கிறது. இந்த மலையின் மேல் கிழக்கே வஸ்வோகஸாரா என்ற இந்த்ரப் பட்டணமும், தெற்கே ஸம்யமனீ என்ற யமப்பட்டணமும், ஸுகா என்ற வருணப் பட்டணம் மேற்கேயும், வடக்கே விபாவரீ என்ற ஸோமப் பட்டணமுமுள்ளது. இந்த ஸூர்யனாலேயே இரவு, பகல் உள்ளது. யோகிகளும் கர்மங்கள் தொலைத்த போது, இவனையே தேவயான வழியாகக் கொள்கின்றனர்.

காலையில் உதிக்கும் போதும், மாலையில் அஸ்தமிக்கும் போதும் ஸூர்யன் கண்களால் காணும் படி குளிர்ச்சியாகவும், சிவந்தும், கிரணங்களின்றியும் இருக்கிறான். நடுப்பகலிலேயே ப்ரகாசம் மிகுந்திருக்கிறான். இவை அவன் குணம் இல்லை. அவன் ஒரே போல் தான் இருக்கிறான். தொலைவிலிருந்து பார்ப்பதால் மாலையிலும், காலையிலும் இப்படித் தோன்றுகிறான். அவன் அஸ்தமிப்பதும், தோன்றுவதுமில்லை. நாம் காணுமிடங்களில் உதயமென்றும், அதற்கு நேரெதிரில் அஸ்தமயமென்றும் கூறுகிறோம்.

இந்த்ரபுரியில் அவன் இருந்தால் ஈசான்யத்திலிருப்பவர்களுக்கு மூன்றாம் யாமத்தையும், ஆக்னேயத்திலிருப்பவர்களுக்கு முதல் யாமத்தையும், தெற்கேயிருப்பவர்களுக்கு உதயத்தையும், வடக்கே இருப்பவர்களுக்கு அஸ்தமயத்தையும் செய்கிறான். இதேபோல் மற்ற திசைகளுக்கும். இவன் போக்கைக் கொண்டே திக்குகளும் கிழக்கு, மேற்கு என வழங்கப்படுகின்றன. எங்கும் ப்ரகாசிக்கும் இவன் க்ரணங்கள் மேரு மலையிலிருக்கும் ப்ரஹ்மசபையின் ஒளிக்கு முன் மழுங்கி விடுகின்றன. இந்த மேரு மலை எல்லா த்வீபங்கள், வர்ஷங்களுக்கும் வடக்கே இருக்கிறது. இந்த ப்ரஹ்ம ஸபையில் எப்போதும் பகலே இருக்கிறது. ஆனால் ஸூர்ய கிரணங்கள் படுவதில்லையாதலால் இரவுப் பொழுதும் இருக்கும்.

ஸூர்யன் அஸ்தமிக்கும் இரவு நேரத்தில் அவன் கிரணங்கள் அக்னியை அடைகின்றன. மீண்டும் பகலில் ஸூர்யனை அடைகின்றன. மேருவின் தெற்கே ஸூர்யன் உதிக்கும் போது ராத்ரி தண்ணீரை அடைவதாலும், மேருவின் வடக்கே ஸூர்யன் உதிக்கும் போது பகல் தண்ணீரை அடைவதாலும் தண்ணீர் பகலில் கொஞ்சம் சிவந்தும், இரவில் வெளுப்பாகவும் இருக்கிறது. இப்படியே புஷ்கர த்வீபத்தின் மத்ய ப்ரதேஸத்தினால் ஸூர்யன் முப்பதில் ஒரு பாகத்தையடையும் போது முஹூர்த்த காலம் உண்டாகிறது. குயவன் சக்ரத்தின் நுனியில் பூச்சி சுழல்வது போல், ஸூர்யனும் தக்ஷிணாயானத்தில் ஜ்யோதிச் சக்ரத்தின் நுனியில் சுழன்று வருகிறான்.

இப்படி ஒவ்வொரு முஹூர்த்தமாக பூமியின் முப்பதில் ஒரு பாகத்தைக் கடந்து, உத்தராயணத்தில் ப்ரவேசிக்கும் போது, அதன் முதல் ராசியான மகரத்தை அடைகிறான். இப்போது வேறுபாடுள்ள இரவு, பகல்களைச் செய்து மேலும், கும்பம், மீனம் இரண்டிலும் ப்ரவேசித்து உத்தராயணத்தின் மத்யமாகிற மேஷத்தில் ப்ரவேசித்து பூமத்யமாகிற விஷுவ கதியை அடைகிறான். இங்கே இரவும், பகலும் ஸமமாக ஆகின்றன. இதற்குப் பின் பகல் வளர்ந்து இரவு குறைய ஆரம்பிக்கும். இப்படியே மிதுன ராசியில் ப்ரவேசித்து உத்தராயணத்தை முடித்து, கர்கடகத்தில் ப்ரவேசிக்கும் போது மீண்டும் தக்ஷிணாயனம் தொடங்கும்.

