02_15. அத்வைதக் கதை ஒன்றை ஜடபரதர் ஸௌவீரனுக்கு இங்கு கூறுகிறார். அரசே! முன்பு ஒருமுறை நிதாகருக்கு அத்வைத ஞானத்தை உண்டாக்க ருபு என்பவர் அருளியதைக் கூறுகிறேன். ருபு பரமேஷ்டி(ப்ரஹ்மா)யின் புத்ரர். பிறவியிலேயே தத்வ ஞானமுடையவர். புலஸ்த்யருடைய புத்ரர் நிதாகர் இவருக்கு சிஷ்யர். அவருக்குப் பல விஷயங்களையும் நன்கு மகிழ்ச்சியுடன் கற்பித்த ருபு, ஆத்ம அத்வைத ஞானம் நிதாகருக்கு இன்னும் உண்டாகவில்லை என்பதை அறிந்திருந்தார். நிதாகர் தேவிகா நதிக்கரையில் சோலைகளும், அனைத்துப் பொருட்களும் நிறைந்திருக்க புலஸ்த்யர் நிர்மாணித்திருந்த நகரத்தில் வேத கர்மாக்களைச் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். ஆயிரம் தேவ வருஷங்கள் சென்ற பின் ஒரு நாள் அவரைக் காண ருபு அங்கே சென்றார்.
பூஜைகளையும், வைச்வதேவத்தையும் முடித்து வாசலில் அதிதிகள் யாராவது வருவார்களா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிதாகர் அவரைக் கண்டார். பல காலம் கழிந்து விட்டதால் ஆசிரியர் என்ற ஞாபகமில்லை. ஏதோ ஒரு உயர்ந்த ப்ராஹ்மணர் கிடைத்தாரென்று மகிழ்ந்து அர்க்யம் கொடுத்து, கால்களை அலம்பி விட்டு, ஆசமனமும் செய்வித்து இங்கேயே அமுது செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். ருபு உடனே நான் தாழ்ந்த பொருள்களை விரும்புவதில்லை. உமது க்ருஹத்தில் என்னென்ன இருக்கின்றன என்று கேட்டார். நிதாகர் "ஸ்வாமி, அரிசி மாவிலும், யவ, தான்யங்களாலும் செய்த அப்பங்கள், காய், கனி, கிழங்குகளும் இருக்கின்றன. தாங்கள் வேண்டியதை இஷ்டம்போல் அமுது செய்யலாம்" என்றார்.
ருபு இவைகள் எனக்கு வேண்டாம், தேன்குழல், பாயஸம், மோர்க்குழம்பு முதலியவைகள் வேண்டும் என்றார். அவற்றைச் செய்துத் தரும்படி உடனே நிதாகரும் மனைவியிடம் அன்பாகக் கூறுகிறார். அவளும் கணவன் சொல்படியும், விருந்தோம்பலில் விருப்புற்றும் அவ்வாறே படைத்துப் பரிமாரினாள். அக்காரவடிசல் முதலிய அனைத்து வகைகளையும் ருபுவும் மகிழ்வுடன் விரும்பி உண்டு முடித்தார். நிதாகர் அவரை வணங்கி பசி, தாகம் தீர்ந்ததா, த்ருப்தி ஆனீர்களா, பரிமாறியவை போதுமா, கலக்கம் தீர்ந்ததா, எங்கிருக்கிறீர்கள் தாங்கள். எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள், எங்கிருந்து வருகிறீர்கள் என கேள்விகளைக் கேட்டார். சந்தர்பத்தை எதிர்பார்த்திருந்த ருபு ஆத்ம தத்வ போதனையைத் தொடங்கினார். இனி ருபு.
"அந்தணரே! பசியிருப்பவனுக்கே ஆஹாரம் த்ருப்தி உண்டாக்கும். அதில்லாதவனுக்கு ஆஹாரத்தால் த்ருப்தி எப்படி உண்டாகும். எனக்குப் பசியே இல்லை. எனவே நீரளித்த உணவால் எனக்குத் த்ருப்தி உண்டாக இடமே இல்லை. நீர் எப்படி உமக்கு த்ருப்தி உண்டாயிற்றா என்று கேட்கிறீர். முதலில் பசியும், தாஹமும் உண்டாவதெப்படியென்பதை அறிந்து கொள்ளும். சாப்பிட்ட பொருள்களை வயிற்றில் இருக்கும் அக்னி (ஜாடராக்னி) ஜீர்ணித்தபின் மேலும் உணவுப் பொருள்களைப் போடாவிட்டால் அந்த அக்னி ப்ருத்வீ ஸம்பந்தமான தாதுக்களை எரிக்கத் தொடங்கி விடுகிறது. இந்த எரிச்சலில்தான் பசி உண்டாகிறது.
