Wednesday, January 20, 2010

விஷ்ணு புராணம் - 45

03_07. மஹரிஷி! கேட்ட அனைத்திற்கும் பதில் அருளி விட்டீர்கள். இன்னொன்றையும் தங்களிடமே கேட்க விரும்புகிறேன். இந்த ப்ரஹ்மாண்டத்தில் ஏழு த்வீபங்களும், மேலும், கீழுமாக ஏழு, ஏழு உலகங்களும் பலவகை ப்ராணிகளுடன் நிறைந்திருக்கிறது. ஓரங்குலத்தின் எட்டில் ஒரு பங்கு கூட ப்ராணிகள் வஸிக்காத இடம் என்று இந்த ப்ரஹ்மாண்டத்திலில்லை. இந்த ப்ராணிகள் அனைத்தும் கர்ம பந்தத்தால் இங்கு பிறந்து, வளர்ந்து, முடிவில் யமனின் உத்தரவில் துன்பங்களையனுபவித்து மீண்டும் தேவ, மானுஷாதி யோனிகளில் பிறக்கின்றன. மீண்டும் இறக்கின்றன. இப்படியே பிறப்பிறப்பு க்ரமத்தில் சுற்றுக் கொண்டேயிருக்கின்றன என்பதே சாஸ்த்ரங்கள் கூறும் முடிவு. இவை இப்படி இந்த சக்ரத்தில் கிடந்துழலாமல் எந்த நல்ல விஷயத்தைச் செய்தால் இதைத் தாண்டமுடியும் என்பதை அருளுங்கள்" என்கிறார் மைத்ரேயர்.

"மைத்ரேயா! இதே கேள்வியை முன்பொரு ஸமயம் நகுலன் பீஷ்மரிடம் கேட்டான். அதற்கு அவர் கூறிய பதிலையே நான் உனக்குக் கூறுகிறேன். பீஷ்மர், "குழந்தாய்! கலிங்க தேசத்தைச் சேர்ந்த ஒரு ப்ராஹ்மண நண்பர் என்னிடம் ஒரு முறை வந்திருந்தார். அவரிடம் நான் பல கேள்விகளைக் கேட்க, கேட்க முற்பிறவி ஞானமும், மஹா யோகமும் வாய்த்திருந்த அவரும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்தார். அவர் வாக்கு என்றும் பொய்த்ததில்லை. எது எப்படி ஆகும் என்று கூறுகிறாரோ அது அப்படியே ஆகும். அவரிடம் நான் இந்த கேள்வியைக் கேட்டபோது அதற்குப் பதிலாக அவர் யமகிங்கர ஸம்வாதத்தை எனக்கு உபதேஸித்தார். அதை நான் உனக்குக் கூறுகிறேன்" என்றார்.

ஒரு ஸமயம் வாழ்நாள் முடிந்த ஜீவன்களைப் பிடித்து வருவதற்காகக் கையில் பாசத்துடன் புறப்பட்ட தன் படனைக் கூப்பிட்டு ரஹஸ்யமாக அவன் காதில் யமன் கூறுகிறான். "படனே! ஜீவர்களைப் பிடிக்கச் செல்லும் போது ஒன்றை நினைவில் வைத்துக் கொள். கண்டபடி உன் கைவரிசையைக் காட்டி, பின் நீ கஷ்டப்படக்கூடாது. மதுஸூதனனை அனுஸரித்தவர்களிடம் அருகில் கூட நீ போய் விடாதே. மற்ற பாமரர்களுக்கே நான் ப்ரபு. அவர்களுக்கு அல்ல, அவர்கள் முன்பு நீ கையும், கயிறுமாகச் சென்றால் என் தலை இங்கிருக்காது, எனவே அவர்களைக் கண்டால் கயிறைக் கீழே போட்டு கை குவித்து, ஸாதுவாகப் போ" என்று கூறினான்" என்று கூறினார் அந்த கலிங்க தேசத்து ப்ராஹ்மணர்" என்று கூறினார் நகுலனிடம் பீஷ்மர்" என்றார் மைத்ரேயரிடம் பராசரர்.

ராஜரே! உங்களையே நாங்கள் ப்ரபு என்று மதிக்கிறோம். உம்மை விட மேலான ப்ரபுக்கள் சிலர் இருக்கிறார்களா என்றனர் யம படர்கள். யமன் "ஸாமான்யர்களுக்கே நான் ப்ரபு. யமன் என்ற சொல் தண்டிப்பவன் எனும் பொருளைத் தரும். ஸகல தேவதைகளாலும் பூஜிக்கப்படும் பரமனே எனக்கு இந்தப் பெயரை அளித்துள்ளான். நன்மைகளைப் பரப்பவும், தீமைகளை விலக்கவும் என்னை வைத்துள்ளான் அவன். அந்த ஹரியே எனக்குக் குரு. நான் ஸ்வதந்த்ரனில்லை. அவனுக்கு வசமானவன். நான் ஏதாவது தவறு செய்தால் என்னைத் தண்டிக்கும் யமனும் அவனே. எனவே ஹரியும், ஹரியைத் துதிப்பவர்களும் எனக்கு ப்ரபுக்கள்" என்றான்.

காற்று பூமியிலிருந்து கிளம்பும் போது துகள்களும் கிளம்புவது போல் அவன் ஸ்ருஷ்டிக்கும் போது ப்ரக்ருதியில் தேவன், மனுஷ்யன், பசு என்று ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன. காற்று அடங்கும் போது போல, இவைகளும் அவரிடமே லயமடைகின்றன. அவரே ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்களைச் செய்பவர். ஸ்வர்ணம் பல வகை ஆபரணங்களிலும் இருப்பது போல அவனே அனைத்து உலகப் பொருள்களுக்கும் ஆத்மா. அவனையே எல்லா தேவர்களும் வணங்கி வழிபடுகின்றனர். பலன் கருதாமல் அவனை வணங்க வேண்டும். அப்படிச் செய்பவனின் எல்லா பாவங்களும் அழிந்தொழியும். இப்படிப்பட்ட பக்தர்களைக் கண்டால் நெய்யால் கொழுந்து விட்டு எரியும் தீயை விட்டு விலகுவது போல விலகிவிட வேண்டும்" என்றான் யமன்.

இதைக் கேட்ட யமபடர்கள் வைஷ்ணவன் என்பவன் லக்ஷணமென்ன. அவனை எப்படி அறிவது என்று கேட்டனர். அதற்கு யமதர்மராஜன் "எவன் தனது வர்ணாச்ரம தர்மங்களை ஆணையாக எண்ணி அனுஷ்டித்து வருகிறானோ, நண்பன், பகைவன் என்ற பாகுபாடின்றி இருக்கிறானோ, அடுத்தவர் பொருளையும், உயிரையும் அபகரிக்காமலிருக்கிறானோ அவனே தூய்மையான மனம் கொண்ட வைஷ்ணவன். அவர்களை கலியின் தோஷங்கள் அடையாது. அவர்கள் மனதில் ஜனார்தனன் நித்யவாஸம் செய்வான். சந்த்ரனின் கிரணங்கள் குவிந்திருக்கும் இடங்களில் எப்படி தீயின் வெப்பம் நெருங்காதோ, அப்படியே ஸ்படிக மலைப்பாறையைப் போன்ற பரமன் இருக்கும் மனதையும் பொறாமை முதலான குணங்கள் நெருங்காது. அவர்கள் அழுக்கற்ற அறிவாளர்களாகவும், சாந்தமாகவும், ஒழுக்கமுடையவர்களாகவும், அனைத்துயிர்க்கும் நட்பாகவும், இதமான சொற்களை உடையவர்களாகவும், கர்வம், கபடங்களின்றியும் இருப்பார்கள். இந்த அடையாளங்களைக் கொண்டு ஒருவனை வைஷ்ணவன் என்று அறியுங்கள்" என்றான்.

ஸூர்யன் இருந்தால் இருட்டு அங்கு எப்படி இருக்கும். எனவே பாபமற்ற அவர்களை நாம் நெருங்கக்கூடாது. யம, நியம முதலான யோகங்களால் பாவங்களைப் போக்கி, அனுதினம் அச்யுதனிடம் ஈடுபட்டிருப்பவர்களையும் வைஷ்ணவனென்று அறியலாம். அருகில் ஒருவரும் இல்லாத ஒரு வழியில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு தங்கக் கட்டியைக் கண்டாலும் அதை வெறும் புல்லாக நினைத்து மனத்தை பரமனிடமே வைத்து ஒருவன் செல்வானாகில் அவனை வைஷ்ணவனென்று அறியலாம். இனி பெருமாளிடம் பக்தியில்லாத பாவிகளின் அடையாளங்களையும் கூறுகிறேன் கேள்,

பிறர் பொருளைக் கொள்ளை அடிப்பவன், உயிர்களைக் கொல்பவன், பொய்யும், கடுஞ்சொற்களையும் கூறுபவன், மதம் கொண்டு திரிவான், தூய அறிவின்றி இருப்பான். பிறர் செல்வத்தைப் பொறுக்க மாட்டான். நல்லோரை நிந்திப்பான். பரமனை எவ்வகையிலும் ஆராதிக்கமாட்டான். பக்தர்களுக்கு தன் கையால் எதையும் தர மாட்டான். நெருங்கின நண்பர்களிடமும், மனைவி, மக்கள், மக்கள், தந்தை, தாய், வேலைக்காரன் என அனைவருக்கும் வஞ்சனை செய்வான். பொருளாசை மிகுத்திருப்பான். அதர்மங்களை அனுதினமும் செய்து அதிலேயே சிக்கியிருக்கும் அவனை ம்ருகம் என்றே நினைக்க வேண்டும். உன் முழு அதிகாரத்தையும் இவனிடம் செலுத்தலாம்.

மற்றபடி வைஷ்ணவர்களின் கண் படும் இடங்களுக்குக் கூட நீ சென்று விடாதே. நானும் கூட அங்கு செல்வதில்லை. அவர்கள் நேரே வைகுண்டம் செல்லத் தக்கவர்கள். அப்படிச் செல்கையில் அவர்களால் வழியிலுள்ள லோகங்களும் பரிசுத்தமடைகின்றன. ஆனால் அவர்கள் நம் லோகத்தின் வழியாகச் செல்வதில்லையாதலால் நமது லோகத்துக்குக் கூட அவன் கடாக்ஷம் கிடைக்க வழியில்லை. எனவே இத்தகைய மகிமை வாய்ந்த வைஷ்ணவர்களின் அருகில் கூட நீ சென்று விடாதே" என்றான். இதை நகுலனிடம் கூறிய பீஷ்மர் "இந்த ஸம்ஸாரமென்ற பெரும் ஸாகரத்திலிருந்து நம்மைக் காக்க மஹாவிஷ்ணுவைத் தவிர வேறெவருமில்லை. அவனைச் சரணமடைந்தவர்களுக்கு யம பயமில்லை" என்று கூறியதாகக் கூறி யம கீதையை மைத்ரேயருக்குக் கூறி முடித்தார் பராசரர்.


No comments:

Post a Comment