தக்ஷிணாயனத்தின் ஆரம்பத்தில் வேகமாகச் செல்கிறான். அப்போது பகற்பொழுது பனிரண்டு முஹூர்த்தமே ஆகிறது. இதே அளவிலேயே பதிமூன்றரை நக்ஷத்ரங்களைக் கடந்து பூமியைக் கடக்கிறான். இப்போது இரவு பதினெட்டு முஹூர்த்தாமாகிறது. இந்த அளவில் மற்ற பதிமூன்றரை நக்ஷத்ரங்களைக் கடந்து செல்கிறான். உத்தராயணத்தில் ஸூர்யன் வேகம் இதற்கு நேர்மாறாக அமைகிறது. எனவே உத்தராயணத்தில் பகல் பதினெட்டு முஹூர்த்தங்களையும், இரவு பனிரண்டு முஹூர்த்தங்களையும் கொள்கிறது. குயவன் சக்ரத்தின் நடுபாகம் போல் த்ருவனும் மெதுவாக அங்கேயே சுழல்கிறான்.

உத்தராயண, தக்ஷிணாயன காலங்களில் ராசி மண்டலங்களின் அளவு மாறுபடுவதால் இரவு, பகல்களின் அளவும் மாறுபடுகிறது. பகலிலும், இரவிலும் ஆறு, ஆறு ராசிகளைக் கடக்கிறான். தக்ஷிணாயனத்தில் இரவு மந்தமாகவும், பகல் துரிதமாகவும், உத்தராயனத்தில் இரவு துரிதமாகவும், பகல் மந்தமாகவும் இருக்கும். இரவிற்கு உஷா என்றும், பகலுக்கு வ்யஷ்டியென்றும் பெயர். இவைகளின் நடுப்பொழுது ஸந்த்யை. இது கொடியது. இந்தப் பொழுதில் தான் மந்தேஹர் என்ற உடல் அழிவில்லாத ராக்ஷஸர்கள் ஸூர்யனை விழுங்க விரும்புகின்றனர். தினமும் இவர்களுக்கு மரணம் என்று ப்ரஹ்மாவின் சாபம். இந்த ஸந்த்யா காலங்களில் ப்ராஹ்மணர்கள் ப்ரணவம், வ்யாஹ்ருதிகளுடன் கூடிய காயத்ரீ தீர்த்தத்தால் ஸூர்யனை நோக்கிக் கொடுக்கும் அர்க்யம் வஜ்ராயுதமாகி அந்த ராக்ஷஸர்களைக் கொல்கிறது. மேலும் அக்னிஹோத்ரத்தில் செய்யும் முதல் ஆஹுதியால் ஸூர்யன் ப்ரகாசமும் பெறுகிறான்.

ப்ரணவம் விஷ்ணு ஸ்வரூபம். வேத ஸாரமாய் மூன்று வ்யாஹ்ருதிகள் அக்னி, வாயு, ஸூர்யன்.இதனாலேயே மந்தேஹர் அழிகின்றனர். ஸூர்யன் விஷ்ணுவின் அம்சம். அவனுக்குள்ளும், ப்ரணவத்திலும் ப்ரஹ்மமே இருக்கிறது. ஆகையால் ப்ரஹ்மமே ஸூர்யனை இயக்குகிறது. இப்படி வாலகில்யர் முதலான ப்ராஹ்மண ச்ரேஷ்டர்களாலேயே ஸூர்யன் ராக்ஷஸர்களிடமிருந்து காக்கப்படுகிறான். இதன் பின்னே தான் அவன் உலகைக் காக்கப் புறப்படுகிறான். இரவு பகல்கள் குறைந்தாலும், வளர்ந்தாலும் அவற்றின் பதினைந்தாம் முஹூர்த்தமே ஸந்த்யா ஆகும். அதாவது அர்த்தோதயத்திற்கு முன் இரண்டு நாடிகளும், அர்த்தாஸ்தமயத்திற்குப் பின் இரு நாடிகளும் ஸந்த்யா முஹூர்த்தமாகும்.

ஸூர்யன் உதித்து மூன்று முஹூர்த்தங்கள் ப்ராத: காலம். அடுத்த மூன்று முஹூர்த்தம் ஸங்கவம், பின் மத்யாஹ்னம், அபராஹ்ணம், ஸாயாஹ்னம் என்றும் இருக்கின்றன. மொத்தம் ஐந்து பாகங்கள் கொண்டது பகல். விஷுவத்தில் இரவும், பகலும் சமமாய் இருக்கின்றன. சரத் ருதுவின் ஆரம்பமான துலா ராசியிலும், வஸந்த ருதுவின் ஆரம்பமான மேஷ ராசியிலும் ஸூர்யன் வரும்போது விஷுவம் ஆகும். கர்கடகத்தில் ப்ரவேஸிக்கும் போது தக்ஷிணாயனமும், மகரத்தில் ப்ரவேஸிக்கையில் உத்தராயணமும் உண்டாகின்றன. பதினைந்து நாட்கள் ஒரு பக்ஷமும், இரு பக்ஷங்கள் ஒரு மாஸமும், இரு மாஸங்கள் ஒரு ருதுவும், மூன்று ருதுக்கள் ஒரு அயனமும், இரு அயனங்கள் ஒரு வருஷமும் ஆகும்.

இந்த ஒரு வருஷம் சாந்த்ரம், ஸாவனம், ஸௌரம், நக்ஷத்ரம் என நான்கு வகை மாஸங்களால் உண்டாக்கப்படும். இப்படி வகுக்கப்பட்ட வருஷங்கள் ஐந்து கூடி யுகம் உண்டாகும். முதல் வருஷம் ஸம்வத்ஸரம், இரண்டாவது பரிவத்ஸரம், மூன்றாவது இடாவத்ஸரம், நான்காவது அனுவத்ஸரம், ஐந்தாவது இத்வத்ஸரம் ஆகும்.

வேறு முறையில் விஷுவம் முதலியவற்றை விளக்குகிறார் பராசரர். ச்வேத மலைக்கு வடக்கே மூன்று சிகரங்களை உடைய ஒரு மலை உண்டு. இவைகள் வடக்கு, நடு, தென் திசைகள் என அமைந்திருக்கின்றன. தெற்கு சிகரத்தில் ஸூர்யன் ஸஞ்சரிக்கும்போது தக்ஷிணாயனமும், வடக்கு சிகரத்தில் ஸஞ்சரிக்கையில் உத்தராயணமும், நடு சிகரத்தில் ஸஞ்சரிக்கையில் விஷுவமும் உண்டாகின்றன. க்ருத்திகையின் முதல் பாகத்தில் ஸூர்யன் இருக்கையில், சந்த்ரன் விசாகாவின் நான்காம் பாகத்திலிருக்கிறான். அவ்வாறே ஸூர்யன் விசாகா நக்ஷத்ரத்தின் மூன்றாம் பாகத்திலிருக்கும்போது க்ருத்திகையின் முதல் பாகத்தில் சந்த்ரன் இருப்பான். இது மஹாவிஷுவம் என்ற புண்ய காலம். இந்த காலத்தில் ப்ராஹ்மண, தேவ, பித்ருக்களுக்குக் கொடுக்கும் தானம் நேராக அவர்களிடமே கொடுக்கப்பட்டதாகி, கொடுத்தவன் எல்லாவற்றையும் செய்து முடித்தவனாகி விடுகிறான்.

அமாவாஸ்யை அன்று சந்த்ரன் காணப்பட்டால் அதை ஸினீவாலீ என்றும், இல்லையென்றால் குஹூ என்றும் அழைக்கிறோம். அதே போல் சந்த்ரன் பூர்ணமாயிருக்கும் பௌர்ணமியை ராகா என்றும், குறைந்த்ருந்தால் அனுமதி என்றும் அழைக்கிறோம். தபஸ், தபஸ்யம், மது, மாதவம், சுக்ரம், சுசி என்ற மாகமாசம் முதலியன அடங்கிய ருதுக்கள் உத்தராயணத்தையும், நபஸ், நபஸ்யம், இஷம், ஊர்ஜம், ஸஹம், ஸஹஸ்யம் என்ற ச்ராவண மாதங்கள் அடங்கிய ருதுக்கள் தக்ஷிணாயனத்தையும் சேர்ந்தவை. லோகாலோக மலையில் நான்கு லோகபாலர்கள் உள்ளனர். ஸுதன்வா, சங்கபா என்ற இருவர் கர்தம ப்ரஜாபதியின் பிள்ளைகளாவர். ஹிரண்யரோமா, கேதுமான் என்பவர்கள் மற்ற இருவர்கள்.