இதே அக்னியால் வயிற்றில் இருக்கும் நீரும் வற்றிப் போகும் போது தாஹமும் உண்டாகிறது. இந்த இச்சைகளே பசி, தாஹம் என்றழைக்கப்படுகின்றன. இவை மனம் ஸம்பந்தப்பட்டவைகளேயாதலால் மனோதர்மங்களே. ஆயினும் உடலின் தாதுப்பொருள்கள் அழிவதாலுண்டாவதால் தேஹதர்மங்கள் (பண்புகள்) எனவும் கூறுவர். இந்த தர்மங்கள் எனக்கு எப்போதுமே கிடையாது. அடுத்ததாக மனத்தெளிவும், த்ருப்தியும் சித்தத்தைப் பொறுத்தது. அதைத்தான் கேட்க வேண்டும். அவைகளுடனும் ஆத்மா ஸம்பந்தப்படுவதில்லை. மேலும் எங்கிருக்கிறீர், எங்கிருந்து வருகிறீர், எங்கு செல்கிறீர் என்று கேட்டீர்கள். இவை ஸம்பந்தமாக சிலதைக் கூறுகிறேன் கேளும்.
ஆத்மா எங்குமிருக்கிறது. எதிலும் ஒட்டாதது. அதற்கு இந்த கேள்விகள் பொருந்துமா என்று நினைத்துப் பாருங்கள். எனவே நான் செல்கிறேன், நீ செல்கிறாய் என்பவை அர்த்தமற்றவை. இப்படியிருக்க ஆத்மாவிற்கு ஏது உயர்ந்த உணவு என்று யோசிக்க வேண்டாம். உங்களைப் பரிக்ஷிக்கவே அதைக் கேட்டேன் நான். இந்த ஆத்மாவிற்கு உயர்ந்த உணவில் விருப்பும், அற்ப உணவுகளில் வெறுப்பும் இயற்கையில் உண்டானதா (ஸ்வபாவிகங்கள்) அல்லது காரணத்தால் உண்டானதா (ஔபாதிகங்கள்) என்பதில் உங்கள் கருத்தையறிந்து கொள்ளவே அப்படிக் கேட்டேன். மற்றபடி ஆத்மாவிற்கு அதெல்லாமும் இல்லை. உணவுப்பண்டங்களில் ருசியும், ருசியில்லாமையும் உடல் நிலைக்குத் தகுந்தாற்போல் தோன்றும். பசி இருந்தால் எதுவும் தாழ்ந்தவைகளும் ருசியே. பசியில்லாதவனுக்கு உயர்ந்தவைகளும் வேண்டாதவையே. ஆக எதுவும் எப்போதும் ஒருவனுக்கு ருசிகரமாகவே இருந்ததில்லை.
இன்னும் கேளும். மண்ணால் ஆன வீடு, மண்ணைக் கொண்டு மொழுக, மொழுக உறுதியாகும். அப்படியே ப்ருத்வீ மயமான இந்த உடலும் உறுதிப்பட யவம், கோதுமை, பயறு, நெய், எண்ணெய், பால், தயிர், வெல்லம், கனி என ப்ருத்வியைச் சார்ந்த பொருள்களை சாப்பிட வேண்டியிருக்கிறது. இந்தப் பொருட்களின் ஸூக்ஷ்ம அம்சங்கள் உடலை வளர்த்து, ஸ்தூல அம்சங்கள் மல, மூத்ரங்கள் என வெளியாகி விடுகின்றன. அந்த ஸூக்ஷ்ம அம்சங்களே தாதுக்களாக மாறி வளர்கின்றன. எனவே தாழ்ந்த, உயர்ந்த உணவுகள் என்ற பாகுபாடுகள் காரணம் பற்றியே (ஔபாதிகங்கள்) என்றே அறிய வேண்டும். இவைகளை எல்லாம் அறிந்து, தெளிந்த பின் இவைகளை இப்படி உயர்ந்தது, தாழ்ந்தது, தேவன், மனுஷ்யன் என்றெல்லாம் வேறுபடுத்திப் பார்க்கும் மனதை வேற்றுமைகளிலிருந்து விலக்கி, இவையெல்லாம் கர்மாவால் வந்தவை. ஆத்மாவிற்கு வேற்றுமை கிடையாது என்ற ஞானத்தை உண்டாக்க வேண்டும். அந்த ஸமத்வ ஞானமே முக்திக்குக் காரணம். இனி இவ்வாறு வேற்றுமைகளை எண்ணாதீர்கள் என்றார் ருபு.
நிதாகர் அவரைப் பணிந்து "ஸ்வாமி, மஹரிஷி, அஞ்ஞானம் அகன்றது. ஆனால் மீண்டும் கேட்கிறேன். தாங்கள் யார். என்ன காரணமாக இங்கு வந்தீர்கள்" என்று கேட்டுக்கொண்டார். ருபு நிதாகரே! நானே உன் ஆசார்யன் ருபு. ஜீவாத்மாக்களில் பேதமில்லை என்பதை உணர்த்தவே இங்கு வந்தேன். அதை முடித்து விட்டேன். செல்கிறேன். சுருக்கமாக எந்த வேற்றுமைகளுமில்லாத இந்த ஜீவாத்மாக்களும், உலகும் வாஸுதேவனின் உடலே" என்றார்.
இதன் பின் ருபு தன் வழி சென்றார். ஜீவாத்மாக்கள் பல. ஆனால் தத்வத்தால் வேறுபாடுகளில்லாதது. அவைகள் அனைத்தும் ஜகத்துடன் சேர்ந்து பரமாத்மாவின் உடலே என்கிறார் பராசரர்.
Wednesday, January 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment