Thursday, January 21, 2010

விஷ்ணு புராணம் - 48

03_10. ஸகரன் "மஹரிஷி! கர்ப்பாதானம், பும்ஸுவனம், ஸீமந்தம், உன்னயனம், விஷ்ணுபலி, ஜாதகர்மம், நாமகரணம், உபநிஷ்க்ரமணம், அன்னப்ராசனம், சௌளம், உபனயனம், நான்கு வ்ரதங்கள்(ப்ராஜாபத்யம்,ஸௌம்யம், ஆக்னேயம், வைச்வதேவம்), விவாஹம் என்ற பதினான்கு கர்மாக்களையும், நித்ய, நைமித்திக, காம்ய கர்மங்களையும் தர்மங்களையறிந்த தாங்கள் விவரிக்க வேண்டும்" என்று ஔர்வரிடம் கேட்கிறார். ஔர்வர் "குழந்தை பிறக்கும் முன் கர்ப்பாதானம், பும்ஸுவனம், ஸீமந்தம், உன்னயனம் முதலானவைகளையும், பிறந்த பின் ஜாதகர்மா முதலானவைகளையும், அப்யுதய ச்ராத்தத்தையும் செய்ய வேண்டும்.

ப்ராஹ்மணர்கள் தேவ பூஜைகளையோ, நாந்தீ, பித்ரு கார்யங்களையோ செய்யும் போது இரட்டைப் படையில் ப்ராஹ்மணர்களை கிழக்கு முகமாக இருக்கச் செய்து, த்ருப்தி அடையும் வரை உணவூட்ட வேண்டும். நாந்தீ என்றால் சுபம், உத்ஸவம். இதையே ப்ரதானமாகக் கொண்ட சில தேவதைகள் நாந்தீமுக தேவதைகளாவர். இவர்களும் பித்ரு தேவதைகளைச் சேர்ந்தவர்களே. இவர்களுக்காக தயிர், யவம், இலந்தைப் பழம் இவைகளுடன் கலந்த பிண்டங்களைத் தீர்த்தத்தோடு தேவ (விரல்களின் நுனி வழி) அல்லது ப்ராஜாபத்ய தீர்த்தத்தினாலோ(சுண்டு விரலின் கீழுள்ள பகுதி வழி) ப்ரதக்ஷிணமாகத் தர வேண்டும். இந்த நாந்தீ ச்ராத்தத்தை எல்லா வ்ருத்தி காலங்களிலும் (கல்யாணம், க்ருஹ ப்ரவேசம், சௌளம், ஸீமந்தம் முதலியன) செய்ய வேண்டும்.

குழந்தை பிறந்த பத்தாம் நாள் தகப்பனே பெயர் வைக்க வேண்டும். குழந்தையின் பெயர் குல தேவதை, குல முன்னோர்களின் பெயரைக் கொண்டதாக இருக்க வேண்டும். சர்ம, வர்ம, குப்த, தாஸ என்ற வார்த்தைகளை முறையே ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்ய, சூத்ர வர்ணங்களில் பிறந்த குழந்தைகளுக்குக் கடைசியில் சேர்க்க வேண்டும். அர்த்தமில்லாமலோ, வெட்கப்படும்படியாகவோ, தீச்சொல்லுடனோ, அமங்களமாகவோ, அருவருப்பாகவோ பெயர் இருக்கக்கூடாது. இரட்டைப்படையில் (புத்ரனுக்கு)எழுத்துக்கள் கொண்டதாயிருக்க வேண்டும். நீண்டோ, குறுக்கியோ, நெட்டெழுத்துக்கள் அதிகமாகவோ, கடின சந்தியுடனோ இருக்கக் கூடாது. எளிதில் உச்சரிக்கக்கூடியதாயிருக்க வேண்டும்.

இதற்குப் பின் உபனயனம் வரை மற்ற கார்யங்களையும் தகப்பனே செய்து வைக்க வேண்டும். அதன் பின் குருவின் க்ருஹத்தில் வஸித்து வேதத்யயனம், குருதக்ஷிணை, வ்ரதங்களை முடித்துக் கொண்டு விரும்பினால் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லையேல் குரு, குருபுத்ரனுக்குப் பணிவிடை செய்து கொண்டு ப்ரஹ்மசாரியாகவோ, வானப்ரஸ்தனாகவோ, ஸன்யாஸியாகவோ இறுதி வரை வாழலாம். ஆனால் முடிவை மாற்றி வேறு ஆச்ரமத்திற்கு இடையில் செல்லக்கூடாது.

விவாஹம் செய்து கொள்ள விரும்புபவன் தன் வயதில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேற்படாத வயதுள்ள பெண்ணை மணக்கலாம். அவள் நீண்ட கூந்தலுடனோ, கூந்தலே இல்லாமலோ இருக்கக் கூடாது. கரிய நிறத்திலோ, பசிய நிறத்திலோ, அளவிற்கு அதிகமான அல்லது குறைவான அவயவங்களுடன் இருக்கக் கூடாது. சூத்ரன் முதலோரால் வளர்க்கப்பட்டவள், இழி குலத்திலே பிறந்தவள், உடலில் ரோமம் அடர்ந்தவள், நோயாளி, துஷ்டத்தனமுள்ளவள், தோஷமுள்ள வார்த்தைகளைக் கூறுபவள், தொற்றுநோயுள்ள பெற்றோருக்குப் பிறந்தவள், ஆண்மையின் அடையாளங்களுள்ளவள், கரகரப்பான குரல் படைத்தவள், இளைத்தவள், காக்கைக் குரலுள்ளவள், மயிரடர்த்தி இல்லாத இமைகளுள்ளவள், வட்டமான கண்ணுள்ளவள், உயர்ந்த குதிகாலுள்ளவள், சிரிக்கும் போது கன்னத்தில் அதிக அளவில் குழி விழுபவள்,

அமைதியற்றவள், வெளுத்த நகங்களுள்ளவள், சிவந்த கண்களுள்ளவள், பருத்த கை, கால்களுள்ளவள், குள்ளப் பெண், நெட்டைப்பெண், கூடிய புருவங்களுள்ளவள், பற்களுக்கிடையே இடைவெளியுள்ளவள், பயங்கரமான முகமுள்ளவள், தாய் வம்சத்தில் ஐந்து தலைமுறைக்குட்பட்டவள், தகப்பன் வம்சத்தில் ஏழு தலைமுறைக்குட்பட்டவள் இவர்களை விலக்க வேண்டும். ப்ராஹ்மம், தைவம், ஆர்ஷம், ப்ராஜாபத்யம், ஆஸுரம், காந்தர்வம், ராக்ஷஸம், பைசாசம் என்று விவாஹம் எட்டு வகையாகும். ப்ராஹ்மம் என்பது வரனைக் கூப்பிட்டு, சக்திக்கேற்ப கன்னியை அலங்கரித்துக் கொடுத்தல், யாகத்தில் ரித்விக்காக இருப்பவனுக்குக் கொடுப்பது தைவம், இரண்டு எருதுகளைப் பெற்றுக் கொண்டு கன்னியைக் கொடுப்பது ஆர்ஷம், இருவரும் சேர்ந்து தர்மத்தை அனுஷ்டியுங்கள் என்று கொடுப்பது ப்ராஜாபத்யம். பணம் பெற்றுக் கொண்டு பெண்ணைக் கொடுப்பது ஆஸுரம். ஆணும், பெண்ணும் மனம் ஒன்றுபட்டபோதே சேர்தல் காந்தர்வம், பெண்ணைச் சண்டை போட்டு, வென்று தூக்கிக் கொண்டு வருவது ராக்ஷஸம். பெண்ணை ஏமாற்றிக் கொண்டு வருவது பைசாசம். ப்ராஹ்மணர்கள் ப்ராஹ்ம, தைவ, ஆர்ஷ, ப்ராஜாபத்ய முறைகளிலும், காந்தர்வ, ராக்ஷஸ, ஆஸுர வழிகளில் மற்ற மூவரும் விவாஹம் செய்யலாம். பைசாச விவாஹம் மிகுந்த பாபத்தைத் தருவது.

No comments:

Post a Comment