Tuesday, January 19, 2010

விஷ்ணு புராணம் - 41

03_03. மைத்ரேயர் "மஹரிஷி! இப்படி அனைத்திற்கும் ஆத்மாவாகவும், படைத்தும், காத்தும், தன்னிடத்திலேயே லயமடையச் செய்வது உயர்ந்த விஷ்ணு பகவானே, அவனைத் தவிர வேறெதும் இல்லை என்பதை அறிந்தேன். இதுவரை யார், யார் வ்யாஸர் என்பதையும், வேதங்களின் உட்பிரிவுகளையும் அருள வேண்டும் இனி" என்கிறார். "வேதத்தை வகுத்தல் (வேத வ்யாஸம்) என்ற பதவிப் பெயரே வ்யாஸர் என்பது. வேதம் அனேகமாயிரம் கிளைகளைக் கொண்ட ஒரு பெரிய மரம். அதை விரிவாகக் கூறுவது முடியாததொன்று. எனவே சுருக்கமாய்க் கூறுகிறேன். மிகப் பரந்திருக்கும் ஒரே வேதத்தைப் படித்து, மனதில் தக்க வைத்துக் கொள்ள வேண்டியவர்களின் உற்சாகமும், தவமும், ஆற்றலும், வாழ்நாளும் மிகவும் குறைவு. இவர்களுக்கு நன்மை செய்யவே ஒவ்வொரு த்வாபர யுகத்திலும் வ்யாஸரூபமாய் அவதரித்து ஒன்றான வேதத்தைப் பலவாகப் பிரிக்கிறான் பரமன்.

இந்த வைவஸ்வத மன்வந்த்ரத்தில் இருபத்தெட்டு த்வாபர யுகங்களிலும் ஒவ்வொரு முறை வேதம் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் த்வாபர யுகத்தில் ஸ்வயம்பூவான ப்ரஹ்மாவே வேதவ்யாஸராயிருந்தார். அதற்கு மேல் மனுவும், சுக்ராச்சார்யார், ப்ருஹஸ்பதி, ஸூர்யன், யமன், தேவேந்த்ரன், வஸிஷ்டர், ஸாரஸ்வதர், த்ருதாமா, த்ரிவ்ருஷா, பரத்வாஜர், அந்தரிக்ஷர், தர்மீ, த்ரையாருணி, தனஞ்ஜயன், க்ருதஞ்ஜயன், ஸஞ்ஜயன், பரத்வாஜர், கௌதமர், உத்தமர்(ஹர்யாத்மா), வேனன்(வாஜிச்ரவஸ்), ஸோமசுஷ்மாயணர்(த்ருணபிந்து), ப்ருகு வம்சத்து ருக்ஷர்(வால்மீகி), இருபத்தைந்தாவது த்வாபர யுகத்தில் என் பிதா(சக்தி), இருபத்தாறில் நான்(பராசரர்), இருபத்தேழில் ஜாதுகர்ணன், இந்த இருபத்தெட்டாவது த்வாபரத்தில் என் மகன் க்ருஷ்ண த்வைபாயனன் வேத வ்யாஸன். இனி வரப்போவது த்ரோணாசார்யாரின் குமாரன் அச்வத்தாமா. இவர்களே வேதத்தை நான்காகப் பிரித்தது.

ஓம் எனும் ப்ரணவம் நிலையானது, ஏகாக்ஷர ஸ்வரூபம். வேதம் பிரிந்தாலும் இது பிரியாதது. பூ:,புவ:, ஸுவ: என்ற மூன்று வ்யாஹ்ருதிகளும், ரிக், யஜுர், ஸாம, அதர்வ என்ற நான்கு வேதங்களும் இதிலேயே நிலைபெற்றிருப்பதால் இதுவே ப்ரஹ்மம். இதுவே ஜகத்காரணமாக வைத்து வணங்கத்தக்கது. ஜகத்தின் உற்பத்திக்கும், லயத்திற்கும் காரணமாகவும், மஹத் தத்வத்திற்கு மேம்பட்டதாகவும், அதைவிட ஸூக்ஷ்மமாகவும், ப்ரதானமாகவும் இருப்பது இது. இது அனாதி, எங்கும் நிறைந்தது, அழிவற்றது, உலகை மயக்கும் தமோ குணத்துக்கு இருப்பிடமானதிது. ஸத்வ குணத்தின் ப்ரகாசமானதிது. ரஜோ குணத்தால் புருஷார்த்தங்களையும் தருவதிது. மோக்ஷ ஸாதனம் இது. பரமாத்ம ஸ்வரூபத்தைக் காட்டுவதால் உபநிஷத்துகளில் அவ்யக்தம், அக்ஷரம் என்றெல்லாம் வழங்கப்படுவதிது. சுத்தமானது, வாஸுதேவனுக்கு ஸ்வரூபமானது. ஒன்றான, பலவான வேத ஸ்வரூபங்களாக இருப்பவனும் அவனே. ஸகல ஆத்மாக்களுக்கும் அந்தர்யாமி அவன்" என வேதத்தின், ப்ரணவத்தின் பெருமையைக் கூறி அதை வணங்குகிறார் பராசரர்.

No comments:

Post a Comment