இதில் அகஸ்த்ய வீதிக்கு வடக்கிலும், அஜவீதிக்குத் தெற்கிலும், வைச்வானர வீதிக்கு புறத்திலும் பித்ருயாண மார்க்கம் (தூமாதி மார்க்கம்) இருக்கிறது. ப்ரஜா ஸ்ருஷ்டிக்கு உதவும் வேதத்தை ஓதிக்கொண்டும், அக்னிஹோத்ரம் செய்து கொண்டும் பலர் இங்கிருக்கின்றனர். ஒவ்வொரு யுகத்திலும் தொடர்பின்றி அழிந்திருக்கும் வேத ஸம்ப்ரதாயத்தை, வம்சத்தை தவத்தினாலும், வர்ணாச்ரம தர்மத்தினாலும், சாஸ்த்ர உக்திகளாலும், தங்கள் புத்ரர்கள் முதலானோர் வம்சத்திலேயே பிறந்து கொண்டு ப்ரளயம் உண்டாகும் ப்ரஹ்ம தினம் வரை இருக்கிறார்கள் இவர்கள். நாகவீதிக்கு வடக்காகவும், ஸப்தரிஷி மண்டலத்திற்குத் தெற்காகவும் தேவயான மார்க்கம் இருக்கிறது. இங்கிருக்கும் எண்பதினாயிரம் பேர்கள் இந்த்ரிய ஜயம் செய்து ஸித்தி பெற்றவர்கள். ஸந்ததியை வெறுத்தவர்கள். ஊர்த்வரேதஸ்ஸுக்களான இவர்கள் ஸூர்யனின் வடபுறத்து வழியை அடைந்து ப்ரஹ்ம தினம் வரை வாழ்கின்றனர். பேராசை, ராகத்வேஷம், ஸ்த்ரீஸம்போகம் முதலிய எந்த குற்றங்களுமற்றவர்கள் இவர்கள்.

ஸப்தரிஷிகளுக்கு மேல் வடபுறத்தில் த்ருவன், தர்மன் இருக்கும் விஷ்ணுபதம் இருக்கிறது. இது பூமியிலிருந்து மூன்றாவது ஆகாச ஸ்தானமாகும். விராட்புருஷனுக்கு இதயநாடி ஸ்தானமாகும் இது. புண்ய, பாபங்களற்ற யோகிகள் இங்கே வஸிக்கிறார்கள். இது ஸத்ய லோகத்திற்குக் கீழேயிருந்தாலும், இது உண்மையான பரமபதமல்ல என்றிருந்தும் முக்தியை அளிப்பதாலும், பல சிறப்புக்களுடன் கூடியதாலும் இதை பரமபதம் என்று சிறப்பிக்கின்றனர். கங்கையின் பெயரை உச்சரித்தாலே மூன்று ஜன்மங்களில் செய்த பாபங்களழியும் என்கிறார் பராசரர். இந்த கங்கை இங்கேயே உண்டாகிறது. வாமனாவதாரத்தின் போது ஸத்ய லோகம் வந்த அவரது இடது கால் கட்டைவிரலை தன் கமண்டலத்தின் நீர் கொண்டு ப்ரஹ்மா நீராட்ட அதிலிருந்து உண்டானதே கங்கையாம்.

த்ருவ மண்டலத்தின் தென் புறத்தில் வழியும் இந்த கங்கையில் ஸப்தரிஷிகள் ப்ராணாயாமம் முதற்கொண்டு அகமர்ஷண ஸ்னானத்தையும், மற்ற தேவர்களும், ஸ்த்ரீகளும் செய்கிறார்கள். கங்கையால் தான் சந்த்ரமண்டலமும் குளிர்ச்சியாக உள்ளது. அதன் பிறகு அந்த கங்கை மேரு மலையின் மீது விழுந்து ஸிதா, அலகனந்தா, சக்ஷு, பத்ரா என்று நான்கு திசைகளிலும் ஓடுகிறது. இதில் அலகனந்தாவைத் தான் பரமேச்வரன் தாங்குகிறார். அவரிடமிருந்து கபில மஹரிஷியின் சாபத்தால் சாம்பலான ஸகர மன்னனின் நூறு புத்ரர்களையும் புனிதப்படுத்தி ஸ்வர்க்கம் சேர்த்து ஓடுகிறது கங்கை. இதில் பித்ருக்களுக்கு ஒரு தடவை தர்ப்பணம் செய்தால் அவர்கள் நூறு வருஷங்கள் அளவு த்ருப்தியை அடைகிறார்கள். இதில் நீராடுவது பாவங்களனைத்தையுமப்பொழுதே போக்கும். தன் பெயரைக் கேட்பவனையும், விரும்புகிறவனையும், பார்த்தவனையும், தொட்டவனையும், சொன்னவனையும் உடனே பரிசுத்தமாக்குகிறது இது.

No comments:

Post a Comment